ஸ்ரீ - ராமம் - 15

அத்தியாயம் 15 

 

கணவன் அழைப்பை துண்டித்து, பத்து நிமிடத்திற்கு மேலாகியும், அதன் தாக்கத்திலிருந்து வெளிவர முடியாமல் தடுமாறினாள்.

 

அதற்காக அவள் தெரியாமல் பேசி விட்டாள் என்றெல்லாம் சொல்லிவிட முடியாது. அறிந்து தான் பேசினாள்…

 

அதுவரை காணாத அவனது கோபம் முகம் , அவளை வெகுவாக பாதித்திருக்க கடந்து போக முடியாமல்  கலங்கிப் போயிருந்தாள் பாவை.

 

இரவெல்லாம் உறக்கம் வராமல் தவியாய் தவித்தாள்.  அவள் மனதில் அழுத்திக் கொண்டிருப்பதை பிரித்துப் போட்டுப் பேச கடைசியாய்  தன் தோழி கீதாவுக்கு அழைப்பு விடுத்தாள். 

 

ராம்சரணுக்கு அதிவீரராம பாண்டியன் போல்லட்சுமிக்கு கீதா என்றால் மிகையாகாது. 

 

 

"லட்சுமிஇப்ப நீ இருக்கிற மனநிலைக்கு ஒரு  சைக்கியாட்ரிஸ்ட்ட பாக்குறது நல்லது... எனக்கு தெரிஞ்ச ஒரு சைக்கியாட்ரிஸ்ட் இருக்காங்க... பேரு மணியம்மை ... அவங்க சைக்கலாஜிஸ்டும் கூட  சமூக சேவகர், எழுத்தாளர், பெண்ணியவாதினு ஏகப்பட்ட முகம் அவங்களுக்கு.... வெரி குட் ஹுமன் பீயிங் டு.... நீ அவங்கள போய் பார்த்தா உனக்கு உதவியா இருக்கும்னு  நினைக்கிறேன்.... உடனே அப்பாயிண்ட்மெண்ட் கிடைக்காது.... நாலு அஞ்சு நாளாவது காத்திருக்கணும் ... நான்  அப்பாயிண்ட்மெண்ட் வாங்கி தரேன்.... நீ நிச்சயமா போய் அவங்கள மீட் பண்ணு ..." 

 

"ஐயோ கீதா... நான் இருக்கிற மனநிலையில எதுக்கு இந்த பெண்ணியவாதிகளோட எல்லாம்  கோர்த்து விடற..."  என்று சலித்துக் கொண்ட லட்சுமிதன் சொற்ப கால அனுபவத்தில் சந்தித்ததெல்லாம் ஆகச்சிறந்த  பெண்ணியவாதிகள் அல்ல பெண்ணிய வியாதிகள் ...

 

ஆண்களை எதிர்க்கிறேன் என்ற பெயரில் அடிதடியில் இறங்குவது, அராஜகம் செய்வதுமது அருந்துவதுபுகை பிடிப்பதுபெற்றவர்களுக்கும் குடும்ப அமைப்பிற்கும் அடங்காமல் அடங்காப்பிடாரியாய்  ஊர் சுற்றுவது... ஒரு படி மேலே போய்  பார்ப்பவர்கள் முகம் சுளிக்கும் அளவிற்கு ஐந்தாறு ஆண்களுடன் கட்டி புரண்டு நட்பு பாராட்டுவது.... என்பன போன்ற செயல்களில் ஈடுபட்டவர்கள் தங்களைப் பெண்ணியவாதிகளாக முன்னிறுத்திக் கொண்டிருந்ததால்லட்சுமியை பொருத்தமட்டில் பெண்ணியவாதி என்ற வார்த்தையே மதிப்பற்ற வார்த்தையாய் ஆகிப் போய் இருந்தது.

 

ஒரு காலத்தில் பெண்ணியவாதிகள் என்றால் பெரும்பாலான ஆண்களுக்கு தான் அலர்ஜியாக இருந்தது ஆனால் தற்போது பெண்களே முகம் சுளிக்கும் வண்ணம் பெண்ணியத்தை ஒரு சாரார் இழிவு படுத்தி வருகின்றனர்.

 

சங்க காலத்தில் கல்வியில் மேம்பட்டு இருந்த பெண் புலவர்களான அவ்வையார்காக்கை பாடினியார்வெள்ளிவீதியார்ஆதிமந்தி முதலானோர் ஆகச்சிறந்த இலக்கிய தொண்டாற்றியுள்ளனர்.

 

ஆண்களுக்கு நிகராக புலமையோடும் அரசனுக்கே ஆலோசனைகள் கூறும் மந்திரியாகவும் செயல்பட்டு இருக்கின்றனர்.

 

அவ்வளவு மதி நுட்பம், புலமை ஆளுமை திறன் நிறைந்திருந்த சங்க கால பெண்கள்பெண்ணியம் என்ற வார்த்தையை பயன்படுத்தாமலேயே பெண்களுக்கான மாண்புகளுடன் வாழ்ந்து இருக்கின்றனர்.

 

பெண்ணியம் என்பது பெண்மையில் உள்ளது.  பெண்மையை மீறிய பெண்ணியம் பேதமையை காட்டுகிறது ...  என்ற கருத்தில் நம்பிக்கை உள்ளவள் ஆதலால்உளவியலாளர் மணியம்மையை சந்திக்க தயங்கினாள்.

