ஸ்ரீ-ராமம்-19

 அத்தியாயம் 19 

 

ராம் சரணின் முகம் தீவிரத்தை தத்தெடுத்துக்கொண்டதோடுஆழ்ந்து சிந்திப்பதற்கு அடையாளமாக அவன் நெற்றியில் கீற்று போல்  புருவ முடிச்சும் விழ, தந்தையின் பேச்சில் அண்ணன் சிந்திக்கத் தொடங்கி விட்டான் என்பதை கண நேரத்தில் அறிந்து கொண்ட அருணா, உடனே சுதாரித்து,

 

"சாரி அண்ணே.... அப்பா சொன்னதும் தான் என் தப்பே தெரியுது .... அம்மாவுக்கு உடம்பு சரியில்லன்னதும் கையும் ஓடல காலும் ஓடல .... என்ன செய்யறேன் என்ன பேசறேனு புரியாம புத்தி கெட்டு போய் , ஏதேதோ செஞ்சு ஏதேதோ பேசிட்டேன் .... ப்ளீஸ் அண்ணே.... என்னை தப்பா நினைச்சுக்காதே ...." என  கண்ணீர் விட்டு வசனம் பேச தங்கையின் பேச்சும் செயலும் முன்னுக்குப் பின் முரணாகவும், நெருடலாகவும் இருந்தாலும்அப்பொழுது பேசி ஒன்றும் ஆகப் போவதில்லை என்பதால் ,

 

"கண்டதையும் போட்டு  மனச குழப்பிக்காத ... அம்மாவுக்கு நாளைக்கு ஆபரேஷன் ... போய் ஆக வேண்டியத பாரு..." எனப் பட்டும் படாமல் அவன் பதில் அளித்து விட்டு ரங்கசாமியை நோக்கி  செல்லஅறை வாங்கிய உணர்வைப் பெற்ற அருணா, சென்றவனின் முதுகையே  வெறித்துப் பார்த்தாள் வன்மத்தோடு .

 

"அப்பாநீங்க ரொம்ப டயர்டா இருப்பீங்க... மணி எட்டாக போகுது .. வீட்டுக்கு கிளம்புங்க...நான்  இருந்து  அம்மாவை பாத்துக்குறேன் ..." என்றான் ராம்சரண் ரங்கசாமியிடம். 

 

"நீயும் லட்சுமியும் வீட்டுக்கு போங்கப்பா ...  நான் வர்ற வழிலயே டின்னர் சாப்பிட்டு வந்துட்டேன்...  அருணாவும் நானும் நைட் இங்க தங்கி  அம்மாவை பாத்துக்குறோம் ..." என்றவர் லட்சுமியை பார்த்து

 

"லட்சுமி ஹாப்பி பர்த்டே மா... நீ வந்ததுல இருந்து  நான் கொஞ்சம் நிம்மதியா இருக்கேன்.... எனக்கு அப்புறம் நம்ம குடும்ப வியாபாரத்துல என்ன நடக்குதுன்னு தெரிஞ்சுக்க கூட ஆள் இல்லாம இருந்தது .. என்ன தான் நம்ம மேனேஜர் வினோத் நம்பகமான ஆளுன்னாலும், நம்ம வீட்ல இருக்கிறவங்களுக்கு நம்ம குடும்ப வியாபாரத்தை பத்தி கொஞ்சமாச்சும்  தெரிஞ்சு இருக்கணும் இல்லையா ...  நீ வந்து பிசினஸ்ஸ கையில எடுத்து எனக்கு  நிம்மதியை கொடுத்திருக்க ...." என வாஞ்சையாக அவர் மொழிய,  

 

"நான் ஒன்னும் பெருசா பண்ணல மாமா ... வீட்ல சும்மா தான் இருக்கேன் ... எனக்கும் பிஸ்னஸ்அக்கவுண்ட்ஸ் எல்லாம் கொஞ்சம் பிடிக்கும் ... சோ என்னால முடிஞ்சத செய்றேன் அவ்ளோ தான்..."  என்ற லட்சுமியை கற்பகமும் அருணாவும் தீ பார்வை பார்த்தனர்.

 

ரங்கசாமி மறைமுகமாக அவர்களை மட்டம் தட்டியதோடுலட்சுமியை புகழ்ந்து பேசியது  தாய் மற்றும் மகளுக்கு தணல் மேல் நின்ற உணர்வை தந்திருந்த வேளையில்மனைவி குறித்த தந்தையின் பாராட்டில் மகிழ்ந்து போனான் மைந்தன்.

