ஸ்ரீ-ராமம்-26

அத்தியாயம் 26 

 

 குலதெய்வ கோவிலில் தன் பேத்திக்கு முடி இறக்கும் வைபவத்திற்கு சம்மந்தி வீட்டு மக்களை அழைக்கதன் தந்தை ரங்கசாமி கோயம்புத்தூருக்கு வருவார் என்று ராம்சரண் எதிர்பார்த்து தான் இருந்தான். 

 

ஆனால் இத்துணை சீக்கிரம் வருவார் என்று தான்  எதிர்பார்க்கவில்லை .....

 

வீட்டில் நடந்த பிரச்சனையை வீராவிடம்  உளறி கொட்டியது போல், தன் தந்தையிடமும் தன் மனையாள் உளறிக் கொட்டியிருப்பாளோ .... என்ற லேசான அச்சத்தோடு வீட்டிற்குள் நுழைந்தவனை  உணவு மேஜையில் உணவருந்திய படி 

 

"வா சரண் ..... " என  வரவேற்றார் ரங்கசாமி இன்முகத்தோடு. 

 

அவர் முகத்தில் தென்பட்ட இயல்பான மகிழ்ச்சியே  , நடந்து முடிந்த விஷயம் அவர் காதுகளை எட்டவில்லை  என்பதை விவரமாக உணர்த்த, பெரு மூச்சொன்றை எடுத்து மனதை சமன் செய்தவன்,

 

" எப்பப்பா வந்தீங்க ..."  என்றான் அவருக்கு எதிரில் இருந்த நாற்காலியில் அமர்ந்து.

 

"வந்து  ஹாஃப் அன் ஹவர் ஆகுதுப்பா.... நீ வீராவோட வெளிய போயிருக்கேன்னு சொன்னா லட்சுமி.... நம்ம வீட்டு விசேஷத்துக்கு அவங்கள கூப்பிட்டியாப்பா ..."

 

"கூப்பிட்டேன் பா ... வீராவோட அப்பாவுக்கு முக்கிய வேலை இருக்கிறதால இந்த தடவை அவரால  வர முடியலனு சொல்லிட்டாரு ... மற்றபடி  வீராவீராவோட அம்மா, தங்கச்சி  அன்பு எல்லாரும் அவங்க கார்லயே பச்சைமலை புரத்துக்கு வரேன்னு சொல்லிட்டாங்க பா ..."

 

"ஏம்பாமுறையா கூப்பிட்டியா..." என்றார் அழுத்தி.

 

அவர் அப்படி கேட்டதற்கு முக்கிய காரணம் இருந்தது.

 

ஸ்ரீலட்சுமியின் தாய் ருக்மணி, வீட்டிற்கு ஒரே பெண் என்பதால்  அவருக்கு நெருங்கிய உறவுமுறைகள் யாரும் கிடையாது. ஸ்ரீலட்சுமியின் தந்தைக்கும் ஒரு அண்ணன் அண்ணி உண்டு. அவர்களுக்கு குழந்தை கிடையாது. அவர்கள் இருவருமே காலமாகி இரண்டு ஆண்டுகளுக்கு மேலாகிறது. ஆதலால் மாமன், மச்சான், பெரியப்பா சித்தப்பா என்று சொல்லிக் கொள்ளும் அளவிற்கு எல்லாம் ஸ்ரீலட்சுமியின் பக்கம் உறவினர்கள் கிடையாது. 

 

கற்பகமும் வீட்டிற்கு ஒரே பெண் என்றாலும், அவரது தாய் தந்தை சொந்தங்கள்  சிலஅவருக்கு எஞ்சி இருந்தன.

 

ரங்கசாமியும் வீட்டிற்கு ஒரே மகன் என்றாலும்அவரது தந்தை தணிக்காசலத்தின் உடன்பிறந்த இளைய  சகோதரன் கண்ணப்பன் , சகோதரி கௌரி அவர்களது  பிள்ளைகள், பிள்ளைகளுக்கு பிள்ளைகள் என ஒரு சிறு கூட்டமே பச்சைமலை புறத்தில், அந்த செழிப்பான பூமியில் காய்கறி, தேங்காய்ரப்பர், தேயிலை போன்றவைகளை  தோட்டங்களில் பயிர் செய்து வாழ்ந்து வருகின்றனர்

 

கண்ணப்பனுக்கு ஒரே மகன் முத்துசாமி ஏறக்குறைய ரங்கசாமியின் வயதுடையவர்... அவருடைய  ஒரே மகன் சிவாஏறக்குறைய ராம்சரணின் வயது உடையவன்ஓராண்டுக்கு முன்பு தான் அவனுக்குத் திருமணம் முடிந்திருந்தது.

