ஸ்ரீ-ராமம்-29

அத்தியாயம் 29 

 

 

உன் கை கோர்த்து

அடி நான் சென்ற இடம்,

தன்னந்தனியாய் எங்கே வந்தாய்

என்றே கேட்கிறதே ....

 

உன் தோள் சாய்ந்து

அடி நான் நின்ற மரம்

நிழலை எல்லாம் சுருட்டிக் கொண்டு நெருப்பாய் எரிக்கிறதே.....

 

நிழல் நம்பிடும் என் தனிமை

உடல் நம்பிடும் உன் பிரிவை

உயிர் மட்டும் நம்பிட மறுக்கிறதே.....

 

என்ற பாடல் தொலைக்காட்சியில் ஓங்கி ஒலித்துக் கொண்டிருக்க, அலுவலகத்திலிருந்து வீடு திரும்பியவனின் காதுகளை அவ்வரிகள் அட்சர சுத்தமாய் ஆக்கிரமிக்கஉயிரை உருக்கிய அவ் வாக்கியங்கள்  அவனது சூழ்நிலைக்காகவே எழுதப்பட்டது போல் அவன் அடி மனதை பிசையஒரு கணம் தடுமாறி பிறகு  சுதாரித்தவன்தொலைக்காட்சியை நிறுத்திவிட்டு,

 

"டிவி பாக்கலைன்னா டிவியை ஆஃப் பண்ணனும்னு தெரியாதா .... ஊருக்கே கேக்குற மாதிரி சவுண்ட் வேற ...."  என கூடத்தில் நின்றபடி தன் மனச்சுமையை கோபமாக வெளிப்படுத்த,

 

"சாரி அண்ணே .... நான் தான் டிவி பார்த்துகிட்டு இருந்தேன் .... இரண்டு புள்ளைகளும் தோட்டத்துக்கு விளையாட ஓடிடுச்சீங்க.... கூப்பிட போனதுல மறந்து போயிட்டேன்...." என்றாள் அருணா தன்மையாக.

 

எண்ணிய காரியம் திண்ணியமாக நடந்தேறி விட்டதால் தாயும் மகளும் அடைந்த மன நிம்மதியின்  வெளிப்பாடு தான் அருணாவின் இந்த தன்மையான பதில்.

 

லட்சுமி வீட்டை விட்டுச் சென்ற பிறகு அருணாவிடம் ஆயிரம் மாற்றங்கள்.

 

மிகுந்த தன்மையாக பொறுமையாக செயல்படுகிறாள்... அல்லது செயல்படுவது போல் காட்டிக் கொள்கிறாளா என்ற கேள்வியும் ராம் சரணுக்கு இருக்கவே செய்தது ....

 

சமையல் செய்யும் சாந்தி அக்காவிற்கு உடன் இருந்து உதவுவது ....

உண்டு முடித்த  உணவு மேஜையில் இருந்து குளிர்சாதன பெட்டி வரை சுத்தத்தை கையாளுவது....

பூஜை என்ற பெயரில் நான்கைந்து விளக்குகளை தெய்வ விக்கிரகத்திற்கு முன்பு ஏற்றுவது ..... என 

லட்சுமி அந்த வீட்டில் இருந்தால், வீட்டின் நிர்வாகம் எப்படி இருக்குமோ..... அப்படி இருக்க மெனக்கிடுகிறாள் என்பது மட்டும் விளங்கியது ....

 

அது லட்சுமி அந்த இல்லத்தில் இல்லாததை  ஈடுகட்டும் செயலா... அல்லது , தான் முன்பு போல் இல்லாமல்  பொறுப்புடன் செயல்படுவதாக காட்டிக் கொள்வதற்கான அடையாளமா என்று தான் ராம்சரணுக்கு விளங்கவில்லை  ...

 

ஆனால் ஒன்று மட்டும் அவனுக்கு தெளிவாக விளங்கியதுவீட்டை விட்டு குழந்தையோடு வெளியேறிய லட்சுமியை பற்றி தாயும் மகளும்  மருந்தளவிற்கு கூட கவலைப்படவில்லை என்று. 

 

அப்போது பார்த்து அவனது அலைபேசி சிணுங்கியது ,வீரா தான் அழைத்து இருந்தான். 

 

அழைப்பை ஏற்றபடி அருணாவிடம்   அலுவலகத்திலேயே உண்டு முடித்ததை சைகையிலேயே தெரிவித்துவிட்டுதன் அறைக்கு வந்தவனிடம் 

 

"என்ன சரண், லட்சுமி கிட்ட பேசினியா..." என்றான் வீரா  எடுத்த எடுப்பில். 

