அத்தியாயம் 11
கிட்டத்தட்ட 5 மாதத்திற்கும் மேலான கர்ப்பத்தோடு,
ஸ்ரீலட்சுமி தன் புகுந்த வீட்டிலிருந்து கிளம்பும் போதே அவளுள்
ஆயிரம் ஆயிரம் கேள்விகள் உதித்து அலைகழிக்க தொடங்கின.
பெரும்பாலும்
மனசாட்சிக்கு கட்டுப்பட்டு வாழ்பவர்களுக்கு
மட்டும், நடக்கவிருக்கும் நிகழ்வுகளை
முன்கூட்டியே ஓரளவிற்கு உணர்ந்துக்கொள்ளும் திறனை இந்த
பிரபஞ்சம் வழங்குவதுண்டு.
காரண காரியங்கள்
ஏதும் இல்லாமல், ஒரு விஷயம்
அது நல்லவையோ கெட்டவையோ உறுதியாக நடந்தேறும் என அறிவு உணர்ச்சி, அல்லது உள்ளுணர்வு உணர்த்தும் ... அதற்கு ஆங்கிலத்தில்
'intution' என்பார்கள்.
அப்படி ஒரு வித
எதிர்மறையான உணர்வு அவள் மனம் முழுவதும் வியாபிக்க, முடிவெடுக்க
முடியாமல் தடுமாறியவள், கடைசியில் விதி நிர்ணயித்தது
தானே வாழ்க்கை ... என விதியின் மேல் பழி போட்டுவிட்டு, தன்
தாய் ருக்மணியோடு தன் வீட்டிற்கு வந்து சேர்ந்தாள்.
ருக்மணி தன்
மகளை தாங்கு தாங்கு என்று தாங்கினார்.
மசக்கை
நேரத்தில் சிறிதளவே உண்டாலும் சத்தாக உண்ண வேண்டும் என்பதை மனதில் கொண்டு அவளுக்கு
பிடித்தமான உணவுகளை பார்த்து பார்த்து ருசியாக சமைத்துக் உண்ணச் செய்தார்.
படுக்கையை
விட்டு எழுந்து காலைக் கடன்களை முடிப்பதற்கு முன்பே குமட்டல், வாந்தி, தலைவலி, மயக்கம் என தவியாய் தவிக்கும் மகளை கண்ணும்
கருத்துமாய் பார்த்துக் கொண்டார்.
குறைந்தபட்ச
மனிதாபிமானம் கூட இல்லாத இரண்டு ராட்சசிகளிடம் சிக்கி ஐந்து மாத மேடிட்ட வயிற்றோடு,
கழுத்து எலும்புகள் தெரிய, பாதியாய்
இளைத்திருந்த மகளைப் பார்க்கப் பார்க்க,பெற்ற மனம் தீப்பந்தமாய் பற்றி எரிந்தது.
கருப்பையில்
கர்ப்பம் பலகீனமாக இருக்க, உடன் அதிகபட்ச மசக்கையும் வாட்டி எடுக்கும் நிலையில், அனுசரணையாகப் பேசி, அன்பாக உணவளித்தாலே, அன்னையாகப் போகும் பெண்கள் அருந்துவது கடினம்.
ஆனால் தன்
மகளுக்கோ கர்ப்பம் தரித்த
தினத்திலிருந்து சதா சர்வ காலமும்
பூசல்களும் வசவுகளுமே சூழ்ந்து
உணவையும் உறக்கத்தையும் தொலைக்க செய்திருந்த நிலையில்,
அவள் குற்றுயிர் குலை உயிரோடு இந்த அளவு இருப்பதே ஆண்டவனின் அருள்
தான் என மனம் கலங்கியவர், மகளிடம் காட்டிக் கொள்ளாமல்,
அவளை மேலும் பார்த்து பார்த்து பராமரித்தார்.
பொதுவாக
பெண்களுக்கு தன் தாயின் அருகாமை அதிகம் தேவைப்படும்.
அதிலும் தாய்மை
அடைந்திருக்கும் நிலையில், தன் தாயை தேடாத பெண்களே இருக்க முடியாது ...
புகுந்த வீடு
பூஜ்ஜியம் ஆன நிலையில், ருக்மணி மட்டும் இல்லை என்றால், அவளுக்கு பிறந்த
வீடும் சூனியமாக தான் இருந்திருக்கும் ...
பெரிதாக வசதி
வாய்ப்புகள் இல்லை என்றாலும், சுயநலமில்லா தாயின் இருப்பும், அணுகுமுறையும்
சேவையுமே அவளது அப்போதைய நிலைமைக்கு போதுமானதாக இருக்க தங்கை ராமலட்சுமியும்
தன்னாலான உதவியை தமக்கைக்கு செய்யலானாள்.
"ஏழாம்
மாசம்..... இல்ல ஒன்பதாம் மாசம் தானே தாய் வீட்டுக்கு கர்ப்பிணி பொண்ண அனுப்புவாங்க ஏன் அஞ்சாம் மாசமே அனுப்பிட்டாங்க ...."
என்ற ஆகச் சிறந்த கேள்வியை மட்டும் தியாகராஜன் ருக்மணியிடம் முன் வைக்க,
"சதா
சர்வ காலமும் சண்டை போடறது கோவப்படறதுன்னு மாசமா
இருக்கிற பெண்ணை நிம்மதியா ஒரு வாய் சாப்பாடு கூட
சாப்பிட விடாம அவ மாமியாரும் நாத்தனாரும் சாகடிக்கிறாங்கனு தெரிஞ்சும் இப்படி கேட்கறீங்களே ...." என
பொங்கி விட்டார் ருக்மணி.
