அத்தியாயம் 18
கண்ணாடி
சாளரத்தை சரியாக மறைக்காமல் விட்டிருந்த
திரைச்சீலையின் வழியாக, ஆதவனின் செந்நிற
கதிர்கள் லட்சுமியின் முகம் மீது சுள்ளென்று பரவ, மென்மையாய்
விழி மலர்த்தியவளுக்கு எதிர் சுவரில் மாட்டியிருந்த
ராஜஸ்தானி ஓவியம் கண்களை கவர , நேற்றைய தினம் காட்சிகளாய் மெல்ல
விரிய, லேசான வெட்க புன்னகையோடு கனவு
போல் நடந்த நிகழ்வுகளை அசை போட்டு பார்த்தாள் அவைகள் எல்லாம் மெய்யாகவே கனவாகி
போகப் போவதை அறியாமல்.
பிறகு மெதுவாக படுக்கையை விட்டு எழ
முயற்சித்தவள், அருகில் உறங்கிக்
கொண்டிருந்த கணவனின் முகத்தை ஆராய,
கருகரு கேசம், அகன்ற நெற்றி, பெரிய
கண்கள், கூரிய நாசி , அழுந்த
மோவாய் பள்ளம், சந்தனமும் குங்குமமும் கலந்த
பளபளக்கும் சருமத்தில் அயர்ந்து உறங்கிக்
கொண்டிருந்தவனின் நுனி மூக்கில் அவள் லேசாக முத்தமிட,
"ஏய் லக்ஷ்மி ...." என கிசுகிசுத்தவன் லேசாக புன்னகைத்தபடி கண்களைத் திறவாமலே அவள் கன்னத்தில் ஊர்ந்து மென்மையாக கடிக்க, அவன் செயலில் குழைந்தவள், அவன் பாரம் தாங்காமல் விலக முயல, அவளை அள்ளி தன் மறுபுறம் கடத்தியவன் முந்தைய தினத்தின் மிச்ச சொச்சங்களை மீண்டும் ருசித்துவிட்டே விலகினான்.
அடுத்த அரை மணி
நேரம் மீண்டும் ஒரு அழகான உறக்கம் இருவரையும் ஆட்கொள்ள, ஒருவித மோன நிலையில் உறங்கி, விழித்தனர்.
திருமணம்
முடிந்து கிட்டத்தட்ட ஒன்பது மாதங்களாக ஆகப்போகிறது ... இம்மாதிரி அமைதியான
சூழ்நிலையில் போதுமான அளவிற்கு ஓய்வெடுத்து, புத்துணர்வோடு அவள் கண் விழித்ததே இல்லை ...
அரக்கப் பறக்க
எழுந்து, வாரி சுருட்டிக்கொண்டு ஓடுவதே
வாழ்க்கையாக இருந்தவளுக்கு, இந்த இனிமையான ஏகாந்தம் மனதை
நிறைத்திருக்க , கணவனை இறுக்கி அணைத்தபடி கண்மூடி ரசித்து
கொண்டிருந்தவளிடம்,
"லட்சுமி...
டைம் என்ன ..." என்றான் உறக்கம் விலகாமல் அவள் கணவன் .
பெரும்பாலான
விடுதிகளில் குறிப்பாக ஐந்து நட்சத்திர விடுதிகளின் படுக்கை அறைகளில் கடிகாரம் இருக்காது.
வாடிக்கையாளர்கள்
கால நேரம் இல்லாமல் தனிமையை கொண்டாட வேண்டும் என்ற நோக்கம்.. உடன் வியாபார ரீதியான
மனப்பான்மையும் தான் காரணம் ...
அப்பொழுது தான்
அவளுக்கு அலைபேசி குறித்து நினைவு வர , வேகமாக
எழுந்து தேடிப் பார்த்தாள். எங்கு தேடியும் இருவரது
அலைபேசியும் கிட்டவில்லை .
"நம்ம
ரெண்டு பேரோட மொபைல் ஃபோனும் காணல ..." என்றாள் லேசான பதற்றத்தோடு .
"ஃபோனை
காணமா...." எனப் படுக்கையை விட்டு வாரி சுருட்டிக்கொண்டு எழுந்தமர்ந்தவன்,
"நல்லா
தேடினியா..."
" ம்ம்ம்ம்,
நம்ப ரூம்ல, நம்ப பேக்ல எல்லா இடத்துலயும்
தேடிட்டேன் கிடைக்கல ..."
துணுக்குற்றவன், கடைசியாக எப்பொழுது எங்கு பயன்படுத்தினோம் என
யோசிக்கும் போது கிடைத்த விடை நகை கடை.
அதன் பிறகு அவன்
பயன்படுத்தவே இல்லை.
