ஸ்ரீ-ராமம்-21

அத்தியாயம் 21 

 

"லட்சுமி இறங்கு ..." என்றான் வீட்டை அடைந்ததும்  கண்ணயர்ந்திருந்தவளின் தலையை மென்மையாக தொட்டு.

 

மெல்ல கண்களை திறக்க முடியாமல் திறந்தவள்தட்டித் தடுமாறி எழ முயற்சிக்க, அவள் கரம் பற்றி உதவியவனிடம்,

"இன்னும் தலை சுத்துற மாதிரி தான் இருக்கு ..." என்றாள் குழறிய குரலில்.

 

"இப்ப போய் நல்லா  தூங்கி ரெஸ்ட் எடு .... காலையில டாக்டரை போய் பார்க்கலாம்... சரியா " என்றான் வாஞ்சையாக.

 

அவன் அப்படி சொன்னதற்கு இரு வேறு காரணங்களும் இருந்தன. 

 

கர்ப்பத்தை உறுதி செய்யும் சாதனத்தை அதிகாலையில் பயன்படுத்தினால் தான் சரியான முடிவுகள் கிடைக்கும் ,அதோடு முடிவு சாதகமாக வருமா வராதா என்று தெரியாத ஒன்றிற்காக தேவையில்லாத  எதிர்பார்ப்பை உருவாக்கி அவளது  இரவு உறக்கத்தை கெடுக்க வேண்டாம் என்ற எண்ணமும் இருந்ததால் ,மேற்கொண்டு எதையும் பேசாமல், அவளைக் கைத்தாங்கலாக பற்றி அழைத்துச் சென்றான்.

 

அனைவரும் உறங்கி இருப்பதற்கு அடையாளமாக, வீட்டில் நிசப்தம் நிலவ, இருவரும் அறையை அடையும் போது ராம்சரணின் அலைபேசி  சிணுங்கியது.

 

வீரா தான்அழைத்திருந்தான்.

 

"ரெண்டு பேரும் வீடு போய் சேர்ந்துட்டீங்களானு கேட்க தான் போன் பண்ணேன்.... லட்சுமி இப்ப எப்படி இருக்கா...."  என்றான்.

 

"இன்னும் தலை சுத்தல் இருக்குன்னு சொல்றா டா .... நாளைக்கு அவளை டாக்டருக்கு கூட்டிக்கிட்டு போலாம்னு இருக்கேன்  "

 

"குட் .... டேக் கேர்... " என்றவன் ஓரிரு அலுவலக சமாச்சாரங்களை பேசிவிட்டு அழைப்பை துண்டித்தான்.

 

அதற்குள் லட்சுமி குளியலறைக்குச் சென்று புத்துணர்வு பெற்று இரவு உடைக்கு மாறி , கட்டிலில் ஒருக்களித்து படித்துக் கொள்ளராம்சரணும் புத்துணர்வு பெற்று, அவளைப் பின்புறமாக அணைத்த படி நெருங்கி படுக்க, உடனே திரும்பி அவன் வெற்று மார்பில் முகம் புதைத்துக் கொண்டவளுக்கு தலை சுற்றலுக்கு காரணம் கர்ப்பமாக இருக்குமோ என சொல்ல தோன்றியது. 

 

உடனே,

ஆரம்பிச்சுட்டியா ... இப்படி யோசிக்க கூடாதுன்னு சொல்லி இருக்கேன் இல்ல .... என்று கோபப்படுவானோ என்ற  எண்ணம் உதித்ததும்  அனிச்சையாக அவளது வாய் பூட்டு போட்டுக் கொள்ள, அதை அவள் முக பாவத்திலிருந்தே படித்தவன்

 

"கால என் மேல போட்டுக்கிட்டு நிம்மதியா தூங்கு ..." என்றான் காதலாய்.

 

தன் கால்களை அவன் கால்கள் மீது போட்டவள் அடுத்த பத்தாவது நிமிடத்தில் ஆழ்ந்த உறக்கத்தை தழுவபுதுவித எதிர்பார்ப்பு சிந்தையை ஆக்கிரமித்திருந்ததால் உறக்கம் வராமல் திணறிப் போனான் அவளவன். 

 

லேசாக புரண்டு படுத்தவனுக்கு அயர்ந்து உறங்கும் மனையாளின் முகம் கண்களில் பட

 

அவனைப் பொறுத்தமட்டில் அவள் என்றுமே அழகுதான் என்றாலும் என்றும் இல்லா  ஏதோ ஒரு புதுவித அழகு அவளை  பேரழகியாக காட்ட,   இமைக்க மறந்து ரசித்தான். 

 

மூன்றாம் ஜாமத்திற்கு மேல் கண்ணயர்ந்தவனுக்கு , அதிகாலையிலேயே  விழிப்பு வர, தன் மனையாளை மென்மையாக எழுப்பிதன் கையில் இருந்த சாதனத்தை  அவன் காட்டஅரைகுறை உறக்கத்தில் கண்விழித்தவளின் முகம் அதனைக் கண்டதும் , பௌர்ணமி நிலவாய் ஜொலிக்க 

 

"எப்ப பிரக்னன்சி டெஸ்ட் கிட்  வாங்கினீங்க ..." என்றாள் மிகுந்த சந்தோஷத்தில். 

