அத்தியாயம் 7
ஆல்பர்ட் பேசியதை
கேட்ட அனைவரும் வீரா உட்பட அரை கணம் உறைந்து தான் போயினர்.
"பாப்பா, நீ கேட்ட கேள்விக்கு இது பதில் இல்லையே, இவன் ஏன்
உளறான் ..." என சிவா அடி எடுத்துக் கொடுக்க,
" Serious babe... என்னோட
கிரேட் கிராண்ட் மதர், இந்தியன் .... பஞ்சாபி .....
எனக்கு அவங்கள ரொம்ப பிடிக்கும் .... என்னதான் அவங்க
எங்க தாத்தாவ கல்யாணம் பண்ணிக்கிட்டாலும், கடைசி
வரைக்கும் இந்தியன் கல்ச்சர்ஐ தான் ஃபாலோ பண்ணாங்க ... எனக்கும் இந்தியன் கல்ச்சர்
ரொம்ப பிடிக்கும் ... ஹிந்தியும் கொஞ்சம் தெரியும் ...
இப்ப உனக்காக இன்னும் கொஞ்சம் கத்துக்கணும்னு
ஆசைப்படறேன் ..." என்ற ஆல்பர்ட் லேசாக முகம் சிவந்தபடி
"இதை எப்பவோ சொல்லி இருக்கணும் ... நீ இந்தியா போகப் போறேன்னு கேள்விப்பட்டேன் ... அதான் இப்ப சொல்றேன் ..." வார்த்தைகளை கூட்டி ஒரு வழியாக ஆங்கிலத்தில் பேசி முடித்தான்.
"பாப்பா ... இவன் என்ன திடீர்னு
இந்திய கலாச்சாரம் பண்பாடுனு ஹிஸ்டரி சேனல் ஓட்றான் ...." என்ற சிவா,
"லிசன், நாங்க
ஹிந்தி பேச மாட்டோம் ... தமிழ் தான் பேசுவோம் ..."என்றான் ஆல்பர்ட்யை
பார்த்து.
"நீங்க எல்லாம் இந்தியன்ஸ் தானே ... அப்புறம்
ஏன் ஹிந்தி பேச மாட்டீங்க ..."என்ற முக்கிய கேள்வியை ஆல்பர்ட் முன் வைக்க
"இதுக்கு எனக்கு பதில் தெரிஞ்சா நான்
ஏன் இங்க இருக்கேன் ... அடேய் தம்பி .... தமிழ்நாட்டை பத்தி தெரியாம பேசறியே .... எங்களுக்கு
இங்கிலீஷே வராது எப்படி ஹிந்தி வரும் .... இந்த பக்கம்
புலி வருது அந்த பக்கம் ஹிந்தி வருதுனு வையி, நாங்க
புலிய நோக்கி ஓடினாலும் ஓடுவோமே ஒழிய, ஹிந்தி பக்கம் தல
வெச்சி கூட படுக்க மாட்டோம் .... அப்படி ஒரு ஹிஸ்டரி எங்களோடது ... சரி ஹிந்தியை விடு ...
நீ பேசினது மட்டும் அம்மையப்பனுக்கு தெரிஞ்சிச்சின்னு வையி, அடுத்த நொடி
அருவாளோட அந்தர்பல்டி அடிச்சு ஆஸ்திரேலியால வந்து நிப்பாரு மனுசன்....
அப்புறம் உன்னை ஆண்டவனால கூட காப்பாத்த முடியாது உனக்கு அல்பாய்ஸ் தான் டோய் ...
