ஸ்ரீ- ராமம் - 6

அத்தியாயம் 6
 

 மனையாள் வீட்டை விட்டுச் சென்று கிட்டத்தட்ட மூன்று மாதங்கள் ஆகப் போகின்ற நிலையில்தற்போது தான் அவளது உடைகள்  இருக்கும் மர அலமாரியை திறந்து பார்த்தான்.

 

இத்தனை நாட்களாக தன்னவள் இல்லாத இல்லத்தில் இருக்க பிடிக்காமல்அலுவலகத்தில் இருந்து  நேரம் கடந்தே வீடு திரும்பி இருந்தான்.

 

அவளை மறக்க  அவள்  சம்பந்தப்பட்ட விஷயங்களில் இருந்து  தள்ளி நின்றிருந்தவனுக்கு, அன்று ஏனோ மனையாளின் பிரத்தியேக வாசத்திற்காக மனம் ஏங்க, அவள் பயன்படுத்தி விட்டு சென்ற ஆடைகள் ஏதாவது கிடைக்குமாஎன்ற எண்ணத்தில் அலமாரியை ஆராய்ந்த போதுகடந்த மூன்று ஆண்டுகளில் பண்டிகை மற்றும் குடும்ப விசேஷங்களுக்காக அவன் எடுத்துக் கொடுத்திருந்த பட்டு புடவைகள் அனைத்தையும் விட்டு சென்றிருந்தாள் என்பதை  அறிந்தவனுக்குகனல் போல் கோபம் தகிக்க தொடங்கியது.

 

அவள் அன்றாடம் பயன்படுத்திய சாதாரண புடவைகள் மற்றும் சுடிதார்கள்அவள் வீட்டிலிருந்து  கொண்டு வந்திருந்த ஆடைகள்  அனைத்தையும் கொண்டு சென்றதோடு, வீட்டு லாக்கரில் மாங்கல்யத்துடன் கூடிய ஏழு பவுன் தங்கச்தாலி சரடு மற்றும் அவன் வாங்கித் தந்திருந்த முத்து மற்றும் மரகத கற்கள் பதித்த  நகை செட்டுகளை விட்டு சென்றதும் தெரியவர கொந்தளித்துப் போய்விட்டான் அவளது கோமகன்.

 

" நான் கட்டின தாலி, நகைங்கநான் வாங்கி கொடுத்த புடவைங்க எல்லாத்தையும் விட்டுட்டு போயிட்ட... நான் கொடுத்த குழந்தையையும் விட்டுட்டு போக வேண்டியது தானடி ... அதை மட்டும் ஏன் உன் கூடவே கொண்டுகிட்டு போன .... " என வாய் விட்டே புலம்பியவனுக்கு கழுத்து எலும்புகள் தெரிய, கழுத்தில் வெறும்  மஞ்சள் கயிறு மின்னநீதிமன்றத்தில் கலங்கியபடி அவள் காட்சியளித்தது நிழற்படமாய் வந்து போக,

 

" அப்படி உனக்கு என் மேல என்ன டி கோபம் .... கழுத்து சங்கிலியை அடமானம் வச்சு என்கிட்ட இருந்து விவாகரத்து வாங்க வேண்டிய அவசியம் என்ன.... பெரிய மைசூர் மகாராஜா குடும்பத்து இளவரசி ... ஆலிமணி வேண்டாம்னு வேற , கேச ஃபைல் பண்ணி வச்சிருக்க ...  கையில ஒரு வயசு குழந்தையை வச்சுக்கிட்டுஅதுக்கும் உனக்கும் சேர்த்து இப்ப ஓடி உழைக்க போறியா ... நான் ஓடி ஓடி சம்பாதிக்கிறதே உங்க ரெண்டு பேருக்காக தான்னு உனக்கு தெரியாதா ... சரி ஏதோ பெரிய பிரச்சனை நீ வீட்டை விட்டு வெளியே போயிட்ட ... ஓகே ... ஆனா எனக்கு ஒரு போன் பண்ணியாவது சொல்லி இருக்கணும் இல்லையா .... நான் அவ்ளோ உனக்கு வேண்டாதவன் ஆயிட்டேனா... 

 

உனக்கு பிரச்சனைனா  நான் கண்டுக்கவே மாட்டேன்னு முடிவே பண்ணிட்டியா....  நீ என்னை புரிஞ்சுக்கவே இல்லயா லஷ்மி ..." 

