ஸ்ரீ - ராமம் - 9.1

அத்தியாயம் 9.1

 

 

பள்ளியிலிருந்து முன்னதாக திரும்பிய ருக்மணியிடம்,

"குழந்தைக்கு பால் டப்பா வாங்கணும்னு லட்சுமி சொல்லிகிட்டு இருந்தா .... உன்கிட்ட அதுக்கு ஏதாவது பணம் கொடுத்தாளா ...." என தியாகராஜன் கேட்டது தான் தாமதம் கொதித்துப்போன ருக்மணி,

 

"உங்களுக்கு எல்லாம் மனசாட்சியே கிடையாதா .... சொந்த பேத்தி ... அந்த பிஞ்சு குழந்தைக்கு ஒரு பால் டப்பா வாங்கி கொடுக்க கூட உங்க கிட்ட பணம் இல்லையா .... ஏன் மாசா மாசம் பென்ஷன் வாங்கல... என்னமோ அவ பணம் கொடுத்தாளான்னு கேக்குறீங்க .... அவ தல பிரசவத்தை நாம தான் கூட இருந்து பார்த்து செலவு செய்யணும்னு சொன்னப்ப கூட இப்படித்தானே கணக்குப் பார்த்தீங்க... என் அம்மா அப்பா தானே  என் ரெண்டு பிரசவத்துக்கும் கூட இருந்து ஒத்தாசை செஞ்சிசெலவு செஞ்சாங்க அதெல்லாம் தெரிஞ்சும், நம்ம பொண்ணுக்குன்னு வரும் போது மட்டும்  ஏங்க எப்பவுமே கணக்கு  பார்க்கறீங்க..."

 

தியாகராஜன் பதில் பேசாமல் அமைதி காக்க,

 

" இப்ப அமைதியா இருக்கற  மாதிரி இருந்துட்டுஎன் பொண்ணு வந்ததும் வேற ஏதாவது சாக்கு வச்சு அவகிட்ட உங்க கோவத்தை காட்டிடாதீங்க.... அந்தப் புள்ளை ஏற்கனவே , சொந்த வீட்ல சாப்பாடு சாப்பிட கூனி குறுகுது...." 

 

ருக்மணி பொங்கிக் கொண்டிருக்க, வீட்டு வாயிலில் நின்றபடி அனைத்தையும் கேட்டுக் கொண்டிருந்த ஸ்ரீ லட்சுமியின்  கண்கள் குளம் கட்ட, கண் சிமிட்டி கண்ணீரை உள்ளிழுத்து கொண்டவள், அப்பொழுதுதான் வந்தது போல் காட்டிக் கொண்டு வீட்டினுள் நுழைந்தாள்.

 

தாய்க்கு அடுப்படியில் உதவியதோடு சற்று நேரம் தன் குழந்தையுடன் விளையாடிவிட்டு தன் அறைக்கு  சென்றவளுக்கு கடந்த கால கசடுகள்கண்முன்னே தோன்றி அலைகழிக்க, வாய் பொத்திக்கொண்டு  சத்தம் வராமல் துடித்து அழுதாள்.

ஒரு பெண் திருமணத்திற்கு பிறகுகணவனைப் பிரிந்து வாழ்வதற்கு அவளது பிறந்த இல்லம் ஸ்திரமாக இருக்க வேண்டும் . புகுந்த வீட்டில் அவள் பட்ட கஷ்ட நஷ்டங்களை தெரிந்து கொண்டு, அவளுக்கு ஆதரவாக பேசி வழிகாட்ட பிறந்த வீட்டு சொந்தங்கள் தன்மையாக இருக்க வேண்டும்.

 

ஆனால் தனக்கு பிறந்த வீடும் சரியில்லை புகுந்த வீடும் சரியில்லை என்கின்ற நிலையில்,  காசுக்காகாத வெறும் தன்மானத்தையும் வைராக்கியத்தையும் வைத்துக்கொண்டு, காலம் கடத்தி விட முடியுமா ....

 

தன் கணவன் ராம்சரண் பணத்தில் முக்குளிப்பவன் அவன் இந்த விவாகரத்து வழக்கை வருடக் கணக்கில் இழுத்தடிக்கலாம்.....