 

பிறகு வீடு திரும்பிய இருவருக்கும் அன்றைய நீண்ட அலைச்சலுக்கு பின்  தனிமை கிட்ட, கணவனின் வெற்று மார்பின் இடப்புறத்தை ஆக்கிரமித்தவள் வழக்கம் போல் உறங்க எத்தனிக்க, அவள் கணவனோ அருணாவை பற்றிய சிந்தனையில் ஆழ்ந்திருந்தான்.

 

குழந்தை பருவத்தில் இருந்தே 'அண்ணே அண்ணே ' என்று அவனை சுற்றி சுற்றி வந்தஅவன் தூக்கி வளர்த்த அருணாவிற்கும்மருத்துவமனையில் கண்ட அருணாவிற்கும் எண்ணிலடங்கா வித்தியாசங்களை கண்டு தடுமாறிப் போயிருந்தான். 

 

தன் மனையாளுக்கு கருச்சிதைவு நடந்த சமயத்தில் 

"அண்ணியை பார்த்துக்க அவங்க வீட்டு ஆளுங்க இருக்காங்க என் குழந்தைக்காக நீ இரு அண்ணே..." என்று அவள் கேட்டுக் கொண்ட போது கூடஅவனுக்கு தவறுதலாகப்படவில்லை.  ஆனால் இன்று அவளுடைய  பேச்சு பல மடங்கு அதிகபடியாக இருந்ததோடு உடன் அவன்  தந்தை பேசியதும்அவன் உள்ளுணர்வுக்கு சரி என்றே பட, ஏன்  இந்த அதிரடி மாற்றம் அவளிடம் .... என்றெண்ணியவன் , அப்போதுதான் அவனை அணைத்தபடி படுத்திருந்த மனையாளை கண்டான்.

 

"லட்சுமி .... சாரி... இன்னைக்கு உன்னோட பர்த் டேக்கு நிறைய பிளான் வச்சிருந்தேன் ... கடைசில இப்படி ஆகும்னு நான் கொஞ்சம் கூட எதிர்பார்க்கல இந்த மாதிரி  அலைச்சலானகஷ்டமான ஒரு பர்த்டேவை நீ உன் லைஃப்லயே  பார்த்திருக்க மாட்ட இல்ல ..." என்றான் மனம் வருந்தி.

 

நேற்று இரவின் கூடலில், அந்த ஏகாந்தத்திலும்  , அவளுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவிக்க அவன் தவறவில்லை ....

 

திருமணத்திற்கு பிறகு முதல் பிறந்தநாளில் முதல் வாழ்த்து அவனுடையதாக இருந்ததில் அவளுக்கும் எல்லையில்லா மகிழ்ச்சியே ...

 

அதே போல்  இந்தக் கணம் வரை யார் மீதும் அவளுக்கு  கோபம் இல்லை ... அவளைப் பொருத்தமட்டில் அனைத்தும்  திட்டமிடப்படாமல்  இயல்பாக நடந்தேறியதாக  எண்ணியதால், சூழ்நிலையின் மீது பழி போட்டுவிட்டு சமாதானம் ஆகி இருந்தாள் அவன் மாது.

 

அதனை உணராமல் அவளது நாயகன் அப்படி ஒரு கேள்வி எழுப்ப

"உங்களோட இருந்த  இந்த பர்த்டே தான் என் லைஃப்லயே நான் ரொம்ப சந்தோஷமா இருந்த பர்த்டே..... என்னோட பல பர்த்டேஸ் ரொம்ப இயல்பா கடந்து போயிருக்கு .... என் அம்மாவுக்கு எங்க பர்த்டே  ஞாபகம் இருக்கும் ஆனா வசதி இல்லாததால அவங்களால முடிஞ்சத செஞ்சுட்டு விட்டுடுவாங்க ... அப்பாவுக்கு என் அம்மாவோட சண்டை போட்டுஎங்களை எல்லாம் திட்றதுக்கே நேரம் சரியா இருக்கும்... அவருக்கு எங்க பர்த்டேவ எல்லாம் நினைவு வச்சிக்க நேரமேது... குடிகார அப்பாகிட்ட பயந்து பயந்து காலம் கடத்தற குழந்தைங்க மாதிரி, என் அப்பாவை பார்த்து நானும் என் தங்கச்சியும் பயந்த நாட்கள் தான் அதிகம் .... அவருக்கு வாழ்க்கையில அடுத்த கட்டத்துக்கு முன்னேறணுங்கற எண்ணம் என்னைக்குமே இருந்ததில்ல... என் அம்மாவோட சண்டை போடணும்  ஏதாவது சாக்கு வச்சு எங்களை எல்லாம் திட்டனும், அது ஒன்னு தான் அவரோட குறிக்கோளா இருந்துச்சு, இப்ப நாங்க  வளர்ந்து ஆளானதாலபத்து வருஷமா அடக்கி வாசிக்கிறாரு...  நான் செவன்த் படிக்கும் போது என் பர்த்டே அப்ப என் அப்பா  எங்க அம்மாவையும் எங்களையும் ரொம்ப வாய்க்கு வந்தபடி திட்டிட்டாரு ... அன்னைக்கு ரொம்ப அழுதுட்டேன் ... அதுக்கப்புறம் பர்த்டே ஆசையே விட்டு போச்சு ....  என் பர்த்டேவ நான் யாருக்குமே சொன்னதில்லை ... இந்த முறை தான் நீங்க அதை தெரிஞ்சுகிட்டு என்னை கோவா கூட்டிட்டு போனீங்க, சோ, நான் ரொம்ப சந்தோஷமா தான் இருக்கேன்..” என்றவளை அந்த இரவு விளக்கொளியில் கூட உற்றுப் பார்த்து ரசித்தவன் அவள் நெற்றியில் முத்தமிட்டு தன்னோடு பிணைத்துக் கொண்டான்.

