அத்தியாயம் 31
மனையாள் திடீரென்று யார் காரிலோ ஏறி பயணித்தது, அவனுள் ஊற்றெடுத்திருந்த உற்சாகத்தை முற்றிலும் வடிய
செய்திருக்க, ஓரிரு கணம் செய்வதறியாது உறைந்து நின்றவன், பிறகு சுயம் உணர்ந்து குழம்பித் தவித்தபடி தன் வீடு
போய் சேர்ந்தான்.
ராம்சரண் தன் வீடு வந்து சேர்ந்த அடுத்த அரை மணி
நேரத்தில், ஸ்ரீலட்சுமியை தன் காரில் அழைத்து வந்து அவளது இல்லத்தில் இறக்கி விட்ட ரிஷி, தன் அண்ணன் மகள் அக்கான்ஷா உடன் சேர்ந்து ருக்மணியிடம்
ஓரிரு கணம் அளவளாவி விட்டே விடை பெற்றான்.
“ரிஷி தம்பி, பெரிய பணக்கார குடும்பத்தை சேர்ந்தவருன்னாலும், கொஞ்சம்
கூட பந்தா இல்லாம, நம்ம மாப்பிள்ளை போலவே
பழகுறாரு..... இல்ல ... அந்த சின்ன பொண்ணும் ரொம்ப மரியாதையா பழகுது ..." என்ற
தாய் ருக்மணியின் பேச்சை காதில் வாங்கிய படி குழந்தைக்கு
அமுதூட்டி கொண்டிருந்தவளின் மனதில் சில மாதங்களுக்கு முன்பு நடந்தவைகள்
எல்லாம் விரியத் தொடங்கின.
அந்த ஊரில் மட்டுமல்ல, ஏறக்குறைய இந்தியாவில் உள்ள பெரும்பாலான
மாநிலங்களில், " அக்கான்ஷா ஜுவல்லர்ஸ் " என்ற
பெயரில் தங்க வைர நகைகளை செய்து விற்கும் நிறுவனத்தை
ரிஷி மற்றும் அவனது தமையன் ராகேஷ் வெற்றிகரமாக நடத்தி வருகிறார்கள்.
ஒரு காலத்தில் நலிந்திருந்த அவர்களது குடும்ப
தொழிலான நகை வியாபாரத்தை, கையில் எடுத்து அண்ணனும்
தம்பியும் இரவு பகல் பாராமல் அயராது உழைத்து வெளிநாட்டில் கிளைகளை உருவாக்கும் அளவிற்கு வளர்ச்சி
அடைந்திருந்தனர்.
அவ்வளவு செல்வாக்குள்ள பெரிய மார்வாடி குடும்பத்தை
சார்ந்த ராகேஷின் மகள் தான் இந்த அக்கான்ஷா.
ஒன்பதாம் வகுப்பு மாணவ மாணவிகளுக்கு கணிதம்
மற்றும் கணினி ஆசிரியையாக ஸ்ரீலட்சுமி பணி அமர்த்தப்பட்ட பின்பு, காலாண்டு தேர்வுகள் முடிவடைந்த நிலையில் அந்த வகுப்பில் வந்து சேர்ந்தாள்.
நல்ல உயரம், சிவந்த நிறம், கோதுமை மற்றும் மைதா மாவு
கலந்து செய்த சருமம் என பொம்மை போல் காணப்பட்டவள், மெய்யாகவே
உணர்ச்சிகள் அற்ற பொம்மை போல் தான் வளைய வந்தாள்.
முதல் ஒரு வாரம், லட்சுமி சொல்லிக் கொடுப்பதை காதுகளில் வாங்கிக் கொண்டாலும், பாட புத்தகங்களில் எதையுமே எழுதாமல் சிலை போல் அமர்ந்திருந்தாள்.
இரண்டாவது வாரத்திலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக கரும்பலகையில்
எழுதப்பட்டதை தன் குறிப்பேட்டில் எழுத ஆரம்பித்தாள்.
மூன்றாவது வாரத்திலிருந்து ,மற்ற மாணவ மாணவிகள் பதிலளிப்பதற்கு முன்பாக, லட்சுமி கரும்பலகையில் எழுதி இருக்கும் கணக்கிற்கு, துரிதமாக
பதிலளித்தாள்.
ஐந்தாம் நாள் சோகமே உருவாக பள்ளிக்கு வந்தவளை, தனியாக அழைத்து விசாரித்தாள் லட்சுமி .
அப்பொழுது தான் தூரத்து உறவுக்கார பையனை அவள் காதலிப்பதும், குடும்பப் பகை காரணமாக வீட்டில் அதற்கு பலத்த எதிர்ப்பு தெரிவித்ததோடு
சென்னையில் படித்து கொண்டிருந்தவளின் படிப்பை பாதியில் நிறுத்தி கோயம்புத்தூர்க்கு அழைத்து வந்து
அந்தப் பள்ளியில் சேர்த்ததும் தெரிய வந்தது.