 

ராம்சரண் பதில் பேசாமல் அமைதி காக்க,

 

"டேய்,  2 வாரமா என்ன ஸ்டேட்டஸோ அதே ஸ்டேட்டஸ்லயே இருக்கியே டா ... நானே இந்த வீக் என்ட்ல ஊருக்கு வந்துடுவேன் போல இருக்கே.. இன்னுமா நீ பேசல ....

 

"இல்லடா ..." என்றான் தேய்ந்த குரலில்.

 

"லட்சுமி வீட்டை விட்டு போய் மூணு மாசத்துக்கு மேல ஆகப்போகுது ... இன்னும் அவள போய் பார்த்து என்ன எதுன்னு விசாரிக்க மாட்டேங்கிற ... ஏன்டா இப்படி இருக்க .... "

 

"இப்ப ரெண்டு வாரம் நான் ஹைதராபாத் போயிட்டு வந்தேன் டா  .... ..." 

 

"ம்ச்.... இந்த நொண்டி சாக்கெல்லாம் வேணாம்... இப்ப தான்  ஹைதராபாத் போன... அதுக்கு முன்னாடி என்ன பண்ண ...

நீ பெங்களூர்ல இருந்து திரும்பி வந்ததுமே , லட்சுமி வீட்டை விட்டு போயிட்டானு உனக்கு தெரியும் இல்ல, நீ ஏன் அவங்க வீட்டுக்கு போய் பேசல ...." என்றான் எரிச்சலோடு, பலமுறை இதே கேள்வியை கேட்டிருந்ததால். 

 

"அன்னைக்கு நடந்த பிரச்சினைல ஏதோ கோவத்துல போய் இருக்கா .... தானா  திரும்பி வந்துடுவானு நெனச்சேன் டா.... அதோட அப்ப நான் சிங்கப்பூர்க்கு ஒரு 10 வீக்ஸ் போக வேண்டிய நிலைமை வேற ....நான் இந்தியால இல்லாத நேரம் அவ என் வீட்ல இருந்தா பிரச்சனை இன்னும் அதிகமாகும், நான் சிங்கப்பூர்ல இருந்து திரும்புற வரைக்கும் அவ அவங்க அம்மா வீட்ல இருக்கிறது தான் நல்லதுன்னு அப்படியே  விட்டுட்டேன்  ..."

 

 

அதெல்லாம் சரி... ஆனா ஒரு போன் பண்ணி என்ன நடந்தது ஏது நடந்ததுனு  விசாரிச்சு இருக்கலாமே…  "

 

"எனக்கு  இமீடியட் சிங்கப்பூர் ட்ரிப் இருந்ததால  கிளம்பி போயிட்டேன்... அதான் பேச முடியல ..." என்றான் விட்டேற்றியாக. 

 

"எவனாவது புயல் காத்துல பொரி தின்னுகிட்டு இருப்பான் அவன் கிட்ட போய் சொல்லு இந்த கதையை …

சரி, சிங்கப்பூர்ல இருந்து திரும்பி வந்ததும்  பேசி இருக்கலாமே ...."

 

"அதுக்குள்ளயும் தான் அவ டிவோர்ஸ் நோட்டீஸ் அனுப்பிட்டாளே..."

 

"பொய் சொல்லாதடா.... நீ சிங்கப்பூர்லிருந்து திரும்பி வந்து ஒரு வாரத்துக்கு அப்புறம் தான் டிவோர்ஸ் நோட்டீசே வந்தது ... அதுக்கும் துரை கெத்தா சம்மதிச்சு பதில் நோட்டீஸ் வேற அனுப்பி இருக்கீங்க.... சரி... பாஸ்ட் ஈஸ் பாஸ்ட் .... இப்ப ஹைதராபாத்ல இருந்து வந்து மூணு நாள் ஆகுது.... இல்லயா... இப்ப அவளைப் பார்த்து பேசி இருந்தா பிரச்சனை என்னன்னு தெரிஞ்சுகிட்டு சால்வ் பண்ணி இருக்கலாமேடா  ..." என்றவனின் கிடுக்கு  பிடி கேள்விகளுக்கு ராம்சரணிடம் பதில் இல்லை .

 

இந்த நவீன யுகத்தில், யாரும் யாரை வேண்டுமானாலும் கண்ணிமைக்கும் நேரத்தில் தொடர்பு கொள்ளலாம் ... அதற்கு கால நேரத்தை  விடதொடர்பு கொள்ள வேண்டும்  என்ற எண்ணம் தான் முக்கியம். 