 

"நேத்து நைட் நாம வீட்டுக்கு வரும் போதே வாங்கிட்டு வந்துட்டேன் ..." என்றவனிடம் ஆசையாக வாங்கிக் கொண்டு ஆர்வத்துடன் குளியலறைக்குச் சென்றாள்.

 

அடுத்த பத்தாவது நிமிடத்தில் , மிகுந்த மகிழ்ச்சியோடு  வெளியே வந்தவள்தன் கையில் இருந்த சாதனத்தில் இரண்டு சிவப்பு கோடுகள் இருப்பதை தன்னவனிடம் காட்டிஆனந்தத்தில் லேசாக கண் கலங்கமௌனமாக அவளை தன்னோடு இறுக்கிக் கொண்டான் அவளவன்.

 

ஏதோ சாதித்த உணர்வை அந்த அழுகையும் ஆனந்தமும் ஒரே புள்ளியில் இணைந்து கொடுக்க,

 

"நேத்து தலை சுத்துற மாதிரி இருக்கும் போதே  பிரக்னண்டா இருப்பேனோனு தோணுச்சு....ஆனா உங்க கிட்ட சொல்ல பயமா இருந்துச்சு ..."  என்றவளின் கன்னத்தை லேசாக கிள்ளியவன்சிறு புன்னகையோடு,

 

"உனக்கு அப்படி தோணுச்சுனு எனக்கு தெரியும்....  ஏன்னா எனக்கும் அப்படித்தானே தோணுச்சு .... அதன் உடனே கிட் வாங்கிட்டு வந்தேன் ..." என்றவன்  அவளை தன்னிடம் இருந்து பிரித்தெடுத்து நெற்றி முத்தம் பதித்ததும்அவள் பரபரப்பாக தன் மர அலமாரியை நோக்கிச் செல்ல,

 

"ஏய் லட்சுமி ..... எங்க போற .."

 

"மணி ஆறு ஆயிடுச்சு..... குளிக்க போகணும் ..."

 

"இனிமே இப்படி எல்லாம் அதிரி புதிரியா எழுந்து வேலை செய்ய  ஓடாத ...  ஒழுங்கா படுத்து ரெஸ்ட் எடு..."

 

"அத்..." என அவள் தடுமாற,

 

"எல்லார்கிட்டயும்  நான் சொல்லிக்கிறேன் .... "

 

"இருந்தாலும் குளிச்சிட்டு மட்டுமாவது வந்துடறேனே.... ப்ளீஸ் ...."

 

"சரி மெதுவா போ... பார்த்து கால வை .... வழிக்கிட போகுது ..." என்றான் அக்கறையாக. 

 

அருணா , கற்பகத்தின் அறையில் வழக்கம் போல் அரட்டை அடித்துக் கொண்டிருக்க  சமையல்கார பெண்மணி இருவருக்குமாய் காலை தேநீரை கொண்டு போய் கொடுத்ததும்

 

" எங்க லட்சுமி ...." என்றார் கற்பகம்  கேள்வியாய்.

 

"அவங்க இன்னும்  கிச்சனுக்கு  வரல ... குளிக்கிறாங்க போல ..." என்றதும் கற்பகத்தின் முகத்தில் சிந்தனை ரேகைகள் சீறிப்பாய,  அதனைப் பார்த்தபடி தன் மனையாளோடு அந்த அறைக்குள் நுழைந்தான் ராம்சரண்.

 

வந்தவனின் முகத்தில் அப்பட்டமாய் வழக்கத்திற்கு மாறாக  மகிழ்ச்சி தாண்டவம் ஆட

"என்ன சரண் ..."என்றார் காரணத்தை அறியும் நோக்கில் .

 

"அம்மாலட்சுமி பிரக்னண்டா இருக்கா ...." எனத் தொடங்கி அவன் அனைத்தும் கூற, கேட்க பிடிக்காமல்முகத்தை இயல்பாக வைத்துக் கொள்ளவும் முடியாமல் தாயும் மகளும் பட்ட பாடு அவர்கள் மட்டுமே அறிவர்.

 

அருணாவின் அடி மனதில் ஆழ்ந்த புகைச்சல் ஏற்படகற்பகத்தின் நெஞ்சில் யாரோ நெருப்பள்ளி கொட்டியது போல் எள்ளும் கொள்ளும் வெடிக்கவெகு சிரமப்பட்டு அதனை எல்லாம் மறைத்து 

 

"நல்ல விஷயம் பா ..." என்றார் கற்பகம் ஈன ஸ்வரத்தில்.

 

முன்பு போல் ராம்சரண் இருந்திருந்தால்தாயும் மகளும் ஏதாவது எக்கு தப்பாக பேசி இருப்பர்.

 

'ஆத்திரக்காரனுக்கு புத்தி மட்டு' என்பது போல்  அவசரப்பட்டு அருணா மருத்துவமனையில்  விட்ட வார்த்தைகளால் சமீப காலமாக அவன்  சரியாக முகம் கொடுத்து பேசாமல் விலகி இருப்பதால்  வேறு வழி இல்லாமல் அடக்கி வாசித்தனர். 

 

"கங்கிராஜுலேஷன்ஸ்  அண்ணா..." என்றாள் அருணா , லட்சுமி மற்றும் ராம் சரணை ஒருசேரப் பார்த்து சன்னமாக. 

 

பொதுவாக யாரும் எதையும் இயல்பாக செய்து விடுவதில்லைபேசி விடுவதில்லை.

