அத்தியாயம் 24
மேலும் 6 மாதங்கள் அழகாக உருண்டோடின.
நேரம் காலம்
இல்லாமல் மழலையின் மொழியிலும், மனையாளின் காதலிலும் கட்டுண்டு திளைத்தான்
அந்தக் காளை.
சில சமயங்களில் முக்கிய பண்டிகைகளை மனைவி,
குழந்தையோடு கொண்டாடுவதற்காக வெளியூர் பயணத்தை கூட தள்ளிப் போட்டான். அப்படியே வெளியூர் சென்றாலும்
ஒரு வாரத்திற்கு மேல் தங்காமல் பார்த்துக் கொண்டான்...
இப்படி ராம்
சரண் தன் மனைவி குழந்தையின் மீது காட்டும் அக்கறையைக் கண்டு கற்பகம் அருணாவின் மனம் எரிமலையாய் குமைந்தோடு, கணவன் மனைவிக்கிடையே இடையூறுகள் ஏற்படுத்தியும், எதிர்பார்த்த பலன்
கிட்டாமல் போனதை எண்ணி மனம் நொந்து போயினர்.
அருணாவின்
வக்கிர புத்திக்கு மட்டும் ஒரு விஷயம் சரியாக எட்டியிருந்தது , லட்சுமியின் அளவு கடந்த பொறுமையே ராம்சரணை வளைக்கும் ஆயுதம் என்று.
எதற்குமே
வளையாமல் இறுக்கமாக , சொல்லப்போனால் முன் கோபகாரனாக இருந்த தன் அண்ணனை , வெகு
இயல்பான அன்பு, பாசம் , காதல் கொண்ட
மனிதனாக வெளி உலகிற்கு பறைசாற்றியது லட்சுமியின் அலட்டல் இல்லாத அன்பும்
பொறுமையுமே என்பதை வெகு சரியாக கணித்தவள், அதனை உடைக்கும்
சந்தர்ப்பத்திற்காக காத்திருக்கலானாள்.
இந்நிலையில்
ராம்சரண் ஒரு வார காலம் ப்ராஜெக்ட் விஷயமாக மொரிசியஸ் சென்றான். வழக்கம் போல் வார
இறுதியில் ஸ்ரீ
லட்சுமியின் இல்லம் வந்த ருக்மணி,
"லட்சுமி
உன் கிட்ட ஒரு முக்கியமான விஷயம் சொல்லணும் ..." என்றார் மகிழ்ச்சியாக.
" சொல்லுமா
..."
"நம்ம
குட்டிக்கு (ராமலட்சுமி) ஒரு நல்ல வரன் வந்திருக்கு
..... இந்த வார கடைசில அவங்களை பொண்ணு பார்க்க வர
சொல்லலாம்னு இருக்கேன்... அதுக்குள்ள மாப்பிள்ளை வந்துடுவாரு இல்ல ...."
என்றவரிடம் வரன் குறித்த விபரங்கள் அனைத்தையும் தெரிந்து கொண்டவள்
"உனக்கு
யாரும்மா இந்த வரனை சொன்னது ... ஏதாவது மேட்ரிமோனில பார்த்தியா...."
என்றாள் ஆர்வமாய்.
"இல்ல
லக்ஷ்மி ... கல்யாண தரகு வேலை பாக்குறாங்களே காமாட்சி அக்கா ... அவங்க தான்
சொன்னாங்க ..."
"ஓ...."
என்றவள் மேற்கொண்டு சில தகவல்களை பேசிக் கொண்டிருக்கும் போது அருணாவின் குழந்தை லட்சுமியின் அறைக்குள் ஓடி வர, அதனைப் பிடிக்க பின் தொடர்ந்து வந்த அருணா,
"கல்யாணத்தை
பத்தி பேசிக்கிட்டு இருக்கீங்க... யாருக்கு கல்யாணம்
அண்ணி ..." என்றாள் விஷயத்தை அறிந்து கொள்ளும் நோக்கில் .
ஸ்ரீலக்ஷ்மி
வெள்ளந்தியாக அனைத்தையும் பகிர, விஷயத்தை அறிந்து கொண்டவள்
"மாப்பிள
போட்டோ இருக்கா ..." என்றாள் லேசான புன்னகையோடு.
"ம்ம்...
ஜாதகத்தோட அனுப்பி இருக்காங்களே ..."
"எங்க
... காட்டுங்க பார்க்கலாம் ..." என்றபடி ருக்மணியின்
அலைபேசியை வாங்கி மாப்பிள்ளை வீட்டார் அனுப்பி இருந்த
ஜாதகம், பயோடேட்டா, போட்டோ என
அனைத்தையும் பொறுமையாக பார்த்தவள்,
"மாப்பிள்ளை
நல்லா தான் இருக்காரு .... நல்லா படிச்சி நல்ல உத்தியோகத்துலயும் இருக்காரு...
