அத்தியாயம் 13
திருமணமான
தினத்திலிருந்து இந்த கணம் வரை பாரபட்சம் இன்றி அவளது எதிர்பார்ப்புகளை பொய்த்துப் போக செய்வதையே
வேலையாக வைத்திருந்தான் அவளது மணாளன் .
அவள் அவனை
உயிருக்குயிராய் மனைவியாய் , காதலியாய் நேசிக்கிறாள்... சுவாசிக்கிறாள் ...
அவளது 100 சதவிகித அன்பு, பாசம், காதல், நேசத்தில்,
10 சதவிகித்தை கூட அவன் பிரதிபலிக்கவில்லையே என்ற மனக்குமுறல் தான் அவள் ஆழ்மனதை சுனாமியாய் சுழற்றி அடித்துக்
கொண்டிருந்தது ...
எந்த ஒரு
உறவிலும் , அவர்களுக்கான தரவரிசையை
நிர்ணயிப்பது அவர்களுக்கு கொடுக்கப்படும் முன்னுரிமையை பொறுத்து தான்
....
உலகில் ஆயிரம்
உறவுகள் இருக்கலாம் ... ஆனால் மணமான பெண்ணுக்கு கணவன் தான் முதல் உறவு அதே போல்
கணவனுக்கு மனைவி தான் முதல் உறவு….
இந்த
முன்னுரிமையில் வேறு
எந்த உறவுமுறை தலையிடும் இருக்கக் கூடாது ... அப்படி
இருக்கும் பட்சத்தில் தம்பதிகளின் திருமண வாழ்க்கை
சுழலில் சிக்கியது போல் சிதைந்து போகும் என்பதை படித்தவர்கள் மட்டுமல்ல
பாமரர்களும் அறிவர் ...
ஆனால் பெரிய
படிப்பாளி, பெரும்
பதவி வகிப்பவன், நல்ல
வளமான குடும்ப பின்னணியை கொண்டவன், பல நாடுகளைக் கண்டவனுக்கு இதையெல்லாம் ஒருவர் எடுத்துச் சொல்லித்தான்
தெரிய வேண்டுமா ....
அவனுக்கு
பொறுப்பு இருக்கிறது பொறுமை தான் இல்லை ...
நேசம்
இருக்கிறது பாசம்
தான் இல்லை ....
கணவனாக கடமையை
ஆற்ற முயல்கிறான் ... காதலனாக கடுகளவு களம் இறங்க மறுக்கிறான் ...
இப்படி பட்டவனை
வெறுக்கவும் மறக்கவும் முயற்சிக்கிறாள் மங்கை.... முடிந்தால் தானே ....
அவளது இதயத்தில் கான்கிரீட் சிம்மாசனத்தை
அமைத்து அதில் அமர்ந்தல்லவா அந்த கள்வன் களமாடுகிறான்
....
ஆழ்மன உறக்கத்தை
தவிர அவளது அணுவிலும் அசைவிலும் எப்பொழுதும் அவன் நினைவுகளே....
அடித்தது தாய்
என்றாலும் அழும் குழந்தை ஆறுதலுக்காக தாயிடமே தஞ்சம் அடைவது போல் , இத்துணை ஏமாற்றத்திற்கு
பிறகும் அவளது மனமும் விழிகளும் அவனைக் காண ஏங்கித் தவிக்க, பரஸ்பரம்
அன்பில்லாத அந்த புதிய உணர்வில் சிக்கித் தவித்து சின்னாபின்னம்
ஆகிக்கொண்டிருந்தாள் பாவை...
அவளது மனமும்
உடலும் பலகீனமான நிலையிலும் அவனது ஆறுதலுக்காகவும் அண்மைக்காகவும் ஏங்க, ஈன்ற தாயிடம் கூட வாய்விட்டு
சொல்ல முடியாமல் வெடித்து அழவும் முடியாமல், உள்ளுக்குள்ளேயே
வெந்து கொண்டிருந்தாள் அந்த வனிதை.
மகளின்
முகத்தில் தெரிந்த கலக்கத்தை கண்டும் காணாமல் ருக்மணி கவனித்துக் கொண்டிருக்கும் போது
மருத்துவர் வந்து
"அஞ்சு
மாசம் கடந்து மிஸ்கேரேஜ் ஆனதால இந்த மாதிரி ஒரு பிரச்சனை ஏற்பட்டிருக்கு .... இப்ப
ப்ரேஸ்ட் பம்ப் யூஸ் பண்ணி மில்க் ரிமூவ் பண்ண மாதிரி , நீங்க வீட்லயும் 4 டு 5 அவர்ஸ்
ஒன்ஸ் பண்ணீங்கன்னா 2 டுடேஸ்ல சரியா
ஆயிடும் ..... எழுதிக் கொடுத்த டேப்லெட்ஸ்ஸ மறக்காம எடுத்துக்குங்க இல்லனா ஃபீவர்
வந்துடும்.... நீங்க இப்ப கிளம்பலாம் ... வேற ஏதாவது ப்ராப்ளம்னா வாங்க ..."
