அத்தியாயம் 10
ராம்சரண் பயணப்பட்ட ஓரிரு தினங்களுக்கு
பிறகு மாசமாக இருக்கும் மருமகளை காண ரங்கசாமி
, மிகுந்த மகிழ்ச்சியோடு பரிசுப்
பொருட்களுடன் வீடு வந்து சேர்ந்தார்.
ஸ்ரீலக்ஷ்மி தேயிலை தோட்டம்
மற்றும் தொழிற்சாலையின் கணக்கு வழக்குகளை கையில் எடுத்து கிட்டத்தட்ட இரண்டு மாதமே ஆன நிலையில் , அதனை
நேர்த்தியாக கையாண்டு துல்லியமாக கணக்கிட்டு அனுப்பும் நெறிமுறையிலேயே அசந்து போயிருந்த மனிதருக்கு, தன் குலத்தின் அடுத்த
தலைமுறைக்கும் வித்திட்டு விட்டாள் என்ற சர்க்கரை செய்தி கூடுதல் மகிழ்ச்சியை தர வாலிபன் போல் துள்ளி
குதித்து தன் ஆனந்தத்தை பலர் அறிய பறைசாற்றினார்.
ராம்சரண், தன்
மனையாள் தாய்மை அடைந்த செய்தியை கேட்டு
மகிழ்ந்து, அவளை நகை கடைக்கு
அழைத்துச் சென்று ஏதாவது நகையை வாங்கி பரிசளிக்க வேண்டும், அவளுடன் நேரம் செலவழிக்க
வேண்டும் என பலவித எண்ணங்களோடு தான் ஊர் திரும்பி இருந்தான் .
ஆனால் அவன் வீட்டில் நுழைந்த மறுக்கணமே,
அருணா வைத்த பஞ்சாயத்தில் அனைத்தும் பஞ்சாய் பறந்து விட, அவளது பிரச்சினையை ஆட்டி கூட்டி முடிப்பதற்கே இரண்டு நாட்கள் கழிந்து
போனது.
பிறகு மனையாளை மருத்துவமனை அழைத்து
சென்று திரும்பியவனிடம் , கற்பகம் பேசிய
சுடு சொற்கள், தம்பதிகளுக்கு இடையே லேசான மனஸ்தாபத்தை
ஏற்படுத்த அதற்குத் தீர்வு காண்பதற்கு முன்பே அவனுக்கு அடுத்த விமான பயணம் அமைந்து
போனது.
இந்நிலையில் தான் ரங்கசாமி வீட்டின் கூடத்தில் அனைவரின் முன்பாக மிகுந்த உற்சாகத்தில்,
"அம்மா லட்சுமி... இந்த காசு மாலை என் பாட்டி போட்டிருந்தது ... அப்புறம் என் அம்மா போட்டுக்கிட்டு இருந்தாங்க ... இப்ப இத நான் உனக்கு கொடுக்கிறேன் ... " என முடித்தது தான் தாமதம், கற்பகம் மற்றும் அருணாவிற்கு ஏதோ மின்சாரத்தை மிதித்தது போல் , கோபமும் ஆத்திரமும் நரம்பு நாளங்களில் விறுவிறுவென்று ஏற,
"இப்ப வேண்டாம் மாமா .... அப்புறம் வாங்கிக்கிறேன் ... இவ்ளோ பெரிய நகை லாக்கர்ல இருந்தா தான் சேஃப் ..." என லட்சுமி நாசுக்காக மறுத்ததும் தான் முகத்தில் மகிழ்ச்சி ரேகை லேசாக ஓடத் தொடங்க,
"இங்கேயே வீட்டு லாக்கர்ல வச்சிட்டு
போறேன்.... உனக்கு எப்ப வேணுமோ அப்ப போட்டுக்க..." என சொன்னதோடு மட்டுமல்லாமல் அதை ரங்கசாமி செய்தும் முடிக்க, கொண்டிருந்த கோபத்தை வெளிக்காட்ட முடியாமல் மென்று முழுங்கினர் தாயும்
மகளும்.
தொடர்ந்து நான்கு நாட்கள் தங்கி இருந்து
மருமகளிடம் வியாபார சம்பந்தமான விஷயங்கள் சிலவற்றை
பகிர்ந்தவர்,
"ம்மா... நான் ஏஷியன் டீ பிளான்டேஷன்
அசோசியேஷன் மீட் காக டூர் போறேன் .... திரும்பி வர
மூணு மாசம் ஆகும்மா.... வழக்கம் போல எல்லாத்தையும் மேனேஜர் வினோத்தையே பாத்துக்க
சொல்லிட்டேன் .... நீ உடம்பை பாத்துக்க... முடிஞ்சா அவர் செய்தத சூப்பர்வைஸ் பண்ணு
போதும்... வேற ஏதாவது புது பிரச்சனைகள் வந்தா மட்டும்
எனக்கு போன் பண்ணும்மா..."