 

"ம்ச்.... இதுதான் Prejudice viewனு( முன்கூட்டியே தவறான அபிப்பிராயத்தில் இருப்பது)  சொல்றது ... நீ நினைக்கிறதுக்கும் அவங்களோட பர்சனாலிட்டிக்கு கொஞ்சம் கூட சம்பந்தம் இருக்காது ... முதல்ல நீ அவங்கள போய் மீட் பண்ணு அப்புறம் வந்து சொல்லு ..." என்று அழைப்பை துண்டித்தாள் கீதா .

 

மூன்று நாட்களில்  உளவியலாளர் மணியம்மையை சந்திக்க அவளுக்கு முன் அனுமதி கிடைத்தது. ஒரு நாளைக்கு மூன்று பேருக்கு மேல் அவர் சந்திப்பதில்லை என்பதை சொல்லிகிடைத்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளுமாறு கீதா அறிவுறுத்தி இருந்தாள்.

 

உளவியலாளர் மணியம்மையின் இல்லம்  சற்று பெரிய தோட்டங்களுடன் கூடிய  தனி வீடாக இருந்தது .

 

தோட்டத்திலேயே ஒரு பகுதியில் சிறிய குடில் போல் அமைத்துஅங்கு தன்னை சந்திக்க வருபவர்களுக்கு  மனநல ஆலோசனைகளை வழங்கி வந்தார்.

 

அன்றைய தினத்தில் முதலாம் நபராக அவரை சந்திக்கும் வாய்ப்பு ஸ்ரீ லட்சுமிக்கு அமைந்தது.

 

குடிலின் கதவை திறந்து கொண்டு வந்தவளை பார்த்து,

 

"வாம்மா ...."  என்றார் வெகு இயல்பாக.

 

60 வயதைக் கடந்தவர் ஆனால் மூதாட்டி என்று சொல்லி விட முடியாது... அவ்வளவு தேஜஸ் தீட்சண்யம் அவரது முகத்திலும் கண்களிலும் இருந்தது ...

 

நேர்த்தியாக உடுத்தியிருந்த காட்டன் புடவையில்பெரிய நெற்றி பொட்டு , வகுட்டு குங்குமத்தோடு மிகுந்த லட்சணமாக காட்சியளித்தார்.

 

இயல்பான நலம் விசாரிப்புக்கு பிறகுலட்சுமியை பேச விட்டு கேட்டார்.

 

திருமணம் நிச்சயமான நாளிலிருந்து தற்போது அவர் முன் அமர்ந்து கொண்டிருக்கும் வரை அவள் மனதில் ஓடியஓடிக்கொண்டிருக்கும் எண்ணங்கள்நடந்த நிகழ்வுகள், கோபதாபங்கள்ஏமாற்றம், அழுகை சந்தோஷம், காதல், தன் குடும்பம்நாத்தனார் குடும்பம்  என  ஒன்றையும்  விடாமல் அவள் எடுத்து இயம்ப, மிகுந்த பொறுமையோடு குறுக்கிடாமல் அனைத்தையும் கண்ணுற்று உள்வாங்கிக் கொண்டார்.

 

லட்சுமியின் முகத்தில் மாறி மாறி தோன்றிய முக உணர்வுகள் அனைத்தையும் குறித்துக் கொண்டார். 

 

அவள் வெடித்து அழுது கூறியதில் 100% உண்மை  இருப்பது தெரிய வந்தாலும் அவளைப் பற்றி அறிந்து கொள்ள ஓரிரு கேள்விகளை முன் வைத்தார்.

 

அதில் அவளது மாமியார் நாத்தனார் கணவரை பற்றி தரக்குறைவாகச் சொல்லி,

 

"இந்த மாதிரியான ஆளுங்க இப்படி எல்லாம் கூட உங்கள கொடுமைப்படுத்தி இருப்பாங்களே  .. செஞ்சாங்களா ..." என்றார் வேண்டுமென்றே.

 

மனித மனங்கள் கிடைக்கும் சந்தர்ப்பத்தில் தங்களை உத்தமர்களாக காட்டிக் கொள்ள அடுத்தவர்கள் மீது அடாத பழி போட கூட அஞ்சாது…  அம்மாதிரியான மனிதர்கள் இரட்டை நாக்கு உடையவர்கள்.... அப்படி இருப்பவர்களின் அடுத்தவர்களைப் பற்றிய கூற்றுகளில் எண்பது சதவீதம் பொய் இருக்க வாய்ப்புள்ளது ....  என்பதால்  அவர் அவ்வாறு கல் எரிந்து பார்க்க,

 

"இல்ல மேம்... அவங்க யாரும் அப்படி  கிடையாது ..." என்ற உண்மை நிலவரத்தை சொன்னவளிடம்  வேறு சில அந்தரங்க கேள்விகளை அவர் முன் வைக்க, அதற்கும் அசராமல் நேர்மையோடு பதில் அளித்தவள் கடைசியில் லேசாக கேவி அழுதபடி,

 

"என் குழந்தை இறந்து போனதுக்கு நான் தான் காரணம் மேம்... என்னால அந்த வீட்டு மருமகளா என் புகுந்த வீட்டு ஆளுங்களோட   பொருந்தி வாழ தெரியல .... வாழவும் முடியல ... டிவோர்ஸ் வேணும்னு கேட்டா என் ஹஸ்பெண்ட்  கொடுக்க மாட்டேங்கிறாரு.... என்ன பண்றதுன்னு தெரியல ..."