 

அது தான் ராம்சரணிடம் மருந்தளவிற்கு கூட இல்லையே .... 

 

தான் என்ற அகம்பாவத்தில் அல்லவா மூழ்கி திளைத்துக் கொண்டிருக்கிறான் ... 

 

பிறந்ததிலிருந்து இந்த கணம் வரை எந்த ஒரு விஷயத்திற்காகவும் அவன் ஏங்கியது இல்லை. யாரிடமும்  உதவியை எதிர்பார்த்து அடங்கி ஒடுங்கி செல்ல வேண்டிய கட்டாயத்திலும் அவன்  இருந்ததில்ல.

 

அப்படிப்பட்டவன் தன் மனைவி லட்சுமியிடம் மட்டும்  தன் இயல்புக்கு மீறி எல்லா வகையிலும் நயந்து நடந்து கொண்ட நிலையில்நடந்து முடிந்த பிரச்சனையை மீண்டும் ஊதி பெரிசாக்கி சண்டையிட்டு அருணாவை அடித்ததோடு மட்டுமல்லாமல் , அவனிடம் ஒரு வார்த்தை கூட சொல்லாமல் அவள் கிளம்பிச் சென்றது அவனது அகம்பாவத்தையும் கோபத்தையும் கொழுந்துவிட்டு எரிய செய்திருந்தது ...

 

கோபத்தில் தன்னை மறந்து அவளை  அடித்தவன்கோபம் குறைந்ததும் தன்னை அடிக்குமாறு அவளிடம் பணிந்து கேட்டதெல்லாம் அவன் மனக்கண் முன் வந்து இம்சிக்க

 

"நான் என் தன்மானத்தை எங்கேயுமே விட்டுக் கொடுத்ததில்ல டி ... ஆனா உன்கிட்ட விட்டுக் கொடுக்கும் போது தப்பா தெரியல .... 

இவ்ளோ அன்னியோன்யமா இருந்துட்டுஎன்கிட்ட ஒரு வார்த்தை கூட சொல்லாம வீட்டை விட்டு போனதோட, என்ன நடந்தது ஏது நடந்ததுனு ஒரு  போன் பண்ணி கூட சொல்லாம விட்டுட்ட...

அவ்ளோ வேண்டாதவனாயிட்டேனா நானு  .... பத்தாததுக்கு டிவோர்ஸ் நோட்டீஸ் வேற அனுப்பி இருக்க ...நான் இல்லாம உன்னால வாழ முடியுமா ...

இல்ல  வாழ தான் விட்டுடுவேனா...." என உள்ளுக்குள் குமுறி  கொண்டிருந்ததால்அவன் வீராவின் கேள்விகளுக்கு  விச்ராந்தியாக பதில் சொல்லிக் கொண்டிருந்தான். 

 

அவன் மனதை கணத்தில் படித்த வீரா   

"நீ சொல்ற காரணம் எல்லாம் படு மொக்கனு உனக்கே தெரியும் ....

நீ லக்ஷ்மியை போய் பார்க்காததுக்கு ஈகோ தான் காரணம்... நீ வெளிப்படையா ஒத்துக்கலைன்னாலும் அது தான் உண்மை .... இங்க தேவையில்லாம ஈகோ பார்த்து குடும்பத்தை தொலைச்சவங்க , நட்ப தொலைச்சவங்க ரொம்ப  அதிகம் டா.... எப்ப ரெண்டு பேருக்குள்ள ஈகோ  வரும்னாநாம அடுத்தவங்களை விட எல்லா விதத்துலயும் பெட்டரா இருக்கோம்னு  நினைக்கும் போது தான் வரும் ... ஈக்குவலா இருக்கோம்னு நினைக்கும் போது ஈகோவே வராது....

 

நீ லக்ஷ்மியை உன்னோட பெட்டர் ஹஃப்பா நினைக்கல ... நீ அவளை விட எல்லா விதத்துலயும் சுப்பீரியர்னு நினைக்கிற... அதனால தான்  அவளா இறங்கி வந்து பேசட்டும், நானா எதுக்காக அவளை தேடி போய் பேசணும்னு யோசிக்கிற.... சரி லட்சுமியை விடு... அட்லீஸ்ட் நீ அவங்க அம்மா கிட்டயாவது பேசி இருக்கலாம் இல்ல ...."

