ஸ்ரீ-ராமம்-16.1

 

அத்தியாயம் 16.1

 

நீண்ட கரடு முரடான பயணத்தில், தங்கி ஓய்வெடுக்க வழிப்போக்கனுக்கு சத்திரம் கிடைத்தது போல், நீண்ட நாளாக மன உளைச்சலில் தத்தளித்துக் கொண்டிருந்தவளுக்கு உளவியலாளர் மணியம்மையுடனான சந்திப்பு ஆழ்ந்து இளைப்பாற வழி வகுத்தது.

 

வாழ்க்கையின் சவால்களை நேர்மையாகவும் தைரியமாகவும் துணிந்து எதிர்கொள்ளும்  மனநிலை கொண்டவள்சிறிது காலம் மேகமூட்டத்தால் சூழப்பட்ட ஆதவன் போல் ஒளியின்றி இருந்த நிலையில்  மணியம்மை என்னும் காற்றால் அந்த மேக மூட்டம்  களைத்தெரிய பட்டதும் கதிரோனின் சக்தி வாய்ந்த கிரணங்கள் நிலமகளின் மீது படர்ந்து, காட்சிகள் தெளிவுற்றது போல், அவளது சிந்தனையும் செயலும் புலப்படத் தொடங்க, இத்தனை நாட்கள் சோர்ந்திருந்தவளின் செயலில் உத்வேகம் பிறந்தது.

 

உடனே தன் தோழி கீதாவை அழைத்தாள் நன்றி தெரிவிப்பதற்காக.

 

"தேங்க்ஸ் எ லாட் கீதா .... " எனத் தொடங்கி மணியம்மையுடனான உரையாடல்கள் அனைத்தையும் பகிர்ந்தவள்,

 

"இப்பதான் மனசு ஒரு அளவுக்கு நிம்மதியா இருக்கு..." என முடித்தாள்.

 

 

"இப்ப புரியுதா நான் எதுக்காக அவங்கள ஆஹா ஓஹோன்னு பாராட்டினேன்னு ...

 

நாம ஒரு விஷயத்தை பாக்குறதுக்கும்மணியம்மை மேம் பாக்குறதுக்கும் ஆயிரம் வித்யாசங்கள் உண்டுஅவங்க உன் கணவரை பத்தி சொன்னது 100 சதவீதம் உண்மை ... என் அண்ணன் கல்யாணமான ஒரே மாசத்துல என் அண்ணி சொன்னதுக்கெல்லாம்  ஆமாம் சாமி போட்டான்....

 

மூணே மாசத்துல குடும்பத்துல சண்டைய உண்டு பண்ணி என் அண்ணனை தனியா கூட்டிட்டு போயிடுச்சு என் அண்ணி.... சரிதனி குடித்தனம் போனா என்ன, அவன் நிம்மதியா இருந்தா போதும்னு  நான் என் அம்மா அப்பா எல்லாரும் நினைச்சோம் .... ஆனா ஒரு வருஷத்துக்குள்ள அவங்க ரெண்டு பேத்துக்குள்ளேயுமே சண்டை வந்துடைவர்ஸ் வரைக்கும் போயிடுச்சு .... அதுக்கப்புறம் தான் என் அண்ணனுக்கு என் அண்ணியை பத்தியே தெரிய வந்துச்சு...

 

அப்புறம் ரெண்டு பேரும் ரெண்டு வருஷம் பிரிஞ்சி இருந்து இப்ப சமீபத்துல தான் சேர்ந்து இருக்காங்க, அதனால பொண்டாட்டி பேச்சைக் கேட்கிறவன் அத்தனை பேரும் ஹீரோவும் கிடையாதுபொண்டாட்டி பேச்சைக் கேட்காதவன் வில்லனும் கிடையாது ..." என பொத்தாம் பொதுவாக முடித்தவள் மேற்கொண்டு  தனக்குத் தெரிந்த சில அறிவுரைகளை  தோழிக்கு வழங்கி அழைப்பை துண்டித்தாள்.

 

அன்று இரவு நீண்ட நாட்களுக்குப் பிறகு வயிறு நிறைய உண்டு ஆழ்ந்த உறக்கத்தை தழுவினாள் நாயகி.

 

மறுநாள் படுக்கையை விட்டு எழும் பொழுதே ஒரு வித மெல்லிய உற்சாகம் அவளை தாலாட்ட, மனம் தெளிவடைந்திருந்ததால், கணவன் மீதான கோபம் பெருவாரியாக குறைந்திருக்க, அவளது செவிகளும் விழிகளும் அவனது அழைப்பிற்காக ஏங்கத் தொடங்கின. 