தற்போது கோயம்புத்தூரில் தந்தை வழி தாத்தா, பாட்டி மற்றும்
சித்தப்பா ரிஷியுடன் வசித்து வருவதாக சொன்னவள்
"எனக்கு படிப்புன்னா ரொம்ப
பிடிக்கும் மிஸ் ... நான் சென்னையில படிக்கும் போது எப்பவுமே ஏ
கிரேட் தான் வாங்குவேன்... ஆனா இப்ப எல்லாம் என் அம்மா அப்பா மேல கோவம் கோவமா
வர்றதால எனக்கு படிக்கவே பிடிக்க மாட்டேங்குது மிஸ்..." என்றவளிடம் அவள்
காதலிக்கும் இளைஞனை பற்றிய தகவல்களை திரட்டினாள் லட்சுமி .
அக்கான்ஷா காதலிக்கும் அந்த இளைஞன் பொறியியல் படிப்பை முடித்துவிட்டு
அவன் தந்தை நடத்தி வரும் நகைக்கடையின் ஒரு கிளையை
தற்போது தலைமை ஏற்று எடுத்து நடத்தி வருகிறான் என்றும்
கூடிய விரைவில் அவனுக்கு திருமணம் முடிக்க அவனது பெற்றோர்கள் திட்டமிட்டு
இருக்கிறார்கள் என்பதும் தெரிய வர
"இங்க பாரு ... நீ லவ் பண்ற
பையன் இன்ஜினியரிங் முடிச்சிட்டு இப்ப அவங்க ஜுவல்லரி ஷாப்போட ஒரு ப்ரான்ச் ஹெட்டா
வொர்க் பண்ணிக்கிட்டு இருக்கான்... சோ, அவனுக்கான எதிர்கால
வாழ்க்கையை அவன் சரியா அமைச்சுக்கிட்டான் ...
ஆனா நீ இன்னும் நைன்த் கிளாஸ் கூட முடிக்கல ... அவனுக்கும் உனக்கும் எட்டு வயசு வித்தியாசம் வேற அவன் உண்மையா உன்னை லவ் பண்ணி இருந்தா,
நிச்சயம் நீ ஒரு டிகிரி முடிக்கிற வரைக்கும் காத்துகிட்டு இருப்பான்
.... காத்துகிட்டு இருக்கணும் அப்பதான் அவன் உன் மேல வச்சிருக்க காதல்
உண்மையானது ....
உங்க அம்மா அப்பா உன் காதலுக்கு எதிர்ப்பு
தெரிவிக்கிறது ஒரு பக்கம் இருக்கட்டும் .... சப்போஸ் நீங்க ரெண்டு பேரும் இப்ப கல்யாணம் பண்ணிக்கிட்டா கூட
அந்த கல்யாணம் சட்டப்படி செல்லாது தெரியுமா .... ஏன்னா
நீ மைனர்.... உங்க அப்பா ஒரு போலீஸ் கம்ப்ளைன்ட் கொடுத்தா, அந்த பையன தூக்கி உள்ள வச்சுடுவாங்க ...
இங்க பாரு உங்க அப்பா அம்மா மேல இருக்கிற
கோவத்தால படிக்காம உன் வாழ்க்கையை கெடுத்துக்காதே ....
நீ உன் குடும்பத்தை பத்தி சொல்றதை எல்லாம் வச்சு
பார்த்தா , உங்க குடும்பம் ரொம்ப அருமையான குடும்பமா தெரியுது ...
உன் அப்பாவும் ரொம்ப பொறுப்பான அன்பான அப்பாவா
இருக்காரு ... உன் லவ் மேட்டர் தெரிஞ்சதும் ரொம்ப மனமுதிர்ச்சியோட, தரமான வார்த்தைகள
பயன்படுத்தி அருமையா உனக்கு அட்வைஸ் பண்ணி இருக்காரு
...
இப்படிப்பட்ட அப்பா யாருக்கு கிடைப்பாங்க....
எடுத்தவுடனே ஒன்னு பொண்ண அடிப்பாங்க ....
இல்ல பெத்த பொண்ணுன்னு கூட பாக்காம தகாத வார்த்தைகளைப்
பேசி அவ சூசைட் பண்ற அளவுக்கு கொண்டு போய் விட்டுடுவாங்க ..... பெரும்பாலான
அப்பாக்கள் செய்யற தப்ப உன் அப்பா செய்யாம, உன் மனமாற்றத்துக்காக படிப்பை நிறுத்தி, இங்க
கொண்டு வந்து சேர்த்திருக்காரு... இங்க இருக்கிற உன் தாத்தா , பாட்டி, சித்தப்பா எல்லாரும் உன் மேல ரொம்ப
அக்கறையாவும் அன்பாவும் இருக்காங்க ... வேற என்னம்மா வேணும் உனக்கு ....