 

என கண்களில் நீர் திரையிட  வாய் விட்டே புலம்பியவனிடம் அவன்  மனசாட்சி

 

புரிந்து கொள்ள, பேசி மகிழ, ஏன் சண்டையிட கூட நீ அவளுக்காக நேரம் ஒதுக்கினாயா .... என்ற கேள்வியை முன் வைக்கஅவன் மனம் கொஞ்சம் கொஞ்சமாக சிந்திக்கத் தொடங்கியது. 

 

மனையாளோடு கழித்த சொற்ப தருணங்களில்  கொஞ்சல், ஊடல், கூடல் போன்று நினைவுபடுத்தி கொண்டாடும் நிகழ்வுகள் ஏதோ ஒன்றோ ரெண்டோ

நிழற்படமாய் தோன்றி மறைய, அதற்கான காரணங்களை அவன்  தேட முயலும் பொழுது கிடைத்த விடை தான் அவனது தாய் மற்றும் தங்கை.

 

சுவற்றில் தன் மனையாள் மற்றும் குழந்தையை பின்புறமாக அணைத்துவாறு அவன் இருந்த புகைப்படம் கண்ணில் பட , அதில் தன் குழந்தையின்  முகத்தை  வருடி கண்களில் கண்ணீர் வழிய ரசித்துப் பார்த்தவன் ,

 

" என்னை மாதிரியே இருக்கடா ...  சின்ன வயசுல நான் இப்படி  தான் இருப்பேன்.... நீ இன்னும் அப்பாவை மறக்கல இல்ல.... கூடிய சீக்கிரம் நீ அப்பா கிட்ட வந்துடுவ... எனக்கு நீ வேணும்டா செல்லம்..."  என்றான் கமரிய குரலில் .

 

பெரும் நிறுவனத்தில் தலைமை பதவியில் இருப்பதால் பெரும்பாலும் அவனுக்கு அலுவலகப் பணிச்சுமை மிக அதிகம். அடிக்கடி வெளிநாட்டு பயணங்கள் வேறு.   மாதத்தில் 10 நாட்கள் சேர்ந்தார் போல்  வீட்டில் தங்கினாலே  பெரிய விஷயம். 

 

அப்படி அவன் வீட்டில் இருக்கும் தினங்களில்  காலை ஒன்பது மணிக்கு அலுவலகம் சென்றால்  வீடு திரும்ப இரவு  ஒன்பதாகிவிடும்.

 

 களைத்து வருபவனுக்கு சுட சுட உணவு பரிமாறிவிட்டு உடன் அமர்ந்து உண்ணுவதென்னவோ அவனது மனையாள் லட்சுமி தான் .

 

ஆனால் அவன் உண்டு முடித்ததும்கற்பகம் அவனை தன் அறைக்கு அழைத்துச் சென்று ஏதேதோ பேச ஆரம்பித்து விடுவார்.  உடன் அவன் தங்கை அருணா இருந்தால் கேட்கவே வேண்டாம்தன் மாமியார் வீட்டு புராணத்தை  அவள் பாட ஆரம்பித்து விடுவாள்.

 

கூடவே அவளது இரண்டு குழந்தைகள், அவனது தோளை கட்டிக்கொண்டு விளையாடி மகிழும். இந்த அரட்டை அரங்கம் முடிந்து அவன் தன் அறைக்கு திரும்ப  இரவு 11 ஆகிவிடும்.

 

அதோடு கூட அன்றைய அத்தியாயம் முடியாது.  அவன் அறைக்கு வந்து அடுத்த பதினைந்தாவது நிமிடத்தில் கதவு தட்டப்படும் ....

 

மூட்டு வலி என்பார் .... மூச்சுத் திணறல் என்பார் .... குழந்தைகளுக்கு உடம்பு சரியில்லை மருத்துவர் எழுதிக் கொடுத்த மருந்தை வாங்கி வர வேண்டும் என்பார் ....

 

இந்த நாடகங்கள் எல்லாம் முடிந்து, அவன் உறங்க வரும் பொழுதுஅவன் மனையாள் பாதி உறக்கத்தில் இருப்பாள்.

 

கற்பகத்தின் தனித்திறமை என்னவென்றால்ஒரே மாதிரியான நிகழ்வுகளை தினமும் நிகழ்த்த மாட்டார்.  ஏனென்றால் என்றாவது ஒரு நாள் மைந்தன் தன்னை இனம் காண கூடும்  என்பதற்காகவே தினமும் புதுப்புது பிரச்சனைகளை உருவாக்கி ஒரே இரவிலேயே அதற்கு தீர்வும் கண்டு, அவனுக்கான  பிரத்தியேக நேரத்தை அழகாக வீணடிப்பார்.