மனையாள் எவ்வளவு பொங்கினாலும் மனதில் ஏற்றுக்
கொள்ளாமல் காலம் கடத்துவதில் வல்லவரானவர், மருத்துவமனைக்கு தடுப்பூசி மற்றும் ரத்த பரிசோதனைக்கு செல்லும் தன்
கர்ப்பிணி மகளுக்கு உறுதுணையாக உடன் செல்லாமல் வழக்கம்
போல் பேப்பர் படிப்பதும் டிவி பார்ப்பதும் நண்பர்களோடு அரட்டை அடிப்பதுமாய்
விச்ராந்தியாக காலத்தை கடத்தினார்.
தாயும்
தங்கையும் பணிக்கு செல்வதால் வேறு வழி இல்லாமல், மருத்துவ அறிக்கைகளை சுமந்து கொண்டு தெருமுனையில்
இருக்கும் சரிவு வரை நடந்து அங்கிருந்து ஆட்டோவில் பயணித்து மருத்துவமனைக்கு
சென்று வந்தாள் ஸ்ரீ லட்சுமி.
வெள்ளிக்கிழமை
மாலையில் இருந்தே ஏதோ சொல்லவொண்ணா துன்பம் நெஞ்சை அழுத்த ,
பள்ளியில் இருந்து திரும்பிய தாய் போட்டு கொடுத்த தேநீரைப்
பருகியவள் படுக்கையில் படுத்துக்கொண்டு கண்ணீர் உகுக்கலானாள்.
ராம்சரண்
ஒன்றுக்கு இரண்டு முறை அழைத்து இருந்தான் .... தடுப்பூசியை நினைவு படுத்துவதற்காக
....
அதற்கு
ம்ம்ம்ம்... என்ற பதிலோடு நிறுத்திக் கொண்டு விட்டாள்....
அவள் வீட்டிற்கு
தானே அவளை அனுப்பினோம் .... இதில் கோபப்பட என்ன இருக்கிறது... ஏன் இப்படி
பாராமுகமாக இருக்கிறாள்.... என்று யோசித்தவனுக்கு பிரச்சனையின் சாராம்சம் புரியவே
இல்லை.
உடனே ருக்மணியை
அழைத்து அவளது உடல் நிலையை தெரிந்து கொண்டு,
தடுப்பூசியை பற்றி அறிவுறுத்திவிட்டு ஊர்
திரும்புவதை பற்றியும் சேதி சொல்லியிருந்தான்.
"மாப்பிள
ரொம்ப தூரத்துல இருந்தா கூட, லட்சுமிக்கு அஞ்சாம் மாசம்
போட வேண்டிய தடுப்பூசிய ஞாபகப்படுத்துறாரு .... இவ்ளோ
நல்ல மனுஷனா அக்கறையா இருக்காரு ... அவங்க வீட்டு ஆளுங்கள மட்டும் புரிஞ்சிக்கவே
மாட்டேங்கிறாரு" என ருக்மணி ஆயாசப்பட,
"ஆமா
.... எங்கேயோ உக்காந்துகிட்டு அங்கிருந்து இந்த ஊசி போட்டியா அந்த ஊசி
போட்டியான்னு இன்ஸ்ட்ரக்ஷன் கொடுத்துக்கிட்டு இருந்தா போதுமா கூட இருந்து
கூட்டிட்டு போய் செஞ்சா தானே நல்ல மனுஷனுக்கு அழகு
..."
மனையாள்
மாப்பிள்ளையை புகழ்ந்ததை ஏற்றுக்கொள்ள மனமில்லாமல் தியாகராஜன் வியாக்கியானம் பேச,
"அதை
நீங்க சொல்லக்கூடாது .... வீட்ல வெட்டியா தானே இருக்கீங்க ... கர்ப்பிணி பொண்ணு
தன்னந்தனியா டாக்டர பார்க்கப் போறாளேன்னு
கொஞ்சமாவது யோசித்துக் கூட போனீங்களா .... இல்லையே ... இப்படி
இருக்கிற நீங்க அவர பத்தி பேச என்ன தகுதி இருக்கு ...."
தாய் தந்தைக்கிடையே ஆன உரையாடல்களை
கேட்டுக்கொண்டிருந்தவளுக்கு தன்னவனின் செய்கைகளை ஒதுக்கவும் முடியாமல் ஏற்றுக்
கொள்ளவும் முடியாமல் திண்டாடி போனாள்.
இதே மனநிலையோடு
அரைகுறையாக உண்டு விட்டு உறங்கியவளுக்கு அதிகாலையில் லேசாக அடிவயிறு வலிக்கத்
தொடங்கியது.
நேரம் செல்ல
செல்ல, வயிற்று வலியோடு,
பிறப்புறுப்பில் இருந்து லேசாக குருதி
வெளிப்படத் தொடங்க, அப்போதுதான் பிரச்சனை பெரியது
என்பதை உணர்ந்து ஆட்டோவை தேடி கண்டுபிடித்து மருத்துவமனைக்கு
போய் சேர்வதற்குள், அவளது ஆடையும் ஆட்டோவும் குருதி மயமாகி
போக, ரத்த வெள்ளத்தில் இருந்தவளை உடனடியாக மருத்துவர் குழு சூழ்ந்து கொண்டது .
அந்தப் பகுதியிலேயே உலகத்தரம் வாய்ந்த சிறந்த மருத்துவமனையில் மகளை சேர்த்திருந்த ருக்மணி, அடுத்த கணமே ராம் சரணை அழைத்து சேதி சொல்ல , துடித்து துவண்டு விட்டான் அந்தக் காளை.
ஒரு மணி நேர போராட்டத்திற்கு பிறகு
வயிற்றிலேயே இறந்து போன ஐந்து மாத சிசு சுகப்பிரசவமாய்
வெளியேறி இருக்க அதனை அப்புறப்படுத்தியிருந்தனர்
மருத்துவர்கள்.