 

ஆனால் தங்கச் சங்கிலியை அடமானம் வைத்து வழக்கு நடத்தும் தன் நிலைமை 2 மாதங்கள் கூட தாக்கு பிடிக்காது ....

 

இப்படி பணத்திற்கு திண்டாடாமல் விவாகரத்து வழக்கை வாபஸ் பெற்றுக் கொண்டுதன் கணவனுடன் சேர்ந்து வாழலாம் .... ஆனால் அப்படி பணத்திற்காக அவனுடன் சேர்ந்து வாழும் வாழ்க்கைக்கு பெயரே வேறு ...

 

அங்கு தன் மனம் தன்னை மனைவியாக கருதாது .... ஆண்டவன் தனக்கு எதுவுமே கொடுக்கவில்லை என்றாலும், தன்மானமும் சூடு சொரணையும் அளவுக்கு  அதிகமாகவே கொடுத்து விட்டான் ... ஆதலால் தான் அள்ளாடுகிறேன் .... என்றெண்ணி துடித்தவளுக்கு  கடந்த கால கசப்பான காட்சிகள் கண்முன் விரியத் தொடங்கின. 

  

ராம்சரணின் பரம்பரை  ஓரளவு செல்வ வளம் மிக்க பாரம்பரியத்தை கொண்டது.

ராம்சரணின் தாத்தா காலத்திலேயே கடல் கடந்து வாணிபம் செய்து லட்சக்கணக்கில் பணம் ஈட்டி ஊட்டியில் எஸ்டேட் பங்களா, சிறிய தேயிலைத் தோட்டத்தோடு, டீ தூள் தயாரிக்கும் தொழிற்சாலையை நிர்மாணித்து நடத்தி வருகின்றனர்.

 

அதனை தற்போது அவன் தந்தை ரங்கசாமி தான் நிர்வகித்து வருகிறார். ஊட்டியின்  சீதோஷண நிலையை காரணம் காட்டி ராம்சரணின் தாய் கற்பகம்  மகன் ராம்சரண் மற்றும் மகள் அருணா சிறு குழந்தைகளாக இருக்கும் போதே கோயம்புத்தூரில் தனி வீட்டை வாங்கிக் கொண்டு, குடியேறிவிட்டார். 

 

ரங்கசாமி மாதத்தில் ஒரு வாரம் சேர்ந்தார் போல் கோயம்புத்தூரில் இருந்தால் பெரிய விஷயம்.. அதற்கு மேல் அவரால்  தாக்குபிடிக்க முடியாது.  அப்படி ஒரு வியாபார பைத்தியம் அவர்.  மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறை நடக்கும் ஆசிய தேயிலை தொழிலதிபர்கள் சங்கமத்திற்கு மட்டும் ஒரு மூன்று மாத காலம்,கலந்து கொண்டு புது புது வியாபார முறைகள் மற்றும் புதிய நிறுவனங்களோடு தொடர்புகளை ஏற்படுத்திக் கொண்டு விட்டு வருவார். 

 

உறக்கத்தில் கூட வியாபாரத்தை பற்றிய கனவுகளையே காணுபவர். ராம்சரண் ஐந்தாம் வகுப்பு படிக்கும் போது, மகனை அனைத்து விதங்களிலும் தலைசிறந்தவன் ஆக்க வேண்டும் என்ற எண்ணத்தில்  ஊட்டியில் இருக்கும் தலை சிறந்த குடியிருப்பு பள்ளிக்கு மாற்றினார். 

 

ஊட்டியில் சொந்த வீடு இருந்தாலும்வியாபாரம் வியாபாரம் என்று காலில் சக்கரத்தை கட்டிக்கொண்டு  சுழன்று கொண்டிருப்பதால் மகனை சரிவர கவனிக்க முடியாமல் போய்விடும் என்ற ஒரே காரணத்திற்காகஅப்படி ஒரு ஏற்பாட்டை செய்திருந்தார் ரங்கசாமி .

 

 தாயின் கண்காணிப்பில் கோயம்புத்தூரில் படித்ததை விட, ஊட்டி குடியிருப்பு பள்ளியின் முறையான கண்காணிப்பும், அருமையான அணுகுமுறையும் ரங்கசாமியின் எண்ணத்திற்கு ஏற்ப ராம் சரணை செதுக்கி ஆளாக்கியது. 

