ஸ்ரீ-ராமம்-80

 அத்தியாயம் 80


லேசாக சீட்டியடித்துக் கொண்டே காரை நிறுத்திவிட்டு  வீட்டிற்குள் நுழைந்த வீராவின் விழிகள் அவன் கண்ணாட்டியை தேட,  அவனை எதிர்கொண்ட அகல்யா,


"வா ப்பா....  இன்னைக்கு என்ன இவ்ளோ சீக்கிரமா வந்துட்டா.... காபி குடிக்கிறியா ..." 

என விசாரிக்க , மனையாளை தேடித்தேடி களைத்த மைந்தன் ,

"அப்புறம் வந்து குடிக்கிறேம்மா....  இப்ப ஒரு  இம்பார்டன்ட் மீட்டிங் இருக்கு  ஜாயின் பண்ணனும்..." என அவசரத்தை குரலில் காட்டி விட்டு, நான்கு நான்கு படிகளாக தாவி குதித்து  தன் அறைக்கு சென்று, புத்துணர்வு பெற்று மேல் சட்டையை மட்டும் கழற்றி விட்டு  மடிக்கணினியின் முன் வந்தமர்ந்தவன் கலந்தாய்வில் இணைந்து கொண்டதோடு திட்ட வரைவுக்கான கணக்கீடுகளிலும் மூழ்கிப் போனான்.



சில மணித்துளிகள் கடந்த நிலையில்,  பளபளக்கும் பச்சை புடவையில் துள்ளல் நடையில் மின்னல் வேகத்தில்  வந்த அவன் மனையாள் சூழல் நாற்காலியில் அமர்ந்திருந்தவனுக்கு அருகில் இருந்த மேஜையில் அமர்ந்து


"எப்ப வந்தீங்க ராம் ..."  என்றாள்  புன்னகையோடு. 



"வந்து பத்து நிமிஷம் ஆகுது... ஆமா... நீ எங்கடா போயிருந்த ..." என்றான் அவள் விழிக்குள் நோக்கி.


கண்ணிமைக்கும் நேரத்தில் மடிக்கணினி முன்பு அமர்ந்திருந்தவனின் மடியில் ஏறி அமர்ந்தவள், 


"தோட்டத்துல வேலி ஓரத்துல இருந்த முள்ளு செடிய எல்லாம் வெட்டிக்கிட்டு இருந்தேன் ..." என்றாள் அவன் முன் தலை  கேசத்தை  கலைத்தபடி .


" ஐயோ ... எதுக்கு பட்டு...  இந்த வேண்டாத வேலை உனக்கு .... கந்தன் கிட்ட சொன்னா செய்யப் போறான் ...  கையில முள்ளு கீரினாலோ கத்தி பட்டாலோ என்ன ஆகறது..." 

என்றான் அவளது மென் கரங்களை ஆராய்ந்து கொண்டே.


பெரும்பாலான தம்பதியர்க்கிடையே திருமணமான புதிதில் இருக்கும்  மோகம் , ஈர்ப்பு , காதல் , கூடல்  இவர்களுக்குள்ளும் மலிந்திருந்தது ... என்ன ஒன்று புரிதலும்  இருந்தது சற்று கூடுதலாக  எனலாம் ...


அதற்கு காரணம் அவள் அல்ல ... அவன் தான் ...


அவளை மிகச் சரியாகப் புரிந்து கொண்டு,  அவள் இயல்பை மாற்ற முயற்சிக்காமல் அவளை அவளாகவே அவன் நேசிக்க, தந்தை வீட்டில் சுயத்தை தொலைத்து விட்டு வாழ்ந்திருந்தவளுக்கு தன்னவனிடத்தில் தன்மை மாறாமல் வாழும் வாழ்வு தேன்துளி கலந்த பலாச்சுளையாய் இனித்தது .


அவள் சொல்லாமலே அவளது தேவைகளை உணர்ந்து  பார்த்து பார்த்து செய்தான் ....


