அத்தியாயம் 9.2
ஸ்ரீலட்சுமி வருவதற்கு முன்பு அவர்களது
இல்லத்தில் சமையல் உட்பட அனைத்திற்கும் வேலையாட்கள்
தான்.
வீட்டு சமையல்காரர்களை கண்காணிக்க கூட
நேரமில்லாமல் தாயும் மகளும் ஊர் சேவை செய்து
கொண்டிருந்ததால், உணவு உணவாக இல்லாமல் போக,
விளைவு வீட்டு ஆண்கள் பெரும்பாலும் வெளியிலேயே உணவினை முடித்துக்
கொண்டு உறங்க மட்டும் வீடு திரும்பினர்.
உடையவன் பார்க்கவில்லை என்றால் ஒரு
முழம் கட்டை என்பது போல், நமக்கான பணியை அடுத்தவரிடம்
ஒப்படைத்து இருந்தாலும் அதன் மீது ஒரு பார்வை இருக்க வேண்டும் என பலமுறை ரங்கசாமி
எடுத்துக் கூறியும், காதில் வாங்கிக் கொள்ளாமல்
தாயும் மகளும் சமையலுக்கு ஆட்களை மாற்றிப் பார்த்தனரே ஒழிய தங்களை
மாற்றிக் கொள்ள தயாராக இல்லை.
வந்தவர்கள் உணவுப் பொருட்களை திருடுவதில்
காட்டிய மும்மரம் சமைப்பதில் காட்டாமல் போக, சாப்பாட்டில்
ருசி இல்லாததால் தாயும் மகளுமே Swiggyயில் ஆர்டர் கொடுத்து
அடிக்கடி வாங்கி உண்டனர்.
ஸ்ரீலட்சுமி மருமகளாக வந்த பின்பு தான், ருசியான வீட்டு
சாப்பாடு என்ற நடைமுறையே உருவானது .
ரங்கசாமி மட்டும் மருமகளிடம் அவளது
சமையலைப் புகழ்ந்து பாராட்டுவார். தாயும்
மகளும் மூக்கு பிடிக்க உண்பதோடு சரி.
இவ்வளவு ஏன் ஸ்ரீ லட்சுமியின் மணாளன்
ராம்சரண் கூட, வயிறு நிறைய உண்பான்
ஆனால் வாயார ஒரு வார்த்தை சொல்ல மாட்டான்.
அவள் அந்த
வீட்டை விட்டு சென்ற இந்த மூன்று மாதங்களில், 60% தினங்கள் Zomatoவில் வரவழைக்கப்படும் உணவுகள் தான்.
ஸ்ரீ லக்ஷ்மி ராம்சரணின் இந்த மூன்று ஆண்டு கால திருமண வாழ்க்கையில், இருவரும்
இணைந்திருந்த தருணங்களை கணக்கிட்டு பார்த்தால்
அதிகபட்சம் 6 மாதங்கள் எனலாம்.
திருமணம் முடிந்த இரண்டாம்
மாதமே அவள் கர்ப்பம் தரிக்க, செய்தியைக்
கேட்டு ரங்கசாமி மனம் மகிழ , கற்பகமும் அருணாவும்
முகம் சுணங்கி போயினர்.
மசக்கை என்று மருமகள் படுத்து விட்டால்
சமையல் யார் செய்வது ...என்ற உலகளாவிய கவலையில் கற்பகம்
திளைக்க, அருணாவை பற்றி சொல்லவே வேண்டாம்.
அவள் அந்த வீட்டிற்கு வருவதே அண்ணியின் சமையலுக்காக என்ற நிலையில்
செய்வதறியாது தவித்தாள்.
அப்போது ராம்சரண் வெளிநாடு சென்று ஒரு வாரமே ஆன நிலையில்
அலைபேசி வாயிலாக செய்தி அறிந்து மட்டற்ற மகிழ்ச்சி அடைந்தான்.