 

ஸ்ரீ லக்ஷ்மிக்கு அதிகாலை 5 மணிக்கே விழிக்கும் பழக்கம் உண்டு என்பதால், அவன் கண்விழிக்கும் பொழுது அவள் படுக்கையில் இருக்க மாட்டாள்.

 

தப்பித்தவறி உடல் உபாதை காரணமாக ஓரிரு நாட்கள் அதிகாலை 6:00 மணி வரை அவள் அயர்ந்து விட்டால், சாதாரணமாக அல்ல ஓங்கார குரல் கொண்டு  கதவைத் தட்டி எழுப்பி அதகளப்படுத்தி விடுவார்  கற்பகம். 

 

ஏழு மணி வரை உறங்கும் கணவனின் உறக்கம் கெடுவதால்கற்பகத்திற்கு அப்படி ஒரு வாய்ப்பை அளிக்காமல், 99 சதவீதம் 5 மணிக்கே  எழுந்து குளித்து முடித்து அடுக்களைக்குச் சென்று விடுவாள் லட்சுமி. 

 

தற்போது அதையெல்லாம் எண்ணிப் பார்த்தவனுக்குஅவன் திருமண வாழ்க்கையின் பெரும் பகுதியை அவன் தாயும் தங்கையும் தான் வாழ்ந்திருக்கிறார்கள் என்ற உண்மை மெதுவாகப் புரிய ஆரம்பித்தது.

 

இதுகுறித்து ஒரு முறை கூட தன் மனையாள் ஏன் குற்றப்பத்திரிக்கை வாசிக்கவில்லை என்று ஆழ்ந்து சிந்திக்கும் போது தான்வீட்டிற்கு வந்த பிறகும் கூட  பெரும்பாலான நேரங்களில் மடிக்கணினி மற்றும் கைபேசி சகிதமாக வெளிநாடு மற்றும்  உள்நாட்டு அலுவலக  ஊழியர்களுடன்  இணைய கலந்தாய்வில் நேரம் காலம் தெரியாமல் அவன் ஈடுபட்டது நினைவுக்கு வரஐயோ என்று தலையைப் பற்றிக் கொண்டான் ஆற்றாமையோடு.

 

அவன் வாழ்க்கையின்  பாதி நேரம் அலுவலகம், மீதி நேரம் அன்னையால் சூறையாடப்பட்டிருக்கிறது என்பதை வெகு தாமதமாக உணர்ந்து கொண்டவனுக்குதான் எவ்வளவு அழகாக ஏமாற்றப்பட்டு இருக்கிறோம் என்ற சுய இரக்கத்தோடு கோபமும் துளிர்த்தது.

 

இதையெல்லாம் புரிந்துகொள்ள அவனுக்கு இப்படி ஒரு  தனிமை தேவைப்பட்டு இருக்கிறது. 

 

இந்த தனிமையை கூட அவனாக உருவாக்கிக் கொள்ளவில்லை நீதிமன்றத்தில் தனது விவாகரத்து வழக்கு நடைபெறுவதால், அயல் நாட்டு பயணங்களை ஒத்தி வைப்பதாக தனது தலைமை அதிகாரி மிஸ்ராவிடம்  அவன் தெரிவித்த போது

 

" ப்ரொபஷனல் லைப் விட ஃபேமிலி லைப் ரொம்ப முக்கியம் சரண். ஃபேமிலி லைப் சரியில்லன்னா ப்ரொபஷனல் லைஃப்ல ப்ரோடக்டிவிட்டி இருக்காது, நீங்க என்ன முட்டி மோதினாலும் ரெண்டு மணி நேரத்துல முடிக்க வேண்டிய வேலையை  இரண்டு நாள் எடுத்துக்குவீங்க .... அது உடம்பையும் மனசையும் ரொம்ப பாதிக்கும் ... அதனால கொஞ்ச நாள் இந்த ஆன்சைட் கிளைன்ட் விசிட்ட தள்ளி வச்சிட்டுஉங்க மனைவியை கூப்பிட்டு பேசிப் பிரச்சினையை முடிக்க பாருங்க..." என அவர்  அறிவுறுத்தியதால், தற்போது இந்த தனிமை கிடைத்திருக்கிறது.