உன் குடும்பத்துல இருக்கிறவங்களை விடவா, நீ லவ் பண்ற பையன் உன் மேல பாசமா இருப்பான்னு
நினைக்கிற...
உன் ஃபேமிலி மெம்பர்ஸ் உனக்காக எவ்வளவோ நல்லது
செஞ்சிருக்காங்க... செஞ்சிகிட்டும் இருக்காங்க
.... ஆனா அந்த பையன் உன்னை லவ் பண்ணினதை தவிர வேற என்ன உனக்காக பண்ணியிருக்கான்
....
இப்ப அவன் வெறும் சாப்பிட்டியானு கேட்டா கூட
உனக்கு கவிதையா தான் தெரியும் ... ஆனா சில வருஷங்களுக்கு அப்புறம் இன்னைக்கு
நடந்ததை எல்லாம் நினைச்சு பார்த்தா கண்றாவியா தெரியும்…
உன்னோடது லவ்வுனே நான் ஒத்துக்க மாட்டேன் ... அது ஜஸ்ட் இன்பாக்ட்சுவேஷன் அவ்ளோ தான்... பொண்ணுங்களுக்கு
அழகை விட படிப்பும் திறமையும் தான் முக்கியம் ....
அழகுக்கு எக்ஸ்பயரி டேட் உண்டு ... ஆனா
படிப்பும் திறமையும் மரணப்படுக்கைல கூட உதவும் ...
நாளைக்கு நீ யாரை கல்யாணம் பண்ணிக்கிட்டாலும், குறைந்த பட்சம் ஒரு டிகிரி வாங்கி இருந்தா தான் உன்
திருமண வாழ்க்கைல உனக்கு மரியாதை கிடைக்கும் ....
கல்யாணம் முடிஞ்சு முதல் ஒரு வருஷம் தான் ஒரு
ஆணின் பார்வைல ஒரு பொண்ணு அழகா தெரிவா...
அதுக்கு மேல உங்க திருமண பந்தம், நிலைச்சு நிக்கணும்னா பரஸ்பர மரியாதை தேவைப்படும்
...
அப்படி பரஸ்பர மரியாதை பத்தி பேசும் போது அங்க
படிப்பும் வேலையும் தான் முதல்ல வரும்
...
கண்ட கண்ட உணர்ச்சிகளை தூண்டற கதை, சினிமாவை பாத்துட்டு படிப்பு
வேலை எதுவுமே இல்லாம, அவசர அவசரமா கல்யாணம்
பண்ணிக்கிட்டு ஒரு குழந்தையும் பெத்துட்டு, ஆற அமர
விதிய நொந்து அழுதுகிட்டு இருக்கிற எத்தனையோ
பொண்ணுங்களை நான் பார்த்து இருக்கேன் ... படிப்பு
வேலையெல்லாம் வெறும் சம்பாத்தியத்துக்காக மட்டுமில்ல மனமுதிர்ச்சிக்காகவும்
, தன்னம்பிக்கைகாகவும் தான்..
மனமுதிர்ச்சி எப்படி வரும்? வாழ்க்கை கொடுக்கிற அனுபவத்தால தான் வரும் .... அந்த
அனுபவம் எப்படி கிடைக்கும், பலதரப்பட்ட மக்களோட பழகும்
பொழுதும், புதுப்புது பிரச்சினைகளை சந்திக்கும் போது
எடுக்கிற முடிவுகளோட வெற்றி தோல்விகளும் தான் வாழ்க்கை
பாடத்தை சொல்லிக் கொடுக்கும் ...
அப்படி கிடைக்கிற அனுபவங்கள் மூலம் மனுஷங்களை
படிக்க ஆரம்பிச்சுட்டா, சரியான வாழ்க்கை துணையை
தேர்ந்தெடுக்கிற முதிர்ச்சி வந்துடும்....
ஒரு பொண்ணுக்கு சரியான வாழ்க்கைத் துணை
அமைச்சிட்டாலே போதுமே... அதுக்கு மேல வாழ்க்கையே சொர்க்கம் தானே ...
அதுக்கு நீ குறைந்தபட்சம் ஒரு டிகிரியாவது
படிக்கணும் ... அப்படி நீ படிக்கும்போது, வாழ்க்கைய படிக்கிற சந்தர்ப்பமும் உனக்கு தானா அமையும் ...