 

அவனை தன் பரம்பரை  தொழிலில் இறக்கி விட வேண்டும் என்ற எண்ணத்தில் ரங்கசாமி செயல்பட, ராம் சரணுக்கோ வியாபாரத்தில் நாட்டமில்லாமல் போகஒரு கட்டத்தில் வற்புறுத்த மனமில்லாமல் விலகி  நின்று விட்டார்.

 

அவனும் தனக்குப் பிடித்த துறையை தேர்வு செய்துஅதில் முழு வீச்சில் உழைத்து இளம் வயதிலேயே மிகப்பெரிய பதவியில் தன்னை அமர்த்திக் கொண்டு விட,  மைந்தன் தான் தேர்வு செய்த பாதையில் காட்டிய  அபரிமித வளர்ச்சியை கண்டு அமைதியாகி விட்டார் ரங்கசாமி.

 

ரங்கசாமி நல்ல உழைப்பாளி.  ஆகச்சிறந்த வியாபாரி.  

 

தொழிற்சாலை மற்றும் தேயிலை தோட்டத்தை பார்வையிடுவது , கணக்கு வழக்குகளை சரி பார்ப்பதுவியாபார சங்க கூட்டத்தில் கலந்து கொள்வது என எப்பொழுதுமே மனிதர் பட்டாம்பூச்சி போல் பறந்து கொண்டே இருப்பார்.

 

ஆனால் அவரது மனைவி கற்பகமும், மகள் அருணாவும் நேர் மாதிரி.

 

இருவருமே பொறுப்பு என்றால் கிலோ என்ன விலை என்று கேட்கும் ரகம். கடைந்தெடுத்த சோம்பேறிகள்....  ஊர் வம்பு பேசுவதில் உச்சம் தொட்டவர்கள் ..... அவர்கள் இருவரும் எங்கு இருக்கிறார்களோ அங்கு நிச்சயம் பிரச்சனைகள் இருக்கும்....

 

பிரச்சனையே இல்லாத இடத்தில் கொண்டு போய் விட்டாலும் பிரச்சனையை உருவாக்கி விடுவார்கள்... அப்படி ஒரு ஆகச் சிறந்த ராஜதந்திரிகள் ....

 

உணவு மேஜையில் தயார் நிலையில் இருக்கும்  உணவை எடுத்துப் போட்டு உண்பதற்கே ஏதோ ஊருக்காக அயராது உழைத்தது போல் ஆயாசப்பட்டு போவார் கற்பகம். 

 

தாய் எட்டடி என்றால் குட்டி பதினாறடி பாயும் அல்லவா ...

 

அருணாவை பற்றி சொல்லவே வேண்டாம் அவளுக்கு உணவு படுக்கையறைக்கே வர வேண்டும்

 

நாள் ,கிழமை , நட்சத்திரம்இறப்பு, பிறப்பு எதுவுமே அவர்களை பாதிக்காது.  அசைவ உணவு பிரியர்கள் வித விதமாக அசைவ உணவுகளை உண்பதை மட்டும் கொள்கையாகவே கருதி  வாழ்க்கையை  உல்லாசமாக வாழ்பவர்கள் ....

 

உணவே இப்படி என்னும் நிலையில் படிப்பை பற்றி சொல்லவே வேண்டாம் ....

 

தடுக்கி தடுக்கி பள்ளிப்படிப்பை முடித்துவிட்டுகல்லூரியில் சேர்ந்ததோடு சரி .... மாதத்திற்கு ஒரு முறை கல்லூரிக்குச் செல்வதே பெரிய காரியம் என்னும் நிலையில் தேர்ச்சியை பற்றி எல்லாம் பேசவே கூடாது ....

 

ராம்சரண் அருணாவிற்கு  தன்னால் இயன்றவரை அறிவுரை கூறிப் பார்த்துவிட்டுஒரு கட்டத்தில் தேறாது என்று தண்ணீர் தெளித்து விட்டு விட்டான்.

