ஸ்ரீ-ராமம்-32

 அத்தியாயம் 32 

 

செய்வதறியாது சிலையாகிப்போனவளின் உள்ளம் உலைக்கலமாய் கொதிக்க தொடங்க, வார்த்தைகளால் விவரிக்க முடியாத சுய இரக்கம் அவள் நெஞ்சை அழுத்த, முகம் மாலையில் மங்கும் ஆதவன் போல் செந்நிறத்தை தத்தெடுத்துக் கொள்ள, அவளது விழிகள் லேசாக பனிக்க தொடங்கின.

 

தன் கணவன் ராம் சரண் தன் கண்களையும் கருத்தையும் மட்டும் கவர்ந்தவன் அல்ல .... தன் ஆன்மாவேயே  கவர்ந்தவன்..... 

 

என்று கூப்பாடு போட்டு கூற வேண்டும் போல் உள்ளுக்குள் ஒரு உத்வேகம் உருவாக, உடன் சுய அனுதாபமும் சூழ்நிலையும் அதனை அடியோடு அடக்கி ஆள, அமைதியாகி போனாள் பெண் .

 

சில முற்றுப்புள்ளிகள் முழு மனதுடன் வைக்கப்படுவதில்லை ...

 

சிலது காலத்தின் கட்டாயம் .... சிலது காயத்தின் கட்டாயம்.... என்று எப்படி சொல்லுவாள்....

 

அடுத்தவன் மணக்க கேட்கும் பொழுது தான் , கணவன் மீதான காதலும் நேசமும் கட்டவிழ்த்துக்கொண்டு கரையைக் கடக்கவிவாகரத்துக்கு விண்ணப்பித்தது தவறோ என்ற எண்ணம் தோன்றி அவளை அலைகழிக்க தொடங்கியது.

 

விவாகரத்துக்கு விண்ணப்பிக்காமல் பிரிந்து மட்டும்  வாழ்ந்திருந்தால்குடும்பச் சண்டையின் காரணமாக பிரிந்திருக்கிறாள் என்றாவது ஒருநாள் அவள்  கணவனுடன் இணைவாள், என்ற எண்ணத்தால் சட்டென்று இம்மாதிரியான  கேள்வியை முன்வைக்க  எவரும் முன்வந்திருக்க மாட்டார்கள் ....

ஆனால் எந்த ஒரு எதிர்பார்ப்பும் இல்லாமல் விவாகரத்து கிடைத்தால் போதும் என்ற நிலையில் முழு சமரசத்துடன் விண்ணப்பித்திருந்தது தெரிந்ததால் தான் இம்மாதிரியான கேள்விகளை எதிர்கொள்ளும் நிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறோம் என்பதைப் புரிந்து கொண்டவள் தன்னிலை விளக்கம் கொடுக்க முடியாமல் தவித்து போக,

"என்ன யோசிக்கிறீங்க .... நான் கேட்டதுல ஏதாவது தப்பு இருக்கா .....  உங்களுக்கும் உங்க கணவருக்கும் என்ன பிரச்சனை ... எதனால விவாகரத்துன்னு நாங்க எப்பவுமே  கேட்கவே மாட்டோம் ... ஏன்னா உங்களை எங்களுக்கு நல்லாவே தெரியும் .... சோ எப்படிப் பார்த்தாலும் பிரச்சனை உங்க கணவர் பக்கம் தான்னு நல்லாவே புரியுது ..."  என்றவர் பேசிக் கொண்டே செல்ல,

 

கணவனால் பல துன்பங்களுக்கு ஆளாகிஅவனை வெறுத்து ஒதுக்கி விவாகரத்து வாங்கும் பெண் கூட மறுமணம் என்றால் நிச்சயம் தயங்குவாள்யோசிப்பாள்....