என அறிவுரை கூறி விடைபெற்றார்.
இருவரும்
வீட்டிற்கு கிளம்பி கொண்டிருக்கும் போது ராம்சரணிடம் இருந்து அழைப்பு வந்தது .
"அம்மா...
நீயே பேசிடும்மா..." என்று கண் கலங்கிய மகளைப் பார்க்க பாவமாக
இருக்க, அலைபேசியை வாங்கி
"சொல்லுங்க
மாப்ள ..." என்றார்.
நடந்த
நிகழ்வுகள் அனைத்தையும் பொறுமையாக எடுத்து இயம்பியவன் லட்சுமியின் உடல் நிலையை
பற்றி விசாரிக்க, மகளைப் பார்த்தபடி நடந்த அனைத்தையும் கூறி முடித்தார் ருக்மணி.
"குழந்தை
சாயங்காலம் டிஸ்சார்ஜ் ஆயிடுவான் ... நான் ஈவினிங் வீட்டுக்கு வந்து
லட்சுமியை பார்க்கிறேன் ... இப்ப நீங்க ரெண்டு பேரும்
வீட்டுக்கு போகறதுக்கு கேப்(Cab) அரேஞ்ச் பண்றேன்... தயாரா
இருங்க இன்னும் பத்து நிமிஷத்துல ஹாஸ்பிடலுக்கு கேப்
வந்துரும் " என்று முடித்தான்.
ராம்சரண்
கூறியதை ருக்மணி மகளிடம் பகிர
"அவர்
வரணும்னு இங்க யாரும் எதிர் பார்க்கல... அவசியமும்
இல்ல... அவருக்கு அவங்க அம்மா, தங்கச்சி,
குடும்பத்தை பார்க்கவே நேரம் பத்தல ... இதுல என்னை தேடி வந்து பார்த்து அவர் நேரத்தை வீணாக்க
வேண்டாம்னு சொல்லிடுங்க ..." என்றாள் மகள்
வெடுக்கென்று .
உரிமையும்
உறவும் இருக்கும் இடத்தில் எதிர்பார்ப்பு இருக்கும். எதிர்பார்ப்பு அதிகம்
இருக்கும் இடத்தில் நிச்சயம் ஏமாற்றமும் இருக்கும் ...
அப்படி ஒரு
மனநிலையில் தான் மகள் சிக்கி தவிக்கிறாள்
எனப் புரிந்து கொண்டவர் அவளை வாஞ்சையாக
பார்த்து,
"நீ ஏன் தேவையில்லாம மாப்பிள்ளை மேல கோவபடற... அவர் இடத்துல நீ இருந்தாலும் இப்படித்தான்
நடந்துகிட்டு இருப்ப .... அவரோட சூழ்நிலையை புரிஞ்சுக்க முயற்சி பண்ணு லட்சுமி
..."
"நீ
சொன்னது சரி தாம்மா... எப்பவுமே அவர் சூழ்நிலைக்கு ஏத்தி மாதிரி சரியா தான்
நடந்துகிட்டு இருக்காரு...
ஆனா நீ ஒரு விஷயத்தை புரிஞ்சுக்கணும் ... இன்னைக்கு நடந்தது முதல்முறையா இருந்திருந்தா,
நிச்சயமா எனக்கும் அவர் மேல கோவமே வந்திருக்காது ... ஆனா கல்யாணம்
முடிஞ்சு இந்த அஞ்சு மாசத்துல இந்த மாதிரி பல சம்பவங்கள் நடந்து போச்சு... அவருக்கு அவர் குடும்பத்தாளுங்களுக்கு உதவி செய்ய மட்டும் நேரம் இருக்கு,
ஆனா எனக்குன்னு வரும் போது மட்டும் ஏனோ நேரமே
இருந்ததில்ல.... இருக்கிறதும் இல்ல ...
கல்யாணம்
முடிஞ்சு ஹனிமூனுக்காக ஊட்டிக்கு போன போது கூட, அவங்க தங்கச்சி வீட்டுக்காரர் புதுசா கடை திறக்க போறாருன்னு நியூஸ் வந்ததும்,
உடனே அங்கிருந்து கிளம்பி வந்துட்டோம் இப்படி நிறைய விஷயங்கள்
நடந்திருக்கு...
அவரை பொருத்த
வரைக்கும் எப்பவுமே நான் ரெண்டாம் பட்சம் தான்... நான் உயிருக்கே போராடிக்கிட்டு
இருந்தா கூட அவங்க அம்மா தங்கச்சிக்கான வேலைகளை எல்லாம் முடிச்சுட்டு தான்
வருவாரு...
