ஸ்ரீ-ராமம்-27

 அத்தியாயம் 27 

 

காரை செலுத்திய ராம்சரண், சந்தர்ப்பம் கிடைக்கும் போதெல்லாம் கியர் போடுவது போல், கார் கதவை திறந்து மூடுவது போல், குழந்தைக்காக ஏசியை கூட்ட குறைக்க, முக்கியத்துவம் இல்லாத கேள்விகளைக் கேட்டு அவள் பதிலளிக்கும் சொற்ப நேரத்தில் அவளை விழுங்கி விடுவது போல் அவளையே  பார்க்க  என ஏதேதோ காரணங்களை உருவாக்கி அவள் கவனத்தை  கவர முயன்றான்.

 

அவன் செய்கை குறுகுறுப்புடன் கூடிய கோபத்தை கொடுத்தாலும்அவள் அறிந்த கம்பீரமான இறுகிய ராம் சரணுக்கும்அவள் கவனத்தை கவர  குட்டிக்கரணம் அடிக்காத குறையாய் வித்தைக் காட்டிக் கொண்டிருந்த ராம்சரணுக்குமான  வித்தியாசங்களை கண்டு பொங்கி எழுந்த புன்னகையைஅடக்க வெகு சிரமப்பட்டு போனாள் பாவை. 

 

கிட்டத்தட்ட இரண்டு மணி நேரத்திற்குள்ளாகவே கார் பச்சை மலைப்புரத்தில் உள்ள அவர்களது பாரம்பரிய வீட்டின் முன்பு போய் நிற்கவும்அடுத்த பத்து நிமிடத்தில் வீராவின் குடும்பத்தை தொடர்ந்துஅருணாஹரிஷ் மற்றும் ருக்மணி குடும்பம் அங்கு வரவும் சரியாக இருந்தது.

 

வீட்டு வாயிலின் முன்பு அவர்களை வரவேற்க ஒரு சிறு கூட்டமே கூடி இருந்தது.

 

தாழ்வாரத்தில் அமர்ந்திருந்த கண்ணப்பன்  தன் சகோதரி கௌரியோடு  அவர்களைக் கண்டதும் தளர்ந்த நிலையில் எழுந்து நிற்க, மற்ற குடும்ப உறுப்பினர்களான முத்து சாமிசுந்தரி , சந்தானம் அவர்களது மகள், மகன்கள், மருமகள், மருமகன்  (மீனாட்சி, கணேசன் (மீனாட்சியின் கணவர்) வெற்றி, சிவா, சிவாவின் மனைவி) என ஒரு சிறு குழுவே மிகுந்த மகிழ்ச்சியோடும் ஆர்வத்தோடும் வந்திருந்த அனைவருக்கும் அமோக வரவேற்பு கொடுத்தனர்.

 

கண்ணப்பனும் அவரது சகோதரி கௌரியும் தங்களது துணையை இழந்த பிறகு, வயது மூப்பு  மட்டுமல்லாமல் மனதளவிலும் தளர்ந்து போனதால் , பச்சை மலை புரத்தைத் தாண்டி பயணிப்பதை அறவே தவிர்த்திருந்தனர்.

 

சந்தானம், முத்துசாமி மட்டும் குழந்தையின் பெயர் சூட்டு விழாவில் அவர்களது கூட்டுக் குடும்பத்தின் சார்பாக கலந்து கொண்டிருந்ததால் குழந்தையை முன்பே பார்த்திருக்க, கண்ணப்பன், கௌரி உட்பட மற்ற அனைவருக்கும் தற்போது தான் குழந்தையை பார்க்கும் சந்தர்ப்பம் கிட்டியது. 

 

 

சுருட்டை தலையும்சந்தன நிறமும், முட்டை கண்ணும், கொழுகொழு கன்னமுமாக ராம் சரணின் 'மினியேச்சரா'கவே காணப்பட்ட அவன் பெண்ணரசியை ஆச்சரியமும் அதிசயமுமாய் கண்டு மகிழ்ந்து போயினர்.