 

"ஏதாவது விபத்து நடந்துடிச்சின்னா அதுக்கு பொறுப்பேத்து அமைச்சர்கள் பதவி விலகற மாதிரிஉன் குழந்தை இறந்து போனதுக்கு நீ தான் காரணம்னு நெனச்சு டிவோர்ஸ் கேக்குறியா .... முதல்ல நீ ஒரு விஷயத்தை புரிஞ்சுக்கணும்  அதை ஒன்னும்  நீ  திட்டம் போட்டு செய்யலயே.... அது இயற்கையா நடந்த ஒன்னும்மா... சரி ... உன் மனசுல அப்படி என்ன தான் இருக்கு முதல்ல அதை தெளிவா சொல்லு ..."

 

 

"மேம் .... இப்படி நான் இருக்கிறது...  நினைக்கிறதெல்லாம் என்னுடைய பர்சனாலிட்டியே கிடையாது  மேம்....  நான் ரொம்ப சாதாரண மிடில் கிளாஸ் ஃபேமிலியை சேர்ந்தவ... மிடில் கிளாஸ் மெண்டாலிட்டிக்கு உண்டான பெரிய ஆசைகள் எதுவும் இல்லாம கிடைச்சத அனுபவிச்சிட்டு போற மனோபாவத்தை கொண்டவ... ஆனா இன்னைக்கு  என் கணவர் மேல அளவுக்கு அதிகமா பொசிசிவா இருக்கேனோனு தோணுது..... அவர் என் கூடவே இருக்கணும் என் பேச்சை மட்டும் கேட்கணும்னு ஆசையா இருக்கு.... தொட்டதற்கெல்லாம் கோபம், அழுகை, சந்தேகம்னு நெகட்டிவ் தாட்ஸ் அதிகமா வருது ...

 

என் கணவர் நான் சொல்றத புரிஞ்சிக்க மாட்டேங்கிறாருனு நினைக்கும் போது பைத்தியமே புடிச்சிடும் போல இருக்கு .. வேற வழி இல்லாம  டிவோர்ஸ் வாங்கினா நிம்மதியா இருக்கலாம்னு நினைச்சா  அதுக்கும் வழி இல்லாம இருக்கு  ... என்ன முடிவு எடுக்கிறதுன்னே தெரியல மேம்..." என முதன்முறையாக தெளிவாக மனம் திறந்தாள் ஒருவித ஆயாசத்தோடு. 

 

"சோஉன் கணவர் ராம் சரண் கிட்ட இருந்து டிவோர்ஸ் வாங்கியே ஆகணும்னு முடிவு பண்ணிட்டசரி, டிவோர்ஸ்க்கு அப்புறம் என்ன பண்றதா உத்தேசம் ... எப்படியா இருந்தாலும் உன் வாழ்க்கைக்கு ஒரு துணை வேணும்.. இப்படியே காலம் தள்ளிட முடியாது இல்ல ..."

 

 

"நோ மேம்.... எனக்கு என் ஹஸ்பண்ட்னா  உயிரு... அவரைத் தவிர வேற யாரையும் என்னைக்குமே எனக்கு பிடிக்காது .... பிடிக்க போறதும் இல்ல .... அவரு வேற யாரையாவது கல்யாணம் பண்ணிக்கிட்டு நிம்மதியா இருக்கட்டுமேனு தான் இந்த முடிவே.. நான் ஏழைங்கிறதால அவங்க வீட்டு ஆளுங்களுக்கு என்னை பிடிக்கல... ஒருவேளை வசதியான மருமக வந்தா நல்லா வச்சுப்பாங்களோ... என் கணவரும் நிம்மதியா இருப்பாரோகிற நம்பிக்கைல தான் இந்த டிவோர்ஸ் வேணும்னு நினைக்கிறேன் .... " என்று கலங்கியவளை பார்ப்பதற்கு பாவமாக இருந்தது.

 

"நீ சொல்றதெல்லாம் பார்த்தாஉன் கணவருங்கிற கதாபாத்திரத்தை இன்னும் நீ புரிஞ்சுக்கவே இல்லனு நல்லா தெரியுது ... உன்னை அளவுக்கு அதிகமா அவர்  நேசிக்கிறாரு.... நீ அதை வார்த்தைல எதிர்பார்க்கிற ... அவர் அதை செயல்ல காட்டுகிறாரு... அதான் வித்தியாசம் ...

 

உன் கணவர் உண்மையிலேயே தரமான மனிதர் ... ஏன் தெரியுமா,

 

கல்யாணமானதும் கணவர் தன் பேச்சைக் கேட்கணும்னு பொதுவா எல்லா பொண்ணுங்களும் எதிர்பார்க்கிறது தான்... ஏன்னா பெண்களுக்கு கொஞ்ச காலத்திலேயே கணவன் மேல அன்பு, பாசம், காதல் நேசம்னு எல்லா உணர்வுகளும் வந்துடும் ... ஆனா ஆணுக்கு திருமணமான முதல் ஒரு வருஷம் பொண்டாட்டி மேல ஈர்ப்புமோகம் தான் இருக்கும் அதுதான் இயற்கை ... இந்த நிலையில ஒரு ஆண்  மனைவி சொல்றதுக்கெல்லாம்  தலையாட்டினான்னா  அவன் சரியான மனுஷனா இருக்க வாய்ப்பில்லை ...