 

"எப்பவும் மாப்பிள்ளை மாப்பிள்ளைனு ஒரு விஷயத்தை கூட விடாம  போன் பண்ணி சொல்றவங்க, லட்சுமி அவங்க  வீட்டுக்கு  போனதுமே ஏன் எனக்கு போன் பண்ணி சொல்லல…” என்றான் ராம்சரண் ருக்மணி மீதான ஆதங்கத்தை கொட்டி. 

 

அவங்க பெரியவங்க .... ஏதோ காரணத்துக்காக போன் பண்ணல....  நீயே அவங்களுக்கு  போன் பண்ணி பிரச்சனை என்னன்னு விசாரிச்சிருக்கலாமே...."

 

"ம்ச்... வீரா, எப்பவுமே என்னையே ஏண்டா  டார்கெட் பண்ற ...."

 

"இங்க பாரு... உன் வீட்லஉன் அப்பாவை தவிர  எல்லாரும் உன் விஷயத்துல கை கழுவிட்டாங்க, அவங்க வீட்டோட நிலைமை உனக்கு நல்லாவே தெரியும்.... சோ நீ தான் டெசிஷன் மேக்கிங் அத்தாரிட்டி .....நீ தான் களத்துல இறங்கி முடிவு எடுத்தாகணும் … உன் அப்பா இன்னும் ஒரு வாரத்துல வந்துடுவாரு... அவரும் இதே கேள்விய கேட்டா என்ன பதில் சொல்லுவ ... திரும்பத் திரும்ப சொல்றேன் ....லட்சுமி மாதிரி ஒரு பொண்ணு  இந்த காலகட்டத்துல கிடைக்கிறது அபூர்வம்... உனக்கு நம்ம ஸ்ரீனி விஷயம் தெரியுமில்ல ..... இப்ப எல்லாம் பொண்ணுங்க என்ற பேர்ல அராத்துங்க தான் அதிகமா இருக்கு ....  உன் வாழ்க்கையில வந்த நல்ல பொண்ணை  அனாவசியமா தொலைச்சிடாத ..... 

இப்ப லக்ஷ்மி  வீட்டை விட்டு வெளியே போன பிரச்சினையை விட, அவளைத் தேடிப் போய் விசாரிக்கணுமாங்குற ஈகோ தான்  உன்கிட்ட அதிகமா இருக்கு .... வெட்டியா ஈகோ பார்த்துகிட்டு வாழ்க்கையை கெடுத்துக்காத .... இன்னும் ஒரு முக்கியமான பாயிண்ட் உனக்கும் லட்சுமிக்கு தனிப்பட்ட முறைல எந்த பிரச்சனையும் இல்ல.... எல்லாம் உங்க  வீட்டு ஆளுங்க செஞ்சது தான் .... அதனால நீ அவளை போய் பார்த்து பேசினாலே பிரச்சனை சால்வ் ஆயிடும் .... 

நீ உன் வீட்டு ஆளுங்கள புரிஞ்சுக்க ஆரம்பிச்சிட்ட, அதே போல  ஈகோவையும் தூக்கி போட்டுட்டு லஷ்மியை போய் பார்த்து பேசு டா ... எல்லாம் முடிவுக்கு வந்துடும்  ...." என வீரா முடிக்கராம்சரண் மறுமுனையில்  மீண்டும் அமைதியை தத்தெடுக்க

அந்த திடீர் அமைதியே அவன் சிந்தனையில் இருக்கிறான் என்பதை சொல்லாமல் சொல்ல, இதுதான் தருணம் என 

 

"லட்சுமியை கூட விட்டுடு .... ஆனா உனக்கு உன் குழந்தை வேணுமில்ல ... குழந்தைக்கு ஃபாதர் ஃபிகர்னு ஒருத்தர காட்டாமலே லட்சுமியால  குழந்தையை அருமையா வளர்க்க முடியும் .... ஆனா உன்னால உன் பொண்ணு இல்லாம இருக்க முடியுமா... மூணு மாசமா உன் குழந்தையை பார்க்காம நீ எவ்ளோ கஷ்டப்பட்டுகிட்டு இருக்கேன்னு எனக்கு தெரியாதா   ..."  என்ற வீராவின் கூற்றில்பெருமளவு மனம் மாறிய ராம்சரண்,

 

" சரி, நான் நாளைக்கே  அவள மீட் பண்றேன் டா ...

