ஸ்ரீ-ராமம்-81

 

அத்தியாயம் 81 

சொன்னது போலவே  மறுநாள் காலை, அவன் அலுவலகம் செல்லும் முன்  அவளது தற்குறிப்பை (Resume) அருமையாக  தயார் செய்து கொடுத்தான்.





அந்த வேலை என்னவோ பத்தே நிமிடத்தில் முடிந்து விட்டது  ... இடையிடையே சீண்டல் , ஊடல், உரசல், ஒட்டல் என செய்த வேலைக்காக வட்டியும் முதலுமாய் வசூலித்தவன்   வழக்கத்தை விட சற்று தாமதமாகவே அலுவலகம் கிளம்பிச் செல்ல, மதிய உணவிற்கு உதவியவள், பிறகு  தனது தற்குறிப்பை இணையதளத்தில்  பதிவேற்றும் பணியில் மும்மரமாக ஈடுபட்டாள்.


பகலில் உறங்கும் பழக்கம் இல்லாததோடு எப்பொழுதுமே பட்டாம்பூச்சியாய் வலம் வரும் பெண் மதிய உணவிற்கு நேரம் கடந்து வந்ததைப் பார்த்து 

"ஏம்மா உடம்பு எதாவது சரியில்லையா ..."     என்றார் அகல்யா அக்கறையாய்.


"இல்லை அத்தை .... ரெஸ்யூமே அப்லோட் பண்ற வேலை கொஞ்சம் இருந்தது ... அதை முடிச்சுட்டு வர லேட் ஆயிடுச்சு  ..."


ஒரு கணம் புரியாமல் யோசித்தவர், 

"வேலைக்கு போக போறயா ..." என்றார் கேள்வியாய்.


"ஆமா ... வீட்ல ரொம்ப  போர் அடிக்குது அத்தை ...." 

அவள் இயல்பாக மொழிந்தது தான் தாமதம்,


"பாண்டிக்கு தெரியுமா ..." என்றார் தீவிரமாய்.


"அவர் தான் ரெஸ்யூமே ப்ரிப்பேர் பண்ணி கொடுத்தது ...."


இப்பொழுது அகல்யாவின் முகத்தில் கோபச்சுவடுகள் தெள்ளத் தெளிவாய் தெரிய,


"நீங்களே  முடிவெடுத்தா போதுமா ... என்னையும் உங்க மாமாவையும் ஒரு வார்த்தை கேக்கணும்னு தெரியாதா ..." அவர் காட்டமாக  வினவ, இப்படி ஒரு கேள்வியை  சற்றும் எதிர்பார்க்காததால் எதிர்வினை ஆற்ற தெரியாமல் விழி பிதுங்கி நின்றாள் நாயகி.


"கல்யாணத்துக்கு முன்னாடி நீ வேலைக்கு போனது,  ஃபாரின் போனது எல்லாம் சரி  ஆனா இனிமே நீ எதுக்காக  வேலைக்கு போவணும்... என் பையன் கை நிறைய சம்பாதிக்கிறான் அப்புறம்  என்ன பிரச்சனை இந்த வீட்டு பொண்ணுங்க யாரும் வேலைக்கு போனதில்ல ...  


உனக்கு சமையலே சரியா தெரியல ...  அதைவிட சாப்பிடவும் தெரியல ... மொதல்ல அதை எல்லாம்  கத்துக்குற வழிய பாரு ...  கல்யாணம் முடிஞ்ச கையோட  குழந்தை பெத்துக்கிட்டா தான் நல்லது ... வேலை, வெட்டிக்கு போறேன்னு போயிட்டு நாளைக்கு  குழந்தைக்காக வேண்டி மருந்து  மாத்திரை சாப்பிடறதெல்லாம் சரி வராது ... புரிஞ்சுதா..."  வெடுக்கென சொல்லிவிட்டு அவர் விலக, வாயடைத்துப் போனாள்.


அரைகுறையாய் மதிய உணவை முடித்துக் கொண்டு அறைக்கு வந்தவளின் மனம் நிலை கொள்ளாமல் தவியாய் தவித்தது.


அறைக்கதவு ஒருக்களித்திருந்தாலும், கீழ் தளத்தில்  நடைபெறும் உச்சஸ்தாழி உரையாடல்கள் அட்ச்சர சுத்தமாய் அவள் காதுகளை எட்டின .


"ஏண்டி,  உனக்கு ஏன் இந்த தேவையில்லாத வேலை ... அந்தப் பொண்ணு வேலைக்கு போக இஷ்டப்பட்டா  போவட்டுமே ..."

