அத்தியாயம் 16.2
பின்பு வந்த
தினங்களில் எந்த ஒரு முன்னேற்றமும் இல்லாமல் வாழ்க்கை இயல்பாகச் சென்றது.
மகனுக்கும்
மருமகளுக்கும் இடையே மனத்தாங்கல் இருக்கிறது என்று தெரிந்தாலும், இருவரும் ஒரே இல்லத்தில்
இருப்பதால் காலப்போக்கில் சரியாகிவிடும் என அனுமானித்து மூன்று நாட்களுக்கு மேல்
தாக்குப் பிடிக்க முடியாமல், ஊட்டிக்கு
பறந்துவிட்டார் ரங்கசாமி.
இறந்த
குழந்தையின் நினைவுகளில் இருந்து தப்பித்துக் கொள்ள ஒரு கணம் கூட உடலுக்கும் மனதிற்கும் ஓய்வு கொடுக்காமல் தன்னால் இயன்றவரை அனைத்து வேலைகளிலும் தன்னை ஈடுபடுத்திக் கொண்டாள் ஸ்ரீலக்ஷ்மி
.
அப்படி செய்தும் ஒரு சில தருணங்களில் தன்னை மீறி
குழந்தையை எண்ணி உணர்ச்சிவசப்படத்தான் செய்தாள்.
அவள் குழந்தையை சுமந்து கொண்டிருக்கும் போது ஆணோ பெண்ணோ என அறியாமல் அவள் காகிதத்தில் வரைந்த ஓவியங்கள், சில தருணங்களில் அவள் கைகளில் சிக்கி, அவள் மனதை சின்னா பின்னப்படுத்த, முயன்று மனதை அடக்கி வேறு பணிக்கு மடை மாற்றினாள் பாவை.. இப்படி விரத்தியோடு அவள் நாட்களை நகர்த்திக் கொண்டிருக்கும் போது ரங்கசாமியும் ஊருக்கு கிளம்பி விட அருணாவின் வரவு அதிகரித்துப் போனது.
வழக்கம் போல்
அருணா மன நிறைவோடும் மகிழ்ச்சியுடனும் ,
குழந்தை இறந்து போனதை லட்சுமியிடம் துக்கம் விசாரித்தாள் என்பதை விட
நலம் விசாரித்தாள் என்று சொன்னால் பொருத்தமாக இருக்கும்.
பழைய லட்சுமியாக
இருந்திருந்தால் இதையெல்லாம் மனதில் வைத்து மருகி இருப்பாள்.
மணியம்மையை
சந்தித்து விட்டு வந்ததிலிருந்து அருணாவையும் கற்பகத்தையும் எந்த ஒரு நிலையிலும் பொருட்படுத்தக் கூடாது என்ற
தாரக மந்திரத்தை கடைப்பிடிப்பவள் ஆதலால் , கண்டுக்காமல்
இருக்க தொடங்க, அப்படி அவள்
உணர்ச்சியற்ற முகத்தோடு வளைய வருவது கற்பகம் அருணாவின் கோபத்தை பல மடங்கு
அதிகரிக்கச் செய்திருந்தது.
ராம்சரண் அலுவலகம் சென்று இரவு வீடு திரும்பியதும், வழக்கம் போல் கற்பகம் அவனோடு பதினோரு மணி வரை ஏதேதோ கதைகள் பேசினார்… தனக்கு உடம்பு சரி இல்லை என்றார்... மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல சொன்னார்... அருணாவின் உறவுக்காரர்களுக்கு உதவி செய்ய வேண்டும் என்றார் ... அருணாவும் தன் குழந்தைகளுக்கு உடம்பு சரியில்லை ... மருத்துவமனைக்குச் செல்ல உதவிக்கு ராம்சரணை அழைத்தாள் ... அருணாவின் குழந்தைகள் எப்பொழுதும் போல் ராம்சரனின் அறையில் ஆட்டம் போட்டன... அதோடு மட்டும் கச்சேரி களை கட்டுவது நின்றுவிடவில்லை ...
அருணா தன் கணவனின் புதிய கடைக்கு அருகே
அழகு நிலையம் என்று கூறிக்கொண்டு விபச்சாரம் நடைபெறுவதாக கூறி அதனைத் தடுத்து
நிறுத்த ராம்சரணின் உதவியை நாட , அவன் ஒன்றுக்கு இரண்டு
காவல் துறை அதிகாரியை சந்தித்து, வழக்கு
பதிந்து அந்த அழகு நிலையத்தை காலி செய்ய செய்தான் .... இப்படியாக பல்வேறு வழிகளில் தாயும் மகளும் தங்களது ஆட்டத்தை
தொடர்ந்து கொண்டு தான் இருந்தனர் ...