கடைசியா சொல்றேன், உன்னை அந்த பையன் உண்மையா லவ் பண்றான்னா நிச்சயம்
உனக்காக காத்துக்கிட்டு இருப்பான் ..... அவனுக்கு ரொம்ப சின்ன வயசு தான் .... அதனால அவன் உனக்காக வெயிட் பண்ணலாம்
தப்பில்ல ...
உன் அப்பா அம்மாவுக்கு முதல்ல உண்மையா இரு ...
வீட்டுக்கு தெரியாம அந்த பையனோட போன்ல பேசறத நிறுத்து ... படிப்புல மட்டும் கான்சென்ட்ரேட் பண்ணு.... மத்தத அப்புறம்
பாத்துக்கலாம் ..." என நீண்ட நெடிய அறிவுரையை கூறி முடித்தாள்.
பிறகு வந்த நாட்கள் இயல்பாக கடக்க, மறு மாதம் மாதத் தேர்வு வந்தது. சொல்லி வைத்தார் போன்று, மாதத் தேர்வில்
அனைத்து பாடங்களிலும் முதல் மதிப்பெண் வாங்கி இருந்தாள்
அக்கான்ஷா.
முடிவுகள் வெளியான பிறகு, லட்சுமியை தனிமையில் சந்தித்து நன்றி தெரிவித்தவளிடம்
,
"இதுல நீ எனக்கு தேங்க்ஸ்
சொல்ல ஒன்னுமே இல்ல.. ஒரு டீச்சரா என்னோட வேலையை நான் சரியா
செஞ்சிருக்கேன் அவ்ளோ தான் ....
என்னை மாதிரி எத்தனையோ டீச்சர்ஸ் சரியான வழில ஸ்டுடென்ட்ஸ
சேனலைஸ் பண்ண இருக்காங்க .... ஆனா அதைக்
கேட்டு பர்ஃபெக்ட்டா ஃபாலோ பண்ற உன்னை மாதிரி ஸ்டூடண்ட்ஸ் தான் இங்க ரொம்ப ரொம்ப கம்மி .... " என மனமாற
பாராட்டினாள் லட்சுமி.
பிறகு ஆசிரியர் தினத்தன்று, மாணவ மாணவிகள் சிறு சிறு பரிசுப் பொருட்கள், சாக்லேட்ஸ் , வாழ்த்து அட்டைகள் போன்றவற்றை தங்கள்
வகுப்பு ஆசிரியர்களுக்கு கொடுத்து வாழ்த்து தெரிவிக்கும் போது, அக்கான்ஷாவும் ஸ்ரீலட்சுமிக்கு வாழ்த்து அட்டை கொடுத்ததோடு உடன் ஒரு
புகைப்படம் எடுத்துக்கொள்ள விரும்புவதாகச் சொல்லி, தன்
கைபேசியில்
புகைப்படம் எடுத்துக் கொண்டாள்.
நாட்கள் அழகாக நகர்ந்தன.... அனைத்திலும்
முன்னிலை வகிக்க ஆரம்பித்த அக்கான்ஷா, மிகுந்த தன்னம்பிக்கையோடு வளைய வர ஆரம்பித்தாள்.
இந்நிலையில் தான், தன் வீட்டில் நடைபெறும் ஒரு குடும்ப விசேஷத்திற்காக லட்சுமியை தன் இல்லத்திற்கு அழைத்தாள் .
தன் குழந்தையைப் காரணமாக சொல்லி லட்சுமி எவ்வளவோ வர மறுத்தும்,
"மிஸ், ப்ளீஸ்... நீங்க ஜஸ்ட் 10 மினிட்ஸ் எங்க வீட்ல
இருந்தா போதும் .... நான் நாளைக்கு ஸ்கூலுக்கு லீவுன்னாலும் , ஸ்கூல் விட்டதும்
உங்கள பிக் பண்ண நானும் என் பாட்டியும் ஸ்கூலுக்கே வந்துடுவோம் ....பாட்டி உங்கள பார்த்து நிறைய பேசணும்னு
ஆசைப்படறாங்க மிஸ்... ப்ளீஸ் மிஸ் ..." என அளவுக்கு அதிகமாக அக்கான்ஷா கெஞ்ச
வேறு வழியில்லாமல் சம்மதித்தாள் லட்சுமி.
ராம்சரண் பள்ளி வளாகத்தில் கண்டு உறைந்து நின்ற
காட்சி அது தான்.
அக்கான்ஷாவின் இல்லம், மினி அரண்மனை போல், வடநாடு
தென்னாடு கலாச்சாரங்களை குழைத்து புதுவிதப்பாணியில் மேல்
தட்டு வர்க்கத்தினர் வசிக்கும் பகுதியில் அமைந்திருந்தது.