 

ரங்கசாமியும்  தலையால் தண்ணீர் குடித்துப் பார்த்தார் ஆனால் பலன்  என்னவோ பூஜ்ஜியம் தான்

 

ஒருவன் தன் வாழ்நாள் முழுவதும் பிறருக்கு வேலை கொடுக்கும் அந்தஸ்தில் இருக்க வேண்டுமென்றால்காலநேரம் பார்க்காமல் உழைக்க வேண்டும்.

 

புதிதாக உழைத்து உருவாக்கவில்லை என்றாலும்  மூதாதையர் சேர்த்து வைத்திருந்ததை காப்பாற்றிக் கொள்வதற்காவது குறைந்தபட்ச உழைப்பும் , செய்யும் தொழிலை பற்றிய புரிதலும் தேவை ...

குன்றளவு செல்வம் கூட குந்தி  உண்டால் குறைந்துவிடும் ....

 என பலமுறை  எடுத்துச் சொல்லி புரிய வைக்கப் பார்த்தார் ரங்கசாமி. ஆனால் வாக்குவாதங்கள் தான் வலுத்ததே ஒழிய , அறிவுரைகள் அனைத்தும் விழலுக்கு இழைத்த நீர் ஆகிப்போனது.

 

வருமானத்திற்கு வித்திடுகிறார்களோ இல்லையோதாயும் மகளும் போட்டி போட்டுக் கொண்டு செலவு செய்வதில் கில்லாடிகள் என்பதால்  வீட்டு செலவுகள் அனைத்தையும் தானே பார்த்துக் கொண்டு அவர்களின்  கை செலவிற்கு மட்டும்  பணம் கொடுக்க தொடங்கினார் ரங்கசாமி.

 

சில ஆண்டுகள் தணல் மேல் நிற்பது போல் தாக்கு பிடித்தவர்கள் , மைந்தன் தலை எடுத்ததும் அவனிடமிருந்து கணக்கு வழக்கு இல்லாமல், பணம் வாங்கி செலவு செய்ய தொடங்கினர்.

 

ராம் சரணுக்கு சிறுவயதிலிருந்தே தன் தாய் என்னும் பிம்பத்தை ஊதாரியாய், குடும்பத்துடன்  ஒட்டுதல் அற்ற பெண் மணியாய்  பார்த்தே பழகி இருந்ததால் அவருடைய குணத்தை அவரது சுபாவமாக கருதி  வெகு இயல்பாக அவனால் கடந்து போக முடிந்தது. 

 

அருணா உருவம் உள்ளம் அனைத்திலும் தாயைக் கொண்டு பிறந்திருக்க ராம்சரண் அனைத்திலும் தந்தையை கொண்டு  பிறந்திருந்ததால் ரங்கசாமியை போலவே கற்பகம் மற்றும் அருணாவின் மீது நிபந்தனையற்ற அன்பை, அவனால் செலுத்த முடிந்தது. 

 

இந்நிலையில் தான் அருணாஹரிஷ் என்றவனை காதலிக்கஒரே சமுதாயம் என்பதால் ரங்கசாமி ஒத்துக்கொண்டாலும்ஹரிஷின் கல்வித் தகுதி அவரை யோசிக்க வைத்தது.

 

ஹரிஷின் குடும்பமும் வியாபார பின்னணி கொண்ட குடும்பம் தான். ரங்கசாமிக்கு இணையான அந்தஸ்து இல்லை என்றாலும்இரண்டு வெவ்வேறு இடங்களில் பல்பொருள் அங்காடிகள், கொஞ்சம் நிலப்புலன்கள்தென்னந்தோப்பு, மாவு மில்மார்க்கெட் பிரதான சாலையில் கடைகள்  வாடகைக்கு விடப்பட்டு  கிடைக்கும் வருமானம் என பொருளாதார நிலையில் சற்று நிறைவாகவே இருந்த குடும்பத்தை ரங்கசாமியால் நிராகரிக்கவும் முடியவில்லை. 

 

ஆனால் ஹரிஷுக்கு சொல்லிக் கொள்ளும் அளவிற்கு வேலை  எதுவும் இல்லை.  இரண்டு பல்பொருள் அங்காடிகளை மேற்பார்வை பார்ப்பது மட்டும்தான் இப்போது வரை அவன் செய்து கொண்டிருக்கும் ஒரே வேலை.