 

அதே மாதிரி அவர் வாழ்க்கையில அதிகம் பார்த்து பழகிய பெண்கள் அவரோட அம்மாவும் தங்கச்சியும்  தான்... நிச்சயமா  உன் மேல இருக்கிறத விட அவங்க அம்மா தங்கச்சி மேல அபரிமிதமான நம்பிக்கையும் அன்பும் இருக்கும் .. அதையும் நீங்க ஏத்துக்கிட்டு தான் ஆகணும் ...

 

தன் அம்மா தங்கச்சியும் சோம்பேறிங்கரொம்ப சுயநலமானவங்க, ஊர் வம்பு பேசுறவங்கபொறுப்பில்லாதவங்கனு உன் கணவருக்கு நல்லாவே தெரியும்....

 

ஒருத்தரை அவங்க குறையோடு நேசிக்கிறது தான் உண்மையான அன்பிற்கான அடையாளம் ... அதைத்தான் அவர் செய்யறாரு... இந்த குணம் உன் மாமனார் கிட்ட இருந்து உன் கணவருக்கு வந்திருக்கு... மனைவி கிட்ட எதையுமே எதிர்பார்க்காமஅவங்க எப்படி இருக்காங்களோ அப்படியே ஏத்துக்கிட்டு இவ்வளவு வருஷமா உன் மாமனார் வாழ்ந்துகிட்டு இருக்கார் ... அதை தான் உன் கணவரும் ஃபாலோ பண்றாரு...

 

உன் மாமனார் தன் மனைவியை திருத்த முயற்சிக்கல.... அப்படியே ஏத்துக்கிட்டாதால வந்த வினை இது ... பொதுவா பெண்களை அடிக்கிறது, இழிவா நடத்தறதெல்லாம்  தப்புன்னு நினைக்கிறவ நான்...

 

ஆனா உன் மாமியார் மாதிரியான ஆளுங்கள முன்னாடியே தட்டி வச்சிருந்தா இவ்வளவு பிரச்சனைகள் வந்திருக்காது ... தாயைப் போல பிள்ளைனு...

 

தன் அம்மாவை போல பொறுப்பு இல்லாம, பொறுமை இல்லாம, சோம்பேறித்தனத்தோட வளர்ந்ததால   உன் நாத்தனார் அருணாவால புகுந்த வீட்ல ஒன்றி இருக்க முடியல ... அதனால அவ குடும்ப வாழ்க்கைல 1008 பிரச்சனைகள் வருது ... அதுவும் உங்க கணவர் தலையில தான் விழுது ....

 

ஒருத்தர் கிட்ட குறைகள் கொட்டியிருந்தும் அவங்களை அப்படியே ஏத்துக்கிறது சாதாரண விஷயம் அல்ல ... அதை உன் கணவரும் மாமனாரும் உன் மாமியார் விஷயத்துல  செஞ்சிருக்காங்க ... இதுல உன் கணவர் செய்யற ஒரே தப்பு என்னன்னா ,அவர் அவங்க அம்மாவை Unconditional loveவோட ( நிபந்தனையற்ற அன்போடு) ஏத்துக்கிட்ட மாதிரி நீயும் ஏத்துக்கணும்னு எதிர்பார்க்கிறாரு... அதான் அவரோட பெரிய  தப்பு ...

 

 

அடுத்தது நீ உன் மாமியாரையும் நாத்தனாரையும் சரியாவே புரிஞ்சுக்கல.... அவங்க ரெண்டு பேரோட அடிப்படை குணமான சோம்பேறிதனம்சுயநலம், பொறாமை , பொறுமையின்மை இதையெல்லாம் வச்சு பார்க்கும் போது உன் கணவரை வேற ஒரு கல்யாணம் செய்துக்க விடமாட்டாங்க ...

 

உன் கணவரும் வேற ஒரு கல்யாணம் செஞ்சிக்கிற ஆள் கிடையாது... இருந்தாலும் நூத்துல ஒரு சதவீதமாக ஒருவேளை செஞ்சுகிறாருனு வச்சிப்போம், அந்தப் பெண்ணையும் வாழ விட மாட்டாங்க... உன்னை தான் அவங்களுக்கு பிடிக்கலைன்னு நீ நெனச்சுக்கிட்டு இருக்க ... ஆனா அவங்க ரெண்டு பேருக்கும் மருமகங்கிற கதாபாத்திரமே பிடிக்கல அதுதான் உண்மை ...

 

உன் கணவரை  கடைசி வரைக்கும் தனக்கும் தன் மகளுக்கும் சேவை செய்ற கொத்தடியா  வச்சுக்கணுங்கிற திட்டத்துல தான் உன் மாமியார்  இருக்காங்க ...

 

ரெண்டு குழந்தைக்கு அம்மா ... அதோட தன் பொண்ணுக்கு கல்யாணம் பண்ணி பேரன் பேத்தி எடுத்து இருக்காங்க ... ஒரு கல்யாணம் ஆன பொண்ணுக்கு பீரியட்ஸ்  ரெண்டு நாள் தள்ளி போனாலேஅந்த பொண்ணு உண்டாருக்க வாய்ப்பு இருக்குனு அவங்களுக்கு தெரியாதா...

 

நிச்சயமா தெரியும் ... தன் மகனுக்குன்னு  குடும்பம் குழந்தைனு வந்துட்டா, எங்க தன்னையும் தன் மகள் குடும்பத்தையும் பார்க்காம போயிடுவானோனு பயந்து தான்  கர்ப்பத்தை கலைக்கிற அளவுக்கு இறங்கி இருக்காங்க ...