என பொன்னம்பலம் அகல்யாவிடம் சொல்ல,

"நம்ப அன்பு, பிரபா இவங்க எல்லாம் வேலைக்கா போனாங்க ..."


"அன்புக்கு  படிப்புலயே இன்ட்ரஸ்ட் இல்ல ... அவ எங்க  வேலைக்கு போக இஷ்டப்பட்டா ... பிரபாவுக்கும் போக இஷ்டம் இல்லாததால போவல ... இந்த பொண்ணு நிறைய படிச்சிருக்கு நல்லா வேலை பார்த்து இருக்கு... போவட்டுமே ..."


"பிரபா கல்யாணம் முடிஞ்சு ஒரு மாசத்துல மாசமாயிட்டா .... அன்பும்  அப்படித்தான் ... இங்கன கல்யாணம் முடிஞ்சு ஒரு மாசம் ஆவப்போவுது ... குழந்தைக்கு வழிய காணோம் ... வேலைக்கு போறேன்னு சொன்னா என்ன அர்த்தம் ..."


"வேலைக்கு போறவங்க குழந்தை பெத்துக்கிறது இல்லையான்ன.... இங்க  நீ ஒரு மாமியார் தான் .... அந்தப் பொண்ணு  வேலைக்கு போனா அங்கன பல மாமியார சமாளிச்சு ஆவணும் ... என்னமோ  சினிமா டிராமா போற மாதிரி ஜாலிக்காக வேலைக்கு போறானு நினைச்சியா ..."


"நீங்க என்ன சொன்னாலும் எனக்கு அவ வேலைக்கு போறதில்ல இஷ்டம் இல்ல...இன்னைக்கு பாண்டி வரட்டும் ஒரு முடிவு கட்டறேன் ..."  என்று அவர் தீர்க்கமாய்  உரைத்து விட்டு உரையாடல்களுக்கு முற்றுப்புள்ளி வைத்தார். 


அறையில் இட வலமாக நடந்தபடி அகல்யா உரைத்ததை அசை போட்டு பார்த்தவளுக்கு,  அனிச்சையாய் கரம் அடிவயிற்றை தொட, ஏதோ புது உணர்வு பாய்ந்தது போல் உடல் சிலிர்த்தது. 


குழந்தை ஆசை யாரை தான் விட்டது ....


ஆனால் இதுவரை அவளும் அவளவனும்  குழந்தை குறித்து பேசியதே இல்லை ... என்பதும் நினைவுக்கு வர, அச்சிந்தனையில் உழன்று கொண்டே நாட்காட்டியை பார்த்தாள்.



திருமணத்திற்கு முன்பான மாதவிடாய் தேதியை நினைவில் நிறுத்தி கணக்கிட்டுப் பார்த்தவளுக்கு 30 நாட்கள் கடந்திருப்பது தெரியவந்தது.


அவளுக்கு எப்பொழுதுமே முறையற்ற மாதவிடாய் சுழற்சி தான்.


30, 35 ஏன் 40 நாட்களில் கூட மாதவிடாய் வருவது வழக்கம் ...


என்றாலும் குழந்தை உண்டாகி இருப்போமோ என்ற நப்பாசை எழ,


" ப்ரியா , என் அக்காவுக்கும் உன்னை மாதிரி  இர்ரெகுலர் பீரியட்ஸ் தான் ... கல்யாணமாயி  ஒரு வருஷம் கழிச்சு தான் கன்சீவ்வானா... ஆனா அதுக்குள்ள மாசா மாசம் ரொம்ப எதிர்பார்த்து  ப்ரஸ்ட்ரேட் ஆயிட்டா .... அப்புறம் டாக்டர்  கன்சீவ் ஆகுறதுங்கிறது நேச்சுரல் ப்ராசஸ் ... ரொம்ப எதிர்பார்க்காம இயல்பா இருந்தாலே எல்லாம் தானா நடக்கும்னு அட்வைஸ் பண்ணாங்க... முதல்ல அதை ஃபாலோ பண்ண கஷ்டப்பட்டா,  அப்புறம்  கண்டுக்காம விட்டுட்டா ... 6  மாசம் கழிச்சு நேச்சுரலாவே கன்சீவ் ஆயிட்டா ..."


ஆஸ்திரேலிய தோழி அனுவிடம் ,ஸ்ரீப்ரியா தன் திருமணத்திற்கு நாள் குறிப்பது குறித்து  பேசும் போது  தன் முறையற்ற  மாதவிடாய்  சுழற்சியை பற்றி  பகிர, அப்போது அவள் சொன்ன அறிவுரைகள் தான் இது. 