வெளியில்
இருந்து பார்ப்பவர்களுக்கு, அன்னையை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்வதும், தங்கைக்கு
ஒத்தாசையாக இருப்பதும் ஒரு குற்றமா என்று தோன்றும்....
அங்கு தான்
கற்பகம் அருணாவின் ஆகச் சிறந்த சூது அடங்கியிருக்கிறது ..
கற்பகத்திற்கு
நித்தமும் மருத்துவமனை செல்ல ஏதாவது ஒரு காரணம் இருக்கும் ... மருத்துவமனை இல்லை
என்றால் எங்காவது பாடல் கச்சேரி, உபன்யாசம் என ராம் சரணை இழுத்தடிப்பார் ....
அவர் நினைத்தால்
தன் மகள் அருணாவோடு வீட்டு டிரைவரை கார் ஓட்ட சொல்லி சென்று வரலாம் ... அப்படிச்
செய்ய மாட்டார் ....
அருணாவிற்கு
உள்ளூரிலேயே கணவன் இருந்தாலும், சுற்றுவட்ட வேலை அனைத்திற்கும் தன் அண்ணனை தான்
நாடுவாள்...
அலுவலகம் முடிந்து
வந்ததும், தாயும் மகளும் இடும் பணியை செய்து
முடிக்கவே ராம் சரணுக்கு நேரம் பத்தாது .... அது போதாமல் சனி ஞாயிருக்கென்று பிரத்தியேக அட்டவணை வேறு
போட்டு வைத்திருப்பார்கள் ...
அவர்கள் இருவருடைய அடிப்படை நோக்கம் ராம்சரண் ஸ்ரீலட்சுமியுடன் எந்த வகையிலும் நேரம் செலவழித்து விடக்கூடாது .... நெருக்கமாகி விடக்கூடாது என்பதில் குறியாக செயல்பட்டனர்.
இந்த அதிரி
புதிரியிலும் அருணா தன் கழுகு கண்களால் அண்ணன் அண்ணிக்கு இடையே மனத்தாங்கல்
இருப்பதை கண்டு கொண்டதோடு அதனை கற்பகத்திடமும் பகிர,
"இன்னொரு
குழந்தை உண்டாயிடுவாளோனு பயமா இருந்தது நல்ல வேளை இப்பதான் நிம்மதியா இருக்கு ...
சரண் எப்பவும் பொண்டாட்டிய கொஞ்சவும் மாட்டான், திட்டவும்
மாட்டான் .... எனக்கு அவங்க ரெண்டு பேரும் எப்பவும் இருக்கிற மாதிரி தான் தோணுது
... நீ எப்படி கண்டுபிடிச்ச அவங்க ரெண்டு பேருக்குள்ள லடாய் இருக்குன்னு ..."
என்றார் கற்பகம் மகிழ்ச்சியாக.
"அண்ணன்
அண்ணியை மூச்சுக்கு 38 தடவை
லட்சுமி லட்சுமி லட்சுமினு கூப்பிட்டுக்கிட்டே இருக்கும் ... இந்த முறை அண்ணி
வீட்டுக்கு வந்ததிலிருந்து அண்ணா அப்படி கூப்பிடறதே இல்ல அதான்
..."
"ஆமா
அருணா .... சரியா தான் சொல்ற .... அவன் லட்சுமிய பேர்
சொல்லிக் கூப்பிட்டே ரொம்ப நாள் ஆன மாதிரி தான் இருக்கு ..." என ஒத்து பேசி
குதூலித்து போனார் கற்பகம்.