 

கௌரிக்கு ஒரு மகள்ஒரு மகன் சுந்தரிசந்தானம்.

 

சந்தானத்திற்கு குழந்தைகள் இல்லை.

 

சுந்தரிக்கு ஒரு மகன் ஒரு மகள். வெற்றிமீனாட்சி.

 

மீனாட்சிக்கு திருமணம் முடிந்து கைக்குழந்தையோடு இருக்கிறாள்.  வெற்றிக்குத்தான் திருமணத்திற்காக பெண் தேடிக் கொண்டிருக்கின்றனர். 

 

ரங்கசாமி தன் தந்தை தணிகாசலத்தின்  நிலப் புலன்களையும், தென்னந் தோப்பினையும் அவர்களிடத்தில் தான்  குத்தகைக்கு விட்டிருக்கிறார்..

 

அங்கு ரங்கசாமியின் தந்தைக்கு சொந்தமான தோப்பு வீடு ஒன்றும் உள்ளது .... அதில் யாரும்  வசிக்கவில்லை என்றாலும் அதனை சுத்தம் செய்து அவ்வப்போது திருவிழா காலங்கள்  மற்றும் அறுவடை நேரங்களில் பயன்பாட்டில் வைத்திருப்பது வழக்கம் ..

 

அதே போல் ஊருக்கு மத்தியில் காரைக்குடி  அரண்மனை போல் ஒரு பெரிய  பழங்கால பொது வீடு ஒன்றும் உள்ளது... பறந்து விரிந்த நான்கு தளங்களைக் கொண்ட அந்த வீட்டில் ரங்கசாமியின் சித்தப்பா கண்ணப்பன்  குடும்பங்களும், அத்தை  கௌரியின்  குடும்பங்களும் ஆளுக்கு ஒரு தளத்தில் வசிந்து வருகின்றனர்.

 

ரங்கசாமியின் தந்தை தணிக்காச்சலத்திற்கான தளத்தில் அமைந்திருந்த 4 அறைகளில் ஏதாவது ஒன்றை ரங்கசாமி தன் வருகையின் போது பயன்படுத்திக் கொள்வார் ...

 

ரங்கசாமியின் சித்தப்பா கண்ணப்பன்  மற்றும் அத்தை கௌரி 85 வயதை கடந்தவர்கள் என்றாலும், சுத்தமான காற்றும் ரசாயனம் இல்லாத தண்ணீரும் உணவுமே அவர்களை திடகாத்திரமானவர்களாக வைத்திருந்தது.

 

அவர்களின் அண்ணனும் ரங்கசாமியின் தந்தையுமான தணிகாசலம் மற்றும் அவரது மனைவி  மத்திம வயதிலேயே காலமாகி போக, தணிகாசலத்தின் ஒரே மகனான ரங்கசாமியை சொந்த மகனைப் போல் பாவித்து  அளவற்ற அன்பைப் பொழிந்து ஆதரவு நல்கினர். 

 

 

பச்சைமலைபுரம் ஊட்டிக்கும் குன்னுருக்கும்  இடையில் அமைந்திருக்கும் மலை கிராமமாகும்.

 

அங்கு  வீற்றிருக்கும் பச்சையம்மன் தான் ரங்கசாமி பரம்பரையின்  குலதெய்வம் ஆகும்.

 

கல்யாணம்காதுகுத்து, முடி இறக்குதல் போன்ற அவர்கள் வீட்டு பெரும்பாலான வைபவங்கள்  அங்கு தான் நடந்தேறும் ...

 

இவ்வளவு அங்காளி பங்காளி உறவு முறைகள் இருந்தும்தாய்மாமன் ஸ்தானத்தில்  தன் குழந்தையை  மடியில் வைத்து முடி இறக்க வீராவை தேர்ந்தெடுத்து இருந்தான் ராம்சரண்.