வீட்டின் முன்புறம் வளமான பெரிய தோட்டம், நான்கைந்து விலை
உயர்ந்த கார்கள் என எங்கு திரும்பினும் பணத்தின்
செழுமை.
அகன்று விரிந்த கூடத்தில் வயதானவர்கள் ஆண் பெண் பேதம் இல்லாமல், கிட்டத்தட்ட
15 பேருக்கு மேல் உறவினர்கள் இருந்தனர்.
அவர்களது பேச்சு, உடை எல்லாம் ஏதோ, வடநாட்டில்
காலடி எடுத்து வைத்த உணர்வை, லட்சுமிக்கு கொடுக்க, அக்கான்ஷாவின் பாட்டி அம்ரிதா ஷா , அவளை அங்கிருந்த
அனைவருக்கும் அறிமுகப்படுத்தி வைத்தார்.
குறிப்பாக அவரது கணவர், அமர்நாத் ஷாவிற்கு அறிமுகப்படுத்த,கிட்டத்தட்ட 75 வயதை கடந்திருந்த அந்த முதியவரின்
பார்வையில் ஒருவித கண்ணியமும் மரியாதையும் தெரிய, அம்ரிதா
ஷாவின் பார்வையும் செய்கையிலுமே ஒருவித பொறுமையும் அமைதியையும் லட்சுமியால்
உணர்ந்து கொள்ள முடிந்தது .
இந்த தம்பதியரின் இரண்டாவது மகன் ரிஷி, தான் காரின் சாரதியாக
இருந்து லட்சுமியை பள்ளியிலிருந்து வீட்டிற்கு அழைத்து
வந்திருந்தான்.
பார்ப்பதற்கு நன்றாகவே இருந்தான்... அவன் கண்களில் அளவுக்கு அதிகமான அன்பும், அவளை ஏதோ நீண்ட நாட்களாக அறிந்து வைத்திருந்த தோழமையும் தென்பட்டது.
ஒவ்வொரு ஆண்டும் அந்த ஆண்டிற்கான முதல் தங்கத்தை உருக்கும் விசேஷத்தில்
உறவு பெண்களை வீட்டிற்கு அழைத்து,
அவர்களை மகாலட்சுமிகளாக பாவித்து
விருந்தளித்து, மஞ்சள் குங்குமம்,
பட்டுப் புடவை, பரிசுப் பொருட்களை வழங்கி
சிறப்பிப்பது அவர்களது சமுதாயத்தில் இருக்கும் ஒரு வழக்கம்.
அப்படி ஒரு சுப நிகழ்விற்காக தான் லட்சுமியை தன் இல்லத்திற்கு அழைத்து இருந்தார்
அம்ரிதா ஷா .
லட்சுமியை தவிர மற்ற அனைவருமே, அவர்களது உறவினர்கள் என்ற நிலையில், எதற்காக தன்னை இந்த குடும்ப விழாவிற்கு அழைத்திருக்கிறார் என புரியாமல்
உள்ளுக்குள் குழம்பினாலும், வெளியே இயல்பாக இருப்பது
போல் காட்டிக் கொண்டாள் லட்சுமி.
தனக்கு பிடித்த கிரிக்கெட் வீரர்கள், சினிமா நடிகர் நடிகைகளை தன் இல்லம் வந்தால் எவ்வளவு
மகிழ்ச்சி அடைந்திருப்பாளோ அவ்வளவு மகிழ்ச்சியில் மூழ்கித் திளைத்தாள் அக்கான்ஷா.
சரியாகச் சொன்னால், லட்சுமியின் வரவை அவள் கொண்டாடி தீர்த்தாள் .
அந்த மினி அரண்மனையை சுற்றி காண்பித்தவள், தன் அறைக்கும் அழைத்து செல்ல, லட்சுமிக்கு கோவாவில் 5 நட்சத்திர விடுதியின் டீலக்ஸ் அறையை அந்த அறை ஞாபகப்படுத்தியது.
இயல்பாக அனைத்தையும் பார்த்தபடி அவள் பேசுவதை உள்வாங்கிக் கொண்டே வந்த லட்சுமி சுவரில் மாட்டியிருந்த புகைப்படத்தை பார்த்து உறைந்தே போனாள்.
ஆசிரியர் தினத்தன்று அவர்கள் இருவரும் இணைந்து எடுத்துக்கொண்ட புகைப்படம்,
பெரிது படுத்தப்பட்டு பெரிய அளவில்
சட்டமிட்டு மாட்டப்பட்டிருந்தது .
பொதுவாக அக்கான்ஷா வயதில் இருக்கும் இளம்
வயதினர்கள், யாராவது பெரும் பிரபலத்தின் புகைப்படங்களை தன் அறையில்
வைத்திருப்பது தான் வழக்கம்.