 

ஆனால் திகட்ட திகட்ட காதல் கொண்டு அன்றில் பறவையாய் மானசீகமாக அன்யோன்யமாய் வாழ்ந்து கொண்டிருப்பவளுக்குஅவரது பேச்சு நெருப்பள்ளி கொட்டிய உணர்வைத் தந்திருக்கஅந்த எரிச்சலில் இருந்து வெளிவர முயன்று கொண்டிருந்தவளிடம், மேலும் 

"நீங்க உடனே முடிவு சொல்லணும்னு அவசியம் இல்ல ... டேக் யுவர் ஓன் டைம் .... ஆனா ஒன்ன மட்டும் மனசுல வச்சுக்குங்க … கல்யாணத்துக்கப்புறம் இந்த வீட்டுல உங்களோட சந்தோஷத்துக்கு எந்த குறையும் வராது அதுக்கு நான் கேரண்டி .... " என தீர்க்கமாக முடித்தார்.

 

தன் மன ஓட்டத்தை வெளிப்படுத்த முடியாமல் தவித்தவள்,

"எனக்கு டிவோர்ஸ் கிடைச்சாலும் நான் இரண்டாம் கல்யாணம் பண்ணிக்கிற ஐடியால இல்ல... என்னைக்குமே  பண்ணிக்கவும் மாட்டேன் ..." என்றாள் தீவிரமாக. 

 

"ஏன் என்ன காரணம் ..."

 

"ஒருமுறை வாழ்க்கையில பட்டதே போதும் ..."

 

"நீங்க உங்க பழைய வாழ்க்கையை பத்தியே பேசிகிட்டு இருக்கீங்க ....  நீங்க என் மகன் ரிஷிய கல்யாணம் பண்ணிக்கிட்டீங்கன்னா,  நூறு சதவீதம் சந்தோஷமா இருப்பீங்க ... நம்புங்க ..."

 

" ....  "

 

"ஒரு வேளை என் பையன் ரிஷிய பத்தி யோசிக்கிறீங்களா ... அவன் ரொம்ப நல்லவன், ரொம்ப பொறுமையானவன் ... புத்திசாலி, உழைப்பாளி .... அவனுக்கு எந்த கெட்ட பழக்கமும் கிடையாது .... உங்களையும் உங்க குழந்தையும் ரொம்ப நல்லா பாத்துக்குவான்..."

 

"இல்ல ................ நான் அவர பத்தி எல்லாம் யோசிக்கல…..  எனக்கு பணக்காரங்கன்னா செட் ஆகாது ... ப்ளீஸ் ..." என்றாள் ஏதோ ஒரு காரணத்தை கூறியே ஆக வேண்டிய கட்டாயத்தால்.

 

"நாங்க பணக்காரங்களே கிடையாது ...  மிடில் கிளாஸ் தான் ...." என சொல்லிக்கொண்டே அந்த அறைக்குள் வந்த ரிஷியை பார்த்து ஒரு கணம் அவள் ஸ்தம்பித்து நிற்க,

 

"உண்மைய தான் சொல்றேன் .... நாங்களும் லோவர் மிடில் கிளாஸ் தான் ...."  என்றவனின் முகபாவம் முழு பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் உத்தியின் வெளிப்பாடாகத் தெரிய, ஏனோ அது சிரிப்பை வரவழைக்க, வெகு லேசாக மென் புன்னகை பூத்தவள்

 

"ப்ளீஸ் நான் குழந்தை இல்ல... இந்த மாதிரி ஜோக் அடிக்காதீங்க ..." என்றாள் .

 

அதனைக் கேட்டு வாய்விட்டு சிரித்தவன் ,

 

"நீங்க ஸ்மைல் பண்ணா ரொம்ப அழகா இருக்கீங்க, இப்படி கொஞ்சமா ஸ்மைல் பண்றத விட, போட்டோல இருக்கிற மாதிரி பெருசா ஸ்மைல் பண்ணா இன்னும் அழகா இருப்பீங்க...."  என அவன் பேச்சை மாற்ற,

 

"நான் வீட்டுக்கு கிளம்பனும் ..." என்றாள் அம்ரிதா ஷாவை பார்த்து.