 

ராம் சரணின் அந்த  முடிவை முழு மனதோடு ஏற்றுக் கொண்டிருந்தார் ரங்கசாமி.

 

அதனால் தான் அவர்,

 

"முறையாக அழைத்தாயா " என்ற கேள்வி எழுப்ப, தாய்மாமன் வீட்டு உறவை அழைக்கும் சம்பிரதாயத்தை முற்றிலும் பின்பற்றியே வீராவின் குடும்பத்தை விசேஷத்திற்கு அழைத்திருந்தான் ராம்சரண்.

 

ராம் சரணுக்கும் வீராவிற்கும் இடையே அப்படி ஒரு ஆழ்ந்த நட்பும் உறவும்  நிலவுவதை  அறிந்ததால் தான் தன் வீட்டு விஷயங்களை வீராவிடம் வெளிப்படையாக பகிர்ந்தாள் லட்சுமி.

 

"2 வாரத்துக்கு முன்னாடியேநீங்க சொன்னபடியே  நானும் லட்சுமியும்  அவங்கள நம்ம வீட்டு பங்க்ஷன்க்கு இன்வைட் பண்ணிட்டோம்பா..."

 

"குட்நான் வரும் போதே அருணா வீட்டுக்கு போய் மாப்பிள்ளையும், அவரோட தங்கச்சி சுகந்தியையும் முறையா கூப்டுட்டேன்... நாளைக்கு உங்க அம்மாஅருணா, மாப்பிள குழந்தைங்க எல்லாரும் டைரக்டா பச்சமலைக்கு வந்துடறாங்க ... சம்மந்தி வீட்டுக்கும் போயி முறையா கூப்டுட்டேன்... அவங்க அங்க வர நாளைக்கு அவங்களுக்கு கார்  அனுப்பறதா சொல்லி இருக்கேன்...."

 

"சரிப்பா அனுப்பிடலாம் ..." என்றான் ஓரக்கண்ணால் மனைவியை பார்த்து.

 

அவளோ வீட்டில் பிரச்சனை நடந்ததாகவே துளி கூட காட்டிக் கொள்ளாமல் இயல்பாக தன் வேலையில் மூழ்கி இருக்க, அத்துணை நேரமாக அவனை அழுத்திக் கொண்டிருந்த அவள் மீதான கோபம், சாம்பிராணி புகை போல் கொஞ்சம் கொஞ்சமாக கரைந்து காணாமல் போகத் தொடங்கியது. 

 

வீராவிடம் தன் வீட்டுப் பிரச்சனையை சொன்னவளுக்கு தன் மாமனாரிடம் சொல்ல இரண்டு நிமிடங்கள் ஆகாது ...

 

ஆனால் தன் மாமனாரை அவள் நன்கு அறிவாள்.  ஒரே பெண் என்பதால் அருணாவின் மீது அவருக்கு பாசம் அதிகம்.  அது அவர் கண்களை மறைப்பதால் தான்இத்துணைப் பிழைகள் தன் மகள் மீது இருந்தும் அவளிடம் ஒரு மென்மையான போக்கை கையாளுகிறார் என்பதையும் அறிவாள்.

 

ஏற்கனவே தன் தாய் பேச்சைக் கேட்காமல்  உணர்ச்சிவசப்பட்டு எடுத்தோம் கவிழ்த்தோம் என்று ஆதாரம் இல்லாமல் பேசி கற்பகம், அருணா, ராம்சரண் ஆகியோர் முன்பு அசிங்கப்பட்டு நிற்கிறாள். 

 

நடந்தவற்றைக் கூறினால் ரங்கசாமியும் நிச்சயம் ஆதாரம் கேட்பார் .... ஆதாரம் இல்லாமல் அவரிடம்  பேசி அவள் அவமானப்பட தயாராக இல்லை என்பதால் அடக்கி வாசித்தாள்.

 

தந்தை , மகனுக்கு இடையேயான பேச்சு அலுவலகம், தேயிலை தொழிற்சாலை, குடும்ப விசேஷம்  என மாறி மாறி  எங்கெங்கோ பயணிக்க, அவள் தன் அடுக்களை வேலைகளை முடித்துக் கொண்டு விளையாடிக் கொண்டிருந்த  குழந்தைக்கு பசியாத்த எண்ணி  தன் அறைக்குச் சென்று விட்டாள்.

