ஸ்ரீ-ராமம்-17

 அத்தியாயம் 17 

 

காலையில் மணி ஏழரையை கடந்தும்   கணவன் மனைவி இருவரும் சிறு அசைவு கூட இல்லாமல் ஆழ்ந்த நித்திரையில் இருந்தனர்.

நீண்ட நாட்களுக்குப் பிறகு, நிர்மலமான மனதோடு  கடந்த கால  உறக்கங்களை எல்லாம் சேர்ந்து வைத்து உறங்கிக் கொண்டிருந்தவர்களை கற்பகத்தின் ஓங்கார குரல் சென்றடைய,  

 

"ம்ச் ... " என்றபடி மனையாளை இன்னும் இறுக்கி அணைத்து அவளது கழுத்தில் முகம் புதைத்த படி ராம்சரண்  உறக்கத்தை தொடர , கற்பகத்தின் குரல் இன்னும் வீரியமாக ஒலிக்க, உறக்கம் களைந்து சுயம் உணர்ந்த லக்ஷ்மிவாரி சுருட்டி கொண்டு எழ,

 

"தூங்குடி ...." என்றான் கண்களை திறவாமல்.

 

"இல்ல... நேரமாச்சு .... அத்தை சத்தம் போட்டுகிட்டு இருக்காங்க .... நான் போகணும் ...." என்றவள் அவனது பதிலுக்கு காத்திராமல்குளியலறைக்குள் புகுந்து கொண்டாள்.

 

அவள் குளித்து முடித்து சுடிதார் அணிந்துக்கொண்டு நிலை கண்ணாடியின் முன்பு தலைவாரிக் கொண்டிருக்கும் போது கூட , அசைவு ஏதுமில்லாமல் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தான் அவளது கணவன்.

 

இத்துனை நாட்களாக தூக்கி சுமந்த ஏதோ ஒன்றை இறக்கி வைத்த நிம்மதியில் குழந்தை போல் உறங்குபவனைரசித்துப் பார்த்தவள் அடுக்களைக்குச் சென்று வழக்கம் போல் அன்றைய பணிகளில் மூழ்கி போனாள்.

 

எட்டு மணியைத் தாண்டி அடுக்களைக்கு வந்த மருமகளை எரிப்பார்வை பார்த்தார் கற்பகம் .

 

வழக்கம் போல் அருணா கூடத்தில்  இரவு உடையில் சோபாவில் படுத்தபடி தொலைக்காட்சி பார்த்துக் கொண்டிருக்க, அவளது இரு குழந்தைகளுக்கும் சமையல்கார பெண்மணி பூஸ்ட்டை இரு குவளைகளில் ஊற்றி  உணவு மேஜையில் பரிமாறிக் கொண்டிருந்தார்.

 

லட்சுமி களத்தில் இறங்கி, காலை உணவு தயாரித்தலை தொடங்கி வைத்துவிட்டு கணவனுக்கு காபி தயார் செய்து எடுத்துச் சென்றவள் , குளித்து முடித்து ஈரத் தலையை துவட்டிக் கொண்டே வந்தவனை நெருங்கி,

 

" காபி ..."  என்றாள் லேசான யோசனையில்.

 

இரவில் விளைந்த சமரசம் இனிமையை கூட்டி இருக்க,  கண்களில்  குறும்பை  தேங்கிய படி, அவள் இடைப்பற்றி தன்னோடு அணைத்துக் கொண்டவன்,

 

"என்ன யோசனை ..." என்றான் அவள் விழிக்குள் பார்த்து.

 

"நேத்து நீங்க சொன்ன இன்சிடென்ட் இன்னும் மனச விட்டுப் போக மாட்டேங்குது .... குழந்தையை காப்பாத்தினது நல்ல விஷயம் தான் .... ஆனாலும்...... இனிமே கொஞ்சம் ஜாக்கிரதையா இருங்க .... ப்ளீஸ் " என்றவளின் அன்றலர்ந்த தாமரை முகத்தை லயித்துப் பார்த்தவன்

 

"நான் என்ன ஸ்டண்ட் மாஸ்டரா.... டெய்லி அப்படி ஒரு சீன் போட .... ஏதேச்சையா நடந்த விஷயம் லட்சுமி... இருந்தாலும் இனிமே ஜாக்கிரதையா இருக்கேன் போதுமா ..." என  அவள் கன்னத்தில்  முத்தமிடும் போதுஅருணாவின் இரண்டு குழந்தைகளும் 'மாமா' என்று ராகம் பாடிக்கொண்டே அவர்களது அறைக்குள் நுழையவிருட்டென்று தன்னவனிடமிருந்து விலகி நின்றாள் பெண்.