 

அவனுக்கு அவன் மனையாளின் அழகு , குடும்பத்தின் மீது அவள் காட்டும் அக்கறைதிறமை, பொறுமை, அனைத்தும் பிடிக்கும் ... அதைவிட யாதொரு மேல் பூச்சும்வெற்று  ஜம்பமும் இல்லாமல்இயல்பாக வாழ்க்கையை  கடந்து செல்லும் பாங்கு அவனை வெகுவாகவே கவர்ந்திழுக்கதொடக்க கால ஈர்ப்புஇனக்கவர்ச்சி எல்லாம் பின்னுக்குத் தள்ளப்பட்டு, கண்ணுக்குத் தெரியாத உணர்வுபூர்வமான இணைப்பில் அவளோடு வெகுவாகவே ஒன்ற ஆரம்பித்தான்.

 

கற்பகத்திற்கு அறுவை சிகிச்சை வெற்றிகரமாக முடிவடையமூன்று நாட்கள் மருத்துவமனையில் ரங்கசாமி, அருணா , ராம்சரண் மாறி மாறி தங்கி இருந்து அவரை பார்த்துக்கொண்டனர்.

 

நான்காவது நாள் கற்பகம்  உடல் நிலை தேறிய நிலையில்  வீட்டிற்கு அனுப்பப்பட்டார் .

 

அதன் பின் ஒரு வார காலம் ரங்கசாமி தங்கியிருந்துஅவரை கவனித்துக் கொண்டு விட்டே ஊட்டிக்கு புறப்பட்டுச் சென்றார்.

 

கற்பகம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட தினத்திலிருந்தே, லட்சுமிக்கு எஸ்டேட் கணக்கு வழக்குகளோடு வீட்டு வேலையும் அதிகமாகிப் போயிருந்தது.

ராம் சரணை பற்றி சொல்லவே வேண்டாம். அவன்  தொடர்ச்சியாக ஐந்து நாட்கள் விடுப்பு எடுத்திருந்ததன் காரணமாக, அவன் பணிச்சுமை ஒன்றுக்கு பத்தாக உயர்ந்து  கழுத்தை நெரிக்க, மனையாளோடு நின்று பேச நேரமில்லாமல்  மடிக்கணினியோடே வலம் வந்து கொண்டிருந்தான்.

 

இந்நிலையில் ஒரு நாள் காலை உணவு உண்டு  கொண்டிருந்தவனின் பார்வை, வெந்தய நிறத்தில் பாசி பச்சை பார்டர் கொண்ட சுங்குடி புடவையில் அதிதி புதிரியாக அடுக்களையில் வேலை செய்து கொண்டிருந்தவளின் மீது ரசனையாய் படிய, உண்டு முடித்து கை கழுவிக் கொண்டு நெருங்கியவன், அவள் முந்தானையை பற்ற, ஆடவனின் திடீர் நெருக்கத்தால் மங்கையவள் திகைத்துப் திரும்ப 

 

"லஷ்மி... வீரா என்னை லஞ்சில் மீட் பண்றேன்னு சொல்லி இருக்கான் ... அவனுக்கும் ஒரு லஞ்ச் பாக்ஸ் பிரிப்பேர் பண்றியா ..." என்றான் தன் கரங்களை அவள் முந்தானையில் துடைத்தபடி.