இந்நிலையில் ஒரு
நாள் காலை, லட்சுமி
வழக்கம் போல் அடுக்களையில் சமையல்கார பெண்மணிக்கு உதவி
செய்ததோடு சமையலை மேற்பார்வை பார்த்துக் கொண்டிருக்கும் போது, அந்தப் பெண்மணி ஏதோ ஒரு பெரிய பாத்திரம் தேவை என்று கூற, அது சமையலறையின் மேல் பக்க பரணையில்
இருக்க, அந்தப் பெண்மணியின் உயரம் மிகக் குறைவு
என்பதால், லட்சுமி சிறு நாற்காலியை போட்டு ஏறி அதை
எடுக்க, காலை உணவை ஏதோ சிந்தனையில் உண்டு கொண்டிருந்த
ராம்சரணின் பார்வை அவள் மீது எதேச்சையாக படிய அவள் தன்
அடிவயிற்றை லேசான வலி காரணமாக அழுந்த பிடிப்பது தெரிந்ததும்,
"லட்சுமி
...." என்று ஏறக்குறைய அலறிவிட்டான்.
"ஏண்டி
ஒருத்தன் தண்டத்துக்கு இங்க தின்னுகிட்டு இருக்கேன்ல.. குத்துக்கல்லாட்டம்....
என்னைக் கூப்பிட்டு எடுக்க சொன்னா எடுத்துட்டு போறேன் .... நீயே ஏறி எடுக்கணுமா
... ஏதாவது ஒன்னு கிடக்க ஒன்னு ஆச்சுன்னா யார் பொறுப்பு ... பைத்தியக்காரி”
என கோபத்தில் பொறிந்து தள்ளியவன் ,
"அக்கா
.... இவளுக்கு கொஞ்சம் ரெஸ்ட் தேவை .... உங்களுக்கு சமையல்ல ஏதாவது டவுட் இருந்தா
மட்டும் அவ கிட்ட கேட்டுக்கோங்க ... மத்தபடி இந்த மாதிரியான வேலைகள் இருந்தா என்னை
கூப்பிடுங்க நான் செஞ்சு கொடுக்கிறேன் .... இல்ல
மணிய(தோட்டக்காரர்) கூப்பிடுங்க .... என்று கூறிவிட்டு அவன் அலுவலகம் கிளம்பி விட
, அதனைப் பார்த்துக் கொண்டிருந்த அருணாவும் கற்பகமும்
அதிர்ச்சியில் உறைந்தே போயினர்.
சொற்ப தினங்களாக
அலுவலகத்திலிருந்து இரவு சீக்கிரமாக வீடு திரும்புவதை வழக்கமாக்கிக்
கொண்டிருந்தான்.
காரணம் லட்சுமி
இரவு உணவு உண்ணாமல் அவனுக்காக காத்திருந்தது தான்.
நேரடியாகவும்
ஜாடைமடையாகவும் பல முறை சொல்லிப் பார்த்து விட்டான், ஆனால் அவள்
கேட்பதாய் இல்லை என்பதால் வேறு வழி இல்லாமல், அவன் வழிக்கு
வந்திருந்தான்.
என்ன வந்து
என்ன... இரவு உணவை சீக்கிரம் உண்டு முடித்தும்
உறக்கம் துளி கூட பிடிப்படாமல் இரவு என்ற பெரும் பகுதியை
கடப்பதற்குள் ஒருவழியாகி போனான்
..
முதல் நாளில்
தென்பட்ட வீராப்பு எல்லாம் தண்ணீரில் கரைத்த உப்பாய் கரைந்து காணாமல் போய் இருக்க, அவன் விடுத்த வார்த்தைகளும்,
அவள் சொன்ன வார்த்தைகளுமே அவளிடம் மனம் திறக்க முடியாமல்
அவனை தள்ளி நிறுத்தி இம்சித்தது.
10, 15 நிமிட
கூடலை விட, இரவு முழுவதும் அவளது
கைகோர்த்து, அவள் மீது கால் போட்டபடி அவள் ஸ்பரிசத்தையும் வாசத்தையும் நுகர்ந்துறங்கும் உறக்கத்திற்காகத்தான் அவன் மனம் ஏங்கித் தவித்தது ...
பெண்ணவளுக்கும்
அப்படி ஒரு உணர்வு இல்லாமல் இல்லை ... மானசீக காதல் கொண்டு மணந்த மணாளனின் அருகாமை
அவளை வாட்டும் போதெல்லாம் இறந்து போன குழந்தையை பற்றிய சிந்தனை அனிச்சையாய் தோன்றி, அது தொடர்பான கசப்பான சம்பவங்கள் நினைவிற்கு வந்து அந்த உணர்வை சாகடித்து
விட , கலங்கி கண்ணீரில் மூழ்கி
போனாள்....
இப்படியாக
நாட்கள் கழிந்த நிலையில், அந்த வார சனிக்கிழமை காலையில் அவளை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றான் ராம்சரண் .