  

இப்போதுதான் தனிமையின் வெறுமையும்அது தரும் மன இறுக்கத்தையும் படிப்படியாக  உணர்ந்ததோடு மனையாளின் அருகாமைக்காக மனம் ஏங்கஇப்படித்தானே என் கண்மணியும்  எனக்காக ஏங்கி இருப்பாள் ... என்ற எண்ணம் தோன்ற ஆரம்பித்ததுமே நான் அவளுக்காக நேரம் ஒதுக்கவில்லை என்பதை தாண்டிவேறு எங்கு நான் கணவனாக அவளுக்கு நம்பிக்கை தரவில்லை என்ற ஆராய்ச்சியில் ஈடுபட்டவனுக்குஅந்த குறிப்பிட்ட நிகழ்வு மனக்கண் முன் விரிய, மனம் நொந்து போனான் அவள்  மன்னவன். 

 

              ------------------------------

 

 

மெல்போர்ன் நகரத்தில் , தனக்கென கொடுக்கப்பட்ட சர்வீஸ் பேஸ்டு அபார்ட்மெண்ட்ல் பீட்டர் இங்கிலாடின் சிமெண்ட் நிற ஃபார்மல் பிலேசரை அணிந்து கொண்டுசிகை அலங்காரம் முடித்து, சீட்டியடித்துக் கொண்டே துள்ளல் நடையில்  மின் தூக்கியில் பயணித்து  அந்த 20  மாடி கட்டிடத்தின் லாபியை அடைந்தவன் அங்கு  தனக்காக காத்துக் கொண்டிருந்த நண்பனை சந்தித்து இயல்பான நல விசாரிப்புக்கு பிறகு  அவனுடன் காரில் ஏறி அலுவலகம் நோக்கி பயணப்பட்டான். 

 

40 மாடிக்கொண்ட நவீன வசதியோடு காணப்பட்ட அந்த நிறுவனத்தில்  38-வது மாடியில் அவனுக்காக ஒரு குழு காத்துக்கொண்டிருந்தது.

 

" வெல்கம் மிஸ்டர் ஏ.வி.ஆர் ..." என்று அந்த நிறுவனத்தின் தலைமை கைகுலுக்கி அவனை வரவேற்றதும்  கிட்டத்தட்ட 10 பேர் கொண்ட குழுவோடு திட்ட வரைவுக்கான நிதி நிர்ணைய கடைசி கலந்தாய்வு தொடங்கியது.

 

தன் நிறுவனம் குறிப்பிட்டு இருந்த 300 மில்லியனில் திட்ட வரைவை பேசி முடித்து  அதனை கூடிய விரைவில் தொடங்குவதற்கான தேதியையும் குறிப்பிட்டு முடிக்கும் போது நேரம்   மதிய உணவு இடைவேளையை நெருங்கியிருந்தது.

 

அவர்களோடு அளவளாவிய படி மதிய உணவை உண்டு முடித்தவனின் மனது

 

ஐயோ ...இந்த வாரம் முடிய இன்னும் நாலு நாள் இருக்கே ... எப்ப நான் சிட்னி போறது... எப்ப என் ஆள பார்க்கிறது ... 

புலம்பிக் கொண்டிருந்தாலும் , அதனைத் துளிகூட வெளிக்காட்டாமல்,  தான் ஆற்ற வேண்டிய  கடமைகளை செவ்வனே முடித்து அந்த நாளை நெட்டி தள்ளினான். 

 

தொடங்கப் போகும் திட்ட வரைவுக்கான விபரங்களை திரட்டும் பணி அந்த வாரத்தில்  நடந்து முடியஆஸ்திரேலியாவில் உள்ள நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தின் தலைநகரான சிட்னியை ஒரு அதிகாலை பொழுதில் வந்தடைந்தான்

 

300 மில்லியன்  ஏன் 500 மில்லியன் திட்ட வரைவுக்கான கலந்தாய்வில் கூட அசட்டையாக  கலந்துகொண்டு  தன் பேச்சு மற்றும்  புத்திசாலித்தனதால் அதனைத் தட்டிச் செல்பவனுக்குதன் மனம் கவர்ந்தவளோடு பேசுவதில் மட்டும் தயக்கம் இருக்கவே செய்தது.

 

காரணம்  , இருவரும் ஒரே ஸ்தாபனத்தில் ஒரே வாடிக்கையாளர்  நிறுவனத்திடம்(கிளையன்ட்) 

பணி புரிந்தாலும்இருவரது பணித்தகுதிகள் வெவ்வேறு என்பதோடு அவன்   அவளை விட ஏறக்குறைய 10 படிநிலைகளை தாண்டிய பதவி வகிப்பதால்  நிச்சயமாக அலுவலக சம்பந்தமான விஷயங்களைப்  கலந்துரையாட முடியாது என்பதால் வந்த தயக்கம் அது.

