அத்தியாயம் 28
ராம் சரணின்
கண்களும் கரங்களும் வாகனம் செலுத்துவதில் கவனமாக இருக்க, மனம் மட்டும் உலைக்களம் போல்
கொதித்துக் கொண்டிருந்தது.
அவன் செவுல்லயே
ரெண்டு விட்டிருப்பேன்... ச்சே...அதுக்குள்ள இவ வந்துட்டா ....
என மனதோடு குமுறி கொண்டிருந்தவன் ,
லொடலோட வென்று பேசிக் கொண்டே வந்த மீனாட்சியின் கேள்விகளில் கவனம்
வைக்காமல் வேண்டா வெறுப்பாக ஆம் இல்லை என்ற
ஒற்றை வார்த்தையை பதிலாக அளித்துக்
கொண்டே இருக்க, அவன் எண்ணவோட்டத்தை அறியாமல்,
ஊர் உலகம் காணாத ஒன்னு விட்ட அத்த பொண்ணுக்கு , வாய் ஓயாம பதில் சொல்றத பாரு, நான் கேள்வி கேட்டா மட்டும் அளந்து அளந்து சிக்கனமா பதில் வரும் ... எல்லாம் நான் வாங்கிட்டு வந்த வரம் ...
பீம் பாய் மாறி
இருக்கிறவங்க , பீம் கேர்ள்
மாறி இருக்கிற அத்தை பொண்ணை கல்யாணம் பண்ணாம என்னை
தேடி கல்யாணம் பண்ணிட்டு ஒல்லியா இருக்கேன் ஒடிசலா இருக்கேன்னு குத்தம் சொன்னா
என்ன அர்த்தம்....
என கௌரி மற்றும்
மீனாட்சி மீதான கோபத்தில் மானசீகமாக ராம் சரணுக்கு லட்சார்ச்சனை நடத்திக்
கொண்டிருந்தாள் லட்சுமி.
அடுத்த அரை மணி
நேரத்தில், அந்தப்
பாரம்பரிய சிறிய அரண்மனை போல் இருந்த வீட்டின் வாயிலை அடைந்தது
கார்.
மீனாட்சி காரை
வீட்டிறங்கியதும் விட்டது தொல்லை என நினைத்துக் கொண்டவன் , காரை
விட்டிறங்கி தன் மனையாளிடமிருந்து குழந்தையைப்
பெற்றுக் கொண்டு அவள் பைகளை எடுத்துக் கொண்டு இறங்க உதவும் போது குழந்தை அழத் தொடங்கியது.
" லட்சுமி...
எதுக்கு குழந்தை திடீர்னு அழுறா.... ஒருவேளை காது வலியா இருக்கும்மா. ..."
" இல்ல
அவளுக்கு பசிக்குது ... ஃபீட் பண்ணனும்... ரூம் வேணும் ..." என்று படபடத்தாள் அவன் முகம் பாராமல்.
அவள் முகம்
பார்த்தபடி அவன் கேட்ட கேள்விகளுக்கு,
முகத்தை தூக்கி வைத்துக் கொண்டு அவன் முகம் பாராமல் அவள்
பதிலளித்தது மீனாட்சி உட்பட பல புல்லுருவிகளின் கண்களில்
விழ,
கேள்வி கேட்டா
மூஞ்ச பாத்து பதில் சொல்லணும்னு தெரியாதா ... இன்னைக்கு இருக்குடி உனக்கு ...
என வெற்றியின்
மீதான கோபத்தில் மனதோடு வசைப்பாடியவன்,
"இரு
அப்பா கிட்ட போய் கீ வாங்கிட்டு வரேன் ..." என கிளம்பி ஒரு
கணம் நின்று,
"நீ
இன்னும் சாப்பிடலையே ..." என்றான் அக்கறையாக.
“அதான்
கோவில்ல பொங்கல் சாப்டேனே ... அது போதும் ..."
என சன்னமாக அவள் மொழிந்துக் கொண்டிருக்கும் போது, மற்ற உறவினர்கள் பயணித்த கார்கள் ஒன்றன் பின்
ஒன்றாக வந்து நின்றன.
உடனே ராம்சரண்
ருக்மணி மற்றும் வீரா குடும்பத்தினரிடம்
"முதல்
பந்தி ஸ்டார்ட் ஆயிடுச்சு நீங்க எல்லாரும் போய் சாப்பிடுங்க
.... நான் அப்புறம் வரேன் ...." என கிளம்ப
எத்தனிக்கும் போது ,
"இவங்க
எல்லாரும் சாப்பிடட்டும்.... நான் உன் கூடயே சாப்பிடறேன் டா ..." என்றான்
வீரா நட்பாக.
ரங்கசாமிக்கு
சொந்தமான அந்த வீட்டின் மூன்றாவது தளத்தில் நான்கு மூலையிலும் நான்கு பெரிய அறைகள் நடுவில் ஒரு
பெரிய கூடம், தனித்தனி குளியல்
அறைகள் மற்றும் இதர வசதிகள் இருந்தன.
அதில் முதல்
மூன்று அறைகள் ரங்கசாமி
கற்பகம், அருணா ஹரிஷ், சுகந்தி
ரவி ஆகியோர் தங்களது பயன்பாட்டிற்கு எடுத்துக் கொள்ள, மீதமிருந்த
அறை ராம்சரணுக்காக ஒதுக்கப்பட்டிருந்தது.