 

சோம்பேறித்தனம், பொறாமை, சுயநலம்  பொறுப்பின்மை இந்த வார்த்தைகளை எல்லாம் சாதாரணமா கடந்து போயிடறோம் ... ஆனா இந்த குணத்திலேயே மூழ்கி இருக்கிறவங்க தன் வாழ்க்கைக்காகவும்  தன் சுகத்துக்காக எந்த அளவுக்கும் இறங்குவாங்க ... எதை வேணாலும் எப்ப வேணாலும் செய்வாங்க... 

 

அதைத்தான் உன் கணவர் இன்னும் புரிஞ்சுக்கல ... "

 

(எதிர்காலத்தில் அம்மாதிரி ஒரு சூழ்நிலையை சந்தித்துதான் அவன் வாழ்க்கையை விட்டே வெளியேற போகிறாள் என்பதை அப்போது அவள் அறிந்திருக்கவில்லை) ...

 

"மேம்...  நீங்க சொல்றத என்னால ஏத்துக்கவே முடியல .... ஒரு அம்மா இப்படி எல்லாம்  செய்வாங்களா ... தன் ஒரே மகனோட வாழ்க்கைய கெடுத்தாவம்சம் விருத்தி அடையாதுன்னு அவங்களுக்கு தெரியாதா..." 

என்றவளை பார்த்து லேசாக புன்னகைத்தவர்,

 

"தான் சொகுசா வாழனுங்கற ஒரே காரணத்துக்காக ரொம்ப சுயநலமா யோசிச்சு  தன் 14 ,15 வயசு பெண் குழந்தைகளை பாலியல் தொழில்ல இறக்கி விட்ட அம்மாக்கள்அப்பாக்கள் எத்தனையோ பேர் ...இந்த மாதிரி ஆளுங்களுக்கு எல்லாம் ஒரே ஒரு குறிக்கோள் தான் ... அது அவங்க நல்லா இருக்கணும் அவங்களுடைய சுகத்துக்கு எந்த கேடும் வந்துடக்கூடாது ... மத்தபடி தன் குழந்தைகளைப் பத்தியோ, இந்த  சமுதாயத்தைப் பத்தின  அக்கறையோ  என்னைக்குமே  கிடையாது .... உறவுக்காரங்க நட்பு வட்டங்கள்  பேசுறத கூட அவங்க கண்டுக்க மாட்டாங்க ... சரியா சொன்னா, அவங்களை எந்த வார்த்தையும் , யாரோட அறிவுரையும்  பாதிக்காது ... நேருக்கு நேர் நிக்க வச்சு கேள்வி கேட்டாசண்டை போட்டு கலவரம் பண்ணுவாங்க ... "என்றவர் ஏதோ யோசனைக்கு பிறகு

 

 

"ஆமா...  நீ ஏன் தனி குடுத்தனத்தை பத்தி யோசிக்க கூடாது ..."

 

"கல்யாணத்துக்கு முன்னாடி என் மாமனார் எந்த சூழ்நிலையிலும் நீ தனி குடித்தனம்  போக  கூடாதுனு  கேட்டுகிட்டாரு ... அதோட என் வீட்டுக்காரரும் தனிகுடித்தனம் வரக்கூடிய ஆள் கிடையாது மேம்.."

 

" ஓ........"

 

"இப்ப நான் என்ன தான் மேம் பண்ணனும் ... எனக்கு ஒண்ணுமே புரியல ..."

 

"குறை இல்லாத தாம்பத்தியம்னு ஒன்னு கிடையவே கிடையாதும்மா ... விட்டுக் கொடுக்கறதும் விட்டு பிடிக்கிறதும் தான் தாம்பத்தியத்தோட அடிப்படையே ...

 

எல்லா விதங்கள்லயும் நமக்கு புடிச்ச மாதிரி ஒருத்தர் இருந்தே ஆகணும்னா நினைச்சா கடைசியில நமக்கு புடிச்ச மாதிரி ரோபோவ செஞ்சி அதைத்தான் கல்யாணம் பண்ணிக்கனும்....

 

இப்பெல்லாம் டிவோர்ஸ்ங்குறது ரொம்ப சகஜம் ஆயிடுச்சு ... தம்பதிகளை பிரிக்க ஆயிரம் சட்டங்கள் இருக்கு ... அந்த ஆயிரம் சட்டங்களை சொல்லிக் கொடுக்க ஆயிரமாயிரம் வக்கீல்கள்ஊடகங்கள், புத்தகங்கள் எல்லாம்  இருக்கு ... ஆனா தம்பதிகள் கடைசி வரைக்கும் கௌரவமா  சேர்ந்து வாழ திருமணங்கிற உறவை தாண்டி வேற எதுவுமே இல்லயே ...

 

உன் வீட்டையே எடுத்துக்கோ ... உன் அப்பா மாதிரி ஒரு பொறுப்பில்லாத ஆளோட உங்க  அம்மா இத்தனை வருஷம் குப்பை கொட்டினதால தான் உனக்கும் உன் தங்கச்சிக்கும் ஒரு அருமையான குடும்ப அமைப்பு கிடைச்சிருக்கு ....

 

பெத்தவங்க பிரிஞ்சதால அப்பாவோட பாதி நாள் , அம்மாவோட பாதி நாள் வாழற குழந்தைங்க... யாராவது ஒருத்தரோடவே வாழற குழந்தைகளுக்கு மத்தில ஓர் அளவுக்கு மன நிம்மதியான சூழ்நிலையில் நீயும் உன் தங்கையும் வளர்ந்து இருக்கீங்கன்னா அதுக்கு உன் அம்மாவோட பொறுமை தான் காரணம் ...