பரிசோதித்துப்
பார்த்த மருத்துவர்,
"இவங்களோட டிப்ரஷன்காக சைக்கியாட்ரிஸ்ட் எழுதிக் கொடுத்த டேப்லெட்சோட கோர்ஸ்
இன்னியோட முடியுது .... இனிமே வேற எந்த டேப்லெட்சும்
வேண்டாம் ... யோகா, பிராணாயாமா, மியூசிக்ல
மனசு செலுத்தினா தன்னால ஸ்ட்ரெஸ் குறைஞ்சிடும்.... நெக்ஸ்ட் மந்த் பீரியட்க்கு
அப்புறம் நீங்க குழந்தைக்கு ட்ரை பண்ணலாம்.... ஏன்னா நெக்ஸ்ட் ஃபோர் மந்த்ஸ்
fertility அதிகமா இருக்கும் ... சோ ,சீக்கிரமே
குழந்தை உண்டாக சான்செஸ் அதிகம் ... போன குழந்தையை பத்தியே நினைச்சுக்கிட்டு
இருக்காம , மூவ் ஆன் டு நெக்ஸ்ட் அதுதான் இவங்களோட
மனநிலைக்கும் உடல் நிலைக்கும் ரொம்ப நல்லது ... மற்றபடி
நான் கொடுத்த டேப்லெட்ச கண்டின்யூ பண்ணுங்க... " என்று அவர் முடிக்கும் போது
தான், அவள் மன அழுத்தத்திற்காக பிரத்தியேக மருந்துகளை
எடுத்துக் கொள்கிறாள் என்பதே அவனுக்கு தெரிய வர, அவர்
எழுதிக் கொடுத்த மாத்திரைகளை மட்டும் வாங்கிக் கொண்டு அவளோடு வீடு வந்து
சேர்ந்தான்.
ஞாயிறு காலை, ராம்சரணிடம் கற்பகம்
" ஏண்டா,
நீ ஃபாரின்ல இருந்து வாங்கி வந்த பொம்மை எல்லாத்தையும் அருணா
குழந்தைகளுக்கு கொடுக்காம,
சமையல்
காரிக்கும் தோட்டக்காரி குழந்தைகளுக்கும் கொடுத்திருக்க ..." என்றார் கோபத்தோடு.
"அருணா
குழந்தைகளுக்கு கொடுத்தா, என் கண் முன்னாடியே வச்சு
விளையாடிகிட்டு இருப்பாங்கம்மா ... நான் அது என் குழந்தைக்காக பார்த்து பார்த்து
வாங்கின திங்ஸ் மா ... தேவையில்லாம மனசு ரொம்ப கஷ்டப்படும்.... அதான் நான் லண்டன் போகறதுக்கு முன்னாடியே நம்ம வீட்டு வேலைக்காரங்களுக்கு
கொடுத்துட்டு போயிட்டேன் ...."
"இங்க
பாரு சரண் ... குழந்தை அபார்ஷன் ஆறதெல்லாம் சாதாரண விஷயம் .... ரொம்ப மனச போட்டு
குழப்பிக்காதே ..." என்றார் அறிவுரை வழங்குவது
போல் ஒருவித வன்மத்தோடு.
திங்கட்கிழமை
வழக்கம் போல் அலுவலகம் சென்றவன் , மாலை 6:00 மணிக்கு உள்ளாகவே வீடு
திரும்பியிருந்தான்.
வந்தவனின் சட்டை
புழுதி படிந்து அழுக்காக காட்சியளிக்க,
கூடத்தில் அமர்ந்து மடிக்கணினியில் வேலை செய்து கொண்டிருந்தவள்
காரணம் கேட்க நினைக்கும் போது, ரங்கசாமி அவளை அலைபேசியில் அழைத்து
எஸ்டேட் கணக்கு வழக்கில் சந்தேகம் கேட்கலானார் ...
அவர் கேட்ட
கேள்விக்கு அவள் விளக்கம் கொடுத்து முடிக்க பத்து நிமிடங்கள் ஆகிப்போன நிலையில், கணவனை தேடி தன் அறை நோக்கி
சென்றாள்.
அப்போது
எங்கிருந்தோ
கண்ணே நவமணியே
உன்னை
காணாமல் கண்ணு
உறங்குமோ...
ஆயிரம் பிச்சு
பூவும் அரும்பரும்பா பூத்தாலும் ....