இயற்கை கூட
வயிறு காலியானதும் குழந்தை வெளியே வந்துடுச்சு போலனு நெனச்சு அதுக்கு பசியாத்த பால்
சுரக்குது.... ஆனா என் வீட்டுக்காரர் மனசுல மட்டும்
ஏன் என் மேல ஈரமே சுரக்க மாட்டேங்குதுன்னு தெரியல
..." என கண்களோடு மனமும் கலங்கி கூறி முடித்தாள்.
"லட்சுமி, நீ சொல்றது ரொம்ப சாதாரண விஷயம்.... எல்லா பொண்ணுங்களும் தம் புருஷன் கிட்ட எதிர்பார்க்கிறத தான் நீயும் மாப்பிள்ளை கிட்ட எதிர்பார்க்கிற ... ஆனா ஒரு விஷயத்தை நீ சரியா புரிஞ்சுக்கணும் .... மாப்பிள்ளை ஒன்னும் வச்சிக்கிட்டு வஞ்சனை பண்ணல ... உண்மையிலயே அவருக்கு நேரமே கிடைக்கிறதில்லம்மா... கிடைச்ச நேரத்தை உனக்கும் அவர் குடும்பத்தாளுக்கும் தன்னால முடிஞ்ச அளவுக்கு பங்கு போட்டு செலவழிக்கிறாரு…
ஆனா உன் அப்பா, நீ பொறந்த அப்ப குழந்தை
பிறந்துடுச்சின்னு என் அப்பா லெட்டர் போட்டு, போன்
பண்ணி சொல்லியும் ஒரு வாரம் கழிச்சு தான் வந்து பார்த்தாரு... அப்ப அவரு தன்
பிரண்ட்ஸோட தமிழ்நாட்டுக்குள்ள தான் டூர் போயிருந்தாரு..
உன் விஷயமாவது
பரவாயில்லை... உன் தங்கச்சி
பொறந்த போது, ரெண்டாவதும் பெண்ணா பிறந்துடுச்சுனு
கோவப்பட்டுக்கிட்டு ஒரு மாசம் என்னையும் ராமலட்சுமியையும் வந்து பார்க்கவே இல்லை
தெரியுமா ...
ஒரு
தாய் எவ்வளவோ வலிய அனுபவிச்சு ஒரு குழந்தையை பெத்து எடுக்கிறா ... ஆனா உங்க அப்பா மாதிரியான ஆளுங்க ரொம்ப ஈஸியா பையனா பொண்ணானு பேதம்
பார்த்துட்டு போயிடறாங்க ...
ரத்தமும்
சதையுமா போராடி குழந்தையை பெத்திருக்காளே பொண்டாட்டின்னு நினைச்சு என்கிட்ட
அனுசரணையா ஒரு
வார்த்தை பேசல ....
ஆனா மாப்பிள்ளை
நான் விஷயத்தை சொன்னதும் பதறிப் போயிட்டாரு .... அவர் குரலே ஒரு மாதிரி கமர
ஆரம்பிச்சிருச்சு... இப்ப பேசும் போது கூட உன்னை பத்தி ரொம்ப அதிகம்
விசாரிச்சாரு.....
இங்க பாரு
லட்சுமி நீ உன் வயசு வழியா மாப்பிள்ளைய பார்க்கிற... நான் என் அனுபவம் வழியா அவரை
பார்க்கிறேன்.... அதான் என்னால அவரை சரியா புரிஞ்சுக்க முடியுது ...
தொட்டதுக்கெல்லாம்
அவர்கிட்ட கோவிச்சுக்கிட்டு உன் வாழ்க்கையை கெடுத்துக்காதே .... ஒழுங்கா அவரோட
சேர்ந்து குடும்பம் நடத்தி குழந்தை குட்டியை பெத்து வளர்க்கிற வழிய பாரு.... உனக்கு அப்புறம் உன்
தங்கச்சி இருக்கா.... அவளை நாங்க கரையேத்தி ஆகணும்... வீட்டோட மூத்த பொண்ணா
லட்சணமா நடந்துக்கோ ..." என்ற தாயிடம் மேற்கொண்டு பேச
மனமில்லாமல், மௌனியாகி போனாள்.
ராம்சரண்
சொன்னது போல்,மருத்துவமனை
வாயிலில் கேப் காத்திருக்க, அதில்
இருவரும் பயணித்து வீடு வந்து சேர்ந்தனர்.
தன் அறைக்கு
வந்தவளுக்கு அசதி ஆலை கணக்கில் இருந்தாலும் உறக்கம் பிடிப்படாமல் தவித்தாள்…
அவள் என்றுமே
இப்படி இருந்ததில்லை ...
அவளது
திருமணத்திற்கு முன்பு காதலித்துக் கொண்டிருக்கும் அவளது தோழிகள் யாராவது தன் காதலன் தனக்கு முக்கியத்துவம் கொடுக்கவில்லை என்று கூறி கண்ணீர் வடித்தால் அதைப் பார்த்து நக்கல்
நையாண்டி செய்வாள்.