 

தாயின் அமுதத்தை அருந்தியபடி குழந்தை உறங்கிப் போக, அதனை அள்ளி தோளில் போட்டுக் கொண்டு இரண்டு நிமிடம் இடவலமாக  நடந்தவள்வழக்கம் போல் குழந்தையை படுக்கையின் மத்தியில் கடத்திவிட்டு  சிட் அவுட்டில் உலர வைத்திருந்த  துணிகளை மடிக்க எண்ணி, அவற்றை அள்ளிக் கொண்டு வரும் போது, அந்த அறைக்குள் நுழைந்து அவளையே ஆழ்ந்து நோக்கியபடி , நெருங்கினான் நாயகன் .

 

கிட்டத்தட்ட 24 மணி நேரத்திற்கு மேல் தொடர்ந்த  அந்த மௌன போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர எண்ணி,

 

" லட்சுமி ..." என்றான் அழுத்தமாக.

 

"ம்ம்" என்ற பதில் மட்டுமேஅவன் முகம் பார்க்காமல் தலை குனிந்த படி அவளிடம் இருந்து வர 

 

"எதுக்கு தேவையில்லாம நம்ம வீட்டு குடும்ப விஷயத்தை அவன் கிட்ட சொன்ன...."

 

யார் கிட்ட ..." என்றாள் தெரியாதது போல். 

 

"ம்ம்ம்.... வீரா கிட்ட ..."

 

"சொல்லக்கூடாதா ..."

 

" சொல்லக்கூடாது .... அவன் என் ஃப்ரெண்ட் .... அவனுக்கு நம்ம வீட்டு விஷயம் தெரிஞ்சு என்ன ஆகப்போகுது ...." என்றவனை நிமிர்ந்து பார்த்தவளின் மனதில்,

 

நம்ம குழந்தைக்கு முடி இறக்க தாய்மாமனா அவரு  வேணும் ... ஆனா நம்ம குடும்ப விஷயம் எதுவும் அவருக்கு தெரியக்கூடாது .... ஆனா நீங்க மட்டும் நம்ம வீட்டு  விஷயத்தையும் அவர் கிட்ட புலம்புவீங்க .... இது எந்த ஊரு நியாயமோ... என்ற செய்தி ஓட,  

 

இவ எதுக்கு  சுனாமி மாதிரி  சுருட்டி இழுக்கிற  பார்வை பார்க்கிறா... 

 

என அவன் தன்  மனதோடு பேசிக் கொண்டிருக்கும் போதேஅவள்  இடத்தை விட்டு நகர முயலஅவள் கரம் பற்றி இழுத்து நிறுத்தியவன் ,

 

"பதில் சொல்லிட்டு போ லட்சுமி ..."  என்றான் அவள் ஏதாவது பேசினால் மௌன போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வந்து சமாதான கொடியை பறக்க விடலாம் என்று.

 

அவளோ,

 

ம்ம்ம்..." என்ற வார்த்தையோடு விடை பெற,        மென்மையான கரத்தை விட்டு விலக மனம் இல்லாமல்அவள் கரத்தை அழுந்த பற்றிய படி அவன் நிற்க ,

 

"எனக்கு வேலை இருக்கு ..." என்றவள் தன் கரத்தை உருவி கொண்டு , கர்ம சிரத்தையாக துணிகளை மடித்து அலமாரியில் வைத்துவிட்டுகுழந்தையை அணைத்தபடி படுத்துக்கொண்டாள்.

 

ஆதாரமே இல்லாம ஒரு விஷயத்தை சொன்னதோட, இத்தனை நாள் என் கூட வாழ்ந்த வாழ்க்கையும் சேர்த்து இல்ல  கொச்சைப்படுத்தி இருக்கா ....

 

அதனால கோவப்பட்டு அடிச்சிட்டேன் ... என்னோட கோவத்துல நியாயம் இருக்கு ... ஆனா இவளுக்கு எப்படி அநியாயமா கோவம் வரலாம் ...

 

என மனதோடு அவன் புலம்பிக் கொண்டே  கட்டிலின் மறுமுனையில் வந்து படுக்க,  

 

கட்டின பொண்டாட்டி சொல்றதை கூட நம்ப  ஆதாரம் வேணும்னா அப்புறம் இத்தனை நாள் வாழ்ந்த வாழ்க்கைக்கு என்ன அர்த்தம் ...