வாசமுள்ள பிச்சு எனக்கு வாய்க்காது எக்காலம்
....
ஒன்னு ரெண்டு
பெத்திருந்தா துக்கம் அது தோணுது ....
உன்னை நானும்
விட்டதனால் கண்ணு ரெண்டும் தூங்காது ...
ஆடாத ஊஞ்சல்களை
ஆடவைத்த வண்ண மயில்.... பாடாத சொந்தங்களை பாட வைத்த சின்ன குயில் ...
எங்கிருக்க
என்னுயிரே என்னை விட்டு நீ தனியா.... வந்து விடு கண்மணியே எனக்கும் இங்கே ஓர் துணையாய்
...
என்ற
இசைஞானியின் குரல், அவள் மனதை இளக செய்ய , உறைந்து நின்று பாடல்
வரியில் திளைத்து கண்ணீர் உகுத்தவள், கண்களை துடைத்துக்கொண்டு
அறைக்குள் நுழையும் பொழுது ராம்சரணின் குரல் என்றும் இல்லாமல் சற்று சன்னமாக கமரிய குரலில் ஒலித்துக் கொண்டிருந்தது.
"இல்ல
வீரா .... பைத்தியம் புடிச்ச மாதிரி இருக்கு .... முன்ன மாதிரி வேலையில
நிம்மதியா கான்சன்ட்ரேட் பண்ண முடியல ... லண்டன் மீட்டிங்க எப்படி
சக்சஸ் ஃபுல்லா முடிச்சேன்னு எனக்கே தெரியல ... "
" ......."
"என்
குழந்தையை தான் என்னால காப்பாத்த முடியல ... அதான் அந்த குழந்தையாவது
காப்பாத்தலாம்னு அப்படி ஒரு ரிஸ்க் எடுத்து
காப்பாத்தினேன் ..."
"...."
"செத்துப்
போயிருந்தா நிம்மதி டா ... இப்ப எல்லாம் எந்த
குழந்தையை பார்த்தாலும் செத்துப் போன என் குழந்தை தான் ஞாபகத்துக்கு வருது ... நல்ல
வேளை லட்சுமி செத்து போன எங்க குழந்தைய பார்க்கல ... பார்த்து இருந்தான்னா
நிச்சயம் அவளால தாங்கிக்க முடியாது ..."
" ....."
"இன்னும்
நான் அவளுக்கு சொல்லல டா ... சின்ன சின்ன கை கால்களோட லட்சுமி ஜாடையில இருந்தான்....
ஒரு அப்பா பார்க்க கூடாத காட்சி அது ... அப்படி என் குழந்தையை
பார்த்து அன்னைக்கே பாதி செத்துட்டேன் ...." என்றவனின் பேச்சு இதயத்திலிருந்து வரவில்லை ..... அவனது உயிரிலிருந்து
வந்து கொண்டிருந்தது ...
அவன் குரல்
உடைந்து கண் கலங்கி இம்மாதிரி விசும்பி அழுதெல்லாம் அவள் பார்த்ததே இல்லை ....
இத்தனை
நாட்களில் பெரும்பாலான ஆண்களிடம் இருக்கும் இறுக்கத்தை விட அவனிடம் சற்று அதிகமான
இறுக்கத்தை கண்டிருக்கிறாள்....
"......"
"என்னைவிட
லட்சுமி தான் அதிகமா பாதிக்கப்பட்டிருக்கா..... அவ நல்லா ட்ராயிங் பண்ணுவா ....
குழந்தையை நினைச்சு அவ வரைஞ்ச ட்ராயிங் எல்லாத்தையும்
எடுத்து பார்த்து அடிக்கடி அழறாடா ...."
( இதை
எப்பொழுது அவன் கண்டான் ... என யோசித்தாள்)
"....."
"இல்ல
.... அவ என்னோட பேசுறது இல்ல ... எனக்கு என்ன பண்றதுன்னு தெரியல ..."
"..........................................."
எதிர் முனையில்
வீராவின் பேச்சு நீண்டு கொண்டே செல்வது தெரிந்தது.
பெண்ணகளின்
மனதில் ஏகப்பட்ட அதிர்ச்சி.
இறந்த அவளது
குழந்தையை அவன் பார்த்தது அவளுக்கு தெரியாது ... இதுவரை அவன் பகிர்ந்து கொண்டது
இல்லை ....
அவன் இப்படி ஒரு
மன நிலையில் இருந்திருக்கிறான்....