 

ஆனால் அவனோ நான்கு நாட்களாகியும் அவளைத் தொடர்பு கொள்ளவில்லை. அவளாக அழைத்துப் பேசலாம் என்றால்அவள் விட்ட வார்த்தைகளே  தடை கல்லாய் அமைந்து போக வாய்ப்பூட்டு போட்டுக் கொண்டாள் பாவை.

 

 

இந்நிலையில் ராம்சரண் ருக்மணியை அழைத்துபுதிதாக முளைத்திருக்கும் முக்கிய பணியின் காரணமாக ஊர் திரும்ப மேலும் இரண்டு வாரங்கள் ஆகும் என்ற செய்தியை சொல்லி விட்டு லட்சுமியை பற்றி ஒரு வார்த்தை விசாரிக்காமல் அழைப்பை துண்டிக்க,மகளுக்கும் மருமகனுக்கும் இடையே நடக்கும் கண்ணாமூச்சி ஆட்டத்தை அறிந்து கொண்ட ருக்மணியும் தூதுவன் போல் செய்தியை மகளிடம்  ஒப்பித்து விட்டு கழன்றுக்கொள்ளகணவனின் பாராமுகமும்தாயின் விச்ராந்தி நிலையும் லட்சுமியை வெகுவாக அலை கழிக்கவாய்விட்டு புலம்ப கூட முடியாத நிலையில் மனவேதனையில் மூழ்கிப் போனாள் மாது.

 

இப்படி அப்படியாக கிட்டத்தட்ட இரண்டு மாதங்கள் கழிந்திருந்த நிலையில் , நாளை மறுதினம் அவன் ஊர் திரும்பப் போவதாக தன் தாய் மூலம் கிட்டிய செய்தியில் மனம் மகிழ்ந்தவள் தன்னவனின் வரவுக்காக வழிமேல் விழி வைத்து காத்திருக்கலானாள்.

 

ராம்சரண் ஊர் திரும்புவதற்கு முன் தினம் ஊர் திரும்பி இருந்த ரங்கசாமி லட்சுமியை அலைபேசியில் அழைத்து  நலம் விசாரித்துவிட்டு,

 

" நாளைக்கு சரண் கோயம்புத்தூர் வந்ததும் உங்க வீட்டுக்கு வருவான்அவனோட கிளம்பி நம்ம வீட்டுக்கு வந்துடும்மா..." என முடித்தார். 

 

மனதில் தெளிவு பிறந்ததால் முன்பிருந்த வாட்டம்சுணக்கம் எல்லாம் போன இடம் தெரியாமல் மறைந்து போய் ஒரு வித நிர்மலத் தன்மை நிலவினாலும் கணவனின் பாராமுகம் மட்டும் சிறு தயக்கத்தை விதைத்திருந்த நிலையில் உளவியலாளர் மணியம்மை கூறியதை பற்றுகோலாய் பற்றி கொண்டு புகுந்த வீடுக்கு செல்ல ஆயத்தமானாள்.

 

மறுநாள் அதிகாலையிலேயே  குளித்து முடித்து அருகில் இருந்த சித்தி விநாயகர் கோவிலுக்கு சென்று  தன் மன எண்ணங்களை கோரிக்கைகளாக வைத்து வழிபட்டுவிட்டு  வீடு திரும்பியவள்,  நெய்யில்  சின்ன வெங்காயம் ,பச்சை மிளகாய், வேர்க்கடலை கலந்த அரிசி உப்புமாவும்கத்திரிக்காய் கொத்சும் தன் கணவனுக்கு பிடிக்கும் என்பதால் சுட சுட செய்து ஹாட் பேக்கில் நிரப்பவும்  வீட்டு வாயிலில் ராம் சரணின் கார் வந்து நிற்கவும் சரியாக இருந்தது. 

 

கார் சத்தம் கேட்டதிலிருந்துஅவளது உடலில் ஒரு வித சிலிர்ப்பும், மனதில்  பரபரப்பும் பற்றிக்கொள்ள, வேக நடை எடுக்க கால்கள் விழைந்தாலும், ஏதோ ஒரு சிறு தயக்கம் எட்டிப் பார்க்க, தயங்கி நின்றவளை ருக்மணி, ராமலட்சுமிதியாகராஜன் கடந்து சென்று  ராம் சரணை எதிர்கொண்டு வரவேற்றனர். 

