ஸ்ரீ-ராமம்-82

 அத்தியாயம் 82 


அறைக்கு வந்த வீரா, சூழல் நாற்காலியில் அமர்ந்து கொண்டு,  கால்களை ஏத்தி லேசாக இடவலமாக  சுழன்றபடி சிந்தனையில் மூழ்கினான்.


அவன் தாய், குழந்தையை பற்றி பேசியதும் அவனுள், சிறு சிறு மத்தாப்பூக்கள் பூத்துக் குலுங்கியது உண்மை தான்.


தன்னவளிடம் பகிரவில்லை என்றாலும் குழந்தை ஆசை அவனுக்கும் இல்லாமல் இல்லை.... 


தாம்பத்தியத்தை தொடங்கி கிட்டத்தட்ட இரு வார காலமே ஆகி இருந்த நிலையில் இருவருக்குமே திருமண உறவு புதிது என்பதால், ஆர்வம், தயக்கம்,  வெட்கம்,  வேட்கை , வேகம்  போன்ற உணர்வுகளே மேலெழுந்திருந்ததால் கிடைக்கும் சொற்ப நேரத்தில், பிற சிந்தனையின்றி ஊடலும் கூடலுமாய்  காலத்தை கழித்திருந்தனர் ....


வயது முதிர்ந்த ஆண் மகன் அவன்,  சற்று இளையவளே ஆனாலும் அவன் மனைவியாளும்  ஏதும் அறியாதவள் அல்ல.


என்றாலும் கூடிக் களித்தல் குழந்தைக்காக தான் என்ற எண்ணம் திருமண உறவின்  தொடக்கத்திலேயே தோன்றி விட்டால், பின்பு திருமண பந்தத்தின் மீதோ, கணவனான தன் மீதோ  புரிதலோ , காதலோ தன்னவளுக்கு இல்லாமலே  போய் விடும் என்பதால் தன்  எதிர்பார்ப்பையும் ஆசையும் ஓரிரு  மாதம் கழித்து தன்னவளிடம் கூறிக் கொள்ளலாம் என்று தள்ளிப் போட்டிருந்தான்.



தற்போது அதை தன்னவளிடம் வெளிப்படுத்துவதில் அவனுக்கு  பிரச்சனை இல்லை . 


ஆனால் குழந்தை தறிப்பதை காரணமாகச் சொல்லி அவன் மனையாட்டி பணிக்கு செல்ல , அவன் தாய் தடை  விதிக்கும் போது ஏதோ ஒன்று அவன் உள்ளத்தை சுருக்கென்று தைத்ததல்லவா ...


அது என்ன என்று தான் தற்போது தீவிரமாக யோசித்துக் கொண்டிருந்தான்....


மன அழுத்தம், வேலைச்சுமை இல்லாத பணி என்ற ஒன்று இவ்வுலகிலேயே இல்லை ...


அதுமட்டுமல்ல கர்ப்பம் தரித்த பெண்கள், அவன் அலுவலகத்தில்  எட்டு மாதம் வரை  பணிக்கு வந்ததை எல்லாம் பல தருணங்களில்  கண்டிருக்கிறான்...


என்கின்ற நிலையில், தாய் அடுக்கிய அந்தக் காரணங்கள் எதுவுமே அவன் உள்ளத்தின் உறுத்தலுக்கு காரணம் அல்ல.  உறுதியாகிப் போனாலும், எவ்வளவு யோசித்தும் உறுத்தலும் அடங்கவில்லை அதற்கான  காரணமும் விளங்கவே இல்லை .


அவன் உள்ளுணர்வு ஏதோ சொல்ல முயல்கிறது ... ஆனால் அதனை மொழிபெயர்க்க மூளையால் தான் முடியவில்லை ....


எவ்வளவோ முயன்றும் முடியாததால்,


என்னவென்றே தெரியாத ஏதோ ஒன்றிற்காக,  தன்னவளின் ஆசைக்கு தடை விதிக்கக்கூடாது என்ற முடிவுக்கு வந்தவன், தன் இனிய இல்லாளின் வரவிற்காக காத்திருக்கலானான்.


15 நிமிடம் கழித்து  வந்தவள், மிகுந்த சோகமாக ,


"அ....அத்தைக்கு நான் வேலைக்கு போகப் போறது பிடிக்கல ... உங்ககிட்ட பேசறேன்னு சொன்னாங்க... பேசினாங்களா..." என தயக்கமாக கேட்க,  திருமணமான நாளிலிருந்து அப்படி ஒரு முக பாவத்தை அவளிடத்தில்  அவன் கண்டதேயில்லை.