அடித்துப்
பிடித்து மருத்துவமனைக்கு டாக்ஸியில் வந்து சேர்ந்தவன், செய்த முதல் வேலை மருத்துவமனை வரவேற்பு பகுதியில் தன்னவளின் உடல் நிலையை பற்றி கேட்டு
தெரிந்துகொண்டு, அதுவரை செலுத்தியிருந்த மருத்துவச் செலவோடு, ஆகப்போகும் செலவுகளை
அனுமானித்து முன்பணம் செலுத்தி விட்டே தன்னவளின் அறை நோக்கி நடை போட்டான் .
புயலை விட
வேகமாக நுழைந்தவனைப் பார்த்து, மரியாதை நிமித்தமாக
"வாங்க
மாப்ள ..." என அழைத்துவிட்டு ருக்மணி இடத்தை காலி செய்ய, கண்கள் சொருகி, கிழிந்த நார்போல் காணப்பட்ட மனையாளை பார்க்க பார்க்க அவன் நெஞ்சம் பதை பதைக்க, அருகில் இருந்த நாற்காலியில் மெதுவாக அமர்ந்தவன், அவள்
வலக்கரத்தை பற்றி தூக்கி தன் இரு கரங்களுக்குள் வைத்துக் கொண்டு கண்கள் கலங்க,
பார்வையை அவள் முகத்தில் பதித்து உறைந்து
போனான்.
ஓரிரு
கணத்திற்கு பிறகு, வெகு லேசாக உடல் அசைய, கண்
இமைகளை வெகு சிரமப்பட்டு திறந்தவளின் பார்வை, அவளது
கரங்களைப் பற்றிக் கொண்டு அவளையே பார்த்துக் கொண்டிருந்தவனின் பார்வையோடு கலந்தது.
உதடுகள் துடிக்க, கண்களில் கண்ணீர் ஆறாய்
பெருக்கெடுத்து ஓட, அவனது கண்களிலும் அது பிரதிபலிக்க,
அங்கு மௌனமே மொழியாகி போனது.
ஓரிரு
மணித்துளிக்குப் பிறகு, அவளது கண்ணீரை தன் கரம் கொண்டு துடைத்தவன்,
“அழாதே
லட்சுமி ... ஏற்கனவே ரொம்ப வீக்கா இருக்க.... இன்னும்
அழுது உன்னை வருத்திக்காதே..”
என்ற போது தான், அவன் வீட்டில் நடந்தவைகள்
யாவும் நினைவுக்கு வர, வெடுக்கென்று முகம் திருப்பிக்
கொண்டாள் மங்கை .
அவன் ஊருக்கு
செல்லும் பொழுது பார்த்ததற்கும், தற்போது இருப்பவளுக்கும் ஆறு வித்தியாசங்களை அம்சமாக வரிசைப்படுத்தி
விடலாம் .... அப்படி உருக்குலைந்து போயிருந்தாள் அவனவள்.
அவளைப் பார்க்க
பார்க்க அவன் தொண்டை கனக்க, அப்போது பார்வையிட அங்கு வந்த மருத்துவர், லட்சுமியை
பரிசோதித்து விட்டு, செவிலியரிடம் அவளுக்கு கொடுக்க வேண்டிய
மாத்திரை மருந்துகளைப் அறிவுறுத்தியதோடு , பார்வையால் ராம் சரணை தன்னோடு வரும்படி அழைத்தார்.
"மிஸ்டர்
ராம்சரண் .... அஞ்சு மாச கரு சிசேரியன் ஏதும் இல்லாம சுகப்பிரசவம் போல
வெளியே வந்ததுக்கே நாம கடவுளுக்கு நன்றி
சொல்லணும் அவங்க கர்ப்பப்பை ரொம்ப வீக்கா இருக்கு ... அவங்களுக்கு பூரண ஓய்வு தேவை
..."
"என்ன
காரணத்தால திடீர்னு இப்படி ஆயிடுச்சு டாக்டர் ..."
"அவங்க
ரிப்போர்ட்ஸ்ல டாக்டர் தெளிவா எழுதி இருக்காங்க இன்டர்னல்
பிலீடிங் இருக்கு .... நிறைய ஓய்வு எடுக்கணும்... சத்தான ஆகாரம் சாப்பிடணும்....
பெட்ரெஸ்ட் எடுக்கணும்னு ரெக்கமண்ட் பண்ணி இருக்காங்க ... இவங்க அதையெல்லாம் ஃபாலோ
பண்ணாங்களான்னு தெரியல.... " என்றவர்
"ஆ...
சொல்ல மறந்துட்டேனே... இறந்த உங்க குழந்தையை ஐஸ் பாக்ஸ்ல வெச்சிருக்கோம் ....
நீங்க விருப்பப்பட்டா பார்க்கலாம் ..."
"எஸ்
டாக்டர்.... நான் பாக்கணும் ..."
5 மாத சிசு
என்றாலும் கை கால்கள் குச்சி குச்சியாய் முளைத்து,
முக லட்சணம் பெற்று அழகாகவே காட்சி அளிக்க, மரணித்திருந்த தன் முதல் ஆண் குழந்தையை கண்டு உடைந்து அழுது விட்டான்.
"ராம்சரண்... நீங்களே இப்படி அழுதா ... உங்க மனைவிக்கு யாரு ஆறுதல் சொல்லுவாங்க .... ரொம்ப உடைஞ்சு போயிருக்காங்க ... அவங்க உடல் நிலையை விட அவங்க மனநிலை ரொம்ப மோசமா இருக்கு... உங்க குடும்பத்த ஆளுங்க எல்லாரும் குழந்தையை பாத்துட்டாங்க உங்க மனைவியை தவிர...."
"வேணாம்
டாக்டர் ... எங்க குழந்தையை இந்த நிலையில அவ பார்க்க வேண்டாம் ப்ளீஸ் ... அவளுக்கு
காட்டாதீங்க... ஆக வேண்டியதை பாருங்க..." என்றான் ஆறாய் ஓடும் கண்ணீரை
கட்டுப்படுத்தி.