ஆனாலும் இவ
அப்பா உன்னை கௌரவ கொலை பண்ணறதை பார்த்துகிட்டு நான்
சும்மா இருக்க மாட்டேன் ...." என சிவா
தமிழில் தன் குமுறலை கொட்ட ஆல்பர்ட் புரியாமலும், அனு புரிந்துகொண்டும் உறைய, வீரா கண்களில் நீர்
வரும் அளவுக்கு வாயை பொத்திக்கொண்டு சிரிக்க, செய்வதறியாது
தடுமாறிய ப்ரியா,
"அடேய் எதுக்குடா
நீ இப்படி தம் கட்டி வசனம் பேசி என் அப்பாவை கொலைகாரன் ஆக்கற..."
என்றாள் கோபத்தோடு.
"பாப்பா , இவன்
உன் வீகம் தெரியாம விளையாண்டுகிட்டு இருக்கான் ... அதான்.. உன் பூர்வீகத்தை புட்டு புட்டு வச்சுக்கிட்டு இருக்கேன் ..."
இருவரும் பேசிக் கொள்வதை, புரியாமல் பார்த்துக் கொண்டிருந்த ஆல்பர்ட்டை பார்த்து,
"சாரி ஆல்பர்ட், என் அப்பா மாப்பிள்ளை பார்த்து முடிவு பண்ணிட்டாரு ... கூடிய சீக்கிரம்
எனக்கு கல்யாணம் ... அதுக்காக தான் நான் இந்தியா போறேன் ..."
"வாட் .... ரெடிகுலஸ்.... நீ
கல்யாணம் பண்ணிக்க எதுக்காக உங்க அப்பா குரூம் ஃபைண்ட்(Groom find) பண்ணனும் ... "
"ஹூம்..ம்... உனக்கு தெரியுது ...
மிஸ்டர் அம்மையப்பனுக்கு தெரியலையே ... இப்படி எல்லாம் பேசிகிட்டு மறந்து கூட
மதுரை பக்கம் வந்துடாத மர்டர் ஆயிடுவ.... பார்த்துக்க ..." என்ற சிவாவை
சைகையால் அடக்கியவள்
"பெரும்பாலும் இந்தியர்களோட கல்யாணம்
இப்படித்தான் இருக்கும் ... எங்களைப் பொறுத்த வரைக்கும் கல்யாணங்கிறது
சம்பந்தப்பட்ட ரெண்டு பேரோட பாண்டிங்(Bonding) மட்டும் இல்ல,
ரெண்டு குடும்பங்களோட பாண்டிங்கும் கூட ... அதனால பெரியவங்க தான்
பார்த்து முடிவு பண்ணுவாங்க ..."
"உன்னை கல்யாணம் பண்ணிக்க வேற வழியே
இல்லையா ..." என ஆல்பர்ட் ஆழ்ந்த சோகத்தோடு கேள்வி எழுப்ப, உடனே சிவா
"இருக்கே.... ஆனா இப்ப இல்ல ... முதல்ல நீ இந்தியனா பொறந்து இருக்கணும் ... அப்புறம் இந்துவா பொறந்து இருக்கணும் ... அப்புறம் தமிழ்நாட்டுல பொறந்து இருக்கணும் ... இது எல்லாத்துக்கும் மேல அம்மையப்பனுக்கு உன்ன பிடிச்சி இருக்கணும் ... நீயோ ஏற்கனவே பொறந்து ஆறடி ஒசரம் வளர்ந்துட்ட... சோ பெட்டர் லக் நெக்ஸ்ட் டைம் ..." என முடிக்க,
"கங்கிராஜுலேஷன்ஸ் ப்ரியா ... டேக் கேர், பைய்..." என லேசான சோகத்தோடு விடைபெற்றான் ஆல்பர்ட்.
"இப்பதான் ஒரு அதிவீரராம பாண்டியனை
பத்தி பேசிக்கிட்டு இருக்கோம்.... அதுக்குள்ள ஒரு ஆல்பர்ட் வந்து நிக்கிறான் .... ஒன்னும்
சொல்றதுக்கு இல்ல பாப்பா ..."