அதனை மனதில் ஓட்டிப் பார்த்துவிட்டு 40 நாட்கள் கடக்கட்டும் .... பிறகு மருத்துவரை நாடலாம்  என தன்னைத்தானே சமாதானப்படுத்திக் கொண்டவள்  மனச்சோர்வின்  காரணமாக படுக்கையில் விழ அடுத்த பத்து நிமிடத்தில் ஆழ்ந்த உறக்கத்திற்கு சென்றுவிட்டாள்.


அறைக்கு வந்த அகல்யாவிற்கு இருப்பு கொள்ளவில்லை. 


தன் கணவன் மருமகளுக்கு சாதகமாக பேசியதை ஏற்றுக்கொள்ள முடியாமல் தவித்தவர் , தன் தரப்பு வாதத்திற்கு வலு சேர்க்க எண்ணி  சிங்கப்பூரில் இருக்கும் மூத்த மகன்  சத்யனை தொடர்பு கொண்டார்.


சத்யன் அன்று அலுவலகத்திற்கு விடுப்பெடுத்து இருந்ததால்,சத்யன் பிரபா இருவருக்குமே நடந்த அனைத்தையும் ஒன்று விடாமல் அகல்யா மறுஒளிபரப்பு செய்ய,


"அம்மா,  அந்த பொண்ணு இஷ்டப்பட்டா வேலைக்கு போகட்டுமே ... நீ எதுக்கு தேவையில்லாம அவங்க விஷயத்துல தலையிடற .... பிரபா உடனே கன்சீவ் ஆனதால வேலைக்கு போகல ... குழந்தை பிறந்ததும்,  வீட்ட பார்க்க,  குழந்தைய பார்க்கவே நேரம் சரியா இருக்கிறதால  இப்ப கூட அவளால  வேலைக்கு போக முடியல ... சோ எங்க கதையே வேற ...பிரபாவோட ஸ்ரீப்ரியாவை கம்பேர் பண்ணாத ..."  என சத்யன் பொரிந்து தள்ள , ஸ்ரீப்ரியாவின் மீது இருக்கும் நன்மதிப்பின் காரணமாக பிரபாவும்,


"அத்தை,  எனக்கே வேலைக்கு போக இஷ்டம் இல்ல ... அதோட என் சிச்சுவேஷனும் அதுக்கேத்த மாறி ஆனதால நான் வேலைக்கு போகல ... என்னோட ஸ்ரீப்ரியாவ கம்பேர் பண்ணாதீங்க .... அவளுக்கு ஆன் சைட் எக்ஸ்பீரியன்ஸ் இருக்கு ... அதைவிட அவளுக்கு வேலைக்கு போகவும் இன்ட்ரஸ்ட் இருக்கு ... சோ போகட்டுமே ..."


"ஐயோ பிரபா,  அவ  சரியா கூட சாப்பிட மாட்டேங்கிறா  .... எப்ப பாத்தாலும் ஏதாச்சும் புக்கும் கையுமா  சுத்திக்கிட்டு இருக்கா ... இப்பவே இப்படின்னா வேலைக்கு போனா அவ்ளோ தான்..." என அகல்யா மீண்டும் அங்கலாய்க்க,


" சில பேரோட உடம்பு வாகு அப்படி அத்தை...  எல்லாம்  போக போக சரியாயிடும் ...  வீட்ல இருக்கிறதால அப்படி இருக்கா ... வேலைக்கு போக ஆரம்பிச்சுட்டா சரியா சாப்பிட ஆரம்பிச்சுடுவா..."  என பிரபா சமாதானம் சொல்ல, 


மூத்த மகனும் மருமகளும் , தனது வாதத்திற்கு வலு சேர்ப்பார்கள் என்றெண்ணி அழைத்தவருக்கு பெருத்த ஏமாற்றமே மிஞ்ச, அதற்கு மேல் வாதத்தை தொடர விரும்பாமல் இயல்பாகப் பேசி அழைப்பை துண்டித்தார் அகல்யா. 


பிறகு நீண்ட யோசனைக்கு பின்  அன்புவை தொடர்பு கொண்டார் .


சத்யனை காட்டிலும் அன்புவை தொடர்பு கொள்வதில் அவருக்கு  சில தயக்கங்கள்  இருக்கவே செய்தன.


காரணம், அன்புவிற்கு சத்யனைக் காட்டிலும் வீராவின் மீது பிரியம் அதிகம்.  வீரா ஒரு விஷயத்தை முன் மொழிந்தது தெரிந்தால் உடனே கண்களை மூடிக்கொண்டு அதனை வழிமொழிந்து விடுவாள்  என்பதாலேயே தொடர்பு கொள்ள யோசித்தார். 