என்றவரை இன்முகத்தோடு வழி அனுப்பி வைத்தாள்
ஸ்ரீ லக்ஷ்மி .
மனையாளையும் மகளையும் நன்கு அறிந்தவர் என்பதால், நித்திய
சமையலுக்காக ஆட்களை ஏற்பாடு செய்துவிட்டே சென்றிருந்தார்.
அவர் கிளம்பிச் சென்று ஒரு வாரம் வரை
அனைத்தும் சரியாகவே சென்றது .
ஸ்ரீ லட்சுமிக்கு மசக்கை ஆரம்பிக்காததால், சமையலறையில் சமையல்காரர்களை மேற்பார்வை பார்க்க முடிந்ததோடு , தினமும் 10 நிமிடம் பேசும் தன் கணவனிடமும்
நிம்மதியாக உரையாட முடிந்தது.
ஒரு வாரம் கழிந்த பின் லேசாக மசக்கை தன்
வேலையைக் காட்ட ஆரம்பிக்க, படுக்கையை விட்டு எழவே
முடியாமல் தவித்துப் போனாள்.
அடுத்தடுத்து வந்த தினங்களில் மசக்கை அதிகம்
வாட்டியதால் அடுப்படிக்கு செல்ல முடியாத நிலை
ஏற்பட்டதும், ஸ்ரீ லக்ஷ்மி அந்த
வீட்டிற்கு வேண்டாதவளாகிப் போனாள்.
பால் காய்ச்சும் வாசனை, எண்ணெய் தாளிப்பு போன்ற சிறு சமாச்சாரங்கள் கூட
அவளை அளவுக்கு அதிகமாக வாட்ட, அடுப்படிக்குச் செல்வதை
அடியோடு தவிர்த்தாள்.
எதையுமே சாப்பிடப் பிடிக்கவில்லை .. எதைப்
பார்த்தாலும் குமட்டிக் கொண்டு வர, மாத்திரைக்கும்
மசக்கை கட்டுப்படாமல் தண்ணீர் கூட வயிற்றில் நிற்காமல்,
வாந்தி வந்த வண்ணம் இருக்க, படுக்கையை
விட்டு எழ முடியாதவளிடம் தாயும் மகளும் தங்கள் வேலையைக்
காட்டத் தொடங்கினர்.
முதல் வேலையாக வீட்டு சமையல்காரர்களிடம்
ஆயிரம் குறைகளை கண்டுபிடித்து சண்டையிட்டு அவர்களை
வேலையை விட்டு நிறுத்தினர்.
தங்கள் இருவருக்கும் தேவையானதை மட்டும்
Swiggyயில் வரவழைத்து உண்டனர் .. வேறு சில சந்தர்ப்பங்களில்
உணவகத்திற்கே சென்று கூட உண்டு விட்டும் வந்தனர்.
வீட்டில் சமையல்காரர்கள் இருக்கும் வரை ஒரு
இட்லி,
அரை இட்லி , அரை தோசை என கொஞ்சமேனும் அவள்
மருந்து உட்கொள்வதற்காக உண்டு கொண்டிருந்தாள்.
இப்போது அதற்கும் வகையற்று போக வெறும் வயிற்றில் மாத்திரை சாப்பிட முடியாமல் திணறி போனாள்.
கற்பகம் எதையும் கண்டு கொள்வதாகவே இல்லை.
மகளோடு
உண்பதும் உறங்குவதும் ஊரை சுற்றுவதுமாய் ஆனந்தமாக பொழுதை கழித்தார்.
ஒரு கட்டத்தில் ஸ்ரீ லட்சுமியும் Swiggyல் தனக்கு தேவையானதை சாப்பிட வரவழைக்க, உணவு டப்பாக்களின் மூடிகள் மற்றும்
பொட்டலங்களை அவிழ்க்கும் பொழுதே, மசாலா நெடி தாங்காமல்
குமட்டிக் கொண்டு வர, அந்த முயற்சியையும் கைவிட்டாள்.
கடைசியாக வேறு வழி இல்லாமல் தன் தாயை
அழைத்து அவள் நிலவரத்தை சொல்ல, ருக்மணி பள்ளி
விடுமுறை தினங்களில் மகளுக்காக தன் கைப்பக்குவத்தில் அதிகம் மசாலா வகையறாக்கள்
சேர்க்காமல் அவளுக்கு பிடித்தமான உணவுகளை செய்து
கொண்டு வந்து கொடுத்து உண்ணச் செய்துவிட்டு சென்றார்.
அது பொறுக்காமல்,
கற்பகம் தன் ஆட்டத்தை வேறு மாதிரி ஆட
தொடங்கினார்.
வா என்று ருக்மணியை முதல் நாள் அழைத்ததோடு
சரி.
பிறகு அழியா விருந்தாளியாக தான் ருக்மணி அந்த வீட்டிற்கு வந்து போய்க்
கொண்டிருந்தார்.