 

எவ்வளவு எடுத்துச் சொல்லியும் கேட்காமல் அருணா ஒற்றைக்காலில் நின்றதால் வேறு வழி இல்லாமல், ஹரிஷ் அருணா திருமணத்தை சிறப்பாக செய்து முடித்தார் ரங்கசாமி.

 

ஒரே ஊர் என்பதால், திருமணத்திற்கு பின்பு  பாதி நாட்கள்  தாய் வீட்டில் தான் கழித்தாள் அருணா. 

 

ரங்கசாமி திருமணத்திற்கு பின்பான சடங்குகள் அனைத்தையும் ஒன்று விடாமல் சிறப்பாக செய்தாலும்ஏதேதோ காரணங்களை சொல்லித் தாயும் மகளும் மைந்தனிடம் பணத்தைக் கறந்து கரைத்து விடுவார்கள். 

 

திருமணம் முடிந்து இரண்டு ஆண்டுகள்  ஆகியும் அருணா கர்ப்பம் தரிக்காமல் போக,  IVF IUI போன்ற அனைத்து செலவுகளும் ரங்குசாமியின் தலையில் விழுந்தது.

 

பணத்திற்கு பஞ்சமில்லை என்பதால் அவர் அதைப் பற்றி கவலைப்படாமல், நன்றாகவே செலவு செய்தார்.

 

சிகிச்சையின் காரணமாக ஓராண்டிற்கு பிறகு அருணா கர்ப்பம் தரித்து இரு ஆண் குழந்தைகளை பெற்றெடுத்தாள் .

 

இந்நிலையில் தான் ரங்கசாமி தன் மகன் ராம்சரணுக்கு  தீவிரமாக  திருமணத்திற்கு பெண் தேடத் தொடங்கினார்.

 

ராம் சரணுக்கு வயது 28 ஆகியும்கற்பகம் கண்டுக்காமல் இருந்துவிட, ரங்கசாமி  தான் ராம் சரணின் திருமணத்திற்காக  முழு வீச்சில் பெண் தேடலானார் .

 

தன் மனைவியும் மகளும் ஊதாரிகள்என்பதால் தனக்கு வரவிருக்கும் மருமகளை மிகவும் தரம் பார்த்து தேர்வு செய்ய நினைத்தார்  ரங்கசாமி.

 

சாதாரண குடும்பத்தை சேர்ந்த பெண்ணாக இருந்தால் போதுமானது  என்பதை முதல் விதியாக தன் நட்பு வட்டங்கள் மற்றும் திருமண புரோக்கர்களிடம் கூறி வைத்தார்.

 

இணையத்தில் திருமண பதிவு செய்யும் போதும் இதனையே குறிப்பிட்டு பெண் தேடினார்.

 

ராம்சரண்க்கு திருமணத்தில் பெரிதாக நாட்டம் இருந்ததில்லை.  அதற்கு முக்கிய காரணம் தொலைதூரக் கல்வி போல் அவன் தாயும் தந்தையும் வாழும் திருமண வாழ்க்கை தான்.  

 

என்னதான் காதலித்து மணந்தாலும்மணந்து கொண்டவனைப் பற்றியும் அவனது குடும்பத்தை பற்றியும்  கூடை கூடையாக குறைகளைக் கொட்டும் தங்கையும் ஒரு காரணம் ...

 

வாழ்க்கையில் எது எப்பொழுது நடக்க வேண்டும் என்று விதித்திருக்கிறதோ அது அப்பொழுது நடந்தே தீரும் ... அது படிப்பு , வேலை , இறப்புக்கு மட்டுமல்ல திருமணத்திற்கும் பொருந்தும் என முழுமையாக நம்பினான். 

 

அதோடு அவன் திருமணம் என்னும்  சடங்கை வெறுத்ததும் இல்லை தீவிரமாக  விரும்பியதும் இல்லை ... எனவே அதற்காக மெனக்கிடாமல்  காலத்தின் போக்கில் விட்டு விட்டுதான் ரசித்து செய்யும்  பணியில் மூழ்கிப் போயிருந்தான் ...