"யாரை கல்யாணம் பண்ணிக்கிட்டாலும்
விதி நல்லா இருந்தாதான் வாழ்க்கை நல்லா இருக்கும் டா.... எனக்கு என் கல்யாண
விஷயத்துல என்னைக்குமே எக்ஸ்பெக்டேஷன் இருந்ததில்லை ...
அஞ்சு வருஷம் பத்து வருஷம் லவ் பண்ணி
கல்யாணம் பண்ணிக்கிட்டவங்க கூட கல்யாணத்துக்கு பிறகு அஞ்சே மாசத்துல
பிரிஞ்சிடறாங்க .... அங்க காதல் தோத்து போகுதா.. கல்யாணம் தோத்து போகுதா இல்ல
குடும்ப அமைப்பு தோத்து போகுதா... எது தோத்து போகுது .... இப்ப வரைக்கும்
யாருக்குமே அதுக்கு பதில் தெரியாது ...
இந்த ஃபார்முலாவை ஃபாலோ பண்ணா திருமண
வாழ்க்கை நல்லா இருக்கும்னு எந்த ஒரு ஜென்ரலயிஸ்ட்(Generalized)
பார்முலாவும் கிடையாது..
சில பேர் வாழ்க்கையில் வொர்க் அவுட் ஆகுற
யுக்தி பல பேர் வாழ்க்கையில ஒர்க் அவுட் ஆகாது ...
ஏன்னா ஒரு நபர் மாதிரி இன்னொரு நபர் இல்லையே
... எல்லாரும் இண்டிவிஜுவல்ஸ் தானே
இங்க ... சோ கல்யாணம் பண்ணிக்கிட்டு வாழ்ந்து பார்த்தா தான்,
எல்லாமே தெரிய வரும் ...
பொதுவா விட்டுக் கொடுத்துப் போனா வாழ்க்கை
நல்லா இருக்கும்னு சொல்லுவாங்க ...ஆனா யாரு எந்த அளவுக்கு விட்டுக் கொடுத்துப்
போகணுங்கிற யாட் ஸ்டிக் (Yard stick) மனுஷனுக்கு
மனுஷன் மாறுபடும் ...சூழ்நிலைக்கு சூழ்நிலை மாறுபடும் ...
ஆனா என் அப்பா அம்மா மாதிரி வாழக்கூடாதுங்கிறதுல மட்டும் ரொம்ப ஸ்ட்ராங்கா
இருக்கேன் ...
என் அப்பா பாஸ் மாதிரியும் என் அம்மா
சப்-ஆர்டினேட் மாதிரியான ஒரு வாழ்க்கை வாழ்ந்துட்டு
இருக்காங்க .... விட்டுக்கொடுத்து போறதே என் அம்மாவோட
வேலை ... எப்பவும் தான்ங்கிற நிலையிலயே நிற்கிறது என் அப்பாவோட வேலை… அவங்க வாழ்க்கையில அன்பு பாசம் காதல்னு
எதையுமே நான் பார்த்ததில்லை ...
ஆனா எங்க அப்பத்தா,
தாத்தா அன்யோனிய தம்பதிகள்.... அவங்கள
மாதிரி வாழனும்னு ஆசை உண்டு ... விதி என்ன நிர்ணயிச்சிருக்கோ அது தானே வாழ்க்கை
... பார்க்கலாம் ..." என்றவள் பெருமூச்சு
விட , அவளது பேச்சில் அளவுக்கு அதிகமான சோகம்
இழையோடியதாக வீராவுக்கு தோன்றியதோடு, சற்று முன்பு வரை
முதிர்ச்சியற்ற கல்லூரி பெண் போல், தோன்றியவள் தற்போது
கல்லூரி விரிவுரையாளராக காட்சியளித்தாள்.