அந்த அறையின்
சாவியை ரங்கசாமியிடமிருந்து பெற்றுக் கொண்டு வருவதற்குள், குழந்தை விடாமல் அழ, வேகமாக மனைவி குழந்தையை மூன்றாவது தளத்தில் தங்களுக்கென ஒதுக்கப்பட்டிருக்கும் அறைக்குச் அழைத்து சென்றவன்,
" நீ ஃபீட் பண்ணிட்டு, குழந்தையை தூங்க வை .... அத்தை சாப்பிட்டு முடிச்சதும் குழந்தையை பாத்துக்க அனுப்புறேன் ... அப்புறம் நாம ரெண்டு பேரும் சேர்ந்து சாப்பிடலாம் ..." என கீழ் தளத்தில் உணவு பந்தி நடந்து கொண்டிருப்பதை பற்றி சொன்னவனுக்கு மனையாளோடு ஆற அமர அமர்ந்து பேச வேண்டும் என்ற ஆசை இருந்தாலும், அதற்கான சந்தர்ப்பம் அப்போது இல்லாததால் அவள் பாந்தமாக அமர்வதற்கு ஏதுவாக தலையணைகளை முதுகுக்கு முட்டு கொடுத்துவிட்டு கீழ் தளத்திற்கு சென்று விட்டான்.
ரங்கசாமி
மறுநாள் பேத்தியின் பிறந்த நாளைக்காக அய்யனார் கோவிலில் 18 விசேஷ அபிஷே ஆராதனைகளுக்கு
ஏற்பாடு செய்திருந்ததோடு இரட்டை கெடா வெட்டு நடத்தி ஊர், உறவினர்களுக்கு கறி விருந்து அன்னதானத்திற்கும் ஏற்பாடு செய்திருந்தார்.
மறுநாள் கறி
விருந்து என்பதால் அன்றைய தினம் சைவ உணவு உறவினர்களுக்கு வழங்கப்பட, முதல் பந்தியில் பெரும்பாலும் மூத்த தலைமுறையினர்கள்
உண்டு முடித்ததும், ருக்மணியை குழந்தையை பார்த்துக் கொள்ள
அனுப்பி விட்டு தன் மனையாளுக்காக காத்திருந்தான்.
லட்சுமி வந்ததும், தன் ஒரு புறம் லட்சுமி மறுபுறம் வீரா என அமர்ந்து வாழை இலையில் அறுசுவை உணவு உண்டான் ராம் சரண் .
இரண்டாவது
பந்தியில் பெரும்பாலும் இளைய தலைமுறையினர்கள்
உணவு உண்ண, வெற்றியின் பார்வை
ஸ்ரீலட்சுமியையும் மீனாட்சியின் பார்வை ராம்சரணையும் வருடிக்கொண்டே இருந்தன.
ஏற்கனவே
ராம்சரணின் மீது இருக்கும் கோபத்தோடு கௌரி மற்றும் மீனாட்சி பேசிய பேச்சுக்கள்
சேர்ந்து லட்சுமியின் கோபத்திற்கு தூபம்
போட்டிருந்ததால், ராம்சரணின் யாதொரு கேள்விக்கும் சரியாக பதில் அளிக்காமல், உணவு உண்பதில்லையே கவனமாக
இருப்பது போல் அவள் காட்டிக்கொள்ள, அதனை கணத்தில் புரிந்து கொண்ட வீரா, ராம்சரணோடு
மட்டுமல்லாமல் , அன்புச்செல்வி, ராமலக்ஷ்மி,
மீனாட்சி, சுகந்தி, ரவி , சிவா, ராணி (சிவாவின் மனைவி), வெற்றி என ஒருவரையும்
விடாமல் அனைவரிடமும் பேச்சு கொடுத்தபடியே உணவு உண்ணலானான்.
மனைவியின்
பாராமுகத்தை உணர்ந்து கொண்ட ராம்சரண்,
அன்றைய தனிமையில் அதற்கு தீர்வு காண வேண்டும் என்று
எண்ணிக்கொண்டான்.
மதிய உணவு முடிய
மணி மூன்றை கடந்திருக்க, லட்சுமியை தவிர்த்து ருக்மணி மற்றும் வீராவின் குடும்பத்தினருக்கு,
நில புலன்கள் , தோப்பு துறவுகளை சுற்றி காண்பிக்க
அழைத்துச் சென்று விட்டான்.
ராம்சரண் தன்
உறவு நட்புகளோடு ஊர் சுற்றி பார்க்க சென்றிருப்பதை அறிந்து கொண்ட வெற்றி, மீனாட்சி, சுந்தரி ( மீனாட்சியின் தாய்),
கௌரி, சிவா என
ஒரு கூட்டமே லட்சுமியை முற்றுகையிட்டுக் கொண்டு , ஏதேதோ பேச,
பதில் கூற முடியாமல் திண்டாடிப் போனாள் ராம்சரணின் மனையாட்டி.
லட்சுமி பேசத் தெரியாமல் திணறுவதை கண்டு அருணா, கற்பகம் ஒரு நக்கல் பார்வையை
அவள் மீது பதிக்க, அப்போது ஆபத் பாண்டவனாக சுகந்தி
ரவியும் அங்கு வந்து லட்சுமிக்கு ஆதரவாக அமர்ந்து கொண்டனர்.
அவர்கள்
இருவரும் எதையும் பேசவில்லை என்றாலும்,
லட்சுமிக்கு அருகில் அமர்ந்து கொண்டதே மற்றவர்களின் பேச்சுக்கு லேசாக
முற்றுப்புள்ளி வைக்க, மானசீகமாக நிம்மதி பெருமூச்சு
விட்டாள் மங்கை.
பள்ளியில்
மாணவச் செல்வங்களுக்கு, மடை திறந்த வெள்ளம் போல் அறிவுபூர்வமாக இரண்டு
மணி நேரம் கூட, யாதொரு தொய்வும் இல்லாமல் மிகுந்த
ஆர்வத்தோடு பாடங்களை நடத்தி முடிப்பவள் . ஆதலால் தான் அவள் பள்ளியில் பணிபுரிந்த எல்லா ஆண்டுகளிலேயுமே சிறந்த ஆசிரியைக்கான
விருதை பெற்றிருக்கிறாள் ...