 

நன்மையோ தீமையோ நல்லெண்ணமோகெட்ட எண்ணமோ எதுவாக இருப்பினும் அதற்கு  ஒரு அடிப்படை காரணம் இருந்தே தீர வேண்டும் என்பதற்கு ஏற்ப ,  பெற்ற மகன்உடன் பிறந்த அண்ணன் என்றெல்லாம்  பாராமல் ராம்சரணின்  வாழ்க்கையை பட்டுப் போகச் செய்யகங்கணம் கட்டிக்கொண்டு களத்தில் இறங்கி வேலை செய்யும் கற்பகம் அருணாவிற்கும் ஆளுக்கொரு காரணங்கள் இருக்கவே செய்தன.

 

அருணாகற்பகம் அடிப்படையில் ஊதாரிசோம்பேறிசுயநலம் மிக்கவர்கள்.

 

ஆதிகாலத்தில் ரங்கசாமி கணக்கு வழக்கு இல்லாமல் பணத்தை வாரி இறைக்கதாயும் மகளும் வரையறை இன்றி செலவு செய்து உல்லாசமாக காலம் கடத்தினர். 

 

ஒரு கட்டத்தில் அவர்களது செலவை ரங்கசாமியால் கட்டுப்படுத்த முடியாமல் போககுடும்பத்திற்கு தேவையான அனைத்து செலவுகளையும் தானே களத்தில் இறங்கி செய்து விட்டுகை செலவிற்காக சொற்ப பணத்தை ( அதுவே கிட்டத்தட்ட அரை லட்சம்)  கொடுப்பதை வழக்கமாக்கிக் கொள்ள, செய்வதறியாது தவித்தனர் பெண்கள்.

 

 சில ஆண்டுகள் நெருப்பில் நிற்பது போல்  அவர்கள் காலத்தை கடத்திக் கொண்டிருந்த வேளையில்ராம்சரணுக்கு பெரிய நிறுவனத்தில் பணி கிட்டஅதன்பின் அவன் கணக்கு வழக்கு இல்லாமல் பணத்தை வாரி இறைக்கதாயும் மகளும் பணத்தில் முக்குளித்தனர். 

 

அருணா கற்பகத்தை பொருத்தமட்டில் ராம்சரண் ஒரு பணம் காய்க்கும் மரம்.

 

ராம் சரணுக்கு திருமணம் என்ற ஒன்று நடந்து மனைவி குழந்தை என்றாகிவிட்டால், செலவழிக்கும் தம்படிக்கு கூட கணக்குச் சொல்ல வேண்டிய நிலைமை வந்துவிடுமே என்பதால்  தான் அவனது திருமணத்தைப் பற்றி கண்டுகொள்ளாமல்  இருந்தார் கற்பகம்.  

 

எப்பொழுதுமே சுயநலம் மிக்கவர்கள் யார் எக்கேடு கெட்டுப் போனாலும் பரவாயில்லைதான் நன்றாக வாழ வேண்டும் என்பதற்காக  எதையும்  செய்ய தயாராக இருப்பார்கள். 

 

அதே எண்ணத்தில் தான் தானும் தன் மகளும் சுகபோக வாழ்க்கையை அனுபவிக்க வேண்டும் என்ற ஒரே காரணத்திற்காக ராம்சரணின் திருமணத்தை நிறுத்த தன்னால் ஆன முயற்சிகளை மேற்கொண்டார் கற்பகம். அதனை ரங்கசாமி  முற்றிலும்  முறியடிக்க, மனம் தளராத கற்பகம்  திருமணத்திற்கு பின்பாவது ஏதாவது செய்து கணவன் மனைவியை பிரித்து விடலாம்  என்று  நினைக்கும் போதுலட்சுமியின் அழகு , பொறுமை, புத்திசாலித்தனம், உழைப்பு போன்றவற்றில் மைந்தன் மயங்கி இருக்கமேற்கொண்டு காய் நகர்த்த முடியாமல் தடுமாறிப் போனார்.

 

ராம்சரண் விஷயத்தில் கற்பகத்தை போல் அருணாவுக்கும் பணம் தான் குறி என்றாலும்அவளுக்கு வேறு சில காரணங்களும் இருந்தன. 

 

வேண்டாம் வேண்டாம் என பலமுறை ரங்கசாமி தடுத்தும்கேளாமல் ஹரிஷை ஒற்றைக் காலில் நின்று திருமணம் முடித்தவளுக்கு ஓரிரு மாதத்திலேயே திருமண வாழ்க்கை சலித்து விட்டது.

 

திருமணத்திற்கு முன்பு வரை தெய்வீக காதல் என்றெல்லாம் வீர வசனம் பேசிக் கொண்டிருந்தவளுக்கு, திருமணத்திற்கு பின்பு தான் நிதர்சன வாழ்க்கை விளங்க ஆரம்பித்தது.

 

தன் தந்தையோடும் தமையனோடும் ஹரிஷை ஒப்பிட்டு பார்க்க ஆரம்பித்தாள்.

 

ஐஐடியில் படித்த தன் அண்ணன் எங்கே ஒரே ஒரு டிகிரியை கூட வெகு கடினப்பட்டு குறைந்தபட்ச தேர்ச்சி பெற்ற  தன் கணவன் எங்கே...