 

இரண்டு வயது கூட நிரம்பாத குழந்தைகள் ... பார்க்க அத்துணை அழகு .... ஒரே மாதிரியான உடுப்பை வெவ்வேறு நிறங்களில் அணிந்து கொண்டு துருதுருப்பாக வலைய வரும் குழந்தைகளை ஆளுக்கு ஒன்றாய் கைகளில் அள்ளிக்கொள்ள, 'மாமா மாமா' என அவைகள் ஏதேதோ கதைக்க அந்த நிமிடம் இனிமையாக தான் கழிந்தது.

 

குழந்தைகளை யாருக்குத்தான் பிடிக்காது .... எவ்வளவு மன அழுத்தம் இருந்தாலும் குழந்தைகளோடு  ஒன்றும் போது அவைகள் மாயமாய் மறைந்து விடும் ... 

 

ஒரு குழந்தையை பறிகொடுத்திருந்தவளுக்கு இந்த குழந்தைகளின் வரவு மருந்தாய் இருந்ததென்னவோ வாஸ்தவம் தான் ....

 

குழந்தைகளை குளிக்க வைப்பது, உணவு கொடுப்பது , உடை மாற்றுவது என தன்னாலானவைகளை அவள் செய்யகுழந்தைகளும் அவளுடன் ஒன்றிக்கொள்ளநேரம் இனிமையாக தான் கழிந்தது ...

 

சில நேரங்களில் அருணா கொடுக்க தவறும் மருந்து மாத்திரைகளை கூட , நேரம் தவறாமல் அவளிடம் ஒரு வார்த்தை உறுதிப்படுத்திக் கொண்டு குழந்தைகளுக்கு கொடுப்பாள்...

 

ஆனால் நள்ளிரவு வரும் வரை குழந்தைகளை அவர்களது அறையில்  விட்டு வைக்கும் அருணாவின் குணம் தான் அவளுக்கு எரிச்சலை மூட்டியது ....

 

குழந்தைகளாய் விரும்பி வந்து அவர்களது அறையில் விளையாடிக் கொண்டிருந்தால்  பரவாயில்லை ... கூடத்தில் ஓடி விளையாடும் குழந்தைகளை வேண்டுமென்றே அள்ளி வந்து  அவர்களது அறையில்  திணிக்கும்  அருணாவின்  செயல் லட்சுயின் கோபத்தை அளவுகோல் இல்லாமல் அதிகரிக்கச் செய்ய, அதனை வெளிக்காட்டிக் கொள்ள முடியாமல் தடுமாறிக் கொண்டிருந்தாள் பாவை.

 

மாமியாரின் முணுமுணுப்புஜாடை மாடையான குத்தல் பேச்சுகள், அருணாவின் அராஜகங்கள்கணவனுடன் மனம் கொள்ளா நெருக்கம் என அவள் காலம் சுழன்றோடியது .

 

திருமணமான புதிதில் இருந்த ஈர்ப்பு மோகத்தை காட்டிலும்தற்போது கணவன் மனைவிக்கிடையே காதலும் பாசமும் கரைபுரண்டோடதாபம் சில நேரங்களில் தலை தூக்கினாலும் தருணம் வராததால், அதனைப் புறந்தள்ளிவிட்டு நேச பேச்சுக்களில் மட்டும் காலம் கடத்தினர்.

 

இந்நிலையில் மாதவிலக்கு வந்து வயிற்று வலி, உடல் சோர்வுஅதிக உதிரப்போக்கு  என பல்வேறு சிரமங்களுடன்  ஐந்து நாட்கள் அவளை  பாடாய்படுத்தி விட்டு செல்லகலங்கிப் போனான் அவளது கணவன்.

 

என்னதான் மருத்துவர் அது இயல்பானது எனக் கூறினாலும்உடனிருந்து அனைத்தையும் கண்டிருந்ததால்  அவனுள் ஒரு இனம் புரியாத வலி, பயம் ஏற்பட, மழலைக்கான  அடுத்த அடியை எடுத்து வைக்க வெகுவாக தயங்கினான்.