 

"நீங்க அடுத்த முறை வரும் போது குழந்தையோட தான் வரணும் .... வீட்ல உறவு காரங்க நிறைய பேர் வந்துட்டதால என்னால இப்ப உங்களோட வர முடியல ... சாரி ...

ரிஷி....  இவங்கள அவங்க வீட்டுல  ட்ராப் பண்ணிடறயா ..."

 

அவனுடன் தனியாகச் செல்ல தயங்கியவள்,

 

"இல்ல...  நான் ஆட்டோல போய்க்கிறேன் ..."

 

"அவங்க என் கூட  தனியா வர யோசிக்கிறாங்க ..." என தன் தாயைப் பார்த்து வித்தியாசமான குரலில் சொன்னவன்,

 

"சோனா ....  ( அக்கான்ஷாவின் செல்ல பெயர்)  ..."

 

" சித்தப்பா ..."

 

"ச்சளோ....(Chalo)...." என்றான் ஸ்ரீலட்சுமியை பார்த்துக் கொண்டே.

 

பிறகு விடை பெற்று காரில் பயணிக்கும் போதுபின் இருக்கையில் அவளுடன் அமர்ந்திருந்த அக்கான்ஷா ஏதேதோ அவள் மனதை மாற்றும் முயற்சியில் குழந்தைத்தனமாக பேசிக்கொண்டே வர, ஒரு கட்டத்தில்,

 

"அக்கன்ஷாஇது பெரியவங்க விஷயம் .... இதெல்லாம் நீ பேசக்கூடாதும்மா ..." என்றாள் லேசான கோபத்தோடு. 

 

"இல்ல மிஸ்... நீங்க என் சித்தியா வந்தாநான் ரொம்ப சந்தோஷப்படுவேன் ... " 

 

"சோனாஉங்க மிஸ்ஸ கம்பெல் பண்ணாத .... அவங்க கூடிய சீக்கிரம் நல்ல முடிவு எடுப்பாங்க ...

( எடுக்க வைப்பேன் என்று மனதுக்குள் கூறிக் கொண்டவன்) அதுக்கு நான் பொறுப்பு ..." என்றான் லேசான புன்னகையோடு ரியர் வியூ கண்ணாடி வழியாக அவளை பார்த்துக் கொண்டே.

 

மின்னல் கீற்றாய், அவனது பார்வை அவள் பார்வையை உரச , உடனே தன் பார்வையை மாற்று திசையில் செலுத்தினாள் மங்கை.

அதற்கு மேல் வீடு வந்து சேரும் வரை அமைதி நிலவ, ருக்மணியிடம் மட்டும் பத்து நிமிடம் நன்றாக பேசிவிட்டு, கிளம்பும் போது அவளைப் பார்த்து லேசாக புன்னகைத்து விட்டு கிளம்பிச் சென்று விட்டான்.

 

 

தலைக்குலுக்கி சுயம் உணர்ந்தவளுக்கு , அப்போதுதான் பசியாறிய குழந்தை  மடியில் உறங்கிக் கொண்டிருப்பது கண்ணில் பட,  அதைத் தோளில் போட்டுக் கொண்டு  இடவலமாக நடந்தவள்அதனை தொட்டிலில் இட குனியும் பொழுதுதிடீரென்று குமட்டிக் கொண்டு வரகுழந்தையை அவசர அவசரமாக தொட்டிலில் கிடத்தி விட்டு குளியலறைக்கு ஓடிச்சென்று சாப்பிட்ட அனைத்தையும் வாந்தியாய் எடுத்து தள்ளினாள்.