"சரி
அந்த ஃபார்மாலிட்டிச நாங்க பாத்துக்குறோம் மற்ற ப்ரோசீஜர்ஸ்ஸ எல்லாம் முடிஞ்சு
நீங்க அவங்கள வீட்டுக்கு கூட்டிக்கிட்டு போக இன்னும் மூணு நாள் ஆகும் .... இப்ப
அவங்களுக்கு ரூம் ஷிப்ட் பண்ண சொல்லி இருக்கேன் ...." என்றவரிடம் விடைபெற்று மனையாளின் அறைக்கு வரும் பொழுது, இரண்டு
செவிலியர்கள் சேர்ந்து அவளை ஸ்ட்ரச்சருக்கு மாற்ற எத்தனித்துக் கொண்டிருந்தனர்.
" ஒரு
நிமிஷம் சிஸ்டர் ...." என்றவன் தன்னவளை அலேக்காக
தூக்கி ஸ்ட்ரெச்சரில் படுக்க வைத்துவிட்டு அவள் முகம் பார்க்க, அவளோ கர்ம சிரத்தையோடு பார்வையை தன் குளுக்கோஸ் ஏறிய கரத்தின் மீதே
பதித்திருந்தாள்.
அப்போதுதான்
அவளது மாற்றங்கள் அவனைத் தொட, என்னாச்சு இவளுக்கு ... ஏன் என் முகத்தைக் கூட பாக்க மாட்டேங்குறா... எனத்
தனக்குள்ளே கேட்டுக் கொண்டிருக்கும் போது அவன் அலை
பேசி சிணுங்கியது .
"சரண்
... நேத்து முழுசும் உடம்புக்கு முடியலப்பா மாத்திரை
போட்டு தூங்கிட்டேன்… அதனால தான் நீ காலையில போன் பண்ணும் போது எடுக்க முடியல.. இப்பதான்
உன் வாய்ஸ் மெயில கேட்டேன் .... ரொம்ப துடிச்சு போயிட்டேன்ப்பா... லட்சுமிக்கு
இப்படி கர்ப்பம் கலைஞ்சி போகும்னு கொஞ்சம் கூட
எதிர்பார்க்கலப்பா... ஏற்கனவே மூச்சு திணறல் இப்ப விஷயத்தை
கேள்விப்பட்டதிலிருந்து எனக்கு நெஞ்சு வலியே வர்ற மாதிரி இருக்கு ... அதான் மாத்திரை போட்டு இருக்கேன் சாயங்காலம்
ஹாஸ்பிடலுக்கு வந்து அவளை பார்க்கிறேன்ப்பா...." என கற்பகம் தன் நாடகத்தை
அரங்கேற்ற,
"நீங்க
வர வேண்டாம்மா... உங்க உடம்ப பாத்துக்கோங்க.... அருணா
எங்க ..."
" ஐயோ
அதை ஏன் கேக்குற .... அவங்க மாமியாருக்கு உடம்பு
சரியில்லைன்னு ரெண்டு மூணு நாளா ஹாஸ்பிடலும் வீடுமா அலையறாப்பா அவ கிட்ட
இப்பதான் விஷயத்தை சொன்னேன் ... ரொம்ப துடிச்சு போயிட்டா ... நாளைக்கு
ஹாஸ்பிடலுக்கு வரப்போறதா சொன்னாப்பா ..."
"வேணாம்மா...
அவ அவங்க மாமியாரை பார்த்துக்கட்டும் ... நான் ஆபீஸ்க்கு ஒரு வாரம் லீவு எடுத்து
இருக்கேன் நான் பாத்துக்குறேன் ..." என்று அழைப்பை துண்டித்தான்.
அவன்
அறியாதவைகள் பல திரைக்குப் பின் அரங்கேறி இருந்தது.
அவனுடைய வாய்ஸ்
மெயிலை கேட்டதும், துள்ளி குதிக்காத குறையாய் மகிழ்ந்து போனார் கற்பகம்.
உடனே அதனை தன்
மகளுக்கு ஃபார்வேர்ட் செய்ததோடு அழைத்து விஷயத்தை சொல்ல, அருணா அதற்கு மேல்
ஆனந்தத்தில் ஆட்டம்
போட ஆரம்பித்து விட்டாள்.
"குழந்தை
கலைஞ்சது ரொம்ப சந்தோஷமா இருக்கு ஆனா உன் அண்ணன் ரொம்ப
மனசு உடைஞ்சு பேசறான் ... பொண்டாட்டி பக்கம் சாய்ஞ்சிடுவானோனு பயமா இருக்கு ...." --- கற்பகம்.
"ஆமா ...
உலகத்துலேயே அவன் பொண்டாட்டிக்கு மட்டும்தான் அபார்ஷன் ஆயிருக்கா... வேற
யாருக்கும் ஆகலையா .... ஏன் IUI பண்ணும்போது எனக்கு எத்தனை
தடவை அபார்ஷன் ஆச்சு தெரியுமா… இதெல்லாம் ஒரு விஷயமா.... நீ
கவலைப்படாதம்மா.... எப்படி பேசி அண்ணனை வழிக்கு கொண்டு
வரணும்னு எனக்கு தெரியும் நீ உன் வேலையை பாரு .... ஆமா... அடுத்த குழந்தை
உண்டாகும்னு சொன்னாங்களா ..."
"அத
பத்தி அவன் எதுவும் சொல்லலையே ..."
"சரி
அடுத்து என்ன நடக்க போகுதுன்னு பொறுத்திருந்து பார்ப்போம் .... இப்போதைக்கு இந்த
சந்தோஷத்தை நாம கொண்டாடறோம்... சரியா ..." என்று பேசிக் கொண்டனர்.
( இந்த
பேச்சின் சாராம்சத்தை வேறொரு தினத்தின் போது நடந்த
வாக்குவாதத்தில் கற்பகம் தன்னையும் மீறி ஸ்ரீலட்சுமியிடம்
உளறி இருந்தாள்).