நம்ம ராமலட்சுமிக்கும் பொருத்தமா தெரியறாரு... அதோட உள்ளூர்லயே
மாப்பிள்ளை கிடைச்சது நல்ல விஷயம் ஆச்சே ..." என்றாள் அருணா இல்லாத மகிழ்ச்சியை இழுத்து பிடித்து.
அவளை பூன்முறுவலோடு
பார்த்து ருக்மணி பெருமையாக தலையசைக்க,
"சரி,
வரேன் அத்தை ..." என தன் குழந்தையை அள்ளிக் கொண்டு அவள் இடத்தை காலி செய்ததும்,
"உனக்கு
பைத்தியமா லக்ஷ்மி ... எதுக்கு எல்லா விஷயத்தையும் அருணா கிட்ட சொன்ன.... அருணாவை
பத்தியும் உன் மாமியார பத்தியும் உனக்கு நல்லா
தெரியுமில்ல ..." என ருக்மணி கடிந்து கொள்ள ,
"அம்மா...
புரியாம பேசாத .... நீ எப்படியும் என் வீட்டுக்காரர் கிட்ட எல்லாத்தையும்
சொல்லத்தான போற .... அவருக்கு தெரிஞ்சா நிச்சயம் என்
மாமியாருக்கும் நாத்தனாருக்கும் தெரிய வரும்மா…”
"அதுவும்
சரிதான் .... ஆனா ஒரு விஷயம் தான் என் மனச உறுத்திக்கிட்டே
இருக்கு லட்சுமி ... உன் வீட்டுக்காரர் அடிப்படைல ரொம்ப
நல்ல மனுஷன் , பொறுப்பான மனுஷன்.... அதுல அவரை குத்தமே சொல்ல முடியாது.... ஆனா இப்படி பொறுப்பே இல்லாம, சதா பொறாமை பட்டு சண்டை போடற அம்மாவையும்
தங்கச்சியும் அவரு என்னைக்கு தான் புரிஞ்சுக்க போறாரோ .... நீயாவது எடுத்து சொல்லக் கூடாதா ...." என்றார் ருக்மணி தன் நீண்ட நாள் ஆதங்கத்தை கொட்டி.
"அம்மா
.... நீ ஒரு விஷயத்தை சரியா புரிஞ்சுக்கல .... நீ
எவ்ளோ எடுத்துச் சொல்லியும் அப்பாவை உன்னால திருத்த முடிஞ்சுதா.... இல்லையே.. முன்னெல்லாம்
நீ எது சொன்னாலும் பதிலுக்கு சண்டை
போடுவாரு இப்ப பதில் பேசாம அடங்கி போறாரு அது தான் வித்தியாசம் .... மத்தபடி இப்ப
வரைக்கும் அவர் திருந்தல ... உன்னால அவரை திருத்த முடியல இனியும் அவர் திருந்தவும்
மாட்டாரு...
எனக்கு பிரசவ வலி வந்து ஹாஸ்பிடல்ல சேர்த்ததும் என் வீட்டுக்காரர் உனக்கு போன் பண்ணி சொன்னாரு... பொறுப்பான அப்பாவா இருந்திருந்தா உன் கூடவே ஓடோடி ஹாஸ்பிடலுக்கு வந்திருக்கணும் ...
சரி
ஹாஸ்பிடலுக்கு வரலன்னாலும், என் வீட்டுக்காரருக்கு ஒரு போன் பண்ணி சம்பிரதாயத்துக்காவது விசாரிச்சு இருந்திருக்கணும்…. ஆனா அப்பா எதுவுமே
செய்யலையே ....
அதுக்கு என்
வீட்டுக்காரர் உன் அப்பா ஏன் ஹாஸ்பிடல்க்கு வந்து உன்னை பாக்கலனு என்கிட்டயும் கேட்கல ...
உன்கிட்டயோ அப்பா கிட்டயோ அவரு கோவமும் படல... அதுதான்
அவரோட சுபாவம் ...
நம்ம வீட்ல அப்பா எப்படியோ, இங்க என் மாமியாரும் நாத்தனாரும் அப்படித்தான் .... அவங்களையெல்லாம்
செல்லு செல்லா செதுக்கினாலும் திருத்த முடியாது .....
ஆதிகாலத்துலயே
என் மாமனார் ஸ்ட்ரிக்ட்டா
இருந்து தாயும் மகளையும் கண்டிச்சி கட்டுக்குள்ள வச்சிருந்தா இன்னைக்கு எல்லாம் சரியா இருந்திருக்கும் ...