 

உடனே சுத்தப்படுத்திக் கொண்டவள்,

அவங்க வீட்டு சாப்பாட்ல நெய் அதிகமா இருந்ததால ஒத்துக்கல போல .... என நினைத்துக் கொண்டே வந்து மாதாந்திர தேர்வு தாளை எடுத்து திருத்த ஆரம்பித்தாள்.

 

மூன்று தேர்வு தாள்களை திருத்தி முடித்துநான்காவதை எடுக்கும் பொழுதுமீண்டும் குமட்டிக் கொண்டு வரஇம்முறை அடிவயிறே தொண்டைக்கு வரும் அளவிற்கு, மிகுந்த அழுத்தத்தோடு வாந்தி எடுத்தவள்தளர்ந்து போய் பற்றுதலுக்காக குளியலறை கதவில் சாய்ந்து கொள்ளும் பொழுது , எதிர் சுவரில் மாட்டியிருந்த காலண்டரின் மீது பார்வை படிய

 

"கடைசியா பீரியட் எப்ப வந்துச்சு ..." என்ற திடீர் கேள்வி முளைக்க, பதில் தெரியாமல் உறைந்து நின்றாள்.

 

பிறகு அவசர அவசரமாக பல நிகழ்வுகளை  அசை போட்டுப் பார்த்தவளுக்குஅவளது உள்ளுணர்வு சொன்னது 100% சரியாக இருக்க வாய்ப்பு உள்ளது என தெரிய வர, கண்கள் பனிக்க, உடல் நடுங்ககரம் அவளது மணி வயிற்றை தடவ, லேசான கேவல்  வெளிப்பட, அருகில் இருந்த நாற்காலியில் அப்படியே சரிந்தமர்ந்தாள்.

 

முதலில் பத்து நிமிடம்எதையும் யோசிக்காமல் உறைந்திருந்தவள், தன் சந்தேகம் சரியா என்பதை அறிந்து கொண்டு விட்டு பிறகு முடிவெடுக்க நினைத்து,

 

"அம்மாகுழந்தை தூங்கிட்டா ... நான் கொஞ்சம் மெடிக்கல் ஷாப் வரைக்கும் போயிட்டு வரேன்  ...."

 

"ஏம்மா.... உடம்பு ஏதாவது பண்ணுதா  ...."

 

"இல்ல இல்ல .... குழந்தைக்கு மருந்து வாங்கணும் ...."

 

" நீ எதுக்கு கஷ்டப்படறஎன்ன மருந்துனு எழுதிக் கொடு , நானாவது அப்பாவாவது போய் வாங்கிட்டு வரோம்... இருட்டினதுக்கு அப்புறம் தனியா வெளிய போறது நல்லதில்ல..." 

 

தாயின் பேச்சைக் கேட்டு தடுமாறியவள்உடனே சுதாரித்துக் கொண்டு 

 

"இல்லம்மா ... எழுதிக் கொடுத்த மாத்திரை கிடைக்கலைன்னா ஆல்டர்னேட்டிவ் மாத்திரை வாங்கிட்டு வரணும் .... அது உனக்கு சொல்ல தெரியாது .... அதனால நானே போய் வாங்கிட்டு வந்துடறேன் ..."  என்றவள் அதற்கு மேல் கணம் கூட நிற்காமல், விறுவிறுவென செருப்பை அணிந்து கொண்டு , வீதியில் இறங்கி நடக்கலானாள்.

 

எப்பொழுதும் வாங்கும் இரண்டு மருந்துகளை குழந்தைக்காக வாங்கிக் கொண்டுஉடன் கர்ப்பத்தை உறுதி செய்யும் சாதனத்தையும் வாங்கிக் கொண்டு வேகமாக வீடு திரும்பியவள், குளியல் அறைக்குச் சென்று அதை பரிசோதனைக்கு உட்படுத்திவிட்டு தேர்வு முடிவுக்காக காத்திருக்கும் மாணாக்கன் போல் பதைப்பதைபோடு பார்த்துக் கொண்டிருக்க, அந்த சாதனமோ ஓரிரு கணத்தில் இரட்டை சிவப்பு கோடுகளை தீர்க்கமாக காட்டி  அவளது இதயத்துடிப்பை ஏகத்துக்கும் எகுற  வைத்தது. 