 

ராம் சரணின் கம்பீரம்ஆளுமை, நுனி நாக்கு ஆங்கிலம்உயர் பதவி, அதற்காக அவன் பணி புரியும்  நிறுவனத்தில் அவனுக்கு கிடைக்கும் சலுகைகள்அடிக்கடி வெளிநாட்டுப் பயணம் , அவன்  பயன்படுத்தும் கார் ஆகியவற்றையெல்லாம் ஒப்பிட்டுப் பார்த்தவளுக்குதான் தன் திருமண விஷயத்தில் அவசரப்பட்டு விட்டோம் ... ஹரிஷ் தனக்கு பொருத்தமில்லை என தோன்ற ஆரம்பித்தது. 

 

 

ஹரிஷ் மாதத்திற்கு 50 ஆயிரத்திலிருந்து ஒரு லட்சம் வரை  கடைகண்ணி நிலப் புலன்களில் இருந்து சம்பாதிக்க, ராம்சரணோ மாத ஊதியமாக கிட்டத்தட்ட ஆறு லட்சத்திற்கு மேல் சம்பாதிக்க  , அவளது தந்தை ரங்கசாமியை பற்றி சொல்லவே வேண்டாம்....  அவரது எஸ்டேட் வருமானம்  ஆண்டுக்கு சில கோடிகள் என்ற நிலையில்... அனைத்தையும் கணக்கிட்டு பார்த்து தவறான வாழ்க்கைத் துணையை தேர்வு செய்து விட்டோம் என்றெண்ணி மனம் குமுறலானாள்.

 

அதன் வெளிப்பாடாக தொட்டதற்கெல்லாம் தன் மாமியார் சுசிலாவிடம் பந்தய சேவல் போல் சிலிர்த்துக் கொண்டு நின்றாள். 

 

விவாகரத்து வாங்க வேண்டும் என்ற எண்ணம் கூட பிறந்தது. 

 

ஆனால் ஹரிஷ் அக்மார்க் நல்லவன் என்பதால்விவாகரத்திற்கான காரணத்தை உருவாக்க முடியாமல் திண்டாடினாள்.

 

ஒரு கட்டத்தில் பொய்யும் புரட்டையும் சொல்லி விவாகரத்து வாங்கிவிடலாம் என்று நினைக்கும் போது தான்,அவளது கல்லூரி கால நட்புகள் மற்றும் உறவினர்கள் முன்பு அது பெருத்த  தலைகுனிவை ஏற்படுத்தும் என்ற எதார்த்தம் உரைக்கவேறு வழி இல்லாமல் கடனே என்று காலம் தள்ளலானாள்.

 

அந்தக் காலகட்டத்தில் தான், ராம்சரண் லட்சுமி திருமணம் நடந்தேறபொருளாதார நிலையில் பல படிகள் கீழிருந்த ஸ்ரீலட்சுமி தன் அண்ணனை மணந்து கொண்டு பெரும் பணக்காரியாகிவிட்டாள்பிறந்ததில் இருந்தே பாலில் குளித்து, பன்னீரில் கொப்பளித்து , பணக்கட்டுகளில் படுத்து உறங்கிய  நான் சரியான வாழ்க்கைத் துணையை தேர்வு செய்யாமல்  போனதால்ஐந்துக்கும் பத்துக்கும் கணக்குப் பார்த்து செலவழிக்கும் நிலையில் இருக்கின்றேனே என நினைத்து நினைத்து  பொருமினாள்.

 

எதிர்காலத்தில், தன் தந்தை  சொத்தை சரிசமமாக பிரித்துக் கொடுத்தாலும், பொருளாதாரத்தில் தன்னால் தன் அண்ணனை நெருங்கவே முடியாது எனவே ஏதாவது செய்து ராம் சரணுக்கு  குடும்ப வாழ்க்கை என்ற ஒன்றே இல்லாமல் செய்து விட்டால் தானும் தன் மகன்களும் நிம்மதியாக ஆடம்பர வாழ்க்கை வாழலாம் என முடிவெடுத்து  கிடைத்த சந்தர்ப்பங்களில் எல்லாம்  பிரச்சனையை இழுத்து விட்டாள்.

 

அவளே எதிர்பார்க்காமல் கோவா விஷயத்தில் அது  எதிர்மறையாக திரும்பிராம்சரணின் பாராமுகத்திற்கு அவள் ஆளாகி போகஅந்தக் கணத்திலிருந்து வேறு வழி இல்லாமல் அடக்கி வாசிக்க ஆரம்பித்திருந்தாள்.

 

"அண்ணிய, டாக்டருக்கு கூட்டிகிட்டு போ அண்ணே..."  என்றாள் தான் அக்கறையாக இருப்பதாக காட்டிக் கொண்டு. 

 

"ஒன்பது மணிக்கு டாக்டர்  அப்பாயிண்ட்மெண்ட் கிடைச்சிருக்கு ..."  என்றான் ராம்சரண் இறுகிய குரலில் தாயும் மகளையும் ஒருசேரப் பார்த்து.

 

மருத்துவமனையில் மருத்துவரும், அவர்கள் எதிர்பார்த்த செய்தியை உறுதிப்படுத்தகணவனும் மனைவியும் அளவில்லா மகிழ்ச்சி அடைந்தனர். 