ருக்மணி வந்துவிட்டாலே போதும், தன் பெண் அருணாவிடம் ஜாடை ஜாடையாக ஏக வசனத்தில் ஓங்கார குரலில் வாய்க்கு
வந்தபடி யாரையோ வசை பாடி தீர்த்தார் கற்பகம்.
கேட்பவரின் காதுகளில் நரகலை குழைத்து
ஊற்றியது போல் அவ்வளவு நாராசமாக இருக்கும் .
பிச்சைக்கார கூட்டம் .... தின்னும் கூலிகள்
.... பஞ்ச பரதேசிகள் .... ஒட்டுண்ணிகள் ... என்பன போன்ற
வார்த்தைகளுக்கு பஞ்சம் இருக்காது.
ஒரு கட்டத்தில் கூடத்தில் உணவு மேஜையில் உண்டால் தானே,
இம்மாதிரியான சொற்களைக் கேட்க நேரிடுகிறது எனக் கருதி தன் படுக்கை
அறையிலேயே உணவினை உட்கொள்ள தொடங்கினாள் லட்சுமி.
ஏற்கனவே மசக்கை வாட்டிய நிலையில் ,
இந்த கூப்பாடுகளுக்கும் பொருமலுக்கும் மத்தியில் நான்கு உருண்டை
உணவைக் கூட உட்கொள்ள முடியாமல் தவிக்கும் மகளைப்
பார்த்து கண்ணீர் வடித்தார் ருக்மணி.
ஆசை ஆசையாக செய்து வந்த உணவில்,
பாதியைக் கூட உண்ணாமல் அப்படியே
திருப்பி அனுப்பிய நாட்களும் இருந்தன ..
"நாங்க எல்லாம் முன்ன பின்ன சோத்தையே
பார்த்ததில்லையா .... அது என்ன பொண்ணுக்கு சமைச்சு கொண்டு வந்து எங்களுக்கு தெரியாம அவ ரூம்ல கொண்டு போய்
கொடுக்கிறது..." என அதையும் குற்றம் சாட்டி வசைப்பாடி தள்ளிவிட்டார் கற்பகம்.
இப்படி தன்னால் தன் தாய்க்கு அவமானம்
ஏற்படுகிறதே என்றெண்ணி உடலில் ஓரளவிற்கு தெம்பை கூட்டி
சில தினங்கள் தனக்குத் தேவையானதை தானே அவள்
சமைக்க , தாயும் மகளும் ஒராயிரம்
குற்றம் குறைகளை அதிலும் கண்டுபிடித்து அவளை வறுத்தெடுத்தோடு
செய்து வைத்த அனைத்தையும் தின்றும் தீர்த்தனர்.
ருக்மணி, ஸ்ரீ
லட்சுமியின் தங்கை ராமலட்சுமியும் விடுமுறை தினங்களில்
மட்டும் உணவினை கொண்டு போய் கொடுக்க , மற்ற தினங்களில் தியாகராஜனை கொண்டு போய் கொடுக்க சொல்லி மன்றாடினார் ருக்மணி.
ஆனால் மனிதர் இம்மி அளவு வீட்டை விட்டு
நகராமல்,
"நான் சாப்பாடு கொடுக்க போனா அந்த
அம்மா ஜாடை ஜாடையா திட்டும்... எனக்கு எதுக்கு இந்த
தேவையில்லாத வேலை .. " என வழக்கம் போல் எந்த
சுமையையும் தூக்கிச் சுமக்காமல், தலை
தப்பித்துக்கொண்டதோடு
"பொண்ணுக்கு கல்யாணம் பண்ணி வேலில
போற ஓணானை வேட்டிக்குள்ள விட்டுட்ட...
இப்ப குத்துதே குடையுதேன்னா என்ன
அர்த்தம் ...." என மனசாட்சியே இல்லாமல் பேச,
"தினக்கூலி காரன் கூட பெத்த
பொண்ணுக்கு கல்யாணம் பண்ணி பாக்கணும்னு ஆசைப்படுவாங்க.... இப்படி பெத்த பொண்ணுங்கள பாரமா நெனச்சு அவங்கள சம்பாதிச்சு கொட்டும் எந்திரமா
பார்க்க மாட்டான் ...வெட்கக்கேடு ...இதுல பேங்க்ல கிளர்க்கா வேற இருந்து
ரிட்டையர் ஆகி இருக்கீங்க ..." என ருக்மணி பதிலுக்குப்
பொங்குவார்.
தப்பை சரியாக செய்தால் தப்பில்லை என்பது
போல்,
அடுத்தவர்கள் அஞ்சும் படி ஆக்ரோஷத்தை காட்டும் கற்பகமும்
அருணாவும் திறம்பட கையாண்ட ஒரு வித்தை என்னவென்றால் ஸ்ரீ லட்சுமியையோ அவளது தாயையோ நேரடியாக குறிப்பிட்டு ஒரு வார்த்தையும்
சொல்லாதது தான்.