ஆனா ஏனோ அவரு அதை செய்யாம
விட்டுட்டாரு... அஞ்சுல வளையாதது ஐம்பதுல வளையாது .... இனிமே அவங்கள திருத்த
முயற்சி பண்ணா அனாவசிய பிரச்சனை வரும் .... நமக்கு
தேவையில்லாத மன உளைச்சல தான் அது கொடுக்கும் ... அதனால தான் என்
மாமனாரும் வீட்டுக்காரரும் அவங்கள கண்டுக்காம போறாங்க... அவங்களே அப்படி போகும்
போது நான் மட்டும் என்ன பண்ண முடியும் .... நானும் கண்டுக்காம இருக்கேன் ...
தேறாத கேசுன்னு
என் வீட்டுக்காரர் அவங்களை தண்ணி தெளிச்சு விட்டதுக்கு
அப்புறமும் நான் அவங்களை பத்தி அவர்கிட்ட பேசினா
எனக்கும் அவருக்கு தான் அனாவசியமா சண்டை வரும் .... அதனால தான் நான்
அவர்கிட்ட எதுவுமே பேசறது இல்லம்மா ..." என்ற
நீண்ட விளக்கத்தை கொடுத்த மகள்,
"இன்னொரு
விஷயத்தையும் நீ புரிஞ்சுக்கணும் .... பொண்ணு பாக்க வர்றத இப்ப சொல்லாம விட்டாலும்
நிச்சயம் பண்ணும் போது சொல்லித்தானே ஆகணும் ... அப்ப
பல கேள்விகள் என் மாமியாரும், நாத்தனாரும்
கேப்பாங்க.... அப்ப பதில் சொல்ல முடியாம ரொம்ப அசிங்கப்படுவோம் அதான் இப்பவே எல்லாத்தையும் சொல்லிட்டேன் ....."
"நீ
சொல்றதும் ஒரு விதத்துல சரிதான் ....எப்படியும்
நிச்சயம் பண்ணும் போது இவங்க எல்லாரையும் கூப்பிட்டு தானே ஆவணும் ..." என்றவர் பெருத்த நிம்மதியோடு விடை பெற்றார்.
அன்றிரவு
ராம்சரணுடன் அலைபேசியில் பேசும் பொழுது ருக்மணி சொன்ன தகவல்கள் அனைத்தையும்
லட்சுமி பகிர,
"சாரி
லட்சுமி, இங்க ப்ராஜெக்ட்ல நடந்த ஒரு சிக்கலால என்னோட
ரிட்டன் ட்ராவல் டேட் தள்ளிப் போய் இருக்கு .... அதனால என்னால உன் தங்கச்சியை பொண்ணு பாக்க வரும் போது உன் கூட வர முடியாது
..." என்றான் மெய்யாகவே வருந்தி.
"ம்ச்....
என்னங்க இப்படி ... நீங்க எப்படியும் வந்துடுவீங்கன்னு ரொம்ப நம்பிக்கையா
அம்மாகிட்ட சொல்லி அனுப்பினேன் .... தெரியுமா ..."
என விசனப்பட்டவளிடம்,
"லட்சுமி..... பொண்ணு பாக்க வர்றது ஃபர்ஸ்ட் ஸ்டேஜ்… அதுக்கு நானோ நீயோ முக்கியம் இல்ல .... பொண்ணும் பையனும் ஒருத்தரை ஒருத்தர் பார்த்து புடிச்சிருக்குனு சொல்லணும் அதுதான் முக்கியம் ... அதனால என்னை எதிர்பார்க்காம உங்க அம்மாகிட்ட ஆக வேண்டியதை பார்க்க சொல்லு, நானும் அவங்களுக்கு போன் பண்ணி சொல்றேன் ...." என்றவனின் சமாதானம், ஓரளவிற்கு லட்சுமிக்கும் சரியாக பட
"சரிங்க
..." என முடித்தாள் அரைகுறை மனநிலையில்.
அருணாவிற்கு
விஷயம் தெரியும் என்பதால், அன்று நடைபெறப் போகும் பெண் பார்க்கும்
படலத்திற்கு அருணாவை அழைத்தாள் லட்சுமி. வழக்கம் போல் அவள் ஏதேதோ காரணங்கள் சொல்லி
மறுக்க, வற்புறுத்த மனமில்லாமல் லட்சுமி மட்டும் தனியாக குழந்தையோடு தாய் வீட்டிற்கு கிளம்பிச் சென்றாள்.
அங்கு அமைதியாக
அதே சமயத்தில் அழகாக நடந்தேறியது ராமலட்சுமியை பெண் பார்க்கும் வைபவம்.
ராம்சரண்
அளவிற்கு பொருளாதார நிலையில் உயர்ந்த இடம்
இல்லை என்றாலும், ருக்மணியின் குடும்ப
சூழ்நிலை விட சற்று மேல் தட்டு மக்களாகத்தான் இருந்தனர் மாப்பிள்ளை வீட்டார்.