ஆனால் தற்போது தன் தரப்பு வாதத்திற்கு எல்லா புறமிருந்தும் எதிர்ப்பு வலுப்பதால்  வேறு வழியின்றி தொடர்பு கொண்டு அவர்  அனைத்தையும் கூறி முடிக்க,


" நீ சொன்னது தாம்மா சரி ... அண்ணன் வந்ததும் எனக்கு அவ வேலைக்கு போறதில்ல இஷ்டம் இல்லனு தெளிவாக பேசிடு ..." 


என அன்பு ஆதரவு கரம் நீட்டநிம்மதி பெருமூச்சு விட்டார் அகல்யா.


"இப்ப அண்ணி வேலைக்கு போக ஆரம்பிச்சா , மாசமானாலும் வேலைக்கு போய்கிட்டு தான் இருப்பாங்க ... டெலிவரி டைம்ல மட்டும் லீவ் எடுத்துப்பாங்க ...அதுக்கப்புறம் குழந்தையை உன் கைல கொடுத்து பார்த்துக்க சொல்லிட்டு மறுபடியும் வேலைக்கு போக ஆரம்பிச்சிடுவாங்க ... கடைசில நீ தான் கஷ்டப்படணும் ..." 

என அவள் வேதம் ஓத,


"குழந்தையை பாத்துக்குறது எல்லாம் எனக்கு ஒரு பிரச்சனையே இல்ல அன்பு ...  ஆனா அதுக்கு அவ முதல்ல மாசமாகணும் இல்ல ...

நாலு இட்லி சாப்பிடறதுக்குள்ள திணறி  போறா .... மூணு தோசை சாப்பிட அந்த முக்கு முக்கறா...சாப்பாட்டை பத்தி  சொல்லவே வேணாம் ...ரெண்டு கரண்டிக்கு மேல சாப்பிடறதே இல்ல ...  அவ வீட்டுக்கு வந்து ஒரு மாசம் ஆகுது ... இப்ப வரைக்கும்  எதையுமே அவ  ரசிச்சே சாப்ட்டதில்ல... எல்லாத்தையும் அளவா  தான் சாப்டறா.... காலங்காத்தால எனக்கு முன்னாடியே அடுப்பங்கரைல குளிச்சிட்டு வந்து நிக்கறா...அவளுக்கு தூக்கமும் சரி இல்ல சாப்பாடும் சரியில்ல...  இப்பவே இந்த லட்சணம்னா நாளைக்கு வேலைக்கு போனா,  அவ உடம்பு ஒண்ணுமே இல்லாம போயிடும்...


இதை சொன்னதுக்கு ,  சில பேரோட உடம்பு வாகு அப்படித்தான் ...  போகப் போக சரியாயிடும்னு பிரபா சொல்றா ..." என தன் ஆதங்கத்தை அகல்யா மனப்பூர்வமாக மொழிய,


"ஆமாம்மா நீ சொல்றது ரொம்ப சரி ....  அண்ணி ஏற்கனவே  ஒல்லியா தான் இருக்காங்க ... அது மட்டும் இல்ல ஐடி வேலைக்கு எல்லாம் போயிட்டாங்கன்னா பாண்டி அண்ணன் மாதிரி ராப் பகலா அவங்களுக்கு  வேலை இருந்துகிட்டே இருக்கும் ...அதனால ஸ்ட்ரஸ் அதிகமாகும் ஹார்மோனல் இம்பலன்ஸ் பிரச்சனை வரும் .... கடைசில கன்சீவ் ஆகுறதே ரொம்ப கஷ்டமாயிடும் ..."

என ஒத்துப் பேசி அவள் தூபம் போட,


"சரி அன்பு,  பாண்டி வரட்டும் நான் எல்லாத்தையும் சொல்லி புரிய வைக்கப் பார்க்கறேன் ..."  என அழைப்பை துண்டித்தார் அகல்யா.


அழைப்பு துண்டிக்கப்பட்டதற்குப் பிறகும்  அலைபேசியை உற்று நோக்கிய அன்பு 


"ஏற்கனவே சின்ன அண்ணி வந்ததிலிருந்து அப்பா என்னை மதிக்கிறதில்ல ... அவங்க வேலைக்கு வேற போக ஆரம்பிச்சிட்டா  அவ்ளோ தான்...பெரியண்ணன், அண்ணி ஏற்கனவே  அவங்கள  தலைல தூக்கி வச்சி ஆடிட்டு இருக்காங்க ... இன்னும் அவங்களோட  புகழ் பாட ஆரம்பிச்சுடுவாங்க அது மட்டும் இல்ல குழந்தை பிறந்ததும்,  கூடமாட ஒத்தாசைக்கு அம்மாவ கூட்டிட்டு வந்து வச்சுக்கலாம்னு பிளான் பண்ணி இருக்கேன் ... சின்ன அண்ணி  வேலைக்கு போக ஆரம்பிச்சா அதுல மண்ணு விழுந்திரும்... அதனால அவங்க   வேலைக்கு போகாம இருக்கிறது தான் எனக்கு நல்லது  ... " 


எதிரில் ஆள் இருப்பது போல் தன் மனதில் இருப்பதை கொட்டி முடித்தாள். 