 

ரங்கசாமியின் குடும்ப வசதிக்கும் ஆணழகனான ராம்சரணின்  கம்பீரத்திற்கும்  வந்து குவிந்த ஏகப்பட்ட திருமண வரன்களில்ஸ்ரீ லட்சுமியை பார்த்ததும் பிடித்து விட அவளையே தன் வீட்டு மருமகளாக கொண்டு வந்தார் ரங்கசாமி. 

 

அவர் அவ்வளவு எளிதாக ஸ்ரீ லட்சுமியை மருமகளாக தேர்வு செய்துவிடவில்லை.  வந்திருந்த பல ஜாதகங்களில்  மூன்று பெண்களை  தேர்வு செய்தார்  ரங்கசாமி. 

 

அந்த மூன்று பெண்களின் கைபேசியில் இருந்து போக்குவரத்து வரை சமூக வலைத்தளங்கள் உட்பட அனைத்தையும்  டிடெக்டிவ் வைத்து மூன்று மாதங்கள் கண்காணித்தார்.

 

ஆண் பெண் நட்பை தவறாக கருதும் பழைமைவாதி அல்ல ரங்கசாமி.

 

காதலனுக்கும் நண்பனுக்கும் வித்தியாசம் காட்டாமல், எப்பொழுதுமே கூடிக் குலவும் கொஞ்சி மகிழும் சமூகத்தை தான் அவருக்கு பிடிக்கவில்லை. 

 

ஆதலால் தனக்கு மருமகளாக வரவிருக்கும் பெண்ணிற்கு ஆண் நண்பர்கள் இருக்கிறார்களா... இருந்தால் உண்மையிலேயே நண்பர்களா .... அவர்களுக்கிடையே ஆன உறவுமுறை என்ன ...

 

அந்தப் பெண்ணின் சுபாவம்மனதிடம் ஆகியவற்றை அக்கு வேறு ஆணி வேராக அறிந்த பின்னரே தன் வீட்டு மருமகள் ஆக்கிக் கொள்ள வேண்டும் என்ற எண்ணத்தில் பிடிவாதமாக செயல்பட்டார். 

 

 மற்ற இரு பெண்களும் அவ்வகையில் அடிபட்டு போகஸ்ரீ லட்சுமியை தேர்வு செய்தார். 

 

ஆசிரியையாக பணியாற்றிக் கொண்டிருந்தவளை  பற்றியும் அவளது குடும்பப் பின்னணியை பற்றியும்  பல படிகளாக அணு அணுவாக அலசி ஆராய்ந்து , தன் மகனுக்கு மனைவியாக மட்டுமல்லாமல்  தனக்கும் மகளாக இருந்து தன் குடும்ப  வியாபாரத்தை தூக்கி நிறுத்தும் திறமையும் நேர்மையும் இருக்கிறதா   என்ற நோக்கில் பல கோணங்களில்  ஆய்வு செய்த  பின்னரே அவளை மருமகளாக  தேர்வு செய்தார். 

 

இந்திய பணக்காரர்களில் ஒருவரான திருபாய் அம்பானி, சாதாரண குடும்பத்தை சார்ந்த ஆசிரியர் பணியில் இருந்த  நீட்டாவின் திறமையை கண்டு தன் மகன் முகேஷ் அம்பானிக்கு மணம் முடித்தது போல்ரங்கசாமி ஸ்ரீ லட்சுமியை தேர்வு செய்திருக்கதிருமணத்திற்கு பிறகு அவளும் அவரது எதிர்பார்ப்பை எதிர்பார்த்ததை விட அதிகமாகவே பூர்த்தி செய்தாள்.

 

ஆனால் திருமணம் நடந்தேறுவதற்குள்ஏதாவது ஒரு வகையில் திருமணம் நின்று விடாதா .... என தன்னால் இயன்ற அளவிற்கு கடைசி வரை முயற்சி செய்து தோற்றுப் போனார் கற்பகம். 

 

தோற்றார் கற்பகம் என்பதை விட கற்பகத்திற்கு தெரியாமலேயே அவரை  தோற்கடித்தார் ரங்கசாமி என்றால் பொருத்தமாக இருக்கும் ...

 

மணமகள் அலங்காரத்தில் அச்சில் வார்த்த அம்பிகை போல் அழகாக காட்சியளித்த ஸ்ரீ லட்சுமியை பார்த்து கற்பகம் அருணாவின் முகத்தில் எள்ளும் கொள்ளும் வெடித்தது .