தற்போது இருந்து கொண்டிருக்கிறான் என்பதெல்லாமும் அவளுக்கு புதிது
...
குழந்தை இறந்தது
அவளுக்கு மட்டுமே பெரிய இழப்பு என்றெண்ணி சுய இரக்கத்தில் மூழ்கி இருந்தவளுக்கு , உயிர்
நண்பனிடம் உடைந்து அழும் தன்னவனின் உணர்வுகள் உள்ளத்தை பிசைய , தன் தவறை எண்ணி வருந்தியதோடு, துடித்துப்
போனாள் காரிகை .
அப்போது
பார்த்து அவள் கையில் இருந்த அலைபேசி ஒலிக்க ,
வந்த சுவடு தெரியாமல் அந்த அறையை விட்டு வெளியேறினாள்.
இரவு உணவின்
போது ராம்சரணுடன் கற்பகமும் அருணாவும் இணைந்து கொள்ள, மூவருக்கும் பரிமாறி விட்டு கடைசியாக
உண்டு முடித்தவள் அடுக்களையை சுத்தம் செய்து விட்டு வரும்போது அவன் படுக்கையில்
அவளுக்கு முதுகு காட்டி படுத்திருந்தான்.
இரவு விளக்கை
ஒளிர செய்துவிட்டு வழக்கம் போல் தன்னிடத்தில் வந்து படுத்துக் கொண்டவளுக்கு அவன் பேசியது அனைத்தும்
மீண்டும் மனக்கண் முன்
வந்து போய் துக்கம் தொண்டையை அடைக்க, கண்கள் அருவியாய்
கண்ணீரை வாரி இறைக்க, எவ்வளவோ கட்டுப்படுத்த
முயன்றும் முடியாமல் அவளது விசும்பல் சத்தம் அந்த நிசப்தமான
இரவில் அந்த அறையில் ஒலிக்க, அருகில் படித்துக்
கொண்டிருந்தவனின் காதுகளை அது எட்டியதும் பதறியவன்
"லட்சுமி....
என்ன ஆச்சு ....." என்றான் குரலுடன் தலையை உயர்த்தி.
அவளிடம் இருந்து
பதிலாய் விசும்பல் சத்தமே வர, கைய உயர்த்தி அவளை தொட முயன்றவன், அந்த
முயற்சியை கைவிட்டு விட்டு படுத்தபடி அவளை நெருங்கி ,
" என்ன
பண்ணுது லட்சுமி ...
உடம்பு ஏதாவது
பண்ணுதா ..." என்றான் அவளது அழுகைக்கு காரணம் புரியாமல்.
மீண்டும்
அவளிடம் இருந்து பதில் வரவில்லை என்றதும்,
"நம்ம
குழந்தையை நினைச்சு அழறயா...." என்றது தான் தாமதம், அவனுக்கு
முதுகு காட்டி படுத்திருந்தவள் , அப்படியே திரும்பி அவன்
மார்பில் முகம் புதைத்து கொண்டு அவனை இறுக்கிக் கொண்டாள்.
அவளது இந்த
திடீர் நெருக்கத்திற்கான காரணம் புரியவில்லை என்றாலும் , மனமோ உடலலோ ஏதோ ஒரு உபாதையில் மனையாள் சிக்கித் தவிக்கிறாள் என்பதை மட்டும் உணர்ந்து
கொண்டவன் அவள் நெற்றி கேசத்தை விளக்கி முத்தமிட்டு
தன்னோடு இறுக்கிக் கொண்டு,
"சொல்லு
லட்சுமி... ஏன் அழற ..." என்றான் மென்மையாக.
மாலையில் அவன்
பேசியதையும் அவள் அதைக் கேட்டதையும் சொன்னவள்,
"நீங்க
இவ்ளோ பீல் பண்றீங்கன்னு நான் கொஞ்சம் கூட எதிர்பார்க்கல ..." என்றாள் கமரிய குரலில்.
"இறந்து
போனது நம்ம ரெண்டு பேரோட குழந்தை ... ஃபீல் பண்ணாம இருப்பேனா ... உன்னோட இழப்பும்
ரணமும் உனக்கு தெரியுது ... உன்னை சுத்தி இருக்க எல்லாருக்கும் தெரியுது புரியுது
.... ஆனா என்னோட இழப்பும் ரணமும் யாருக்கும் தெரியலையே ... நீ குழந்தைய வயித்துல சுமந்த... நான் மனசுல சுமந்தனு யார்கிட்ட போய் சொல்வேன்
...."