"எந்த உறவுலயும் முக்கியத்துவத்தை கேட்டு வாங்க கூடாது .... தானா வரணும் .... எப்ப உன் லவ்வர் உன் போனுக்கு ப்ராப்பரா ரெஸ்பான்ட் பண்றது இல்லையோ, உனக்கான நேரம் ஒதுக்குறதில்லையோ அப்படிப்பட்டவனுக்காக நீ ஏன் கலங்கி கண்ணீர் வடிச்சு உன் நேரத்தையும் உடம்பையும் கெடுத்துக்கிற... அவன் உன்னை உண்மையிலேயே லவ் பண்ணி இருந்தா, யார் என்ன சொன்னாலும் நேரமே இல்லன்னாலும் உனக்கான முக்கியத்துவத்தை ஏதாவது ஒரு வகையில நிச்சயமா உணர்த்தி இருப்பான் .... இந்த மாதிரியான ஆளுங்கள நம்பி வாழ்க்கையை கெடுத்துக்காதே ..."
என அவள் அவளது தோழிக்கு அறிவுறுத்திய
வார்த்தைகள் அவளது காதுகளில்
மீண்டும் மீண்டும் ஒலிக்க, தற்போது தானும் அதே நிலையில்
இருப்பதை உணர்ந்தவள் , தன் மனதை வேறு பாதைக்கு செலுத்தவும் தன்மானத்தைவும் தக்க வைத்துக் கொள்ளவும் தன்னவனிடம் குறைகளை தேடலானாள்.
அப்படி தேடும்
போது தான் காதலுக்கும் தன்மானத்துக்கும் சம்பந்தம் இல்லையோ .... இரண்டும் தண்ணீரும் நீரும் போல்
ஒட்டாமல் இருக்கிறதே.... என்ற எண்ணம் முதன் முறையாய்
உதயமானது....
அவள் தாய்
சொன்னது போல்,அவனது
குறைகளை குறிப்பிட்டுச் சொல்ல பூதக்கண்ணாடி தான் தேவைப்பட்டது.... பெரும்பாலான
இடங்களில் மனமுதிர்ச்சியோடும், பொறுப்புடனும்
செயல்பட்டிருக்கிறான்.... ஆனால் அவளிடம் மட்டும் தான் ஒருவித சுணக்கம் போல்
தோன்றியது ....
முதலில் கணவன்
மனைவிக்கு இடையே ஈர்ப்பு இருக்க வேண்டும்... காலம் செல்ல செல்ல அது காதல், அன்பு, பாசம் ,
அக்கறை, நம்பிக்கை விசுவாசம் என பல்வேறு
முகங்களாய் விரிவடையும் என்பதுதான் உலக வழக்கு ...
அவனது படிப்பு , பதவி, அழகு,
திறமை, குடும்பப் பின்னணி என எதற்குமே
தான் ஈடு இல்லை என்பதால் தன்னிடம் ஈர்ப்பு இல்லையோ... அவனது தந்தை
தன்னைத் தேர்வு செய்ததற்காக திருமணம் செய்து கொண்டானோ என்ற சந்தேகமும் எழுந்தது...
ஆனால்
அப்படியும் ஒரு வரையறையை அவளால் வரையறுக்க முடியவில்லை.... காரணம் அவளை அவன் பார்க்கும் பார்வையில் ஒருவித
கனிவும் காதலும் கலவையாய் இருக்கும் ...
அம்மாதிரியான
பார்வையை எவரிடத்திலும் அவன் செலுத்தியதில்லை... அவளுடன் அவன் கழித்த
பிரத்தியேக தருணங்களை எண்ணிப் பார்த்தால், கட்டாயத்தில் அவன்
காதல் கொண்டது போல் ஒரு கணமும் அவளால் யோசிக்கக்கூட முடியவில்லை ....
பிறகு ஏன் இந்த
பாரா முகம் ....
ஒரு வேளைஅவன்
சரியாகத்தான் இருக்கின்றானோ நான் தான் அதிகம் எதிர்பார்க்கின்றேனோ...
என எக்கு தப்பாக , ஏடாகூடமாக எதுகை மோனை ஏதுமில்லாமல் ஏதேதோ எண்ணிப் பார்த்தபடி மதிய உணவை முடித்துக் கொண்டு கண்ணயர்ந்தாள்.
மாலையில் ஆதவன்
மறைந்து அந்தகாரம் ஆரம்பித்த தருணத்தில், கூடத்தில் தன்னவன் தன் தாயுடன் பேசும் அரவத்தைக் கேட்டு கண்விழித்தாள்
காரிகை .
அயர்ந்து
உறங்கியதில் சற்று மறந்திருந்த மன உணர்வுகள், மீண்டும் உயிர்பெற்று ஆட்டம் காட்ட, அவளது இதயம் எக்கத்தப்பாய் துடிக்க ஏக்கத்தை
புறந்தள்ளிவிட்டு இல்லாத கோபத்தை இழுத்து பிடித்து, அவனை
எதிர்கொள்ள தயாராகிக் கொண்டிருந்தாள்.