மாறாக அவளது அறையில் அதுவும் வெறும் மூன்றே
மாதம் மட்டுமே அறிந்த தன் புகைப்படத்தை கண்டு சிலையாய் நின்றவளிடம்,
"என்ன மிஸ் ..... இப்படி
பாக்கறீங்க ..."
"என்னமா இது .... எதுக்காக
என் கூட இருக்கிற போட்டோவை ப்ளோ-அப் பண்ணியிருக்க ..."
"மிஸ், உங்களை எனக்கு ரொம்ப பிடிக்கும் ..... நீங்க ஒரு நாள் கூட கிளாஸ்ல ஓபி
அடிச்சதில்ல .... எத்தனை முறை டவுட் கேட்டாலும் பொறுமையா சொல்லிக் கொடுப்பீங்க
..... அதைவிட ஒவ்வொரு கிளாஸ் முடியும் போதும், அப்துல்
கலாம் விவேகானந்தரோட வாழ்க்கை தத்துவங்களை சொல்வீங்க ....
அது நீங்க எடுக்கிற சப்ஜெக்ட்க்கு சம்பந்தம்
இல்லன்னாலும், கேட்கிற எங்கள ரொம்ப சிந்திக்க
வச்சது ... அப்பத்துலருந்து தான் உங்களை கவனிக்க ஆரம்பிச்சேன் .... என்னுள்ள நிறைய
மாற்றங்கள்... அறிவுப்பூர்வமா யோசிக்க ஆரம்பிச்சேன்...
அப்புறம் என்னோட லவ் மேட்டருக்கு, நீங்க கொடுத்த அட்வைஸ், சரியான
நேரத்துல சரியான முடிவு எடுக்க எனக்கு உதவியா இருந்துச்சு ...
என் வீட்ல இருக்கிறவங்க கூட எனக்கு அட்வைஸ்
நிறைய பண்ணாங்க ... ஆனா அவங்க பேசினதுல, பெரும்பாலும் நடந்து முடிந்த குடும்ப
சண்டையும், என்னோட எதிர்காலம் மட்டும் தான் இருந்துச்சு ..
ஆனா நீங்க சொன்ன வார்த்தை தான், நான் சரியான நபரை காதலிக்கிறேனானு என்னை யோசிக்க வச்சது
.... அதுக்கப்புறம் எல்லாத்துக்கும் ஒரு முடிவு கட்டிட்டு , பழையபடி
பட்டாம்பூச்சியா வாழ ஆரம்பிச்சிட்டேன் மிஸ்...
பாருங்க மிஸ்... இப்ப எல்லாம் நான் உங்கள மாதிரியே ரைட்
ஹேண்ட்ல வாட்ச் கட்றேன் ... சின்னதா மெரூன் பொட்டு வச்சு அதுக்கு மேல சின்னதா குங்குமம் வச்சிக்கிறேன் ..." என்றவளின் முகத்தில்
அளவுக்கு அதிகமான குழந்தைத் தனமும் குரு பக்தியும் தெரிந்தது.
அதனைக் கேட்டு ஒரு கணம் மனம் விட்டு லயித்து
சிரித்த லட்சுமி,
"பொதுவா சினிமா ஸ்டார்ஸ்ஸ
தான் ஃபாலோ பண்ணுவாங்க.... நீ என்னை ஃபாலோ பண்றயேம்மா… “
"எனக்கு நீங்க தான் மிஸ்
ரோல் மாடல் ... அதனால தான் உங்கள ஃபாலோ பண்றேன் ..." என முடித்தாள்
பெருமையாக.
பிறகு லட்சுமிக்கு அறுசுவை உணவு பரிமாறப்பட்டது.
ஏனோ அந்த உணவு அவள் தொண்டையில் இறங்க மறுக்க, மிகவும் போராடி தட்டில் இருந்ததை உண்டு முடித்ததும், பட்டுப்புடவை, பெரிய வெள்ளிக்
குத்துவிளக்கு போன்றவை பரிசுப் பொருட்களாக வழங்கப்பட,
ஒற்றைக்காலில் நின்று வாங்க மறுத்துவிட்டாள்
லட்சுமி.
கடைசியாக ஒரு சிறு வெள்ளி குங்குமச்சிமிழை பரிசாக கொடுத்து
"குங்குமத்தை யாரும்
வேணாம்னு சொல்ல மாட்டாங்க ... இந்த குங்குமச்சிமிழ்யாவது வாங்கிக்கம்மா....
"என்றார் அம்ரிதா வற்புறுத்தி .
அதனைப் பெற்றுக் கொண்டு லட்சுமி கிளம்ப
எத்தனிக்கும் போது ,
"நான் உங்ககிட்ட கொஞ்சம்
பர்சனலா பேசணும் ..." என்றார்.