 

கற்பகமும் அருணாவும் ரங்கசாமியின்  வற்புறுத்தலுக்காக வந்திருந்ததால் வேண்டா வெறுப்பாக ஒரு ரெடிமேட்  புன்னகையை ஒட்ட வைத்துக்கொண்டு அந்த சுப நிகழ்ச்சிக்கு தங்களுக்கும் சம்பந்தமில்லை என்பது போல் விட்டேற்றியாக நின்று கொண்டிருந்தனர். 

 

ரங்கசாமி அழைத்ததால் சுகந்தியும்( அருணாவின் நாத்தனார்)  ரவியும் வந்திருந்தது வேறு அருணாவின்  மன அழுத்தத்தை அதிகரிக்க செய்திருக்க, சூழ்நிலை சரியில்லாததால் மௌனம் காக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டிருந்தாள்.

 

வீட்டின் மூத்த உறுப்பினர்களான கண்ணப்பன் மற்றும் கௌரி மிகுந்த மகிழ்ச்சியோடு ருக்மணி மற்றும்  வீராவின் குடும்பத்தினரை நலம் விசாரித்தனர் என்றாலும் கௌரிக்கு மட்டும் தன் ஆசை நிறைவேறாமல் போனதை எண்ணி மனதோரம் ஒரு சிறு குறை இருக்கத்தான் செய்தது.

 

தன் பேத்தி மீனாட்சியை ராம் சரணுக்கு மணம் முடிக்க வேண்டும் என்ற அவரது விருப்பத்திற்கு ரங்கசாமி செவி சாய்க்கவில்லை என்பது தான் அது.

 

அதனை மனதில் வைத்து ஸ்ரீலட்சுமியை ஆராய்ச்சிப் பார்வை பார்த்தபடி

கல்யாணத்தன்னைக்கு எப்படி ஒடிசலா இருந்தியோ     ஒரு குழந்தை பொறந்தும் அப்படியே தான் இருக்க... சரியா சோறு திங்கறயா இல்லயா .... என் பேத்தி மீனாட்சியை பாரு... எப்படி ஓங்கு தாங்கா இருக்கான்னு..." என்றார் சற்று வினயமாக. 

 

 

சிறுவயது முதலே வயல்வெளி, தோட்டம் துறவுகளில் வேலை பார்த்து வளர்ந்ததால் அந்த வீட்டு  ஆண்களுக்கு இணையாக சற்று ஓங்குதாங்காக தான் காணப்பட்டாள் மீனாட்சி .

 

அவளுக்கும் ராம்சரண் என்றால் விருப்பம் தான். அவனுடைய நிறம் ,அழகு ,படிப்பு பணத்தின் மேல் ஒருவித மயக்கம் உண்டு என்றே கூறலாம்.

 

பேத்தியின் மனம் அறிந்து, கௌரி நேரடியாக ரங்கசாமியிடம் திருமண பேச்சை எடுக்க , ரங்கசாமியோ சில காரணங்களை அடுக்கி  அதனை  தட்டி கழித்து விடஅந்த தாக்கம் இந்நாள் வரை நெஞ்சை விட்டு நீங்காமல் அரித்துக்கொண்டே இருப்பதால் சந்தர்ப்பம் கிடைக்கும் போதெல்லாம் அவைகள் இப்படி  வார்த்தைகளாக அவர் வாயிலிருந்து  உருப்பெற்று வலம் வந்தன. 

 

அதே ஊரில் நிறைய நிலப்புலன்களோடுமாவு மில் துணிக்கடை என வியாபாரம் மேற்கொள்ளும் கணேசனோடு திருமணமாகி ஒரு குழந்தைக்கு தாயான பின்பு கூட, மீனாட்சி  ராம்சரணை பார்க்கும் பார்வையில் ஒரு வித ரசனை தெரியலேசான விகல்பத்தோடும் புன்னகையோடும் ஸ்ரீலக்ஷ்மியை அவள் ஆர்வத்தோடு நோட்டமிட , அப்போது  மீண்டும் கௌரி 

 

"என் பேத்தி மீனாட்சியை, சரணுக்கு கட்டி குடுக்கணும்னு எங்க குடும்பத்துல  எல்லாரும் ஆசைப்பட்டோம்.... ஆனா உன் மாமனாருமீனாட்சி படிக்கல .... அதுக்கு தோட்டம் பயிற தாண்டி உலக விபரம் தெரியல .... என் வீட்டுக்கு மருமவளா வரப்போற பொண்ணு நிறைய படிச்சிருக்கணும் .... உலக விஷயம் நிறைய தெரிஞ்சிருக்கணும்னு என்னென்னமோ சொல்லி வெளியே இருந்து உன்னைய மருமவளா கூட்டியாந்துட்டான்... 