அவள் பேசியதை எல்லாம் வைத்துப் பார்த்தால், திருமணம் என்கின்ற விஷயத்தில் யாருமே அவளை சலனப்படுத்தியதில்லை என்பதை புரிந்து கொண்டவன் ஊருக்கு போனதும், ஆண்டவன் கால்ல விழறனோ இல்லையோ ... அம்மையப்பன் கால்ல விழுந்து,உனக்கு அச்சாரம் போடறேன் பாரு... என தன்னவளோடு மானசீகமாக பேசிக் கொண்டான்.
"சரி நீ சொல்ற மாதிரி மேரேஜ் லைப் விதிப்படியே அமைஞ்சிட்டு போகட்டும் ... ஆனா உனக்குன்னு ஒரு டேஸ்ட் இருக்கும்.... உன்னுடைய லைஃப் பார்ட்னர் ரக்குடு பாயா, சாக்லேட் பாயா, இல்ல ஜென்டில்மேன்னானு(Rugged, chocolate, gentle man) ... அத சொல்லு ..." என்றாள் அனு கதை கேட்கும் பாவத்தில் .
"எனக்கு இந்த ரக்குடு பாய்ஸ் எல்லாம்
அலர்ஜி .... அவங்களை எல்லாம் மியூசியத்துல தான் வச்சு பார்க்க முடியும்
கட்டிகிட்டு வாழ முடியாது .... சாக்லேட் பாய்ஸ் சாஃப்டா இருப்பாங்க
..... ஆனா அவங்க கிட்ட மெச்சூரிட்டி இருக்காது .... எல்லா விஷயத்துக்கும் கொஞ்சம் பயப்படுவாங்க,அவங்கள கைட் பண்ணவே
ஒரு ஆள் வேணும் ..
எனக்கு பக்கா மெச்சோர்டு ஜென்டில்மேன் தான் பிடிக்கும் .... இடத்துக்கு ஏத்த மாதிரி நடந்துக்குவாங்க ... எதுக்கும் அவ்ளோ சீக்கிரம் பயப்பட மாட்டாங்க ... ரொம்ப பக்குவமா யோசிப்பாங்க
...பெரும்பாலும் அவங்க எடுக்கிற டெசிஷன்ஸ் சரியா இருக்கும் ... இன்னும் சரியா
சொல்லனும்னா நிறைய கேர் பண்ணி குழந்தை மாதிரி பாத்துக்குவாங்க .... சோ என்னோட
சாய்ஸ் ஜென்டில்மேன் தான்...."
வீரா ... நீ ஏற்கனவே ஜென்டில்மேன் தான்... பெர்பெக்ட் ஜென்டில்மேன்னா இருக்க ட்ரை பண்ணு டா ... என அவள் கூற்றைக் கேட்டு தனக்குத் தானே அறிவுறுத்திக் கொண்டான் வீரா.
"நீ எதிர்பார்க்கிற மாதிரி
அதிவீர ராம பாண்டியன் ஜென்டில்மேன்னா இல்லைன்னா ..."
என அனு கேட்க,
"அதத்தான் சொல்லிட்டேனே விதி விட்ட
வழின்னு ..." என ப்ரியா லேசான சோகத்தோடு சொல்ல
"ஆள் பார்க்க ஒன்னியும் தப்பா தெரியல
... நல்ல மாறியா தான் தெரியறாரு... உன் நல்ல மனசுக்கு எல்லாமே நல்லதாகவே அமையும்
பாப்பா ..." என நெகிழ்ச்சியோடு முடித்தான் சிவா.
சிவா ஸ்ரீபிரியாவை கடந்த 10
மாதங்களாகத்தான் அறிவான்.
இருவரும் இந்தியாவில ஒரே நிறுவனத்தின்
வெவ்வேறு கிளையில் பணிபுரிந்த சமயத்தில் சிட்னியில்
இருக்கும் இந்த வாடிக்கையாளர் நிறுவனத்தின் நேர்காணலில்
தேர்வாயினர்.
ஸ்ரீப்ரியாவின் ஆஸ்திரேலிய பயணத்தை முற்றிலும் எதிர்த்தார் அம்மையப்பன்.
