ஸ்ரீ-ராமம்-22

 அத்தியாயம் 22 


என்ன லட்சுமி இது.... அருணா ஏதோ சொல்றானு நீயும் சீமந்தம் வேண்டாம்னு சொல்ற .... என்ற ராம்சரணிடம்,

"அண்ணேநானா எதுவும் சொல்லல... அந்தக் கோவில்ல பூஜை செய்யற ஐயரு சொன்னாரு.... அதைத்தான் நான் சொன்னேன் ..." என்றாள் அருணா பொங்கிய கோபத்தை மறைத்து. 

அந்த ஐயரு சொன்னதுக்காக  ஒன்னும் நான் சீமந்தம் வேண்டாம்னு சொல்லல .... சுசிலா அத்தை தங்கமானவங்க..... அவங்க நம்மள விட்டு போய் ஒரு வருஷம் கூட ஆகல ... அதுக்குள்ள நம்ம வீட்ல விசேஷத்தை வைக்கணுமானு ஒரு சின்ன எண்ணம் உருத்திக்கிட்டே இருந்துச்சு... அத அம்மாகிட்டயும் சொன்னேன் ... ஆனா அவங்க  கேட்கல... இப்ப கோவில்ல பூஜை செய்ற ஐயரும் சொல்லிட்டாரு... அதனால தான் சீமந்தம் வேணாம்னு சொல்றேன் ..." என்றவள் மெய்யாகவே ருக்மணியிடம் சுசீலாவின் மறைவை குறிப்பிட்டுச் சீமந்தத்தை மறுத்திருந்தாள்.

 

ஸ்ரீலட்சுமியின் எதிர்பாராத இந்தபதிலில் ஆடி தான் போனாள் அருணா .

 

சீமந்தம் செய்துதான் ஆக வேண்டும் என ஸ்ரீலட்சுமி ஒற்றை காலில் நிற்பாள்எழவு விழுந்த வீட்டில் ஒரு வருடத்திற்குள் கும்மாளமா ....

எனக்கும் என் புகுந்த வீட்டு மனிதர்களுக்கும் இந்த வீட்டில் மரியாதை இல்லை ....

 என்று அழுது புலம்பி நாடகம் நடத்தலாம் என்றெண்ணி  காய் நகர்த்த காத்துக் கொண்டிருந்தவளுக்கு லட்சுமியின் சேம் சைடு கோல் போட்ட பதில் அறை வாங்கிய உணர்வை தந்ததோடு அவள் சுசீலாவை  தங்கமான பெண்மணி என புகழ்ந்தது வேறு எரிச்சலை மூட்டஎதிர்வினை ஆற்ற முடியாமல், விழி பிதுங்கி நின்றாள்.

"இல்ல லக்ஷ்மி .... வேற யார்கிட்டயாவது இத பத்தி விசாரிச்சு பாக்கலாமா ...." என்றான் ராம் சரண்  ஆவலாக.

 

"வேண்டாங்க...  எனக்கே சின்ன உறுத்தல் இருந்துகிட்டே இருந்தது ... இப்ப ஐயரும் சொல்லிட்டதா அருணா சொல்றா .... இனிமே சீமந்தத்தை பத்தி  பேச வேண்டாமே...."  என்றவள் , அந்த முடிவை சுசிலாவிற்கு செலுத்தும் மரியாதையாக மானசீகமாக கருதிக் கொண்டாள்.

 

லட்சுமியின் பேச்சைக் கேட்டுக் கொண்டே அங்கு வந்த கற்பகம்,

 

"சரண் .... சீமந்தங்கிறது ஒரு சடங்கு அவ்ளோ தான் அது எல்லாரும் செஞ்சுக்கணும்னு ஒன்னும் அவசியம் இல்லை .... இவ்ளோ ஏன் நம் அருணாவுக்கு ஒன்பதாம் மாசத்துல தான் சீமந்தம் வைக்கணும்னு சொன்னதாலஅதுக்கு நாள் குறிச்சு வச்சிருந்தோம்.. ரெட்டை  குழந்தைங்கிறதால முன்னாடியே  பிரசவம் ஆயிடுச்சு.... ஒண்ணுத்துக்கு ரெண்டு குழந்தை நல்லா தானே பொறந்திருக்கு.... ரொம்ப இதை பத்தி எல்லாம்  ஆராய்ச்சி  பண்ணாம போய்  வேலையை பாரு டா...."  என்றவரின் பேச்சில் தன் மகளுக்கு  நடக்காத விசேஷத்தை  மருமகளுக்கு நடத்தி விடக்கூடாது என்ற வன்மம் அப்பட்டமாக தெரியஸ்ரீ லட்சுமியின் கண்கள் பனித்து தொண்டை கனக்க,