 

கோர்ட்டுக்கும் போலீசுக்கும் தான் ஆதாரம் தேவைபொண்டாட்டி பேச்சுக்கு கூடவா ஆதாரம் வேணும் ... என் பார்வையும் மனசும் சொல்லாத உண்மையாஅந்த ஆதாரம் சொல்லிட போகுது ...

 

என உறங்குவது போல் பாசாங்கு செய்தபடி உள்ளுக்குள் குமுறி  கொண்டிருந்தாள் மங்கை.

 

இப்படியாக இருவரும் ஒருவரை ஒருவர் வீரியமாக உள்ளுக்குள்  குற்றம் சாட்டிய படி உறங்க முயன்றனர், ஆனால் முடியவில்லை.

 

மெல்ல முதல் ஜாமம் கடந்தது ... 

 

ஆணவன் உறக்கம் பிடிப்படாமல்  புரண்டு புரண்டு படுத்தான் ....

முதுகு காட்டி படுத்திருந்த மனையாளை இரவு ஒளியில் பார்க்க பார்க்க , அவளது ஸ்பரிசத்திற்காக அவன் மனம் ஏங்க தொடங்க அதே சமயம் அவள் பேசிய வார்த்தைகள் அவன் காதுகளில் ஒலித்து அவன் தன்மானத்தை உசுப்பி விடஅவளை நெருங்கவும் முடியாமல் விலகவும் முடியாமல் தவித்துப் போனான்.

 

மங்கையின் நிலையும் ஏறக்குறைய அதே தான் .  அவளது அழுகையை நம்பாமல் ஆதாரத்தை கேட்ட காட்சி அவள் மனக்கண் முன் வந்து இம்சிக்க, கணவன் மீது உண்டான காதல் உணர்வுகளை காத தூரத்திற்கு  ஒதுக்கி வைத்துவிட்டு , கண் அயர முயற்சித்தாள் பாவை.

 

இருவரின் சிந்தனையும் வெவ்வேறாக இருந்தாலும் உணர்வுகள் ஒன்றாகத்தான் இருந்தது. 

 

இத்தனை நாட்களாக மனதாலும் உடலாலும் கூடிக் குலவிய தருணங்களை நினைத்து நினைத்து இருவருக்கும்  ஏக்கமும் ஆற்றாமையும் வகைத்தொகை இல்லாமல் கூடிப் போக, அதனை சரி செய்ய வழி தெரியாமல் அதிலேயே உழன்ற படி உறங்கிப் போயினர். 

 

அதே இரவில் அதே நேரத்தில்  கற்பகமும் அருணாவும் கூட உறக்கம் பிடிபடாமல் தவித்துக் கொண்டிருந்தனர்.

 

"கஷ்டப்பட்டு புருஷனுக்கும் பொண்டாட்டிக்கும் நடுவுல சண்டைய உண்டு பண்ணிட்டோம்னு சந்தோஷமா இருந்தா, அடுத்த கணத்துல அவ முன்னாடியே  அண்ணன் என்னை வீட்டை விட்டு போக சொல்லிடுச்சேம்மா..

நினைச்சு பார்த்தா ரொம்ப அவமானமா இருக்கு .... நான் இந்த திருப்பத்த கொஞ்சம் கூட எதிர்பார்க்கல இனிமே நான் நம்ம வீட்டுக்கு வந்தா கூட அவ பார்வை என்னை வேண்டாத விருந்தாளியாத்தான் பாக்கும்...." என அருணா குமுற,

 

"என்ன  திட்டம் போட்டு என்ன.... அவளுக்கு தான் எல்லாம் சாதகமா நடக்குது .... அவள அறைஞ்சு முடிச்சதும்  சரண் மூஞ்ச பாத்தியா ....  கண் கலங்குறான் அருணா.... அவனுக்கு அவன் பொண்டாட்டி மேல கோவத்தை விட பாசம் அதிகமா இருக்குதுனு அப்பதான் தெரிஞ்சுகிட்டேன்  ..."

 

"இப்படியே போச்சுன்னா ... நீ என்னை மறந்துட வேண்டியது தாம்மா...."

 

"ஏன் அருணா அப்படி பேசுற ..."