ராமலட்சுமியை போல் அவளைப் பெண் பார்க்க வந்திருக்கும் சதீஷும் பொறியியல் முடித்துவிட்டு ஒரு தனியார் நிறுவனத்தில், ஐந்து இலக்க சம்பளத்தில் பணியில் இருந்தான் ..
பார்ப்பதற்கு
ஓரளவிற்கு நன்றாகவும் இருந்தான். கேட்ட கேள்விகளுக்கு அமைதியாக அலட்டல்
இல்லாமல் அவன் பதிலளித்த விதம், ஸ்ரீலட்சுமி உட்பட
அனைவரையும் கவர, தனியாக ராமலட்சுமியை அழைத்து ருக்மணி,
அவள் விருப்பத்தைக் கேட்க, அவளும்
சம்மதம் சொல்ல, மனம் மகிழ்ந்து போனார் ருக்மணி.
அதோடு அடுத்த
முகூர்த்த தினத்திலேயே மாப்பிள்ளை வீட்டார்
நிச்சயதார்த்தம் வைத்துக் கொள்ள விரும்புவதாக சொல்ல, ஸ்ரீலக்ஷ்மி அடைந்த ஆனந்தத்திற்கு அளவே இல்லாமல் போனது.
தங்கைக்கும்
நல்லபடியாக திருமணம் நடந்தேறி விட்டால்,
தன் தாய் ருக்மணி இத்துணை காலம் பட்ட துன்பத்திற்கு விடிவு காலம்
பிறந்து விடும் என்ற மன நிம்மதியில் வீடு திரும்பியவள் நடந்த அனைத்தையும் ராம்
சரணிடம் அலைபேசியில் பகிர செய்தி கேட்டு அவனும் மனம்
மகிழ்ந்து போனான்.
அதனைத் தொடர்ந்து இரண்டு நாட்கள் அமைதியாக கழிய, திடீரென்று ஒரு நாள் ருக்மணி லட்சுமியை அலைபேசியில் அழைத்து
"லட்சுமி
.... நம்ம குட்டிய பொண்ணு பாத்துட்டு போனவங்க, ஜாதகப்
பொருத்தம் சரி இல்லனு சொல்லி கல்யாணம் வேண்டாம்னு
சொல்றாங்கம்மா ...." என்றார் கமரிய குரலில்.
" என்னமா....
திடீர்னு இப்படி சொல்றாங்க ..." என்றாள் லட்சுமி அதிர்ச்சியாக.
"அதாம்மா
எனக்கும் புரியல ... ஜாதகம் பொருந்தி வந்திருக்குன்னு சொல்லித்தான் பொண்ணு
பார்க்கவே வந்தாங்க... ஆனா இப்ப இப்படி மாத்தி பேசுறாங்க லட்சுமி.... ஒண்ணுமே புரியல ..." என்றார் ருக்மணி ஆற்றாமையாக.
"நீ
மாப்பிள்ளை வீட்ல ,பொண்ணு பாக்க வர்றதுக்கு முன்னாடி ஜாதக
பொருத்தம் பொருந்தி இருக்குன்னு சொன்னீங்களே இப்ப ஏன் மாத்தி பேசுறீங்கன்னு
கேட்டியா ...."
"கேட்டம்மா....
அன்னைக்கு வேற ஏதோ புது ஜோசியர் பார்த்து நல்லா
இருக்குன்னு சொல்லிட்டாராம் .... இன்னைக்கு ஊருக்கு போயிருந்த அவங்க குடும்ப ஜோசியர் கிட்ட காட்டி கேட்கும் போது, இந்த
ரெண்டு ஜாதகத்தையும் சேர்க்கக்கூடாது .... அதையும்
மீறி ரெண்டு பேருக்கும் கல்யாணம்
பண்ணீங்கன்னா ரெண்டு பேர்ல ஒருத்தருக்கு நிச்சயம் ஆயுள் கண்டம் இருக்குன்னு சொன்னாராம்
.... பையனோட அம்மா பார்வதி சொல்லி வருத்தப்பட்டாங்க .... அதுக்கு மேல பேச முடியாம
போனை வச்சுட்டேன்ம்மா ...." என்றார் மனம் கலங்கி.
மனம் வருந்திய
ஸ்ரீலட்சுமி, அன்று
இரவு ராம் சரணிடம் அலைபேசியில் பகிர,
"இவங்க
எல்லாம் மனசுல என்ன நினைச்சுகிட்டு இருக்காங்க ... அன்னைக்கு பொண்ணு பாக்க வரும்
பொழுது அடுத்த முகூர்த்தத்திலேயே நிச்சயம் பண்ணி உடனே
கல்யாணம் பண்ணனும்னு சொன்னாங்க ... இன்னைக்கு ஜாதகம் சரியில்லைன்னு பின்
வாங்கறாங்க ... இர் ரெஸ்பான்சிபில் இடியட்ஸ் ..."