ஸ்ரீலட்சுமியின்
தங்கை ராம லக்ஷ்மி வீட்டில் இருந்து உணவு தயாரித்து ஸ்ரீ லக்ஷ்மிக்காக எடுத்துக் கொண்டு வர, ருக்மணி தியாகராஜன் ராம்சரண் மூவரும் மருத்துவமனை கேண்டினில் உணவருந்திக்
கொண்டனர்.
எப்பொழுதும்
போல் ருக்மணி ஓடியாடி தன் மகளுக்காக அனைத்தையும் பார்த்து பார்த்து செய்ய, வழக்கம் போல் தியாகராஜன் யாருக்கோ வந்த விருந்து போல் இரு கரங்களையும்
கட்டிக்கொண்டு பார்வையாளராக இருந்தார்.
அரசியலையும்
அலுவலகம் சார்ந்த விஷயங்களையும் தன் நண்பர்களோடு ஆர்ப்பரித்து பேசும் தியாகராஜன்,
தன் சொந்த மாப்பிள்ளை ராம்சரணை வாய் நிறைய மாப்பிள்ளை என்று மனமார அழைத்து,
இன்று வரை அன்பு பாராட்டியதில்லை.
முதல்
தினத்தன்றே அவரைப் பற்றி அறிந்து கொண்டிருந்ததால், யாதொரு விஷயத்திற்கும் ராம்
சரண் அவரை அணுகாமல் ருக்மணியை தொடர்பு கொள்வதையே
வழக்கமாக்கிக் கொண்டிருந்தான்.
அன்று இரவு,
"நீங்க
வீட்டுக்கு கிளம்புங்க .... நான் லட்சுமியை பாத்துக்கறேன் ...." என்று
ருக்மணியை வீட்டுக்கு அனுப்பி வைத்துவிட்டு ஸ்ரீ லட்சுமி அனுமதிக்கப்பட்டிருந்த
டீலக்ஸ் அறையின் அட்டெண்டர் கட்டிலை உறங்க பயன்படுத்திக் கொண்டான்.
அவள் அவனுடன்
ஒரு வார்த்தை பேசவில்லை. அவனும் அதற்கான முயற்சியை முன்னெடுக்கவில்லை.
அவளுள் ஆயிரம்
ஆயிரம் கேள்விகள், பயங்கள், பதில்கள் .....
அதில் மிக
முக்கியமானது, அவள் தன்
தாய் வீட்டிற்கு வந்த பிறகு இரண்டு மூன்று முறை
தன்னந்தனியாக மருத்துவமனைக்கு சென்று வந்திருக்கிறாள்....
அப்படி
மருத்துவமனைக்கு தனியாக பயணிக்கும் சமயத்தில் இப்படி ஒரு சம்பவம் நடந்தேறி இருந்தால், அவளை யார்
காப்பாற்றி இருப்பார்கள் என நினைத்துப் பார்த்து அஞ்சியவள்
அப்படி ஏதாவது
நடந்து இறந்திருந்தால் நன்றாக இருந்திருக்குமே ... என் குழந்தையோடு நானும் காலனிடம் சென்றிருந்தால் இம்மாதிரியான மன
உளைச்சல்களில் சிக்கித் தவிக்க வேண்டிய அவசியமே இருந்திருக்காதே...
என்பன போன்ற
ஏதேதோ சிந்தனைகளில் அவள் மனம் சிக்கிச் கேள்வியும் பதிலுமாய் சின்னா பின்னமாகி
கொண்டிருந்தது.
கருக்கலைப்பு
சுகப்பிரசவம் போல் நடந்திருந்ததால் அவளால் ஓரளவிற்கு எழுந்து நின்று சுவரைப்
பிடித்துக் கொண்டு நடக்க முடிந்தது.
இருந்தாலும்
அவள் கழிப்பறைக்கு செல்ல எத்தனித்தால், உடனே எழுந்து அவள் கரம் பற்றி
அழைத்துச் சென்று, கழிப்பறையில் விட்டு, அவள் அணையாடையை ( குறுந்துணி)மாற்ற உதவி செய்ததோடு, அவள் வெளியேறும் வரை வாசலிலேயே காத்துக் கிடந்து மீண்டும் அழைத்து
வந்து படுக்கையில் படுக்க வைத்தான்.
உணவு, தண்ணீர், பழச்சாறு,
இளநீர் என பார்த்து
பார்த்து அருந்தச் செய்து கண்ணும் கருத்துமாக பார்த்துக்
கொண்டான்.
இரண்டு நாட்கள் இப்படியே கழிந்தன. ஓரளவிற்கு அவளது உடல்நிலை நன்றாகவே தேறி இருந்தது. ராம்சரண் தான் முடிவெடுக்க முடியாமல் திணறிக் கொண்டிருந்தான்.
அவனுக்கு தன்
மனையாளை தன்னுடனே தன் இல்லத்திற்கு
அழைத்துச் சென்று விட வேண்டும் என்ற எண்ணம் இருந்தாலும், அவன் தன் தாயை நன்கு அறிவான்.
அவர் என்றுமே
எந்த ஒரு பொறுப்பையும் தூக்கிச் சுமப்பவர் இல்லை ...விச்ராந்தியாக இருப்பதில் வல்லவர் ....
தன் உரிமையைப் வாய் கிழிய பேசுவதில்
கெட்டிக்காரர் ஆனால் கடமையை கடுகளவு கூட செய்தவர் ....
சதா சர்வ காலமும் தொலைக்காட்சியும் அலைபேசியுமாய் இருப்பவரை நம்பி
தன் மனையாள் இருக்கும் உடல் நிலைக்கு அழைத்துச்
செல்லலாமா .... ?