 

"இனிமே முன்ன  மாதிரிநம்ம வீட்டுக்கு வந்து வார கணக்கா மாசக்கணக்கா நான் உட்கார முடியாதும்மா ... அண்ணன் கேள்வி கேட்க ஆரம்பிச்சிடும் ....."

 

"அவன் பொண்டாட்டி அவன் கூட இருந்தா தானே அவன் உன்னை  கேள்வி கேட்பான் .... இவ்ளோ நாளா லட்சுமியை  நான் சீரியஸா எடுத்துக்கல ... இனிமே அவளை சீரியஸா எடுத்துக்கலன்னா நாம சீரியஸ் கண்டிஷனுக்கு போயிடுவோம் ... இவ்ளோ திட்டம் போட்டு காய் நகர்த்த தெரிஞ்ச எனக்கு அவளை ஒரே அடியா  வீட்டை விட்டு ஓட வைக்க தெரியாதா ... கூடிய சீக்கிரம் அதுக்கும் ஏதாவது சந்தர்ப்பம் அமையும் ... கொஞ்சம் பொறுமையா இரு ..." என்றார் கற்பகம் பச்சையம்மன் புறத்தில் அதற்கான முதல் அடி அமையப்போவது தெரியாமல். 

 

 

மறுநாள் காலை கிட்டத்தட்ட 6 மணி அளவில் ராம் சரணுக்கு  விழிப்பு வர,மனையாள் அருகில் இல்லாமல் குழந்தை உறங்கிக் கொண்டிருந்ததை ஆராய்ச்சி பார்வை பார்த்துவிட்டு, குளியலறைக்குப் புகுந்து புத்துணர்வு பெற்று பட்டு வேட்டி சட்டையை அணிந்து கொண்டு, காலை தேநீர் அருந்த கூடத்திற்கு வந்தவனை, வேஷ்டி சட்டையில் கம்பீரமாக தயாராகி இருந்த ரங்கசாமி தேநீர் அருந்திய படி பார்வையால் வரவேற்றார். 

 

கணவனை எதிர்பார்த்திருந்தவள் அவனைக் கண்டதும்தயார் செய்து வைத்திருந்த தேநீரை  கொடுத்துவிட்டு கீழ் கண்களால் அவனை நோட்டம் விட்டாள்.

 

அவர்களது திருமணம் மற்றும் குழந்தையின் பெயர் சூட்டு விழாவில்  பட்டு வேட்டி சட்டையில் இருந்தவன்அதோடு  இப்பொழுதுதான்  மீண்டும் அந்த பாரம்பரிய உடையை அணிந்திருக்கிறான். 

 

அவனது  வளர்த்தியான திடகாத்திரமான உடலுக்கு கனக்கச்சிதமாக அது பொருந்தி இருக்க , உள்ளுக்குள் வெகுவாக ரசித்தவளின் நினைவுகளில் ஏதேதோ இன்ப கணங்கள் வந்து போக, அதனை வெளிக்காட்டிக் கொள்ளாமல் ரசித்தபடி  கர்ம சிரத்தையாக குலதெய்வ கோவிலுக்கு போவதற்கான ஏற்பாடுகளில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டாள்.

 

 என்ன தான் தந்தையோடு பேசிக் கொண்டிருந்தாலும்அவனது பார்வையும் அடிக்கடி தன்னவளை வருடிக் கொண்டு தான் இருந்தது.

 

பாசிப் பச்சையில் வெந்தயக் நிற தங்க ஜரிகையிட்ட  பளபளத்த காசி பட்டில்அவன் வாங்கிக் கொடுத்த பொருத்தமான அணிமணிகளோடு காந்தர்வ பெண்ணாக காட்சியளித்தவளை  கண்களால் பருகி இளைப்பாரிக் கொண்டிருந்தான் அவளவன். 

 

பெரும்பாலும் ஆடம்பரமாக உடை அணிவதில்  எப்பொழுதுமே லட்சுமிக்கு  தயக்கம் உண்டு.

 

அதிலும் நகைகளை அம்பாளுக்கு சாற்றுவது போல் அள்ளி அணிந்து கொள்ள வெகுவாகவே தயங்குவாள்.

 

ஆனால் அன்று அவள் படாடோபமாக அணிமணிகளை அணிந்து கொள்ள கற்பகம் தான் காரணமாக இருந்தார். 