 

மனையாளின் மீது கட்டுக்கடங்காத மோகமும் தாபமும் பொங்கி வழிந்தாலும்  இன்னொரு கருச்சிதைவை அவளது உடலும் மனமும் தாங்காது என்ற சிந்தனையில் சிக்கித் தவித்ததால்  அவளை ஆட்கொள்ளவும் முடியாமல் அடக்கி வாசிக்கவும் முடியாமல் தடுமாறி போனான்.

 

ஏற்கனவே அரைகுறை பயத்தில் இருப்பவளிடம் தன் மனக்கவலையை கூறி கலங்கடிக்க மனம் இல்லாமல், அப்படியே காலம் கடத்துவதும் திருமண வாழ்விற்கு நல்லதன்று என்பதால் தனியாகச் சென்று மருத்துவரை சந்தித்து தன் மன ஓட்டத்தை பகிர்ந்தான். 

 

" உங்க தாட்ஸ் அப்சல்யூட்லி நார்மல் மிஸ்டர் ராம்சரண்  ... இன்ஃபேக்ட் நீங்க உங்க ஃவைப்பை  அதிகமா நேசிக்கிறதால தான் இந்த மாதிரியான பயங்கள் எல்லாம்  தோணுது .... இது கொஞ்ச நாள்ல சரியாயிடும் ... அடுத்த  குழந்தை நல்லபடியா பொறக்கும்னு முதல்ல நீங்க நம்பனும் ... அப்பதான் உங்களால இயல்பா உறவுல ஈடுபட முடியும் .... முக்கியமா கொஞ்ச நாள்  ஆபீஸ்க்கு லீவு போட்டுட்டு உங்க ரொட்டீன் லைஃபை மறந்துட்டு,   வைஃப் ஓட எங்கேயாவது புது இடத்துக்கு போய் நிம்மதியா இருந்துட்டு வாங்க .... நியூ  என்விரான்மென்ட் எல்லாத்தையும் மாத்தும் .... அதைவிட முக்கியமான ஒன்னுகுழந்தை வேணுங்கிறதுக்காக உங்க வைஃப்பை நெருங்காம, உங்க சந்தோஷத்துக்காகவும் அவங்க சந்தோஷத்துக்காகவும் நெருங்குங்க  அப்ப  உறவும் வாழ்க்கையும் ரொம்ப  சந்தோஷமா இருக்கும் ....  அப்படி இயல்பா  எந்தவித மன அழுத்தமும் இல்லாம நடக்கும் சேர்க்கை தான் இம்மிடியட்டா  கன்சீவ் ஆக ஹெல்ப் ஃபுல்லா இருக்கும்  ........" என மருத்துவர் அறிவுறுத்தி அனுப்ப, அதனை  நடைமுறைப்படுத்துவதற்கான வழிமுறைகளை யோசித்தபடி வீடு வந்து சேர்ந்தான். 

 

ஓரிரு தினங்கள் கழியஒரு நாள் அதிகாலையில் அயர்ந்து உறங்கிக் கொண்டிருந்தவளை தட்டி எழுப்பி,

 

" லட்சுமி .... சுடிதார் மாத்திக்கிட்டு சீக்கிரம் கிளம்பு..” என்றான்.

 

காலை மணி நான்கு என கடிகார முட்கள் காட்டிய நிலையில்அரைகுறை உறக்க விழிகளோடு தன்னவனை பார்த்து,

 

"எங்க ....அதுவும் இப்ப ..." என்றாள் குழறியபடி.

 

"எல்லாம் கார்ல போகும் போது சொல்றேன் .... போய் பிரஷ் ஆயிட்டு சுடிதார் மாத்திகிட்டு  வா ..."  என அவன் அவசரப்படுத்த, குளியலறைக்குச் சென்று ஓரளவிற்கு புத்துணர்வு பெற்று உடைமாற்றி வந்தவளை அலேக்காக அள்ளிக் கொள்ளாத குறையாக அழைத்துச் சென்று காரின் முன்பக்க கதவை திறந்து அமர வைத்தவன், அருகமர்ந்து  காரை மின்னல் வேகத்தில் இயக்கினான்.

 

"எங்க போறோம் ..." 

 

"கோவா ...."

 

"கோவா ...?... ஏன் திடீர்னு ..."

 

"நாளைக்கு என் பொண்டாட்டிக்கு பர்த்டே  ...."  குறுகுறுவென பார்த்து மொழிந்தவனிடம் லேசான யோசனையோடு  மெல்லிய புன்னகை பூத்தவள்,

 

"எப்ப..... எப்படி தெரியும் ..." என தடுமாறினாள்.