அப்படிப்பட்டவள் இம் மாதிரியான குத்தல்
பேச்சுக்கள் , பொறுமல், ஜாடை
பேச்சுக்களை ஏற்க சகிக்காமல் திண்டாடிப் போனாள்.
இரவு உணவு
அனைவரும் உண்டு கொண்டிருக்கும்
போது, ராம்சரண் தான் அழைத்துச் சென்ற குழுவோடு ஊர் சுற்றிப்
பார்த்துவிட்டு வீடு வந்து சேர்ந்தான்.
கீழ்கண்ணால்
ராம்சரணின் வருகையை அறிந்து கொண்ட லட்சுமிக்கு அழுகை, கோபம், ஆற்றாமை
என வித்தியாசமான உணர்வுகள் வரிசை கட்டி வர, விறு
விறுவென உண்டு முடித்துவிட்டு விளையாடிக் கொண்டிருந்த
குழந்தையை அள்ளிக் கொண்டு தன் அறைக்குச் சென்று விட்டாள்.
இரவு உணவுக்குப்
பின், ருக்மணி மற்றும் வீரா
குடும்பத்தினரை ரங்கசாமிக்கு சொந்தமான தோப்பு வீட்டில் தங்குவதற்கான ஏற்பாடுகளை
செய்துவிட்டு ராம்சரண் அறைக்குத் திரும்ப, இரவு மணி
பத்தை கடந்திருக்க, கடந்த இரண்டு நாட்களாக தொடரும் பனிப்போரை
மனையாளுடன் பேசி தீர்க்கும் எண்ணத்தில்
வந்தவனுக்கு ஏமாற்றமே மிஞ்சியது.
அவன் மனையாள்
குழந்தையை அணைத்தபடி ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தாள்.
அன்று
அதிகாலையில் எழுந்து பயணித்தோடு , சற்று முன்பு வரை தோட்டத்தை சுற்றிக்காட்ட நடையாய் நடந்தது வேறு அவனுக்கு
களைப்பை கொடுக்க, மறுநாள் தன்னவளோடு பேசிக் கொள்ளலாம் என
முடிவெடுத்து கட்டிலின் மறுபுறம் சென்று படுத்து உறங்கி போனான்.
காலை 7 மணிக்கு அவனுக்கு விழிப்பு வர,
குழந்தை மட்டும் படுக்கையில் அயர்ந்து உறங்கிக் கொண்டிருக்க,
குளியல் அறையில் இருந்து தண்ணீர் பயன்படுத்தும் சத்தம் கேட்டது.
தன்னவள் குளித்துக் கொண்டிருக்கிறாள் என்று எண்ணும் போதே, மது உண்ட மங்கியாய் அவன் மனம் உல்லாசத்தில் கிறங்க, அணிந்து கொள்ள வேண்டிய புடவையை படுக்கையின் மீது அவள் வைத்து விட்டு சென்றது வேறு அவன் கண்களில் பட, உடனே அதனை எடுத்து தன் தலையணைக்கு கீழ் வைத்துவிட்டு , அலைபேசியில் அவன் மூழ்கி இருக்கும் பொழுது, திடீரென்று குளியல் அறையின் கதவைத் திறந்து கொண்டு பதற்றத்தோடு அவள் வெகு வேகமாக வெளிவர , ஏதோ உற்சாகத்தில் இருந்தவன் அப்படி அவளை கண்டதும்,
"ஏய்
லட்சுமி என்ன ஆச்சு ...." என்றான் அவசரமாக அவளை
நெருங்கி.
" யா....
யாரோ ......பா....பாத் .. ரூம்ல எட்டிப் பார்த்த மாதிரி இருந்துச்சு..."
" வாட்
...." என்றவன் உடனே அவளை விலக்கி விட்டு, குளியலறை
கதவை திறந்து உள்ளே சென்று ஆதி முதல் அந்தம் வரை
ஆராய்ந்தவன்
"ஏய்...
இது அந்த கால வீடு டி .... அதான் வெளிச்சத்துக்காகவும், காத்துக்காகவும்
வால்ல பெரிய ஹோலை வச்சிருக்காங்க .... அவ்ளோ
உயரத்திலிருந்து யார் எட்டிப் பார்ப்பா ..." என மேல் நோக்கி பார்த்தபடி
கூறியவன் ,குளியலறை விட்டு வெளியேறி தன் படுக்கை அறையின் ஜன்னலை திறக்க, அங்கு
தெரிந்த செங்கல் கூரையின் மேல், ஒரு
கருப்பு கொழுத்த பூனை,குதித்து ஓட,
"பாரு,
இந்த கருப்பு பூனையை பார்த்து தான் .... யாரோ எட்டி பாக்குறாங்கன்னு நீ பயந்துட்ட..."
“இல்ல ....
அது பூனை இல்ல ... யாரோ மனுஷங்க தான் எனக்கு நல்லா தெரியும் ..." என்றவளின்
உடல் பயத்தால் நடுங்க
"அவ்ளோ
உயரத்துல இருந்து யாரும்மா எட்டிப் பார்ப்பா .... இந்த மாதிரி பூனை, பெருச்சாளி ஏதாச்சும் தான் இருக்கும் ..." என்றபடி மனையாளின் தோள்
மீது கை போட்டு தன் மார்போடு அணைத்துக் கொண்டான்.
கடந்த இரண்டு தின பாராமுகம் இரண்டு
யுகங்களாய் கழிந்திருக்க ,அப்பழுக்கற்ற சிற்பமாய் அரை
ஆடையில் காட்சி அளித்த மனையாளின் மலைமுகடுகள், உடல் வளைவுகள்
அவன் தாபத்தை அதிகப்படுத்த , அவள் கழுத்தில் தன் உஷ்ண மூச்சை
செலுத்தியவனின் கரம் வகைத்தொகை இல்லாமல் அவள் உடலில் பயணிக்க தொடங்க, அவள் அவனிடமிருந்து திமிறி விலக முயன்று கொண்டிருக்கும் போது
அறை கதவு தட்டப்பட்டது.