எப்படி இருவரது
அலைபேசியும் மாயமானது என யோசிக்கும் போது தான் , நேற்று இரவு இருவரும் அறைக்கு திரும்பி இரவு உடைக்கு மாறிய
பின்னர் அவன் சலவை பிரிவுக்கு அழைப்பு விடுக்க ,
இரண்டாவது நிமிடத்தில் அவர்களது அறை கதவைத் சலவை பிரிவு ஊழியர் தட்டி
"சார்
லாண்டரி ..." என்றதும் கடற்கரையில்
பயன்படுத்திய ஈர துணிகளை உடை மாற்றும் குடிலில் இருந்த லாண்டரி பையில் இட்டு
எடுத்து வந்ததுடன், சற்று முன் இருவரும் அணிந்திருந்த ஆடைகளை ( அவன்
அணிந்திருந்த 3/4 பேண்ட்ல் இருவரது அலைபேசியும் இருப்பதை
மறந்து) திணித்து அந்த ஊழியரிடம் கொடுத்தது நினைவுக்கு வர,
"ஓ...
புல்ஷிட் ..." என்றவன் துரிதமாக விடுதியின் சலவை
பிரிவை தொடர்பு கொண்டு விவரத்தைக் கூறினான்.
"சார்,
நாங்க எப்பவுமே லாண்டரி பேக்ல இருக்கிற க்ளோத்ஸ அப்படியே
மஷின்ல வாஷ் பண்ண போட்டுடுவோம் சார் .... அதுல என்ன இருக்கு ஏது
இருக்குனு ஆராய மாட்டோம் ..."
" ஓ காட்
..."
"ஒரு
நிமிஷம் ... உங்க ரூம் நம்பரை மறுபடியும் சொல்லுங்க சார் ..."
"551"
"தேங்க்
காட் .... உங்களோடதெல்லாம் மஷின்ல செகண்ட் பீட்ல தான்
போடுவோம் சார்....இப்பவே உங்க செல்போனை தேடி தரேன் ..."
"தேங்க்யூ
சோ மச் ..." என்றவனிடம் 10வது நிமிடத்தில், அவர்களது இரு அலைபேசியும் வந்து சேர , அதில் அருணாவிடம்
இருந்து கிட்டத்தட்ட 50 விடுபட்ட அழைப்புகள் வந்திருந்தன.
24 மணி
நேரத்திற்கு முன்பு கோயம்புத்தூரில் நடந்தவை :
"அண்ணன்
இப்படி பண்ணனும்னு நான் கொஞ்சம் கூட எதிர்பார்க்கலம்மா ..... வீட்ல ஒருத்தருக்கு
இரண்டு பேர் இருக்கோம்.... நம்ம கிட்ட ஒரு வார்த்தை சொல்லாம கண் கட்டு வித்தை மாதிரி அண்ணிய கூப்பிட்டுகிட்டு, அதுவும் விடிகால பிளைட்ல கோவா போயிருக்கு .... என்னால இதை தாங்கிக்கவே
முடியல ..." என சீரியல் வில்லி போல் ஆங்காரத்தோடும் ஆற்றாமையோடும் இடவலமாக
அருணா நடை பயில, கேட்டுக் கொண்டிருந்த கற்பகத்திற்கு
காதில் திராவகத்தை ஊற்றியது போல் இருக்க, எரிச்சலும்
புகைச்சலுமாய் கண்கள் சிவந்து
"எனக்கு
தெரியாது... நீ என்ன பண்ணுவியோ ஏது பண்ணுவியோ ... இன்னைக்கு நைட்குள்ள அவன் இங்க
வந்து ஆகணும் ...." என்றார் கோபத்தின் உச்சத்தில்.
"அண்ணன்,
இப்பதான் போய் லேண்ட் ஆயிருக்கு .... உடனே வான்னு கூப்பிட்டா நல்லாவா
இருக்கும் ..."
"நீ
சொல்றதும் சரி தான் ... ஆனா இன்னைக்கு ராத்திரியாவது அவன் அங்கிருந்து கிளம்பி
ஆகணும்..."
இருவரும் அன்றைய
பகல் முழுவதும்
யோசித்து, திட்டமிட்டு, அதற்கான ஏற்பாடுகளை செய்து முடிப்பதற்குள் மாலை மறைந்து, இரவு தொடங்கி இருக்க, அதனை நடைமுறைப்படுத்த
எண்ணி அருணா ராம் சரணின் அலைபேசிக்கு அழைப்பு
விடுக்கவும், ராம் சரண் தன் அலைபேசி அடங்கிய துணிமணிகளை
சலவைத் தொழிலாளரிடம் கொடுக்கவும் சரியாக இருந்தது.