பதின் பருவத்து சிறுமி சுற்றுலா செல்ல  பெற்றவர்களின் அனுமதிக்காக மருண்ட விழியில் எதிர்பார்ப்பை தேக்கி காத்திருப்பது போலான அந்தத் தோற்றம் அவனை வெகுவாக கவர,  விளையாடிப் பார்க்க எண்ணியவன்,


"ஆமா பேசினாங்க ..." என்றான் அவளை குறுகுறுவென்று பார்த்து.


"அதுக்கு நீங்க என்ன சொன்னீங்க ..."


"என்ன சொல்ல .... என் மம்மி ஒரு விஷயத்தை சொன்னா அது நூறு இல்ல, 1000 இல்ல , லட்சம் மடங்கு  சரியா தான் இருக்கும் ..." என வீர வசனம் பேசினான் பொங்கி எழுந்த சிரிப்பை மறைத்தபடி.


அவன் முக பாவத்தை  கண நேரத்தில் புரிந்து கொண்டவள் ,


"நேத்து என்ன சொன்னீங்க ... உங்க பேமிலி எஜுகேட்டட் ஃபேமிலி... இல்ல...  நீங்களும் உங்க அம்மாவும் அம்மையப்பனே பரவால்லன்னு நினைக்க வச்சிட்டீங்க ...


உங்க அம்மாவுக்கு தான் வெளி உலகம் தெரியாது ... நீங்க ஐய்யய்டீடீடீல படிச்சீங்க இல்ல .... உங்க அறிவு எங்க போச்சு ... யூ ஆர் எ மேல்ச்சாவினிஸ்ட் ...நான் இப்பவே கிளம்பறேன் ..." என்றாள் அவசரமாக .


"ஏய் ... எங்க போற ..." 


"கெஸ்ட் ரூம் போய் தூங்க போறேன் ..."


"ஓகே ஓகே கிளம்பு ..." என்றான்  பெருமூச்சு விட்டவனாய்.


அவள் தன் பிங்க் நிற தலையணை,  மற்றும் போர்வையை கட்டிலில் இருந்து எடுக்க,


"அங்கயே  போர்வை  தலகாணி எல்லாம் இருக்கும்... போ போ ..."  அவள் கோபத்தை  மேலும் தூண்டும் விதமாக அவன் கூற,


"எனக்கு என்னோடது இல்லாம  தூக்கம் வராது ..." என்றவள் , தன் பரிவாரங்களை அள்ளிக் கொண்டு வெடுக்கென்று  நடையை கட்டினாள்.


மேல் தளத்தின் கடைசி அறை அந்த விருந்தினர் அறை .


வீட்டு மனிதர்கள் இல்லாமல் உறவினர்கள் யாரேனும் வந்தால் அதில் தங்கிக் கொள்வர்.


 வெளியே ஓங்கி வளர்ந்த மரங்கள் இருள் சூழ காற்றில் அசைந்தாட,   ஜன்னலின் வழியே அதை  பார்த்தவளுக்கு பெரும் பய பந்து ஒன்று வயிற்றில் உருண்டோட, துரிதமாக திரைச்சீலைகளை இழுத்து ஜன்னலின் கண்ணாடி கதவுகளின் மேல் மூடியவள், படுக்கையில் குப்புறப்படுத்து தன்னை முழுவதும் போர்வையால் போர்த்திக் கொண்டாள்.


கிட்டத்தட்ட பத்து நிமிடங்கள் ஆகியும், பயம் கூடியதே ஒழிய உறக்கம் வந்த பாடில்லை .


கடல் கடந்து தனித்து பயணித்திருந்தாலும்,  தனித்து அவள் உறங்கியதே இல்லை.


சிட்னியில் இருந்த போது கூட, ஒரே வீட்டில் அவளது அறைக்கு நேர் எதிர் அறையில் கேரளாவை சேர்ந்த தோழி ஒருத்தி தங்கி இருந்தாள்.


இருவருமே அறை கதவை மூடாமல் பேசியபடியே உறங்குவது வழக்கம் ...


ஆனால் இங்கோ தனித்து அமைந்திருந்த அந்த பெரிய அறையை சுற்றி காடுகள் போல் மரங்கள் மட்டுமே சூழ்ந்திருந்ததோடு மனித அரவமே இல்லாதிருந்தது வேறு அவளது உறக்கத்திற்கு தடை விதிக்க, பொறுக்க முடியாமல் அறையின் வாயிலுக்கு சென்று வெளியே எட்டிப் பார்த்தாள்.


வீராவின் அறையில் குழல் விளக்கு எரிவது  தெரிய,


"ச்சே... மெதுவா போய் அந்த ரூம்ல படுத்துக்கலாம்னு பார்த்தா அவரு இன்னும் தூங்கல போல...." 