"ம்ச்....
நீ போய் டிரஸ் மாத்திக்க நான் யாருன்னு பாத்துட்டு வரேன் ...." என மனையாளை விட்டு விலக முடியாமல் விலகிச் சென்று கதவைத் திறந்தவனுக்கு ராமலட்சுமி
காட்சி கொடுத்தாள்.
ராம் சரணை
கண்டதும்,
"அக்காவை
இந்த புடவை கட்டிக்கிட்டு சீக்கிரம்
தயாராகி குழந்தையோட கீழ வர சொன்னாங்க அம்மா ..." என்றாள்
தன் கையில் ஒரு புது பட்டுப் புடவையுடன்.
அப்போது
குழந்தையின் அழுகை சத்தம் கேட்க,
"நான்
குழந்தையை கொஞ்சம் காத்தாட கூட்டிகிட்டு போறேன் ... அதுக்குள்ள உன் அக்காவ கிளம்ப
சொல்லு ..." என்றவன் குழந்தையை எடுத்துக் கொண்டு வெளியேறினான்.
அடுத்த அரை மணி
நேரத்தில் அனைவரும் தயாராகி முன்தினம் போல் காரில் பயணித்து அய்யனார் கோவிலை
அடைந்தனர்.
முன்தினம் போல்
காரில் பயணித்தனர் என்றால், மீனாட்சி குடும்பம் ராம் சரணோடு காரில் பயணித்தனர் என்பதும் அடங்கும்.
பட்டுப்பாவாடை சட்டையில் பொருத்தமான அணிமணிகளோடு தங்கமாய் ஜொலித்த மகளை ஒரு கையில் அள்ளிக்கொண்டு , அமரிக்கையான வசீகரத்தோடு கண்களை உறுத்தாத, மெல்லிய மாம்பழ காஞ்சிபட்டில் சாமுத்திரிகா லட்சணத்தின் நாயகியாக திகழ்ந்த மனையாளை மறு கையால் பற்றிக் கொண்டு தன் உறவு மற்றும் நட்பு வட்டம் சூழ, சாமி சன்னதியை அடைந்த ராம் சரணுக்கு பரிவட்டம் கட்டி, குடும்ப சேஷத்திற்கான அர்ச்சனையை அம்சமாக நிறைவேற்றினார் பூசாரி.
தமிழர்களின்
பாரம்பரிய முறைப்படி, அய்யனார் கோவிலில் 108 விளக்கேற்றி, 18 விசேஷ அபிஷேக ஆராதனைகள் நடந்து முடிந்த பின்னர், கெடா
வெட்டு நிகழ்ச்சி அரங்கேறி, மதியம் 2 மணி அளவில் கறி விருந்து அன்னதானமாக அனைவருக்கும் வழங்கப்பட்டது.
காலையில் இரண்டு
இளநீரைத் தவிர வேறு எதையும் அருந்தாததால்,
மிகுந்த பசியில் இருந்த லட்சுமி, எப்போதையும்
விட சற்று அதிகமாகவே உண்டாள்.
எதிர் பந்தியில்
அமர்ந்து கொண்டு, சரியாக உண்கிறாளா என அடிக்கு ஒரு முறை அவளையே கவனித்துக் கொண்டிருந்த அவள் மணாளனின் செய்கை அவன் மீதான கோபத்தை முற்றிலும் துடைத்தெறிந்ததோடு காலையில் கோவிலுக்கு கிளம்பும் போது நடந்தவைகள்
அவள் மனக்கண் முன் விரிய தொடங்கின.
"லட்சுமி, நான் குழந்தையை பாத்துக்குறேன் ... நீ போய் பிரேக் பாஸ்ட் சாப்பிட்டு
வந்துடு ..."
" நீங்க
..."
" நான்
வீரா ஓட இப்பதான் சாப்பிட்டேன் ..."
" எனக்கு
பிரேக் பாஸ்ட் வேணாம்..."
" ஏண்டி
..."
" நான்
விரதம் .... கோவில்ல படையலுக்கு
வச்சத சாப்பிட்டதுக்கு அப்புறம் தான் மத்ததெல்லாம்
..."
"ஏய் ...
கறி விருந்து மதியம் ரெண்டு மணிக்கு தானாம்... அது
வரைக்கும் நீ சாப்பிடாம இருந்தா குழந்தைக்கு எப்படி பால் கொடுப்ப ... ஒழுக்கமா
பிரேக்ஃபாஸ்ட் சாப்பிட்டு கிளம்பு ..." என்றான் லேசான கோபத்தோடு.
"அது
வந்து ... இது என்னோட நேத்தி கடன் ..." என அவள் தயங்க, ஓரிரு
கணம் அமைதி காத்தவன், எங்கிருந்தோ ரெண்டு இளநீரை வெட்டி
எடுத்து வந்து அவளிடம் கொடுத்து அருந்த செய்தான்...
"தண்ணிக்கு
தோஷம் இல்ல..." என்ற உபரி தகவலை கூறி.