 

மருத்துவரின் ஆலோசனைகள் மற்றும் மருந்து மாத்திரைகளை மிகுந்த கவனத்தோடு கேட்டுக்கொண்டவன் தன் மனையாளை தான் இல்லா சமயத்தில் பார்த்துக் கொள்ளஅனுபவம் வாய்ந்த வயதான செவிலி பெண்மணிக்கும் ஏற்பாடு செய்தான்.

 

தனக்கு ஏற்பட்ட எதிர்பாராத கருச்சிதைவுக்கு அவன் மிகவும் வருந்தினாலும் அவன் தாய்  தங்கையிடத்தில் அது குறித்து விவாதித்ததில்லை. அதே போல்  , நான் இனிமேல் உன்னை நன்றாக பார்த்துக் கொள்வேன் என்ற வாக்கும்  கொடுத்ததில்லை ... என்பதெல்லாம்  ஸ்ரீலட்சுமியின்  மனதில் சிறு சுணக்கத்தை ஏற்படுத்தி தான் இருந்தது.

 

ஒரு சில ஆண்கள் வார்த்தையில் மன்னிப்பு கேட்பார்கள், காற்றைக் கயிறாய் திரிப்பேன், நட்சத்திரங்களைக் கொண்டு வந்து மெத்தை மேல் பூக்களாய் தூவுவேன் ... என  அழகு வார்த்தைகளை பயன்படுத்தி  நம்பிக்கை கொடுப்பார்கள் ... ஆனால்  உடனே மறந்தும் விடுவார்கள் ...

 

ஆனால் சிலருக்கு பேச தெரியாது , வராது ... அப்படிப்பட்டவர்கள்  தங்கள் மன்னிப்பை ஆகச்சிறந்த செயல்களின் மூலம் யாசிப்பார்கள் .... அப்படித்தான் செய்து கொண்டிருந்தான் அவளது அதிகம் பேச தெரியாத கணவன்.

 

முதலில் நடந்த தவறை திருத்திக் கொள்ள நினைத்ததோடுஅது மீண்டும் நிகழா வண்ணம் மெனக்கிடுகிறான் என்பதைப் புரிந்து கொண்டவளுக்கு  அப்போதுதான் தன்னவனைப் பற்றிய புரிதலே தொடங்க ஆரம்பித்தது.

 

மிகுந்த மகிழ்ச்சியோடு வீடு திரும்பியவன் செய்த முதல் வேலை  சமையல் செய்யும் பெண்மணி சாந்தியை அழைத்து,

"அக்கா, இனிமே இவ கிச்சனுக்கு வர மாட்டா... உங்களுக்கு ஏதாவது சந்தேகம் இருந்தாஎங்க ரூமுக்கு வந்து இவ கிட்ட கேட்டுக்கோங்க ... வேற ஏதாச்சும் செய்யணும்னாசொர்ணம், மணிய கூப்பிட்டுகுங்க..." என்றவன் வீட்டு வேலை செய்பவர்கள், தோட்டக்காரர்களிடமும்  கடைப்பிடிக்க வேண்டிய நெறிமுறைகளை அறிவுறுத்தி முடித்தான்.

 

அனைத்தையும் அமைதியாக உள்வாங்கிக் கொண்டிருந்த கற்பகம்அருணாவிற்கு பற்றி கொண்டு  வரவெளிக்காட்டிக் கொள்ள முடியாமல்அடக்கி வாசித்தனர்.

 

அப்பொழுதே ராம்சரண் தன் தந்தை ரங்கசாமி மற்றும் ருக்மணிக்கு  அலைபேசி மூலம் தகவல் சொல்ல, அளவில்லா மகிழ்ச்சி அடைந்த அந்த பெரியவர்கள் புதிதாய் தாய் தந்தை ஆகப்போகும் அந்த இளம் தம்பதிக்கு  வாழ்த்து சொல்லி மகிழ்ந்தனர். 

 

 

மகனையும் மருமகளையும் பார்க்க அன்று மாலையே இல்லம் வந்து சேர்ந்த ரங்கசாமி  இரவு உணவு உண்ணும் போதுலட்சுமி எஸ்டேட் கணக்கு வழக்கில் காட்டும் சிரத்தையை  அனைவரின் முன்பாக சிலாகித்து பேசிவிட்டு

 

" குழந்தை பிறக்கிற வரைக்கும் நீ கொஞ்ச நாள் ரெஸ்ட் எடுத்துக்கோம்மா.... " என்றார் வாஞ்சையாக. 

 

"இல்ல மாமா .... என்னால முடிஞ்ச வரைக்கும் செய்யறேன்... முடியாதப்ப மேனேஜர் பார்த்து கட்டும்…” 

 என இன்முகத்தோடு லட்சுமி சொல்ல, அம்மாதிரியான சம்பாஷனைகளை கேட்கப் பிடிக்காமல்எழுந்து செல்லவும் முடியாமல் தணல் மேல் நிற்பது போல் தவியாய் தவித்தனர் தாயும் மகளும்.

 

அன்றைய இரவின் தனிமை கணவன் மனைவிக்கிடையே புதுவித இனிமையை சேர்த்திருக்க 

 

"லட்சுமிநான் ரொம்ப சந்தோஷமா இருக்கேன் ...." என்றான் ராம்சரண் தன் மார்பில் படர்ந்திருந்த மனையாளின் தலை கேசத்தை கோதியபடி.