 

மீனாட்சி பத்தாம் கிளாஸ்ல ஃபெயில் ஆனதால படிப்ப நிறுத்திட்டோம் ... தோட்டம் தொறவுன்னே இருந்துட்டதால அவளுக்கும் படிப்புல மனம் போவல... ஆனா அரை மணி நேரத்துல 500 பேருக்கு  அட்டகாசமா சமைச்சு போட்டுருவா என் பேத்தி ...  தெரியுமா... "  என தன் மன ஆற்றாமையை வேறு மாதிரி அவர் கொட்டஅந்த இடத்தில் பொருந்தி இருக்க முடியாமல் தவித்த ரங்கசாமி,

 

"நேரம் ஆயிடுச்சு .... வாங்க இப்ப கோவிலுக்கு போனா தான் குழந்தைக்கு முடி இறக்க சரியா இருக்கும் ..." என்று பேச்சை மாற்ற

 

"அது என்ன வந்த காலோட கிளம்பறது .... வூட்டுக்குள்ள வந்து உக்காந்துட்டு அஞ்சு நிமிஷத்துக்கு பொறவு கிளம்பலாமே"  என கண்ணப்பன் இடை மறிக்க ,

 

"இல்ல சித்தப்பா .... ஏற்கனவே நேரமாயிடுச்சு .... இப்ப போனா தான்  முடியும் ..."  என்ற ரங்கசாமி விறுவிறுவென கோவிலுக்கு செல்வதற்கான ஏற்பாட்டில் இறங்கினார்.

 

ருக்மணி மற்றும் வீராவின் குடும்பத்தினருக்கு கௌரியின் பேச்சு, உவப்பை தரவில்லை என்றாலும்  அவர் அந்த வீட்டின் மூத்த தலைமுறை பெண் என்பதால் எதுவும் திருப்பி பேச முடியாத நிலையில் அடக்கி வாசித்தனர். 

 

கௌரிகண்ணப்பனில் ஆரம்பித்து ரங்கசாமி வீட்டு உறவினர்கள்  அனைவரும் தத்தம் கார்களில் பச்சையம்மன் கோவிலை நோக்கி பயணிக்க, மற்றவர்கள் அவரை காரில் பின் தொடர, கௌரியின் பேச்சில் உறைந்து நின்ற  லட்சுமியின் முகத்தில் எள்ளும் கொள்ளும் வெடிப்பதை கண்டு  ரசித்த ராம் சரண்,  

வாடி, கோவிலுக்கு கிளம்பலாம் ..." என சரசமாக மனைவியை அணைக்காத குறையாய் தோள் பற்றி இழுக்கஉணர்வு பெற்றவள் அமைதியாக அவனை  பின்தொடர்ந்து காரில் ஏறி அமர

 

"நாங்க ரெண்டு பேரும் உங்க கூடயே வாரோம் ...."  என மீனாட்சி தன் கணவனோடும் குழந்தையோடும்  அவர்களது காரின் பின்புறத்தில் ஏறிக்கொண்டாள்.

 

மற்ற கார்களில் இடம் இல்லை போலும் என ராம்சரண் நினைத்தோடு அனைவருமே கோவிலுக்கு செல்வதால்மீனாட்சி தன் காரில் ஏறிக்கொண்டதை அவன்  பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை.  ஆனால் லட்சுமிக்கு மட்டும் ஏதோ ஒன்று நெஞ்சை அழுத்துவது போல்  இருக்க, அதனைப் நெட்டி  புறந்தள்ளி  அன்றைய கடமைகளில் அவள்  மனதை செலுத்த முயற்சிக்க, கௌரியின் பேச்சில் குழம்பி தவிக்கும்  மனையாளை சீண்டிக்கொண்டே பயணிக்கலாம் என்ற ஆசையில் வந்தவனுக்குமீனாட்சியின்  எதிர்பாராத  வரவு ஏமாற்றத்தை கொடுத்திருக்ககடைசியில்  இருவரும் வெவ்வேறு விருப்பமில்லாத  மனநிலையில் பயணிக்கப்பட வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டனர்.