அவன் கூறியது
ஏற்புடையதாக இருந்ததால், இளநீரை மட்டும் அருந்தி விட்டு கோவிலுக்கு
வந்திருந்தவளுக்கு, கடந்த ஒரு மணி நேரமாக பசி மயக்கம் கண்ணைக்கட்ட,
அன்னதானத்திற்கு அழைப்பு விடுத்ததும், முதல்
பந்தியில் அமர்ந்து முழு
வீச்சில் உண்டு கொண்டிருந்தவளை அவள் கணவன் ஒரு நிறைவோடு நோக்க , அதனை காண காண
அவளது காதல் மனம் இறக்கை இல்லாமல் விண்ணில் சிறகடித்துக் கொண்டிருக்கும் போது, மரத்திற்கு அடியில் சற்று தள்ளி நின்றபடி மீனாட்சியும் ராம் சரணை வைத்த கண் வாங்காமல் பார்த்துக்
கொண்டிருப்பது அவள் பார்வையில் விழ பொங்கிய பாலில் தண்ணீரை ஊற்றியது போல் சோர்ந்து
போனாள் தாரகை.
மனைவியின் முகத்தில்
திடீரென்று தென்பட்ட சோகம் மற்றும் விலகல் தன்மைக்கு காரணம் புரியாமல் குழம்பியபடி
உண்டு முடித்தவனிடம், அருகில் அமர்ந்திருந்த வீரா
"சரண்,
இப்ப வீட்டுக்கு கிளம்பினா தான், நாங்க அங்கிருந்து
ஊருக்கு கிளம்ப சரியா இருக்கும் ...."
"உடனே
கிளம்பாத ... வீட்டுக்கு போய் கொஞ்சம் ரெஸ்ட் எடுத்துட்டு கிளம்பலாம் டா .."
"ஷியூர்
.." என முடித்தான் வீரா.
அனைவரும் வீடு
நோக்கி பயணப்படும் போது , முன் தினத்தைப் போல் மீனாட்சியின் குடும்பம் ராம்சரணின்
காரில் பயணமானது.
கோவிலுக்கு
வரும் பொழுது படபடத்துக் கொண்டே வந்த மீனாட்சி,
திரும்பும் பொழுது பேசா மடந்தையாய் அடக்கி வாசிக்க, அதற்கான காரணத்தை கேட்டறிந்து, சந்தை கடையை உருவாக்க
மனமில்லாமல், தப்பித்தோம் பிழைத்தோம் என்ற மனநிலையில்
இருந்த ராம்சரண் மனைவி மற்றும் தன் குழந்தையின் மீதே
பார்வையை பதித்த படி நிம்மதியாக
வாகனத்தை செலுத்த, தன் திடீர் அமைதிக்கான காரணத்தை பற்றி கேட்பான் என்று
எதிர்பார்த்து இருந்த மீனாட்சிக்கு, ஏமாற்றமே
மிஞ்ச, அது இன்னும் அவளது
கோபத்தை வகைத்தொகை இல்லாமல் கூட்டியது.
அடுத்த அரை மணி
நேரத்தில், அனைவரது
காரும் பாரம்பரிய வீட்டை வந்தடைந்தது.
காலையிலிருந்து
சரியாக உண்ணாததால தாய்ப்பால் குறைந்திருந்த நிலையில், குழந்தை பசும்பாலை குடித்துவிட்டு ஆழ்ந்த நித்திரையை தழுவி இருக்க,
அதை அள்ளி எடுத்துக்கொண்டு தன் அறைக்கு செல்ல முயலும் போது தான்,
எதேச்சையாக அவளது விழிகள், காரை விட்டிறங்கிய மீனாட்சியின் பார்வையை சந்திக்க, இரு கூர் தீட்டிய
வாள்கள் ஒன்றோடு ஒன்று பின்னி பிணையும் பொழுது தோன்றும் நெருப்புச் ஜுவாலையை அவள்
கண்கள் கக்க, அந்தப் பார்வையின் அர்த்தம் விளங்கவில்லை
என்றாலும் அதன் தாக்கத்தை உணர்ந்து ஒரு கணம்
செய்வதறியாது திகைத்து நின்றாள் நாயகி .
"லட்சுமி,
என்ன வேடிக்கை பார்த்துகிட்டு இருக்க .... குழந்தையை ரூம்ல தூங்க வை
...." என அவள் தோளில் கை போட்டு, ராம்சரண் அழைத்துச் செல்ல, ஒரு சில கண்களுக்கு அந்த
காட்சி உவப்பை தராமல் போனதை அப்போது லட்சுமி அறிந்திருக்கவில்லை.
அறையின்
தனிமையில்,
அவள் குழந்தையை
படுக்கையில் கிடத்திவிட்டு , புடவையை மாற்ற மர அலமாரியை நோக்கி நகரும் போது,
பின்புறமாக அவள் இடையை அழுத்தமாக பற்றி அணைத்துக் கொண்டான் ராம்
சரண்.
புதிதாய்
முளைத்த பழக்கமாய் , அவள் எதுவும் பேசாமல் அவனிடமிருந்து திமிரி விலக முயல, லாவகமாக அவளை தன் முகம் நோக்கி திருப்பியவன் ,
"என்னடி
பிரச்சனை .... ஏன் பேச மாட்டேங்கற ...." என்றான் வாஞ்சையாக அவளைத் தன்னோடு
இழுத்து அணைத்தபடி.
அவளிடம் பதில்
இல்லை என்றதும் அவள் நெற்றியில் முத்தம் பதிக்க ஆரம்பித்தவன், மெல்ல முன்னேறி காது,
கன்னம் , மூக்கு என பயணிக்க அதனை தடுக்கும் முயற்சியாக முகத்தை வெடுக்கென்று திருப்பிக் கொண்டாள் அவன்
வனிதை .
அவளை எல்லா
வகையிலும் அவன் தான் ஆக்கிரமித்திருந்தானே ஒழிய, அவள் மருந்தளவிற்கு கூட அவனிடம்
ஓண்டவில்லை.
அவளது இரு
கைகளையும் பிடித்து, தன் இடையில் பதித்து ,
" கட்டிக்கோ...டி..."
என்றான் சரசமாக.