ஆனால் அப்போதிருந்த அவன் அலுவலக
சூழல், பணிச்சுமை , இங்கு பகல் என்றால் அங்கு இரவு என்ற காலநிலை
மாற்றம் ஆகியவற்றால் தன்னவளுடன் அதிகம் பேச முடியாமல் திணறிப் போனான்.
மனையாளுடன் நேரம் செலவழிக்கும்
ஆவலில் ஏற்றுக்கொண்ட பணிகளை துரிதமாக முடித்துவிட்டு மறு வாரமே வீடு
திரும்பியவனிடம் , வந்த அன்றே அருணா, தன்
மாமியார் மற்றும் கணவனை பற்றி ஏகப்பட்ட குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ததோடு
விவாகரத்து நாடி நீதிமன்றம் போகப் போவதாக நீலி கண்ணீர்
வடிக்க தங்கையின் நிலை எண்ணி வருந்தியவனுக்கு அவள்
மீது 95% தவறுகள் இருப்பது தெரிந்தும் வேறு
வழி இல்லாமல் அவளது மாமியார் இல்லத்திற்கு சென்று ஒரு
நாள் தங்கி வெளியூர் சென்றிருந்த ஹரிஷ் ஊர்
திரும்பியதும் அவனுடன் பேசி பிரச்சனையை சரி கட்டிய
பின்னரே மாசமாக இருக்கும் மனையாளிடம் பேச தனிமை
கிட்டியது.
அறைக்குள் வந்தவன் கதவை
ஒருக்களித்துவிட்டு மனையாளை அணைத்துக் கொண்டு "
தேங்க்ஸ் " என்று தன்னவளிடம் காதல் பொங்க மொழிந்த மறுநிமிடம், அலைபேசியில்
ஓங்காரமாய் தன் மகள் அருணா உடன் பேசிக்கொண்டே மைந்தனின்
அறை கதவை திறந்து கொண்டு வந்தமர்ந்தார்
கற்பகம்.
அவரது வரவை அறிந்து மனையாளை விட்டு
விலகியவனின் முகம் வெகுவாக சுருங்கி போக, லட்சுமிக்கு
துக்கம் தொண்டையை அடைத்தது.
"ஏதோ வயிறு வலிக்குதுன்னு இவ
சொன்னா .... டாக்டருக்கு கூட்டிகிட்டு போனு சொல்லத்தான் வந்தேன்
.... எதுத்த வீட்டுல இருக்கிற மஞ்சுளா அக்காவோட பொண்ணு
மாசமானதும் இப்படித்தான் வயித்தவலின்னு சொல்லிகிட்டே இருந்துச்சாம்... கடைசில
அபார்ஷன் ஆயிடுச்சாம்... "
என்றவரின் சொற்பொழிவை கேட்டதும் லட்சுமியின்
மனதில் பாரம் ஏறி கண்கள் பனிக்க,
ராம்சரணின் முகத்தில் லேசான கோபம் எட்டிப் பார்க்க,
" என்னமா உளர்ற...." என்றான்
சற்று காட்டமாக.
"டேய் உளறலடா .... உண்மையைத்தான்
சொல்றேன்.. நம்ம
வீட்டோட தல வாரிசு நல்லபடியா பொறக்கணும்னு தான் இதையெல்லாம் சொல்றேன்.. சீக்கிரமா இவளை கூட்டிகிட்டு போய்
டாக்டர் கிட்ட காட்டு டா ..."
என்றவரின் முகத்திலிருந்து அவனால் வேறு எதையும் புரிந்து கொள்ள
முடியவில்லை.
எப்பொழுதுமே ஊர் கதை உலகக் கதை அதிகம்
பேசும் நபர் என்பதால்,இயல்பான பேச்சாக கருதி முதலில் வந்த கோபம் சற்று மட்டு பட
"சரி நாங்க டாக்டருக்கு போயிட்டு
வரோம் ..." என்றவன் மனைவியோடு காரில் சென்று ஏறும் வரை பின் தொடர்ந்தார்
கற்பகம்.
கார் பயணத்தின் போது இருவருக்குமே என்ன
பேசுவது என்று தெரியவில்லை.