ஸ்ரீப்ரியாவின் தாய் சுசீலாவின்
வார்த்தைக்கு வழக்கம் போல் அவர் செவி சாய்க்காமல்
போக, அம்மையப்பனின் தாய் செல்வராணி தான் தன்
மைந்தனிடம் கொடிபிடித்து கோஷம் போட்டு தன் பேத்தியின்
ஆசைக்கு அனுமதி வாங்கி கொடுத்தார்.
ஸ்ரீப்ரியாவின் சிட்னி பயணம்
முடிவானதும் , அங்கு அவளது அலுவலக முகவரி,
உடன் யாரெல்லாம் பயணிக்கிறார்கள், அவள்
எங்கு தங்கப் போகிறாள் என அனைத்தையும் விலாவரியாக
அம்மையப்பன் அலசும் போது தான், அதே
ஊரைச் சார்ந்த சிவா தன் மகளுடன் பயணிக்கப் போவதும், ஒரே
திட்ட விரைவில் பணிபுரிய போவதும் தெரிய வர, பயணத்திற்கு
முன்பு சிவாவை சந்தித்து,
"யய்யா, இதுவரைக்கும்
என் பெண்ணை நான் வேற மாநிலத்துக்கு கூட அனுப்பினதில்ல.... மொத முறையா கடல் கடந்து
கண்டம் விட்டு கண்டம் போகப் போறா ... படிச்சு வேலையில இருந்தாலும் ரொம்ப விவரம்
இல்லாதவ .... இன்னும் ஒரு வருசத்துக்குள்ள இவ
கல்யாணத்தை முடிக்கணும்னு பாத்துட்டு இருக்கேன் .... நீங்க நம்ப ஊரு ... கூட
இருந்து உங்க வீட்டு புள்ளையாட்டம் பக்குவமா
பார்த்துக்கய்யா... " என்று கேட்டுக் கொண்டவரை சிவாவுக்கு மிகவும் பிடித்துப்
போக, அந்தக் கணத்திலிருந்து இந்த கணம் வரை, ப்ரியாவை தன் தோழியாகவும் தன் வீட்டு பெண்ணாகவும் கருதி அவளை அக்கறையாக கவனித்துக் கொண்டான்.
நாளடைவில் இருவருக்கும் இடையே ஆத்மார்த்தமான
நட்பு நிலவ, அலுவலகப் பணியோடு, குடும்ப விஷயங்களை பரஸ்பரம் பகிர்ந்து கொள்ள தொடங்கினர்.
மூவரும் உண்டு முடிக்கும் சமயத்தில்,
ப்ரியாவின் கைபேசிக்கு அழைப்பு வர, ஒளிர்
திரையில் தெரிந்த பெயரைக் கண்டதும் , சற்று கனிந்த முகத்தோடு
அவள் காதுக்கு கொடுக்க, மறுமுனையில் ஒரு ஆஸ்திரேலிய பெண்மணி
படபடப்பாக ஏதோ கூற, அதற்கு உம் கூட்டி தன் சம்மதத்தை
தெரிவித்தவள்
"வித்தின் 10 மினிட்ஸ்...
ஐ வில் பி தேர் மேம் ....( பத்து நிமிடத்திற்குள் நான் அங்க இருப்பேன்..)"
என அழைப்பை துண்டித்து விட்டு சிவா, அனு
இருவரையும் பொதுவாக பார்த்து
"டெப்பி(Debbie) கூப்பிட்டு இருக்காங்க ... நம்ம ஃப்ளோர் (30வது
தளம்) கான்ஃபரன்ஸ் ரூம்ல இருக்காங்களாம் ... நான்
அவங்களை மீட் பண்ண போறேன் ..."