 

உண்மையைச் சொல்ல வேண்டும் என்றால்அவர்களது திருமணம் முடிந்து கூட அவளது பிறந்தநாளை தெரிந்து கொள்ள வேண்டும் என்ற எண்ணமெல்லாம் அவனுக்கு இருந்ததில்லை.  

சமீபத்தில் கொடுத்த மருத்துவ அறிக்கையில் தான் அவளது பிறந்த நாளையே அவன் அறிந்து கொண்டிருந்தான். அதனை தற்போது அப்படியே மனம் திறக்க மனமில்லாமல் 

 

"உங்க அம்மா  சொன்னாங்க ..." என்றான்.

 

இதுவும்  பொய்யல்ல. அவளை தன் இல்லத்திற்கு அழைத்து வர எண்ணியவன் அது குறித்து   ருக்மணியிடம் பேசும் போதுஅந்த மாத இறுதியில் அவளுக்கு பிறந்தநாள் வருவதாக அவர் எதேச்சையாக  கூறியிருந்ததை தற்போது பயன்படுத்திக் கொண்டான். அவ்வளவே....

 

 

" டிரஸ்ஸை எதுவுமே பேக் பண்ணலையே ..."

 

"சாரீஸ்சுடிதார் எல்லாம் அங்க செட் ஆகாது .... அங்க போடற மாதிரியான டிரஸ்ஸை ஆல்ரெடி  பர்ச்சேஸ் பண்ணிட்டேன்..." அவள் புரியாமல் அவனைப் பார்த்து

 

"அது  எப்படி ...." என்றாள். 

 

"அது அப்படிதான் ..." என்றான் விஷமமாக.

 

அடுத்த பத்து நிமிடத்தில் கார் விமான நிலையத்தை அடைய,  அங்கு கடைபிடிக்க வேண்டிய அனைத்து சடங்குகளையும் செய்து முடித்தவன்விமானத்தில் ஏறி மனையாளின் கரம் கோர்த்து நடந்தபடி தங்களுக்கென ஒதுக்கப்பட்ட இடத்தில்  வந்தமர்ந்தவன்அவர்களது திருமணத்தின் போதிருந்த மனநிலையை காட்டிலும்மிகுந்த மகிழ்ச்சியோடு இருந்தான் என்றே சொல்லலாம்.

 

உளவியலாளர் மணியம்மை சொன்னது போல்திருமணத்தின் போது அவள் மீது ஈர்ப்பும் தன் மனைவி என்ற உரிமையும் மோகமும் மட்டுமே இருந்தது.

 

இடையில் ஏற்பட்ட இந்த இழப்பிற்கு பிறகுஅவளை அறிந்து கொள்ள அவனுக்கு அவகாசம் கிடைக்க, அது காதல், அன்பு, பாசம், நேசம் என அனைத்து உணர்வுகளையும் அவள் மீது கட்டவிழ்த்து விட்டிருந்தது. 

 

முதன்முறை தேன்நிலவிற்காக ஊட்டிக்கு பயணிக்கும் போது உள்ளுக்குள் ஆசை அரும்பி இருந்தாலும்அதனை ஒரு சடங்காய் தான் அப்போதிருந்த  மனநிலையில் எண்ணியிருந்தான்.

 

தற்போது மேற்கொள்ளும்  இந்த கோவா பயணம் தான்  ஏதோ தேன்நிலவு பயணம் போல் அவன் மனதுக்குள் பசை போட்டு ஒட்டிக்கொண்டு அவனை சிலிர்க்கச் செய்ய, குதூகலமான மனநிலையோடு மனையாளுடன் பயணமானான் .

 

கிட்டத்தட்ட இரண்டு மணி நேர பயணத்தில்இயந்திரப் பறவை தரையிறங்க, "வெல்கம் மிஸ்டர் அண்ட் மிஸஸ் ராம்சரண்" என்ற   பெயர் பலகையோடு  விமான நிலைய வாசலில் அவர்களை அழைத்துச் செல்ல காத்திருந்த டாக்ஸி டிரைவரிடம் தங்களது பயணப் பொதிகளை கொடுத்து விட்டு  டாக்ஸியில் ஏறி , முன்பதிவு செய்திருந்த ஐந்து நட்சத்திர விடுதியை நோக்கி  பயணப்பட்டார்கள்.