 

கிட்டத்தட்ட அரை மணி நேர பயணத்தில் பச்சை பசேல் என்ற சமவெளியில் அமைந்திருந்தது பச்சையம்மன் கோவில்.

 

இந்த கோவில் பல சிறப்பம்சங்களை உள்ளடக்கியது.  அவற்றில் மிக முக்கியமானது அன்னை பச்சையம்மன் சுயம்பு உருவாக காட்சியளிப்பதுஅதோடு பொதுவாக அம்மன் ஆலயங்களில் குங்குமம் தான் பிரசாதமாக வழங்கப்படும் ஆனால் இங்கு திருநீறு பிரசாதமாக வழங்கப்படும். 

 

அந்தத்  திருநீருமே பூமியில் சுயம்புவாக தோன்றி, அன்றாடம் வளரும்  திருநீறு குன்றிலிருந்து வெட்டி எடுக்கப்பட்டு விநியோகிக்கப்படுவது தான் இந்த கோவிலின் மகிமையே.

 

கோவிலின் பூசாரி சிறப்பு பூஜையை தொடங்கிய பின்னர், வீராவின் மடியில் குழந்தையை அமர்த்தி முடி இறக்கும் நிகழ்வு  நடந்தேறஅதனைத் தொடர்ந்து காது குத்தும் வைபவமும் குழந்தையின் அழுகையோடு அம்சமாக நிறைவேறியது. 

 

வீராதாய்மாமன் சீரை விமர்சையாக யாதொரு  குறையும் இன்றி தன் சொந்த தங்கைக்கு செய்வது போல் மனமார செய்தான் .

 

அவன் தாய் அகல்யாதங்கை அன்புச்செல்வி இருவருமே மிகுந்த மகிழ்ச்சியோடு அந்த நிகழ்வில் பங்கு கொண்டனர். 

 

ருக்மணியும் குழந்தைக்கு  தங்கத்தாலான சிறிய கழுத்து சங்கிலிமோதிரம், கொலுசு, பட்டுப்பாவாடை என தன் சக்திக்கு தக்கவாறு வரிசை வைத்தார். 

 

ஏற்கனவே ஓரிருமுறை ருக்மணி மற்றும் ராமலட்சுமியை வீராவின் தாய், தங்கை சந்தித்திருந்ததால், இந்த சந்திப்பு அவர்களுக்கு இடையேயான அன்னியோன்யத்தை கூட்டியதோடு நட்பு என்பதையெல்லாம் தாண்டி ஏதோ ஒரு வகையில் விட்ட குறை தொட்ட குறையான உறவாகவே உணரவும் வைத்தது. 

 

ரங்கசாமியும் நிறைந்த மனதோடு அதனை கண்டு களிக்க, வழக்கம் போல் அருணா கற்பகம் யாருக்கோ வந்த விருந்தாக கருதிதள்ளி நின்றே வேடிக்கை பார்த்தனர்.

 

இத்துணை உறவு முறைகள் இருந்தும், ராம் சரண்  தாய்மாமன் உறவாக  வீராவை நாடியது ரங்கசாமி வீட்டு உறவினர்களுக்கு  சிறு நெருடலோடு வருத்தத்தை  கொடுத்திருந்தாலும் நீண்ட நாட்களுக்கு பிறகு நடைபெறும் சுப நிகழ்ச்சி என்பதால் அதனைக் காட்டிக் கொள்ளாமல் கலந்து கொண்டு சிறப்பித்தனர். 

 

காது குத்திய வலியால் அழுது ஓய்ந்த குழந்தைமெதுவாக தன் இரு கைகளை தன் தலை மீது வைத்து முடியை தேட அது இல்லாமல் போனதை  உணர்ந்ததும் மீண்டும் அழத் தொடங்க , அதனைக் கண்டு அனைவரும் குலுங்கி சிரிக்கராம்சரண் குழந்தையை  அள்ளி தன் தோளின் மீது வைத்து அதன் கரத்தை எடுத்து தன் தலையின் மீது வைத்து சமாதானப்படுத்த முயன்றான்.