இரவு எட்டு
மணிக்கு மேல் ராம்சரணுக்கு அழைப்பு விடுக்கத் தொடங்கிய அருணா, நள்ளிரவு வரை தன் பணியை செவ்வனே
பெருத்த வன்மத்தோடு மேற்கொண்டாள்.
ஆனால் பலன் தான்
கிட்டவில்லை.
ராம்சரண் இரவில்
தன் அலைபேசியை அமைதி நிலைக்கு தள்ளினாலும் குறைந்தபட்சம் அதிர்வுகளில் வைப்பது
வழக்கம் என்பதால், மனம் தளராமல் தன் பணியை தொடர்ந்து செய்து
களைப்புற்று போனாள்.
"அண்ணன்
ஃபோனையே எடுக்க மாட்டேங்குது.... லேண்ட் லைன்க்கு அடிச்சு கூப்பிடலாம்னா எந்த
ஹோட்டல்ல தங்கி இருக்குன்னு தெரியல .... "
"ஏதாவது
ஸ்டார் ஹோட்டல்ல தான் தங்கி இருப்பான்..." --- கற்பகம்
"கோவால
நிறைய ஹோட்டல் இருக்கும்மா.... எல்லா ஹோட்டலுக்கும் போன் பண்ணி
விசாரிக்கவா முடியும் ..."
" எது
எப்படி இருந்தாலும் , 24 மணி நேரத்துக்குள்ள அவன் இங்க
இருக்கணும் ..." என்றவரின் முகத்தில் அப்போது
காணப்பட்ட விகாரத்தையும் வில்லத்தனத்தையும் ராம் சரண் மட்டும்
கண்டிருந்தால், தாய் மீது வைத்திருக்கும் பாசத்தை
தலையை சுற்றி விட்டெறிந்து இருப்பான் ....
தன் மகள் அருணா
அவள் கணவனுடன் உல்லாச
பயணம் மேற்கொள்வதை ஏற்பவர், தன் மகன் அவன் மனைவியுடன்
உல்லாச பயணம் மேற்கொண்டதை ஏற்க மாட்டாமல்
பொருமுகிறார்.
தன் மகள்
அருணாவிற்கு அவள் கணவனிடம் இருக்கும் அதே உறவும் உரிமையும் உணர்வும் தான், மருமகள்
லட்சுமிக்கும் தன் மகனிடம் இருக்கும் என்பதை கற்பகம்
போன்ற மாமியார்கள் சடுதியில் மறந்து விடுகின்றனர்.
தன் மகளுடன்
மாப்பிள்ளை உல்லாசமாக நேரத்தை காலவரையின்றி
கழிக்கலாம் … ஆனால் தன் மகன் மருமகளுடன் நேரம் செலவழித்து விடக்கூடாது ...
மருமகளைப் பழி
வாங்குவதாக எண்ணிக்கொண்டு, மகனை மறைமுகமாக பழி தீர்த்து விடுகிறார்கள்
இம்மாதிரியான சில 'டாக்ஸிக்(Toxic)
அம்மாக்கள்' ....
அவர்களுக்கு
எல்லை என்ற ஒன்றே கிடையாது .... தாய்க்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும் ....
முற்றிலும் சரியே ... அதே சமயத்தில் தன் மகனின் திருமணத்திற்கு பிறகு அவர்கள் தங்களுக்கான வரையறையை
அறிந்து நடந்து கொள்ள வேண்டும் என்பதும் முக்கியமானது தான்.
ஏன் உன்
மனைவியோடு திரைப்படத்திற்கு சென்றாய் .... ஏன் அவளை வெளியூர் அழைத்துச்
சென்றாய் .... நண்பனின் திருமணத்திற்கு ஏன் அவளோடு ஜோடி போட்டுக் கொண்டு
சென்றாய்....
போன்ற அபத்தமான
கேள்விகளால் ஆழமாக அடியூன்றி வளர வேண்டிய உறவுகளை அடிப்படையிலேயே அழித்து விடுகின்றனர் ...
சில இடங்களில்
தன் மகன் அவன் மனைவியோடு சென்றால் தான் பாந்தமாக இருக்கும் என்ற அடிப்படை அறிவு
கூட இல்லாமல், தன் உரிமை
பறிபோவதாக எண்ணிக்கொண்டு தொட்டதற்கெல்லாம் பொறாமையும் போட்டியும் போட்டு ,
தன் இருப்பை காட்டி, சலிப்பும் சஞ்சலத்தையும்
எடுத்த எடுப்பில் உருவாக்கி, ஆல் போல் தழைத்து அருகு
போல் வேரூன்ற வேண்டிய உறவுகளை ஒன்றுமில்லாமல் செய்து விடுகின்றனர் இவ்வகை
அம்மாக்கள் ....