 

ஓரிரு கணம் ஆடாமல் அசையாமல் நின்றிருந்தவளின் கண்களில் கங்கை பிரவாகம் எடுக்கமூளை வேலை நிறுத்தம் செய்யதளர் நடை நடந்து,  

உறங்கிக் கொண்டிருந்த குழந்தைக்கு அருகில் சென்று அமர்ந்து கொண்டுஅதன் கேசத்தை , கோதிக்கொண்டிருந்தவளின் மனதில் ஆயிரம் ஆயிரம் எண்ணங்கள் அலைமோதத் தொடங்கின.

 

இரண்டாவது முறை அவள் கருத்தரித்த செய்தி உறுதியானதும், அவள் மனம் கவர்ந்த மணாளன் அவளை தன் மார்போடு அணைத்துக் கொண்ட காட்சிகள், அதனைத் தொடர்ந்து வந்த நிகழ்வுகள் எல்லாம் அவள்  மன கண் முன் தோன்றி பேயாட்டம் போட அப்போதிருந்த மனநிலைக்கும் இப்போது இருக்கும் மனநிலைக்கும் ஒப்பிட்டுப் பார்த்து துடித்து துவண்டு விட்டாள் பாவை .

 

பலமுறை கேட்டும் வீட்டை விட்டு வந்ததற்கான காரணத்தை ருக்மணியிடம் இதுவரை அவள் சொன்னதில்லை. 

 

ஒரு கட்டத்தில்மகளின் மனம் ரணமாக உள்ளது என்பதை புரிந்து கொண்டதோடு ,கற்பகம் அருணாவை பற்றியும் நன்கு அறிந்திருந்ததால், ஏதோ நடக்க கூடாதது நடந்துள்ளது என்பதை மட்டும் மனதில் ஏற்றுக் கொண்டு, மகளையும் வற்புறுத்த மனம் இல்லாமல்  அவள் போக்கிலேயே விட்டுவிட்டார் ருக்மணி.  

 

ஆனால் இப்போது அவள் இருக்கும் நிலையை மட்டும் அறிய நேர்ந்தால்உருவாகிய குழந்தையை காப்பாற்றும் எண்ணத்தோடு, மகளின் வாழ்க்கையையும் சீர் செய்யும் நோக்கில் , இத்துணை நாட்கள்  காத்து வந்த மௌனத்தை உடைத்து  ராம் சரணை  சந்தித்து அவள் நிலையை  வெட்ட வெளிச்சம் ஆகிவிடுவார் அவள் தாய் .

 

அவள் கணவனைப் பற்றி சொல்லவே வேண்டாம் .... ஏற்கனவே காரணம் கேட்டு சுற்றிக் கொண்டிருப்பவனுக்கு ஆகச் சிறந்த காரணம் கிடைத்து விட்டதாக எண்ணிக் கொண்டு, அதனைப் பிடித்துக் கொண்டே அடுத்த கட்டத்திற்கு காய் நகர்த்த தொடங்கி விடுவான் ....

 

ஆனால் அவள் இருக்கும் மனநிலையில்அவளால் மீண்டும் அவனோடு அவனது இல்லத்திற்கு சென்று  வசிக்க முடியாது ...

 

அதற்கான காரணத்தைக் கேட்டால் சொல்லவும் முடியாது.

ஏற்கனவே ஒரு முறை ஆதாரம் இல்லாமல் குற்ற பத்திரிக்கை வாசித்து, கற்பகம் அருணா முன்பு அவமானப்பட்டு விட்டாள்.