அதே போல் தினமும் தங்கள் கதாகாலட்சேபத்தை
செய்யவில்லை ... வெகு சில நாட்கள் வீட்டில் தான் இருக்கிறார்களா.... என
கண்டுபிடிக்க முடியாத அளவிற்கு அடக்கியும் வாசித்தார்கள்...
அத்தி பூத்தார் போல் என்றாவது ஒருநாள்
தாயும் மகளும் வெகு இயல்பாக ஸ்ரீ லக்ஷ்மியிடம் மட்டும் ஓரிரு வார்த்தை நயமாக
பேசிவிட்டு ருக்மணியை புறக்கணித்த தருணங்களும் அரங்கேறி
இருந்தன ...
சரியாகச் சொன்னால் அவர்களது அடுத்த கட்ட
நடவடிக்கைகளை யாராலும் கணிக்க முடியாதபடி காய் நகரத்தினார்கள் என்று சொன்னால்
பொருத்தமாக இருக்கும் ...
அந்நிய மண்ணில்
ராம்சரணுக்கு, பணிச்சுமை அதிகம். நேர
மாற்றம் வேறு.
இதனால் ஒரு நாளைக்கு பத்து நிமிட அலைபேசி
அழைப்பே
பெரிய விஷயமாய் மாறி இருக்க அப்படி
வரும் அழைப்பிற்காக தவமாய் தவமிருக்கலானாள் ஸ்ரீ லக்ஷ்மி.
அவன் குரலைக் கேட்டாலே போதும் ....
ஏதோ ஒரு வித சிலிர்ப்பு,
ஆனந்தம், அழுகை, ஏக்கம், ஆற்றாமை என அனைத்தும் போட்டி போட்டுக்
கொண்டு அவள் தொண்டையை கனக்கச் செய்யும்.
காரணம் தெரியாது அவன் கரங்களைப் பற்றிக்
கொண்டு தோள் சாய்ந்தாலே போதும் என அவள் மனம் தேடும்....
அவளை சுற்றி நடக்கும் குடும்ப
அரசியலோடு, கர்ப்ப கால உணர்வு மாற்றங்களும்
கலந்து கொண்டு அவளது உடலயும் மனதையும் வெகுவாக
பாதித்திருக்க , தாயை தேடும் மழலையாய் அவனது மடிசாய
அவள் மனம் தவியாய் தவித்தது ...
அவனும் அந்த பத்து நிமிடங்களில் அன்பாக பேசி
ஆசையாக நலம் விசாரிப்பான்.
இரண்டு வாரங்களுக்கு ஒரு முறை
20 ஆயிரம் 30 ஆயிரம் என கணக்கில்லாமல் அவளது
மருத்துவமனை செலவிற்காக வங்கிக் கணக்கில் பணம்
செலுத்தி,
"டாக்டர் உன்னை அதிகம் ட்ராவல் பண்ண
கூடாது .... பெட் ரெஸ்ட் எடுக்கணும்னு சொல்லி இருக்காரு ... இருந்தாலும் மணி
டிரான்ஸ்பர் பண்ணி இருக்கேன் ... உனக்கு என்ன வேணுமோ
... என்ன பிடிச்சிருக்கோ உங்க அம்மா கிட்ட சொல்லி வாங்கிக்க... " என்பான்.
அவர்களது இந்த இரண்டு மாத திருமண பந்தத்தில், இணைந்திருந்த தருணங்களை கூட்டி கழித்து பார்த்தால் 10 நாட்கள் வருவதே கடினம் ....
சுபாவத்தில் அதிகம் பேசுபவன் அல்ல சற்று
முன் கோபியும் கூட ... அவளும் சற்று அடக்கி
வாசிக்கும் ரகமே...
இருவருக்கும் இடையே இயல்பான தாம்பத்தியம்
மட்டும்
அரங்கேறி இருந்ததே ஒழிய, புரிதல் இன்னும்
புலராத நிலையில் இருக்க,
காதல் மொழி பேசவோ,
கள்ளத்தனம் புரியவோ கால நேரம் அமையாததால் உள்ளத்துக்காதலை
உதட்டளவில் பகிர முடியாமல் உள்ளுக்குள்ளேயே உருகிக் கொண்டிருந்தாள் மங்கை.
அவளது உணர்வுகள் அவனை தீண்டியதா
என தெரியாது ....
"உன்னை ரொம்ப
மிஸ் பண்றேன் லட்சுமி ..." என்ற வார்த்தையை
மட்டும் அடிக்கடி மொழிவான் ஆத்மார்த்தமாக.
அந்த ஒரு வரியே அவளுள் ஆயிரம் ஆயிரம் காதல் கவிதைகளை கொட்டியது போல் இருக்கும் .
Whatsapp காலில் பேசும் அந்த பத்து
நிமிடங்களும் , இமை கொட்டாமல் அவள்
முகத்தையே பார்த்துக் கொண்டிருப்பவனை பார்க்க பார்க்க அவளுக்குத் தெவிட்டாது ....