டாக்ஸிக்
அம்மாக்களில் பல
நல்ல ரகங்களும் உண்டு ...
மகனுக்காக அவனது
பள்ளி காலத்தில் இருந்து அவன் ஊழியராக அலுவலகம் செல்லும் வரை அதிகாலை 5 மணிக்கே விழித்தெழுந்து
உணவு தயார் செய்து கொடுப்பது அருகமர்ந்து பரிமாறுவது என தன் பாசத்தை
பறைசாற்றுபவர்கள் இருக்கிறார்கள் ....
தன் மகனின்
உருவாய், தன் குடியின் வாரிசாய் பேரக்குழந்தைகள்
வேண்டும்.... அவர்களுக்கு சிறு சிறு விஷயங்களை கூட தானே
செய்து பழக வேண்டும் என்ற எண்ணத்தில் இருப்பவர்கள் ஏராளம்….
மகனுக்கு இணையாக
மருமகள் அலுவலகம் சென்றால், தன் மகனின் பொருளாதார நிலையை உயர்த்த தானே அவள்
பாடுபடுகிறாள் என்ற
மகன் மீதான
பாசத்தில், தன்னாலான
உதவிகளை வீட்டில் மருமகளுக்கு செய்து பழகும் மாமியார்களும் உண்டு ...
இவர்களும்
தங்கள் மகன் மீது ஈடில்லா பாசம் வைத்திருப்பவர்கள் .... தன் மகன் தனக்கே சொந்தமானவன் என்பதை சமயம் வரும் போது
எல்லாம் நிலை நாட்டுபவர்கள்... அதே போல் தங்கள் இருப்பை
எப்பொழுதும் முன்னிறுத்திக் கொண்டே இருப்பார்களும் கூட.... ஆனால் அதையெல்லாம்
அவர்கள் பறைசாற்றும் விதமானது மகனுக்கோ மருமகளுக்கோ , அல்லது
அவர்களது குடும்ப வாழ்க்கைக்கோ ஏதோ வகையில் உறுதுணையாகவும் உதவியாகவும் இருப்பதைப்
போல் பார்த்துக் கொள்வது தான் அவர்களது சிறப்பம்சம் ...
அதாவது அவர்கள்
தங்கள் உரிமையை நிலைநாட்டுவதற்கு முன்பாக தங்கள் கடமையை பல வகையில் நிலைநாட்டி
விடுகின்றனர் ...
ஆனால் கற்பகம்
போன்றவர்கள் மகன்களின் வாழ்விற்காக சிறு துரும்பை கூட அசைக்காமல், கடைசி காலத்தில்
காப்பாற்றும் எல்ஐசி பாலிசி , ஓய்வூதிய தொகை போல் அவர்களை கருதி பெற்று வளர்த்ததே தங்களைப் பேணுவதற்காக தான் என்று சட்டமாக பல
சந்தர்ப்பங்களில் தெரிவித்து,
இருக்கும் கொஞ்சநஞ்ச பாச பயிரினையும்
ஒன்றுமில்லாமல் கருகடித்து விடுகின்றனர் ...
மகன்களுக்கென்று
குடும்பம் குழந்தை அமைந்து விடக்கூடாது அப்படியே அமைந்தாலும், அந்த
வாழ்வு நிலைத்துவிடக் கூடாது ... என்பதில் குறியாக செயல்படுகின்றனர் ....
இவர்களைப் போன்ற
சுயநலமிக்கவர்களால் தான் தனி குடுத்தனங்களும் முதியோர் இல்லங்களும் பெருகி
வருகின்றன ...
சுயநலம் மிக்க
மனிதர்களை விட தலைசிறந்த
தாய் பாசம் பறவைகள் இடத்திலும் விலங்குகள் இடத்திலும் தான் உள்ளது ...
முட்டையிட்டு
குஞ்சு பொரித்து பேணி காப்பதோடு சரி .... ரெக்கை முளைத்த குஞ்சுகளிடம் எதையும்
எதிர்பார்க்காமல், அவைகள் சிறகடித்து பறப்பதை சிலாகிக்கும்
பக்குவம் பகுத்தறிவில்லாத அந்த ஜீவன்களிடம் உள்ளது ...
உறவு என்பது
கண்ணாடி போன்றது ... நாம் எப்படி இருக்கின்றோமோ அதைத்தான் அது வெளிப்படுத்தும் ...
திருமணம்
முடிந்து புகுந்த வீட்டிற்கு வரும் பெண்ணின் ஆரம்பக் கால வாழ்க்கையை அனுசரித்து
அழகாக பேணும் மாமனார் மாமியார்களுக்கு கடைசி வரை அழகான கூட்டுக் குடும்பத்துடன்
வாழும் வாழ்க்கை அமைந்துவிடுகிறது ....