 

அவன் அவளிடம் பட்டப் பகலில்  இப்படி நெருங்கி நிற்பதெல்லாம் வெகு புதிது.  அதைவிட பலர் அறிய அடுக்களையில் அவள் முந்தானையை பற்றி கொண்டிருப்பதெல்லாம் அதிசயத்திலும் அதிசயம்

 

அதனால் தான்அவள் லேசாக திகைத்து நிற்க,

 

"இது ஓல்ட் சாரி தானே  ... நீ உன் சாரில  கை தொடச்சிக்கிட்டதை பார்த்து தான் நானும் உன் சாரில  துடைச்சேன் ... " என்று கண் சிமிட்டி காரணம் கூறியவனை பார்த்து, லேசாக வாய் விட்டு சிரித்தவள்,

 

"கவலைப்படாதீங்க ... இது ஓல்ட் சாரி தான்  ... 5 மினிட்ஸ்  வெயிட் பண்ணுங்க அவருக்கும் சேர்த்து லஞ்ச் பாக்ஸ் ரெடி பண்ணி தரேன் ..." 

 

" ம்...ம்ம்ம்.... ஓகே ..." என அவள் விழிகளை பார்த்துக் கொண்டே  தலையசைத்தான்  முந்தானையை விடாமல்.

 

பார்ப்பதற்கு அந்த காட்சி மெய்யாகவே கவிதையாக தான் இருந்தது.

 

மௌனமும் இறுக்கமுமே ஆட்சி செய்து கொண்டிருந்த அவன் முகத்தில் , ரசனையும் மென்புன்னகையும் திடீரென்று தடம் பதித்திருந்ததை கண்டு  பெண்ணவள் லயித்துக் கொண்டிருந்த நேரத்தில் , தோட்டத்தில் குழந்தைகளோடு விளையாடிக் கொண்டிருந்த அருணா அதனைக் கண்டு காந்திக் கொண்டிருந்தாள்.

 

தன் சகோதரனின் நடவடிக்கையில் நாளுக்கு நாள் தெரியும் மாற்றம், அவள் மன அழுத்தத்தை எக்குதப்பாக எகுற வைத்திருக்க, இதே நிலை நீடித்தால் எள் என்றால் எண்ணெய்யாக தனக்கு சேவகம் செய்யும் தன் சகோதரனை மறந்துவிட வேண்டியது தான்  என அஞ்சியவள் அடுத்த கட்ட நகர்வுக்காக ஆழ்ந்து சிந்திக்கலானாள்.

 

அப்படி அவள் முடிவு எடுத்ததற்கு அந்த காட்சி மட்டும் காரணம் அல்ல .... மருத்துவமனையில் அருணாவின் ஆவேச பேச்சை கேட்டதிலிருந்து, ராம்சரண் அவளிடம் முன்பு போல் முகம் கொடுத்து பேசுவதை அறவே நிறுத்தி இருந்தான் ...

 

அருணாவிடம் மட்டுமல்ல கற்பகத்திடமும் அந்த ஒதுக்கத்தை கடைப்பிடித்தான் என்றே சொல்லலாம்.....

 

அப்படி அவனிடம் அப்பட்டமாக  தெரிந்த மாற்றத்தை ஏற்றுக் கொள்ள மனமில்லாமல்அவன்  திருமண வாழ்க்கையை முடிவுக்கு கொண்டு வர முடிவெடுத்து  முழு வீச்சில் இறங்கி வேலை செய்யலானாள்.

 

நாட்கள் வேகமாய் நகரஅந்த மாதத்திற்கான மாதவிலக்கு வர கலங்கிவிட்டாள் மாது .

 

இரண்டு நாட்கள் தள்ளிப் போயிருந்ததை எண்ணி மகிழ்ந்து போயிருந்தாள்.  

 

மழலைக்காக ஒவ்வொரு கணமும் அவள் மனம் துடித்துக் கொண்டிருந்த நிலையில்மாதவிலக்கு வந்துவிட துடித்து துவண்டு விட்டாள் அந்த அணங்கு .

 

ராம் சரணுக்கு குழந்தையை பற்றிய ஆசை  இருந்தாலும் மனையாள் தவிப்பதைக் கண்டு வெகுவாக கலங்கி  போனான்.

 

"இங்க பார் லக்ஷ்மி .... இந்த மாசம் இல்லன்னா அடுத்த மாசம் , அடுத்த மாசம் இல்லன்னா அதுக்கு அடுத்த மாசம் .... நமக்கு வயசு இருக்கு, வாலிபம் இருக்கு , அதைவிட எனக்கு உன் மேல ஆசை இருக்கு உனக்கு என் மேல அன்பு இருக்கு ... நிச்சயமா நமக்கு குழந்தை பொறக்கும் ... நீ இப்படி எல்லாம் கண் கலங்குகிறது   எனக்கு  ரொம்ப கஷ்டமா  இருக்கு .."  என்றவனின் கண்களும் கலங்கி இருக்க, தன்னவனும் வெளியே காட்டிக் கொள்ளாமல் உள்ளுக்குள் மருகுகிறான் என்பதை புரிந்து கொண்டவள்மழலையைப் பற்றிய தன் கவலையை தற்காலிகமாக தள்ளி வைத்தாள்.