தன்னையும் மீறி ஒரு சில சமயங்களில்,
"நீங்க என் பக்கத்துல இருக்கணும் போல
இருக்கு ..." என்று லேசான கமரிய குரலில் தன்
ஆழ்மனதினை வெளிப்படுத்தி விடுவாள்.
"சீக்கிரம் வர பார்க்கறேம்மா
..." என்பான் வெகு லேசான கரகரத்த குரலில்.
இப்படி அலைபேசி அழைப்பே தவணை முறையில் இருக்கும் நிலையில், கிடைக்கும்
கொஞ்ச நேரத்தில் அவனது தாயைப் பற்றி குற்றப்பத்திரிகை வாசிக்க மனமில்லாமல் தள்ளிப்
போட்டாள்.
மூன்றாண்டுகளுக்கு ஒரு முறை நடக்கும்
வியாபார சங்கமங்களில் மட்டும் தான் வீட்டு அரசியல், வியாபார பிக்கல் பிடுங்கல்கள் இல்லாமல் நிம்மதியாக இருப்பார்
ரங்கசாமி என அறிந்தவளாதலால்
இதய நோயாளியான அவரிடம் வீட்டில்
நடைபெறும் உப்பு பெறாத சமாச்சாரங்களை
கூறி கலங்க அடிக்க மனம் இல்லாமல் கைவிட்டிருந்தாள்.
இப்படிப்பட்ட சூழ்நிலையிலேயே முதல் மாதம்
கழிந்தது.
இந்நிலையில் ஒரு நாள்,
தன்னவனுடனான அலைபேசி உரையாடலில் ஈடுபடும்
பொழுது அதிகமாக துக்கம் தொண்டையை
அடைக்க, லேசாக விம்மியே அழுதுவிட்டாள் மங்கை.
அதற்குக் காரணம் இல்லாமல் இல்லை ....
"ரசம் எப்படி வைக்கிறது ..."
என்றான் எதிர்முனையில் ராம் சரண்.
திடீரென்று மிகவும் இளைத்து கறுத்து
கண்களைச் சுற்றி கருவளையத்தோடு காணப்பட்டவன் கேட்ட கேள்வியை எண்ணி துணு குற்றவள்,
அதற்கான காரணத்தைக் கேட்க, அப்போது தான் அவனுக்கு டைபாய்டு வந்திருப்பது தெரிய வந்தது.
அதிக குளிர் காய்ச்சல், உடல் வலி, தலைவலி,
வயிற்று வலி , பசியின்மை என டைபாய்டின்
அறிகுறிகள் அவனை வாட்டி வதைத்திருக்க, மிளகு ரசத்தின்
காரச் சுவை மற்றும் புளிப்பு சுவை பசியை தூண்டும் என்பதால் அவன்
கேட்க, துடித்து விட்டாள் பாவை .
கண் கலங்கியபடி ஒருவழியாய் ரசம் வைக்கும்
முறையை சொல்லி முடித்தவள், குழந்தைக்கு கூறுவது
போல் பல அறிவுரைகளை வாரி வழங்க, அவள் பேசும் தோரணையும்
செயல்பாடும் ஏனோ அவனுக்கு வித்தியாசமாகவும் உற்சாகமாகவும் இருக்க, ரசித்து சிரித்தவன்,
" என் அம்மா
கூட எனக்கு இவ்ளோ அட்வைஸ் பண்ணினது இல்ல மேம் .... பட் நோ வொரீஸ் மேம்...
நீங்க சொன்ன எல்லா டிப்ஸயும் ஃபாலோ பண்றேன்
மேம்..." என பவ்யமாக அவன் தலை வணங்கி கூறிய பாங்கு, அவளுக்குமே
சிரிப்பை வரவழைத்தாலும் அதனை ரசிக்கும் மனோ நிலையில் இல்லாமல், ஆயிரம் ஜாக்கிரதைகளை சொல்லி அழைப்பை துண்டித்தாள்.
அந்நிய மண்ணில் ஆரோக்கியமற்று இருக்கும்
அன்பு கணவனின் உடல் நிலையை பற்றி எண்ணி கலங்கிய படி அலைபேசி சகிதமாக
வந்தவளை பார்த்து அருணா,
"அண்ணாவோட பேசனீங்களா ... ரொம்ப
சோகமா தெரியுறீங்க... அண்ணாவை ரொம்ப மிஸ் பண்றீங்களா ..." என்றாள் என்றும் இல்லா அக்கறையில்.
அதற்கு ஆமாம் என்பது போல் லட்சுமி லேசாக
தலையாட்ட,
"ரெண்டு வருஷம் லவ் பண்ணி கல்யாணம் பண்ணிக்கிட்ட, நான் கூட ஹரிஷ்
ஊர்ல இல்லாதப்ப இப்படி ஃபீல் பண்ணினது இல்ல ... உங்களுக்கு கல்யாணம் ஆகியே ரெண்டு
மாசம் தான் ஆகுது....நீங்க இப்படி எல்லாம் நடந்துக்கிறது எனக்கு ஒரு மாதிரி
வித்தியாசமா தெரியுது ..." என்றாள் லேசாக சிரித்து
நையாண்டி தொனியில், கணவன் மேல் இருக்கும்
அவளது பாசத்தை நடிப்பு என சொல்லாமல் சொல்லி.