உடனே அனு
"ஏய் நாளைக்கு ஹெலன்ஸ் பர்க்(HelensBurgh)
கோவிலுக்கு வருவ இல்ல .... "
"ம்ம்ம்... நிச்சயமா ... நாளைக்கு
கேசரி நெய்வேத்தியம் பண்ணனும்னு வேண்டிக்கிட்டு இருக்கேனே ..."
"பாப்பா, கேசரியா... கேட்கவே நல்லா இருக்கே ... நானும் வரேன் ... காலையில 9:00
மணி ட்ரெயினை புடிச்சு சீக்கிரம் வந்து சேரு.. சரியா .. கேசரிக்காக
நாங்க ரெண்டு பேரும் ரொம்ப நேரம் காத்துக்கிடக்க முடியாது
.."
"உங்களுக்காக செஞ்சு எடுத்துகிட்டு
வர மாதிரி இல்ல பேசற... நான் சாமிக்காகத்தான்
செஞ்சிகிட்டு வரேன்...."
" எப்படியோ கேசரி வந்தா சரிதான்
..."
"பை டா ... நாளைக்கு ஹெலன்ஸ் பர்க்
கோவில்ல மீட் பண்ணலாம் ..." என ப்ரியா விடை பெற, சம்பாஷணையின்
போது குறிப்பிட்ட கோவில் மற்றும் நேரத்தைக் குறித்துக் கொண்டான் வீரா.
அவர்களது உரையாடல்கள் இன்னும் தொடராதா என
ஆவலோடு கேட்டுக் கொண்டிருந்தவனுக்கு அது
முடிவுக்கு வந்ததும், தன் நாயகி கிளம்பியதும் பிடிக்காமல்
போக, ஒருவித சோர்வோடு தன் மடிக்கணினியை
எடுத்துக்கொண்டு கிளம்ப எண்ணி 32 ஆவது தளத்தின்
கலந்தாய்வு அறைக்கு விரைந்தான் , தன்னவளை நேருக்கு நேர்
சந்திக்கும் தருணம் அமையப்போவது தெரியாமல்.
கலந்தாய்வு அறையை அடைந்தவன்,
நிறுவனத் தலைமையிடம் பணி சம்பந்தமான சில விஷயங்களை பேசிவிட்டு,
தொடர்ந்து இரு தினங்கள் விடுமுறை என்பதால் திங்கட்கிழமை சந்திப்பதாக
சொல்லி விடைபெற்றவன் மின் தூக்கிகாக காத்துக் கொண்டிருந்தான்.
மனநிலை அமைதியற்று இருந்ததால் அந்த இதமான
காலநிலை கூட ஒருவித புழுக்கத்தை தர, கழுத்து
டையை முற்றிலுமாக இறக்கிவிட்டு, அணிந்திருந்த கோட்டை கழற்றி,
தன் இடக்கையால் தோளோடு பற்றும் போது, மின்தூக்கி
திறக்க, உள்ளே இரண்டு ஆஸ்திரேலியா ஆண், ஒரு ஆஸ்திரேலிய பெண் நிற்க , அவனும் உள்ளே
நுழைந்தான்.
மின் தூக்கி முப்பதாவது தளத்தில் நிற்கவும், அவன் எண்ணத்தின் நாயகி, உள்ளே நுழையவும் சரியாக இருக்க, இன்ப அதிர்ச்சியில் உறைந்து போனான் நாயகன்.
ஸ்ரீப்ரியா தன் முதுகில் மாட்டியிருந்த
அலுவலக
பையை சரி செய்து கொண்டே கைபேசியிலும்
கவனம் வைத்திருந்ததால் அங்கிருந்த யாரையும் அவள்
கவனிக்கவில்லை.