அலுவலகத்தில் வெளிநாட்டு வாடிக்கையாளருடன் வெற்றிகரமாக  கலந்தாய்வை முடித்த வீரா,  உடன் வந்த ஸ்ரீனியிடம் ,


"பக்காவா பிரசன்டேஷன பிரிப்பர் பண்ணி ரைட் டைம்ல கொடுத்ததுக்கு ... தேங்க்ஸ் எ லாட் டா..." என்றான் நட்பாக. 


"இந்த தடவை உனக்கு வொர்க் லோடு அதிகமா இருந்ததால , நான் செஞ்சு கொடுத்தேன் ... இல்லன்னா எப்பவும் நீ செய்யறது தானே ..."

என்றான் ஸ்ரீனி வீராவோடு அவன் அலுவலக அறைக்குள் நுழைந்த படி.


அங்கு  மேஜையின் மேல்,  வீராவும் ஸ்ரீப்ரியாவும் ஒப்பனை ஏதுமில்லாமல் வெகு இயல்பாக எடுத்துக்கொண்ட அழகான புகைப்படம் ஒன்று இருக்க,  


"இது உன் மாமனார் வீட்ல எடுத்ததா நல்லா இருக்கே ..." என்றான் ஸ்ரீனி. 


"இல்லடா ... கல்யாணமாகி இன்னும் நான் என் மாமனார் வீட்டுக்கே போகல ... இந்த போட்டோவ என் மச்சான் கல்யாணம் முடிஞ்சு அவங்க  குலதெய்வ கோவில்ல  பொங்கல் வைக்க போன போது எடுத்தான்  ...."


"ஓ வெரி நைஸ் ... ஸ்ரீப்ரியாவும் உன்னை மாதிரியே ரொம்ப சாந்தம் போல ..." 


" நல்லா சொன்ன போ... அவ அவங்க  அப்பா கிட்ட மட்டும் தான் சாந்தம்...என்கிட்ட நிறைய வாய் பேசுவா ..." என்றவன் முன்தின இரவு ஷோபனா கொடுத்த கைக்கடிகாரத்தால் நடந்த அலப்பறையை சொல்ல,  குலுங்கி சிரித்தான் ஸ்ரீனி.


"எனக்கு தெரிஞ்சு காலேஜ் பர்ஸ்ட் இயர் வரைக்கும் தான் , என் அப்பா அம்மா, தங்கச்சி எல்லாம் எங்க போன எங்க வந்தேன்னு கேட்டுகிட்டு இருந்தாங்க .... அதுக்கு மேல  கம்ப்ளீட்டா நிறுத்திட்டாங்க .... வேலைக்கு ஜாயின் பண்ணதிலிருந்து சுத்தம், நான் எப்ப வீட்டுக்கு வரேன்,  எங்க போறேன்னு கூட யாரும் கேட்க மாட்டாங்க ...நானா ப்ராஜெக்ட்டுக்காக இந்த  கண்ட்ரிக்கு போறேன் வர ரெண்டு வாரம் ஆகும்னு சொன்னா  அப்படியானு கேட்டுக்குவாங்க ... 

ஆரம்பத்துல அது நல்லா தான் இருந்தது .... ஆனா போகப் போக நம்மள யாருமே எதுவுமே கேட்கலன்னு போது ஒரு மாதிரி லோன்லினஸ் வந்துடுச்சு  .... 


அதை என்னையும் அறியாம, கடந்த ஒரு வருஷமா  நான் உணர ஆரம்பிச்சேன் ... 


பொதுவா பசங்களுக்கு நிறைய ஃப்ரெண்ட்ஸ் இருப்பாங்க ... ஆனா அந்த பிரண்ட்ஷிப்ல பொஸசிவ்னஸ் இருக்காது ... 


ஒரு கேர்ள் பிரண்டோ, இல்ல லவ்வரோ இருந்தா தான் பொசசிவ்னஸ்ஸ உணர முடியும் ...

எனக்கு அந்த மாதிரி யாரும் இல்லாததால இவ்ளோ நாளா அதை  உணரல ... நானும் யார் மேலயும் பொசசிவ்வா இருந்ததில்ல.. என் மேலயும் யாரும் பொசசிவ்வா இருந்ததில்ல...