 

"உன் மாமியாருக்கு உன்னை பிடிக்கலனு  நினைக்காத .... அவங்களுக்கு மருமகங்கிற கதாபாத்திரத்தையே பிடிக்கல .... "  என உளவியலாளர் மணியம்மை உரைத்தது அவள் காதுகளில் ஒலிக்கஎவ்வளவு  சரியாக  சொல்லி இருக்கிறார் என அனுபவரீதியாக அப்போது தான் உணர்ந்தாள் லட்சுமி.

 

அன்றைய பொழுது அதற்கு மேல் இனிமையாக தான் கழிந்தது.

 

அன்றைய இரவின் தனிமையில், அவள் மடியில் தலை வைத்து படுத்திருந்த ராம்சரண் 

 

"நீ சீமந்தத்தை  வேண்டாம்னு சொன்னது எனக்கு என்னவோ மாதிரி இருக்கு லட்சுமி ...." என்று மெய்யாகவே வருந்த

 

"சீமந்தம் செஞ்சுகிறத விட இறந்தவங்க ஆத்மாவோட ஆசீர்வாதம் தான் முக்கியம் .... " என்றாள் அவன் கேசத்தை கோதிக்கொண்டே. 

 

"நீ இப்ப எவ்ளோ அழகா இருக்க தெரியுமா .... நம்ம கல்யாணம் அப்ப மேக்கப் பண்ணின மாதிரி, சீமந்தத்துக்கு உனக்கு பண்ணி பாக்கணும்னு ரொம்ப ஆசைப்பட்டேன் ....நீதான் சீமந்தத்தையே வேண்டாம்னு சொல்லிட்டயே..." என்றான் மனம் ஏற்காமல்  மீண்டும். 

 

அவள் அமைதியாக அவன் முகத்தையே ரசித்துப் பார்க்கஅவனும் விழி விளக்காமல் அவள் முகத்தையே பார்த்து 

 

"உன்னை மாதிரியே அழகா ஒரு பெண் குழந்தை வேணும் ..." என்றான் ஆசையாய்.

 

"உங்கள மாதிரியே பெண் குழந்தை வேணும்...." என்றாள் அவன் நுனி மூக்கை பிடித்து திருகி.

 

"பொதுவா பையன் வேணும்னு தான் சொல்லுவாங்க, ஆனா நீ என்னை மாதிரியே பொண்ணு வேணும்னு சொல்ற ..." என்றான் அவள் கன்னம் கிள்ளி.

 

"பெரிய கண்ணுஷார்க் நோஸ்செப்பு வாய்னு.... நீங்க எவ்ளோ களையா இருக்கீங்க தெரியுமா ... பத்தாததுக்கு சந்தனமும் குங்குமமும் கரெக்டான ஷேட்ல கலந்த கலர் நீங்க... உங்கள மாதிரி ஒரு பெண் குழந்தை பிறந்தா, அவ நிச்சயம் உலக அழகி மாதிரி இருப்பா... அதுக்காக தான் ..." 

 

"அடேங்கப்பா ... இந்த மாதிரி என்னை யாருமே சொன்னதில்ல ..." என்றவனின் கை அனிச்சையாய் தன் தலையை தொட்டுப் பார்க்கஅதில் நான்கைந்து சின்னஞ்சிறு குடுமிகள், குழந்தைகளுக்கு போடுவது போல் போட்டு வைத்திருந்தாள் அவன் மனையாள்.

 

"ஏய், என்னடி இது ..." என மென் புன்னகை பூத்தவன்,

 

"அப்ப பெண் குழந்தை தான் பொறக்கும்னு முடிவே செஞ்சு  எனக்கு ஹேர் டிரஸ்ஸிங்  பண்ண ஆரம்பிச்சிட்டியா...." என்றான் அவளைப் பகுமானமாக அணைத்துக்கொண்டு. 

 

அன்று இரவு முழுவதும் தாயும் மகளும்  உறங்காமல் விடிய விடிய பொருமிக் கொண்டிருந்தனர் .