"இறந்து
போன நம்ம குழந்தையை பார்த்தீர்களா ... ஏன் என்கிட்ட
சொல்லல ..."
" உன்கிட்ட
சொல்ற ஐடியா என்னைக்குமே எனக்கு இல்ல ... ஏன்னா உன்னால
தாங்கிக்க முடியாதுனு எனக்கு நல்லாவே தெரியும் லட்சுமி ... அதைவிட நீ எங்க என்னை
சொல்ல விட்ட ..... முதல்ல என் கூட முகம் கொடுத்து பேசினியா ....
நடந்தது ரெண்டு பேருக்குமான இழப்புனு நீ கொஞ்சம் கூட நினைக்கலயே
.... என் எமோஷன்சை வெளிப்படுத்த எப்பவாவது சான்ஸ் கொடுத்திருக்கியா ...."
உண்மைதான் ...
குழந்தை இறந்ததிலிருந்து கடந்து போன கணம் வரை அது இருவருக்குமான இழப்பு என்று அவள்
நினைக்கவும் இல்லை,
அது குறித்து
அவன் மன உணர்வுகளை வெளிப்படுத்த வாய்ப்பும் கொடுத்ததில்லை ...
தன் தவறை
நினைக்க நினைக்க, அவளுக்கு மேலும் அழுகை பொத்துக் கொண்டு வர,
" நமக்கு
நடந்த இழப்பு இரண்டு பேருக்குமே பொதுவானது ... இதிலிருந்து
மீண்டு வர நாம ரெண்டு பேரும்தான் ஒருத்தருக்கு ஒருத்தர்
ஆறுதலா இருக்கணும் .... " என்றான் ஆதரவாக அவள் தலைக்கோதியபடி .
ஓரிரு கணம்
அங்கு அமைதி நிலவ,
" ஆபீஸ்ல
என்ன நடந்தது ... அந்த குழந்தை இப்ப எப்படி இருக்கு ..." என கேள்விகளை
அடுக்கினாள் ஆர்வத்தோடு .
" 2 1/2 வயசு
குழந்தை ... அது பின்னாடி இருக்குன்னு தெரியாம ரிவர்ஸ் எடுத்துட்டாங்க ... உடனே
நான் காரில் இருந்து இறங்கி ஓடிப்போய் அந்த குழந்தையை
தூக்கிக்கிட்டு மறுபக்கம் போகும்போது எதிர் சைடுல இருந்தும் ஒரு கார் வந்துடுச்சு ... அவங்க சடன் பிரேக்
போடறதுக்கும் நான் ரோடை கிராஸ் பண்ணி தரையில
குழந்தையோட விழறதுக்கும் சரியா இருந்தது ... நல்ல வேளை குழந்தைக்கு ஒன்னும் ஆகல
...
ஆபீஸ் டேக்
கேர்ல நடந்ததால அந்த நியூஸ் எப்படியோ வீராவுக்கு போயிடுச்சு போல ... அதான் போன் பண்ணி
விசாரிச்சான்...." என முடித்தான்.
முகம் தெரியாத
அந்த குழந்தையின் உயிரை தன் கணவன் காப்பாற்றியது அவள் மனதிற்கு இதம் அளிக்க , மேலும் அவனை இறுக்கிக் கொண்டு
அவன் கழுத்து வளைவில் முத்தம் பதித்தவள்,
"ரொம்ப
நாள் கழிச்சு மனசு கொஞ்சோண்டு நிம்மதியா இருக்கு .." என்றாள் மென்மையாக .
"நம்ம
குழந்தையை தான் காப்பாத்த முடியாம போயிட்டேன் ... அந்தக் குழந்தையாவது காப்பாத்த
முடிஞ்சதே ..." என கமரியக் குரலில்
சொல்லிக்கொண்டே அவள் கன்னத்தில் முத்தமிட்டு அவளை தன்
தோளோடு இறுக்கிக் கொண்டான்.
நெருக்கம்
மோகத்தை தராமல், நீண்ட நாளைக்கு பிறகான மனநிறைவைத் தர,
இருவரும் ஆழ்ந்த நித்திரையை தழுவினர் .
ஸ்ரீராமம்
வருவார்கள் ....
Supperrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrr
ReplyDeletethanks ma
Delete