ஆனா இப்ப நான் ஸ்ரீ  மேல ரொம்ப ஃபோகஸ்டா இருக்கேன் ... அவ என் மேல ரொம்ப பொசசிவ்வா இருக்கா ... இந்த பாண்டேஜ் எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு .... 

கணக்கணக்குற அக்னி பக்கத்துல உக்காந்துகிட்டு,  அண்டார்டிகா பனிய ரசிச்சா எப்படி இருக்கும் ...அந்த மாதிரி ஒரு கதகதப்பான செக்யூர்டு ஃபீல் ....

இதெல்லாம் சொன்னா புரியாது அனுபவிச்சா தான் புரியும் ..." என வீரா லயித்துப் பேச 


"வாவ் கங்கிராஜுலேஷன்ஸ் ...  கம்ப்யூட்டர் முன்னாடி கால்குலேஷன் போட்டுக்கிட்டு இருந்த நீ இப்படி  மினி கவிஞனா மாறி  பேசுறத  கேட்க ரொம்ப ஆச்சரியமா இருக்குடா ...."  என்றான் ஸ்ரீனி மனமார வாழ்த்தி. 


மனம் முழுவதும் காதலோடு மனையாளைக் காண  மனைக்கு வந்தவனை என்றுமில்லா திருநாளாய்  வாயிலிலேயே நின்று வரவேற்றார் அகல்யா.


காரை வீட்டிறங்கியவனை நெருங்கி,


"பாண்டி... இப்படி உக்காரு .. உன் கூட கொஞ்சம் பேசணும் ..." என்றார்  வீட்டு முன் தோட்டத்தில் பக்கவாட்டில் போடப்பட்டிருந்த பென்ச்சை  காட்டி.


தாயின் நடவடிக்கைகள் முற்றிலும் நூதனமாக இருப்பதை உணர்ந்தபடி பெஞ்சில் வந்தமர்ந்தவன்,


"என்ன இது புது பழக்கம் ...  வீட்டுக்குள்ள கூட பேச முடியாம இங்க தனியா பேசற அளவுக்கு அப்படி என்ன முக்கியமான விஷயம்..."  என்றான் ஆராய்ச்சி பார்வையோடு.


"ஸ்ரீப்ரியா வேலைக்கு போ போறாளா ..." என்றார் எடுத்த எடுப்பில். 


"ஆமா ... வேலைக்கு போகட்டுமான்னு கேட்டா போன்னு சொன்னேன் ..."


"யாரைக் கேட்டு இப்படி முடிவெடுத்த .."


"வாட் ....????யாரை கேட்கணும் ...?"


"எங்க கிட்ட ஒரு வார்த்தை கூட கேட்காம,  எப்படி நீ உன் பொண்டாட்டி வேலைக்கு போக ஒத்துக்கலாம் ... நம்ம வீட்டு பொண்ணுங்க யாருமே போனதில்லை ..."


" ஸ்ரீ என்ன,  பார், பப்புக்கா  போறேன்னு சொன்னா.... படிச்சிருக்கா எக்ஸ்பீரியன்ஸ் இருக்கு வேலைக்கு போறேன்னு சொல்றா இதுல என்ன தப்பு இருக்கு ... அவ உங்ககிட்ட இல்ல,   என்கிட்ட  கூட பர்மிஷன் கேட்க வேண்டிய அவசியமே இல்ல... வேலைக்கு போணுமா வேணாமான்னு அவ தான் டிசைட் பண்ணனும் ... "

 

"எங்க வீட்ல இருக்கிற வரைக்கும், எங்க கிட்ட பர்மிஷன் கேட்டு தான் ஆகணும் ..." என அகல்யா அவசரத்தில்  வார்த்தைகளை விட,


"ஓ... அப்ப இனிமே நாங்க  உங்க வீட்ல இல்ல .... நாளைக்கே நாங்க வெளியே போறோம்.." என்றான் மைந்தன் கோபத்தில் அதிரடியாக. 


அப்போது தான் , தான்  வார்த்தைகளை தவறுதலாக பிரயோகப்படுத்தி விட்டோம் என்றுணர்ந்து,


"ஐயோ பாண்டி ... எங்க கூட  இருக்கிற வரைக்கும் எங்க கிட்ட பர்மிஷன் கேட்கணும்னு சொல்ல வந்தேன் .... கடைசில ஏதோ உளறிட்டேன் ...இங்க பாரு ... கல்யாணம் பண்ணிக்கிட்டோமா குழந்தை பெத்துக்கிட்டோமான்னு நிம்மதியா வாழறத விட்டுட்டு ... வேலைக்கு போய் ஸ்ட்ரெஸ்,  ஹார்மோனல் இம்பேலன்ஸ்னு தேவையில்லாத பிரச்சனையை தூக்கி சுமக்கணுமா  ..."