 

தலை முடியுடன் இருந்ததை காட்டிலும், மொட்டை தலையில் பூசிய சந்தனத்துடன்  காதில் வைரக் கடுக்கனோடு காணப்பட்ட குழந்தையின் அழகு மேலும் கூடியிருக்க , தன் தலை முடி மாயமானதை எண்ணி உதட்டை பிதுக்கி அவ்வப்போது நினைத்து நினைத்து அழும் குழந்தையின் அழகில் மயங்கிஅனைவரும் ஒருவர் பின் ஒருவராக குழந்தையை கொஞ்சி மகிழ்ந்தனர் ( கற்பகம் அருணாவை தவிர).

 

 

இப்படியே குழந்தை அனைவரிடமும் இடமாறருக்மணிக்கு நேத்திக்கடன் இருந்ததால்அவர் அங்கு பொங்கல் வைப்பதில் கவனம் செலுத்த ஸ்ரீலக்ஷ்மி  உடனிருந்து அவருக்கு உதவி புரியலானாள்.

 

தன் கார் கதவை திறந்து மொபைல் சார்ஜரை எடுத்துக்கொண்டு திரும்பும் பொழுது, காரின் முன்பக்க கண்ணாடியில், தொலைவில் பொங்கல் வைத்துக் கொண்டிருந்த தன் மனையாளின் பிம்பம் தெரிய, அதனை ஆழ்ந்து நோக்கியவன், அப்படியே திரும்பி நின்று அவளை அணு அணுவாக ரசிக்க ஆரம்பித்தான்.

 

ஆழ்கடலின் அமைதியை அணியாய் அணிந்த அணங்கு  ....

 

அலட்டல் ஆர்ப்பாட்டம் அற்ற அழகி  .... 

 

பொறுப்பு, பொறுமை, நேர்த்தியில் நல்லாள் ....

 

புவனத்தின் மேதமையை  குத்தகைக்கு எடுத்த பூவை ...

 

என அவன் மனம் கவி பாடிக் கொண்டிருக்கும் போதுஅவளை அறைந்ததும் நினைவுக்கு வரஏனோ அவன் கண்கள் காரணம் இல்லாமல் பனித்தன.

தான் எப்படி நடந்து கொண்டாலும் எதிர் கேள்வி கேட்க மாட்டாள் என்ற தைரியத்தில் செய்ததை எண்ணி வெட்கினான்.

அவளை மனைவியாய் ஏற்றுக்கொண்ட நாளிலிருந்து  இந்த கணம் வரை, அவனுக்கு நிறைவான வாழ்க்கையை தான்  கொடுத்திருக்கிறாள்.

 

தனக்கென்று எதையும் அவனிடம் கேட்டதும் இல்லை  எதிர்பார்த்ததும் இல்லைஅவனது அன்பைத் தவிர ...

 

அவளது குடும்ப பொருளாதார நிலையை  கற்பகம் ஓரிருமுறை சுட்டிக்காட்டி வசை பாடும்போது கூட உண்மையைத்தானே கூறுகிறார் என்று சொல்லி  கடந்து விடுவாள் ....

 

தன்மானம் பார்ப்பவள் என்றாலும், தான் என்ற அகங்காரம் இல்லாதவள்..

 

பொதுவாக யாரையும் புகழாத ரங்கசாமி கூடஅவளது உழைப்பு, நேர்மை, புத்திசாலித்தனம்திறமையை பலமுறை புகழ்ந்து கேட்டுள்ளான்...

 

இப்படிப்பட்டவள் ஏன் அப்படி நடந்து கொண்டாள் ... இவளால் பொய்யுரைத்திருக்க முடியுமா ....   என அவன் ஆழ்ந்த சிந்தனையில் மூழ்கி இருக்கும் பொழுது, அன்புச்செல்வியோடு பேசி சிரித்தபடி ராமலட்சுமி  அவனை கடந்து செல்வதைப் பார்த்து,

 

" குட்டிஇங்க வா ..." என அழைத்தான்.