திருமணம்
முடிந்து முதல் ஓராண்டிற்கு மட்டும் தான் கணவன் மனைவிக்கான உல்லாச வாழ்க்கையே....
குழந்தை பிறப்பிற்கு பிறகு பொறுப்புகள் கூடி அவர்களது உலகம் 180 டிகிரியில்
வித்தியாசமாக சூழலும் ..... என்ற நிதர்சனத்தை
உணர்ந்து, வந்திருக்கும் பெண்ணின் உறவை விட உணர்வுக்கு
மதிப்பளிப்பவர்களுக்கு கூட்டுக் குடும்ப வாழ்க்கையும் மதித்து நடத்தும் உறவுகளும்
இயல்பாகவே அமைந்து விடும் ...
ஆனால் சிலரோ
எதைப் பற்றியும் யோசிக்காமல் தன்னிடம் அதிகாரம் உள்ளது, உறவு உள்ளது என்பதற்காகவே புகுந்த வீட்டிற்கு வந்த பெண்ணிடம் வரதட்சணையில் இருந்து ஆரம்பித்து சமயம் கிடைக்கும் போதெல்லாம் வாய்க்கு வந்தபடி தன் ஆளுமையை
நிலைநிறுத்த முற்படுகின்றனர் , எல்லா வினைக்கும் எதிர் வினை
உண்டு என்பதை மறந்து.
மனித மனங்கள்
பட்ட துன்பங்களையும் கடந்து வந்த அவமானங்களையும் என்றைக்குமே மறக்காது…
அவர்களுக்கான தருணம் வரும் பொழுது நியாய தர்மத்தை பற்றி சிந்திக்காமல்,
தான் பட்ட துயரத்திற்கு பழி தீர்த்துவிடும்... என்பதற்கேற்ப அந்த
யுவதிகள் தனி குடித்தினங்களை தங்களுக்கு தேர்வு செய்து கொண்டு மூத்தவர்களுக்கு
முதியோர் இல்லங்களை பரிசளித்து விடுகின்றனர்.
இரு கைகள் தட்டினால் தான் ஓசை என்பது போல், திருமணத்திற்கு முன்பே மாமனார் மாமியாருடன் வசிக்க மாட்டேன் என்ற நிபந்தனையோடு வரும் பெண்களும் உண்டு ... திருமணம் முடிந்து ஒரே வருடத்தில் தாய் தந்தையாய் பார்த்துக் கொள்ளும் மாமியார் மாமனாரை பற்றி அவதூறு பரப்பி தனி குடுத்தனம் செல்லும் பெண்களும் உண்டு ....
இங்கு எந்த உறவு
முறையையும் நல்லவை தீயவை என்று வரையறுக்க முடியாது .... அந்த உறவை ஏற்று
நடத்தும் கதாபாத்திரம் நல்லவையா தீயவையா என்பதை தான் ஆராய்ந்துணர்ந்து செயல்பட
வேண்டும் என்ற நிதர்சனத்தை இன்னும் சில மனித மனங்கள் புரிந்து கொள்ளவேயில்லை என்பது தான் நிச்சயமான
உண்மை.
சுயநலம் மற்றும் பொறாமையின் காரணமாக அருணாவிற்கு அண்ணி என்ற உறவு முறையும், கற்பகத்திற்கு மருமகள் என்ற உறவு முறையும் வேப்பங்காயாய் கசந்ததால், லட்சுமியை வாழ விடக்கூடாது என அடாது அராஜகங்களை அரங்கேற்றத் தொடங்கினர் .... எதிர்காலத்தில் அண்ணன் என்ற உறவு முறை அறவே அற்று போக போவதும், மகன் என்ற உறவு முறை மண்ணோடு மண்ணாக மக்கி போகப் போவதையும் அறியாமல் ..
தற்போது :
அருணாவின்
விடுபட்ட அழைப்பை பார்த்ததும், ராம்சரண் அவளை தொடர்பு கொள்ள,
"என்ன
ஆச்சு ... ஏன் இத்தனை தடவை கால் பண்ணி இருக்க ..."
"நீ
வாட்டுக்கு அண்ணிய கூப்பிட்டுகிட்டு கோவாவுக்கு ஊரை சுத்த போயிட்ட.... அம்மாவுக்கு
வயித்து வலி அதிகமாயிடுச்சு .... ஹாஸ்பிடல்ல சேர்த்திருக்கேன் ...."
என்றவளின் பேச்சில் பொறாமை கொப்பளிக்க,
"நேத்து
வரைக்கும் நல்லா தானே இருந்தா.... திடீர்னு என்ன ஆச்சு ...."
"அப்பன்டிசைட்டிஸ்
வலி அதிகமாயிடுச்சு அண்ணே”
" எப்படி
...."