முணுமுணுத்துக் கொண்டே, திரும்பி வந்து கட்டிலில் அமர்ந்தாள்.


அங்கு வீராவோ 


"பத்து நிமிஷத்துக்கு மேல ஆகுதே... இன்னும் இவள காணோமே ....  ஒருவேளை அங்கயே  செட்டில் ஆயிட்டாளா... இவயில்லாம எனக்கு தூக்கம் வராதே..." என கணினி திரையில் கண் பதித்த படிபுலம்பிக் கொண்டிருந்தான் .


உறக்கம் கண்களை கவ்வினாலும் , தனித்திருக்கும் பயம் அதனை தடுக்க பொறுத்து பொறுத்துப் பார்த்தவள், தன் பரிவாரங்களை அள்ளிக் கொண்டு மீண்டும் வீராவின் அறைக்கு படையெடுத்தாள்.


மெல்லிய கொலுசொலியில் அவள் வரவை அவன் அறிந்து கொள்ள,  இவளோ மெல்ல பூனை  நடையிட்டு ஒருக்களித்திருந்த கதவை மெதுவாகத் திறந்து தலையை மட்டும் உள்ளே நீட்டி பார்த்தாள்.


அறை காலியாக இருக்க , 


"எங்க இவரு .... பாத்ரூம்ல இருப்பாரோ ..." என்றவள் , முழுமையாய் கதவை தள்ளிக் கொண்டு உள்ளே நுழைந்து, இடப்புறமாய் திரும்பி குளியலறையை நோக்க, அப்போது அவள்  கழுத்தில் ஏதோ ஊறுவது போல்  உணர்ந்தவள் பயந்து திரும்பி பார்க்க,


"என்னத்த பார்த்துகிட்டு இருக்க ..." என்றான் வீரா குறும்பாக  கதவின் பின்புறத்திலிருந்து வெளிப்பட்டு.


உடனே முகத்தை தீவிர பாவனைக்கு மாற்றியவள்,


"தனியா தூங்க பயப்படுவீங்களே ...   அதான்  துணைக்கு தூங்கலாம்னு  வந்தேன் ..." என்றாள் மிடுக்காக. 


"ஆணியே புடுங்க வேணாம்... கிளம்பு கிளம்பு காத்து வரட்டும் ... பத்து வயசுல இருந்து இதே ரூம்ல தனியா தான் தூங்கிகிட்டு இருக்கேன்... எனக்காவது பயமாவது  ...  தூக்கம் வருது... சீக்கிரம்  கெளம்பு .." 


தயங்கி நின்றவள்,  லேசாக நாணி கோணி,


"இல்ல ...  எனக்கு அந்த ரூம்ல தனியா தூங்க பயமா இருக்கு ராம் ..." என்றாள் குழைந்து .


"ஏன் ... என்ன பயம்..." என்றான் அவளை நெருங்கி ரசனையாய். 


"அந்த ரூம் கடைசில இருக்கா ...   அதனால அங்க பேய் இருக்கிற மாறியே இருக்கு ராம் ..." என்றதும் லேசாக சிரித்தவன் 


" பேயாவது பிசாசாவது ... சொன்னது சொன்னது தான் ... போய் அந்த ரூம்லயே தூங்கு ..."   என  வேண்டுமென்றே  குரலை உயர்த்தி  மிரட்ட,


" என்ன நீங்க இப்படி எல்லாம் பேசறீங்க .... இது என் பெட்ரூம் நான் எதுக்காக போகணும் ... நீங்க வேணா அந்த ரூம்ல போய் தூங்குங்க .."


"வாரே வா.... தட்ஸ் மை கேர்ள் ....   இப்ப பேசின பாத்தியா ... இதான் பாயிண்ட் .... யார் என்ன சொன்னாலும்,  ஏன் நானே சொன்னாலும்,  நீ  எடுத்த முடிவுல ஸ்திரமா இருக்கிற பாரு .... இதான் கரெக்ட்.. " என்றவனின் பேச்சு அப்போது தான் அவளுக்கு பொருள் பட,


"இருந்தாலும்,  அத்தைக்கு விருப்பமில்லன்னு சொல்லும் போது எடுத்த முடிவுல  ஸ்டெபனா இருக்க கஷ்டமா இருக்கு ...."