 

அன்புச்செல்வியிடம் விடை பெற்றுக் ராம் சரணை நெருங்கிய ராமலட்சுமி ,

 

"சொல்லுங்க மாமா ..." என்றாள் பணிவாக. 

 

"நடந்த விஷயம் உனக்கு எல்லாம் தெரியும்னு நினைக்கிறேன்... உன் அக்கா ஏன் அப்படி நடந்துக்கிட்டானு இப்ப வரைக்கும் எனக்கு புரியல ... உண்மையிலயே என்ன தான் நடந்தது உனக்கு ஏதாவது தெரியுமா ..." என்றவனிடம்  தன் தாய்  ருக்மணி தன்னிடம் கூறிய அனைத்தையும் மறுஒளிபரப்பு செய்துவிட்டு 

 

பொதுவா அக்கா அம்மா பொய் சொல்றவங்க இல்ல மாமா .... அதுவும் இந்த மாதிரியான பெரிய விஷயத்துல எல்லாம் பொய்யே சொல்ல மாட்டாங்க..” என்றாள் மென்மையாக. 

 

"ஆனா நான் விசாரிச்சேனேம்மா... 

அப்படி ஒன்னும் நடக்கவே இல்லன்னு காமாட்சி அக்கா சொல்றாங்களே ..."

 

அவங்க அப்படித்தான் சொல்லுவாங்கனு அக்கா தான் முன்னாடியே சொன்னாளே..." என்றவளின் பதிலடியில்  ஓரிரு கணம் யோசித்தவன்,

உனக்கு அந்த சம்பந்தம் நின்னு போனதுல வருத்தம் தானே குட்டி ..." என்றான் வாஞ்சையாக. 

 

இல்ல மாமா .... அந்த மாதிரியான ஆளுங்க எல்லாம் கல்யாண வாழ்க்கைக்கே லாயக்கி இல்ல ... ஏதோ ஒரு வகையில அந்த கல்யாணம் நின்னது கூட நல்லதுக்குன்னு  தான் தோணுது ...    ஒருவேளை கல்யாணத்துக்கு அப்புறம் அருணா அக்கா வேற ஏதாச்சும் சொல்லி, அதையும்  நம்பி இருந்தா என் வாழ்க்கை என்ன ஆகறது மாமா...." என்றவளின் தன்மானத்தோடு கூடிய புத்திசாலித்தனமான பதிலில் ஒரு கணம் உரைந்தவன் ,

 

அருணா , தான் எதுவுமே சொல்லலைன்னு சொல்றாளேம்மா ... அதோட ஜாதக பொருத்தம் சரி இல்லன்னு தானே மாப்பிள்ளை வீட்டுல கல்யாணம்  வேண்டாம்னு சொன்னாங்க ..."   என அவன் மீண்டும் பழைய பாட்டே பாட

 

"பொண்ணு பாக்க வந்த அன்னைக்கே சம்பந்தம் பேசி முடிச்சு ஏறக்குறைய நிச்சயத்துக்கும் நாள் குறிச்சவங்க, திடீர்னு ஜாதக பொருத்தம் சரி இல்லன்னு கல்யாணத்தை நிறுத்தினா....  நம்பற மாதிரியா இருக்கு ...  சரி யாரோ என்னமோ சொல்லிட்டு போகட்டும் ... எதுவா இருந்தாலும் அவங்க  என்கிட்ட ஒரு வார்த்தை கேட்டிருக்கணுமா  இல்லையா .... அப்படி  எதுவுமே செய்யாம , ஜாதக பொருத்தம் சரி இல்லன்னு கல்யாணத்தை நிறுத்தினா என்ன அர்த்தம்  ..." என்றவளின் தெளிவான கேள்வியில் பதில் சொல்ல முடியாமல் அவன் திணறிக் கொண்டிருக்கும் போதுபொங்கல் வைக்கும் இடத்திலிருந்து அவர்கள் இருவரையும் பார்த்த லட்சுமி,

 

ரெண்டு பேரும் என்ன பேசிக்கிட்டு இருக்காங்க ... என்ற யோசனையில் ஈடுபட்டாள்  காரணம் இது நாள் வரை ராம் சரண் ராமலட்சுமியிடம் ஒரு வார்த்தை கூட நின்று பேசியதில்லை என்பதால். 