"நான்
சொன்னா உனக்கு புரியாது நீயே டாக்டர்கிட்ட பேசு ....
அவரோட போன் நம்பர் உனக்கு ஷேர் பண்றேன் ...." என
அழைப்பை துண்டித்தாள்.
உடனே அருணா
பகிர்ந்திருந்த மருத்துவரின் எண்ணிற்கு அவன் அழைப்பு விடுக்க, மறுமுனை உயிர் பெற்றதும்,
அவன் தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டு கற்பகத்தின் உடல் நிலையை பற்றி
விசாரிக்க
"உங்க அம்மாவுக்கு கிரானிக் அப்பன்டிசைட்டிஸ் கிட்டத்தட்ட ஒரு வருஷமா இருக்கு அது உங்களுக்கும் தெரியும் .... பொதுவா கிரானிக் அப்பன்டிசைட்டிஸ் ரேர் ஒன் ... அக்யூட் அப்பன்டிசைடிஸ் மாதிரி அதிக தொல்லைகள் கொடுக்காதுங்கிறதால அதுக்கு ஆப்ரேஷன் பண்ணனும்னு அவசியம் இல்லை .... அப்பப்ப லேசா வலி வரும் அதுக்கு டாக்டர் கொடுத்த டேப்லெட்ஸ் எடுத்துக்கிட்டா சரியாயிடும் .. இத்தனை நாள் அவங்க அப்படித்தான் இருந்திருக்காங்க ... இப்ப திடீர்னு வலி அதிகமா இருக்குன்னு சொல்றாங்க … ஸ்கேன் எடுத்து பார்த்தா, அப்பெண்டிக்ஸ் லேசா வீங்கி இருக்கு ... அதுக்கு ஆபரேஷன் பண்ணனும்னு கூட அவசியம் கிடையாது .... ஆனா அவங்க வலி அதிகமாக இருக்குன்னு சொன்னதால, பண்ணிட்டா நல்லது ... அதான் நாளைக்கு ஆபரேஷன்க்கு அரேஞ்ச் பண்ணி இருக்கோம் ..." என்று முடித்தார்.
அனைத்தையும்
கேட்டுக் கொண்டிருந்த லட்சுமிக்கு துக்கம் தொண்டையை அடைத்தது.
ஆனால் அதனை
அருணாவின் திட்டம் என்று அவளால் சொல்ல முடியவில்லை.
மருத்துவ
அறிக்கை இருக்கிறது ... மருத்துவர் தெளிவான விளக்கம் கொடுக்கிறார் என்கின்ற
நிலையில் தன் விதியை நொந்து கொள்வதை தவிர வேறு வழி இல்லை என கலங்கியவளுக்கு
தெரியாது தாயும் மகளும் தங்களுடைய
மாஸ்டர் மைண்டை தெளிவாக பயன்படுத்தி திட்டம் தீட்டி இருக்கின்றனர் என்று.
குறிப்பாக ராம்
சரணுக்கு சந்தேகம் வராத அளவிற்கு தெளிவாக காய் நகர்த்தியிருந்தனர்.
கற்பகத்திற்கு
கிரானிக் அப்பன்டிசைட்டிஸ் இருந்தாலும், அது ஆடிக்கு ஒரு நாள் அமாவாசைக்கு ஒரு நாள் என்று தான் தன் இருப்பை லேசாக
காட்டும் .... அதுவும் மருத்துவர்
பரிந்துரைத்த மருந்து மாத்திரைகளை எடுத்துக் கொண்டால், உடனே
வலி பஞ்சாய் பறந்து விடும் என்பதால் இத்துனை காலம் அறுவை சிகிச்சையை பற்றி
நினைத்துப் பார்க்காமல் அதனை தள்ளிப் போட்டுக் கொண்டிருந்தார்.
தற்போது
மருத்துவ அவசரம் என்றால் மட்டும்தான் ராம் சரணை துரிதமாக வரவழைக்க முடியும்
என்பதால் மாத்திரைகளுக்கு கட்டுப்படாமல் வலி
அதிகரித்தால் எதிர்காலத்தில் அறுவை சிகிச்சை செய்து
அகற்றி விடலாம் என்ற மருத்துவரின் அறிவுரையை தற்போது தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்டு ராம்சரணுக்கு
அழைப்பு விடுத்திருந்தனர்.
துக்கம் நெஞ்சை
அழுத்த, அதனை வெளிக்காட்டிக் கொள்ளாமல்
ஊருக்கு கிளம்புவதற்காக துணிமணிகளை பெட்டியில் அடுக்கியவளை,
ராம்சரண் வாங்கிக் கொடுத்த புது துணிகள்
எல்லாம் பாவமாக பார்ப்பது போல் தோன்ற, கண் கலங்கி விட்டாள் பாவை.