அவள் இருக்கும் மனநிலைக்கு கோபம் விண்ணை
முட்ட,
உணர்ச்சிவசப்பட்டு வார்த்தைகளை விட்டு விட்டால் பின்நாளில் அது
விஸ்வரூபம் எடுத்து வில்லங்கத்தை உண்டு செய்யும் என உணர்ந்து மௌனமாக அந்த இடத்தை
விட்டு வெளியேறினாள்.
இந்த சம்பவத்திற்கு பிறகு
தாயும் மகளும் வழக்கத்தைக் காட்டிலும் அதிகமாக
ஆடினர் என்றே சொல்லலாம் ....
"என் புருஷன் கூட தான், கல்யாணமான நாளிலிருந்து இன்னைய வரைக்கும் பிசினஸ் பிசினஸ்னு வீட்ல தங்காம
சுத்திக்கிட்டு இருக்காரு ... அதுக்காக போன்ல இப்படியெல்லாம் அழுது நடிச்சு ஆளை
மயக்குற சாமர்த்தியம் எல்லாம் எனக்கு தெரியாது ...."
என அதற்கும் வில்லங்க வசனங்கள் பறந்தன ....
நடக்கும் அனைத்தையும் பல்லைக் கடித்துக்
கொண்டு பொறுத்துக் கொண்டிருந்தவளுக்கு, பொறுத்துக்
கொள்ளவே முடியாத ஒரு நிலையையும் ஏற்படுத்தினாள் அருணா .
'கிட்டி பார்ட்டி' என்ற பெயரில் தன் தோழிகளை அழைத்து வந்து, காலையிலிருந்து
நடு இரவு வரை டிவி மற்றும் சவுண்ட் ஸ்டீரியோ சிஸ்டத்தை அலற வைத்தாள் ....
ஏற்கனவே சரிவர உணவு இல்லாமல் ஏகப்பட்ட மன
உளைச்சலில் ஆயிரம் உபாதைகளை தாங்கிக்
கொண்டிருந்த லட்சுமிக்கு , உறக்கம் ஒன்றே ஓரளவிற்கு
நிம்மதி தந்து வந்திருந்த நிலையில், தற்போது அருணா
அதிலும் மண்ணள்ளிப் போட, அவளது பொறுமை கரையைக் கடந்தது.
இருந்தாலும் தன்னவனின் உடல்நிலை தேறுவதற்காக
மேலும் இரு வாரங்கள் பல்லை கடித்துக்கொண்டு தாக்கு
பிடித்தாள்.
ஆனால் அருணாவின் அட்டகாசங்கள், அளப்பரியாமல் போக ஒரு கட்டத்தில் இதே நிலை நீடித்தால் வயிற்றில் வளரும் குழந்தை ஆரோக்கியமாக பிறப்பதற்கான சாத்தியக்கூறுகள் மிக மிகக் குறைவு என்றெண்ணியவள், அதற்கு மேல் பொறுக்க மாட்டாமல் அதுவரை நடந்த அனைத்தையும் ராம்சரணிடம் பகிர்ந்தாள்.
ஒன்றுமில்லாத விஷயத்திற்கெல்லாம்
மசாலா தூவி பூதாகரமாக விவரிக்கும் அருணா
போல் வித்தை அறியாதளாதலால், அவள் உரைத்த எந்த ஒரு
பிரச்சனையும் ராம் சரணிடம் அவள் எதிர்பார்த்த பாதிப்பை
ஏற்படுத்தவில்லை . சரியாகச் சொன்னால் ராம்சரணுக்கு
பிரச்சனையின் தீவிரத்தையும் சாராம்சத்தையும் சரிவர
உணர்த்த தவறிவிட்டாள் ஸ்ரீ லட்சுமி என்று தான் சொல்ல
வேண்டும் ...
" என் அம்மா எப்பவுமே அப்படித்தான் .... யாரோ எங்கேயோ என்னைக்கோ செஞ்சதெல்லாம் வீட்ல
உக்காந்துகிட்டு , பேசி பேசி திட்டி கிட்டு இருப்பாங்க….
அது எப்படி உன்னை திட்டுறதா ஆயிடும் ....
உன் பேர் சொல்லி
நேரடியா திட்டினாங்களா........ இல்ல இல்ல
...
பின்ன எப்படி அவங்க உன்னையும் உங்க
அம்மாவையும் பேசுறாங்கன்னு சொல்ற.... "
என்றான் தாயின் சுயரூபத்தை தெரிந்து கொள்ளாமல்.
நடந்த பிரச்சனையின் தாக்கம் அவனை
சென்றடைய அவளும் தன்னாலான வரை தலையால் தண்ணீர் குடித்துப் பார்த்தாள்....
பலன் என்னவோ பூஜ்ஜியம் தான் ....