 

" குட் ...."  என மன நிறைவோடு மொழிந்தவனிடம் 

 

"சிட்னிக்கு மறுபடியும் போய்  ஸ்ரீபிரியாவை மீட் பண்ற  ஐடியா ஏதாவது இருக்கா .... "

 

"இல்ல சரண் .... இதுவரைக்கும் செஞ்சதுல லாஜிக் இருக்கு ... இனிமே அவளை தேடி போய் பார்த்தா  சரியா வராது .... அவ பார்வைல எந்த விஷயத்துலயும்  நான் இறங்கிட கூடாதுன்னு தெளிவா இருக்கேன் டா ... அதோட  வர வாரம் இந்தியா வர போறா... அதுக்கப்புறம் என் ஃபேமிலி மெம்பர்சோட பொண்ணு பார்க்க போனா சரியா இருக்கும்னு தோணுது ..."

 

 

"வாவ்.... தட்ஸ்  குட் ... நான் உனக்காக வெயிட்டிங்... சீக்கிரம் ஊர் வந்து சேர்ற வழியை பாரு ..."

 

"ஹியரிங் ஒரு வாரம் தள்ளிப் போய் இருக்கு இல்லையா ... அதுக்குள்ள  பிரச்சனையை சால்வ் பண்ற வழிய பாரு ...."  என முடித்தான் வீரா. 

 

உற்ற நண்பனிடம் பேசிய பிறகு நிம்மதி பிறந்தாலும் , வீரா பேசும் போது குறிப்பிட்ட ஸ்ரீனி என்னும் ஸ்ரீனிவாசனின் குடும்பப் பிரச்சனை அவன் மனம் முழுவதும் வியாபிக்க தொடங்கியது.

 

இந்த ஸ்ரீனிவாசன் வேறு யாரும் அல்ல .... வீராவுக்கு  ஸ்ரீபிரியாவை பற்றிய தகவல்களை திரட்டி  கொடுத்ததோடு அவளைப் பார்ப்பதற்கு ஏதுவாக காணொளி இணைப்புத் திரியையும் பெற்று   கொடுத்த அதே ஸ்ரீனி தான் இந்த ஸ்ரீனிவாசன்.

 

தற்போது வீராவின் திட்டக் குழுவில், அவனுக்கு அடுத்தபடியாக பணிபுரிந்து கொண்டிருக்கிறான்.

 

வீரா மற்றும் ராம் சரணை கடந்த இரண்டு ஆண்டுகளாக நன்கு அறிவான்...

 

ஸ்ரீனிவாசனின் குடும்பம் தற்போது கோயம்புத்தூருக்கு குடி பெயர்ந்திருந்தாலும் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு வரை டெல்லியில் வசித்த தமிழ் குடும்பமாகும்.

 

ஸ்ரீனிவாசனின் தந்தை சிதம்பரம் ஆர்மியில் பிரிகேடியராக பணிபுரிந்து ஓய்வு பெற்றவர்.  தாயார் கல்பனா இல்லத்தரசி.  

 

ஸ்ரீனிவாசனுக்கு ஒரே ஒரு தமக்கை.  பெயர் சுமித்ரா.  மருத்துவராக பணியாற்றுகிறாள்.   அவளது கணவன் கேசவனும் மருத்துவர். காதல் திருமணம் செய்து கொண்டவர்கள்.  அவர்களுக்கு ஒரே ஒரு பெண் குழந்தை சந்தியா .... கேசவன் மராட்டிய மாநிலத்தை சார்ந்தவன்.  அவனுக்கு சொல்லிக் கொள்ளும் அளவிற்கு உறவினர்கள் இல்லாததால், வீட்டோடு மாப்பிள்ளை ஆகவும்மகனாகவும் இருந்து வருகிறான். 

 

ஸ்ரீனிவாசனின் குடும்பம் ஓரளவிற்கு நல்ல வசதியான குடும்பமே. டெல்லியில் உயர் தட்டு மக்கள் வசிக்கும் பகுதியில் சற்று பெரிய தனி வீட்டில் அருமையாக வாழ்ந்து கொண்டிருந்தனர்  ஸ்ரீனிவாசனுக்கு திருமணம் ஆகும் வரை.

 

ஸ்ரீனிவாசனின் தாய் கல்பனா, தன் மகனுக்கு  தமிழ்நாட்டுப் பெண்ணை  மணம் முடிக்க வேண்டும் என்ற ஆசையில், பல மேட்ரிமோனியில் அலசி ஆராய்ந்து திருநெல்வேலியில் சாதாரண நடுத்தர குடும்பத்தைச் சார்ந்த ஒரு தனியார் நிறுவனத்தில் செயலாளராக பணிபுரிந்து கொண்டிருந்த மகேஸ்வரியை தேர்வு செய்தார் .