"உன் அத்தை யார் சொன்னாலும் கேட்டுக்கிற ரகம் இல்ல... அவங்களா திருந்தினா தான் உண்டு .... நீ வேலைக்கு போகணும்னு எடுத்த முடிவு சரியான முடிவு ... நாம ஒரு விஷயத்தை சரியா செய்யும் போது அடுத்தவங்களோட அபிப்பிராயம் எல்லாம் அனாவசியம் .... கோ எ ஹெட் .."  என்றவனை காதல் பொங்க அவள் நெருங்க அவளது நெற்றியோடு நெற்றி முட்டி,




"இருந்தாலும், எவ்ளோ செலவானாலும் அடுத்த மாசம் ஒரு பேய வாங்க போறேன் ... அப்பதான் நீ வணக்கமா என் வழிக்கு வருவ ..."  கிறங்கிய குரலில் அவன் மொழிய, வெடுக்கென்று எம்பி அவன் தலையில் குட்டி விட்டு , வேகமாய் போய் படுக்கையில் விழுந்தாள்.


படுக்கையின் மறு புறம் சென்று படுத்தவன், ஜடாயு பறவையின் சிறகு போல் கரத்தை விரித்து தன்னவளை கொத்தாய் அள்ளி தன் மார்பில் கிடத்திக் கொள்ள, கணவனின் ஆதரவும் ஊக்கமும் தந்த  நிம்மதியில்,


"ராம்,  ஒருவேளை நான் பிரக்னன்ட் ஆயிட்டேன்னா ..." என்றாள் ஆசையும் எதிர்பார்ப்பும் நிறைந்த குரலில் .


"ரொம்ப ரொம்ப சந்தோஷப்படுவேன் ..."


"ரியலி ....?"


"என்ன கேள்வி இது சிட்டு...அத்தான்னு கூப்பிட பொண்டாட்டி வந்துட்டாளே,  அப்பான்னு கூப்பிட குழந்தைங்க வேணுங்குற ஆசை எல்லாருக்குமே வருமே ... எனக்கு மட்டும் அந்த ஆசை இருக்காதா ..."


"ஆனா இப்ப வரைக்கும் நீங்க குழந்தையை பத்தி பேசினதே இல்லையே ..."


"ஒரு மாசத்துக்கு அப்புறம் பேசலாம்னு இருந்தேன் .."


" ஏன்..."


"இங்க பெரும்பாலும்  கல்யாணத்தை  எமோஷனல் பாண்டிங்கா பாக்காம , வெறும்  ஃபிசிகல் ப்ளஷரா மட்டும் பாக்கறதால தான் குழந்தைய கல்யாணத்தோட ரிசல்ட்டா நினைக்கிறாங்க ....  என்னை பொறுத்த வரைக்கும் கல்யாணமே எமோஷனல் இன்டிமஸிக்காக தான்... லவ் ,அஃபெக்ஷன் , இன்டிமேட்  பீலிங் தான் ஃபர்ஸ்ட்  .... ப்சிகல் இன்டிமேசி செகண்டரி தான்...  


நாலு குழந்தைய பெத்தவங்க அன்னியோன்யமான தம்பதிகளா இருப்பாங்கன்றதுக்கு எந்த அஷுரன்சும் கிடையாது ...


அதே மாறி குழந்தையே இல்லாதவங்க ஒற்றுமையே இல்லாம இருப்பாங்கன்னு  சொல்லிடவும் முடியாது ...


கணவன் மனைவியோட அன்னியோனியத்துக்கு  பரிசா குழந்தை வரணுமே ஒழிய, குழந்தைக்காக கணவன் மனைவி அன்யோன்யமா இருக்கக் கூடாது ....


அதுக்காகத்தான் குழந்தையை பத்தி நான் எதுவும் பேசல ..."


என்றவனை அந்த இரவு விளக்கொளியில் கூட காதலாய் அவள்  விழி மலர்த்தி பார்க்க,


"நீ குழந்தை உண்டானா ரொம்ப  சந்தோஷம் பட்டு ...   இல்லனாலும் கவலையில்லை ...  எப்ப வரணும்னு இருக்கோ அப்ப  வரட்டும்..." அவள் கன்னம் தடவி மொழிந்தவனின் காதலில் மங்கையவள்  பனிக்கூழாய் உருகிப் போக, கண்ணில் விழுந்த தூசியாய்  இதயத்தில் உருவமில்லா  உறுத்தல் இருந்து கொண்டே இருந்தாலும், அதை ஒத்தி வைத்து விட்டு,  மனம் கவர்ந்த மனையாட்டியின் ஆசையை நிறைவேற்றுமாறு கடவுளிடம் கோரிக்கை வைத்தபடி, முத்தை காக்கும் சிப்பியாய், உறங்க தொடங்கியிருந்த தன்னவளை தன் பாதுகாப்பு வளையத்தில் வைத்துக்கொண்டு  ஆழ்ந்த உறக்கத்தை தழுவினான் நாயகன்.