சமீபத்தில் அருணா ஆடிய ஆட்டம் மட்டும்
ஓரளவிற்கு அவன் சிந்தையை சென்றடைய,
"சரி நான் அம்மா கிட்ட பேசறேன் ... நீ
நிம்மதியா தூங்கு ரெஸ்ட் எடு சரியா .." என்று அழைப்பை துண்டித்தவன் தன் தாயை
அழைத்து ஸ்ரீ லட்சுமி பகிர்ந்த அனைத்தையும் சொல்லி,
"நீயும் அருணாவும் சத்தம் போட்டு
பேசுறத முதல்ல நிறுத்துங்கம்மா... அதோட அருணா கிட்ட ஃப்ரெண்ட்ஸ கூட்டிட்டு வந்து
வீட்ல கூத்தடிக்கிற வேலை எல்லாத்தையும் நிறுத்த சொல்லுங்க ..."
"ஏண்டா .... என் வீட்ல என் இஷ்டம்
போல நானும் என் பொண்ணும் வாய விட்டு நிம்மதியா பேசக்கூட கூடாதுன்னு சொன்னா என்னடா அர்த்தம் .... யாரையோ
திட்டிகிட்டு இருந்தா உன் பொண்டாட்டி ஏன் அவளை
திட்டினதா எடுத்துக்கிறானு புரியல.... நான் அவள திட்டனும்னு நினைச்சா நேரடியாவே
திட்டிட்டு போறேன் ....எதுக்கு மறைமுகமா திட்டனும் .... " எனப் பெரிய
நியாயஸ்தி போல் அவர் பேசி முடிக்க குழம்பிப் போனான் மைந்தன்.
எப்பொழுது மைந்தனின் காதுகளுக்கு
விஷயம் சென்று விட்டதோ இனிமேல் தாமதித்து பயனில்லை என அதன் பின் நேரடியாகவே களம் இறங்கியவர்,
"வீட்டு ஆம்பளைங்க வெளிநாட்டுல
இருக்கும் பொழுது, இந்த மாதிரி ஒன்னும் இல்லாத
பிரச்சனைகளுக்கு எல்லாம் போன் பண்ணி ஊர கூட்டக்கூடாது .... அவனுக்கு எவ்வளவோ பெரிய
பெரிய பணக்காரமிடமெல்லாம் வந்துச்சு தெரியுமா, அவங்க அப்பா
தான் என்னமோ உலகத்துல இல்லாத தேவதைய கண்டுபிடிச்ச
மாதிரி உன்னை தேடி கண்டுபிடிச்சு அவன் தலையில கட்டி வச்சி மறைமுகமா என்னை பாடா
படுத்துறாரு...." என வசைப்பட ஆரம்பிக்க , பதில் பேச
முடியாமல் திண்டாடிப் போனாள்.
அன்று இரவு ராம்சரணிடம் பேசும் போது ,
காலையில் கற்பகம் பேசியதை அவள் பகிர்ந்ததும், ஓரிரு கணம் யோசித்தவன்
"நீ நாளைக்கே உங்க வீட்டுக்கு
கிளம்பு .... நீ இங்க இருந்தா டெய்லி புது புது
பிரச்சனைகள் வந்துகிட்டு தான் இருக்கும் ..."
என எதையும் யோசிக்காமல் சட்டென்று
முடிவெடுத்தவனின் மீது அவளுக்கு கோபம் துளிர்க்க ஆரம்பித்தது.
கற்பகம் அவளை
சராசரி மருமகளாக அல்ல, சக மனுஷியாக கூட நடத்தவில்லை
....
அலுவலகத்தில், அண்டை வீட்டில் இவ்வளவு ஏன் அன்றாடம் பயணிக்கும் பேருந்தில் கர்ப்பிணிப் பெண்களை கண்டால் முகமறியாதவர்கள் கூட
தங்களால் இயன்ற உதவியை செய்வர் ....
அன்பு பாராட்டுவர் ....
ஆனால் இவன் இல்லத்தில் ....
குலத்தின் மூத்த வாரிசை சுமந்து
கொண்டிருக்கிறாள் என தெரிந்தும் , பணத்திற்காகவும்
பொறாமையிலும் தன் தாய் கிராதகியாக நடந்து கொள்கிறாள்
என புரிந்து கொள்ளாமல் பிரச்சனைக்கு தீர்வு காண்பதாக எண்ணி, தற்காலிக
மாற்று வழியை அவன் கண்டுபிடித்தது அவளுக்கு உவப்பை தராமல் போக,பதில் பேசாமல் அழைப்பை துண்டித்தாள்.
ஒருவரை ரத்தம் வரும் அளவிற்கு அடித்து
துன்புறுத்தினால் தான் அது வன்கொடுமை என்றல்ல ....
உடல் உபாதையின் போது
ஓய்வெடுக்க விடாமல், உண்ண விடாமல்
மனம் நொந்து அவர்கள் ரத்தக்கண்ணீர் வடிக்கும் அளவிற்கு வசை பாடிக் கொண்டே இருந்தாலும் அதுவும் வன்கொடுமையில் தான் சாரும் ....