 

 

கோயம்புத்தூர் சென்னையை தாண்டி அவள் எங்குமே பயணித்ததில்லை.

 

முதன்முறையாக வேறு மாநிலம் , அதுவும் தன் மனம் கவர்ந்த மணாளனுடன் யாதொரு பிக்கல் பிடுங்கல் இல்லாமல் பயணித்தது அவளுள் ஆயிரம் ஆயிரம்  உற்சாகத்தையும் உத்வேகத்தையும்  ஊற்றெடுக்கச் செய்ய, மகிழ்ச்சி வெள்ளத்தில் மூழ்கிப் போனாள் மங்கை.

 

கோவாவில் வெள்ளை நிற மென்மையான மண் துகள்கள் கொண்ட  Varca beach  தனிப்பட்ட முறையில் தனது வாடிக்கையாளர்கள் மட்டும் பயன்படுத்தும் வகையில் பிரம்மாண்டமாக அமைந்திருந்தது அந்த ஐந்து நட்சத்திர விடுதி.

 

ஏதேதோ படங்களில் கண்டிருக்கிறாள் இன்று தான் கண்கூடாக பார்க்கிறாள்... பணத்தின் செழிமையும் நாகரிகத்தின் உச்சமும் பின்னிப்பிணைந்து மயக்கமூட்டும் வகையில் அவள் கண்களுக்கு விருந்தளிக்க, புதுவித உலகில் அடியெடுத்து வைத்தது போல் அனைத்தையும் அணு அணுவாக ரசிக்க ஆரம்பித்தாள்.

 

அப்போதுதான் ஒன்றைக் கண்டாள். அவள் தழைய தழைய  அணிந்து கொண்டிருந்த சுடிதார் தான், அங்கு அவளை  அரைகுறை ஆடை அணிந்திருந்தவர்களிடமிருந்து வித்தியாசமாக காட்டஅதனை அவள் பார்வையில் இருந்தே படித்தவன், குலுங்கி சிரித்தபடி 

 

"Be a Roman in Rome " என அவள் காதுகளில் கிசுகிசுக்கஅவள் முகம் அந்தி வானமாய் சிவந்து போனது .

 

இருவரும் காலை உணவை முடித்துக் கொண்ட பிறகே அறையை அடைய, ஒரு கையால்  கதவைத் தாழிட்டு கொண்டே மறுக்கையால் மனையாளை அணைத்தவன்

 

" லட்சுமி ..." என்றான் வெகு மென்மையாய்.

 

"நாம எப்ப பீச்சுக்கு போலாம் ..." என்றாள் குழந்தையாய் .

 

"இப்பவே போலாம் ... அதுக்காகத்தானே டிரஸ்ஸஸ் எல்லாம் வாங்கிட்டு வந்து இருக்கேன்..." என்றபடி கொண்டு வந்த சூட்கேஸிலிருந்து விதவிதமான ஆடைகளை வெவ்வேறு  நிறங்களில் எடுத்து அவன் கடை பரப்பஉறைந்து போனவள் ஒவ்வொன்றாய் எடுத்துப் பிரித்துப் பார்க்கஅனைத்துமே அழகாகவும் நேர்த்தியாகவும் நாகரீகமாகவும் அவளைப் போன்ற மனநிலை கொண்ட பெண்கள் அணிவதற்கு தகுந்தார் போலவும் இருந்தது.

 

 

அதில் பெரும்பாலான ஆடைகளில் கைகள் இல்லாமல்ஃபிரில்கள் அதிகம் வைத்துமுட்டியை தாண்டி அழகாக குடைப்போல் விரிந்திருக்கும் அம்பிரல்லா கட் கொண்ட கவுன்கள் ...

 

பத்து வயதுக்குள் இருக்கும் குழந்தைகள் அணிவது போல் இருந்தாலும், அசிங்கமாக இல்லாமல் அவள் உடல் கட்டிற்கு அழகாக பொருந்துவது  போல் வாங்கி இருந்தான்.

 

உடலை ஒட்டியது என்றாலும் நாகரீகமான துணியில் வடிவமைக்கப்பட்ட டி-ஷர்ட் மற்றும் ¾ பேண்ட்கள் அழகழகான வண்ணங்களில் ஷார்ட் ஸ்கர்ட், லாங் ஸ்கர்ட்  என வாங்கி குவித்து இருந்தான் ...