அல்லது ஸ்ரீலட்சுமியின் இல்லத்தில் வசதிகள் குறைவு என்றாலும், அவளை கண்ணிமை போல் நன்றாக கவனித்துக் கொள்ளும் தாயார் இருப்பதால் அவருடனே அனுப்பி விடலாமா .... என குழம்பித் தவித்தவன் , முடிவுக்கு வர எண்ணி தன் மனையாளிடம் கடந்த மூன்று தினங்களாக கடைப்பிடித்து வந்த மௌனத்தை உடைத்து,
"லக்ஷ்மி
... நீ..... இப்ப ... என் கூட நம்ம வீட்டுக்கு வரியா
... இல்ல உங்க அம்மாவோட உங்க வீட்டுக்கு போய் மூணு மாசம்
ரெஸ்ட் எடுத்துட்டு அப்புறமா நம்ம வீட்டுக்கு வரியா ..." என்றான் வெகு இயல்பாக அவள் முகத்தையே பார்த்து.
ஓரிரு கணம்
அமைதி காத்தவள், அருகில்
இருந்த தன் கைப்பையில் இருந்து அவன் அவளிடம் கொடுத்து
வைத்திருந்த வங்கி அட்டையை எடுத்து,
"நீங்க
என் மெடிக்கல் எக்ஸ்பென்சஸ்காக போட்ட பணமும் காலி ஆயிடுச்சு ... என் வயிறும் காலி
ஆயிடுச்சு .... இனிமே இது எனக்கு தேவைப்படாது.... நீங்களே வச்சுக்கோங்க ...."
என அருகில் இருந்த மேதையின் மீது வைத்தாள்.
"என்ன
சொல்ல வர.... சுத்தமா புரியல ..."
"எனக்கும்
உங்களுக்கும் நடுவில் இருந்த உறவு கரைஞ்சு காணாம போயிடுச்சுன்னு சொல்ல வரேன்”
அதைக் கேட்டதும்
அவன் முகத்தில் கோப ரேகை லேசாக படர தொடங்க,
"இந்த
குழந்தையால நம்ப உறவு ஒன்னும் உருவாகலயே ... நம்ப உறவால
தானே இந்த குழந்தையே உருவாச்சு ..."
"இருக்கலாம்
.... இருந்தாலும் என்
குழந்தை இல்லாத உறவை இனிமே தொடர நான் தயாரா இல்லை ... "
" ஏன்
..."
"ஏன்னு
கேக்குறீங்க... உங்களுக்கு நிஜமாகவே புரியலையா ..."
"புரியல....
அதான் கேட்கறேன் ... நானும் வந்ததுல இருந்து பாத்துக்கிட்டு இருக்கேன் ...உனக்கு
என் மேல ஏதோ கோபம் இருக்குனு மட்டும் தெரியுது ஆனா என்ன கோபம் ஏன் கோபம்னு எனக்கு
சுத்தமா புரியலை .... உன் மனசுல என்ன தான் இருக்கு... உடைச்சு பேசு..."
"என்
குழந்தை இறந்ததற்கு நீங்களும் உங்க குடும்பத்து
ஆளுங்களும் தான் காரணம் ..." என்றாள் விம்மியபடி.
"என்னது....
நானும் என் வீட்டு ஆளுங்களும் காரணமா ... சுத்தமா
புரியல விளக்கமா சொல்லு ..." என்றான் அதிர்ந்து.
"எனக்கு
யூட்ரஸ்ல இன்டர்னல் பிலிடிங் ஸ்டார்ட் ஆனதுக்கு காரணமே உங்க அம்மா எனக்கு
கொடுத்த கரும்புச்சாறு தான் .... "
"நான் அதை நம்ப மாட்டேன்.... குலதெய்வம் கோயிலுக்கு போகிறதுக்காக பீரியட்ஸ் பத்தி என் அம்மா கேட்கும் போது ,
சில சமயம் எனக்கு ஒரு வாரம்
லேட்டா வரும்னு நீ சொன்னதுக்கு அப்புறம் தான் என் அம்மா
உனக்கு கரும்புச்சாறு வாங்கி கொடுத்ததா
அன்னைக்கு நீதான் சொன்ன....சரியா அப்ப
என் அம்மா மேல என்ன தப்பு இருக்கு… கர்ப்பமா இருக்கேனு
தெரிஞ்சா அவங்க வாங்கி கொடுத்தாங்க .... இல்ல உனக்குத்
தெரியாம ஏதாவது ட்ரிங்க்ல கலந்து கொடுத்துட்டாங்களா .... இல்லையே... இப்படி
ஆகும்னு அவங்களும் கொஞ்சம் கூட எதிர்பார்க்கல
..."
பதில் பேச
முடியாமல் ஓரிரு கணம் அமைதி காத்தவள்,
பிறகு குரலை செருமிக்கொண்டு
"மொத
மொதலல மருமக கர்ப்பம் தரிச்சு , குடும்பத்துக்கு
மூத்த வாரிசு வரப்போகுதுன்னா, எல்லார் வீட்லயும்
சந்தோஷப்படுவாங்க .... ஆனா உங்க அம்மா பேச கூடாத பேச்சு எல்லாம் பேசினாங்க ....
உண்மையிலேயே தெரிஞ்சவங்க அறிஞ்சவங்க வீட்ல யாராவது ஒரு பொண்ணுக்கு அபார்ஷன் ஆயிருந்தா கூட, மருமக மாசமா இருக்கான்னு தெரிய வரும்போது எடுத்த எடுப்புல அந்த விஷயத்தை வெளிப்படையா யாரும் சொல்ல மாட்டாங்க .... ஆனா உங்க அம்மா சொன்னாங்க… கர்ப்பம் தரிச்சு ஒரு வாரம் கூட ஆகல ... டாக்டரை பார்த்து கன்ஃபார்ம் பண்றதுக்குள்ளேயே உங்கம்மா அப்படி சொன்னது எனக்கு எப்படி இருந்தது தெரியுமா ..."