 

ஓரிரு கணத்திற்கு பிறகு அருணா குறித்த பஞ்சாயத்தாக தான் இருக்கும் என  அனுமானித்தவிட்டு தன் பணியில் மூழ்கிப் போனாள்.

 

"சரி குட்டிநடந்தது  நடந்து போச்சு எது சரி எது தப்புன்னு என்னால கண்டுபிடிக்க முடியல ... ஆனா உனக்கு நல்ல மாப்பிள்ளையா பார்த்து கல்யாணம் பண்ணி வைக்க வேண்டியது என் பொறுப்பு ... சரியா..” என்றான் ஒரு சகோதரனாய்.

 

அப்போது அழும்  குழந்தையை  வீரா லட்சுமியிடம் கொடுத்ததோடு ஓரிரு கணம் பேசியவிட்டு , ராம் சரணை நோக்கி வரவும் , ராமலட்சுமி ராம்சரணிடமிருந்து விடை பெறவும் சரியாக இருக்க, தன் மனையாளிடம் பேசிவிட்டு  மென் புன்னகையோடு வந்த நண்பனிடம்,

 

"என்னடா சொன்னா ..." என்றான் ராம்சரண் எதிர்பார்ப்போடு.

 

 

"என் ஃப்ரெண்ட் கிட்ட எதுக்கு நம்ம வீட்டு விஷயத்தை தேவையில்லாம சொன்ன.... " என லட்சுமி போலவே மெல்லிய குரலில் முகத்தை சாந்தமாக வைத்துக்கொண்டு அவன் சொல்ல அதனைக் கேட்டு குலுங்கி நகைத்தவன்,

 

"அதையும் அப்படியே  சொல்லிட்டாளா.... அவள ..."  என  இழுத்தான் ரசனையாக மனையாளின் வெள்ளந்தி தனத்தை நினைத்து புன்னகை பூத்தபடி.

 

 

"அவ பிரச்சினையை நீயும் புரிஞ்சுக்க மாட்டேங்குற, புரிஞ்சி கோடானு அட்வைஸ் பண்ணா, நம்ம வீட்டு விஷயத்தை என் ஃப்ரெண்ட் கிட்ட ஏன் சொன்னேன்னு கேட்டு அதுக்கும் அவளை  திட்டியிருக்க .... எனக்கு வர்ற கோவத்துக்கு உன்னை நாலு சாத்து சாத்தனும் போல இருக்குடா ..." என குறுநகையோடு இருக்கும் நண்பனை பார்த்து  வீரா பொங்கிக் கொண்டிருக்கும் போதுருக்மணி பொங்கல்  படையலுக்காக இருவரையும்  வந்தழைக்க, மிகுந்த மன நிறைவோடு  இருவரும் பச்சையம்மன் சன்னதியை நோக்கி நடந்தனர்.

 

பொங்கல் படையலை அம்பிகைக்கு படைத்துவிட்டு  அதனை அனைவருக்கும்  பூசாரி பிரசாதமாக வழங்க, மேற்கொண்டு செய்ய வேண்டிய ஓரிரு  சடங்குகளை முடித்துக் கொண்டு அனைவரும் வீடு நோக்கி புறப்பட தயாராயினர். 

 

களையான முகத்தின் பிறைநுதலில்  இட்டிருந்த  குங்குமம் மஞ்சள் கீற்று , கலைந்த இடைத் தாண்டிய நீண்ட  கேசத்தில் சற்றே வாடி கழுத்தில் வழிந்த  மல்லிகை சரங்கள், இளம் வெயிலின் உபயத்தால் சிவந்த கன்னக்கதுப்புகளில் வடிந்த வியர்வை துளிகள் என எப்பொழுதும் காணாத வித்தியாசமான அழகில் பரிமளித்த மனையாளை தன் காரில் சாய்ந்த படி ராம் சரண் ரசனையோடு நோக்கிக் கொண்டிருக்கும் போது, அவனை நெருங்கிய வெற்றி,

 

"நீ ஊர் பக்கம் வந்து எவ்ளோ நாளாச்சு தெரியுமா.... இப்ப உன் குழந்தைக்கு  முடி இறக்கிறதுக்காக வேண்டி வந்திருக்க...  இல்லாட்டி போனா இந்த ஊர் பக்கமே தலை வச்சி படுக்க மாட்டயே  ..." என்றான் குற்றம் சாட்டும் தொனியில் பேச்சை ஆரம்பிக்கும் விதமாக.