என்று வாய்க்கு வந்தபடி அவன் வசை பாட, அவனை சமாதானம்
செய்வதற்குள் லட்சுமிக்கு போதும் போதும் என்றாகிப்போக
"சரி
விடு .... இந்த மாதிரி மாத்தி மாத்தி பேசுறவங்க வீட்டு பையனை ராமலட்சுமி கல்யாணம் பண்ணிக்கிட்டு போனா எதிர்காலத்துல நிச்சயம்
கஷ்டப்படுவா... எல்லாம் நன்மைக்குனு நினைச்சுக்கோ
..." என்றான் தன்னைத்தானே தேற்றிக்கொண்டு.
அதுக்கு மேல்
ஓரிரு தினங்கள் லட்சுமிக்கு லேசான மன அழுத்தத்தோடு கழிய,
மகளைப் ஒரு
வாரத்திற்கு மேல் பிரிந்திருந்தது ராம் சரணுக்கு தணல் மேல் நின்ற தவிப்பை தர, எடுத்துக்கொண்ட பணியை துரிதமாக
முடித்துவிட்டு அந்த வார இறுதியின் அதிகாலையில் ஆர்வமும் உற்சாகமுமாய் வீடு வந்து சேர்ந்தான்.
அந்த ஒரு
வாரத்திற்கான பிரிவை தன் மகளுடன் அவன்
கழிக்க தொடங்க, குழந்தையும் அதே எண்ணத்தில்
தந்தையுடன் கூடி குலவ, அதனை கீழ்க்கண்ணால் கண்ட அருணா உடனே
ஹரிஷ் ஊருக்கு சென்று இருப்பதாக சொல்லி, தன் குழந்தைக்காக
ஹோமியோபதி மருத்துவரை சந்திக்க ராம் சரணை தன்னோடு அழைத்துச் செல்ல, அதனைக் கண்டு ஸ்ரீலட்சுமி மனம் குமையும் போது, ருக்மணியிடமிருந்து அவளுக்கு அழைப்பு வந்தது.
திடீரென்று
மாப்பிள்ளை வீட்டார் ஜாதக பொருத்தம் சரி இல்லை என்று பின் வாங்கியது ருக்மணியை மனதளவில் வெகுவாக
பாதித்திருப்பதை அறிந்தவள்,
"சொல்லுமா
.." என்றாள் வாஞ்சையாக .
"ஏனோ
மனசே சரியில்ல லட்சுமி ...வீட்ல இருக்கவே பிடிக்கல ..."
"அம்மா
... எனக்கும் மனசே சரி இல்ல ... வர்ற புதன் கிழமை கிராமத்துல இருக்கிற
குலதெய்வ கோவில்ல குழந்தைக்கு முடி இறக்க போறோம்
இல்லையா.... ஏனோ அது நல்லபடியா நடந்து முடியும்னு
ஒரு சின்ன பயம் உள்ளுக்குள்ள உறுத்திக்கிட்டே இருக்கும்மா..... அவரு
காலையில தான் ஊர்ல இருந்து வந்தாரு .... அவரோட பிள்ளையார் கோவிலுக்கு போயிட்டு வரலாம்னு நினைச்சுக்கிட்டு இருந்தேன்... ஆனா
அதுக்குள்ள அருணா அவரை ஹாஸ்பிட்டலுக்கு கூட்டிகிட்டு போய்ட்டாம்மா.... ஒன்னு
செய்வோமா நாம ரெண்டு பேரும் சித்தி விநாயகர் கோவிலுக்கு போயிட்டு வரலாம்
வர்றியா ..." என லட்சுமி அழைப்பு விடுக்க ,
"சரிம்மா
.... நான் ஆட்டோல அங்க வரேன்... அங்கிருந்து ஒட்டுக்க போலாம் ..."
என முடித்தார் ருக்மணி.
ராம்சரண், அருணா மருத்துவமனைக்கு சென்றிருக்க,
வழக்கம் போல் கற்பகம் தன் அறையை விட்டு வெளியே வராமல்
தொலைக்காட்சியிலேயே தஞ்சம் அடைந்திருக்க, வீட்டு
வேலைக்காரர்களிடம் சொல்லிவிட்டு லட்சுமி தன் குழந்தையோடு ருக்மணியுடன் கோவிலுக்கு
கிளம்பி சென்றாள்.