 

அதன் பின் வந்த நாட்களில் புதிய திட்ட வரைவுக்காக ராம்சரண் 20 நாட்கள்  மொரிஷியஸ் சென்றிருக்கமீண்டும் தனிமை அவளை ஆட்கொள்ளமாமியாரின் ஜாடை மாடை பேச்சும்அருணாவின் அநியாய செயல்களும் அவளை ஆட்டிப் படைக்கதுவண்டு போனாள் பாவை .

 

தன்னவனிடம் இதைப் பற்றி  கூறலாம் என்றால்அவன் முன்பு பேசிய பேச்சும்மணியம்மை கூறிய அறிவுரையும் அவளுக்கு நினைவுக்கு வர, பல்லை கடித்துக் கொண்டு நாட்களைக் கடத்தலானாள்.

 

இந்நிலையில் அவர்களுக்கு தலை தீபாவளி வரவிருந்த நிலையில்,  பணிச்சுமை அதிகமாக இருப்பதால் வீடு திரும்ப கூடுதல் நாளாகும்எனவே  தலை தீபாவளியை  கொண்டாட முடியாது என அவன் அலைபேசியில் தொடர்பு கொண்டு  பொய் உரைக்க அதில் வெகுவாக கலங்கிப் போனாள் அவன் கண்ணாட்டி.

 

தீபாவளிக்கு நாட்கள் நெருங்க நெருங்கஊரே  தீபாவளி கொண்டாட  தயாராவதை பார்த்து  தலை தீபாவளியை தனித்து கொண்டாடுவதா என கலங்கியவள் மனதை திசை திருப்ப எஸ்டேட் கணக்கு வழக்குகளில் மூழ்கிப் போனாள்.

தீபாவளிக்கு இரண்டு நாட்கள் இருக்கும் நிலையில்மனதில் வெறுமை ஆட்கொள்ளஅறையில்  அடைந்து கிடக்க மனமில்லாமல் அருகில் இருந்த அம்மன் கோவிலுக்கு சென்று பிரார்த்தனை செய்துவிட்டு  திரும்பியவள், வீட்டில் அணியும் காட்டன் புடவைக்கு மாறிக் கொண்டிருக்கும் போதுதன் படுக்கை அறையின் கதவை யாரோ  லேசாக தட்டும் சத்தம் கேட்க, அருணாவின் குழந்தைகள் என எண்ணி,

 

"குட்டீஸ் உள்ள வாங்க .... "  எனக் கூறிக் கொண்டே அணிந்து முடித்த புடவையின் கொசுவத்தை அவள் சரி செய்து கொண்டிருக்க, பூனை நடையிட்டு  வந்து அவளைப் பின்புறமாக இறுக்கி அணைத்துக் கொண்டான் அவளது கணவன்.

 

சற்றும் எதிர்பார்க்காத அந்த தொடுகையில் விருட்டென்று திரும்பியவள்தன்னவனை கண்டதும்ஆச்சரியமும் அழுகையும் மேலிடகண்கள் கலங்கியபடி அவன் மார்பில் முகம் புதைத்து இறுக்கிக் கொண்டாள்.

 

"ஏய் லட்சுமி .... அழாத ....  நீ இவ்ளோ எமோஷனல் ஆவன்னு நான் கொஞ்சம் கூட எதிர்பார்க்கல....  சும்மா உனக்கு சர்ப்ரைஸ் கொடுக்கணும்னு தான் அப்படி ஒரு பொய்ய சொன்னேன்..." என்றான் அவள் தலைக்கோதி.

 

அவள் தலையை நிமிர்த்தாமல், லேசான விம்மலுடன் அவனை மேலும் இறுக்கிக் கொள்ள,

 

"லட்சுமி .... ப்ளீஸ் ... சும்மா விளையாடினேன் .... இப்படி ஃபீல் பண்ணுவேன்னு நான் எதிர்பார்க்கல .... நெக்ஸ்ட் டைம் இந்த மாதிரி எல்லாம்  விளையாட  மாட்டேன் ..."  என்றவன் தன் மார்பில் முகம் புதைத்திருந்தவளை  நிமிர்த்தி அவள் நெற்றியில் ஆழ்ந்த முத்தமிட்டான்.

 

அவளை அழைத்துச் சென்று நகை, பட்டுப் புடவை வாங்கிக் கொடுத்தவன், அருணாவிடம் பணம் கொடுத்து தன் தாய்க்கும் அவளுக்கும் அவள் குடும்பத்திற்கும் துணிமணிகள் எடுத்துக் கொள்ள சொல்ல மறக்கவில்லை.

 

ஸ்ரீலட்சுமியின்  இல்லத்தில் அவர்களது தலை தீபாவளி விமர்சையாக நடந்தேறியது. 