ரசனையில் இருவரும் இரு வேறு துருவங்களாக இருந்தாலும், அவளது ஆர்வத்திற்கு பல வகையில் மதிப்பளித்தான் ...


பேச்சுவாக்கில் அவள் செப்பிய சிறு விஷயங்களை கூட நினைவில் வைத்துக் கொண்டு,  அதற்கான சந்தர்ப்பங்கள் அமையும் பொழுது அந்த சின்ன சின்ன ஆசைகளை கூட பூர்த்தி செய்து மகிழ்வித்தான் ...


எந்த ஒரு உறவையும் உயிர்ப்பாய் வைத்திருப்பது தரமான உரையாடலும் நகைச்சுவையும் தான் ...


அவளை விளையாட்டாய் அடிக்கடி சீண்டுவான் .... அந்த சீண்டலில் ஹாஸியம் அதிகமாய் கலந்திருக்கும் ...


இப்படி மனைவியாய், மழலையாய், தோழியாய் , காதலியாய்  அவளை கையாண்டவனிடம்,  கண்மண் தெரியாத காதலில் கரைந்து காணாமல் போய் கொண்டிருந்தாள் அவன் மனையாட்டி. 



'சிட்டு' என்பான்,  'பட்டு' என்பான்,   'சொல்லுடா' என்பான் .... 'என்னம்மா' என்பான் ...  'என்ன டி' என்பான்...  இப்படி நேரத்திற்கு தகுந்தாற் போல் அவன் விளிக்க , அவளோ பெரும்பாலும் அவனை 'ராம்' என்பாள் ... சிறு கோபம் ஏற்பட்டால் 'யோவ்' என்பாள்... கொஞ்சும் நேரத்தில் 'போடா' என்பாள் .... அவளது 'ராமை' காட்டிலும் , மற்றதை வெகுவாக ரசிப்பான் அவளது நாயகன் ...


தன் சுயத்தை மாற்றாமல் ஏற்றுக்கொள்ளும் துணை அமைந்துவிட்டால் ,  திருமண வாழ்வே சொர்க்கம் தான்.... 


இருவருமே மற்றவரை அவர்களது  இயல்போடு ஏற்றுக் கொண்டதற்கு அவர்களது இயல்பிலேயே அடுத்தவர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்க வேண்டும் என்ற சுபாவம் இருந்ததால், அவைகள் எல்லாம் அவர்களுக்கு சுலபமாகி போக, 


செம்புலப்பெயல் நீர் போல் அன்புடை நெஞ்சம் தாம் கலந்தனவே ...


என்ற குறுந்தொகை பாடல் போல், நீரும் செம்புலச் சேறுமாய் திருமண வாழ்வில்  கலந்து களித்திருந்தனர் .


"நான் கிளவுஸ் போட்டுக்கிட்டு மெதுவா  தான் முள்ளுச்செடிய வெட்டினேன் ... " என்றவள் தொடர்ந்து  "இன்னைக்கு வாழை மரம் குலை தள்ளிருச்சு ... நேத்து மொட்டா இருந்த ப்ளூ ரோஸ் இன்னிக்கு பூத்திருக்கு ... என்னோட ஃபேவரிட்  ஆத்தர் ராகுல் பதாமியோட புக்குக்கு அமேசான்ல ஆர்டர் போட்டிருக்கேன்.... நைட் சப்பாத்திக்கு நானே அத்தையோட ஹெல்ப் இல்லாம குருமா செய்திருக்கேன் ... ரொம்ப நல்லா வந்திருக்கு ... சாப்பிட்டு பார்த்து சொல்லுங்க ..." 