 

 

உன் மாமனாரையும் எடுத்துக்க... உன் மாமியார் மாதிரியான  ஒரு கதாபாத்திரத்தோட இவ்வளவு நாள் வாழறது எவ்வளவு கஷ்டம் தெரியுமா ...

 

இவங்க எல்லாம் இப்படி பொறுமையா போறதுக்கு ஒரே காரணம் குடும்பங்கிற அமைப்பு உடைய கூடாதுங்கிற எண்ணத்துல தான்...

 

அதுக்காக நான் விவாகரத்துக்கு எதிரானவ கிடையாது....

 

பொதுவா இரண்டாவது திருமணங்கிறது அது ஆணா இருக்கட்டும் பெண்ணா இருக்கட்டும், 60% பேருக்கு சரியா அமையறது இல்ல ... ரெண்டாம் தாரம் ரெண்டாம் தரமா இருக்கிறதை பல இடங்கள்ல என்  அனுபவத்துல  பார்த்திருக்கேன்...

 

 இதுவே இரண்டாவது வாழ்க்கைமூணாவது நாலாவதுனு போனா நல்லா இருக்காதுங்குற ஒரே காரணத்துக்காக வேற வழி இல்லாம  பல்ல கடிச்சுக்கிட்டு குடும்பம் நடத்துறவங்க  இங்க அதிகம் ...

 

ஏன்னா  குறைகளை திருத்திக்காம, எத்தனை கல்யாணம் பண்ணிக்கிட்டாலும் அந்தக் கல்யாணம் வெற்றி அடைற வாய்ப்புகள்  கம்மினு அவங்க புரிஞ்சிக்கிறது இல்ல ...

 

அதே சமயத்துல குடிச்சிட்டு வந்து அடிக்கிறான் .. வேற  பொண்ணு  கூட தொடர்புல  இருக்கிறதால வீட்டுக்கே வர்றதில்ல.... வேலைக்கு போகாம ரவுடித்தனம் பண்ணிக்கிட்டு இருக்கான்....  செக்ஸுவல்  டார்ச்சர் கொடுக்கிறான்... சைக்கோ தனமா பிஹேவ்  பண்றான்... இந்த மாதிரியான நபர்களோட  வாழவே முடியாது ... டிவோர்ஸ்க்கு போய் தான் ஆகணும் ... ஆனா ராம் சரண் அப்படி இல்லையே ... பக்கா ஜென்டில்மேன்... ரொம்ப நல்ல மனுஷனும் கூட...  அவரோட அம்மா தங்கச்சிக்காக நீ அவரை டிவோர்ஸ் பண்ணனும்னு நினைக்கிறது சுத்த முட்டாள் தனம் ..

 

அவருக்கு அவங்க அம்மா தங்கச்சியோட கெட்ட குணங்கள் எல்லாம் அத்துபடி  தான்... ஆனா அதனோட பக்க விளைவுகளையும் பின் விளைவுகளையும் தான் இன்னும் அவரு முழுசா உணர ஆரம்பிக்கல....

 

ஏன் இன்னும் உன் மாமனாரே உணரல... அதை ரெண்டு பேரும் எப்ப உணரறாங்களோ  அன்னைக்கு பிரச்சனை சால்டு....

 

ஒரு விஷயத்தை தெரிஞ்சுக்கிறது வேற.... உணர்றது வேற ... ரெண்டுத்துக்குமான வித்யாசத்தை நீ  முதல்ல புரிஞ்சிக்கணும் ...

 

அதனால உன் கணவர் விஷயத்துல நீ கொஞ்சம் பொறுமையை கையாளறது உங்க ரெண்டு பேருக்குமே  ரொம்ப நல்லது  ...

 

தொட்டதுக்கெல்லாம் தப்பு கண்டுபிடிச்சு , ஒன்னும் இல்லாத விஷயத்துக்கெல்லாம் டிவோர்ஸ்க்கு அப்ளை பண்றவங்க இப்ப  அதிகமாயிட்டாங்க ..

 

பொறுமைங்கிறது ரொம்ப பெரிய ஆயுதம் ..... ஆனா ஏனோ அதை யாருமே இப்ப பயன்படுத்துறதில்ல...

 

மத்தபடி கோவம் குரங்குக்கு கூட வரும் ...

 

பொறுமையை கடைப்பிடிச்சு பெருமையா வாழ்ந்து காட்டுறதுல தான் வாழ்க்கையோட சாராம்சமே இருக்கு... இந்த உலகத்துல மாற்றம் ஒன்றுதான் மாறாதது எல்லாம் ஒரு நாள் மாறும் ... உன் கணவரும் ஒரு நாள் எல்லாத்தையும் புரிஞ்சுபாரு....

 

நீ பிஎஸ்சி பிஎட் படிச்சிருக்கடீச்சரா வேற இருந்திருக்க... பியூசி கூட படிக்காத உங்க மாமியார் கிட்ட  தோத்து போக போறயா...

 

நீ உன் கணவரை விட்டு போகணும் ... உன் கணவருக்கு கடைசி வரைக்கும்  குடும்பம் குழந்தைகள் அமையவே கூடாதுங்கறது தான் உன் மாமியாரோட திட்டம் .... 

 

நீ டிவோர்ஸ் வாங்கிக்கிட்டு போயிட்டா , உன் மாமியார் அவங்க போட்ட திட்டத்துல ஜெயிச்சிருவாங்க... நீயும் உன் கணவரும் படு கேவலமா தோத்து போயிடுவீங்க ... பரவாயில்லையா ...