கனவிலும் நினைக்காதவைகள் எல்லாம்  வரிசை கட்டி  நடந்தேற காத்திருக்கிறது என அவனும், கணவனின் கூற்றில் கற்பூரமாய் கரைந்தவள் முதலுக்கே மோசம் என்கின்ற நிலை வரும் போது , அதை  ஏற்க மனம் இல்லாமல் கலங்க போவதை  அவளும் , அறியாமல் ஆழ்ந்த நித்திரையில் அமைதியாய் சஞ்சரித்தனர். 


அதே நேரத்தில் தன் படுக்கை அறையில் இருந்த அகல்யாவிற்கு, அன்புவிடமிருந்து அழைப்பு வந்தது.


"அம்மா,  பாண்டி அண்ணன் கிட்ட பேசினயா... என்ன சொல்லுச்சு..." என்றாள் எடுத்து எடுப்பில் ஆர்வத்தோடு  .


"ஐயோ அதை ஏன் கேக்கற .... என் பொண்டாட்டி  வேலைக்கு போனா உனக்கு என்ன பிரச்சனைன்னு கேக்கறான்.... "


"பாண்டி அண்ணனா இப்படி பேசிச்சு ... அதுக்கு கோவமே வராதேம்மா... "


"இதுக்கே ஆச்சரியப்பட்டா எப்படி ...    பேசும் போது தெரியாத்தனமா ஏதோ ஒரு வார்த்தையை விட்டுட்டேன் ... உடனே தனி குடித்தனம் போறேன்னு சொல்லிட்டான்..."


" ஐய்யயோ... என்னால நம்பவே முடியலயே ... "


"எனக்கும் முதல்ல அப்படித்தான் இருந்துச்சு ...  நான் பெத்த புள்ளையா இப்படி பேசுறான்னு ஒரு நிமிஷம் ஆடிப் போயிட்டேன் ....  என்ன பண்றது உண்மையை ஏத்திக்கிட்டு தானே ஆவணும் ... அவன் முழுசா மாறிட்டான் அன்பு ..."


"அப்படி சொல்லாதம்மா ... அண்ணனை முழுசா அண்ணி மாத்திடுச்சின்னு சொல்லு .."


"என்னத்த சொல்லி என்ன .... என் புள்ளை என் கைய விட்டு போய்ட்டான்னு மட்டும் நல்லா தெரியுது ..."


"ம்சே... அம்மா,  இப்பவே இப்படி பேசினா எப்படி ... நம்ம வீட்ல எப்பவும் நீ தானம்மா முடிவெடுப்ப....  உன் முடிவ தானம்மா நாங்க  ஃபாலோ பண்ணுவோம்... இப்பவும் அப்படியே மெயின்டைன் பண்ணு ...இந்த விஷயத்த சாதாரணமா  விட்டுடாத ...  எடுத்த முடிவுல ஸ்திரமா இரு... எப்படியாவது அண்ணனை உன் வழிக்கு கொண்டு வா .... இந்த விஷயத்துல மட்டும் நீ தோத்துப்போன ... முதல் கோணல் முற்றும் கோணல் மாதிரி நீ அந்த வீட்ல செல்லா காசு ஆயிடுவ... 

 பாத்துக்க ...." என தீப தூப ஆரத்தியை காட்டி,  அகல்யாவின் மனதில் வன்மத்தை விதைத்தாள் அன்பு. 


மறுநாள் அதிகாலையில் வழக்கம் போல் குளித்து முடித்து அடுக்களைக்குச் சென்ற ஸ்ரீப்ரியாவின்  கண்களில் அகல்யா தென்படவில்லை.


ஓரிரு நிமிடம் காத்திருந்தவள், அதற்கு மேல் நேரத்தை வீணடிக்க விரும்பாமல், அந்த வீட்டின் வழக்கமான , காலைத் தேநீரை தயாரிக்க தொடங்கியதோடு, காலை உணவாக இட்லி, மற்றும் அருமையான தக்காளி சட்னியை இணையத்தின் உபயத்தால் சொற்ப நேரத்திலேயே செய்து முடித்தாள்.


அப்போது நடைப்பயிற்சியை முடித்துக்கொண்டு வீடு திரும்பிய பொன்னம்பலம்,  அன்றைய தினசரி யோடு தோட்டத்தில் சென்றமர, அவருக்கு தேநீரை கொடுக்க போகும் போது , அகல்யா அங்கு வர,


"அத்தை, உங்களுக்கும் டீ போட்டு தரட்டுமா"   என ஸ்ரீப்ரியா  கேட்டதுமே, " எனக்கு எதுவும் வேணாம்..." என்றார் வெடுக்கென்று முகம் திருப்பிக் கொண்டு.