 

லட்சுமி இரண்டாம் முறை கர்ப்பம் தரித்ததுகடந்த முறை போல்  வெளிநாடு எங்கும் செல்லாமல்  ராம்சரண் அவளை தன் கண்ணுக்குள்ளே வைத்து  பார்த்துக் கொள்வதுபத்தாதற்கு அவன் இல்லாத சமயங்களில் அவளை தாய் போல் பார்த்துக் கொள்ள அன்னம் என்ற வயது முதிர்ந்த செவிலிப் பெண்ணை ஏற்பாடு செய்திருந்தது ..... போன்றவற்றை தாள முடியாமல் தான்சீமந்தத்தை நிறுத்தி ஸ்ரீலட்சுமியின்  கண்களில் கண்ணீர் வரவழைக்க வேண்டும் என்று திட்டம் தீட்டி இருந்தாள் அருணா. 

 

ஆனால் லட்சுமியோ சற்றும் கலங்காமல் , அவள் சொன்னதை அப்படியே ஏற்றுக்கொண்டுசீமந்தம் வேண்டாம் என்று சொல்லிவிட அது  தாய்க்கும் மகளுக்கும் பெருத்த ஏமாற்றத்தை தந்ததோடு  மேற்கொண்டு காய் நகர்த்தத் முடியாமல் தடுமாற்றத்தையும் கொடுத்திருந்தது.

 

செய்தியை அறிந்த ரங்கசாமிவெகுவாக வருந்தி தன்னாலான வரை லட்சுமியிடம் பேசிப் பார்த்தார் , ஆனால் அவள் தன்  முடிவில் பிடிவாதமாக இருக்க , வேறு வழி இல்லாமல் அவள் முடிவை ஏற்றுக் கொண்டார். 

 

ருக்மணிக்கும் வருத்தம் தான். அதே சமயத்தில் மகள் கூறிய காரணங்களும் மறுப்பதற்கு இல்லை என்பதால்அவரும் அவள் போக்கிலேயே விட்டுவிட, மனம் தாளாமல் உயிர் நண்பன் வீராவிடம்இச்செய்தியை பகிர்ந்தான் ராம்சரண். 

 

"மனசுக்கு வருத்தமான விஷயம் தான் இருந்தாலும், லட்சுமியே அப்படி சொல்லும் பொழுது  அதுல நீ வருத்தப்படாத ஒன்னுமே இல்ல ...  சரி, தப்பு , சடங்கு , சம்பிரதாயத்தை எல்லாம் ஒதுக்கி வச்சிட்டு  லட்சுமிக்கு என்ன புடிச்சிருக்கோ அதை செய்டா ..." என்று வீரா முடிக்கமனையாளும் பிடிவாதமாக இருந்ததால் , அதனை மாற்ற முடியாமல்விரும்பாமல்  நாயகனும் விட்டுவிட்டான். 

   

நாட்கள் அழகாக நகர, ஸ்ரீலட்சுமிக்கு 9 ஆம் மாதம் தொடங்கி ஒரு வாரம் ஆகி இருந்தது. 

 

அன்று பௌர்ணமி என்பதால்மாலை ஆறு மணி அளவிலேயே ஒளி பொருந்திய சந்திரன் தன் முகம் காட்ட ஆரம்பித்திருக்கதன் அறையின் சிட் அவுட்டிலிருந்து அதனைப் பார்த்து ரசித்துக் கொண்டிருந்தாள் ஸ்ரீ லக்ஷ்மி.

 

என்றும் இல்லாத திருநாளாகஅந்த நேரத்தில் ராம்சரண் அலுவலகத்தில் இருந்து வீடு திரும்ப, எதிர்பாராத கணவனின் வரவு  ஆகாயத்தின் அம்புலி வெளிச்சத்தை பெண்ணவளின் முகத்தில் விதைக்க, துரிதமாக சென்று அவனை எதிர்கொண்டு வரவேற்க வேண்டும் என்ற எண்ணத்தில், அவள் வேக அடி எடுத்து வைக்கும் பொழுது சுரீர் என்ற மின்னல் வெட்டு அவள் அடி வயிற்றை தாக்கநிலைகுலைந்து போனாள் அந்தப் பாவை.

 

அவள் சுதாரிக்கும் முன்பு மீண்டும் ஒரு முறை அதே போன்று மின்னல் வெட்டு ஒன்று அவள் அடிவயிற்றை தாக்க, உடல் நடுங்கியவள் தட்டித் தடுமாறி படுக்கையில் சென்று அமர்ந்தாள்.

 

அறைக்கதவை திறந்து கொண்டு  நுழைந்தவன்அவள் வயிற்றைப் பற்றிக் கொண்டு தலை குனிந்து அமர்ந்திருந்த விதத்தைப் பார்த்து,

 

" ஏய் லட்சுமி... என்ன ஆச்சு ...."  என்றான் பதற்றத்தோடு.