உறங்குவது போல்
பாசாங்கு செய்யலாமா .... என்று அவள் எண்ணிக் கொண்டிருக்கும் போதே அவன் அறைக்குள் நுழைந்தான்.
அவன் வரவை
உணர்ந்தும் அவள் படுத்த மேனிக்கு இருக்க, அவளிடம் தென்பட்ட ஆசைவைக் கண்டு,
"இப்ப
எப்படி இருக்கு உடம்பு... பரவா இல்லையா ..." என்றபடி நாற்காலியை இழுத்து
போட்டு அருகமர்ந்தான்.
"ம்ம்ம்ம்..."
என்றாள் எழுந்தமர்ந்து அவன் முகம் பாராமல் .
குனிந்திருந்தவளின்
முகத்தை அவன் ஆழ்ந்து நோக்க, பார்க்காவிட்டாலும் அவன் பார்வையின் கிரணங்களை ஸ்பரிசித்து கொண்டவளுள்
எப்பொழுதும் தோன்றும் இரசாயன நுண்ணுணர்வுகள் தோன்றி
இறக்கைக் கட்ட, அவள் தலைக்கோத கை உயர்த்தியவன், அதனை செய்யாமல் கைவிட்டு
"அம்மா
கிட்ட எல்லாத்தையும் சொன்னேன் சொன்னாங்களா... அருணா
பையன் அஜய் மாடி படியில உருண்டு விழுந்துட்டான் ..." என்றான் அவளை சமாதானப்படுத்தும் விதமாக, அவள்
சோகத்தில் இருக்கிறாளா அல்லது வலியில் இருக்கிறாளா என புரியாமல்.
"இப்ப
குழந்தை எப்படி இருக்கான் ..." என்றாள் மெதுவாக.
" ஹீ இஸ்
டூயிங் குட் .... இப்பதான் கொஞ்சம் ஆக்டிவ் ஆக ஆரம்பிச்சிருக்கான் ...."
என்று இயல்பாக இயம்பியவனிடம், தான் கொண்டிருக்கும் கோபத்தை
எப்படியாவது காட்டி விட வேண்டும் என்ற எண்ணத்தில்
"நீங்க
என்னை பார்க்க வருவீங்கன்னு நான் கொஞ்சம் கூட எதிர்பார்க்கல ..." என்றாள்
வேறெங்கோ பார்த்து.
"ஏன்
... உன்னை சாயங்காலம் பார்க்க வர்றதா உங்க அம்மா கிட்ட
சொன்னேனே... அவங்க சொல்லலையா ..."
"சொன்னாங்க
... இருந்தாலும் உங்க ஃபேமிலி
கமிட்மெண்ட்ஸை எல்லாம் தள்ளி வச்சிட்டு
எனக்காக நீங்க வருவீங்கன்னு நான் எதிர்பார்க்கல... அதான் ..."
கேட்டதும்
அவனுக்குக் கோபம் ஜிவ்வென்று ஏற
"என்ன
ஃபேமிலி கமிட்மெண்ட்ஸ்... நீயும் தானே எங்க ஃபேமிலி .... சாரி நீ என் ஃபேமிலி ... என் பொண்டாட்டி...
எனக்கு அந்த நினைப்பு எப்பவுமே உண்டு... உனக்கு இருந்து இருந்தா இப்படி கேள்வி
கேட்டிருக்க மாட்ட..." என்றவன் அயாசத்தோடு பெருமூச்சு ஒன்றை வெளியேற்றிவிட்டு,
"நடந்த
எல்லாம் தெரியும் இல்ல ... தெரிஞ்சும் இப்படி பேசினா என்ன அர்த்தம் ... என்கிட்ட
இந்த மாதிரி சர்க்காஸ்டிக்கா பேசுறத நிறுத்து லக்ஷ்மி ...." என்று முடித்தான் ஆற்றாமையோடு.
"நான் உங்ககிட்ட என்ன கேட்டுட்டேன்னு இப்படி கோவப்படறீங்க ... நீங்க என்னை பார்க்க வருவீங்கன்னு எதிர்பார்க்கலனு சொன்னது தப்பா ..."
"காலையில
உங்க அம்மா போன் பண்ணி சொன்னதும், உன்னை பாக்க தான் ஹாஸ்பிடல் கிளம்பினேன் அப்பதான் அருணா பையனுக்கு அடிபட்டுருச்சுன்னு எங்க அம்மா சொன்னாங்க .... ஹரிஷ் ஊர்ல இல்லாததால வேற வழியில்லாம போக வேண்டியதாயிடுச்சு ..." என்றவனை தலை
நிமிர்ந்து பார்த்தவள்
"போன
மாசம் கூட தான் அருணாவோட குழந்தைக்கு உடம்பு சரியில்லை...