 

நாம படிச்ச படிப்பு அடுத்தவங்களுக்கு பயன்படுத்தோ இல்லையோ நம்ம வாழ்க்கைக்கு பயன்படணும்...

 

உன் மாமியார ஜெயிக்க விடப்போறியா....  இல்ல நீ ஜெயிச்சு காட்ட போறியானு நீ தான் முடிவு பண்ணனும் ....

 

Winners never quit

Quitters never win... 

நான் சொல்றது புரிஞ்சிருக்கும்னு நினைக்கிறேன் ...

 

உன் வாழ்க்கையை நல்லபடியா தொடர வழியை பாரு ..."

 

"தேங்க்ஸ் எ லாட் மேம்... உங்ககிட்ட பேசினதுக்கு அப்புறம் மனசு இலவம் பஞ்சு மாதிரி லேசாயிடுச்சு, ஆனா என் அம்மா கூட என்னை புரிஞ்சுக்காததை நெனச்சா  இப்ப கூட வருத்தமா இருக்கு  மேம் ..."

 

"உன் அம்மானு இல்ல ... என் மாமியார் நாத்தனார் பண்ண விஷயங்களால தான் என் கணவர்கிட்ட இருந்து டிவோர்ஸ் கேட்டேன்னு நீ சொன்னா நிறைய பேர் ஏத்துக்க மாட்டாங்க ...

 

ஏன்னா இங்க சைக்கோ குடிகாரனோட குடும்பம் நடத்தி  அஞ்சு குழந்தைங்க பெத்த பொண்ணுங்களும்  உண்டு..

 

ஒண்ணுமே இல்லாத விஷயத்துக்கு டிவோர்ஸ் கேட்கிறாளேனு உன்னை தான் தப்பு சொல்லுவாங்க… எல்லாரோடையும் மனநிலையும் உடல் நிலையும் ஒரே மாதிரி கிடையாது ...

 

சிலரால பல வார்த்தைகளை தாங்கிக்க முடியும் பலரால சில வார்த்தைகளை தாங்கிக்க முடியாது .."

 

 

"ஒன்ஸ் அகைன் தேங்க்ஸ்  மேம்... அதோட சாரி ப்ளீஸ்  ..."

 

"ஏன் சாரி ..."

 

"எனக்கு பொதுவா பெண்ணியம் பேசுறவங்கள ரொம்ப பிடிக்காது ...உங்களை என் ஃபிரண்டு சஜஸ்ட் பண்ணும் போது உங்கள மீட் பண்ண ரொம்ப யோசிச்சேன்..." என்று தயங்கியவளை பார்த்து கலகலவென்று சிரித்தவர்,

 

 

"பெண்ணியம்னலே பாதி பேருக்கு இங்க அர்த்தமே தெரியறதில்ல ... ஆம்பள மாதிரி முடி வெட்டிக்கிறதுதம் அடிக்கிறது தண்ணி அடிக்கிறது ஆம்பள 10 பேர் கிட்ட போனா பொம்பள 20 பேர் கிட்ட போகணும் ... அப்பதான் ஆணுக்கு பெண் சமம்னு சொல்றது ... 

 

குழந்தை பிறந்தா , தாய்மைங்கிற உணர்வால பெண்  அடிமை ஆயிடறா அதனால கர்பப்பையை எடுத்துடனும்னு சொல்ற அரைவேக்காட்டுத்தனமானமனம் பிறழ்ச்சியான பெண்ணியத்தை நான் என்னைக்குமே ஆதரிச்சதும் இல்ல எழுதி,பேசியதும் இல்லை ...

 

 

குடும்பங்கிற  கட்டமைப்பை உடைப்பது தான் பெண்ணியம்னா அது சமுதாய சீர்கேடு ..

 

இந்தியாவுல குடும்ப அமைப்புனு ஒன்னு இருக்கிறதால தான் குற்றங்கள் குறைவா இருக்கு...

 

ஏன்னா ஒவ்வொரு குடும்பத்தையும் வழி நடத்த  தாயோ தாரமோ ஏதோ ஒரு பெண் இருக்கா... 

 

மனித குலத்துக்கு ஆதாரமே பெண் தான் ... அவளோட கர்ப்பப்பையை எடுத்தாமனித சமுதாயமே இல்லாம போயிடுமே ....

 

இப்படி உலகத்தையே உருவாக்குற பெண்ணினத்தை ஆண்களோடு ஒப்பிட்டு பேசறதே முதல்ல  தப்பு ...

 

ஒவ்வொரு பெண்ணும் மகா சக்தியின் மறு பதிப்புனு நினைச்சாஆண்களோடு ஒப்பிடறத நிச்சயமா நிறுத்திடுவோம் ...

 

அழகான பெண்மையோடு அறிவார்ந்த விஷயங்கள்ல ஆண் இனத்தை ஆளுமை செஞ்சு  வெற்றி கொண்டா அதுதான் பெண்ணியம் ...

 

 மூணு வயசு ஆண் குழந்தையை பார்த்தீங்கன்னா அது  கார் பொம்மையோட  விளையாடும்ஆனா அதே வயசு பெண் குழந்தை ஒரு பெண் பொம்மையை கையில வச்சிக்கிட்டு அதுக்கு தலைவாரி விடறதுசாப்பாடு போடுறது , தூங்க வைக்கிறதுன்னு  எப்பவும் அதை தன்னோடவே  வச்சுக்கிட்டு சுத்தும் ....  இதுதான் இயற்கை .... 