 

ஒரு முறைராம்சரணின் திருமணத்திற்கு வருகை தராத  சில  உறவினர்கள்  மணமக்களை வாழ்த்த வந்திருந்த போது,  அவள் அணிந்திருந்த மென்மையான காட்டன் புடவை, சிறு கழுத்துச் சங்கிலி மற்றும் மெல்லிய தங்க வளையல்களைப் பார்த்து,

 

"இங்க பாரு ... இந்த மாதிரி சின்ன சின்ன நகையெல்லாம் போட்டுக்கிட்டு எங்க உறவுக்காரங்க  முன்னாடி வந்து நிக்காத .... எங்க தரத்துக்கு ஏத்த இடத்திலிருந்து பொண்ணு எடுத்திருந்தா இதை எல்லாம் நான் சொல்ல வேண்டிய அவசியமே இருந்திருக்காது அன்னாடங்காட்சி வீட்ல பெண்ணை எடுத்ததால   எங்க எப்படி நடந்துக்கணும்னு  எல்லாத்தையும் சொல்லிக்  கொடுக்க வேண்டியதா  இருக்கு..." என கற்பகம் பொரிந்து தள்ளியது அன்று அவள் நினைவிற்கு வர, ராம்சரண் பரிசளித்தநகைகளை  அந்த புடவைக்கு பொருத்தமாக எடுத்து  அணிந்து கொண்டாள். 

 

குழந்தை பிறந்து ஓரளவிற்கு பூசினார் போல் காணப்பட்டவளுக்கு அந்தப் புடவையும் நகையும் மேலும் அழகு ஊட்டயதோடுஅவளது மன்னவனின் பார்வையும் அவ்வப்போது அவள் மீது படிந்து அவளது வெட்கத்தை கூட்ட, ஒரு சில நெருடல்கள் இருந்தாலும் அதனை எல்லாம் ஒத்தி வைத்து விட்டு, அந்தக் கணநேரத்தை மானசீகமாக ஸ்வீகரித்து மகிழ்ந்து போனாள் மங்கை .

 

சற்று நேரத்திற்கெல்லாம் கண்விழித்த குழந்தைக்கு அமுதூட்டியதோடுதன் ஆடையின் நிறத்திற்கு பொருத்தமான பட்டுப்பாவாடையை அணிவித்துஅடர்த்தியான சுருள் தலைமுடியை இரண்டாகப் பிரித்து இரு தென்னை மர குடுமியிட்டு , மலர் சூட்டிநெத்திச்சுட்டி, அட்டிகை  ஒட்டியானம்கை வளையல்களைப் பூட்டி குட்டி தேவதையாகவே தயார் செய்தாள்.

 

தன்னவனின் நிறத்தை விட, ஒரு  பூச்சு அதிகமான சந்தன நிறத்தில் , பட்டு ரோஜா உதட்டில் ஜொலி ஜொலித்த குழந்தையை, தன் கைகளால் கன்னம் வழித்து அவள் திருஷ்டி சுற்றி முடிக்க, பைகளை எடுக்க வந்த ராம் சரண், தன் பெண்ணரசியை கண்டு, லயித்து அவளை  ஆசையாக அள்ளிக்கொண்டு  கொஞ்சி தீர்த்தான். 

 

 

கிட்டத்தட்ட 10 மணியளவில் முடி இறக்கும் வைபவம் பச்சையம்மன் கோவிலில் நடந்தேற இருப்பதால், வீரா தன் தாயோடும் தங்கையோடும் புறப்படருக்மணி தன் கணவர் தியாகராஜன், மகள் ராமலட்சுமியோடு ரங்கசாமி அனுப்பிய காரில் கிளம்ப, அருணா, ஹரிஷ் மற்றும் கற்பகத்தோடு புறப்பட்ட  செய்தி ஏற்கனவே ரங்கசாமியை வந்தடைந்திருந்ததால் அவரும் தன்  காரில் புறப்படஅவரைப் பின் தொடர்ந்து அன்றைய நாயகியான குட்டி தேவதையோடு ஸ்ரீலக்ஷ்மியும் ராம் சரணும் பச்சைமலை புறத்திற்கு  புறப்பட்டனர். 

 

 

 

 

ஸ்ரீ-ராமம் வருவார்கள் ....

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 


Comments

Post a Comment