 

அவள் ஒவ்வொரு ஆடையையும் தன் மேல் வைத்துப் பார்க்க,

 

"ஏய் ஒழுங்கா போட்டு காமி ... கரெக்டா இருக்கான்னு நான் பாக்கணும் ..." என்றான் குறும்போடு.

 

 

அவள் தயங்க,

 

"ஏன் பிடிக்கலையா .." 

 

"இல்ல எல்லாமே நல்லா இருக்கு ... ஆனா இதுவரைக்கும் நான் ஸ்லீப்லெஸ் போட்டதில்ல அதான் ஒரு மாதிரியா இருக்கு ..."

 

"எந்த மாதிரியும் இருக்காது எல்லாமே உனக்கு அழகா இருக்கும் ... இந்த ஸ்விம்சியூட்  போட்டுக்கிட்டு வா ... பீச்ல போய் ஒரு சின்ன  ஆட்டம் போட்டுட்டு வரலாம் ...."  என்றவன் பேசிக் கொண்டிருக்கும் போதே அவன் அலைபேசி சிணுங்கியது .

 

அருணா தான் அழைத்திருந்தாள்.

 

"சொல்லு அருணா ..." என்றான் இயல்பாக  .

 

" உன்னையும் அண்ணியையும் வீடு முழுசும் தேடி பார்த்துட்டேன் ..... நீங்க ரெண்டு பேரும் எங்க இருக்கீங்க  ..." என்றாள் ஒருவித பரபரப்போடு.

 

" கோவால..." என்றான் உற்சாகமாக.

 

"கோவா வா .... அங்க எதுக்கு நீ போன ... அதுவும் அண்ணிய கூட்டிக்கிட்டு ..." என்ற அபத்தமான கேள்வியை எதிர்முனையில் அவள் கேட்டு வைக்க,

 

"எதுக்காக கோவா வருவாங்க ... சுத்தி பார்க்க தான்…”

 

மறுமுனையில் மயான அமைதி ...

 

"எதுக்கு இப்படி சொல்லாம கொள்ளாம கோவாக்கு போன..." என்றாள் விடாப்படியாக .

 

அண்ணன் தங்கைக்கிடையேயான சம்பாஷனையை உள்வாங்கிக் கொண்டே துணிகளை மடித்து வைத்துக் கொண்டிருந்தாள் லட்சுமி. 

 

"நாளைக்கு உன் அண்ணியோட பர்த்டே.... எங்க கல்யாணத்துக்கு அப்புறம் வர்ற முதல் பர்த்டே ... அதான் அவளை இங்க கூட்டிகிட்டு வந்தேன்..."

 

"சொல்லிட்டு வந்திருக்கலாமே ..." என்ற எரிச்சல் எதிர் முனையில் வீரியமாக வெளிப்பட,

 

"உனக்கும் அம்மாவுக்கும் விஷயம் தெரிஞ்சாலஷ்மிக்கும்  தெரிஞ்சிடும் ... அவளுக்கு சர்ப்ரைஸ் கொடுக்கணுங்கிறதுக்காக தான் யார்கிட்டயும் சொல்லாம அவள கூட்டிகிட்டு வந்தேன்..." என்று வெள்ளந்தியாக விளக்கம் கொடுத்து கொண்டு இருக்கும் கணவனை, லட்சுமி ஆழ்ந்து நோக்க,

 

" சரி ...." என்று எதிர் முனையில் அழைப்பை வெடுக்கென்று துண்டித்தாள் அருணா. 

 

குறைந்தபட்சம் நான்கைந்து  நாட்கள் தங்கும் மனநிலையில் அவளை அழைத்து வந்திருக்கிறான் அவள் கணவன்  என்பதை அறிந்தவளுக்கு அருணா பேசி முடித்ததை வைத்து கூடிய விரைவில் இந்த பயணம் ரத்த ஆகும் என்று அவள்  உள்ளுணர்வு உரைக்க, ஏனோ சமந்தா சம்மந்தம் இல்லாமல், வாலி திரைப்படத்தில் அண்ணன்(வில்லன்)  அஜித்தின் காட்சிகள் அவள் மன கண்ணில் வந்து போகதலையை குலுக்கிக் மனதை சரி செய்தவள்  குளியலறைக்குச் சென்றுநீச்சல் உடையை அணிந்து அதன் மேல் பூத்துவலை கொண்டு மூடியபடி வெளிப்பட்டாள்.