"சொல்லுங்க ..."
என்றவளை தனியாக தன் அறைக்கு அழைத்துச் சென்று,
"உங்க டிவோர்ஸ் கேஸ் கோர்ட்ல
நடந்துகிட்டு இருக்கு இல்ல .... மியூச்சுவலுக்கு அப்ளை பண்ணி இருக்கீங்க தானே ...
சோ, ஒரு மூணு மாசத்துக்குள்ள உங்களுக்கு டிவோர்ஸ்
கிடைச்சுடும் இல்லையா ..." என்றவரின் தெளிவான பேச்சில் லட்சுமி உறைந்து நிற்க
,
"இதெல்லாம் எனக்கு எப்படி
தெரியும்னு பாக்கறீங்களா ... உங்க ஸ்கூல் பிரின்ஸ்பல் எங்களுக்கு ஒரு வகையில
சொந்தம்..... அவங்க மூலமா தான் உங்கள பத்தின எல்லா விஷயத்தையும் தெரிஞ்சுகிட்டோம்
... உங்கள பத்தி எதுக்காக நாங்க தெரிஞ்சுக்கணும் ... இதான உங்களோட அடுத்த கேள்வி
... சொல்றேன் ....
எங்க குடும்பத்தொழிலே நகை வியாபாரம் தான் ....
ஆனா ஒரு காலகட்டத்துல தப்பான உறவுக்காரங்கள நம்பினதால பெருத்த நஷ்டம் ஏற்பட்டு பிசினஸ் நொடிஞ்சு போயி மிடில் கிளாஸ்
லைஃபை லீட் பண்ண வேண்டிய நிலைமை வந்துடுச்சு ...
அப்ப மூத்தவன் ராகேஷ்க்கு கல்யாணமாகி ரெண்டு
வருஷம் ஆயிருந்தது .... ஆனா குழந்தை இல்லை ... நிறைய பூஜை புனஸ்காரத்துக்கு
அப்புறம்தான் அக்கான்ஷா பொறந்தா ... அவ பொறந்ததுக்கு அப்புறம், எங்கள விட்டுப் போன செல்வம், பல மடங்கா திரும்பி வர
ஆரம்பிச்சது .... அதனால தான் அவ பேர்லயே மறுபடியும் நகை கடை ஆரம்பிச்சோம் .... அவ எங்களோட லக்கி சாம் மட்டும் இல்ல, எங்க
எல்லாரோட உயிரும் அவதான் ...
இப்படி எங்க குடும்பமே கொண்டாடுற என் பேத்தி
அக்கான் ஷாவ, எங்கள ஆதிகாலத்துல
பிசினஸ்ல ஏமாத்தின குடும்பத்தோட
பையன், லவ் பண்றதா சொல்லி அவ மனசை கெடுத்து இருக்கான்
...
எவ்வளவோ என் பேத்திக்கு எடுத்து சொல்லி
பார்த்தோம் ... ஆனா அவ கேட்கல ... சென்னையில படிச்சுக்கிட்டு இருந்தவளை
கோயம்புத்தூர்ல கொண்டு வந்து சேர்த்துட்டான் என் பெரிய பையன்…
இங்கயுமே அவ எதையோ பறி கொடுத்த மாதிரி தான்
இருந்தா .... எங்களுக்கு என்ன பண்றதுன்னு புரியல .... அப்பதான் அவகிட்ட நிறைய நல்ல மாற்றங்கள் திடீர்னு தெரிய ஆரம்பிச்சது ....
பழையபடி சுறுசுறுப்பா வளைய வர ஆரம்பிச்சா ....
எல்லாரோடையும் கலகலப்பா பேசினா .... நல்லா படிக்க ஆரம்பிச்சா .... அப்ப அவளை கூப்பிட்டு விசாரிக்கும் போது தான் உங்களை பத்தி
சொன்னா…
உடனே உங்களைப் பத்தி பிரின்சிபில் கிட்ட விசாரிச்சேன்.... அப்ப தான் உங்க
பர்சனல் லைஃபை தெரிஞ்சுகிட்டேன் ... என்னடா முக்கியமான
விஷயத்துக்கு வராம எதையோ பேசிக்கிட்டு இருக்கானு நினைக்கிறீங்களா ...
சொல்றேன் ....
என்னோட மூத்த மகன் ராகேஷ்கும் ரெண்டாவது மகன்
ரிஷிக்கும் பத்து வயசுக்கு மேல வித்தியாசம் ... ரிஷிக்கு சமீபத்துல தான் ரொம்ப பெரிய பணக்கார இடத்துல பொண்ணு பாத்து கல்யாணம்
பண்ணி வச்சோம் ...