வாயிலில் இருந்த தூணுக்கு முட்டுக் கொடுப்பது போல், கடைசியாக நின்று கொண்டு, வீட்டினுள் நுழையும் தன்னவனை ஆவலோடு அவள் நோக்கஅவனோ ருக்மணி தியாகராஜன் ராமலட்சுமியை தாண்டி பார்வையை விஸ்தரிக்காமல்அவர்களோடு பேசியபடி கூடத்தில் இருந்த சோபாவில் வந்த அமர்ந்தான். 

 

வழக்கம் போல் ருக்மணி முதலில் பேச்சை தொடங்க  பிறகு தியாகராஜன் ராமலட்சுமி இணைந்து கொள்ளஅனைவருக்கும் தனித்தனியேவும் பொதுப்படையாகவும் பதில் அளித்தவன்வந்து ஐந்து நிமிடங்களாகியும்ஸ்ரீ லட்சுமியை மட்டும் ஏறெடுத்தும் பார்க்கவில்லை.

 

அதே சமயத்தில் அவள் தன்னையே  பார்த்துக் கொண்டிருப்பதை கீழ்கண்களால்  உணர்ந்து கொண்டிருந்தவனின் உள்ளம் சிறகில்லாமல் பறந்து கொண்டு தான் இருந்தது.

 

வழக்கம் போல் இருவருக்கும் இடையே நடக்கும் நாடகத்தை ருக்மணி அறிந்து கொண்டாலும் அதனை வெளிக்காட்டாமல் இயல்பாக ராம் சரணை அழைத்து உணவு மேஜையில் அமர்த்தி காலை உணவை பரிமாற ஆரம்பித்தார்.

 

முதல் உருண்டையிலேயே தன் மனையாளின் கை பக்குவம் என உணர்ந்து கொண்டவன்அதன் ருசியை மனதில் மெச்சியபடி எப்பொழுதையும் விட நன்றாகவே உண்டு முடித்தான்.

 

காலை 5 மணி அளவில் கோயம்புத்தூர் விமான நிலையத்தை வந்தடைந்தவன்அங்கிருந்து தன் இல்லத்திற்குச் சென்றுஆசிய தேயிலை தொழிலதிபர்கள் சந்திப்பிற்கு சென்று வந்திருந்த தந்தையை சந்தித்து அளவளாவி விட்டு, சற்று நேரம் இளைப்பாறிய பின்பு தந்தையின் அறிவுறுத்தலின்படி மனையாளை அழைத்துப் போக வந்திருந்தான். 

 

என்னதான் சமையலுக்கு புதிய சமையல்கார பெண்மணியை அமர்த்தியிருந்தாலும் காலை உணவு தன் இல்லத்தில் கன்றாவியாக இருக்கும் என்று தெரிந்ததால், அங்கு உண்ணாமல் வந்திருந்தவனுக்கு மனையாளின் கைமணம் வயிற்றை மட்டுமல்ல மனதையும் நிறைத்திருக்க, உள்ளுக்குள் அந்த ஏகாந்தத்தை அனுபவித்தபடி,

 

"இன்னைக்கு நான் ஆபீஸ் போய் ஆகணும் ... இப்ப கிளம்பினா தான் சரியா இருக்கும் ... நாங்க கிளம்பறோம் அத்தை ...."  என்று முடித்தான் ஸ்ரீ லட்சுமியின் மீது முதன்முறையாய் பார்வையை  பதித்து.

 

தாய், தந்தை, தங்கை அனைவரிடமும் விடைபெற்று  லஷ்மி  தன் பயணப் பையோடு கிளம்பி வரஅதனை வாங்கி காரின் டிக்கியில் வைத்தவன், ஓட்டுனர் இருக்கையில் வந்து அமரலக்ஷ்மி அவனுக்கு அருகில் அமர்ந்ததும் கார் காற்றைக் கிழித்துக்கொண்டு பறந்தது.

 

அவனது பார்வை சாலையின் மீது செங்குத்தாக படிந்திருந்தாலும்,  அருகில் அமர்ந்திருந்த மனையாளின் தலைக்கேச மல்லிகையின் மணம், அவள் நெற்றியில் இருந்த  சந்தனம் மற்றும் மஞ்சள் கீற்றின் வாசம்மைசூர் சந்தன சோப்பின் நறுமணம் அவன் நாசி நுழைந்து நுரையீரலை நிரப்பிக் கொண்டிருக்க, கியர் போடுவது போல் அவ்வப்போது கண்ணாடி வளையல்கள் சலசலக்கும் அவளது தளிர் விரல்களை  பார்வையால் ஸ்பரிசித்துக்கொண்டே பாதையில் கவனம் செலுத்தினான்.