 

"என்ன பண்றது வெற்றி ... வேலை அதிகம் .... அதான் அடிக்கடி இங்க வர முடியல ..." என்றான் ராம்சரண் நட்பாக. 

 

வெற்றிவிவசாயக் கல்லூரியில் துணை பேராசிரியராக பணிபுரிகிறான்.  

 

விவசாயம் தான் அவர்களது குலத்தொழில் என்பதால் அதனையே படிப்பாக எடுத்து படித்துபணியாகவும் மாற்றிக் கொண்டவன்.

 

"இனிமேலாச்சும் அடிக்கடி பொண்டாட்டி குழந்தையோட ஊருக்கு வந்துட்டு போ சரண்...."

 

"நிச்சயமா வர பார்க்கிறேன் .... சரி ... உனக்கு எப்ப கல்யாணம் .... பொண்ணு கிடைச்சிடுச்சா...."

 

" ம்ச்... இல்ல சரண் .... பொண்ணு தேடி தேடி அலுத்துப் போயிட்டோம் ..."

 

" ஏன் ...."

 

"பொண்ணு  அழகா இருந்தா ... படிப்பு இல்ல ... நல்லா படிச்ச அழகான பொண்ணா இருந்தா நம்ம ஊருக்கு வர மாட்டேங்குது .... நான் லட்சுமி மாதிரி அழகான படிச்ச பொண்ண தேடிக்கிட்டு இருக்கேன் .... உனக்கு அமைஞ்ச மாதிரி எனக்கு எப்ப அமையுமோ  ..."

 

என்றவனின் பேச்சு ராம்சரணின் சிரசில் ஏறி சிந்தையில் உரைத்த மறு நொடி சுர்ரென்று கோபம் தலைக்கேற, சொன்னவனை நையப் புடைக்கும் எண்ணம் மேலோங்கும் போதுகையில் அழும் குழந்தையோடு காரை நோக்கி அவன் மனையாள் வர, உடனே சுயம் உணர்ந்து சுதாரித்தவன்,

 

"சரிவெற்றி நீ கெளம்பு ... அங்க  சித்தப்பா உனக்காக காத்துகிட்டு இருப்பாரு..  போய் காரை எடு ..."  என்று அவனை நெட்டி தள்ளி அனுப்பிவிட்டு தன் மனையாளுக்காக முன்பக்க கார் கதவை திறந்தான் கோபத்தோடு. 

அழும் குழந்தையை சமாதானம் செய்தபடி அவள் காரில் அமர்ந்ததும், ஓட்டுநர் இருக்கையில் அவன் அமர எத்தனிக்கும் போது,

 

"என்ன .... நீங்க வாட்டுக்கு வண்டியை எடுத்தா என்ன அர்த்தம் ..... கூட வந்தவங்க வாராங்களா இல்லையான்னு பார்க்க மாட்டீகளா..."  என மீனாட்சி  குரலை உயர்த்தி பேசியபடி தன் குழந்தையோடு காரின் பின்பக்கம் அமரஅவளைப் பின்தொடர்ந்து வந்த அவளது கணவன் கணேசன் அவள் அருகில் அமர்ந்து கொள்ள, ராக்கெட் இல்லாமலேயே ராம்சரணின் கோபம் விண்வெளியை நோக்கி  வெகு உஷ்ணமாக எகிறியது .

 

 

 

 

 

ஸ்ரீ-ராமம் வருவார்கள் ....

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 


Comments

  1. Story summa rocket speed la poguthu sis .. superb

    ReplyDelete
  2. Supperrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrr

    ReplyDelete

Post a Comment