 

"வலி வந்துடுச்சிங்க ...." என லேசான விசும்பலோடு கமரியக் குரலில் அவள் கூறிய மாத்திரத்தில்மருத்துவமனைக்கு செல்லத் தேவையான துணிமணிகள், மருந்து மாத்திரைகள்இன்னும் பிற முக்கியமாவைகளை  பையில் திணித்துக் கொண்டே, மனையாள் தயாராவதற்கும்  உதவி புரிந்தான்.

 

லஷ்மிக்கு பிரசவ வலி வந்து விட்டது என்ற செய்தியை  அருணாவின் மூலம் அறிந்ததும் உடன் இருந்தால் உதவ வேண்டுமே  என்றெண்ணி  கற்பகம் தன் அறைக்குச் சென்று தலைமறைவாகிவிட்டார்.

 

அருணா மட்டும் அண்ணனுக்கு அட்டெண்டன்ஸ் போடும் விதமாக அவ்வப்போது,

 

"அண்ணேஏதாவது செய்யணுமா .." என்றாள் வெகு சன்னமாக  தான் இருந்த இடத்திலிருந்து ஓரடி கூட நகராமல் .

 

எதிர்பார்ப்பு இருந்தால் தான் ஏமாற்றமும் கோபமும் வரும்.

 

ராம் சரணை பொருத்தமட்டில் தாயும் தங்கையும் சோம்பேறிகள், சாதாரண வேலைக்கு கூட லாய்க்கு அற்றவர்கள் என்ற எண்ணம் இருந்ததால்தன் தாய் அங்கு இல்லாததையோதங்கை நகராமல் நின்று கொண்டு கேள்வி கேட்டுக் கொண்டிருந்ததையோ அவன் கண்டு கொள்ளவே இல்லை.

 

அவனது சிந்தை முழுவதும் தன் மனையாளை மருத்துவமனையில் சேர்க்க வேண்டும் என்ற எண்ணம் மட்டுமே இருக்கமின்னல் வேகத்தில் செயல்பட்டு அவளை மருத்துவமனைக்கு கொண்டு சேர்த்ததோடு தகவலை ருக்மணி மற்றும் ரங்கசாமிக்கு சொன்னான். 

 

"சரண்நான் ஏற்கனவே ஊருக்கு கிளம்பிட்டேன்பா...  இப்ப அங்கதான்  வந்து கிட்டு இருக்கேன்.... " என ரங்கசாமி ஆனந்தத்தில் மொழிய

 

" ஓ .... குட் பா ..." என்றவன் மருத்துவமனை முகவரியை பகிர்ந்தான்.  

மருத்துவமனையின் சூழல் அவன் மனதை கலக்க, மனையாளின் துடிப்பு அவன் இதயத் துடிப்பை அதிகரிக்கஉள்ளுக்குள் பயப்பந்து ஒன்று  உருவாகி அவன் நெஞ்சை வெகுவாக அழுத்தகைகளில் லேசாக நடுக்கம் பிறக்கவிழிகளில் வெகு மெல்லியதாக நீர்க்கோளமிடதன்னவளின் கரத்தை இறுகப் பற்றிக் கொண்டான்அவளுக்கு உறுதுணையாக அல்ல தனக்கு ஆதாரமாக.

 

சற்று நேரத்திற்கெல்லாம் அவளை பரிசோதித்த மருத்துவர்,

 

"இது லேபர் பெயின் தான் .... இப்பதான் வலி எடுக்க தொடங்கி இருக்கு .... குழந்தை சரியான பொசிஷன்ல இருக்கு .... இன்னும் ஒரு 3 ஹவர்ஸ் வெயிட் பண்ணினா நார்மல் டெலிவரியே ஆயிடும் ..." என்றவர் சொல்லிக் கொண்டிருக்கும் போதே ருக்மணி, ராமலட்சுமியோடு அங்கு வந்து சேர்ந்தார். 

 

மருத்துவர் சொன்னதை உடனிருந்து கேட்டவர், ஸ்ரீலட்சுமியிடம்

"பயப்படாத லட்சுமி .... அதான் டாக்டர் சொல்லிட்டாங்க இல்ல .... வலி கொஞ்சம் அப்படித்தான் விட்டு விட்டு வரும் .... கொஞ்சம் பொறுத்துக்கிட்டா நார்மல் டெலிவரி ஆயிடும் ... சரியா "  என்றார் பயத்தோடு வலியில் துடித்துக் கொண்டிருந்த  மகளைப் பார்த்து.