அவங்க வீட்டுக்காரரும் ஊர்ல இல்ல... அவங்களே தனியா
பாத்துக்கிட்டாங்க... இப்ப மட்டும் ஏன் உங்கள கூப்பிடனும் ....
நீங்க ஊர்ல இருக்கறதுனால தான கூப்பிடறாங்க ... ஒருவேளை நீங்க ஊர்ல இல்லைன்னா அவங்களே தனியா
பார்த்துகிட்டு இருந்து இருப்பாங்க இல்ல ...." என முடிக்க, அவன் பார்வை கோபத்தில் கூர்மை அடைய,
"இதே
கேள்வியை நான் திருப்பி கேட்டா... நான் ஊர்ல இருக்கறதால தானே நீ என்னை
எதிர்பார்க்கிற ... நான் ஊர்ல இல்லாம இருந்திருந்தா,
நீ வழக்கம் போல உங்க அம்மாவோட ஹாஸ்பிடல் போயிட்டு வந்து தகவல்
சொல்லி இருந்திருப்ப இல்ல ..."
எதிர்பாராத அவன்
கூர்த்தீட்டிய சொல்லம்புகள்
, அவளது ஒவ்வொரு அணுவிலும் குண்டூசி மழையை பொழிய, வார்த்தைகளின் வலி தாளாமல் தலை குனிந்து கொண்டு தளும்பினாள் பெண்.
மங்கையின்
மாற்றம் மன்னவனின் மனதை நனைக்க, ‘ச்சே...’
என்று உள்ளுக்குள்ளே கடிந்து கொண்டவன்,
"இந்த
பார் லட்சுமி ... எல்லாருக்கும் நியாயம் ஒன்னு தான் ... நான் உனக்கு ஹஸ்பண்ட்னா
அவளுக்கு அண்ணன்.... அவ குழந்தைக்கு ஒன்னொன்னா ஊர்லேயே இருந்துகிட்டு
போகாம இருக்க முடியுமா நீ பொறுப்பானவ, பொறுமையானவ,
ரொம்ப மெச்சூர்ட்டானவ நீயே இப்படி பேசினா எப்படி ...."
என்றான் நயந்து.
ஆம் அவன்
கூறியது அனைத்தும் உண்மை தான். அவளது சக தோழிகளை காட்டிலும் அவளுக்கு
மனமுதிர்ச்சி, பொறுப்பு ,பொறுமை அதிகம்
தான்.
ஆனால் அவையாவும்
அவனிடம் மட்டும் பலிக்கவில்லையே. குழந்தைகள் பொத்தி வைக்கும் கை பொம்மையாய் அல்லவா
அவனை தன்னிடம் பொத்தி வைத்துக் கொள்ள ஆசைப்படுகிறாள் ....
கங்காரு
குட்டியாய் அவனை தன்னுள்ளேயே எப்பொழுதும் சுமக்க எண்ணுகிறாளே ...
ஆறு மாதத்திற்கு
முன்பு யாரென்றே தெரியாதவனிடம் எப்படி இப்படி ஒரு அதீத பாசம் காதல் நேசம் எல்லாம்
....
திருமணமான
புதிதில் பெண்கள் அனைவரும் இப்படித்தான்
இருப்பார்களா அல்லது தான் மட்டும் இப்படி இருக்கிறோமா என்ற கேள்வி வேறு அடிக்கடி
உருவாகி அவள் சிந்தையை சிதறடித்துக் கொண்டிருந்தது ...
மனையாளின் மனம்
புரியாமல் இல்லை... அவள் எதிர்பார்ப்பு தெரியாமல் இல்லை ... ஆனால் அவன் தன்னை
புரிய வைக்க முயலும் ஒவ்வொரு தருணமும் வழி தவறும் தீபாவளி ராக்கெட் போல் வேறு எங்கோ
சென்றல்லவா வெடித்து விடுகிறது ...
ஓரிரு கணம்
எதையோ யோசித்தவன்
"ஊருக்கு
வந்ததிலிருந்து ஒரே அலைச்சல் ... ரொம்ப டயர்டா இருக்கு ... நான் இன்னைக்கு உன்
கூடவே தங்கலாம்னு இருக்கேன் ...." என்றான் அவளை வெகுவாக நெருங்கி.
"வேண்டாம்
...நீங்க கிளம்புங்க ...." என்றாள் வெகு லேசாக .
" ஏன்
..."
" நான்
தூங்கணும் ..."
" டேப்லெட்ஸ்
எடுத்துக்கிட்டு நிம்மதியா தூங்கு .... நானும் தூங்கறேன் ...".
ஓரிரு நொடி
தயங்கியவள்
"எனக்குன்னு
சில பர்சனல்ஸ் இருக்கு ...." என்றாள்.
"எனக்கு
தெரியாம உனக்கு என்ன பர்சனல்ஸ் ..." என்றான்
குறும்போடு அவளது ஆடை நுனி உரசும் அளவிற்கு நெருங்கி.