 

அலுவலகப் பேச்சு இல்லாமல்  நேரடியாகச் சென்று தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டு பேசலாம் என்றால் எதையாவது சொல்லி தன் நேசத்தை   மறுத்து விடுவாளோஎன்கின்ற நம்பகமற்ற தன்மையும் தயக்கத்தை கொடுத்திருந்தது. 

 

வாடிக்கையாளர் நிறுவனத்திடமிருந்து   திட்ட வரைவுக்கான  வியாபாரத்தை பேசி முடிக்கும்  வியாபாரி அவன். அவளோ 10 படிநிலைக்கு கீழ் அதனை செயலாற்றும் பொறியியல் குழுவில் இருப்பவள்அவளை  சந்திக்க வேண்டும் என்றால் அவனாகத்தான்  தேடிச் சென்று சந்திப்பை ஏற்படுத்திக் கொண்டால் தான் உண்டு. 

 

அப்படி ஒரு சந்திப்பு நிகழுமா ... என்ற கேள்வியோடு,  மங்கிய தேன் நிற ப்ளேசரை, தன் வெள்ளை சட்டையின் மீது அணிந்து கொண்டுகழுத்தில் இருந்த டையை சரி செய்தபடி, நிலைக்கண்ணாடியில் ஒரு முறை பார்த்து திருப்தி அடைந்தவன், தனக்காக காத்துக் கொண்டிருந்த நண்பனின் காரில் ஏறி அழகிய  டார்லிங் ஹார்பரை (Darling harbour) ஒட்டி 35 அடுக்களோடு விண்ணை முட்டுவது போல்  கம்பீரமாக நிமிர்ந்து நின்ற அந்த நிறுவன தலைமையகத்தை  வந்தடைந்தான். 

 

அழகிய காலநிலையில் அருமையாக தோன்றியது அந்த சிட்னி நகரம்.

 

இதே வாடிக்கையாளர் நிறுவனத்திற்காக பலமுறை இந்த நகரத்திற்கு வந்திருக்கிறான்.

 

ஆனால் இந்த முறைஏனோ எப்பொழுதையும் விட அழகாக காட்சியளித்தது அந்த நகரம்.

 

தன்னவள் இந்த 35 அடுக்கு அலுவலகத்தினுள் ஏதோ ஒரு மூலையில்  கணினி முன்பு அமர்ந்து கொண்டிருப்பாள் என்ற எண்ணமேஇறக்கை இல்லாமல்  பறப்பது போன்ற சிந்தனையை விதைக்க, தன் பிரத்யேக ட்ரேட் மார்க் புன்னகையோடு  , தன்னை வரவேற்க வந்தவர்களிடம் கைகுலுக்கி நலம் விசாரித்தபடி 34ஆவது தளத்தில் நடக்கும்  கலந்தாய்வு கூடத்தில் பிரவேசித்தான். 

 

முறையான அலுவலக சடங்குகள் முடிந்ததும் கலந்தாய்வு இனிதே தொடங்கியது.

சற்று காரசாரமான விவாதங்கள் தொடங்கிய நிலையிலும்குரலை உயர்த்தாமல் மெல்லிய புன்னகையில்  தங்கள் நிறுவனத்தின் சட்ட திட்டங்களை பகிர்ந்து கொண்டதோடுஅந்த வாடிக்கையாளர் நிறுவனத்திற்கான  திட்ட வரைவை நல்ல விலைக்கு பேசி முடிக்க, மதிய உணவு வேளை கடந்தும், மீண்டும் தொடங்கிய கலந்தாய்வு மாலை 5 மணிக்குத்தான் முடிவுக்கு வந்தது.

 

 

தொடர் பேச்சுகளோடுமடிக்கணினியில் மில்லியன் ட்ரில்லியன் எண்களை மாறி மாறி பார்த்தது தலைவலியை ஏற்படுத்தி இருக்கதேநீர் அருந்த எண்ணி 28 வது தளத்தில் இருக்கும்

கேண்டீனுக்கு சென்றவன் , தனக்கான தேநீர் மற்றும் சிற்றுண்டியை பெற்றுக் கொண்டு சுவரை ஒட்டி இருந்த இருக்கையில் அமர்ந்த மறுநொடி,  அவன் மனதில் மையம் கொண்டிருந்தவள்  ஒரு இந்திய இளைஞன்  மற்றும் ஒரு  இந்திய இளம் பெண்ணோடுபனானா பிரெட் மற்றும் கோல்டு(Cold) காபி சகிதமாக அவன் இருக்கைக்கு இரண்டு இருக்கை தள்ளி அமர்ந்தாள்.