 

ஸ்ரீனிவாசனின் குடும்ப பின்னணி மற்றும் பொருளாதார நிலையைக் கண்டு  பெண் வீட்டாருக்கு ஏக மகிழ்ச்சி.   

 

ஜாதகப் பொருத்தம் பொருந்தி வருவதாக சொல்லிபெண் பார்க்க அழைத்தனர்.

 

பெண் பார்ப்பதற்காக ஒரு நாளை தேர்வு செய்து கொண்டு, ஸ்ரீனிவாசனின் குடும்பம் திருநெல்வேலிக்கு பயணமானது.

 

அங்கு பெண் பார்க்கும் படலம் இனிதே நடந்தேறியது.

 

அந்தப் பெண் மகேஸ்வரிகுனிந்த தலை நிமிராமல் மிகுந்த சாந்தமாக காணப்பட்டாள்.

 

ஸ்ரீனிவாசன் மற்றும் அவர்களது குடும்பத்தினர்கள் கேட்ட கேள்விகளுக்கு மட்டும் மென் புன்னகையோடு பதில் அளித்தாள்.

 

இருதரப்பினருக்கும் பிடித்துப் போனதால்மறு மாதமே திருமணத்திற்கு ஏற்பாடு செய்தனர். திருமணம் அம்சமாக திருநெல்வேலியில் நடந்தேறியது.

 

அன்றைய சோபன இரவில், திருமணம் திடீரென்று முடிவானதால், மனதளவில் தயாராக தனக்கு நேரம் தேவைப்படுவதாக கூறி திருமண உறவை  தள்ளிப் போட்டாள் மகேஸ்வரி. 

 

அவள் சொன்ன காரணம் ஸ்ரீனிவாசனுக்கும் சரி என்று பட்டதால், அவனும் மனப்பூர்வமாக சம்மதித்தான். 

 

அதுவரை எல்லாம் சரியாகத்தான் சென்று கொண்டிருந்தது.

 

மறு வீடு சடங்கெல்லாம் முடிந்து ஸ்ரீனிவாசனின் குடும்பத்தோடு  டெல்லிக்கு பயணப்பட்ட பிறகு தான் மகேஸ்வரியின் குணம் வெளுக்க ஆரம்பித்தது.

 

டெல்லி வந்து இறங்கிய இரண்டாவது நாளிலிருந்தே, நண்பர்களை சந்திக்க செல்வதாக சொல்லிவிட்டு காலை வீட்டை விட்டு  செல்பவள் நள்ளிரவை நெருங்கும் போது தான் வீடு திரும்பினாள்.

 

நண்பர்களைப் பற்றி விசாரித்ததற்கு, டெல்லி கிளையில் பணிபுரியும் தனது அலுவலக நண்பர்கள் என்றாள்.

 

முதல் ஒரு வாரம் பல்லை கடித்துக் கொண்டு  பொறுத்துக் கொண்டனர் ஸ்ரீனிவாசனும் அவன் குடும்பத்தினரும். 

 

மறுவாரத்தில் இருந்து நிலைமை இன்னும் மோசமாகியது.

 

இரண்டு நாட்கள் கூட தொடர்ந்து வீட்டிற்கு வராமல் இருந்துவிட்டு மூன்றாம் நாள் காலையில் வீட்டிற்கு வந்தாள்.

 

ஒழுக்கத்தை உயிர்மூச்சாக பிள்ளைகளுக்கு சொல்லிக் கொடுத்து வளர்த்த சிதம்பரத்திற்குமகேஸ்வரியின் நடவடிக்கைகள் கோபத்தை மூட்ட, அவளை  கேள்விக்கணைகளால் துளைத்தெடுத்தார்.

 

சிதம்பரம் மற்றும் கல்பனாவின் கூர்மையான கேள்விகளுக்கு பதில் அளிக்க முடியாமல் முன்னுக்குப் பின் முரணாக மகேஸ்வரி உளற ஆரம்பிக்க, உடனே சிதம்பரம் மகேஸ்வரியின் தந்தை கனகரத்தினத்தை தொலைபேசியில் அழைத்து முறையிட்டார்.

 

அவர் சிதம்பரத்தை சமாதானப்படுத்தியதோடு மகளுக்கு அறிவுரை கூறி பிரச்சனையை ஓரளவிற்கு சரி கட்டினார். 

 

அடுத்த ஒரு வாரம் மகேஸ்வரி வீட்டை விட்டு எங்கும் வெளியே செல்லவில்லை.  அதே நேரத்தில் வீட்டில் இருந்தவர்களிடம் முகம் கொடுத்து பேசாமல் சரியாக உணவு உண்ணாமல் அலைபேசியே கதியாக இருந்தாள். 