அவனுக்கு சற்றும் குறையாமல் பெண்ணவளின் மனம் முழுவதும் அவன் பயன்படுத்தும் Dior Sauvageன் மணம் நிரம்பி வழியகடைக்கண் பார்வையால் தன்னவனை தரிசிக்க எண்ணினாலும், அதற்கான வசதி அமையாததால்அவன் நெருக்கத்தை மட்டும் அனுபவித்தபடி பயணித்தாள்.

 

அந்த நீண்ட பயணம் மௌனத்தால் நிரம்பி வழிய, வீட்டை அடைந்ததும் காரை போர்டிக்கோவில் நிறுத்திவிட்டு அவன் இறங்கியதைத் தொடர்ந்து, அவளும் காரை விட்டிறங்கஅந்த வீட்டில்  நீண்ட காலமாக தோட்ட வேலை செய்யும் சொர்ணம்  இருவருக்குமாய் ஆரத்தி சுற்றி வரவேற்றார்.

 

ரங்கசாமிக்கு முட்டுக் கொடுப்பது போல்  கற்பகம் அவருக்கு அருகில் சுவரைப் பற்றிக் கொண்டு, உள்ளுக்குள் பொங்கும் வெறுப்பை வெளிக்காட்டாது சோகமே உருவாய் நின்றிருந்தார். 

 

அருணா வீட்டில்  இல்லை , இருந்தால் நிச்சயம்  அங்கிருந்திருப்பாள்.

 

மருமகளுக்கு ஆலம் சுற்றி வரவேற்க மனம் இல்லாமல், மூட்டு வலி முழங்கால் வலி, மூச்சுத்திணறல் என ஏகப்பட்ட உபாதைகளை கற்பகம் காரணமாக சொல்லியதன் விளைவால் இந்த மாற்று ஏற்பாடு மாமனாரால் செய்யப்பட்டுள்ளது  என புரிந்து  கொண்டவள் , இயல்பாக பெரியவர்கள் இருவரையும் பார்த்து சினேகமாக புன்னகைத்து விட்டு, அவர்கள் ஆசி பெற அவள் பாதம் பணிய

 

வழக்கம் போல் ரங்கசாமி ,

 

"சௌபாக்கியவதியா சௌக்கியமா இரும்மா..." என ஆசி வழங்கஉடன் வாய் திறவாமல் அமைதியாக நின்றார் கற்பகம்.

 

ஆரத்திக்கு மட்டும் அரைக்கணம் நின்றதோடு சரிஅதன் பின் ராம்சரண்  விறுவிறுவென்று தன் அறைக்கு சென்று விட, மாமனாரிடம் எஸ்டேட் சம்பந்தமான விஷயங்களைப் பற்றி ஓரிரு வார்த்தை பேசி விட்டே அவர்களுடைய அறைக்கு வந்து சேர்ந்தாள் லட்சுமி.

 

அறைக்குள் நுழைந்ததும், அவளது பாதங்கள்  கிலோ கணக்கில் இரும்பு விலங்கிட்டது போல் நகர மறுக்க, மனம் கடந்த காலங்களில் உறைந்து போக அவளது கை அனிச்சையாய் அடி வயிற்றை தடவி பார்க்க , அவள் கண்களில் குற்றால அருவி உடைப்பெடுத்தது.

 

படுக்கையறை என்பது கலவிக்கு மட்டுமல்ல பல்வேறு உணர்வுகளுக்கு உரித்தான இடம் அது....

 

அவர்களது உறவு தொடங்கிய இடம் ...

 

அந்த உறவால் உதித்த உயிரை உறுதி செய்த இடம்... 

 

இருவர் மூவராகப் போகிறோம் என்ற எதிர்பார்ப்பில் ஏகோபித்து குதூகளித்த இடம் ....

 

பிறக்கப் போகும் தன்னவனின் உயிருக்குஉடலும் உணர்வும் கொடுத்து சிந்தையால் சீராட்டி சுமந்த இடம் ....

 

உண்ண உணவில்லை, ஏகப்பட்ட  உடல் உபாதைஉடையவன் ஊரில் இல்லை இத்துணை துயரங்கள் இருந்தபோதிலும்தன்னுள் வளர்ந்த அந்த சின்னஞ்சிறு உயிர் கொடுத்த சிலிர்ப்பை சுகமாய் ஸ்பரிசித்த இடம் ....