 

" டவலை எடு ..." என்றான் அவளை நெருங்கி.

 

" ஒரு மாதிரி இருக்கு ..."

 

"எந்த மாதிரியும் இருக்காது ... டூ பீஸ் ஸ்விம்சியூட்டா போட்டிருக்க ... சிங்கிள் டாப் தானே... " என்றவன் தானே அவள் போர்த்திருந்த பூந்துவலையை விலக்க, பளிங்கு பெட்டகமாய் காட்சி அளித்த மனையாளை கண்டு உறைந்து தான் போனான் .

 

நடிகைகளை கூட அவன் அங்குலம் அங்குலமாக  ரசித்துப் பார்த்ததில்லை .... ஆனால் அவன் மனைவியை அணு அணுவாக ரசித்துக் கொண்டிருந்தான்....

 

ஆலிலைப் போன்று ஒட்டிய நாபிக் கமலத்தை கொண்டவளின் உதரம் சற்று தின்மையாக பெருத்து காணப்பட்டதுஅவர்களது 5 மாத இழப்பை உணர்த்த....

 

அது லேசான வலியை  கொடுக்க, மனதை திசை திருப்ப எண்ணி அவளது தேகத்தில் அவன் கண்கள் மேயஅந்த உடை அவளை கவர்ச்சியாக காட்டாமல்நேர்த்தியாகவும் அழகாகவும் காட்டியது மேலும் புதுவிதமான வனப்பை கொடுக்க, வாய்விட்டே

 

"வாரே வாவ் ..." என்றான் ஆதி அந்தமாய் ஆழ்ந்து பார்த்து.

 

அவள் நாணி கோணி குனிய,

 

"கம் லெட்ஸ் கோ ..." என்றவன் தானும் நீச்சல் உடைக்குமாறி , அவளை அள்ளிக் கொள்ளாத குறையாக கடற்கரைக்கு அழைத்துச் சென்றான்.

 

அங்கு யாரும் எவரையும் கண்டு கொள்வதாக இல்லை....

 

அவரவர்கள் தத்தம் குடும்பம் குழந்தைகளோடு கடல் அலைகளில் ஆட்டம் போடஅதை எல்லாம் ஒரு முறை சுழற் பார்வை பார்த்துவிட்டு தான்இயல்புக்கு திரும்பி இருந்தாள் அவன் பெண்.

 

இருந்தாலும் கரையிலிருந்தே அலைகளைப் பார்த்துக் கொண்டிருந்தவளைஅள்ளிக்கொண்டு போய் கடலில் போட்டு உடன் தானும் குதித்து குளித்து களித்தான் அவளது கணவன்.

 

திறந்தவெளியில் குழந்தைகளை போல் ஓடி ஆடி சாகரத்தில் குளித்து சரசம் செய்தவனின் ஸ்வரத்திற்கு ஏற்பஈடு கொடுத்தாள் அவன் பாவை. 

 

ஆக்ரோஷ அலைகள் இல்லாமல்கல் கட்டிகள் ஏதுமில்லாமல்வெண்மையான மென்மையான மென் மண் துகள்கள்  கொண்ட அந்தக் கடற்கரை அவர்களைக் கட்டிப்போட மதிய உணவை மறந்தும் நீந்தித் திளைத்தனர் ...

 

 

சூரியன் அஸ்தமிக்கும் போது தான்  மணிக்கணக்காக தண்ணீரில் ஆட்டம் போட்டு கொண்டிருக்கிறோம்  என்பதே சிந்தையை  தொட, உடன் பசியும் வயிற்றைக் கிள்ள, அங்கிருந்த குடில்களில் உடை மாற்றிக் கொண்டுஇரவு உணவு உண்ண , உணவு விடுதிக்குச் சென்றனர்.

 

அப்போது அவள் அணிந்திருந்த வைன் நிற கவுன்பளிச்சென்ற சிற்பமாய்  அவளை அழகாக காட்ட, இறுக்கி அணைத்துக் கொண்டவன் 

 

"ரொம்ப அழகா இருக்க ..." என ஜொள்ளு விட  ,

 

" ஐயோ இது ரூம் இல்ல ..."

 

"இங்க ரூம், ரோடு எல்லாம் ஒன்னு தான் ..." என்றவன் கோவாவின் சிறப்பம்சமான கடல்வாழ் இன உயிரினங்களின்  உணவுகளை வரவழைத்தான்.