 

அவளிடமிருந்து யாதொரு எதிர்வினையும் இல்லை என்றதும்,

 

"ஏய் .... ஏன் ஒரு மாதிரி இருக்க ... உனக்கு ஏதாவது வேணுமா ... உங்க அம்மாவ பாக்கணும் போல இருக்கா .... " என அவன் காரணங்களை அடுக்கிக் கொண்டே செல்ல, அதற்கும்  அவளிடமிருந்து மௌனமே மொழியாக வெளிப்பட,

 

"லட்சுமி.... உடம்பு எதாவது பண்ணுதா ... ஏண்டி ஒரு மாதிரி இருக்க .... பதில் சொல்லு.. உனக்கு என்ன தான் வேணும் ...." என்றவனிடம் லேசான கமரியக் குரலில் 

 

"எனக்கு உங்க நேரம் வேணும் ..." என்றாள் பெண் விசும்பலுடன். 

 

ஒரு கணம் பதில் பேச முடியாமல் ஆடிப் போனவன், உடனே சுதாரித்துக் கொண்டு

 

"என்னால ஃபால்ஸ் ப்ராமிஸிஸ் எல்லாம்  கொடுக்க முடியாது .... ஆனா நிச்சயமா மாச கணக்குல போய் தங்கற ஆன்சைட் ட்ராவல அவாய்ட் பண்ணிடறேன் இந்தியாக்குள்ள எங்கேயாவது ரெண்டு மூணு நாள் போய்ட்டு வர்ற மாதிரியான ட்ராவல மட்டும்  வச்சுப்பேன் ....  லோக்கல்ல இருந்தேன்னா நிறைய வொர்க் ப்ரம் ஹோம் போட பார்க்கிறேன் ... போதுமா ...." என்றான் லேசாக கண் கலங்கி .

 

மனையாளின் எதிர்பார்ப்பை கடந்த முறையே அறிவான் .

 

 அதே போல் அவளிடம் பகிர்ந்து கொள்ளவில்லை என்றாலும் கர்ப்பிணியான மனைவியோடு நேரம் செலவழிக்க முடியாமல் போனதை நினைத்து  கடந்த முறையே அவனும் வெகுவாக வருந்தி இருந்தான்.

 

அதற்கும் சேர்த்து ஈடு செய்வது போல்இம்மாதிரியான ஏற்பாட்டை அவன் மொழிய, கணவனிடம் இருந்து சற்று விலகி, இரவு விளக்கொளியில் அவன் முகத்தை ரசித்து  நோக்கியவள்அவன் இதழோடு தன் இதழை பொருத்தி ஆழ்ந்த முத்தமிட்டு விலக, அவள் செய்கையிலேயே அவள் மன மகிழ்ச்சியை உணர்ந்தவன்,

 

"வொர்க் ஃப்ரம் ஹோம் போடறேன்னு சொன்னதுக்கே , இவ்ளோ கவனிப்புன்னா, வேலைய விட்டுட்டா ..."  என கன்னம் கிள்ளிக் கொஞ்சியவனின் மார்பில் முகம் புதைத்துக் கொண்டாள் அவன் வனிதை வெட்கத்தோடு .

 

நாட்கள் வேகமாக நகர்ந்தது. கடந்த முறை போல் மசக்கை அவளை அதிகம்  வாட்டவில்லை என்றாலும் மனையாளை கண்ணுக்குள்ளேயே வைத்து பார்த்துக் கொண்டான் ராம்சரண் .

 

அவன் சொன்னது போல் வெளிநாட்டு பயணங்களை மேற்கொள்ளாமல்வெளி மாநிலங்கள் அல்லது மாவட்ட பயணங்கள் மட்டும் அதுவும் ஓரிரு தினங்களுக்கு மேல் இழுத்தடிக்காமல் பார்த்துக் கொண்டான்.

 

அவன் இல்லா அந்த ஓரிரு தினங்களும் ,அனுபவம் வாய்ந்த வயது முதிர்ந்த செவிலி பெண்மணி அன்னம்அவர்கள் இல்லம் வந்து ஸ்ரீலட்சுமியை கண்ணும் கருத்துமாக பார்த்துக் கொண்டார்.

 

வயது முதிர்ந்த தாயும்இரு குழந்தைகள் பெற்ற தங்கையும்  இருந்தும் கூட , ஒரு ஆண் தன் கர்ப்பிணி மனைவியை கவனித்துக் கொள்ள, வெளி மனிதர்களை எதிர்பார்க்கிறான் என்றால், அந்த வீட்டுப் பெண்கள் சரி இல்லை என்பதை வந்த முதல் நாளிலேயே புரிந்து கொண்டவர்,வேண்டும் என்றே பேச்சு கொடுக்கும் அருணா கற்பகத்திடம் கேட்ட கேள்விக்கு பதில் என்பதோடு நிறுத்திக் கொண்டு, லட்சுமியை பார்த்துக் கொள்ளும் தன் வேலையிலேயே குறியாக இருக்க ஆரம்பித்தார். 

 

கடந்த முறை கருச்சிதைவு நடந்ததற்கு மறைமுக காரணம் கற்பகம் அருணா என லட்சுமி குற்றம் சாட்டினாலும், அதனை பெரிதாக எடுத்துக் கொள்ளாமல்தான் தன் மனைவியை உடனிருந்து கவனித்துக் கொள்ளாமல் விட்டதை முதன் பிழையாக  கருத்தியதால் ராம்சரண் தாய் தங்கையிடம் அதைப் பற்றி விவாதிக்காமல் விட்டு விட்டான்.