 அவன் நுனிமூக்கை திருகி, காதை  கிள்ளி ,  கன்னத்தில் முத்தமிட்டு,  அவன் கழுத்தில் முகம் புதைத்து என சில்லு வண்டு போல் எல்லா சில்மிஷங்களையும் செய்து கொண்டே  அன்று முழுவதும் அவள் செய்ததை ஒப்பித்துக் கொண்டிருக்கும் போதும், திடீரென்று அவன் மடிக்கணினியில் பார்த்துக் கொண்டிருந்த திரையில் இருந்து ஜூம் கலந்தாய்வுத் திரைக்கு மாறி அதிலிருந்த  ஓலி  பொத்தானை அழுத்தி அன்மியூட் செய்து 


"  எஸ் ... எஸ் ... வி ஹேவ் டு டூ இட் பை டுமாரோ .... ஆஸ்க் யுவர் டீம் மெம்பர்ஸ் டு ஸ்டார்ட் த ப்ராசஸ் ..." 


எனச் சொல்லிவிட்டு மீண்டும் அந்தப் பொத்தானை அழுத்தி  மியூட் ( ஒலியற்று ) செய்தவனை அவள் முறைத்துப் பார்க்க,


"ஏய் ஸ்ரீ... என்ன அப்படி பாக்கற ..." என்றான் குறும்பாக.

"ம்ச்... நான் பேசின  எதையுமே நீங்க கேட்கல...  நீங்க ஜூம் மீட்டிங்ல இருக்கீங்கன்னு சொல்லி இருந்தா , நான் பேசி இருக்கவே மாட்டேனே ..." அவள் முகத்தை தூக்கி வைத்துக் கொள்ள, 


"என்னோட ஜூனியர்சும் ஆன்சைட் கவுண்டர் பார்ட்டும்  பேசிக்கிட்டு இருக்காங்க...  அவங்களோட மீட்டிங் தான் இது ... இதுல நான் ஜஸ்ட் லிசனர் தான்... அதனால தான் இந்த டிரஸ்ல உக்காந்துகிட்டு வீடியோவை ஆஃப் பண்ணிட்டு,   வாய்ஸ மியூட் பண்ணிட்டு ,   கால்குலேஷன் பண்ணிகிட்டு இருக்கேன் ..."


என தன் ஒரு காதில் பொருத்தியிருந்த சிறிய ஒலிவாங்கியை  காட்டியவன்,


" நீ சொன்ன எல்லாத்தையும் கேட்டேன் ... சொல்லட்டுமா ..."  என்றவன் அவள் சொன்ன விதம் போலவே இழுத்து இழுத்து ஒன்று விடாமல் அதே வரிசையில்  சொல்லி முடிக்க,  மங்கையவளின் கண்கள் வியப்பால் விரிந்தன.


"வாவ் ... மைண்ட் ப்ளோயிங் ... எப்படி இப்படி ... zoom மீட்டிங்க கேட்டுகிட்டே இந்த ஸ்கிரீன்ல கால்குலேஷன் போட்டுக்கிட்டே நான் சொன்னதையும் வரிசை மாறாம எப்படி கரெக்டா சொன்னீங்க ..." என ஆச்சரியத்தோடு கேள்வி எழுப்பியவளின் கன்னத்தைக் கிள்ளி

"அது ரொம்ப... ரொம்ப ... பெரிய விஷயம் நைட் விலாவாரியா  பொறுமையா சொல்லி கொடுக்கறேன்  .." என குறும்பாக சொன்னவன் அவள் இதழ் நோக்கி குனிய, பெண்ணவள்  பொங்கி எழுந்த சிரிப்பை மறைத்தபடி தன் முகத்தை பின்புறமாக சாய்க்க  முயலும் போது,  அவளது கைபேசி சிணுங்கியது.


தாய் சுசிலா தான் அழைத்திருந்தார்.


"நீ அம்மாவோட பேசிட்டு சீக்கிரம் டின்னர் சாப்ட  வா ... என் மீட்டிங் ஓவர் ..... நான் கீழ போய் உனக்காக வெயிட் பண்றேன் ..." 

என்றவன் மடிக்கணினியை மூடிவிட்டு நகர,  ஸ்ரீப்ரியா தன் தாயுடன் பேச்சில் மூழ்கி போனாள்.