முழு முதற்கடவுளான
ஆனைமுக கணேசனை பெண்கள் இருவரும் மனம் உருக பிரார்த்தனை செய்துவிட்டு, கோவில்
பிரகாரத்தை வலம் வந்ததும் அங்கிருந்த தூணுக்கு அருகில் சற்று நேரம் அமர்ந்து இளைப்பாறினர்.
அப்போது வழக்கம்
போல் ருக்மணி தன் மன கவலைகளை லட்சுமியிடம் பகிர்ந்து கொண்டிருக்கும் போது , எதேச்சையாக
லட்சுமியின் பார்வை நவக்கிரகத்தை வலம் வந்து கொண்டிருந்த சிறு பெண்ணின் மீது
படவும், அந்தப் பெண் அணிந்திருந்த கவுனின் அகன்று விரிந்த
கைப்பகுதி, எரிந்து கொண்டிருக்கும் தீபத்தில் பட்டு
தீப்பிடிக்கவும் சரியாக இருக்க, அங்கிருந்தவர்கள் அதனைக்
கண்டு செய்வதறியாது திகைத்து நிற்கும் போது,
தன் கையில் குழந்தைக்காக வைத்திருந்த தண்ணீர் பாட்டிலை எடுத்துக்கொண்டு
ஓடிப்போய் அந்த சிறு பெண்ணின் தீப்பிடித்த ஆடையின் மீது
வேகமாக ஊற்றி நெருப்பை அணைத்தாள் லட்சுமி.
நல்ல வேளையாக
அந்தப் சிறு பெண் அணிந்திருந்தது லேசான பருத்தி வகையைச் சார்ந்த துணி என்பதால், நெருப்பு வேகமாக பரவாமல் வெறும்
கைப்பகுதியில் மட்டும் தீப்புண் ஏற்பட்டிருக்க,
வலி தாங்காமல் அழும் அந்தப் பெண்ணை அவள் தேற்ற முற்படும் போது ,
எங்கிருந்தோ அந்தப் பெண்ணின் பாட்டி
ஓடி வந்து அந்த சிறிய பெண்ணை அணைத்துக் கொண்டு ஆறுதல் கூறி
தேற்றினார்.
அந்தப் பெண்ணின்
பாட்டி வேறு யாரும் அல்ல .... ராமலட்சுமிக்கு வரன் பார்த்துக் கொடுத்த கல்யாண தரகு
வேலை செய்யும் காமாட்சி தான்.
லட்சுமியைக்
கண்டதும் அவர் முகம் சற்று வாடி, பிறகு கண்கள் பனிக்க, உடனிருந்த ருக்மணியை கண்டதும்,
அவர் கண்களில் கண்ணீர் பிரவாகம் எடுக்க, தலை குனிந்து கொண்டார்.
உடனே ருக்மணி,
"காமாட்சி
அக்கா ... அழாதீங்க ... அதான் குழந்தைக்கு ஒன்னும் ஆகாம அந்த கணேசன் காப்பாத்திட்டானே
...." என ஆறுதல் கூறும் போது அமைதியாக இருந்தவர், தன் மகள் வந்ததும், தீக்காயம் பட்ட தன்
பேத்தியை அவளோடு அனுப்பிவிட்டு,
"ருக்மணி,
உன்கிட்ட ஒன்னு சொல்லணும் ..." என்றார் நயந்து.
"என்னக்கா
சொல்லுங்க ..."
"நம்ம
ராமலட்சுமியை பொண்ணு பாத்துட்டு புடிச்சிருக்குன்னு
சொல்லி எல்லாத்தையும் பேசி முடிச்சுட்டு இப்ப , ஜாதகம்
சரியில்லன்னு மாப்பிள்ளை வீட்ல கல்யாணத்தை நிறுத்திட்டாங்க இல்லையா ..."
"ஆமாங்கா....
நானே அத பத்தி உங்ககிட்ட சொல்லனும்னு நினைச்சுக்கிட்டு இருந்தேன் ... வேற
வரன்....." என்ற ருக்மணியின் பேச்சை இடைவெட்டி ,
"நான்
ராமலட்சுமிக்கு எத்தனை வரன் கொண்டு வந்தாலும், இப்படித்தான்
ஏதாவது ஒரு காரணம் சொல்லி அது பாதியிலேயே தட்டி போயிடும் ..." என்றார்
வித்தியாசமான குரலில்.
"ஏன்
அப்படி சொல்றீங்க .... புரியலையே .... என்ன பிரச்சனை ..." என லட்சுமி
அதிர்ச்சியாக கேட்க
"பிரச்சனை
என்கிட்டயோ, நம்ம ராமலட்சுமிகிட்டயோ இல்ல .... பிரச்சனை உங்க வீட்ல இருக்கு ..."