"லட்சுமி
.... இட்ஸ் டோட்டலி புல் ஷிட்.... எங்கயோ யாருக்கோ ஏதோ நடந்ததுனு சொன்னா உடனே அது
நமக்கு நடந்துடும்மா .... உன் பேச்சு சுத்த நான்சென்ஸா இருக்கு ... நெருப்புன்னா
வாய் சுட்டுடுமா .... நீ ரெண்டு மாசமா தான் என் அம்மாவை பார்க்கற ....
நான் பொறந்ததுல இருந்து அவங்களை பார்த்து
கிட்டு இருக்கேன் ...எப்பவும் ஊர் வம்பு உலக வம்பு
தான் பேசுவாங்க .... அத தாண்டி அவங்களுக்கு வேற எதுவுமே தெரியாது .... எதிர்
வீட்டு அக்கா பொண்ணுக்கு நடந்ததுனு அவங்க சொன்னது சாதாரண ஒரு தகவல் ... அத போய் பெருசா எடுத்துக்கிட்டு கம்ப்ளைன்ட்
பண்ற” .
மீண்டும் ஓரிரு
கணம் அமைதி நிலவ,
"சரி ...
நீங்கள் சொன்ன ரெண்டு விஷயமும் இயல்பா நடந்ததுன்னே வச்சிப்போம்... கர்ப்பத்தோடு
நாள் கணக்கு கேட்டாங்களே அது கூட சாதாரண விஷயமா ...
சாதாரண விஷயம்னு சொல்லி என்கிட்ட மாட்டிக்காதீங்க ... ஏன்னா உங்க
அம்மா கேட்கும் போது உங்களுக்கே கோவம் வந்துடுச்சு ..." என்று ஒரு கணம் நிறுத்தியவள்
"இந்த மாதிரி தொட்டதுக்கெல்லாம் சந்தேகப்படற குடும்பத்துல பொறுக்கக் கூடாதுன்னுதான் என் குழந்தை என்னை விட்டு போயிட்டான் போல ...." என அவள் கதறி அழ ஆரம்பித்தாள்.
அவள் அழுகை அவன்
மனதை ஏகத்துக்கும் வாட்ட,
"ப்ளீஸ்
லக்ஷ்மி புரிஞ்சுக்கோ .... அதுக்கான விளக்கத்தை அன்னைக்கே நான் கொடுத்துட்டேன் நான் உன்னை சந்தேகப்பட்டு கேட்டா தான் நீ கலங்கணும் ....
ஒருவேளை அப்படி ஒரு கேள்விய நான் உன்கிட்ட கேட்டேன்னா, உன்னை சந்தேகப்படறதுக்கு முன்னாடி நான் என்னையே சந்தேகப்படறேனு அர்த்தம்... என் ஆண்மையை சந்தேகப்படறேனு அர்த்தம்... நான் சரியான ஆம்பள இல்லன்னு நானே நம்பறேன்னு அர்த்தம் ....
எந்த ஒரு சரியான
ஆம்பளையும் அந்த கேள்வியை தன் பொண்டாட்டி கிட்ட கேட்க மாட்டன்...
இது எல்லாத்தையும்
விட என் லட்சுமியை எனக்கு தெரியும்.... யார் என்ன சொன்னாலும் ஏன் ஆண்டவனே வந்து சொன்னாலும் நான் நம்ப மாட்டேன்… போதுமா ..."
மீண்டும்
இருவருக்கும் இடையே அமைதி அனுமதியில்லாமல் ஆட்சி செய்ய,
"லக்ஷ்மி...
உன் மனசுல வேற ஏதாவது இருந்தா அதையும் கொட்டிடு ... ஒரேடியா இன்னைக்கே பேசி
தீர்த்துடுவோம் ..." என்றான் அவள் முகத்தில் காணப்பட்ட குழப்பத்தை கண்டு.
"எனக்கு
இன்டர்னல் பிலீடிங் இருக்குன்னு நல்லா தெரியும் .... டாக்டர் படி ஏறக்கூடாது .... அதிகம்
நடமாடக்கூடாது... பெட் ரெஸ்ட் எடுக்கணும்னு சொன்னதும் உங்களுக்கு நல்லா தெரியும்
... எல்லாம் தெரிஞ்சும், ஒரு ஆட்டோ பிடிக்க கூட என்
வீட்டுல நான் சரிவுல இறங்கி ஏறனும்னு தெரிஞ்சும் என்னை
ஏன் என் வீட்டுக்கு போக சொன்னிங்க..."
"இதுக்கு
நீ தான் பதில் சொல்லனும் லக்ஷ்மி .... என் வீட்டுல என்
அம்மா தங்கச்சியால உன்னால நிம்மதியா இருக்க முடியலனு சொன்ன ... ப்ரெக்னன்ட்டா இருக்கிற உன்னோட
ஹெல்த் ரொம்ப முக்கியம்னு தான்
உங்க வீட்டுக்கு போக சொன்னேன் .... மத்தபடி
இன்டர்னல் பிலீடிங்கை பத்தி நான் மறந்தே போயிட்டேன் .... ஆபீஸ் டென்ஷன்,
20 நாளா டைபாய்டு ஃபீவர், வொர்க்லோடு ஹெவினு ஏகப்பட்ட பிரச்சினைல நான்
எதைப் பற்றியும் யோசிக்கவே இல்ல.... ஆனா ஹாஸ்பிடல் ஆப்ல எந்த இன்ஜெக்ஷன் எப்ப
போடணும்னு மெசேஜ் வந்துகிட்டு இருந்தது அதைப் பார்த்து தான் உனக்கு போன் பண்ணி
சொன்னேன்.
தினமும் என் அம்மா, தங்கையை பத்தி கம்பளைண்ட் பண்ணி உன் உடம்பு கெடுத்துக்கிறயேனு பயந்து தான் உங்க வீட்டுக்கு போக சொன்னேன் .... சரி எனக்கு தான் எல்லாம் மறந்து போச்சு ... உனக்கு உன் உடம்ப பத்தி நல்லா தெரியும் இல்ல .... நான் அப்படி போக சொல்லும் போதே, நீ எல்லாத்தையும் ஞாபகப்படுத்தி இருந்தா பிரச்சனையே வந்திருக்காதே...