 

சுவை சற்று வித்தியாசமாக இருந்தாலும்நாவிற்கு இதமாக இருக்க வயிறார உண்டு முடித்த கையோடுஅந்த நட்சத்திர விடுதியின் எதிரில் அமைந்திருந்த புகழ்பெற்ற நகை கடைக்கு அழைத்துச் சென்று வைரமும் மரகதக் கற்களும் பதித்த  தோடு, அட்டிக்கை , வளையல்கள், மோதிரம் சகிதமாக இருந்த நகை பெட்டியை வாங்கி

 

"அட்வான்ஸ்டு ஹாப்பி பர்த்டே மை குயின் ..." என கண்களில் காதல் வழிய அவளுக்கு பரிசளித்தான்.

 

இத்தனை வருட பிறந்த தினங்களில்  அவள் கேக் வெட்டி கூட கொண்டாடியது இல்லை.

 

தன் தாயுடன் கோவிலுக்கு சென்று வருவாள்.  அவளுக்கு பிடித்த சேமியா பாயசத்தை முந்திரியும் நெய்யும் மணக்க ருக்மணி செய்து தருவார் ...

 

சில சமயங்களில் புதிய உடுப்பு கிடைக்கும் ... பல சமயங்களில் இருந்ததில்லை ...

 

இப்படிப்பட்ட நடுத்தர வர்க்கத்து வாழ்க்கையை வாழ்ந்து வந்தவளுக்கு, இவையெல்லாம் புதுமையாகவும், விசித்திரமாகவும் இருந்ததோடு, பிடித்தும் இருந்தது .

 

"இவ்வளவு செலவு எதுக்கு ..."

 

"ஏய் லட்சுமி ... உனக்குன்னு இல்ல அருணா, அம்மாவோட  பர்த் டேக்கு கூட  இந்த மாதிரி வாங்கித் தந்திருக்கேன் ... உனக்கு பிடிச்சிருக்கான்னு சொல்லு... அது போதும் ..." 

 

அங்கிருந்ததிலேயே அவன் தேர்வு செய்தது மிக அழகாக இருக்க, தலையசைத்து தன் விருப்பத்தை அவள் தெரிவிக்க, மகிழ்ச்சியோடு வாங்கியவன் மையலோடு அறைக்கு வந்தான் மனையாளிடம் மனம் கொள்ளா காதல் புரிய.....

 

 

நீண்ட நாட்களுக்குப் பிறகு அன்றைய தினம் முழுவதும் மனையாளை தொட்டு, பற்றி , இழுத்து , அணைத்து ஏகோபித்து விளையாடியிருந்தது அவன் உணர்வுகளை தட்டி எழுப்பி  இருக்கபாவையின் பார்வையிலும் அவனுக்கான அழைப்பு பளிச்சென்று தெரிய

 

காரிகையை கரங்களில் ஏந்தி அவள் கனி இதழில் முத்திரை பதித்தவன், மெல்லிய மலர்களை தொடுதல் போல் மங்கையின் மெய் தீண்டி அவள் இளகிய வெண்ணை தேகத்தை அற்புத வீணையாய் மீட்ட

 

மன்மதக் கலையின் அற்புத கீர்த்தனங்கள்  ராகமாய் அவளிடம் ஒலிக்கஅதில் ஏழு ஸ்வரங்களும் நர்த்தனம் ஆடதேகம் இரண்டிலும் சோம பானம் ஊற

 

சுந்தரவனமாய் காட்சி அளித்த அவனது சுந்தரியின் தேகத்தில் சிக்கி முக்கி கல்லாய் தன் சரீரத்தை உரசி தாப தீ மூட்டி நடுநிசித் தாண்டி இனிய யுத்தம் நடத்திஇடையிடையே முத்தத்தில் இளைப்பாறி, பால் நிலா மறைந்து கிழக்கு வானம் தீக்கதிரை தீண்டிய  போதுகண்ணாடி வளையல் காரிகையின் முத்தாடும் மார்பில் முகம் சரிந்து , புதைத்து , கலந்து களைத்து கிறங்கி உறங்கிப் போனான் அவளது மன்னவன்.... நாளை இரவு அவர்கள் அங்கு இருக்கப்போவதில்லை என அறியாமல்

 

 

 

ஸ்ரீராமம் வருவார்கள் ....

நாளைக்கு ஒரு எபிசோடு உண்டு மக்களே ....

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 


Comments

Post a Comment