 

மைந்தன் தனியாக வருவதைக் கண்டு,  

"அவ எங்கடா ..."  என்றார் அகல்யா. 


"அவங்க அம்மா கூட பேசிக்கிட்டு இருக்காம்மா ..." என்றதுமே 


" ஏன்டா,  இதான் நீ ஆபீஸ் வேலை பாக்கற லட்சணமா ...... அந்த குட்டி உன் மடில ஏறி உக்காந்துகிட்டு அலப்பறை பண்ணிக்கிட்டு இருக்கா, நீயும் அவள கொஞ்சிக்கிட்டு உட்கார்ந்துகிட்டு இருக்க...   " 

என்றதும் அவனுக்கு சிரிப்பு பொங்கி வர, அதனை மென்று முழுங்கி மறைத்தபடி,


" எந்த குட்டி ..." என்றான் இயல்பாக. 


"ம்ம்ம்... உன் பொண்டாட்டி ... "


" நீ எப்பம்மா மேல வந்த ...." என்றான் வெளிப்பட்ட வெட்கத்தையும் சிரிப்பையும் மறைத்து. 


"நேரமாயிட்டு இனிமே காபி குடிச்சா நல்லா இருக்காது ...  அதனால தோசை சாப்டறயா இல்ல சப்பாத்தி சாப்படறயான்னு கேட்கலாம்னு வந்தேன் .... ஆனா நீ ஆபீஸ் வேலைன்னு என்கிட்ட பொய் சொல்லிட்டு உன் பொண்டாட்டிய தூக்கி மடில வச்சுக்கிட்டு  கொஞ்சிக்கினு உக்காந்துட்டு இருக்க ...."

"ஐயோ அம்மா ஆபீஸ் வேலை தாம்மா பாத்துட்டு இருந்தேன் ..."

" சும்மா புளுகாதடா ..." என்றவர்  ஸ்ரீப்ரியா படி இறங்கி வருவதைப் பார்த்ததும் 

"சாப்பிட வாம்மா ..." என்றார் பேச்சை மாற்றி .

பொதுவாகவே தாய்க்கு மகளைக் காட்டிலும் மகன் மீது பிரியம் அதிகம் இருக்கும் ....  அதுதான் இயற்கை ...

என் மகன் என்னை காட்டிலும் வேறொரு பெண்ணிற்கு முன்னுரிமை கொடுப்பதா என்ற எண்ணம் தான் மாமியார் மருமகளுக்கு இடையேயான பூசலுக்கு முதல் காரணம்  ....


நான் என் மகனைப் பெற்று வளர்த்தவள் , அவனின் தாய் என்ற உறவு முறையின் உரிமையில்  நிலைத்து நிற்பவர்கள்,  மருமகள் என்பவள் மகனின் மனைவி என்ற உறவு முறையை முற்றிலும் மறந்து விடுவதோடு,  மகனின் பாதி வாழ்க்கையில் வந்தவளே ஆனாலும் மீதி வாழ்க்கை முழுவதும் பயணிக்கப் போகிறவள் அவள் தான்  என்பதையும் மறந்து விடுவதால் ஏற்படும் சிக்கல் தான் காலம் காலமாக நடந்து வரும் மாமியார் மருமகளுக்கிடையே ஆன உரிமை போர்...


என்ன ஒன்று , சில இல்லங்களில் பானிபட்டு போராக வெடிக்கும் ...  

சில இல்லங்களில் பனிப்போராக நடக்கும் .... அதுதான் வித்தியாசம் ...


ஸ்ரீப்ரியா இரவு உணவான  சப்பாத்தியை பரிமாற முயலும் போது,


"நீ உட்கார்ந்து சாப்பிடு ... நான்  எல்லாருக்கும்  வைக்கிறேன்  ..." என்ற அகல்யா அனைவருக்கும் பரிமாறி விட்டு தானும்  உண்ண ஆரம்பிக்கும் போது,  தொலைக்காட்சியில் 90களில் வந்த ஒரு புகழ்பெற்ற திரைப்படம் ஓடிக்கொண்டிருந்தது.