 

கடைசியாய் எடுத்த தவறான முடிவால் கையில் தவழவிருந்த  பொக்கிஷத்தை தவற விட்டுதற்போது தடுமாறி நிற்கும் இடமும் அதுவாகிப்போகதுடித்துப் போய்விட்டாள் பாவை .

 

இதயம் நெருப்புத் தணலாய் கொதிக்கசுமை இறங்கிய அடி வயிறு சுருக்கென்று வலி கொடுத்து, தான் காலியாகி போனதை நினைவு படுத்தஅடி வயிற்றைப் பற்றிக் கொண்டுகீழ் உதட்டை கடித்து அழுகையை அடக்கியபடி அப்படியே கட்டிலில் சரிந்தமர்ந்தாள் லேசான விசும்பலுடன்.

 

அந்த படுக்கை அறையின் பால்கனியில்  அமர்ந்தபடி மடிக்கணினியில் வேலை செய்து கொண்டிருந்த ராம்சரணின் பார்வையில் அந்தக் காட்சி எதேச்சையாக விழ, அவள் மீது இருந்த கோபம் மட்டு பட்டு சற்று கலங்கித் தான் போனான்.

 

அவளது மன உணர்வுகள் அவனை  சென்றடையவில்லை. மாறாக அவள் உடல் உபாதையில் வலி தாங்காமல் துடிக்கிறாள் போலும், என்றெண்ணிக் கொண்டவன் உடனே மருத்துவரை தொடர்பு கொண்டு, நிலைமையை கூறி அவரை சந்திக்க முன் அனுமதி கேட்க,

 

"ராம்சரண்மூணு மாசம் வரைக்கும் எப்பவாது இப்படி லேசா வயிறு வலிக்கும் .... அது ரொம்ப சாதாரணம் ... பயப்பட ஒன்னுமில்ல... வர்ற சண்டே மார்னிங் 11:00 ஓ கிளாக்  வாங்க ..." என முடித்தார் மருத்துவர். 

 

மனையாளின் மீது இருந்த ஈர்ப்பு, மோகம் ,ஆசை  எல்லாம் இந்தக் கருச்சிதைவுக்கு பிறகு காதல், நேசம் , அன்பு ,பாசமாக அவனுள் உருவெடுத்து இருந்த நிலையில், அது அறியாமல் அவள் விட்ட  வார்த்தைகள்அவனுள் கோபத்தையும் ஆற்றாமையையும் ஒரு சேர ஏற்படுத்த துடித்துப் போய்விட்டான் அந்தக் காளை.

 

எவ்வளவோ மறக்க முயன்றும், பாசம் நேசத்திற்காக  வராமல், பணத்திற்காக  வருவதாக அவள் சொன்னது அவன் இதயத்தை இரக்கமில்லாமல் அறுத்தெறிந்த வலியை   கொடுத்திருந்ததால் அவளை ஏறெடுத்தும் பாராமல் இல்லம் அழைத்து வந்திருந்தான் ...

 

தற்போதும் அந்தக் கோபம் இருந்தாலும்தன்னவளின் வலி அவனை விசனத்தில் ஆழ்த்த , அழைத்து விசாரிக்கலாம் என்றால் அதற்கும் வேறு ஏதாவது அவள் சொல்லி விட்டால் தாங்கிக் கொள்ளும் சக்தி தனக்கு இல்லை என்பதால் அடக்கி வாசிக்க ஆரம்பித்தான்.

 

ஓரிரு கணத்தில் சுய உணர்ந்தவள், கண்களைத் துடைத்துக்கொண்டு கணவனைத் தேடஅவன் சீட் அவுட்டில் அமர்ந்திருப்பது தெரிய வந்ததும், வழக்கம் போல் சமையல்கார பெண்மணிக்கு உதவ அடுக்களைக்குச்  சென்றுவிட்டாள்.

 

அந்த இல்லம் வந்து ஒரு மணி நேரத்துக்குள்ளாகவே  அந்த இல்லத்தின் அன்றாட பணியில்  ஒன்றிப்போனவள், மதிய உணவை தன் கைப்பக்குவத்தில் தயார் செய்து குடும்ப உறுப்பினர்களுக்கு பரிமாறினாள்.

 

வழக்கம் போல் ரங்கசாமி பாராட்டி பேசதாயும் மகனும் வயிறார உண்டு விட்டு இடத்தை காலி செய்தனர்.