 

இந்த முறை  தன் மனைவி சம்பந்தப்பட்ட அனைத்தையும் தானே முன் நின்று பார்த்து பார்த்து  செய்தான் , அதற்காக அவர்களை புறக்கணிக்க வேண்டும் என்ற எண்ணமெல்லாம் அவனுக்கு இல்லைஅவர்கள் சோம்பேறிகள் என்பதால் ஒதுக்கி வைத்திருந்தான் அவ்வளவே...

 

அவர்களிடம் சண்டையும் போடாமல் உதவியும் கேட்காமல் ஒரே அடியாக அவர்களை ஒதுக்கி வைத்தது, புறக்கணித்த உணர்வை கொடுக்க  செருப்பில் அடி வாங்கிய உணர்வை பெற்றனர் அந்த பெண்கள்.

 

இருந்தாலும் நரி தன் தந்தரத்தை மாற்றிக் கொள்ளாது என்பது போல், தன் இருப்பைப் பல வகையில் அடிக்கடி காட்டிக் கொண்டாள் அருணா.

 

லட்சுமியின் படுக்கை அறையை சந்தை கடையாக மாற்றி வைத்திருந்தாள். 

 

அவளும் அவள் குழந்தைகளும் குழந்தைகளின் தோழர்களும் வந்து புழங்கும் இடமாக  அது இருந்தது என்றாலும் ஓய்வெடுக்கும் நேரத்தை தவிரமற்ற நேரங்களில் லட்சுமியும் அதை பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. 

 

ராம்சரண்ஆங்கிலத்தில் சொல்லுவார்களே, Physically present mentally absent என்பது போல் , வீட்டில் இருந்தாலும்  மணிக்கணக்காக மடிக்கணினியில் மூழ்கி இருந்தான். 

 

ஸ்தூல சரீரமாக அமர்ந்திருந்தான் அவ்வளவே .... மற்றபடி  அவன் சிந்தை முழுவதும் எண் கணிதத்திலேயே எஞ்சி இருக்க, அவன் இருப்பே பல பிரச்சனைகளுக்கு முடிவு கட்டியதால் நிம்மதியாக இருந்தாள் ஸ்ரீலட்சுமி. 

 

மாதங்கள் அழகாக உருண்டோடின. ருக்மணி ராமலட்சுமிமாதத்திற்கு ஒரு முறை லட்சுமியை பார்த்து விட்டுச் செல்வதை வழக்கமாக்கிக் கொண்டிருந்தனர்.

 

ரங்கசாமியும் இரண்டு மாதத்திற்கு ஒரு முறை வந்து போவதை வழக்கமாக்கிக் கொண்டிருந்தார்.

 

அனைத்தும் ஒருவித கட்டுப்பாட்டுக்குள்ளேயே இருந்ததால் தாயும் மகளும் யாதொரு குட்டி கலகமும் செய்ய முடியாமல் தவியாய் தவித்தனர் .

 

zoom மீட்டிங்கில் பெரும்பாலான நேரத்தை  ராம் சரண் செலவழித்தாலும், மனையாளை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்வதையும், இரவில் அவளுடன் சில மணித்துளிகள் பேசி மகிழுவதையும்  தன் தலையாய பணியாக வைத்திருந்தான். 

 

ஏழாம் மாதத் தொடக்கம்........

 

பளபளத்த சருமத்தில் பளிங்கு போல் காணப்பட்ட மனையாளின் அழகும், மேடிட்ட வயிற்றில் அவள் அன்னம் போல் நடை போடும் நாட்டியமும்காளையவன் மனதில் மோகத்தையும்  தாபத்தையும் விதைக்க, அதனை அவன் கண்களினுடே  அறிந்து கொண்டவள், இரவின் தனிமையில் தன்னவனின் தலைகோதிஅவனை முற்றிலும் ஆக்கிரமிப்பது போல் ஒருகளித்து நெருங்கிப்படுத்து 

 

"அதான் ஏழாம் மாசம் ஆயிடுச்சே... முன்ன மாதிரி இருக்கலாம்னு டாக்டரும் சொல்லிட்டாங்க ..." என்றாள் லேசான வெட்கத்துடன் எதிர்பார்ப்போடு.

 

அவள் கழுத்தில் முகம் புதைத்தவன்  இதழால் அளந்து கொண்டே வந்து அவள் கன்னத்தை  லேசாக கடித்து,

 

"உன்னை பாத்தா மனசு தடுமாருறது உண்மை தான் ஆனா நான் எந்த ரிஸ்க்கும் எடுக்க விரும்பல டி ... எனக்கு ஸெல்ப் கண்ட்ரோல் அதிகம் ...." என்று அவள் காதுகளில் கிசுகிசுத்து விட்டு தன் நெஞ்சோடு மென்மையாக அணைத்துக் கொண்டான். 