 

வழக்கம் போல் தியாகராஜன் சீர், சடங்கு என எதைப் பற்றியும் கவலைப்படாமல் விச்ராந்தியாக இருக்கருக்மணி தான் தன் மகள் சேர்த்து வைத்திருந்த பணத்தில் மேற்கொண்டு கொஞ்சம் பணம் போட்டுராம் சரணுக்கு  தங்கத்தில் மைனர் செயின் வாங்கி பரிசளித்தார்.

 

அவர்களது வீட்டின் பொருளாதார நிலைமையை அறிந்தவன் என்பதால்அவன் வெகுவாக மறுக்கவிடாப்பிடியாக  ஒற்றைக் காலில் நின்று மகள் மூலம் அவன் கழுத்துக்கு அணிவித்து மகிழ்ந்து போனார் ருக்மணி.

 

பிறகு வந்த நாட்கள் மின்னல் வேகத்தில் நகரமனையாளின் மீது மோகமும் காதலும் கூடியதற்கு இணையாக பாசமும் அன்பும்  பல்கி பெருக வெளியூர் செல்வது அவனுக்கு வேப்பங்காயாய் கசக்க ஆரம்பித்தது.

 

இந்நிலையில் ஒரு நாள் இரவுதன் அறையில் அலுவலகப் பணியை முடித்து  மடிக்கணினியை மூடி வைத்துவிட்டுமுகம் கழுவி உடைமாற்றி வந்து படுத்தவனின் பார்வைஅதே அறையில் மற்றொரு மூலையில் மடிக்கணினியில் ஆழ்ந்திருந்த மனையாளின் மீது ரசனையாய் படிய, ஓரிரு கணத்திற்கு பிறகு தன்னவன் உறுத்துப் பார்ப்பது  போல் உணர்ந்தவள், திரும்பிப் பார்க்க, அவனோ ஸ்ரீரங்கம் ரங்கநாதர் போல் படுத்துக்கொண்டு வேறெங்கோ பார்வையை செலுத்தி கொண்டிருப்பது போல் பாவனை செய்ய, அவள் மீண்டும்  தன் பணியில் மூழ்க, மறுபடியும் அவன் கண்கள் மோகத்தோடு அவள் மீது மேய, இம்முறை அவள் திரும்பிப் பார்க்கும் பொழுதும்அவன் விட்டத்தையே பார்த்துக் கொண்டிருக்க

 

"அவரு என்னையே  பாக்கறா மாதிரி தோணுதே..." என மனதோடு பேசிக்கொண்டே தன் நெற்றி முடியை  பின்னால் தள்ளிவிட்டு அவள்  மீண்டும் பணியில் மூழ்கஇப்படியே இருந்தா  வேலைக்காகாது என முடிவு எடுத்தவன் 

 

"எதுவும் சரியா தெரியலயே ..." என்றான் குறும்பாக.

 

"என்ன ... என்ன தெரியல ... ஓ லேப்டாப்  ஸ்கிரீன் தெரியலயா..." என்றபடி திரும்பிப் பார்த்தவள்அவன் முகத்தில் வழிந்தோடும் அதீத விரசத்தை கண்டு தான் அணிந்திருந்த புடவையை ஒருமுறை பார்த்து சரி செய்து விட்டு அவனை முறைக்க,

 

"நீ எதுக்கு உன் புடவையை பார்க்கிற... அதான் ஒண்ணுமே தெரியலன்னு வருத்தப்படறேனே..."

என்றவனை கோபத்தோடு பார்க்க முயன்று தோற்றவள் லேசான வெட்கச் சிரிப்போடு,

 

"ஸ்கூல்ல டீச்சரா இருந்திருக்கேன் ... அஸ் எ டீச்சர்... எங்களோட டிரஸ் கிளீன் அண்ட் டீசென்டா இருக்கணுங்கிறது தான் எங்களுக்கு சொல்லிக் கொடுக்கப்பட்ட முதல் பாடமே ...."

 

"ஓ... டீச்சர் அம்மா இல்ல... மறந்தே போயிட்டேன் ..... அதான் பாடம் எடுக்கறீங்க... ஆனா அது ஸ்கூலுக்கு ஓகே .... இங்க கண்ணுக்கு குளிர்ச்சியா கவர்ச்சியா இருந்தா தானே பாக்க நல்லா இருக்கும் ..."  என்றவனை ஆச்சரியத்தோடு பார்த்து

 

"நீங்களா இப்படி பேசறது ..." என்றாள் மென் புன்னகையோடு. 

 

"ஒழுக்கமா இருந்தவனஎப்படி மாத்தி வச்சிருக்க பாரு... சரி வாங்க டீச்சர்  தூங்கலாம் ..."