 

இயற்கையின் இயல்பை அப்படியே ஏத்துக்கணும் அதுதான் அழகு ... பெண்ணினத்தை பெண்மையோடு போற்றும் போது தான் உண்மையான பெண்ணியமே  பிறக்குது ..."

 

"உங்களுக்கு தேங்க்ஸ் சொல்லி  சொல்லி என் வாய் தான் வலிக்குது ...." என்றவளை பார்த்து சிரித்தவர்,

 

"கடைசியா ஒரு விஷயத்தை சொல்றேன் மனசுல வச்சுக்கோ... இங்க புரிஞ்சுகிட்டு சேர்ந்து வாழ்ந்தவங்கள விடசேர்ந்து வாழும் போது புரிஞ்சுகிட்டவங்க தான் அதிகம் ...

 

தம்பதிகளா 30 வருஷம் சேர்ந்து வாழ்ந்தாலும், வாழ்க்கை புது புது பிரச்சினைகளை அறிமுகப்படுத்தும் போது அவங்களுக்கிடையே புதுப்புது  குணங்கள்  அறிமுகமாகும்...

 

அதனால யாரும் யாரையும் 100 சதவிகிதம் புரிஞ்சுக்க வாய்ப்பே இல்லை ... அதே மாதிரி உன் கணவர் உன்கிட்ட அன்பா இல்லன்னு நீ நினைக்கிற... ஆனா அவர் உன்கிட்ட உண்மையா இருக்காருன்னு நான் சொல்றேன்... 

 

அன்பா இருக்கும் உறவுகள விட உண்மையா இருக்கிற உறவுகள் தான், நீண்ட நாளைக்கு நீடிக்கும்….

 

உன் கணவர் வந்ததும் அவரோட கிளம்பி போ ... சேர்ந்து வாழ முயற்சி பண்ணு ... உன் மாமியார் நாத்தனார் என்ன சொன்னாலும் காதுல வாங்காத... அப்படியே காதுல விழுந்தாலும் அதுக்கு முக்கியத்துவம் கொடுக்காத .... உன் வேலை உண்டு நீ உண்டுனு  வீட்டு வேலை முடிஞ்சதும் உன் ரூம்ல போய் இருந்துக்க...  உங்க மாமனாரோட எஸ்டேட் அக்கவுண்ட்ஸ்  வேலையை எடுத்து  மறுபடியும் அதுல  கான்சன்ட்ரேட் பண்ணு ...

 

உன் மாமியாரோட சண்டை போட்டறதுக்கு பதிலா நீ அந்த வீட்லயே இருந்துகிட்டு அவங்கள கண்டுக்காம இருந்தான்னாலே போதும் .... அதுவே அவங்களுக்கு பெரிய பதிலடி தான் .... 

 

ரொம்ப நாள் உன் பொறுமைய அவங்களால் தாக்கு பிடிச்சுக்க முடியாது ... ஒரு கட்டத்துல அவங்க தன் சுய ரூபத்தை காட்டி தான் ஆகணும் ... அன்னைக்கு உன் கணவருக்கு எல்லாம் தெரியவரும் .. அதுவரைக்கும் பொறுமைங்கிற ஆயுதத்தை பயன்படுத்து ....

 

 நான் சொல்ற விஷயம் கேட்க  ஈசியா இருக்கும் ஆனா ஃபாலோ பண்ணும் போது நெருப்புல நிக்கிற மாதிரி இருக்கும் .... வேற வழி இல்ல ... இப்ப இருக்கிற உன் குடும்ப சூழ்நிலையில இத நீ பாலோ பண்ணி தான் ஆகணும் ...

 

ஏன்னா இதுவரைக்கும் உன் மாமியார்தன் பக்கத்துல இருந்து ஒரு சீட்ட கூட இறக்காம, உன்கிட்ட இருக்கிற சீட்ட ஒவ்வொண்ணா  இறக்க வச்சிருக்காங்க ...

 

நீ பொறுமைய கடைபிடிச்சா வேற வழி இல்லாம அவங்கதான் எல்லாத்தையும் இறக்க வேண்டிய நிலைமை வரும் ... 

 

நினைவுல வச்சுக்கோ ...இது உனக்கும் உன் மாமியாருக்கும் நடக்கிற ஆடு புலி ஆட்டம் ... இதுல உன் கணவருக்கு கதாபாத்திரமே கிடையாது ...

 

இப்போதைக்கு டிப்ரஷன் குறையவும் தூக்கம் நல்லா வர்றதுக்கும்  மெடிசன்ஸ் தரேன் ...  ஒரு கோர்ஸ் எடுத்தா சரியா போயிடும் ... நீ ரொம்ப புத்திசாலி பொண்ணு ... புத்திசாலியா நடந்து உன் வாழ்க்கையை காப்பாத்திபேனு நம்பறேன்...." என்றவரிடம் மனதார நன்றி தெரிவித்து விட்டு, தெளிந்த மனதோடு விடைபெற்றாள்.

 

 

 

ஸ்ரீ - ராமம் வருவார்கள் ......

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 


Comments

  1. Superb story akka. Finally I read all the uds in last two days. Neenga neenga than... I swear it's you in priya character and Anna in AVR role. Shree Lakshmi pavam. Eagerly waiting for next ud. Take care of your health too

    ReplyDelete
  2. Supperrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrr

    ReplyDelete

Post a Comment