அதற்கு மேல் அங்கு நிற்க பிடிக்காமல் அடுக்களைக்கு வந்தவளின் விழிகளில்  வாடிக்கையாளர் உடனான முக்கிய சந்திப்புக்கு துரிதமாக தயாராகி வந்த கணவன் எதிர்பட,


" டிபன் ரெடி சாப்பிட வாங்க ..."  என்றாள் முகத்தையும் குரலயும் இயல்பாக வைத்து.


" நீ சாப்டியா ..." என்றான்  குனிந்து பேண்ட் பாக்கெட்டில் பர்சை  வைத்தபடி .


"இல்ல ... உங்களோட சேர்ந்து சாப்பிடலாம்னு இருக்கேன் ..."


உடனே அவன்  கைகழுவ  வாஷ்பேசனை நெருங்கும் போது  அலைபேசி ஒலித்தது


ஸ்ரீனி தான் அழைத்திருந்தான்.


புதிய வாடிக்கையாளரின் திட்ட வரைவில் இருக்கும் சந்தேகங்கள் குறித்து உரையாட. 


 உரையாடலில்  மூழ்கிய படி காலாற நடந்து தோட்டத்திற்கு சென்ற வீரா , தேவையான தகவல்களை பேசி முடித்துவிட்டு, 


" ஹாஃப் அண்ட் ஹவர்ல ஆஃபீஸ்ல இருப்பேன்டா .... யூ கோ அ ஹெட் ..." என அழைப்பை  துண்டிக்கும் போது, அகல்யா அவனை நெருங்கி,


" உன் பொண்டாட்டி என்ன சொன்னா ..." என்றார் தீவிரமாய் .


" எந்த விஷயத்துல ..." என்றான் மைந்தன் யோசனையாய். 


" தெரியாதது மாதிரி கேக்கற... வேலைக்கு போறத பத்தி டா ..?"


"அதைத்தான் நேத்து ராத்திரியே பேசி முடிச்சிட்டோமே மா....  திரும்ப  திரும்ப ஏன் அதையே பேசற ..."


"நேத்து வந்தவ என்ன சொன்னாலும்  மண்டைய மண்டைய ஆட்ற... அவள தலையில தூக்கி வச்சுக்கிட்டு ஆடற... இதெல்லாம் சுத்தமா நல்லா இல்ல பாண்டி ... உன் பொண்டாட்டி ஒரு விஷயத்துக்கு ஆசைப்படறான்னா உடனே ஆமாம் சாமி போட்டுடுவியா... கொஞ்சம் கூட யோசிக்க மாட்டயா.... அவள மாறி பூஞ்சை  உடம்பு இருக்கிறவங்க காலையில போய் ராத்திரி வரைக்கும்  மாங்கு மாங்குன்னு உழைச்சிட்டு வந்தா ஸ்டிரஸ் , ஹார்மோனல் இம்பேலன்ஸ் பிரச்சனை எல்லாம் வரும்னு அன்பு சொல்றா  .... படிச்சவன் தானே நீ .... உனக்கு இதெல்லாம்  எடுத்து சொன்னா புரியாதா ..."  என அகல்யா வழக்கம் போல் தன்னை மறந்து வார்த்தைகளை விட்டு விட, 


"ஓ .... நீ பேசினதுக்கு ஆத்தர் அன்பு தானா  இனிமே அவ எங்க விஷயத்துல.... குறிப்பா என் பொண்டாட்டி விஷயத்துல தலையிட்டா நான் சும்மா இருக்க மாட்டேன் ... என்னமோ  என் பொண்டாட்டி எது சொன்னாலும் நான் மண்டைய மண்டைய ஆட்டறேன்...அவள தலையில தூக்கி வச்சுக்கிட்டு ஆடுறேன்னு  சொல்றீங்க ...


கல்யாணமாயி ஒரு மாசம் ஆக போகுது, இதுவரைக்கும் என்கிட்ட அவ எதுவுமே கேட்டதில்ல ... நானும் அவளை  சினிமா, டிராமா, ஷாப்பிங் மால்னு எங்கயுமே கூட்டிக்கிட்டு போனதில்ல  ...


ஒரு புடவை கூட  வாங்கி கொடுக்கல , இவ்ளோ ஏன் அவங்க வீட்டுக்கே விருந்துக்கு  போக நேரம் இல்ல .... ஏகப்பட்ட ப்ராஜெக்ட் வொர்க்ல மாட்டிக்கிட்டு இருக்கேன்...அவ என்கிட்ட கேட்ட முதல் விஷயம்... ஒரே விஷயம் வேலைக்கு போகணும்ங்கறது தான் அதுல என்ன தப்பு இருக்கு ...