அடுத்த தளத்தில் மின்தூக்கி நிற்க,
வயதான ஆஸ்திரேலிய பெண்மணி, ஸ்ரீபிரியாவிடம்
இருபதாவது தளத்து பொத்தானை அழுத்துமாறு வேண்டியபடி உள்ளே நுழைய அவருக்காக அதை செய்து விட்டு திரும்பும் போது தான், அவள்
பார்வை, அந்தப் பெண்மணிக்கு பின்புறம் நின்று கொண்டிருந்த வீராவின் மீது எதேச்சையாக பட, அவள்
பார்வையை சந்தித்ததும் அவன் மென் புன்னகை பூக்க, எதிர்பாராத
சந்திப்பால் ஏதோ அதிசயத்தை கண்டது போல்
சிலையாகிப் போனாள் பெண் .
அவளது இதயம் இஞ்சின் வேகத்தில் துடிக்க,
ஒருவித படபடப்போடு தலைக்கவிழ்ந்து கொண்டவள்
தான் காண்பது கனவா அல்லது நினைவா .... என
தனக்குள்ளே கேட்டுக் கொண்டதோடு, சற்று முன்
புன்னகைத்தவனும் தன் தந்தை புகைப்படத்தில் அனுப்பியிருந்தவனும் ஒருவனா ....
ஒருவனே என்னும் பட்சத்தில் கூட ,
அவன் ஜெர்மனியில் இருப்பதாகத்தானே, தந்தை
சொன்னதாக ஞாபகம் ....
இங்கு எப்படி .... ஏன் ...
என ஏகப்பட்ட கேள்விகளோடு அவள் கபடி விளையாடிக் கொண்டிருக்கும் வேளையில், இருபதாவது தளத்தில் மின் தூக்கி நின்றதும், அந்த ஆஸ்திரேலிய மூதாட்டி வெளியேறும் போது , ஃபார்மல் உடையில் இருந்த ஒரு ஆஸ்திரேலிய இளைஞன்,
" ஹாய் ஏவிஆர்,
The meeting was really Amazing.... you rocked man...( அந்த
கலந்தாய்வு ரொம்ப அற்புதமா இருந்தது .... சும்மா அசத்திட்டீங்க ...)" என
வீராவை பார்த்து பேசிக்கொண்டே மின்
தூக்கிக்குள் நுழைந்தான்.
அந்த புதியவன் விளித்தது வித்தியாசமாக தெரிய
,
அவர்களுக்கிடையே ஆன பேச்சினை செவிமடுக்கலானாள்.
ஏதோ அந்த புதியவன்
பேசிக்கொண்டே செல்ல, அதற்கு மென்மையாக அதே
சமயத்தில் ஆளுமையாக வீராவும் பதிலளிக்க,
வாய்ஸ் நல்லா தான் இருக்கு ... கம்பீரமாவும்
இருக்கு....
என அவள் எண்ணிக் கொண்டிருக்கும் போது,
அந்த புதியவன் மீண்டும் வீராவை ஏவிஆர் என்ற பேச்சு தோரணையில் அழைக்க,
ஏவிஆர் ன்னா... என தனக்குள்ளே கேட்டுக்
கொண்டவளுக்கு, அதிவீரராம பாண்டியனின் பெயர் சுருக்கம்
என உடனே புரிய வர,
அப்ப அவங்க தான் இவங்க ....
என மனதோடு பேசிக்கொண்டே,
தலை நிமிர்ந்து அவனைப் பார்த்த மாத்திரத்தில், அவளையே பார்த்துக் கொண்டிருந்தவன் லேசாக புன்னகைத்த படி தன் இரு
புருவங்களை உயர்த்தி பார்வையால் என்ன என்பது போல் வினவ,
அவனின் நேரடி தாக்குதலில் நிலைகுலைந்தவள், உடனே தாமரையாய் தலை குனிந்து கொண்டாள்.
அவனை அறிந்து கொண்டு விட்டாள் என்பதை அவளது செய்கைகள், செவ்வனே பறைசாற்றியதோடு, அவள் முகத்தில் காணப்பட்ட நாணம், அவளது சம்மதத்தை மறைமுகமாக தெரிவிக்க, மனம் குளிர்ந்து போனான் அந்த மன்னவன்.