"அம்மா... உனக்கு இப்படி எல்லாம் பேசவே தெரியாதே.... நீ யூஸ் பண்ற வார்த்தைங்க கூட ரொம்ப புதுசா இருக்கே ... நீ ரொம்ப மாறிட்டம்மா.." என்றான் மகன் ஆராய்ச்சி பார்வையோடு .


"நான் மாறல டா... நீ தான் மாறிட்ட... ஒரே மாசத்துல அவ உன்னை மாத்திட்டா..."


" என்னமா.... என்னென்னமோ பேசற ... அவ வேலைக்கு போகணும்னு சொன்ன  சாதாரண விஷயத்தை ஏன் இவ்ளோ பெருசாக்குற...  அவ வேலைக்கு போறதால உனக்கு என்ன தாம்மா பிரச்சனை ..."


"எனக்கு ஒன்னும் பிரச்சனை இல்லைப்பா ... நாளைக்கு உனக்கு தான் பிரச்சனை....  ஏற்கனவே உன் பொண்டாட்டி சரியாவே சாப்பிடறதும் இல்லை  தூங்குறதும் இல்லை .... இந்த லட்சணத்துல காலையில வேலைக்கு போய்  மாங்கு மாங்குனு உழைச்சிட்டு நைட்டு வந்தான்னா சுத்தம் ... அப்புறம் குழந்தை வேண்டி டாக்டர் டாக்டரா போக வேண்டியது தான்... " 


அதுவரை திடமாக பேசிக் கொண்டிருந்தவனுக்கு,  ஏனோ அந்த வார்த்தைகள் சுருக்கென்று தைக்க, சுதாரித்தவன்,


"அவ விஷயத்துல நீயோ நானோ தலையிட வேண்டாம் ...  அவ ஆசைப்பட்டத அவ செய்யட்டும்... இனிமே இத பத்தி பேச வேண்டாம் ..."

தீர்த்தமாய் பேசி விட்டு அவன் இடத்தை காலி செய்ய,  செய்வதறியாது பின் தொடர்ந்தார் அகல்யா.


செய்து முடித்த இரவு உணவை உணவு மேஜையில் அடுக்கிக் கொண்டிருந்தவள், கணவனை பார்த்து முகம் மலர, அவனோ வழக்கத்திற்கு மாறாக தீவிர சிந்தனையில் மூழ்கிய படி  அவளைப் பாராமல் நேரடியாக வாஷ்பேசினுக்கு சென்று  கை கழுவிக்கொண்டு உடை கூட மாற்றாமல்  உணவருந்த உணவு மேஜைக்கு வந்தான் .


அகல்யாவும்  மகனுக்கு அருகில் வந்தமர , மூவருக்கும் பரிமாறி விட்டு, தனக்கென இரண்டு   சப்பாத்தியை தட்டில் போட்டுக்கொண்டு உண்ண ஆரம்பித்தாள் ஸ்ரீப்ரியா. 


எப்பொழுதுமே கலகலப்பாக இருக்கும் அந்த வீட்டின் உணவு நேரம்,  இன்று அரைகுறை அமைதியை தத்தெடுத்திருந்தது. 


பெண்கள் இருவரும் அமைதியாக உண்ண  பொன்னம்பலம் மட்டும் அரசியல், பங்கு வர்த்தக செய்திகளை பொதுவாக பகிர்ந்த படி உண்டார்.


தந்தையின் ஒரு சில கேள்விகளுக்கு மட்டும்  பதில் அளித்தவனின் சிந்தையில்  ஏதோ ஒன்று திடீர் தொற்றாய் தொற்றிக்கொண்டு உறுத்திக் கொண்டே இருக்க, அது என்ன என்று ஆராய்ந்து பார்ப்பதற்கு  வழக்கத்தை விட குறைவாக சாப்பிட்டுவிட்டு தன் அறைக்கு சென்றான். 