அன்புக்கும் அவளுக்கும் இரண்டு வயசு தானே வித்தியாசம் ...அன்பு கல்யாணமான புதுசுல அவ புருஷனோட  எங்க எங்க ஊர சுத்தனான்னு கொஞ்சம் யோசிச்சு பாரு .... அப்ப என் பொண்டாட்டியோட அருமையும் பொறுமையும் உனக்கு புரியும் ... 

நீங்க எல்லாம் இப்படி பேசும் போது தான் அவளுக்கு நான் எதுவுமே  செய்யலன்னு எனக்கே புரியுது ...நீங்க அவளோட பொறுமைய புரிஞ்சிக்கிட்டிங்களோ இல்லையோ  ஆனா எனக்கு புரிய வச்சுட்டீங்க... அவ இந்த வீட்டுக்கு  வந்து ஒரு மாசம் ஆகுது ... ஏதாவது ஒரு விஷயத்துல உங்களால அவ கிட்ட தப்பு கண்டுபிடிக்க முடிஞ்சதா ...வேலைக்கு போகணும்னு  அவ ஆசைப்பட்டத, ஏதோ கொலை குத்தம் பண்ண மாதிரி கூடி கூடி பேசறீங்க ..."


என்றுமே வாய் திறவாதவன்,  அலுவலகப் பணி சுமை,  மனைவி விஷயத்தில் அவ்வப்போது  தோன்றும்  காரணம் தெரியாத மன உறுத்தல்,  அவளுக்கென்று எதுவுமே செய்யவில்லையே என்ற புதிதாய் முளைத்த குற்ற உணர்வு எல்லாம்  சேர்ந்து அவனை அடை மழையாய் அடித்து  பொழிய செய்ய ,  வாய் அடைத்துப் போனார் அகல்யா.


அடுத்த கணமே சுதாரித்துக் கொண்டவர் 


" நீ இந்த மாதிரி இதுவரைக்கும் என்கிட்ட பேசினதே இல்லடா ..."  கமரியக் குரலில் மொழிய, 


" நீயும் என்கிட்ட  யாரைப் பத்தியும் இப்படி பேசினதில்லையேம்மா..." என்றான் உள்ளூர மனம் கலங்கி. 


தன் தாய்க்கு தன் தமையன் ,தங்கையை காட்டிலும் தன் மீது தான் பாசம் அதிகம் என்று நன்கு  அறிவான்.


அதோடு அவர் குறிப்பிட்டது போல், இருவருக்கும் இடையே இது போலான வாக்குவாதம் இதுவரை நடந்ததே இல்லை ...


முதன்முறையாக தாயிடம்  கோபத்தை கொட்டியது,  குற்ற உணர்வை கூட்ட,  அதற்கு மேல் அங்கு நிற்க பிடிக்காமல்  விறு விறுவென்று இடத்தை காலி செய்தவன் காரை கிளப்பிக் கொண்டு அலுவலகம் நோக்கி பறந்தான். 


மகன் காலை உணவு  உண்ணாமல் விருட்டென்று  கிளம்பிச் சென்றதை கண்ட பொன்னம்பலம்,


" இப்ப உனக்கு சந்தோஷமா .... டீ, டிபன் எதுவுமே சாப்பிடாம கிளம்பி போயிட்டான் .... எதுக்கு தேவையில்லாம காலைல இப்படி ஒரு பஞ்சாயத்தை கூட்டின..." என்றார் மித மிஞ்சிய கோபத்தோடு. 

 

"எதுக்கெடுத்தாலும் என்னையே குத்தம்  சொல்லுங்க... பாத்தீங்க இல்ல ... நேத்து வந்தவளுக்காக எப்படி பேசிட்டு போறான்னு..."


"நேத்து வந்தவ,  நேத்து வந்தவனு முட்டாள்தனமா பேசாத அகல்யா .... ஸ்ரீப்ரியா  அவன் பொண்டாட்டி ... இவ்ளோ நாள் நீ எவ்ளோ முக்கியமோ,  இனிமே அவளும் அவனுக்கு முக்கியம் தான் ... உன் பொண்ணு இல்லாததையும் பொல்லாததையும் சொல்லி உன்னை தூண்டி விட்டுட்டு அவ நிம்மதியா மும்பையில இருக்கா...


நீ அவ பேச்ச கேட்டு தேவையில்லாத விஷயத்துல தலையிட்டு,  இப்ப பையன் , மருமக கிட்ட கெட்ட பேரு வாங்கிட்டு இருக்க....


' வடவள்ளி ராமசாமி' வீட்டுல நடக்கிற கூத்து உனக்கு தெரியும் தானே ... 


அவன் மருமக காலையில எழும்பவே பத்து மணி ஆகுதாம்.... அதுக்குள்ள மாமியார் சமச்சி வெக்கணுமாம்.. புருஷன் புடவைய அயர்ன் பண்ணி வைக்கணுமாம்....  ஒரு நாள் கொஞ்சம் லேட் ஆனாலும் வீடே ரெண்டு ஆயிடுமாம்....