 

மதிய உணவிற்கு பிறகு ராம்சரண் அலுவலகத்திற்கு கிளம்பிச் சென்று விடஸ்ரீலக்ஷ்மி எஸ்டேட் கணக்கு வழக்கில் மூழ்கிப் போனாள்.

 

பிறகு இரவு உணவை தயாரித்து மாமனார் மாமியாருக்கு பரிமாறியவள், தான் மட்டும் உண்ணாமல் தன்னவனுக்காக காத்திருக்க, இரவு 9 மணிக்கு மேல் மிகுந்த களைபோடு வீடு திரும்பினான் ராம் சரண்.

 

அவனுக்கு பரிமாறி விட்டு, அவளும் உடன அமர்ந்து உண்ணும் போது தான் அவனுக்காக உண்ணாமல் காத்துக் கொண்டிருக்கிறாள் என்பதை உணர்ந்தவன்,

 

" நீ சீக்கிரமா டின்னர் சாப்பிட்டு மாத்திரை போட்டுக்கிட்டு ரெஸ்ட் எடுக்கிற வழிய பாரு,எனக்கு போட்டு சாப்பிட்டுக்க தெரியும் ..."  என்றான் அவள் முகம் பாராமல்.

 

கடந்த 12 மணி நேரமாக அவனது கோபத்தையும் பாராமுகத்தையும் பார்த்துக் கொண்டு தானே இருக்கிறாள்....  இதுவும் அவள் எதிர்பார்த்த ஒன்றுதான் என்பதால், பதில் பேசாமல் அவன் உண்டு முடித்துச் செல்ல காத்திருந்தவள் வழக்கம் போல் அடுக்குகளையை சுத்தம் செய்யும் வேலையில் ஈடுபட, ஓரிரு கணம் நின்று பார்த்து பெருமூச்சு ஒன்றை வெளியேற்றிவிட்டு இடத்தை காலி செய்தான்.

 

அவள் உறங்க வர இரவு பத்தை கடந்து இருக்கஅவன் சிட் அவுட்டில் அமர்ந்தபடி மடிக்கணினியில் அலுவலக வேலையில் மூழ்கி இருக்க மருத்துவர் பரிந்துரைத்திருந்த இரவு மாத்திரையை உட்கொண்டவள்அந்த கலிபோர்னியா கிங் சைஸ் கட்டிலின் ஒரு ஓரத்தில் சென்று முடங்கினாள்.

 

மூன்று திடகாத்திரமான மனிதர்கள்  படுத்து  புரளும் அளவிற்கு இடவசதி உள்ள அந்தக் கட்டிலின் ஓரத்தில் அவள் அவ்வாறு படுத்திருப்பது இதுவே முதல் முறையாகும்.

 

அவள் மனதில் அனைத்து உணர்வுகளும் வடிந்துவிரத்தியும் வெறுமையும் மட்டும் வியாபித்திருக்க, உட்கொண்ட மருந்து உறக்கத்தை தர எத்தனிக்கும் போது , தன் வேலையை முடித்துவிட்டு வந்து கட்டிலின் மறு ஓரத்தில் முடங்கினான் ராம்சரண். 

 

இப்படி ஒரு இரவு வரும் என்று இருவருமே எதிர்பார்த்து இருக்க மாட்டார்கள் ...

 

"என் கூட வந்து தான் ஆகணும்னு சொன்னேனே ஒழியவாழ்ந்து தான் ஆகணும்னு சொல்லலையே ...." என அவள் மனதிலும்

 

"எங்க குடும்பத்துக்காகவும், என் அப்பாவுக்காகவும்  நிறைய செலவு செஞ்சி இருக்கீங்க ....  உங்களோட வராம போவேனா..."   என அவன் மனதிலும்  அடுத்தவர் மொழிந்த வார்த்தைகள் மின்னி மறைய, அதிலேயே உழன்ற படி இருவரும் கண்ணயர்ந்து போயினர்.

 

முதல் நாள் இரவு என்பதால் இருவருக்கும் இடையே வீராப்பு சற்று அதிகமாகவே  இருந்தது ....

  

ஸ்ரீராமம் வருவார்கள் ....

 

Dear friends,

 

அத்தியாயம் 16.2ம் பதிவேற்றப்பட்டுள்ளது ... படித்துவிட்டு உங்களது கருத்துக்களை பகிருங்கள்...

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 


Comments

  1. Supperrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrr

    ReplyDelete

Post a Comment