திருமணம் முடிந்து இரண்டு மாதம்
முடிந்திருந்த நிலையில், ஹனிமூன் என்ற பெயரில்
ஊட்டிக்குச் சென்ற ஒரு வாரம் கூட தொழில் ரீதியாக
அமைந்து போக, அவர்களுக்கான பிரத்தியேக நேரம்
காணாமல் போனதால் புரிதல் கானல் நீராகிப் போயிருக்க அவர்களுக்கிடையே அமைதி அரசாட்சி செய்ய வேண்டிய நிலையை அது ஏற்படுத்தி விட்டிருந்தது எனலாம்.
ஐந்து நிமிட காத்திருப்பிலேயே மருத்துவரை
சந்திக்க அனுமதி கிடைக்க, லட்சுமியை பரிசோதித்த
மருத்துவர், கர்ப்பப்பை உட்சுவருக்குள் லேசாக
ரத்தக்கசிவு இருப்பதை சுட்டிக்காட்டி மருந்துகளை எழுதிக் கொடுத்ததோடு
முற்றிலும் ஓய்வெடுக்க அறிவுறுத்தி அனுப்பினார்.
மருத்துவர் கூறியதை கேட்டதிலிருந்து ஏதோ ஒரு இனம் புரியாத பயம் இருவரது
உள்ளத்திலும் ஒரு சேர வியாபிக்க, அதைப் பற்றிய
சிந்தனையிலேயே வீடு வந்து சேர்ந்தனர்.
கூடத்தில் இருவரும் அடியெடுத்து வைத்த மறு
நொடி,
"என்னடா சொன்னாங்க டாக்டர் குழந்தை
நல்லா இருக்குன்னு சொன்னாங்களா ..." என்றார் ஆவலோடு கற்பகம்.
"ம்ம்ம்... குழந்தை நல்லா
இருக்காம்... இவதான் கொஞ்சம் வீக்கா இருக்கா நிறைய ரெஸ்ட் எடுக்கணும்னு
சொன்னாங்க... மற்றபடி ஒரு பிரச்சனையும்
இல்லன்னு சொல்லிட்டாங்க ..." என அனிச்சையாக பதிலளித்தவனின் சிந்தையில் மருத்துவர்
கூறியதே எதிரொலித்துக் கொண்டிருக்க, உடனே முகம் சுருங்கியவர்
"ஏன்டா எத்தனை நாள் கர்ப்பம்னு
சொன்னாங்க ..."
"ஏதோ 50 நாள்னு
சொன்னாங்க.... லாஸ்ட் பீரியட் டேட்ட கேட்டு கால்குலேட் பண்ணாங்க
..." என்று வெகு இயல்பாக அவன் மொழிந்து விட்டு தன் அறைக்கு செல்ல
எத்தனிக்கும் போது,
"அப்படியா சொன்னாங்க ....எனக்கு
என்னமோ நாள் கணக்கு இடிக்கிற மாதிரி தோணுதே ... இவ கல்யாணம் முடிஞ்சு இங்க வந்து
வீட்டு தூரம் ஆனா.... அதுக்கப்புறம் அவங்க
அம்மா வீட்டுக்கு ஒரு வாரம் போய் இருந்துட்டு வந்தா .... அதுக்கப்புறம் உடனே நீ
ஃபாரின் போயிட்ட ... அதான் எனக்கு
ஒன்னுமே புரியல ..." என்றவரின்
கேள்வி, அனிச்சையாய் அவனை அசைத்துப் பார்க்க,
"என்னமா ஏடாகூடமா உளர்ற
..." என்றான் தாயை உறுத்து பார்த்து சற்று கோபத்தோடு .
கற்பகத்தின் நடவடிக்கையை கண்டு உள்ளம்
கலங்கிய லட்சுமியின் கண்களில், லேசாக கண்ணீர்
திரையிட்டதோடு, கோபமும் மேலிட, சூழ்நிலையை
உணர்ந்து பொறுமையை இழுத்துப் பிடித்தாள் மங்கை.