 

மருமகளின் பேரழகில்மகன் தன்னையும் தன் மகளையும் மறந்து விடுவானோ என்ற அச்சம் பிறக்க,  யாருக்கோ வந்த விருந்து போல், கொஞ்சம் கூட அக்கறை காட்டாமல் திருமணத்தின் போது தள்ளியே நின்றார் கற்பகம்.

 

கற்பகத்தின் மனநிலையை ஓரளவிற்கு அனுமானித்த ரங்கசாமி , அவரை எதிலும் ஈடுபடுத்தாமல், தானே முன் நின்று ஓடி ஆடி திருமணத்தை அழகாக நடத்தி முடித்தார். 

 

திருமணம் முடிந்ததும் ஊட்டியில் இருக்கும் அவர்களது  தேயிலை தோட்டம் மற்றும் தொழிற்சாலைக்கு மணமக்களை அழைத்துச் சென்றார் ரங்கசாமி. 

 

மகனுக்கு குடும்ப வியாபாரத்தின் மீது நாட்டமில்லை ...  மனைவியும் மகளும் ஊதாரிகள் ... உண்டு கொழுத்து விட்டு ஊர் வம்பு பேசுவதில் வல்லவர்கள் .... பட்டாபிஷேகத்தை தூக்கிச் சுமக்க விரும்பாமல்  பாட்டன் சொத்தில் பட்டத்து ராணியாய் மட்டும்  வாழ ஆசைப்படுபவர்கள்  ... என்பதால், தன் மருமகளான ஸ்ரீ லட்சுமிக்கு வியாபாரத்தைப் விலாவாரியாக சொல்லிக் கொடுத்ததோடு,  tally accounting courseஐயும் பயிற்றுவித்தார்.

 

இயல்பிலேயே புத்திசாலி , உழைப்பாளி என்பதால் வெகு குறுகிய காலத்திலேயே அந்த படிப்பை புரிந்து கொண்டதோடுரங்கசாமியின் அனுபவ அறிவையும் உள்வாங்கிக் கொண்டு மிகத்திறமையாக

 மூலப் பொருட்கள் கொள்முதல், விளைப் பொருட்கள்  விற்பனை , தொழிற்சாலை மற்றும் தோட்டத் தொழிலாளர்களின் சம்பளம்

தொழிற்சாலை மின்சார செலவு, இதர வரவு செலவுகள்  என எதையும் விடாமல் அனைத்தையும் கணக்கிட்டு கணினியில் பதிவேற்றி அவர் பார்வைக்கு அனுப்பலானாள் ஸ்ரீ லக்ஷ்மி. 

 

அவளது கணினியானது , தேயிலை தொழிற்சாலையில் செயல்படும்  அலுவலக கணினியோடு இணைப்பில் இருந்ததால் அங்கு நடக்கும் கொடுக்கல் வாங்கல் அனைத்தும் உடனுக்குடன்  அவளை சென்றடைய , கோயம்புத்தூரில் இருந்தபடியே அனைத்து பண பரிவர்த்தனைகளையும்  பத்து காசு  விடாமல் பாதுகாத்து வருபவளின் மீது முதலில்  மிகுந்த நம்பிக்கை ஏற்படநாளாக நாளாக அவள் மருமகள் என்பதை மறந்து தன் மகளாகவே பாவிக்க தொடங்கினார் ரங்கசாமி. 

 

ராம் சரணுக்கு மனையாளை பிடிக்கும் என்பதை விட மிகவும் பிடிக்கும் என்று சொன்னால் பொருத்தமாக இருக்கும் .

காதலால் கசிந்துருக்கி திருமணம் செய்யவில்லை என்றாலும் காலப்போக்கில் மனையாளின் நேர்த்தி மற்றும் அணுகு முறையில் கொஞ்சம் கொஞ்சமாக தன்னையே தொலைக்க ஆரம்பித்தான் .

 

 

ஸ்ரீ- ராமம் வருவார்கள்....

 

அடுத்த அத்தியாயம் 9.2ம் பதிவேற்றப்பட்டுள்ளது மக்களே .... 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 


Comments

  1. Superrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrttrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrr

    ReplyDelete

Post a Comment