அவள் கணவனும் அவளது உணர்வுகளுக்கோ வார்த்தைகளுக்கோ மதிப்பளிக்காமல் ஆதாரத்திற்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுப்பவன் ஆதலால் ஆதாரம் இல்லாமல்  நடந்த அசிங்கத்தை பற்றி அவனிடம் பேசி பிரயோஜனம் இல்லை என்பதால்  திண்டாடி போனாள் அந்த கோதை. 

 

இப்பொழுது தான் தங்கையின் வாழ்க்கைக்கு தடையாக இருக்கு மனம் இல்லாமல்தந்தையின் ஏளனப் பார்வையில் இருந்தும் தப்பித்துக் கொள்வதற்காக தன் சொற்ப வருமானத்தை கொஞ்சம் கொஞ்சமாக சேர்த்து தனி வீட்டை பார்த்துக் கொண்டு செல்ல அவள் திட்டமிட்டிருக்கும் வேளையில், இப்படி ஒரு செய்தி அவளை இடிபோல் தாக்க குலுங்கி அழுதவள்,

 

என்னை மன்னிச்சிடு கண்ணா .... அம்மாகிட்ட உன்னை வளர்க்க பணம் இல்லை ....  ஊர்ல எவ்ளோ பேருக்கு குழந்தையே இல்லை ... அவங்க கிட்ட எல்லாம் நீ போகாம ஏன் என்கிட்ட வந்த .... இந்த துரதிஷ்டசாலியை தேடி வந்ததால தான் நீ கருவுலயே அழியப் போற .... எனக்கு வேற வழி தெரியல ... 

 

கண்ணுக்குத் தெரிஞ்ச குழந்தையை காப்பாத்த வெறும் சதை பிண்டமாக இருக்கிற உன்னை பலி கொடுக்க போறேன் .... என்று நினைத்தவளின் கரம் அவள் அடிவயிற்றை தடவ, உள்ளுக்குள் ஒரு சிறு சிலிர்ப்பு ஏற்பட,

 

நீ பொண்ணா.... பையனா ....

 

யாராயிருந்தா என்ன ... 

 

எனக்கு நீ வேண்டாம் ....

 

என்று நினைத்தபடி வாயை பொத்திக்கொண்டு தேம்பித் தேம்பி  அழுதாள்.

 

நல்ல வேலையாக ராம லக்ஷ்மி அவளது தோழியின் திருமணத்திற்கு கேரளாவிற்கு சென்றிருப்பதால், அவளால் அந்த அறையில் நிம்மதியாக தனித்து வாய்விட்டு அழ முடிந்தது. 

 

அக்கான்ஷா வீட்டில் நடந்ததெல்லாம் பின்னுக்குத் தள்ளப்பட்டுஅபார்ஷன் செய்து கொள்வதற்கான மனநிலைக்கு தன்னை தயார் படுத்திய படி அழுது கொண்டே உறங்கிப் போனவளின் கனவில்,

 

அம்மாஎன்னை கொன்னுடாதம்மா ... ப்ளீஸ் மா .... நான் உன் கூட இருக்க ஆசைப்படறேம்மா.... 

 

என ஒரு சிறு குழந்தைஅவள் கால்களைக் கட்டிக் கொண்டு அழ, விருட்டென்று உறக்கம் விழித்து எழுந்தமர்ந்தவளின் கரம்

அவள் மணி வயிற்றை தடவ, உள்ளுக்குள் ஏதோ ஒரு அசைவு தெரிவது போல் தோன்ற, உடனே எழுந்து சென்று கண்ணாடியில் பார்த்தவளுக்கு வயிறு லேசாக மேடிட்டது தெரிய, துரிதமாக மீண்டும் நாள் கணக்கிட்டு பார்த்தவள் துவண்டு போய் அமர்ந்து விட்டாள்.

 

ஐயோ ... கிட்டத்தட்ட நாலு மாசம்

வருதே ... இப்ப என்ன பண்ணுவேன்...