அதற்குள் மகனின் முகம் மாற்றத்தை புரிந்து கொண்ட
கற்பகம்,
" நான் என்ன சொல்ல வந்தேன்னா, நாங்க எல்லாம் வீட்டு தூரம் குளிச்ச நாள்ல இருந்து கணக்கு வைப்போம் ... ஆனா
இந்த டாக்டர் வீட்டு தூரம் ஆன நாளிலிருந்து கணக்கு வச்சிருக்காங்களேனு
கேட்டேன் ப்பா ..." என்ற மழுப்பிய
பதிலை மொழிந்தவரிடம்
"நீ டாக்டருக்கு படிச்சிருக்கியா ...
இல்ல இல்ல ... அவங்க பெரிய டாக்டர் ... அவங்களுக்கு எல்லாம் தெரியும் .... அப்படி
அவங்க சொன்னதுல சந்தேகம் இருந்தா போய் அவங்கள கேளு
..."
எதையும் இயல்பாக எடுத்துக் கொள்ளும் மகனின்
அணுகுமுறை முற்றிலும் மாறி இருப்பதை உணர்ந்தவர்
"இதையெல்லாம் தெரிஞ்சுகிட்டு இனிமே
நான் டாக்டராவா ஆக போறேன் ... வளைகாப்பு சீமந்தத்துக்கு
நாள் பார்க்க கேட்டேன் அவ்ளோ தான்..." என்று சுருதி குறைந்து கூறிவிட்டு இடத்தை
காலி செய்தவரின் மனதில் இருந்ததெல்லாம் முழுக்க முழுக்க வன்மமும் பொறாமையும்
தான்.
திருமணத்திற்கு பிறகு ,
முதல் ஆளாக கண்ணும் கருத்துமாக ஸ்ரீ
லட்சுமியின் மாதவிலக்கு தினங்களை கணக்கிட்டு வைத்திருந்தார் கற்பகம்.
அந்த மாதத்திற்கான மாதவிலக்கு வராமல்
ஐந்தாறு தினங்கள் தள்ள, ஸ்ரீ லட்சுமியிடம் அது
குறித்து அவர் மேம்போக்காக விசாரிப்பது போல் விசாரிக்க
"அத்தை, எனக்கு
சில சமயம் ஒரு வாரம் தள்ளிக் கூட வரும் .." என்றாள் வெள்ளந்தியாக.
" ஊருக்கு போகணும் குலதெய்வத்துக்கு
பொங்க வைக்கணும்.... அதான் கேட்டேன் ... கரும்பு சாறு குடிச்சா, சீக்கிரமே வந்துடும் .... அடுத்த வாரம் குலதெய்வம் கோயிலுக்கு போக வசதியா
இருக்கும்..” என இயல்பாக கூறுவது போல் கூறியதோடு, வேலைக்காரரை அழைத்து வாங்கி வரச் செய்து அவளை
ஒன்றுக்கு இரண்டு குவளைகளை அருந்தவும் வைத்தார் நூறில் ஒரு பங்காக
கருத்தரித்திருந்தால் கூட கரு கலைந்து விட வேண்டும் என்ற
நப்பாசையில்.
மறு தினத்திலிருந்து வயிற்று வலி அதிகமானதே
ஒழிய,
மாதவிலக்கு வரவில்லை. இந்நிலையில்
அவ்வப்போது உரையாடும் ஸ்ரீ லட்சுமியின்
மணமான உயிர்த்தோழி கீதா கர்ப்பத்தை உறுதி
செய்யும் கருவியை பயன்படுத்த அறிவுறுத்த, பயன்படுத்தி
பார்த்தவளுக்கு தாய்மை அடைந்திருக்கும் செய்தி அளவில்லா
சந்தோஷத்தை கொடுக்க , கற்பகத்தின் காதுகளில் அது
இடியாய் இறங்க, ஒரு கணம் தடுமாறியவர்,
"இது சாதாரண உஷ்ண வலியா இருக்கும்னு
நினைக்கிறேன் .... மோர் குடிச்சா சரியாயிடும் எனக்கு உடம்பு சரியில்லாததால
உன் கூட டாக்டருக்கு வர முடியாது ... மாசமா வேற இருக்க உன்னை தனியா
டாக்டருக்கு அனுப்பினா சரண் சண்ட போடுவான் .... அடுத்த வாரம் சரண் வந்துடுவான் ...