இப்பொழுது
ருக்மணியும், லட்சுமியும்
புரியாமல் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டுவிட்டு பிறகு
காமாட்சியை ஆழ்ந்து நோக்க ,
"ருக்மணி, நான் இந்த விஷயத்தை உன்கிட்ட சொல்லக்கூடாதுனு தான் இருந்தேன்.... ஆனா உன் பொண்ணு என் பேத்தி உயிரை காப்பாத்தி இருக்கா… அதுவும் சாமி சன்னதில... இதுக்கு மேல இந்த விஷயத்தை மறச்சேன்னா, நான் மனுஷியே இல்ல..” என்ற பீடிகையோடு தொடங்கியவர் ,
"நம்ம
ராமலட்சுமியை பொண்ணு பார்க்க வந்துட்டு போனாங்களே , அவங்க
வீட்டுக்கே போய், அந்தப் பையனோட அம்மா பார்வதியை
பார்த்து, ராமலட்சுமியை பத்தியும் உங்க குடும்பத்தை
பத்தியும் இல்லாததையும் பொல்லாததையும் லட்சுமியோட நாத்தனார்
அருணா சொல்லி இருக்கா” என்றதும் ருக்மணி, லட்சுமி இருவரும் அதிர்ச்சியில் உறைய,
"அருணாவுக்கு
எப்படி மாப்பிள்ளை வீட்டு அட்ரஸ் கிடைச்சதுன்னு தெரியல
.... ஆனா தேடி போய், ஒரு பொண்ணை பத்தி எவ்ளோ
தரக்குறைவா சொல்ல முடியுமோ அவ்ளோ தரகுறைவா ராமலட்சுமியை பத்தி
சொல்லி இருக்கா ... மொட்ட கடுதாசிக்கு மரியாதை இல்லங்கிறதால , தான் யாரு என்னன்னு தெளிவா அறிமுகப்படுத்திக்கிட்டதுக்கு அப்புறம் தான்
இந்த வேலையே பார்த்திருக்கா ...
கண்ட கண்ட ஆம்பளைங்களோடையும் அந்த ராமலட்சுமி சுத்துவா ... ஒண்ணுக்கு
ரெண்டு அபார்ஷன் செஞ்சிருக்கானு... என்னென்னமோ அளந்து விட்டிருக்கா ...."
காமாட்சி
சொல்வதை கேட்க கேட்க ஸ்ரீலக்ஷ்மி, ருக்மணியின் சித்தம் கலங்குவது போல் ஆகிப் போக,
"அருணா
சொன்னது உண்மையானு என்னைய கூப்பிட்டு அந்த பையனோட அம்மா பார்வதி விசாரிச்சாங்க...
இல்ல... அருணா
சொன்னது சுத்த பொய் .... அவங்க குடும்பம் ரொம்ப நல்ல குடும்பம் அந்த ரெண்டு
பொண்ணுங்களும் அவ்ளோ நல்ல பொண்ணுங்கனு
நான் எவ்வளவோ எடுத்து சொன்னேன் .... ஆனா அவங்களுக்கு அதுல திருப்தி
இல்ல ...
மெனக்கெட்டு அந்த வீட்டுல பெண் எடுத்த சம்பந்தி வீட்டுக்காரங்க வந்து சொல்லிட்டு போறாங்கன்னா, ஒண்ணுமே இல்லாமையா இருக்கும்னு வருத்தப்பட்டவங்க ... கடைசில, அக்கா.... என் பையனுக்கு வேற வரன் பாருங்க .... அந்த பொண்ணு நல்லவளாவே இருந்தாலும், இனிமே அந்த பொண்ண பாத்தா என் மனசுல இந்த எண்ணம் தான் உறுத்திகிட்டே இருக்கும் .... அது அந்த பொண்ணுக்கும் நல்லதில்ல எங்க குடும்பத்துக்கும் நல்லதில்லை .... ஜாதகம் பொருந்தலன்னு நாசூக்கா அவங்க கிட்ட சொல்லி கல்யாணத்தை நிறுத்திடறேன்... அதையே ஒரு whatsapp மெசேஜா உங்களுக்கும் அனுப்பிடறேன் .... நாளைக்கு பொண்ணு வீட்ல ஏதாச்சும் கேட்டாங்கன்னா, நீங்களும் அந்த மெசேஜையே காட்டிடுங்க அக்கானு சொன்னாங்க..."
நடந்ததை
காமாட்சி சொல்ல சொல்ல ருக்மணி, ஸ்ரீலட்சுமி இருவரும் சப்த நாடியும் அடங்கிப் போய் உறைந்து விட்டனர்.