 

ஒரு கணம் இன்ப அதிர்ச்சியில்  உறைந்தவன்அது அவள் தானா என்ற சந்தேகத்தோடு லேசாக கழுத்தைத் திருப்பி கீழ்கண்களால் நோட்டமிடஅவள் பேசிய தமிழிலேயே உறுதியானது அது அவள் தான் என்று.

 

அரவமற்ற  அந்த கேண்டினில் , அவளது அட்சர சுத்தமான தமிழ் அவன் காதுகளை நிறைக்க, அவர்கள் பேசுவதை அமைதியாக செவி மடுக்கலானான்.

 

" பாப்பாஎனக்கு நாளைக்கு ஆர்கிடெக்சரல் டிசைன் டிஸ்கஷன் மீட்டிங் இருக்கு ... போன வாரம் மீட்டிங்ல நீ பேசின மாதிரி  என்னால இங்கிலீஷ்ல  திக்கித் தெணறாம பேச முடியுமான்னு வெசனா இருக்கு ..."  என்றான் அந்த தமிழக இளைஞன்  சிவா அதிவீரராம பாண்டியனின் மனம் கவர்ந்தளிடம். 

 

சிவாமதுரை மைந்தன்.  

மதுரை மண்ணுக்கே உரிய வெள்ளந்தி தனமும்வீரமும் அவனிடம் இயற்கையாகவே மலிந்து இருக்கும்.  வீராவின் நாயகி பணி புரியும் அதே திட்ட விரைவில், உடன் பணி புரிகிறான். 

 

 

" சிவா,   இங்கிலீஷ்ங்கறது மொழிடா ... அறிவு இல்ல உன்ன மாதிரி யாராலயும்  கோடு(Code) அடிக்க  முடியாது ...  நாம என்ன செய்யப் போறோமோஅதை தெளிவா எக்ஸ்பிளைன் பண்ணு அது போதும் ... தைரியங்கிறது  பயப்படாதது மாதிரி நடிக்கிறதுன்னு ஆண்டவரே சொல்லி இருக்காரே...

போன வாரம் மீட்டிங் அப்ப, எனக்கு உள்ளுக்குள்ள பயங்கர  டர்ரு தெரியுமா ... யாராலயாவது கண்டுபிடிக்க முடிஞ்சுதா... இல்லையே ... அதான் ப்ரியா..." என தோள் குலுக்கியவளை பார்த்துஉடன் வந்திருந்த தமிழக இளம் பெண் அனு 

 

" இங்க அம்புட்டு பேர் கிட்டயும் அப்பளம் பொரிக்கிற  ஆனா  மிஸ்டர்  அம்மையப்பனை பார்த்தா மட்டும் அப்ஸ்காண்ட் ஆகறயே..." என சிரித்தபடி வாரினாள்.

 

அனு திருநெல்வேலியை சார்ந்தவள்.

வேறு திட்ட வரைவில் பணிபுரிந்தாலும், ஒரே மாநிலத்தை சேர்ந்தவர்கள் என்பதால் ப்ரியா மற்றும் சிவா உடன் நட்பை ஏற்படுத்திக் கொண்டிருந்தாள். 

 

" சரியா சொன்ன அனு ... இவளோட ஆட்டம் எல்லாம் ஆபீஸ்ல மட்டும் தான் ... அவங்க அப்பான்னா  அஷ்டநாடியும் அடங்கிடுவா ..." என்று சிவா ஒத்து பேசியதும் ப்ரியாவின் முகம் சோகத்தில் ஆழ்ந்தது. 

 

" ஏய் என்ன ஆச்சு ..." என்றாள் அனு வாஞ்சையாக. 

 

" மிஸ்டர் அம்மையப்பனுக்கு ஒரு ரமேஷ் சுரேஷ் கூடவா கிடைக்கல ...  எனக்கு மாப்பிள்ளை பார்த்து இருக்கிறதா டீடைல்ஸ் அனுப்பி இருந்தாரு... அதுல அந்த ஆளோட  பேர் என்ன தெரியுமா .... "

 

" உங்க அப்பா பேரு அம்மையப்பன் மாதிரி அந்த ஆள் பேரு ஆவுடையப்பனா..."  என நக்கல் வழிய அந்த மதுரை மைந்தன் கதைக்க,

 

" உன் ஆள் இளந்திரைகனிமொழி அளவுக்கு பேரு கர்நாட்டகமா இல்லனாலும்கர்நாட்டக்கமா தான் இருக்குது ..." என்றாள் சோகத்தில்.