 

ஸ்ரீனிவாசன் தன்னால் இயன்ற வரை அவளிடம் சுமுகமான உறவை தக்க வைத்துக் கொள்ள முயன்றான்.

 

அவளோ அவன் கேட்ட கேள்விகளுக்கு மட்டும் வேண்டா வெறுப்பாக பதில் அளித்துவிட்டு, அலைபேசியிலேயே கவனம் செலுத்தலானாள்.

 

இப்படியே மீண்டும் ஒரு வாரம் கழிய, திடீரென்று ஒரு நாள் மகேஸ்வரி காணாமல் போனாள்.

 

அவளது தொலைபேசிக்கு அழைப்பு விடுத்து பார்த்து  அது எடுக்கப்படாமலே போனதில்  பயந்துப்போன ஸ்ரீனிவாசன் குடும்பத்தினர்கடைசியில் காவல்துறை உதவியை நாட நினைக்கும் போதுபெண் காவலர்கள் இருவரோடு மகேஸ்வரி வீட்டிற்கு வந்து சேர்ந்தாள்.

 

அனைவரும் ஒன்றும் புரியாமல் அதிர்ச்சியில் உறையும் போது தான், புகுந்த வீட்டில் தன் மாமனார், மாமியார், கணவர்,நாத்தனார் ஆகியோர் வரதட்சணை கேட்டு அடித்து துன்புறுத்தியதாகவும்  இதில் மாமனார் தனக்கு பாலியல் தொல்லைகள் கொடுத்ததாகவும் வழக்கு பதிவு செய்திருந்தது தெரிய வந்தது.

 

அக்கம் பக்கத்தில் வசிப்பவர்கள் முன்பு  அவமானத்தை ஏற்படுத்தியதோடு, பத்திரிகையிலும் செய்தி வெளியாகி ஸ்ரீனிவாசன் குடும்பத்தினருக்கு பெருத்த தலைகுனிவை ஏற்படுத்தகுடும்பத்தில் உள்ள அனைவரையும் காவல்துறை கஸ்டடியில் எடுத்து விசாரித்தது.

 

மகேஸ்வரி தானே ஏற்படுத்திக் கொண்ட உடல் காயங்கள் ஆதாரமாகி போன நிலையில் வழக்கு தீவிரமடைந்தது.

 

இந்நிலையில் தகவல்கள் மகேஸ்வரியின் தாய் தந்தைக்கு தெரியப்படுத்த படஅவர்களும் டெல்லிக்கு  விரைந்து வந்தனர்.

 

பெண்ணிற்கு கொடுமை நடந்து விட்டதாக சொல்லிவிவாகரத்து மற்றும் பல லட்சங்கள் நஷ்ட ஈடு கேட்டு  கனகரத்தினம் நீதிமன்றம் செல்லப் போவதாக காவல்துறையில் வாக்குமூலம் அளிக்கும் போது தான், அதுவரையில் பொறுமை காத்திருந்த மகேஸ்வரியின் தாய் விசாலாட்சி உண்மையை உடைத்தார்.

 

அவரது மகள் மகேஸ்வரிக்கும்உடன் பணி புரியும் மாற்று மத இளைஞனுக்கும் நீண்ட காலமாக காதல் என்ற பெயரில் தொடர்பு இருந்து வந்துள்ளது.

 

அதனை பெற்றவர்கள் பலமாக எதிர்த்தனர். அந்த இளைஞன் வெகு சாதாரண குடும்பப் பின்னணியை சார்ந்தவன், என்பதால் கனகரத்தினம் வெகுவாக அந்தக் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்திருந்த வேளையில்  ஸ்ரீனிவாசனின் தாய் கல்பனா மேட்ரிமோனியில் பதிந்து வைத்திருந்த மகேஸ்வரியின் தகவல்களைப் பார்த்து பெண் கேட்டு வரஅவர்களது குடும்பப் பின்னணி மற்றும் பொருளாதார நிலை கனகரத்தினத்தை பெரிதும் கவர, மகளை இயன்றவரை சமாதானப்படுத்தி திருமணத்திற்கு சம்மதிக்க வைத்தார்.

மகேஸ்வரி ஒன்றும் தன் தந்தை கனகரத்தினத்தின் வார்த்தைக்காக அந்த திருமணத்திற்கு சம்மதிக்கவில்லை. அவளது காதலன் சொல்லிக் கொடுத்தகுறுக்கு வழிக்காக தான் திருமணத்திற்கு சம்மதித்திருந்தாள்.