கடந்த 24 மணி நேரமாக ஆயிரம் வோல்ட் சோடியம்
வெளிச்சத்தில் பிரகாசித்தவளின் முகம் தற்போது
இருளடைந்திருப்பதை கண்டு செய்வதறியாது அணைத்துக் கொண்டவன்,
"ஹேய்
லட்சுமி .... உன்னோட பேரா கிளைடிங், பேரா செய்லிங் ,
ஸ்கூபா டைவிங்னு ஜாலியா டைம் ஸ்பென்ட் பண்ணலாம்னு வந்தேன் ... இப்படி இந்த ட்ரிப் பாதில கேன்சல்
ஆகும்னு நான் எதிர்பார்க்கல.. ரொம்ப பீல் பண்ணாத .... கோவா
இங்கேயே தான் இருக்கும் ... மறுபடியும் வரலாம் ... பத்து நாள் இருக்க மாதிரி சரியா
...." என்று அவள் நெற்றியோடு நெற்றி முட்டி குழந்தையை சமாதானப்படுத்துவது
போல் பேசியவனின் மார்புக்குள் அழுத்தமாக முகம்
புதைத்துக் கொண்டாள்.
கிளம்ப மனமே
இல்லாமல் , வேறு
வழியும் இல்லாமல், " கம் லெட்ஸ் பேக் அவர்
திங்க்ஸ் லட்சுமி” என்றவன் பயணத்திற்கான ஏற்பாட்டில்
துரிதமாக இறங்கினான்.
நான்கு நாட்கள்
தங்க இருப்பதாக முன்கூட்டியே ஏற்பாடு செய்து,
அதில் இரண்டு நாட்களுக்கானதை முன் பணமாக செலுத்தியிருந்தான்.
விடுதியின் விதிமுறைப்படி அப்பணம் திரும்பத் தர மாட்டாது என்பதை அறிந்ததால் அதனை கேட்காமல், மற்ற சடங்குகளை முடித்துவிட்டு, விமானத்தில் பயணிக்க உடனே பயணச்சீட்டும் கிடைத்துவிட இருவரும் தளர்ந்த மன நிலையில் ஊர் திரும்பினர்.
"அண்ணே,
நீ அம்மாவ பத்தி யோசிக்காம அண்ணியோட கோவா போயிட்ட ... அம்மாவுக்கு
வயிற்று வலி அதிகமாயி துடிச்சு
போயிட்டாங்க தெரியுமா ..." என்றாள் மீண்டும் பொறாமையில்.
"உனக்கு
நான் கோவா போனது பிரச்சனையா... இல்ல அம்மாவுக்கு வயித்து வலி வந்தது பிரச்சனையா
..." என்றான் முதன்முறையாக தன் கோபத்தை வெளிப்படுத்தி.
" என்ன
அண்ணே... இப்படி பேசுற அம்மாவுக்கு வயித்து வலி
வந்துருச்சேன்னு ஒரு ஆதங்கத்துல பேசினா அதை போய் தப்பா எடுத்துக்கிற ..."
" ஒரு வேளை நான் ஆன்சைட்ல இருந்திருந்தா இப்படித்தான் போன் பண்ணி கூப்பிட்டிருப்பியா ....." என்ற எதிர்பாராத கேள்வியில் அருணா சற்று ஆடித்தான் போய்விட்டாள் .... அண்ணன் சரியாக யோசிக்க ஆரம்பித்து விட்டான் என்று அறிந்ததும் , உடனே பேச்சை மடைமாற்ற எண்ணி,
"அண்ணே
நீ லோக்கல்ல இருக்கறதால தான் உனக்கு போன் பண்ணி
கூப்பிட்டேன்... ஆன்சைட்ல இருந்தா போன் பண்ணி
கூப்பிட்டிருக்க மாட்டேண்ணே..... அம்மாவுக்கு உடம்பு சரியில்ல ஆஸ்பத்திரில
சேர்த்து இருக்கேன்னு உனக்கு போன் பண்ணி சொல்லி உன் ட்ரிப்ப கேன்சல் பண்ணிட்டு வர சொன்னது தப்புன்னு இப்பதான் புரியுது
...." என்று லட்சுமியை எரித்து விடுவது போல் பார்த்துக் கொண்டே
அவள் நீலி கண்ணீர் வடிக்க ஆரம்பிக்க ,
" ம்ச்...
அருணா ... இருக்கிற பிரச்சினைல நீ வேற அழுது ஊர கூட்டாத.... அப்பா, ஹரிஷ்க்கு சொல்லிட்டியா ...."