அவன் சொன்னதை
செய்யாமல், அவனிடமிருந்து
விலகுவதிலேயே அவள் குறியாக இருக்க,
"என்னடி
.... ஏதோ நான் சினிமா வில்லன் மாதிரியும் நீ ஹீரோயின்
மாதிரியும் பண்ற ... நான் வில்லன் இல்ல உன் ஹீரோ ... இங்க
பாரு ... நடந்த பிரச்சனை என்னன்னு நாம பேசினா தானே புரியும் ..."
"நீங்க
பேசினீங்களா ..... இல்லையே .... அருணா சொன்னதைக் கேட்டு நம்பி, என்னை அடிச்சிட்டீங்களே ..." என்றவளின்
கண்கள் பொங்க ,
"உனக்கு
என்ன என்னை அடிக்கணும் .... அதானே ... அடிச்சிடு ... அப்படி செஞ்சா உன் கோவம்
போயிடும்னா செஞ்சிடு ...."
"
............... "
"ஏன்
அமைதியா இருக்க .... அருணா, எங்க
அம்மா முன்னாடி உன்னை அடிச்சுட்டு, இங்க தனியா பெட்ரூம்ல என்னை அடின்னு நான் சொன்னத பத்தி யோசிக்கிறியா ...
இப்பவும் ஒன்னும் கெட்டுப் போகல ...அன்னிக்கு என் அம்மா அருணா மட்டும் தான் இருந்தாங்க... இன்னைக்கு எல்லாரும் கீழ இருக்காங்க ... வா அவங்க முன்னாடி என்னை அடிச்சிடு ... உனக்கும் கோவம் குறைஞ்சிடும் ... எனக்கும் நிம்மதியாயிடும் வா கிளம்பு ..." என அவள் கரம் பற்றிய அவன் இழுக்க,
"
................."
"நீ என்
கூட வாழ்ந்த வாழ்க்கைய தரக்குறைவா பேசினதும் , அதுக்காக
சாகுறேன்னு சொன்னதையும் தான் ஏத்துக்க முடியாம கோவத்துல அடிச்சிட்டேன் ...."
என தன்னிலை
விளக்கம் கொடுத்தவனின் பேச்சு லேசான இதத்தை பரப்பினாலும் , உள்ளுக்குள்
ஏதோ ஒன்று காரணம் இல்லாமல் அழுத்தி கொண்டிருந்ததால் அவனிடம் இருந்து அவள் விலக
முற்படும் போது, அவள் முகத்தை தன் இரு கரங்களால் ஆழ்ந்து
பற்றி அவள் இதழை சிறை பிடித்தான் .
அதுவரை ஒட்டுதல்
இல்லாமல் இருந்தவள், அவனுடன் ஒன்ற தொடங்கியதோடு, மெல்ல மெல்ல அவன்
முன்னேறிய கரங்களின் இழுப்பிற்கு ஏற்ப இளக
ஆரம்பித்தாள்.
எப்பொழுதை
காட்டிலும் அம்முத்தம் வன்முத்தமாய் இருக்க ,
ஓரிரு கணங்களுக்கு பிறகு தானாக விடுவித்தவன், அவள்
புடவை முந்தானையை களைய எத்தனிக்க ,
" குழந்தை
தூங்கிட்டா.. நானும் தூங்கணும் ...." என்றாள் வெட்கத்தோடு.
"வா
ரெண்டு பேரும் தூங்கலாம்...." என ஒற்றை கண் சிமிட்டி அவன் விஷமமாக கூறும்
போது, வீராவிடமிருந்து அழைப்பு வர,
"ஓ காட்
மறந்தே போயிட்டேன் ... வீரா கிளம்பறான்.... வா ... நாம சென்ட் அஃப் கொடுத்துட்டு
வந்துடலாம்..”
அவசர அவசரமாக
நெகிழ்ந்திருந்த ஆடையை சரி செய்து கொண்டு இருவரும் கீழ்த்தளத்திற்கு சென்றனர்.
ரங்கசாமியுடன் ரங்கசாமி வீட்டு உறவினர்கள், அருணா, கற்பகம், சுகந்தி, ரவி
மற்றும் ருக்மணி குடும்பத்தினர் புடை சூழ வீரா
குடும்பத்திற்கு விடை கொடுத்துக் கொண்டிருக்கும் போது அவர்களுடன் ராம் சரண் தம்பதிகள் இணைந்து கொள்ள, அப்போது
அன்புச்செல்வி ராம்சரணை பார்த்து
“அண்ணே,
இன்னும் ரெண்டு மாசத்துல எனக்கு கல்யாணம் ... நீங்களும் அண்ணியும்
நிச்சயம் வரணும் .... எப்படியும் அண்ணன் பத்திரிகை வச்சு கூப்பிடுவாரு ... இருந்தாலும்
கல்யாண பொண்ணு நான் உங்களை பர்சனலா இன்வைட் பண்றேன்...
உலகத்துல நீங்க எங்க இருந்தாலும் ரெண்டு பேரும் ஜோடியா
என் கல்யாணத்துக்கு வந்துடனும்.. சரியா..”
என்றாள் பாசத்தோடு.
“ஆல்ரெடி
வீரா எல்லாத்தையும் சொல்லிட்டாம்மா.. நான்
உலகத்துல எந்த மூலையில இருந்தாலும், எவ்ளோ
முக்கியமான வேலையா இருந்தாலும் எல்லாத்தையும் கேன்சல் பண்ணிட்டு ,
உன் கல்யாணத்துக்கு நானும் லட்சுமியும் முதல் ஆளா வந்துடுவோம் ....
சரியா ..." என்றவனுக்கு அப்போது தெரியாது, அவன் வாக்கு
பொய்க்கப் போகிறதென்று.
வீரா
குடும்பத்தினர் இனிதே விடை பெற்றுச் சென்றதும்,
தங்கள் அறைக்கு செல்ல எண்ணி ராம்சரண்,
லட்சுமி, அருணா, அவள் குழந்தைகள் ஆகியோர் மூன்றாம் தளத்திற்கு
மின்தூக்கியில் பயணமாயினர்.