முதல்ல ரெண்டு மாசம் அவன் வாழ்க்கை நல்லா தான் போய்கிட்டு இருந்தது .. திடீர்னு என் மகனோட நடவடிக்கைல நிறைய மாற்றம் தெரிய ஆரம்பிச்சது ..... யாரோடயும் சரியா பேசுறதில்ல... பிசினஸ்ல கான்சன்ட்ரேட் பண்றதில்ல எதையோ பறி கொடுத்தவன் மாதிரி இருந்தான் .... அப்புறம் தான் தெரிஞ்சது, நாங்க அவனுக்கு கல்யாணம் பண்ணி வச்ச பொண்ணு ஒரு டிரக் அடிக்ட்னு....
வீட்லயும் சொல்ல முடியாம, அவளையும் கண்ட்ரோல் பண்ண முடியாம உள்ளுக்குள்ளேயே
வச்சு புழுங்கி இருக்கான் .....
அப்ப நானும், ரிஷி ஓட அப்பாவும் சென்னைல பெரியவன் வீட்ல இருந்தோம்
.... ரிஷியும் அவன் வைஃப்பும் இங்க தனியா
இருந்ததால எங்களுக்கு அந்த பொண்ண பத்தி எதுவும் தெரியல ...
எவ்வளவோ அந்த பொண்ணுக்கு கவுன்சிலிங் , ரீ-ஹாபிலிடேஷனு ஏகப்பட்டதுக்கு
செலவழிச்சு, கூட்டிகிட்டு போனான் ஆனா பலன் என்னவோ ஜீரோ தான்
.... அந்த பெண்ணோட வீட்ல சொன்னதுக்கு யாரும் அத பெருசா
எடுத்துக்கல ... அவங்க அம்மா அப்பா சுத்தமா
கவலைப்படல ...
ரிஷி இயல்பிலயே ரொம்ப பொறுமையானவன்... அவ உடம்பு
நாளுக்கு நாள் கெட்டு போறது பார்க்க முடியாம, துடிச்சு
போய்ட்டான்... கோவப்படாம எடுத்து சொல்லி பார்த்தான், டிரக்
அவளுக்கு கிடைக்காம எவ்வளவோ பார்த்துக்கிட்டான்... ஆனா எதுவுமே ஒர்க் அவுட் ஆகல
...
பேசாம டிவோர்ஸ் பண்ணிடுப்பான்னு நாங்க எவ்வளவோ
சொன்னோம் ... முடியாதுனுட்டான்...
ஒரு கட்டத்துல அவளே எனக்கு டிவோர்ஸ் வேணும்னு
கேட்டு நிறைய பணம் வாங்கிகிட்டு, டிவோர்ஸ்
கொடுத்துட்டு போய்ட்டா ...." என்று முடித்தவர்
ஒரு கணம் நின்று
"எங்க வீட்ல இருக்கிற
எல்லாருக்கும் உங்கள பிடிச்சிருக்கு
.... குறிப்பா என் பேத்திக்கு ரொம்ப பிடிச்சிருக்கு ..... நாங்க எவ்வளவோ
சொல்லியும் கேட்காதவ, நீங்க சொன்னதுக்காக
எல்லாத்தையும் மறந்துட்டு மாறினது எங்க
எல்லாருக்கும் ரொம்ப சந்தோஷம் ... எங்க குடும்பமே உங்களுக்கு கடமைப்பட்டிருக்கு
....
எப்படியும் டிவோர்ஸ்க்கு கிடைச்சதுக்கு அப்புறம் நீங்க இன்னொரு
கல்யாணம் பண்ணிக்க தான் போறீங்க .... நீங்க ஏன் என் ரெண்டாவது மகன் ரிஷிய கல்யாணம்
பண்ணிக்கிட்டு எங்க வீட்டுக்கு மருமகளா வரக்கூடாது ..."
ஏற்கனவே தன் கணித அறிவால், கூட்டிக் கழித்து அவர் பேசப்போவதை
ஓரளவிற்கு அனுமானித்திருந்தாலும், வாய்மொழியாக அதை
கேட்ட பின்பு ஏனோ நாக்கு வறண்டு
எழாமல் ஒட்டிக்கொள்ள , பேச
முடியாமல் வாயடைத்துப் போனாள் வனிதை.
ஸ்ரீ - ராமம் வருவார்கள் ....
வாசகக் கண்மணிகள் அனைவருக்கும் சுதந்திர தின
நல்வாழ்த்துக்கள் ....
thanks ma
ReplyDeleteMiga arumai akka .... happy independence day akka
ReplyDeleteSuper akka very nice
DeleteHappy independence day akka
Happy independence day sis .... Story vazhakkam pola supero superb sis... Take care of your health ❤️
ReplyDeleteThanks ma
ReplyDeleteSupperrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrr
ReplyDelete