 

மாற்று மதத்தை சார்ந்த என்னை நீ திருமணம் செய்து கொள்ள உன் தந்தை மற்றும் உன் உறவுக்காரர்கள் தற்போது தடையாக இருக்கிறார்கள். 

 

முதலில் உன் தாய் தந்தை கூறியது போல்உங்கள் சமுதாயத்திலேயே திருமணம் செய்து கொள்... சற்று காலத்திற்குப் பிறகுகணவன் மற்றும் புகுந்த வீட்டு உறவுகள் கொடுமை செய்வதாக சொல்லிவிவாகரத்து பெற்றுவிடு.

 

முதல் திருமணத்திற்கு ஜாதி மத பொருளாதார வேறுபாட்டை பார்க்கும் பெற்றவர்கள் இரண்டாம் திருமணத்திற்கு பெரும்பாலும் பார்ப்பதில்லை என்பதால் காதலித்த நானே உனக்கு வாழ்வு கொடுப்பதாக காட்டிக்கொண்டு, திருமணம் செய்து கொள்கிறேன்  என்ற குருட்டு போதனையை  அவன் போதித்திருக்க  அவன் சொன்னபடியே தன் மகள் நடந்து கொண்டதாக மகேஸ்வரியின் தாயார் மனம் கேட்காமல் காவல்துறையில் வாக்குமூலம்  கொடுக்ககாவல்துறையினர் விசாரணையை அதே போக்கில் முடுக்கிவிடஅவளது தாய் சொன்னது 100% சரி என பிறகு கிடைத்த ஆவணங்கள் மற்றும்  ஆதாரங்கள் மூலம் வெட்ட வெளிச்சம் ஆகிப்போயின.

அதற்கு மேல் ஸ்ரீனிவாசனின் குடும்பத்தினர் விவாகரத்து கேட்டு நீதிமன்றத்தில் விண்ணப்பிக்க, தகுந்த ஆதாரங்கள் கிட்டியதால், இது ஜோடிக்கப்பட்ட குற்றச்சாட்டு என நிரூபணம் ஆகியதோடு, விவாகரத்தும் விரைவிலேயே கிட்டியது.

 

யாரோ ஒருவரின் சுயநலத்திற்காகயாரோ ஒரு அப்பாவியின் வாழ்க்கையை மட்டுமல்லாமல் அவர்களைச் சார்ந்தவர்களையும் சட்டத்தின் மூலம் தண்டிக்கும் அநீதிகள் பெண்களுக்கான பாதுகாப்புச் சட்டங்கள் என்ற பெயரில் நடந்தேறிக் கொண்டு தான் இருக்கின்றன.

 

ஒரு காலத்தில் பெண்களுக்கு இழைக்கப்பட்ட கொடுமைகளுக்கு எதிராக இயற்றப்பட்ட சட்டங்கள், தற்போது மகேஸ்வரி போன்ற சுயநலமிக்கவர்களால் தவறாக பயன்படுத்தப்படுகிறது.

 

இன்றைய சூழ்நிலையில் ஆகச் சிறந்த புரிதலுடன் கூடிய திருமண வாழ்க்கை அமைவதற்கு ஆண்டவனின் ஆசி மட்டுமல்லாமல் சம்பந்தப்பட்டவர்களின் மனசாட்சியும் தேவைப்படுகிறது.

 

இம்மாதிரி தன்னை சுற்றி இருக்கும் மனிதர்களின் கசப்பான திருமண வாழ்க்கை புகட்டிய பாடத்தால் தான், தன் நண்பன் வீரா திருமணம் என்றாலே தெறித்து ஓடுகின்றான் என்பதைப் புரிந்து வைத்திருந்தவணுக்கு  ஸ்ரீனியின் வாழ்க்கை வரலாறு ஒன்றும்  புதிதல்ல.

 

ஆனால் வீரா அதனை சரியான தருணத்தில் குறிப்பிட்டு பேசியது தான்காரணமே இல்லாமல் தன் மனையாள் மீது கொண்டிருந்த கோபத்தை துடைத்தெறிய உதவியதோடுஉடனடியாக தன்னவளை காணும் ஆவலையும் கொடுக்க , மறுதினமே அவளை சந்திக்க வேண்டும் என்று முடிவு கட்டிக் கொண்டான் இனிமேல் தான் உண்மையான ஆடுபுலி ஆட்டம் இருவருக்கும் இடையே அரங்கேறப் போவது தெரியாமல். 

 

 

ஸ்ரீ-ராமம் வருவார்கள் ....

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 


Comments

Post a Comment