 

" அப்படி என்ன பேரு ..." ---- என்றாள் அனு ஆர்வமாக. 

 

" அதிவீரராம பாண்டியன் ..."  என ப்ரியா முடித்ததும் ,

 

" வாவ்...  நினைச்சேன் பாப்பாஇப்படித்தான் உங்கப்பா கோத்துடுவாருனு..." என சிவா கலகலவென்று சிரிக்க, முகத்தை மறைத்துக் கொண்டு தலையை குனிந்த படி,

"அதிவீர ராம பாண்டியனுக்கே 

இவ்ளோ  பொங்கறாளே, என் முழு பேரு சடையவர்மன் அதிவீரராம  பாண்டியன்னு  தெரிஞ்சா என்ன பண்ணுவாளோ ...."  என மனதோடு முணுமுணுத்த  வீராவும்  சிரித்துக்கொண்டிருந்தான்.

 

" என் வாழ்க்கையில் என் சர் நேம்(Surname) மார்ட்டனாவே இருக்காது போல இருக்கு ...

இவ்ளோ வருஷமா ஸ்ரீபிரியா அம்மையப்பன் ....

இனிமே ஸ்ரீபிரியா அதிவீர ராம பாண்டியன் ..." என்றவள் பேசிக் கொண்டே செல்லகேட்டுக் கொண்டிருந்த வீராவுக்கு கூடை பூக்கள் தலையில் அள்ளிக் கொட்டியது போல் இருந்தது.

 

" மாப்பிள்ள, எந்த ஊரு பாப்பா ..."

 

" கோயம்புத்தூர் ... நம்ம ஆபீஸ்ல தான் வேலை செய்யறாரு..." என்றாள் ப்ரியா  கூடுதல் தகவலாக .

 

" நம்ம ஆபீஸ்ஸா... எந்த டீம்... எந்த ப்ராஜெக்ட் ...." என அனு அலற,

 

" AVPயா இருக்காரு ... STO டீம்..."

 

" என்னாது .... AVPயா....சூப்பர் பாப்பா .. இரு... நம்ம ஆபீஸ் சைட்ல தேடறேன் ..." என்று தகவலை தேடி எடுத்தவன்,

 

ம்ம்ம்ம்...ஆள் கூட பார்க்க நல்லாதான் இருக்காரு...

 

 

" எங்க காட்டு ..." என கைப்பேசியை  வாங்கிப் பார்த்த அனு,

 

" ஏய்ய்ய்... நல்லாவே இருக்காரு டி... இவருக்கு என்ன குறைச்சல் ... ஆமா இவங்க வீட்ல எத்தனை பேரு ..." என்றாள் வீராவை பற்றி  தகவலை திரட்டும் நோக்கில் .

 

" வீட்ல அம்மா அப்பா அண்ணன் தங்கைனு  பெரிய குடும்பம்...." என்றபடி தன் அலைபேசியில் வாட்ஸ் அப்பில் இருந்த வீராவை பற்றிய தகவல்களை திறந்து

 

"அப்பா பேரு பொன்னம்பலம், டிவிடி கம்பெனியில சேர்மனா இருந்து ரிட்டயர் ஆனவர் ...அம்மா பேரு அகல்யா சொர்ணம்மாள்  ஹவுஸ் வைஃப் ..."  என பார்த்து படித்துக் கொண்டே சென்றவளை சிவா இடை மறைத்து ,

 

" அண்ணன் பேரு ரியாஷ்கான்.... தங்கச்சி பேரு ஸ்ரேயா ரெட்டியா ...

 

" புரியலையே ...ஏன்டா கேக்குற ..."

 

" ம்ம்ம்அப்பா பேரு பொன்னம்பலம், அம்மா பேரு சொர்ணாக்காஅப்ப அண்ணன் பேரு ரியாஷ்கான், தங்கச்சி பேரு ஸ்ரேயா ரெட்டியா தானே இருக்கணும்.... அதானே உலக வழக்கம்  ... பாப்பா , நீ சரியான வில்லன்ங்க கூட்டத்துல போய் சேர போற.. பாத்து உசாரா இருந்துக்கோ .. "


 

என்றதும் அந்த இரண்டு பெண்களோடு வீராவும் வயிற்றைப் பிடித்துக் கொண்டு சிரித்தபடி

 

" என் டோட்டல் குடும்பத்தையும் டேமேஜ் பண்ணி 

அம்புட்டு பேரையும் வில்லன்,  வில்லி  ஆக்கிட்டானே.." என  முணுமுணுத்தான். 