" ம்ம்ம்,
ஹரிஷ் இன்னும் ஒன் ஹவர்ல வந்துடுவாரு ... அப்பா ராத்திரிக்குள்ள
வந்துடுவேன்னு சொல்லி இருக்காரு ..."
" சரி வா
அம்மாவ போய் பாக்கலாம் ..." என்ற ராம்சரண் விறுவிறுவென்று கற்பகம்
அனுமதிக்கப்பட்டிருந்த அறைக்குள் நுழைய,
"வாப்பா
... உனக்கு அம்மா தங்கச்சியை விட உன் பொண்டாட்டி பர்த்டே முக்கியமா போயிடுச்சு இல்ல…” என கற்பகம்
ஆரம்பிக்க,
"அம்மா
புரியாம பேசாத ..." என்றவன் விடுதியில் நடந்ததை விளக்க, இயல்பாக தலை அசைத்தனரே ஒழிய அதனை உள்வாங்கிக் கொள்ளும் மனநிலையில் தாயும்
மகளும் துளி கூட இல்லை.
அவன் பேசி
முடிக்க காத்திருந்தவர்,
"எப்பவாச்சும்
என்னையும், அருணாவையும் ஒரு முறையாவது கோவாக்கு
கூட்டிக்கிட்டு போகணும்னு உனக்கு தோணிச்சா ..." என்றவரை
புரியாமல் பார்த்தவன்,
"நீ
அப்பாவோட கோவா போயிருக்க இல்ல .... அருணாவும் ஹரிஷ் ஓட போயிருக்கா .... நான்
எதுக்காக உங்க ரெண்டு பேரையும் கூட்டிக்கிட்டு போகணும் ..." என்றான் தாய் தன் வரையறை தெரியாமல் பேசுவதை மறைமுகமாக சுட்டிக்காட்டி.
அவர் பதில் பேச
முடியாமல் திணறிக் கொண்டிருக்கும் போது அங்கு வந்த ஹரிஷ், ராம்சரணிடம் நலம்
விசாரித்துவிட்டு,
"நீங்க
ரெண்டு பேரும் ரொம்ப டயர்டா இருக்கீங்க... வீட்டுக்கு போய், பிரஷ் ஆயிட்டு வாங்க ... நான் இங்க இருந்து பார்த்துக்கிறேன் ..."
என அனுப்பி வைத்தான் தன் மனையாளையும் மாமியாரை நன்கு அறிந்திருந்ததால்.
இருவரும் வீடு
திரும்பி புத்துணர்வு பெற்று, மீண்டும் மருத்துவமனையை அடையும் பொழுது, அங்கு
வந்திருந்த ரங்கசாமி அருணா, கற்பகத்திடம்
ஆடி தீர்த்துக் கொண்டிருந்தார் ...
"ஒரு அப்பன்டிசைட்டிஸ் ஆபரேஷனுக்கு , ஊரையே கூட்டணுமா ... இது என்ன ஓபன் ஹார்ட் சர்ஜரியா.... இதுக்காக தான் கோவா போனவனுக்கு போன் போட்டு கூப்பிட்டீங்களா ..... எப்பவும் ஆபீஸ் வேலைன்னு சுத்திகிட்டு இருக்கிறவன் , இப்பதான் பொண்டாட்டிய கூப்பிட்டுகிட்டு கோவா போனான்… அது உனக்கும் உன் பொண்ணுக்கும் பொறுக்கலையா.... பக்கத்துல இருக்கிற எனக்கு போன் பண்ணி சொல்லிட்டீங்க நானும் வரேன்னு சொல்லிட்டேன் .... எதுக்காக சரணுக்கு போன் பண்ணி கூப்பிட்டீங்க ..." என உச்சஸ்தாயில் ரங்கசாமி கொந்தளித்துக் கொண்டிருக்க, லட்சுமியின் முன்பு அவர் சாடுவதை கற்பகம் அருணா, கௌரவ குறைச்சலாக கருதினாலும் , நினைத்ததை சாதித்து விட்டோம் என்ற ஆத்ம திருப்தியில் அடக்கி வாசிக்க, தந்தையின் பேச்சு முதன்முறையாக நடந்த சம்பவத்தை வேறு கோணத்தில் சிந்திக்க வைக்க, தன் தாயையும் தங்கையையும் ஆராய்ச்சி பார்வையால் அளவிடத் தொடங்கினான் ராம்சரண்.
ஸ்ரீ-ராமம்
வருவார்கள் ....
Superb.. please ma'am atleast one episode 2 days once..We are very eager for the next one
ReplyDeletesure ma... i will try dr
DeleteSupperrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrr
ReplyDeletethanks ma
Delete🤩🤩👍👍👍 story semmaya poguthu sis... Waiting for priya ud...
ReplyDeletethanks a lot dr
ReplyDelete