 

"இன்னும் கொஞ்ச வேலை இருக்கே...

 

"விட்டா விடிய விடிய வேலை செஞ்சுகிட்டு இருப்ப ... அப்பாவுக்கு தானே மெயில் அனுப்பனும் அது நாளைக்கு அனுப்பிக்கலாம் ..." என்றவன் கண்ணிமைக்கும் நேரத்தில் அவளை நெருங்கி மடிக்கணினியை மூடி வைத்துவிட்டுதன்னவளை கையில் ஏந்தி கொண்டான், காதல் விளையாட்டு விளையாட. 

 

நாட்கள் கரைந்தோட, ஒரு வாரம் கடந்தும் மாதவிலக்கு வராமல் இருக்க, மிகுந்த மகிழ்ச்சியோடு கர்ப்பத்தை உறுதிப்படுத்தும் சோதனை கருவியை வாங்கி சோதனை செய்தவளுக்கு ஏமாற்றமே மிஞ்சியதோடு, சோதனை செய்த மறு தினமே அவளுக்கு அந்த மாதத்திற்கான மாதவிலக்கு வந்துவிட, நொறுங்கி போனாள்.

 

கடந்த முறை போல் இல்லாமல் இந்த முறை ராம் சரணும் சற்று துவண்டு தான் போனான். 

 

ஆனாலும் வழக்கம் போல் அதனை வெளிக்காட்டிக் கொள்ளாமல் மனையாளை தேற்றுவதில் கருமமே கண்ணாக செயல்பட்டான்.

 

கைகளில்  தவழவிருந்த பொக்கிஷத்தை தவற விட்டு விட்டோமே ....  என இருவரும் தத்தம் மீதே மானசீகமாக பழி போட்டுக்கொண்டு மனம் துடித்தனர் ... மீண்டும் ஒரு பொக்கிஷம் கிடைக்காமலே போய்விடுமோ ... என்ற எண்ணமும் அவ்வப்போது தோன்றி அவர்களை அலைகழிக்க ,

அதனை அடுத்தவர்களிடம்  காட்டிக் கொள்ள மனமில்லாமல், இயல்பாய் காலத்தைக் கடக்க முயன்று அதில் ஓரளவிற்கு வெற்றியும் கண்டனர்.

 

ஒவ்வொரு மாதவிலக்கும் ஸ்ரீலட்சுமி , ராம்சரணுக்கு ஆழ்ந்த கவலையை பரிசளிக்கிறது என்பதை  கண்டும் காணாதது போல் பார்த்து ரசித்து மகிழ்ந்தனர் கற்பகமும் அருணாவும்.

 

இந்நிலையில் ராம் சரண் ஒரு வார காலத்திற்கு டெல்லி பயணமாகஅந்த ஒரு வார தனிமையும் வெறுமையும் அவளை மேலும் உருக்குலையச் செய்ய , நத்தை போல்  கூட்டில் முடங்க ஆரம்பித்தாள்.

 

திரும்பி வந்தவனுக்கு மனையாளின் மெலிவும் முகவாட்டமும் மனதை வாட்டபெரும்பாலும் ஒரே அறையில் அடைந்து கிடப்பது அவள் மன உளைச்சலை அதிகப்படுத்துகிறது என புரிந்து கொண்டவன்மறுநாள் தன்னவளோடு எங்காவது வெளியூர்  செல்ல முடிவெடுத்து இரு தினங்கள் அலுவலக  விடுப்பு எடுத்துவிட்டு  கற்பகத்திடம்,

 

"அம்மாநானும் லட்சுமியும் நாளைக்கு காலையில கிளம்பி  எங்கயாவது ஒரு  ரெண்டு நாள் ட்ரிப் போயிட்டு வரலாம்னு இருக்கோம் ..." என்றவன் முடித்தது தான் தாமதம்,

 

"எனக்கு ஆபரேஷன் முடிஞ்சு மூணு மாசம் கூட முடியல .... அதுக்குள்ளேயும் உன் பொண்டாட்டிய கூப்பிட்டுகிட்டு நீ ஊரு சுத்த ஆரம்பிச்சிட்டியா ...."  என்றார் ஈனஸ்வரத்தில் கோபத்தை அடக்கி.

 

"அம்மா .... என்னம்மா பேசற...  உனக்கு உடம்பு நல்லா ரெக்கவர் ஆயிடுச்சு .... நீ பழையபடி எழுந்து நடமாட ஆரம்பிச்சுட்ட .... எதுக்கும் அருணாவுக்கும் போன் பண்ணி சொல்லிடறேன்... அவ வந்து  கூட இருந்து உன்னை பார்த்து பா... ரெண்டு நாள்ல நானும் லட்சுமியும் திரும்பி வந்துடுவோம்... போதுமா ...."