 

தாயின் ஆறுதலான பேச்சும், வலியும் சற்று குறைந்த நிலையில்,

 

"நீங்க ஆபீஸ்ல இருந்து வந்ததுமேஎன்னை இங்க கூட்டிட்டு வந்துட்டீங்க ... வீட்டுக்கு போய் டிரஸ் சேஞ்ச் பண்ணிட்டு கொஞ்சம் ரெப்ரெஷ்  ஆயிட்டு வாங்க .... அதான் டாக்டர் 3 மணி நேரத்துக்கு மேல ஆகும்னு சொல்றாங்களே ..."

 

"இல்ல லக்ஷ்மி ... நான் இங்கேயே  இருக்கேன் ... நானும் உன் கூடவே  லேபர் ரூமுக்கு வரப் போறேன்..” என்றவனின் பேச்சுஅவளுக்கு யானை பலத்தை கொடுக்க, அவன் கரங்களை அழுந்த பற்றிக் கொண்டாள்.

 

வலி விட்டு விட்டு வந்து போய்க்கொண்டிருக்கஒரு கட்டத்தில் பிடிவாதமாக வற்புறுத்தி அவனை வீட்டிற்கு அனுப்பி வைத்தாள் ஸ்ரீ லட்சுமி .

 

மழலைத் பிறப்பதும் , மங்கை பூப்பதும் மகேசன் கையில் .... என்பதற்கு ஏற்ப, அவன் வீட்டிற்கு சென்ற இரண்டு மணி நேரத்திற்குள்ளாகவே தொடர்வலி ஏற்பட , உடனே மருத்துவர்கள் குழு  அவளை சூழ்ந்து கொண்டு, சிகிச்சை அளிக்க தொடங்கினர்.

 

பிரசவ அறைக்கு வெளியே நின்று கொண்டிருந்த ருக்மணி, விஷயத்தை தெரிவிக்க எண்ணிராம்சரணின் அலைபேசியை தொடர்பு கொள்ளமறுமுனையில் அழைப்பு எடுக்கப்படாமல் அடித்த அடித்து அடங்க, செய்வதறியாது தவித்துப் போனார்.

 

கிட்டத்தட்ட அரை மணி நேர போராட்டத்திற்கு பிறகுசுகப்பிரசவத்திலேயே அழகான பெண் குழந்தை ஸ்ரீலட்சுமிக்கு பிறக்க,செவிலியர் மூலம் விஷயத்தை அறிந்து கொண்ட ருக்மணிமிகுந்த மகிழ்ச்சியில் மீண்டும் ராம்சரணின் அலைபேசியை தொடர்பு கொள்ள , இம்முறையும் அழைப்பு எடுக்கப்படாமல் போக, வீட்டு எண்ணிற்கும் அவர் அழைப்பு விடுக்க, அதுவும் அடித்து அடித்து அடங்க,

 

"ஏம்மா, மாமா ஃபோனை எடுக்க மாட்டேங்கறாரு ..." என்றாள்  ராமலட்சுமி கவலையாக.

 

"தெரியலம்மா, ரொம்ப பொறுப்பான மனுஷன் ... அவரு போக மாட்டேன்னு தான் சொன்னாரு ..... இவதான் ஒத்த கால்ல நின்னு வீட்டுக்கு அனுப்பி வச்சா .... இப்ப ரிங் போகுது ஆனா போனை எடுக்க மாட்டேங்கறாரு.... என்னன்னு தெரியலயே  ..." என்றார் வெசனத்துடன் .

 

 

சற்று நேரத்திற்கெல்லாம் ரங்கசாமி ருக்மணியை அலைபேசியில் தொடர்பு கொண்டு,

 

"சம்மந்திம்மா, சரண்க்குபோன் பண்ணேன்... அவன் போனை எடுக்கல ... நான் இப்ப ஹாஸ்பிடலுக்கு தான் வந்துகிட்டு இருக்கேன் .... இன்னும் ஓரு மணி நேரத்துல அங்க வந்துடுவேன் ... லட்சுமி இப்ப எப்படி இருக்கா ..." என்றவரிடம்

ருக்மணி விஷயத்தை பகிரமிகுந்த மகிழ்ச்சி அடைந்தவர்,

 

"ரொம்ப சந்தோஷம்மா.... சரண் ஏன் போன் எடுக்கலைன்னு தெரியல .... நான் அருணாவுக்கு போன் போட்டு விஷயத்தை தெரிஞ்சுகிட்டு சொல்றேன் ..." என்றவர் அருணாவை தொடர்பு கொள்ள முயல, அவளும் அழைப்பை ஏற்கவில்லை. 