மூன்றாவது
தளம் வந்ததும் ராம்சரண் தன் அறை நோக்கி செல்லும் போது,
"அண்ணே
...." என்றழைத்தாள் அருணா வாஞ்சையாக.
"சொல்லு
அருணா ..." என்றான் ராம்சரண் தன்மையாக.
"அது
வந்து..... அன்பு வீராவோட தங்கச்சி .... அவகிட்ட அவ்ளோ பாசமா பேசற .... ஆனா நான்
உன் சொந்த தங்கச்சி ... என்னைய வீட்டை விட்டு வெளியே போக சொல்லிட்டயேண்ணே.."
என்றாள் கண்களில் நீர் வழிய .
"அருணா
.... ஏய்.... எதுக்காக இப்படி அழுவுற .... ஏதோ கோவத்துல, அதுவும் பிரச்சனையை முடிவுக்கு கொண்டு வரணுங்கிறதுக்காக அன்னைக்கு உன்னை
உன் வீட்டுக்கு போக சொன்னேன்.... மற்றபடி நீ
வீட்டுக்கே வரக்கூடாதுனு சொன்னேனா.. ஒரு விஷயத்தை நல்லா
புரிஞ்சுக்கோ... நீ என்னோட ஒரே தங்கச்சி.... அந்த வீடு நாம ரெண்டு பேரும் ஒண்ணா
வளர்ந்த வீடு ... அந்த வீட்ல எனக்கு எவ்ளோ உரிமை இருக்கோ அவ்ளோ உரிமை உனக்கும்
இருக்கு ...." என்றவனின் பேச்சை இடைவெட்டி
"நான்
வீட்டை பத்தி பேசலண்ணே... நான் அந்த வீட்டுக்கு வரும்
போது நீ முகம் கொடுத்து பேசினா
தானே, மனசுக்கு நிம்மதியா இருக்கும் .... உன்னை மாதிரி
ஓரு அண்ணன் வேற யாருக்குமே கிடைக்க மாட்டாங்க ... நீ கோவத்துல என்ன பேசினாலும்
வீட்டை விட்டு போக சொன்னாலும், அதை நினைச்சு
நினைச்சு அழுவேனே ஒழிய, உன்
மேல எனக்கு கோவம் மட்டும் வராதண்ணே....
நான் உண்மையிலயே
தப்பு செஞ்சிருந்தா நம்ம வீட்டு பக்கம் நானே தலை வச்சி படுக்க
மாட்டேண்ணே.... செய்யாத தப்புக்கு தண்டனையை சுமக்கும் போது தான் வலிக்குது
...." என எதுகை மோனையோடு தேர்ந்தெடுத்த வார்த்தைகளை பயன்படுத்தி
வசனம் பேசினாள் கண்களில் கண்ணீரோடு .
"நீதான்
அதை செஞ்சேன்னு சொல்ல தான் எந்த ஆதாரமும் இல்லையே ...
அன்னைக்கு சொன்னத தான் இன்னைக்கும் சொல்றேன்.... ஆதாரம் இல்லாம எந்த விஷயத்தையும் நான் நம்ப மாட்டேன்.... போதுமா ..."
என்றவன் முடிக்கும் போது அருணா லட்சுமியை ரகசிய பார்வை பார்த்து வெற்றி புன்னகை பூத்தாள்.
ஏனோ அந்தப்
பார்வை லட்சுமியின் முதுகுத்தண்டை சில்லிட வைக்க , தன் அறை நோக்கி திரும்பிய ராம்சரணிடம்,
“அண்ணே,
பக்கத்து ஊர்ல ஒரு பச்சை இலை வைத்தியர் இருக்காராம்.... அவரு
குழந்தைங்களோட ஹார்ட் பிரச்சனைக்கு பச்சை இலை சாறு கொடுத்தே சரி பண்றாராம் ...
நாளைக்கு போகலாமாண்ணே.... ரெண்டு நாளா தொடர்ந்து கடை மூடி இருக்குன்னு ஹரிஷ்
இப்பதான் ஊருக்கு கிளம்பி போனாரு .... அதான்
உன்னை துணைக்கு கூப்பிடறேன் ...."
"இல்ல
அருணா, நாளைக்கு மதியம் நான் பெங்களூர் போய் ஆகணும்
.... திரும்பி வர மூணு நாள் ஆகும் ..."
"அப்ப
இப்பவே குழந்தையை கூட்டிகிட்டு போயிட்டு வந்துடலாம்ணே.." என்ற போது
அப்பாவ
கூட்டிக்கிட்டு போயேன்... என சொல்ல வாய் எடுத்தவன், தன் தாயின் கரத்தை சோர்வாக பற்றிய படி நின்று கொண்டிருந்த
தன் மருமகன் அஜய்யை பார்த்ததும் , மனம் இளக,
"சரி வா
அருணா போயிட்டு வந்துடலாம் ..." என்றவன் திரும்பி தன் மனைவியிடம்
பார்வையாலேயே விடை பெற்றான்.
உறக்கத்தில்
இருந்த குழந்தை விழித்தெழுந்து அழும்
போது தான் கண்களில் கண்ணீர் புரண்டோட கடந்த
கால கசடுகளிலிருந்து நிகழ்காலத்திற்கு வந்தவள்,
தலையை சிலுப்பி மனதை சமன் செய்து கொண்டிருக்கும் போது , ருக்மணி வந்து ,
"நான்
குழந்தையை பாத்துக்கறேன்.... சாப்பாடு செஞ்சு வெச்சிருக்கேன் ... நீ போய் சாப்பிடு
..." என்றார் வாஞ்சையாக .