அவன் வந்ததும் அவன் கூட டாக்டருக்கு போ ...." என மருத்துவரை பார்ப்பதற்கு
அழகாக முட்டுக்கட்டை போட்டு வைத்திருந்தார் அதற்குள்
வயிற்று வலியால் கரு கலைந்து விடும் என்ற எண்ணத்தில்.
ஆனால் தற்போது மருத்துவமனைக்கு சென்று
திரும்பிய ராம்சரண் சொன்ன செய்தி,
அவரது எண்ணத்தில் ஒரு கூடை மண்ணள்ளிப் போட
உள்ளுக்குள் கொதித்துப் போனார்.
தன் குலம் விருத்தி அடைந்திருக்கிறது
என எண்ணாமல், தன் மகளின் கர்ப்ப
காலத்தோடு பொருத்திப் பார்த்து மீண்டும் மீண்டும் மனம்
குமைந்து போனார்.
தன் மகள் திருமணம் முடித்து
இரண்டு ஆண்டுகள் குழந்தை பேறுக்கு தவியாய் தவித்து, ஏகப்பட்ட மருந்து மாத்திரைகள், சிகிச்சைகள்,
வலிகள் , ஏச்சுப் பேச்சுகள் ஏளனங்களை தாங்கிய
பின் கடினப்பட்டு தாயாகிய இருந்த நிலையில், திருமணம் முடிந்து
இரண்டாம் மாதமே மருமகள் கருத்தரித்தது, அவருக்கு ஆங்காரத்தை
ஏற்படுத்தி இருந்தது.
மிகச் சாதாரண குடும்பத்தில் இருந்து வந்து
விட்டாள் என்ற ஒரே காரணத்திற்காகவே, ஸ்ரீ
லட்சுமியை வார்த்தையால் வசைப்பாடிக்
கொண்டிருந்தவருக்கு இந்த செய்தி உவப்பானதாகவே இல்லை.
இது எல்லாவற்றையும் விட,
அன்பு என்றுமே கீழ் நோக்கிச் செல்லும்
என்பார்கள்…
மருமகள் கருத்தரித்து விட்டதால் மகனின்
அன்பும் அக்கறையும் பாசமும், பிறக்கப் போகும்
குழந்தைக்கும் அதனை சுமக்கும் தன் மனையாளை நோக்கி பாய்ந்து விட்டால்,
தன் மகள் அண்ணா என்று அன்பொழுகப் அழைத்துக்
கொண்டு தாய் வீட்டில், கால
நேரம் இல்லாமல் கணக்கு வழக்கு இல்லாமல் பணத்தைத் தண்ணீராய் செலவழித்துக் கொண்டு
சீராடிக் கொண்டிருக்க முடியாதல்லவா....
தன் மகனுக்கென்று
குழந்தை குடும்பம் அமைந்துவிட்டால் , நடக்கும்
அனைத்து தாம் தூம் செலவிற்கும் என்றாவது ஒருநாள் கணக்கு காட்டும் நிலை வந்து
விடுமே ... என பலவற்றை கணக்கிட்டே அவர் கல்லெறிந்து பார்க்க, அதனைக் கண்டு கொள்ளாமல் மகன் சென்றது, அவருக்கு
சப்பென்றாகி போக அடுத்த கட்ட திட்டத்தை அழகாக அரங்கேற்றும் சிந்தனையில் மூழ்கிப்
போனார்.
அறைக்கு வந்ததும்,
"அவங்க ஏன் அப்படி கேட்டாங்க
..." என்றாள் ஸ்ரீலட்சுமி நேரடியாக .