" திலக் ,  இன்னைக்கு காலையில கனவுல கூட மது வந்தாடா ..." என ஐந்து நட்சத்திர விடுதியின் கேளிக்கை தளத்தில்  மது அருந்திய படி  ராணா லேசான கிறக்கத்தோடு  கூற, 


"மது, மது, மது ... ஒன்னு அந்த மது இல்லன்னா இந்த  மதுவா( கையில் இருந்த கோப்பையை காட்டி)  ... நீ பேசறதெல்லாம்  பார்த்தா உன் நிலைமை பழைய மாதிரி மோசமாயிடுமோனு எனக்கு பயமா இருக்கு டா...  வாரத்துக்கு ஒரு தடவை தண்ணி அடிச்சுக்கிட்டு இருந்த...  இப்ப கொஞ்ச நாளா  தினமும்  தண்ணி அடிக்க ஆரம்பிச்சிட்ட... சொன்னா கேளு... இதெல்லாம் நல்லதுக்கு இல்லை .... டாக்டர் ஷர்மா கிட்ட அப்பாயிண்ட்மெண்ட் வாங்கியிருக்கேன் ... நாளைக்கு போய் அவரை மீட் பண்ணு ....  வேற ஏதாவது மாத்திரை மாத்தி கொடுப்பாரு..."


"ம்ச்... நான் மனச பத்தி பேசிகிட்டு இருக்கேன் நீ மாத்திரையை பத்தி பேசிகிட்டு இருக்க ..."


"முதல்ல மான்சிய பத்தி பேசு ... அப்புறம் மத்தத பத்தி பேசலாம் ..."  வெடுக்கென்று திலக் சொல்ல, தன் தலை முடியை அழுந்த கோதியபடி கண்களில் வெறுப்போடு கழுத்தை  திரும்பிக் கொண்டவனின் அலைபேசி சிணுங்கியது.


"சொல்லு மோனிஷா ..." என்றான் அழைப்பை அனுமதித்து .


"அடுத்த மாசம்  வாக்-கின் இன்டர்வியூக்கு ஜூனியர் ஆர்கிடெக்ட், சீனியர் ஆர்கிடெக்ட் , டெக் லீட்க்கு மட்டும் ஓப்பனிங்ஸ் போட்ட போதுமா சார்... மேனேஜ்மென்ட் ட்ரெய்னிக்கும் போடணுமா ..."


அதுவரை குழறியபடி பேசிக் கொண்டிருந்த ராணா,  கண நேரத்தில்  கம்பீரத்தைக் குரலில்  கொண்டு வந்து ,


" மேனேஜ்மென்ட்  ட்ரெய்னிக்கும் கால் ஃபார் பண்ணிடுங்க .... சீனியர் ஆர்கிடெக்ட், டெக் லீட்  பொசிஷன்க்கு  ஆன்சைட் எக்ஸ்பீரியன்ஸ் ப்ரிஃபர்ரபுலி ரெக்வையார்டுனு ( வெளிநாட்டில் பணிபுரிந்த தகுதி தேவை) மென்ஷன் பண்ணிடுங்க ..." 

என அழைப்பை துண்டித்தவனிடம்,


"இவ்ளோ சின்ன விஷயத்தை கூட    பார்த்து பார்த்து செய்யறதால தான்,   இந்த தொழில்ல ஷார்ட் ஸ்பேன்ல  இவ்ளோ  சக்சஸ்ஃபுல்லா இருக்க ... ஆனா மதுவை மட்டும் மறக்காம பாடா படுத்துற... ஒன்னு பண்ணு,   ஒரு  எஸ்கார்டை அரேஞ்ச் பண்றேன் ... அவ கூட எங்கேயாவது போய் ஒரு பத்து நாள் இருந்துட்டு வா .... சீக்கிரமே  மதுவை மறந்துடலாம்...  " என்றான் திலக் நண்பனுக்கு உதவும் விதமாக.


"ம்ச்... திலக் ...  உன்னால கூட என்னை புரிஞ்சுக்க முடியலையா ...எனக்கு படுக்குறதுக்கு பொண்ணு வேண்டாம் டா...  பார்த்துக்கிட்டே இருக்க என் மது வேணும்டா..."  என்றவனின் கண்கள் அளவுக்கு அதிகமாக சிவக்க,   கைகள் லேசாக நடுங்க தொடங்க, அதைக் கண்டதும் 

"கிளம்பு...  இனிமே நீ இங்க இருந்தா சரி வராது..."  நண்பனின் கரம் பற்றி அழைத்துக் சென்று காரில் ஏற்றி துரிதமாக காரை கிளப்பினான்  திலக்.


ஸ்ரீ-ராமம் வருவார்கள் .....

 






































Comments

  1. Awesome as always 💕💕💕💕💕

    ReplyDelete
  2. எல்லா மாமியார் போலவே அகல்யா இருப்பது யதார்த்தமே.. ஆனால் வீரா பேச்சு சூப்பர் sis...how understandable husband he is. Very nice ud.. waiting for next ud... ,,

    ReplyDelete

Post a Comment