மனமெல்லாம்
ரணமாக இருந்ததால் சுவை உரைக்காமல்,
வேண்டா வெறுப்பாக உண்டு முடித்துவிட்டு அறைக்கு
திரும்பியவளிடம் ,
"குழந்தையை தூக்கிக்கிட்டு காலாற நடந்துட்டு வரேன் ... காலையிலிருந்து நின்னே கிளாஸ் எடுத்திருப்ப... அதனால கொஞ்ச நேரம் படுத்து ரெஸ்ட் எடும்மா ..." எனக் குழந்தையோடு ருக்மணி வெளியேற மீண்டும் அவளது மனக்குரங்கு , கணவனோடு கழித்த கடைசி தருணங்களை அசை போட்டு பார்க்க தொடங்கியது.
ரங்கசாமி
பச்சைமலை புறத்திலிருந்து ஊட்டிக்கு பறந்து விட ராம் சரண் தன் மனைவி
லட்சுமி, குழந்தை , தாய்
மற்றும் தங்கை அருணாவோடு பச்சைமலை
புறத்திலிருந்து அதிகாலையில் கிளம்பி, கோயம்புத்தூரை
வந்தடைந்தான்.
வந்து
இறங்கியதுமே வீட்டு வேலைகள் லட்சுமியை சூழ்ந்து கொள்ள, அவளும் தன்னை முழுமையாக அதில்
ஈடுபடுத்திக்கொள்ள, சற்று நேரத்திற்கெல்லாம் ராம்சரணிடம்
இருந்து அவளுக்கு அழைப்பு வந்தது.
"என்ன
...." என்றாள் அவன் முகம் பாராமல் லேசான வெட்கத்துடன் கூடிய விலகலில்.
"உன்
மனசுல அப்படி என்ன தான் லஷ்மி இருக்கு .... ப்ளீஸ்
ஓப்பன் அப் .. ...." என்றதுமே அவள் மனதில் அவன் ஆதாரத்தை பற்றி பேசியது தான்
அலாரம் போல் ஒலிக்கத் தொடங்கின.
அவன் அவள் வார்த்தையை நம்பவில்லை ... இந்த நிமிடம் வரை ஆதாரம் இல்லாததால் அருணாவை குற்றவாளி என்று நம்ப மறுக்கிறான் ...
அதே சமயத்தில் அவனை பொறுப்பற்றவன்
நேர்மையில்லாதவன் என்று ஒதுக்கி விடவும் முடியாது ...
நடந்ததை
விசாரிக்க வேண்டியவர்களிடம் விசாரித்து விட்டும் வந்துவிட்டான்.... ஆனால் அதற்கான சரியான
விளக்கங்களும் ஆதாரங்களும் தான் அவனுக்கு கிட்டவில்லை ... என்கின்ற நிலையில் மனைவியின்
வார்த்தையை நம்பவும் முடியாமல், தங்கையை
சந்தேகிக்கவும் முடியாமல் தத்தளித்துக் கொண்டிருப்பவனிடம் பேசி பயன் ஒன்றும் இல்லை
என்பதால் தன் விதியை நொந்தபடி அமைதியானாள்.
தங்கையின் மீதான
பாசமும், ஒன்றாகப் பிறந்து வளர்ந்ததால் ஏற்பட்ட நம்பிக்கையும் தான் ஆதாரம் இல்லாமல் அவள் வார்த்தையை
நம்ப மறுக்க காரணமாகிறது என்பதை அவள்
புரிந்து கொண்டு விட்டாள்.
பொய் புரட்டு
பேசாத மனையாள்.... பெரும்பாலான சூழ்நிலைகளில் பொறுமை காக்கும் மனையாள்... எந்த
சந்தர்ப்பத்திலும் குரலை உயர்த்திப் பேசி உணர்ச்சி வசப்பட்டு சண்டையிடாத
மனையாள்....
திடீரென்று
இப்படி ஒரு பழியை தன் தங்கையின் மீது சுமத்தி
வித்தியாசமாக நடந்து கொள்கிறாள் என்றால், ஆதாரம் கேட்காமல் அவளது வார்த்தைக்கு
முக்கியத்துவம் கொடுத்திருக்க வேண்டும் என்பதை அவன்
தான் புரிந்து கொள்ளவில்லை என்பதால் அவள் மௌனியாகி போக, அவள்
இடையை பற்றி இழுத்தணைத்து அவளது பஞ்சு கன்னத்தில்
முத்தம் ஒன்றை பதித்தவன்,
"பெங்களூர்
போகவே மனசு இல்ல லட்சுமி ... ஸ்வீடன்
கிளையன்ட் வர்றதால வேற வழி இல்லாம போறேன் ...." என தன்னோடு
பிணைத்துக் கொண்டான்.
"பாஸ்ட்
ஈஸ் பாஸ்ட் ... எல்லாத்தையும் மறந்துட்டு நிம்மதியா இரு ... நான் பெங்களூர்ல
இருந்து திரும்பி வந்ததும், நாம ரெண்டு பேரும்
குழந்தையை கூட்டிக்கிட்டு எங்கேயாவது வெளியே போலாம்... சரியா .... என்றவன் அவள்
கன்னத்தையும் இதழையும் அணிலாய் மாறி கவ்வி சுவைத்து
விட்டே விடை பெற்றான்.
அதுதான்
அவர்களது கடைசி சந்திப்பு
என்றும், அதற்கு மேல் இருவரையும் விதி குடும்ப நல
நீதிமன்றத்தில் நிறுத்தி வைத்து பார்க்க போகிறது
என்றும் கற்பூரம் அணைத்து சத்தியம் செய்திருந்தாலும்
அப்போது
இருவரும் நம்பி இருக்க மாட்டார்கள் ....
ஸ்ரீ-ராமம்
வருவார்கள்...
Supperrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrr
ReplyDeletethanks ma
Delete