அப்போது
பார்த்து அவன் அலைபேசி சிணுங்க, காதுக்கு கொடுத்தவனின் முகம் செஞ்சாந்தாய் சிவந்து போனது .
" எப்ப
...எப்படி ... ஐயோ " என அதிர்ச்சியாக அவன் கேள்விகளை எழுப்பிக் கொண்டே இருக்க
, எதிர் முனையில் இருந்து வந்த பதில்கள் அவனை மேலும்
திணறடித்துக் கொண்டிருந்தன.
ஒரு வழியாக
பேச்சை முடித்தவன்,
" சாரி
லட்சுமி .... நாளைக்கு காலையில நான் லண்டன் கிளம்பனும்
.... ஆக்சுவலா சென்னை பிரான்சில் வொர்க் பண்ற சரவணன் தான் KTC ப்ராஜெக்டுக்காக லண்டன் ட்ராவல் பண்றதா
பிளான் இருந்தது... ஆனா அவருக்கு ஆக்சிடென்ட்
ஆயிடுச்சாம்.... ICUல இருக்காரு ... சோ அவருக்கு பதிலா நான் ட்ராவல் பண்ணி ஆகணும் ... நான் ட்ராவல்
பண்ணலன்னா இவ்ளோ நாளா நாங்க உழைச்ச உழைப்பு வீணாயிடும் .... முன்னுறு மில்லியன்
ப்ராஜெக்ட் கைவிட்டு போயிடும் ....
நான் இப்பவே போய் கொட்டேஷன்
பிரிப்பேர் பண்ணனும்... ட்ராவல் பண்ண பேக்கிங்
வேற செய்யணும் .... திரும்பி வர ஒரு மாசம்
ஆகும்னு நினைக்கிறேன் ..." என்றவன் அவள் கண்ணோடு
கண் நோக்கி
"என்னால
ரெண்டு மாசம் எல்லாம் நீ இல்லாம தாக்கு பிடிக்க
முடியாது... நான் ஊர்ல இருந்து திரும்பினதுமே நீ நம்ம
வீட்டுக்கு வந்துடு.... சரியா .."
"நான்
கொஞ்சம் யோசிக்கணும் ..." என்றாள் அழுத்தமாக.
"என்ன
யோசிக்கணும் ..."
"என்னால
உங்க லைப் ஸ்டைல், உங்க குடும்பத்தோட பொருந்தி இருக்க
முடியும்னு தோணல ..."
"அதனால
...."
"நான்
........ என் .... வீட்டிலேயே இருந்துக்கிறேனே.."
"என்ன
லக்ஷ்மி... ஆர் யூ ஜோக்கிங்... என் லைஃப் ஸ்டைலோட நீ பொருந்த முடியாம போறதுக்கு
நான் ஒன்னும் அம்பானி கிடையாது .... ரெண்டு பேரும் இப்பதான் வாழ்க்கையே
தொடங்கினோம் .... முதல் அடியே மரண அடியா விழுந்திருக்கு ...அதிலிருந்து மீண்டு
வந்து புது வாழ்க்கையை வாழ முயற்சி பண்ணனும் ... அதை விட்டுட்டு முடங்கணும்னு
நினைக்கிறது சுத்த அபத்தம் .... நான் ஊரில் இருந்து திரும்பி வர வரைக்கும் உனக்கு
டைம் இருக்கு ... நல்லா யோசிச்சு நல்ல முடிவா எடு .."
என்றவனுக்கு
அவளை தன்னோடு சேர்த்து அணைத்துக் கொள்ள கைகள் பரபரக்க, அவன் விட்ட வார்த்தைகளே எட்டி
நிற்கச் செய்து ஏங்க வைக்க , அவன் முகம் பார்த்தவளுக்கு அவன்
எதிர்பார்ப்பு புரிந்தாலும், அவர்களுக்கிடையே
எல்லைக்கோட்டை வகுத்து வைத்தது அவன் அல்லவோ ... அவனே அதை
அழிக்கட்டும் என்ற சிந்தனையில் அசையாமல் அவள் நிற்க, கலைந்தாடும்
தன் கேசத்தை தன் கரம் கொண்டு அடக்கி, 'உஃப்' என்று ஆழ்ந்த பெருமூச்சு ஒன்றை எடுத்து விட்டு மனதை சமன்படுத்தி
" நீ
என் கூட என் வீட்டுக்கு வந்தா போதும் வேற எதையும் நான்
உன்கிட்ட எதிர்பார்க்கல .... போயிட்டு வரேன் லட்சுமி... டேக் கேர் ..." என்று
மொழிந்து விட்டு கிளம்பியவனின் முதுகையே வெறித்து பார்த்துக் கொண்டிருந்தவளுக்கு
மீண்டும் வெறுமை சூழ்ந்து கொள்ள, நெஞ்சம் பாரமாகி கண்களில்
கண்ணீர் தளும்ப ஆரம்பித்தது .