புறத்தின் ரணம் புரிவது போல் அகத்தின் ரணம்
பலருக்கும் புரிவதில்லை ....
அப்படித்தான் அவள் கணவனும்
மூன்றாம் நபர் நோக்கோடு மேம்போக்காக அவள் சொல்வதை உள்வாங்கிக்
கொண்டதால், அவள் பட்ட துயரங்களை உணர்ந்து
கொள்ளாமல் தற்காலிகமான தீர்வினை தேர்ந்தெடுத்திருந்தான்.
கர்ப்பப்பையின் உட்சுவரில் ரத்தக்கசிவு
இருப்பதால், அதிக நடமாட்டம் கூடாது ....
படி ஏறக்கூடாது .... குறிப்பாக ஆட்டோ மற்றும் இருசக்கர வாகனங்களில்
பயணிக்க கூடாது என்பன போன்ற மருத்துவரின் அறிவுறுத்தல்களை மனதில் நிறுத்தி
பார்க்காமல்
ஏனோ தானோ வென்று
அவன் முடிவு எடுத்த விதம் அவளை கோபத்திற்கு
உள்ளாக்கி இருக்க
நான் ஒன்னும் உங்க வீட்டுல இருந்து சீராட
நினைக்கல ...
உங்க மெர்சிடிஸ் பென்ஸ்ல உலா வரவும்
ஆசைப்படல...
மலையடிவாரத்துல மண் மேட்டுல எங்க வீடு
இருக்கு .... அவ்ளோ தூரம் ஆட்டோ போகிறதே கஷ்டம் ... மேட்டுல நடந்து
தான் போகணும் .... இதெல்லாம் தெரிஞ்சும் , என் ஹெல்த்
கண்டிஷன் புரிஞ்சும் வீட்டை விட்டு போக சொல்லிட்டீங்க .... போறேன் ... நாளைக்கு
என் குழந்தைக்கு ஏதாவது ஆச்சுன்னா நீங்க தான் பொறுப்பு...
என தனக்குள்ளே வாய்விட்டு புலம்பியவள்,
மறுநாளே வீட்டை விட்டு கிளம்ப தாயும் மகளும் குதித்து குத்தாட்டம்
போட்டனர்.
அவள் தன் வீட்டிற்கு வந்து முதல்
இரு வாரங்கள் வெகு இயல்பாகத்தான் சென்றது.
ராம்சரணிடம் பேசும் போது, மட்டும் அவள் ஒட்டுதல்
இல்லாமல் பேச, அதனைக் கண்டு கொண்டாலும்
காட்டிக்கொள்ளாமல் இயல்பாகவே கடந்தவன்,
"லட்சுமி ... வர சனிக்கிழமை நான்
ஊர்ல இருப்பேன்..” என்றான் மகிழ்ச்சியோடு.
"ம்ம்ம்ம்..." என்று மென்மையாய்
ஆமோதித்து விட்டு அழைப்பை துண்டித்து விட்டாள்.
சனிக்கிழமை காலை,
அவன் கோயம்புத்தூர் விமான நிலையத்தை அடைந்ததும், தன்னவளை அழைப்பதற்காக அலைபேசி எடுக்கவும் ,
அவளிடம் இருந்து அழைப்பு வரவும் சரியாக இருந்தது .
தன்னை மிகவும் தேடுகிறாள் போலும் என்று
மிகுந்த மகிழ்ச்சியோடு அழைப்பை காதுக்கு கொடுத்தவனிடத்தில் சொல்லப்பட்ட செய்தி
அமிலத்தை ஊற்றியது போல் இருந்தது.
"மாப்பிள்ளை... நான் அத்தை பேசறேன்.... இன்னைக்கு அதிகாலை 4 மணிக்கு வயித்த வலிக்குதுன்னு லட்சுமி சொன்னா .... சாதாரண சூட்டு வலியா இருக்கும்னு நினைச்சு கசாயம் வச்சு கொடுத்தேன் ... நேரமாக ஆக ஆக வயிறு வலி தாங்காம துடிக்க ஆரம்பிச்சுட்டா ... உதிரம் கொட்ட ஆரம்பிச்சுடுச்சு… ஆட்டோ கிடைக்காம ரொம்ப கஷ்டப்பட்டு கொண்டு போய் ஹாஸ்பிடல்ல சேர்க்கறதுக்குள்ள அபார்ஷன் ஆயிடுச்சுன்னு சொல்லிட்டாங்க ...." என கதறியபடி அவர் பேச, தலையில் இடி விழுந்தது போல் இரு கரங்களாலேயும் தலையைப் பற்றிக் கொண்டு அங்கிருந்த நாற்காலியில் அப்படியே சரிந்தமர்ந்தான்.
ஸ்ரீ- ராமம் வருவார்கள் .....
Superrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrttrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrr
ReplyDelete