 

வழக்கம் போல் கற்பகம், எதையும் கண்டுகொள்ளாமல் இருக்க வேறு வழி இல்லாமல் ருக்மணி ஏழாம் மாதத்தில் சீமந்தம் என்ற பேச்சை முன்னெடுக்கஅதற்கு ராம் சரணும் ரங்கசாமியும் ஒப்புதல் கொடுத்ததும், பல நாட்களாக சேமித்து வைத்திருந்த ஆங்காரத்தை தீர்த்துக் கொள்ள தக்க சந்தர்ப்பம் அமைந்ததை  எண்ணி மனதுக்குள் கொக்கரித்த அருணா, அதற்கான முதல் படியை எடுத்து வைக்கும் விதமாகஎன்றும் இல்லா பழக்கமாக கோவிலுக்கு புறப்பட்டுச் சென்றாள்.

 

கோவிலிருந்து திரும்பியவள், நேரடியாக ராம்சரணின் அறைக்கு சென்று 

 

"அண்ணே.... நான் ஒன்னு சொல்லுவேன் கோவிச்சுக்க கூடாது ..." என்றாள் வழக்கத்துக்கு மாறான பவ்யத்துடன்.

 

சொல்லு அருணா...."

 

"அது வந்து அண்ணே... என் மாமியார் இறந்ததுக்கு  மாச திதிவருஷ திதி கொடுக்கிறத பத்தி  ஐயரை பார்த்து பேசிட்டு, அண்ணிக்கு  சீமந்தத்துக்கு நாள் குறிக்கணும்னு சொன்னேன் .... ஆனா அவரு இப்போதைக்கு சீமந்தம் செய்யக்கூடாது .... ஏதோ தோஷம் வரும்னு சொல்றாரு அண்ணே... எனக்கு என்ன பண்றதுன்னே தெரியல ...." என்றாள்  சோகத்தை முகத்தில் கடினப்பட்டு கொண்டு வந்து.

 

"ஏன் அப்படி சொன்னாரு.... பங்காளி தீட்டு எல்லாம் அப்பவே முடிஞ்சிருச்சேம்மா.... இது என்ன புதுசா  இருக்கே...."

 

"அதாண்ணேநானும் கேட்டேன்.... ஆனா அவரு ஏதேதோ காரணம் சொல்லிட்டு கடைசியில இந்த மாதிரி நேரத்துல சீமந்த செஞ்சா பொறக்க போற குழந்தைக்கு ஆகாதுன்னு சொல்லிட்டாருண்ணே..." என முடித்தாள்.

 

ராம்சரண் மட்டும் உடன் இல்லாமல் இருந்திருந்தால்சீமந்தத்திற்கு வைர வளையல் போட வேண்டும் என்று தாயும் மகளும் ருக்மணியை ஒரு வழி செய்திருப்பர் .....

 

அதற்கு சந்தர்ப்பம் அமையாததால்சீமந்தத்தை நிறுத்த முடிவு கட்டி காய் நகர்த்தினர்.

 

எல்லா பெண்களையும் போல்ஸ்ரீலக்ஷ்மிக்கும் சீமந்தம் செய்து கொள்ள வேண்டும் என்ற ஆசை இருக்கத்தான் செய்தது.  ஆனால் அருணா கூறியதை கேட்டு சற்று யோசிக்க ஆரம்பித்தாள்.

 

அவளுக்கு அருணா கூறிய தோஷத்தின் மேல் எல்லாம் நம்பிக்கை இல்லைஅவளைப் பொருத்தமட்டில் அருணாவின் மாமியார் சுசீலா, ஆகச்சிறந்த ஆன்மா.

 

அவள் தன் முதல் குழந்தையை பறி கொடுத்த போதுமிகுந்த ஆறுதலாக அவளோடும் ராம்சரணோடும் அலைபேசியில் பேசினார்.

 

"இங்க பாரு லட்சுமி ... குழந்தை போயிடுச்சேனு வருத்தப்படாத .... குழி பிள்ளை மடியிலனு சொல்லுவாங்க.... கூடிய சீக்கிரம் குழந்தை உண்டாயிடுவ பாரு ....  என் பேச்சை நம்பு.... அழாதே"  என்றவரின் அன்றைய  வாய்மொழிஅவள் காதுகளில் எப்பொழுதும் ஒலிப்பது போல் இப்பொழுதும்  ஒலிக்கவழக்கம் போல் அவருக்கு மானசிகமாக நன்றி உரைத்தாள் நங்கை .

 

சுசீலா என்ற அந்த புண்ணிய ஆத்மாவின் இறப்பில் கிடைத்த அந்த 20 நாட்கள் தனிமை தான்அவள் வாழ்க்கையை மீட்டெடுக்க உதவியதை அவள்  என்றுமே மறந்ததில்லை. 

 

அவரது இறப்பு என்ற ஒரு  சம்பவம் மட்டும் நடந்தேறாமல் இருந்திருந்தால்அவள்  அப்போதிருந்த  மன அழுத்தத்திற்கும்உடன் கற்பகம் அருணாவும் இருந்து குடைச்சலும் கொடுத்திருந்தால் , இந்நேரம் அவள் தாய்மை அடைந்திருக்கவே முடியாது .

 

இதையெல்லாம் அசை போட்டுப் பார்த்தவள், ராம்சரணிடம் 

"அருணா சொல்றது ஒரு வகையில சரிதான் ....  சீமந்தம் செய்ய வேண்டாங்க ..." என்றாள் வெகு இயல்பாக.

 

 

ஸ்ரீ-ராமம் வருவார்கள் ....

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 


Comments

  1. Supperrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrr

    ReplyDelete
  2. இந்த ஜோடியா diverse கேட்டது என தோணுது!!!??

    ReplyDelete

Post a Comment