குழந்தை பிறந்ததிலிருந்துமாதவிடாய் சுழற்சி அவளுக்கு முறையாக இல்லை. அது குறித்து மருத்துவரிடம் கேட்ட போது, பெரும்பாலான பெண்களுக்கு குழந்தை பிறப்பிற்கு பிறகு முதல் இரண்டு ஆண்டுகள் முறையற்ற மாதவிடாய் சுழற்சி அமைவது இயல்பான ஒன்றுதான்மேலும்  மாதவிடாய் சுழற்சி தள்ளிப் போவதற்கு அவள் குழந்தைக்கு அமுதூட்டுவதையும் ஒரு காரணமாக அவர் சொன்னதால்அன்றிலிருந்து அவள் மாதாந்திர விலக்கிற்கு  முக்கியத்துவம் கொடுக்காமல் விட்டு விட்டாள் , உடன் கணவனை பிரிந்து வந்த சோகமும் சேர்ந்து கொள்ள, எதையுமே நின்று நிதானித்து கவனிக்கும் மனநிலையில் இல்லாமல் போனதால், தற்போது அனைத்தும் கை மீறி போக, செய்வதறியாது விழி பிதுங்கி நின்றாள் பெண் .

 

இத்தனை நாட்கள் ஏன் என்று கேட்காமல்  இருந்தவன் 

திடீரென்று முன்தினம் முளைத்து  நெருக்கம் காட்டிய ஒரே காரணத்தால், நடந்த கசப்புக்கள் அனைத்தையும் மறந்து விட்டு

 

"நான் நம்ம குழந்தையை உண்டாயிருக்கேன் ...."  என மானம் கெட்டுப் போய் அவனிடம்  குழந்தைக்காக யாசிக்க அவள் தன்மானம் இடம் அளிக்காததால் நாளையோ அல்லது நாளை மறுநாளோ கருக்கலைப்பு செய்து கொண்டே ஆக வேண்டும் என்று முடிவுக்கு வந்தவள் , தன் தாய்க்கு  தெரியவே கூடாது என்ற திட்டத்தையும் போட்டு விட்டே மணிக்கணக்காக புரண்டு படுத்து தேம்பி அழுதபடி வைகறைப் பொழுதில் உறங்கிப் போனாள்.

 

மாணவ மணிகளுக்கு வாழ்க்கை தத்துவங்களை  எடுத்து சொல்லி மனிதர்களை படிக்க கற்றுக்கொடுத்தவள், தன் மனிதனை படிக்க விருப்பமில்லாமல் உள்ளத்து உணர்வுகளை சுருக்கி மனதை கல்லாக்கி கொண்டு இப்படி ஒரு கொடூர முடிவை தேர்ந்தெடுத்ததற்கு அவள் வகையில்  காரணங்கள் இல்லாமல் இல்லை.

 

அவன் இல்லாதபோதுஅவன் வீட்டில்  நடந்த அட்டூழியங்கள் ஒருபுறம் என்றால்

 

மனையாள் வீட்டை விட்டு சென்றது தெரிந்தும் 

அவளைத் தொடர்பு கொள்ளவோ சந்தித்து உரையாடவோ முயற்சிக்காமல் கிட்டத்தட்ட  மூன்று மாதங்களுக்கு மேல்  காலம் தாழ்த்தியதோடுஅவள் கேட்ட விவாகரத்துக்கும் அவன் முதலில்  சம்மதம் தெரிவித்தது, எல்லாம்  சேர்ந்து அவளை மனதளவில் மரணிக்கச் செய்திருந்ததால்  இப்படி ஒரு கொடுமையான முடிவை வீம்பிற்காக எடுத்தாள் என்பது தான் நிதர்சனம்.