 

என  முடித்துவிட்டு அவரது பதிலுக்காக காத்திராமல்  பயணத்திற்கான ஏற்பாடுகளை செய்யலானான்.

 

அன்று  இரவு பத்து மணி அளவில் , விடுப்பு எடுக்கப் போகும் நாட்களுக்கும் சேர்த்து அலுவலகப் பணியில் ராம்சரண் மூழ்கி இருக்கும் போது ஹரிஷிடமிருந்து அழைப்பு வந்தது .

 

"சொல்லுங்க ஹரிஷ் ...." என்றதும் எதிர் முனையில் அவனது குரல் தழுதழுக்க,

 

"சொல்லுங்க என்ன ஆச்சு ..." என்றான் ராம்சரண் பதற்றத்தோடு.

 

"என் அம்மாவுக்கு ரொம்ப சீரியஸா இருக்கு .... மூச்சு பேச்சு இல்லாம இருக்காங்க ... பல்ஸ் டவுன் ஆயிடுச்சு ... ஆம்புலன்ஸ்ல ஹாஸ்பிட்டலுக்கு கூட்டிக்கிட்டு  போய்கிட்டு இருக்கேன் .... குழந்தைகள பாத்துக்கிட்டு அருணா வீட்டுல இருக்கா ...."

 

"எந்த ஹாஸ்பிடல் சொல்லுங்க ..." என பதறியவனிடம்  ஹரிஷ் மருத்துவமனையின் பெயரை மொழிய,

 

"இன்னும் பத்து நிமிஷத்துல அங்க இருப்பேன் ... ஆமாஅத்தைக்கு திடீர்னு  என்ன ஆச்சு  .... லாஸ்ட் டைம் ஹாஸ்பிடல் போயிட்டு வந்ததுக்கு அப்புறம் ஓரளவு நல்லாவே இருந்தாங்களே .... அருணா கூட அவங்க  நல்லா இருக்கிறதா சொன்னாளே...." 

 

"என் அம்மா லாஸ்ட் டைம் ஹாஸ்பிடல்ல இருந்து திரும்பி வந்ததுக்கப்புறம் ஓரளவு நடமாடி கிட்ட  இருந்தாங்க .... 

 

திடீர்னு கொஞ்ச நாளா  நடமாட முடியாம படுத்துட்டாங்க ....

 

ஆனா சாப்பாடு சாப்பிடுவாங்க ஓரளவுக்கு நல்லாவே பேசிக்கிட்டும் இருந்தாங்க ...

 

 இன்னைக்கு மத்தியானத்துல  இருந்து தான் அவங்களுக்கு ரொம்பவே உடம்பு சரி இல்லாம போயிடுச்சு.... எதையுமே  சாப்பிட முடியல  .... சாப்பிட்ட மாத்திரை மருந்து கூட வயித்துல நிக்காம  வாந்தி வந்துடுச்சு .... இன்னைக்கு ஒரு  நைட்டு பாத்துட்டு நாளைக்கு காலையில டாக்டருக்கு போகலாம்னு நெனச்சுக்கிட்டு இருக்கும் போது , இந்த மாதிரி பேச்சு மூச்சு  இல்லாம ஆயிட்டாங்க ...." என்றவனின் குரலில் பதற்றம்அழுகைபாசம் என அனைத்தும் போட்டி போட்டுக் கொண்டு வெளிப்பட,

 

"கவலைப்படாதீங்க ஹரிஷ் ... அவங்க நல்லபடியா குணமாகி வீட்டுக்கு வந்துருவாங்க .... நான் கிளம்பிட்டேன் நீங்க அங்க ரீச் ஆகும் போது நானும் அங்க இருப்பேன் ..." என முடித்தவன்  கற்பகத்திடம் விவரம் சொல்லிவிட்டு, மிகுந்த தயக்கத்தோடு தன் அறைக்குள் நுழையலட்சுமியோ அவர்களது பயணத்திற்கு தேவையான துணிமணிகளை பயணப் பையில் அடுக்கிக் கொண்டிருந்தாள்.

 

ஒருவித சங்கோஜமும் சங்கடமும் அவனை ஆட்கொள்ளமெதுவாக

 

"லட்சுமி ..." என அழைத்து தன்னவளை தன்னோடு சேர்த்து நிறுத்திக் கொண்டு, சற்றுமுன் அலைபேசியில் வந்த செய்தியை அவன் பகிர, எதிர்பாராத அந்த செய்தி அவள் நெஞ்சை அழுத்த அதிர்ச்சியில் உறைந்து போனாள் அவன் மனையாட்டி. 

 

 

ஸ்ரீ-ராமம் வருவார்கள் .....

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 


Comments

  1. Supperrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrr

    ReplyDelete

Post a Comment