ஒரு வேளை நீ சொல்லியும் நான் வற்புறுத்தி உங்க வீட்டுக்கு உன்னை போக சொல்லி இருந்தேன்னா, தப்பு முழுக்க முழுக்க என்னோடதுன்னு நான் ஒத்துப்பேன்... நான் உங்க வீட்டுக்கு போக சொன்னதுமே சரின்னு சொல்லி போனை வச்சுட்டே.... இதுல என்னோட தப்பு என்ன இருக்கு ... சரி... எனக்கு பொறுப்பு இல்லன்னே வச்சுக்குவோம் ஆனா குழந்தையை சுமந்தவ நீ.. என்னை விட அதிக பொறுப்பா இருந்திருக்கணுமா வேணாமா ...
நீ உன் ஈகோவுக்கு கொடுத்த முக்கியத்துவத்தை நம்ம குழந்தைக்கு கொடுக்க தவறிட்ட.... நம்ம குழந்தைக்கு எது நல்லதுன்னு யோசிக்க மறந்துட்ட… நீ ஒத்துக்கலன்னாலும் இதுதான் உண்மை ...
இங்க பாரு லட்சுமி.... மறுபடியும் சொல்றேன் .... என் அம்மா, தங்கச்சி எல்லாம் ஊர் வம்பு பேசுறதுல எக்ஸ்பர்ட் .... அவங்க யாரையோ எதையோ சொல்லப்போய் அவங்க ரெண்டு பேரும் உன்னை தான் திட்டுறாங்கன்னு நீ புரிஞ்சுகிட்டது தான் உன் தப்பு .... உனக்கே தெரியும் நீ என்னை கல்யாணம் பண்ணிக்கிட்டு வர்றதுக்கு முன்னாடி எங்க வீட்ல சமையலுக்கு ஆள் இருந்தாங்க ... ஆனா அவங்க சரியா சமைக்க மாட்டாங்கனு Zomatoல தான் பெரும்பாலும் நாங்க ஆர்டர் பண்ணி சாப்பிடுவோம்.... என் அம்மாவும் தங்கையும் அத்திப்பூத்தா மாதிரி என்னைக்காவது ஒரு நாள் தான் சமைப்பாங்க... இப்பவும் அதைத்தான் அவங்க ஃபாலோ பண்ணி இருக்காங்க .... இப்ப சொல்லு ... குழந்தை இறந்ததுக்கு எப்படி நானோ எங்க வீட்டு ஆளுங்களோ பொறுப்பாக முடியும் .....
சரி ... நம்ம குழந்தை நம்மள விட்டு போனது நமக்கு பெரிய இழப்புதான் ... ஒத்துக்கிறேன் ... அதுக்காக அடுத்தவங்க மேல பழி போடலாமா... இதுல தப்பு சரினு பார்க்கப் போனா , என் அம்மா தங்கச்சியை விட நாம ரெண்டு பேரும் தான் குற்றவாளிங்க...." என அவன் தீர்க்கமாக பேசி முடிக்க, வாயடைத்துப் போனாள் வனிதை.
அவள் போட்ட
பந்துகள் அனைத்தும் 'நோ பால்' ஆக்கியிருக்க, பதில்
கூற முடியாமல் தடுமாறினாள்.
அவன் பேசியது ஓரளவிற்கு அவனைப் பொறுத்தமட்டில் சரியே என்றாலும், அவள் பட்ட துயரங்கள் ....
அது மாயையா ....
கற்பனையா .... இல்லையே ...
உடலும் உயிருமாய், ரத்தமும் சதையுமாய் அவள் அனுபவித்ததை புரிந்து கொள்ள மறுக்கின்றானே ...
அவனிடம் எடுத்துக் கூறி வாதம் செய்ய அவள் உடலிலும் மனதிலும் சக்திகள் வடிந்த நிலையில் ஊமையாகி போனாள் பாவை.
"லட்சுமி
..... நான் கேட்ட கேள்விக்கு இன்னும் பதில் சொல்லலையே..." என்றான்
விடாக்கண்டன் கொடாக்கண்டனாக.
"அடுத்த குழந்தைக்கு இப்படி நடக்காதுன்னு உங்களால உத்திரவாதம் கொடுக்க முடியுமா ....
....
....
இன்னொரு குழந்தையை பெத்துக்குற அளவுக்கு என் மனசுலையும் சக்தி இல்ல என் உடம்புலயும் சக்தி இல்ல ..." என இழுத்து பேசினாலும் வெடுக்கென்று அவள் பேசி முடிக்க ,
அதுவரை
பொறுமையாக பதில் அளித்துக் கொண்டிருந்தவனின் முகம் கோபத்தின் உச்சத்தில்
செங்குருதியாய் சிவந்து போக, அவளை நெருங்கி
"என்னமோ
நான் உன்னை ரேப் பண்ணின மாதிரி பேசுற .... உன்
விருப்பத்தோட தானே எல்லாம் நடந்து குழந்தை உண்டான...
இப்ப இப்படி பேசினா என்ன அர்த்தம் ....
இங்க பாரு
எனக்கு குழந்தையே வேண்டாம் ... நீ என்கூட இருந்தா போதும் ....
இனிமே எந்த சந்தர்ப்பத்துலயும் நானா உன்னை தொட மாட்டேன் .... அப்படி தொட்டேன்னா உன் கால் செருப்பால என்னை அடி ... நான் என் சுபாவத்தை மீறி அதிகமா பேசிட்டேன் .... இன்னும் என்னை அதிகமா பேச வைக்காதே ... ப்ளீஸ்..”
என்றவன் அதற்கு மேல் அரை கணம் கூட அந்த அறையில் இல்லாமல் வெளியேறினான்.
ஸ்ரீ-ராமம் வருவார்கள் .....
Superrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrttrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrr
ReplyDelete