 

அடுத்த அரை மணி நேரத்தில், குழந்தையை பார்க்கலாம் என செவிலியர் வந்து சொல்ல, மிகுந்த மகிழ்ச்சியோடு ராமலட்சுமிருக்மணி ஸ்ரீலட்சுமியின் அறைக்கு சென்று  தொட்டிலில் இருந்த ரோஜா குவியலை ஆனந்தத்தில் கண்டுகளித்தனர்.

 

ஸ்ரீலட்சுமி எதிர்பார்த்தது போல் தான் அவள் பெண் பிறந்து இருந்தாள்.

 

'மினி ராம்சரண்என்றால் பொருத்தமாக இருக்கும் ... அப்படியே ராம்சரணின் நிறம், முகவெட்டில் மிளிர்ந்த குழந்தையை , கையில்  ஏந்தி  ருக்மணி கொஞ்சி மகிழ , மகளின் கண்களோ மழலையின் மீது இல்லாமல் மன்னவனை தேடியது.

 

அவளது பார்வையில் இருந்தே மனதைப் படித்தவர்,  

 

"உன் மாமனார் இன்னும் ஒரு மணி நேரத்துல வந்துடறதா போன் பண்ணினாரு ... மாப்பிள்ளைக்கு போன் பண்ணேன் ஏதோ முக்கிய வேலையில இருப்பாருனு நினைக்கிறேன்  அவரு எடுக்கல ..."  என்றார் ருக்மணி எதிர்மறையான விஷயத்தை இரண்டாவதாக கூறி.

 

ஸ்ரீலட்சுமியின் விழிகள் லேசாக கலங்க ,

 

"இங்க பாரு... பச்சை உடம்புக்காரி நீ... அழ கூடாது ... மாப்பிள பொறுப்பான ஆளு .... அவரு போன் எடுக்கலைன்னா  அதுக்கு  நிச்சயம் நியாயமான   காரணம் இருக்கும் புரியுதா ... "என்றார் ருக்மணி மகளை தேற்றும் விதமாக.

 

பிள்ளை பெற்ற களைப்பு வாட்டஸ்ரீலட்சுமி  கண் அயர முற்படும் போது, ருக்மணியின் அலைபேசிக்கு ராம்சரண் அழைக்க,

 

"சொல்லுங்க மாப்ள ..." என்றார் ஆர்வத்தோடு.

 

"போன் சைலன்ட்ல இருந்தது .... அதான் நீங்க கூப்பிட்டது தெரியல ... ஒரு முக்கியமான வேலைல சிக்கிக்கிட்டேன்... வந்து சொல்றேன் ... லட்சுமி எப்படி இருக்கா ..." என்றவனிடம் அவர் விஷயத்தைப் பகிரமனம் கொள்ளா மகிழ்ச்சி அடைந்தவன் ,

 

"இன்னும் பத்து நிமிஷத்துல அங்க இருப்பேன் ..." என்று முடித்தான் மகிழ்ச்சியாய்.

 

அவன் சொன்னது போலவே அடுத்த பத்தாவது நிமிடத்தில் அரக்கப் பறக்க  அறைக்குள் நுழைந்தவனை லட்சுமி ஆவலோடு நோக்க

 

"வெரி சாரி  லட்சுமி ..." என்றான் குற்ற உணர்வில்.

 

பழைய லட்சுமியாய்  இருந்தால், அவன் முகத்தைக் கூட பார்க்காமல் திரும்பிக் கொண்டிருந்திருப்பாள்.

 

புரிந்து கொண்டு வாழ்பவர்களை விட வாழும் போது புரிந்து கொள்பவர்கள் தான் அதிகம் .... என்ற உளவியலாளர் மணியம்மையின் கூற்று போல்அவனோடு கழித்த  கடந்த  8 மாதத்தில் அவன் அன்பாக இருப்பதை விட உண்மையாக இருப்பவன் என்பதை அவள்  ஓரளவிற்கு புரிந்து கொண்டிருந்ததால் அவன் சொல்லப் போகும் செய்திக்காக ஆவலுடன் அவன் முகம் நோக்கினாள்.

 

 

ஸ்ரீராமம் வருவார்கள் ...

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 


Comments

  1. Supperrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrr

    ReplyDelete

Post a Comment