 

 

காலையில் மணி எட்டை கடந்தும்மகள் உறங்கிக் கொண்டிருப்பதை பார்த்து,

 

"லட்சுமிஉடம்பு ஏதாவது சரியில்லையா .... நேரமே எந்திரிச்சிடுவியே .... இன்னைக்கு என்ன ஆச்சு ..." என்று வாஞ்சையாக ருக்மணி எழுப்பும் பொழுது தான்உறக்கம் களைந்து எழுந்தமர்ந்தாள் லட்சுமி .

 

அவள் முகம் வீங்கி சிவந்திருப்பதைக் கண்டு ,

 

"ஏன் முகம் வீங்கி இருக்கு ..." என்ற போது தான் நேற்று இரவின் தாக்கம் தொற்றிக்கொள்ள, லேசான படபடப்பு அவளுள் உருவாக ,

 

"ஒன்னும் இல்லம்மா... உடம்பு ரொம்ப டயர்டா இருக்கு ... நான் இன்னைக்கு ஸ்கூலுக்கு லீவு போடலாம்னு இருக்கேன் ... நீ ஸ்கூலுக்கு கிளம்பு..."

 

" சரிசமையல் செஞ்சு வெச்சிருக்கேன்போட்டு சாப்பிட்டு நிம்மதியா தூங்கி எழும்பு ... எல்லாம் சரியாயிடும் ... மாத்திரை வேணும்னா கூடத்து செல்ப்ல இருக்கு ..." என்றவர் துரிதமாக மற்ற வேலைகளை முடித்துவிட்டு பள்ளிக்கு கிளம்பி சென்று விட்டார்.

அவர் சென்றதும்ஒரு தனியார் மருத்துவமனையை தொடர்பு கொண்டு மகப்பேறு மருத்துவரை சந்திக்க முன் அனுமதி பெற்றாள் லட்சுமி. மாலை 3 மணிக்குஅவளுக்கான நேரம் ஒதுக்கப்பட்டது.

 

அவளது அனைத்து திட்டங்களும் ஓரளவிற்கு சரியாக நடப்பது போல் தோன்றகண்களில் கண்ணீர் தளும்ப சுவரில் மாட்டியிருந்த பெருமாளை பார்த்தபடி,

 

என் நிலைமை எந்த பொண்ணுக்கு வரக்கூடாது சாமி….

 

இந்த குழந்தையை பெத்துக்கணும்னு ஆசையா இருக்கு ....

 

ஆனா பெத்து வளர்க்க என்கிட்ட வசதி இல்ல ....என் உடம்பு இருக்கிற நிலைமைக்கு மாசமா இருக்கும் போது வேலைக்கும் போக முடியாது ...

 

என்னை உட்கார வச்சு சாப்பாடு போட எங்க வீட்டுல வசதியும் கிடையாது ...

 

இதெல்லாம் உனக்கு சொல்லனும்னு இல்ல உனக்கே எல்லாம் தெரியும் ....

 

அதோட செய்ய  போறது மகா பாவமான காரியம் .... வேற வழி இல்ல ... தெரிஞ்சே செய்யறதால உன்கிட்ட மன்னிப்பு கேட்கிற தகுதியும் இல்ல  ....

 

ஆனா ஒரே ஒரு வேண்டுதலை மட்டும் நிறைவேத்தி கொடு ... என் புருஷனுக்கும் என் அம்மாவுக்கும் எந்த காலத்துலயும் இந்த விஷயம் தெரியவே கூடாது ப்ளீஸ் ...

என்றாள் மானசீகமாக மனம் நொந்து அழுதபடி.

 

தவறி கூட தவறிழைக்காதவள், முதன்முறையாக தெரிந்தே தவறு செய்யப் போவதால் குற்ற உணர்வில் சிக்கி தவிக்க, புகைப்படத்தில் இருந்த வைகுண்ட வாசனோ 

அனைத்தையும் கேட்டபடி மர்ம புன்னகையோடு அவளையே பார்த்துக் கொண்டிருந்தார்.

 

 

ஸ்ரீ-ராமம் வருவார்கள் ...

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 


Comments

Post a Comment