மின்தூக்கி தரையை தட்டியது தான் தாமதம்
விட்டால் போதும் என, வேகம் நடையிட்டு வெளியேறி விருவிருவென
அலுவலக முகப்பை கடந்தவள் , ரயில் நிலையத்தை அடைய
எண்ணி சாலையைக் கடந்து, சப்வேவிற்குள் நுழைவதற்கு முன், தன்னவன் கிளம்பி
விட்டானா என தெரிந்து கொள்ள, திரும்பிப் பார்க்க,
தோளில் இருந்த கோட், இடக்கைக்கு மாறியிருக்க,
தூணுக்கு முட்டுக் கொடுப்பது போல் கம்பீரமாக தூணருகே நின்றுக்கொண்டு
அவளையே பார்த்துக் கொண்டிருந்தான்.
சற்றும் எதிர்பார்க்காத அந்த சந்திப்பு
அவளுக்கு வெட்கத்தோடு புன்னகையை கொடுக்க, அவனைப்
பார்த்துக் கொண்டே பின்னோக்கி நகர்ந்தவளின் கால் லேசாக இடற,
"ஏய் விழுந்துட போற ... பார்த்து
போ.." என்றான் தன்னை மறந்து பெரும் குரல் எடுத்து .
புன்னகைத்தபடி தலையை இடவலமாக ஆட்டிவிட்டு, அங்கிருந்து நகர்ந்தாள்.
ரயிலில் பயணித்த ஒரு மணி நேரமும்,
அவனைப் பற்றிய சிந்தனைகளே மனம் முழுவதும் வளம் வந்தன.
Sub-urb எனப்படும், நகரத்தை தாண்டிய பகுதியில் மூன்று படுக்கையறைகள் கொண்ட இல்லத்தில்,
கேரளா மற்றும் மத்திய பிரதேசத்தை சார்ந்த இரண்டு பெண்களோடு தங்கி
இருந்தாள்.
அந்த இரு பெண்களும் ஒரே வங்கியில்
பணிபுரிகிறார்கள். வார இறுதி என்பதால் சற்று நேரம் அளவளாவி விட்டு,
நேரம் கடந்து வீடு திரும்புவது வழக்கம்
என்பதால், அந்த இல்லம் வெறிச்சோடி இருக்க, தன் கை சாவியை பயன்படுத்தி வீட்டிற்குள் நுழைந்தவள், அப்படியே கூடத்தில் இருந்த சோபாவில் சரிந்து படுத்தாள்.
பசி அறவே இல்லை ...
புதுவிதமான உணர்வில் சிக்கித் தவித்தவள்,
அலுவலகத்தில் நடந்த சந்திப்பை யாரிடமாவது பகிரலாமா என்று நினைக்கும்
போதே, அவளது தந்தையிடம் இருந்து அழைப்பு வந்தது.
வழக்கமான நலம் விசாரிப்புகளாகவே இருக்க,
ஏனோ அவரிடம் மனம் திறக்க மனம் இல்லாமல் இயல்பாகப் பேசி அழைப்பை
துண்டித்தாள்.
கூடையில் இருந்த இரண்டு வாழைப் பழங்களை
உண்டு விட்டு, படுத்தவளுக்கு உறக்கம் பிடிபடவில்லை.
நாளையும் மறுநாளும் விடுமுறை என்பதால், திங்கட்கிழமை
தான் அவனை சந்திக்க முடியும் .... என்றெண்ணி பெருமூச்சு விட்டவள் ...
திங்கட்கிழமை சந்திக்கும் வாய்ப்பு அமையுமா
....?
என்று தன்னுள்ளே புலம்பிக்
கொண்டிருந்தவளுக்கு தெரியாது, மறுநாளே அவனை
சந்திக்கப் போவது.
ஸ்ரீ ராமம் வருவார்கள் ....
Comments
Post a Comment