இப்படியா நம்ம வீட்ல நடக்குது ... அடுத்தவன் கதையை கேட்கறது பொழுதுபோக்குக்காக இல்ல ...நம்ம வாழ்க்கையை கடவுள் எவ்ளோ நல்ல விதமா கொடுத்து இருக்கான்னு புரிஞ்சு வாழறதுக்கு ...


இப்ப எல்லாம் பசங்களுக்கு ஈக்வலா பொண்ணுங்களும் தருதலையா, ஊதாரியா, தாந்தோணித்தனமா ,சோம்பேறியா சுத்திக்கிட்டு இருக்குதுங்க ...


ஆனா உனக்கு இங்க எல்லாம் சரியா அமைஞ்சதால மனுஷங்களோட அருமை தெரியல .... வீராவுக்கு கல்யாணம் முடிஞ்சு ஒரு மாசம் ஆகுது ... அந்த  பொண்ணு மேல இதுவரைக்கும்  ஒரு சின்ன தப்பாவது சொல்ல முடிஞ்சதா ... ....


அது வேலைக்கு போறேன்னு தான சொல்லுச்சு... ... என்னமோ பார்ட்டிக்கு போற மாதிரி ஆத்தாளும் பொண்ணு இந்த குதினு குதிக்கிறீங்க ...


உன் பையன் சொன்னது 100 சதவீதம் சரி.... கல்யாணம் முடிஞ்ச கையோட அன்புவும் மாப்பிள்ளையும்  சுத்தாத இடமே கிடையாது ...இவ்ளோ ஏன் உன் மூத்த பையன் சத்யன் ஒரு மாசம் லீவு எடுத்துக்கிட்டு ஹனிமூன்னு எங்கயோ கிளம்பி  போயிட்டான்......

ஆனா இவங்களுக்கு கல்யாணம் முடிஞ்சதிலிருந்து  பாண்டி வேலை, வேலைனு ஆபீஸ கட்டிக்கிட்டு அழுதுகிட்டு இருக்கான் .... இந்த பொண்ணு வீடே கதியா இருக்குது ...

இத்தனை நாளா நடுநிலையா யோசிச்சுக்கிட்டு இருந்தவன,  நீயே தூண்டிவிட்டு அந்த பொண்ணுக்கு சாதகமா யோசிக்க வச்சுட்ட ...


அருமையா அமைஞ்ச வாழ்க்கைய வாழ தெரியாம வாழ்ந்து,  தொலைச்சிட்டு நிக்கிறவங்க தான் இங்க அதிகம் ... அந்த லிஸ்ட்ல நீயும் சேர்ந்துடாத ...


இவ்ளோ  நாளா இந்த குடும்பத்தை அழகாக கட்டி காப்பாத்தி கொண்டு வந்திருக்க ... இனிமே அதை இப்படியே கொண்டு போறதும் உன் கையில தான் இருக்குது. 

உன் புள்ள சொன்னதும் சரிதானே ..

இதுவரைக்கும் அவன் இப்படி பேசி இருக்கானா... ??? நீ தேவையில்லாம அவன்  பொண்டாட்டிய பத்தி பேசி  அவனையும் பேச வச்சுட்டு, இப்ப அவன்  இப்படி பேசிட்டான்னு அவன் மேலயே குத்தம் சொல்ற...

இங்க பாரு உன் பையன காப்பாத்திக்குறது உன் கையில தான் இருக்கு , புத்திசாலித்தனமா நடந்துக்கிற வழிய பாரு "  


என  பொன்னம்பலம் பொட்டில் அடித்தார் போல் சொல்லிவிட்டு இடத்தை காலி செய்ய, கணவனின் பேச்சில் இருந்த உண்மையை அசை போட்டபடி  தன்னை மறந்து அகல்யா  உறைந்து நிற்க,  அவர்கள் பேசியது எதுவுமே கேட்கவில்லை என்றாலும் , தன் கணவருக்கும்  மாமியாருக்கும் இடையே நடந்த  வாக்குவாதத்தை  அவர்களின் உடல் மொழி மூலம்  அறிந்திருந்த ஸ்ரீப்ரியாவுக்கு தன்னவன்  எதுவுமே சாப்பிடாமல் வீட்டை விட்டு வெளியேறியது தொண்டை கனத்து கண்களை பனிக்க செய்ய, பொங்கி வந்த அழுகையை கட்டுப்படுத்த தெரியாமல் அந்த இடத்தை காலி செய்தாள்.



ஸ்ரீ-ராமம் வருவார்கள் ....




























































Comments

Post a Comment