இதழ் முத்தம்
இல்லாவிட்டாலும், இறுக்கி அணைத்து நெற்றி முத்தம் கொடுக்காமல்
அவன் கடல் கடந்ததில்லை .... இன்று அதற்கும் பங்கம் வந்துவிட அவள் தொண்டை கனத்தது.
எப்படி
யோசித்தாலும் தன்னுடைய தேவை என்ன... எதிர்பார்ப்பு என்ன என்ற கேள்விகளுக்கெல்லாம்
விடை தெரியாமல் குழம்பி தவித்தாள்.
அவன்
நெருங்கினால் விலக எண்ணுகிறாள் ... அவன் விலகினால் நெருங்க நினைக்கிறாள்....
அவன் அண்மை
அனலாய் கொதிக்கிறது .... அவன் இல்லா தனிமை திராவகமாய் எரிக்கிறது ....
எனக்கு என்னதான்
ஆயிற்று ... என்ற கேள்வியில் சிக்குண்டு தவித்தவளுக்கு,
" ஒருவேளை
Postpartum depressionனோ( பிரசவத்திற்கு பின்பான மன அழுத்தம்) ....
அதனால தான் சமந்தா சம்பந்தம் இல்லாம எமோஷனல் ஆகுறேனோ..."
என அனுமானித்தவள், அதற்கான வழிமுறையை இணையத்தில் தேட
ஆரம்பித்தாள்.
கர்ப்ப
காலத்தில் சுரந்த ஈஸ்ட்ரோஜன் ப்ரொஜெஸ்ட்ரோன் ஹார்மோன்கள் பிரசவத்திற்கு பிறகு
தடாலடியாக குறைய ஆரம்பிக்கும் ....
அது பிரசவித்த
தாய்க்கு தேவையில்லாத மன அழுத்தத்தை கொடுத்து உணர்ச்சி வசப்பட வைக்கும் ... தான் பெற்ற குழந்தையை பார்க்கும்
பொழுது மட்டும் இம்மாதிரியான மன அழுத்தம் சற்று
குறையும்...
ஆனால் இவள் விஷயத்தில் ஐந்தாம் மாதத்தில் குழந்தை இறந்தே பிறந்ததோடு, கர்ப்ப காலத்தில் ஏற்பட்ட கசப்பான அனுபவங்கள், ஆறுதலாக இருக்க வேண்டியவனின் சொல் அம்புகள், என அனைத்தும் சேர்ந்து அவளை வாட்டி வதைக்க, உடன் உடல் உபாதையும் சேர்ந்து கொள்ள உள்ளுக்குள் கொஞ்சம் கொஞ்சமாக உரு தெரியாமல் கரைந்து காணாமல் போய்க்கொண்டிருந்தாள் பெண்.
மறுநாள் அதிகாலையில் லண்டனுக்கு பயணப்பட்டதை குறுஞ்செய்தியாக அனுப்பியிருந்தான் அவளது கணவன்.
ஏனோ அந்த செய்தி அவளுக்கு உவப்பாகவே இல்லை.
அடித்து
ஆக்ரோஷப்பட்டு கோபத்தை வெளிப்படுத்தும் ஆண்களுக்கு மத்தியில், அவளது கேள்விகள் கோபப்படுத்தினாலும்
அசராமல் அவளால் பதிலடி கொடுக்க முடியாத அளவிற்கு பதில்
கொடுப்பதில் வல்லவன் ஆன கணவனை எண்ணி அவள் மனம் ஏங்கவே செய்தது ....
அந்த ஏக்கம்
ஒன்றும் அவன் மீதான ஆசையில் அல்ல... தன் கோபத்தைக் காட்ட அவன் அருகில் வேண்டும் என்ற
எண்ணத்தில் ...
அதே சமயத்தில்
அவன் மீதான காதல் கடல் அளவு விரிவடைந்து கொண்டே செல்ல , கோபம் மலையளவு வளர்ந்து கொண்டே
இருந்தது ...
அவனை புரிந்து
கொள்ள முடியாமல், தன்னையும் புரிந்து கொள்ள முடியாமல் திண்டாடியவள் இப்படி இரு வேறு
முரண்பாடு உள்ள உணர்வுகளுக்கிடையே சிக்கித் தவித்து
சிதைந்து போவதை காட்டிலும், அவனிடமிருந்து ஒட்டும்
இல்லாமல் உறவும் இல்லாமல் பிரிந்து விடுவதே நல்லது என்று முடிவெடுத்தாள் விதி அவள்
முடிவை மாற்ற வேறொன்றை நிகழ்த்தி காட்ட காத்துக் கொண்டிருப்பது தெரியாமல்.
ஸ்ரீ- ராமம்
வருவார்கள் ....
Nice episode sisy
ReplyDeletethanks da
DeleteSuperrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrttrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrr
ReplyDeletethanks da
DeleteNice episode ji ..simply super
ReplyDeletethanks da
Delete