 

" ப்ரியா மாப்பிள்ளை நல்லா இருக்காரு ... இந்த வயசிலேயே AVP வேற...புடிச்சிருந்தா கல்யாணம் பண்ணிக்கோ ..." என அனு அறிவுரை கூற 

 

" புடிக்குதா புடிக்கலையான்னு கேள்வியே கிடையாது ....  அம்மையப்பன் ஆர்டர் போட்டா இந்த அம்மணி செஞ்சு தான் ஆகணும் ..." என்றான் சிவா சிரித்தபடி. 

 

" வேற ஆப்ஷனே இல்லையா ..." -- அனு. 

 

" இருக்கே... ஒரு ஆப்ஷன் இருக்கே..." --- சிவா. 

 

" என்னது அது ..." --- அனு. 

 

" அதான் ஒரே ஆப்ஷன்னு சொன்னேனே ... அதிவீரராம பாண்டியன் தான் .... " என தன் ஒரு ஆள்காட்டி விரலை தூக்கி காட்டியவன்

 

" நமக்கெல்லாம் ஆப்ஷன்னா குறைந்தபட்சம் இரண்டு சாய்சஸ் இருக்கும் .... ப்ரியாவுக்கு ஆப்ஷன்னா அம்மையப்பன் சாய்ஸ் தான் ..." என்றவன் கேன்டீன் கவுண்டரில் இருந்து கையில் கேப்புசீனோவை ஏந்திக்கொண்டு  சற்று தள்ளிப் போடப்பட்டிருந்த இருக்கையில் அமர்ந்த அந்த ஆஸ்திரேலியா இளம்பெண்ணை பார்த்ததும்,

 

" ம்ம்ம்...  நான் கருப்பா இருக்கேன்னு தானேஎன் மாமன் என் கனிமொழியை எனக்கு கட்டி கொடுக்க மாட்டேங்குறான் ... ஒரு நாள் இல்ல ஒரு நாள் இந்த செவத்த புள்ள கேத்தரினை கல்யாணம் கட்டி ஊருக்கு கூட்டிகிட்டு போறேன் பாரு ... அப்ப தெரியும் என் மாமனுக்கு நான் யாருன்னு   ..." என்று சூளுரைத்தவனைப் பார்த்துகலகலவென்று சிரித்த அனு,

 

" டெவலப்மெண்ட் டீம்ல இருக்கிற நீ சம்பந்தமே இல்லாம டெஸ்டிங்ல இருக்குற அவள தேடி தேடி  போய் ரூட்டு விடற  .... ஆனா அந்த புள்ள உன்னை திரும்பி கூட பாக்க மாட்டேங்குதே தலைவா  ..."  என்றவளோடு இணைந்து கொண்டு 

 

" அப்பொழுது தாங்கள் கனிமொழி மீது வைத்திருக்கும் காதல் ..." என நாடக நடையில் ப்ரியா கேட்க,

 

" அதான் ஒரிஜினல் பாப்பா ... இது சும்மா ஜாலிக்காக ... " என அவன் அசடு வழியும் பொழுதுஆல்பர்ட் என்னும் அவர்களது திட்ட விரைவில் பணிபுரியும் ஆஸ்திரேலிய இளைஞன் கையில் கஃபிலத்தேவோடு (Cafelatte)இவர்கள்  மேஜைக்கு  அருகில் இருந்த நாற்காலியை எடுத்து போட்டு அமர்ந்து ப்ரியாவை பார்த்து

" ஆப் கியா கர் ரஹே ஹே..." என்றான் திக்கித் திணறி. 

 

இவன் ஏன் பாப்பா  திடீர்னு இந்தி  பேசி இம்சை பண்றான்  ... எனக்கு இங்கிலீஷே தகராறே ... இவன் எல்லாம் இந்தி  பேசுறத பாத்தா கடுப்பா இருக்குதே..” என சிவா கொலை வெறியோடு சன்னமாக முணுமுணுக்க,

 

" Why are you talking to me in hindi..." ( ஏன் என்னிடம் ஹிந்தியில் பேசுகிறீர்கள்) எனப் புரியாமல்  புன்னகைத்தபடி கேட்டவளை பார்த்து

" I want to marry you..." ( நான் உன்னை கல்யாணம் பண்ணிக்க ஆசைபடுகிறேன்) என்றான் கண்களில் காதலை தேக்கி .

 

 

ஸ்ரீராமம் வருவார்கள் ....

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Comments