"ஏய்.... நீ எதுவும் தப்பா எடுத்துக்காத .... அவங்களுக்கு
ரொம்ப விவரம் பத்தாது ... ஏதேதோ உளறுவாங்க ..."
"நான் தப்பா எடுத்துகிட்டேன்னு
சொல்லவே இல்லையே ... அப்ப அவங்களோட பேச்சு உங்களுக்கே தப்பா பட்டு
இருக்கு .... இல்லையா ..."
என்றவளுக்கு பதில் அளிக்க முடியாமல்
திணறியவன், சுதாரித்து
"ஏதோ குழப்பத்துல உளறி இருக்காங்க ... அவங்க பேச்சுக்கெல்லாம் இம்பார்ட்டன்ஸ் கொடுக்காத எனக்கு
உன் மேல என்னைக்குமே சந்தேகம் வராது .... அதே மாதிரி உனக்கு என் மேல சந்தேகம் வர்ற
மாதிரி நான் என்னைக்குமே நடந்துக்க மாட்டேன் .... நாம ஒருத்தர் மேல ஒருத்தர்
சந்தேகப்பட்டா தான் அதுக்கு முக்கியத்துவம் கொடுக்கணும் .... மூணாம் மனுஷங்கள
பத்தின கவலை நமக்கு எதுக்கு ... " என்றவன் அவளை நெருங்கி அவள் கண்ணோடு
கண்ணோக்கி
"நான் வெளியே சொல்லிக்காத ஒரு
நம்பிக்கையை எப்பவுமே உன் மேல வச்சிருக்கேன்.... அது எந்த காலத்துலயும் மாறாது
புரிஞ்சுதா..."
என்று வேகமாக முற்றுப்புள்ளி வைத்துவிட்டு,
தன் மடிக்கணினியை எடுத்து வைத்துக்கொண்டு அலுவலக வேலையில் மூழ்கிப் போனான்.
அதற்கு மேல் பேச மனம் இல்லாமல்,
கட்டிலின் ஓரத்தில் ஒருக்களித்து படித்துக் கொண்டு உறக்கம் வராமல் சற்று நேரம் ஏதேதோ நினைத்து மருகிவிட்டு கடைசியில்
அவளும் உறங்கிப் போனாள்.
மறுநாள் விமான பயணத்திற்கு தயாராகிக்
கொண்டிருந்தவனின் மனம் ஒரு நிலையில் இல்லாமல் தவித்துக் கொண்டிருந்தது.
தன் தாயின் பேச்சை பெரிதாக எடுத்துக்கொண்டு, அது குறித்து
அவரிடம் விவாதம் செய்ய பிடிக்கவில்லை, அதே போல் மனையாளின் கேள்விக்கும் பதில் சொல்ல முடியாமல் அவள் முகம் பார்க்கவும்
முடியவில்லை ...
இருதலைக்கொல்லி எறும்பாய் உள்ளுக்குள் துடித்தவன்,
தன் அறைக்கு சென்று அங்கு துணிகளை
மடித்து வைத்துக் கொண்டிருந்த மனையாளை நெருங்கி ,
" லட்சுமி ..." என்றான்
மென்மையாக.
அழுது வீங்கிய முகம்,
அவளது மன பாரத்தை வெட்ட வெளிச்சமாக்க, கண்கள் லேசாக கலங்கி இருப்பதைக் கண்டவன், தன்னவளை
பற்றி இழுத்து இறுக தழுவி கொண்டான் .
நிமிடங்கள் மென்மையாய் கரைய,
"கூடிய சீக்கிரம் வர பார்க்கிறேன்
... டேக் கேர் ..." என முடித்தான் நெற்றி முத்தத்தோடு அடுத்த முறை சந்திப்பு வெகு அசாதாரண
சூழ்நிலையில் நடை பெற போவது தெரியாமல்.
ஸ்ரீ-ராமம் வருவார்கள்......
Superrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrttrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrr
ReplyDeletethanks a lot ma
ReplyDelete