பிறகு சூழ்நிலை
உணர்ந்து சுதாரித்த லட்சுமியின் முகம் கோபத்தில் செந்தணலாய் சிவக்க,
"நான் அந்த வீட்டோட மருமகங்கிறதால என் மாமியார் நாத்தனாரோட குடைச்சலயும், குத்துற பேச்சையும் இவ்ளோ நாளா பொறுத்து போனேன்... ஆனா இப்ப அவங்களோட வன்மம் என் தங்கச்சி வாழ்க்கையை குறி வைக்கிற அளவுக்கு வளர்ந்து இருக்கு .... இனிமே நான் வாய மூடிக்கிட்டு வேடிக்கை பார்த்தேன்னா என் தங்கச்சி வாழ்க்கை நாசமா போயிடும்... இன்னைக்கே எல்லார் முன்னாடியும் எல்லாத்தையும் உடைச்சு பேசி இதுக்கு ஒரு முடிவு கட்டறேன் பாரு ..." என ஆக்ரோஷமாக அவள் சூளுரைத்துக் கொண்டிருக்கும் போது, பதறிய காமாட்சி ருக்மணியை பார்த்து
"இங்க
பாரு ருக்மணி .... உன் பொண்ணு பேசறது எல்லாம் பார்த்தா, என்னை
பஞ்சாயத்துல நிறுத்திடுவா போல தெரியுது ...
இந்த மாதிரி
எல்லாம் பிரச்சனை வரும்னு தெரிஞ்சு தான் நான் உங்க கிட்ட சொல்லாம இருந்தேன் .... ஆனா இன்னைக்கு நடந்த விஷயத்தால
மனசு கேட்காம சொல்லிட்டேன்.... உங்க சம்பந்தி வீட்டு ஆளுங்கள நம்பாதீங்க ....
அவங்க கூட இருந்தே குழி பறிக்கிறாங்கனு உங்களுக்கு தெரியப்படுத்த தான் சொன்னேனே
ஒழிய வேற எதுக்காகவும் சொல்லல…
ஆனா இப்ப உன் பொண்ணு
பேசறத பார்த்தா, என்னோட
இத்தனை வருஷ தொழிலுக்கும் மானம் மரியாதைக்கும் வேட்டு வச்சிடுவா போல இருக்கு ...
இந்த தொழிலுக்கு
நம்பகத்தன்மை ரொம்ப முக்கியம் .... இப்ப உன் பொண்ணு போய் பஞ்சாயத்து வச்சா, நிச்சயமா உங்க வீட்டு ஆளுங்க
என்னையும் சபைல நிப்பாட்டிடுவாங்க ...
அதோட இந்த
விஷயம் பொண்ணு பார்த்துட்டு போன அந்த பையன் வீட்டுக்கு தெரிஞ்சா பிரச்சனை இன்னும்
பெருசா ஆயிடும் ...
அந்த பையனோட
அம்மா பார்வதி ஜாதகம்
பொருந்தலன்னு தான் கல்யாணத்தை பையன்
வீட்ல நிறுத்தி இருக்காங்கன்னு சொல்லணும்னு என்கிட்ட கண்டிப்பா சொல்லிட்டாங்க ...
இப்ப நான்
இப்படி சொன்னது அவங்களுக்கு தெரிய வந்தா,
அதுக்கப்புறம் என்கிட்ட வரன் பார்க்க
யாரும் வர மாட்டாங்க ... இவ்ளோ இன்டர்நெட் இமெயில் காலத்துல
கூட என்னை தேடி வராங்கன்னா, என் மேல வச்சிருக்க
நம்பிக்கைல தான் வராங்க ....
நீங்க உஷாரா
இருக்கணும்னு தான் நான் சொன்னேன் ... மத்தபடி உங்க வீட்ல நீங்க என்ன சண்டை
வேணும்னாலும் போட்டுக்கங்க
ஆனா என்னைய மட்டும் இந்த விஷயத்துல இனிமே இழுக்காதீங்க
....
உங்க வீட்டு
ஆளுங்க யார் வந்து கேட்டாலும், ஜாதக பொருத்தம் சரி இல்லாம தான் இந்த கல்யாணம் நின்னு போச்சுன்னு
சொல்லுவேன் ...
என் மேல
கோவிக்காதீங்க .... என்னால இதுக்கு மேல உங்களுக்கு உதவ முடியாது ...." என்று
முடித்தவர் விறுவிறுவென்று சென்று விட,
உறைந்து நின்றனர் தாயும் மகளும்.
ஸ்ரீ-ராமம்
வருவார்கள்.....
Arunakku yen intha ketta ennam, enna velai parthu vachu irukka.
ReplyDeleteinnum arunavoda aatam iruku da...
DeleteInteresting 💕💕💕
ReplyDeletethanks ma
DeleteSupperrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrr
ReplyDeletethanks ma
Deleteஇவளா என்ன பண்றது,,பொறுமையாகவும் ரொம்ப இருக்க கூடாது
ReplyDelete