அதில் நாயகன் நாயகியிடம் காதல் கடிதம் கொடுப்பது போலான காட்சி இடம் பெற,  நால்வரின் பார்வைகளும்  அந்தக் காட்சியில்  எதேச்சையாக லயிக்க,


"ப்ரியா , இத பார்த்ததும் ஒரு விஷயம் ஞாபகத்துக்கு வருது ...இவனும் இவன் ஃப்ரெண்ட்  இஸ்மாயிலும்  அப்ப பத்தாம் கிளாஸ் படிச்சுக்கினு இருந்தாங்க ...

பாண்டி ... அப்ப உங்க கூட ஒருத்தன்  டியூஷன் படிச்சானே அவன் பேரு சேகர் தானே ..."


"எம்மா நீ எதை சொல்ல வரேன்னு  தெரியும் கொஞ்சம் வாய மூடும்மா ..."


" சும்ம்ம்மா இருடா ... அந்த சேகர் என்ன பண்ணான்னா,  ஏதோ ஒரு பொண்ணுக்கு தெருமுனைல லவ் லெட்டர் கொடுக்கப் போறேன்னு இவனுங்க கிட்ட சொல்லி இருக்கான் ....  இவனுங்க ரெண்டு பேரும் அதை வேடிக்கை பார்க்க போயிருக்கானுங்க...


இஸ்மாயிலோட அப்பா உசேன் பாய் உங்க மாமாவுக்கு ஜிகிரி தோஸ்த்... அவரு இதையெல்லாம் பார்த்ததும், அதே இடத்துல இஸ்மாயில போட்டு வெளு வெளுனு வெளுத்துட்டு  வீட்டுக்கு வந்து,  உங்க மாமா கிட்டயும் போட்டு கொடுத்துட்டு போய்ட்டாரு இவனுக்கு  அன்னிக்கு ஒரு மணி நேரம் உங்க மாமா ரெய்டு உட்டாரு   ..." என்றவர் சொல்லி நகைக்க,  உடன் பொன்னம்பலமும் இணைந்து கொள்ள,


"அன்னிக்கு லவ் லெட்டர் கொடுத்தவனும்,    அத வாங்கின பொண்ணும் சேஃப்     ஆயிட்டாங்க .... வேடிக்கை பார்க்க போன எங்க நிலைமை தான் கவலைக்கிடமாயிடுச்சு....

ஸ்பாட்ல இஸ்மாயில அவங்க அப்பா அடிச்சு துவைச்சதுல  சேகரும் அந்த பொண்ணும் பயந்துகிட்டு  ஓடியே போயிட்டாங்க .... அதோட அவரு வீட்ல வந்து  போட்டு கொடுத்ததால எனக்கு லட்சார்ச்சன தீபா ஆராதனை அமோகமா நடந்துச்சு ....

அப்பதான் ஒரு விஷயம் புரிஞ்சது .... பொதுவா லவ் பண்றவங்களுக்கு தான் அடி விழும் ஆனா என் விஷயத்துல யாராவது லவ் பண்ணி அத நான் பார்த்தாலே, எனக்கு ஆப்பு தயாராயிடுதுன்னு அன்னைக்கு தான் புரிஞ்சுகிட்டேன் ..."

என வீரா முடிக்க,  ஸ்ரீப்ரியா கலகலவென சிரிக்க , உடன் பெரியவர்களும் இணைந்து கொண்டனர். 


அப்போது பொன்னம்பலம்,


"வாட்ச் ரிப்பேர் ஆயிடுச்சு ப்பா..."  என்றார் வீராவை பார்த்து .


"எந்த வாட்ச் ப்பா அண்ணன் வாங்கி கொடுத்ததா ...."


"இல்லப்பா ...  சோபனா உனக்கு கொடுத்த வாட்ச் ..."


" ஓ.... அதுவா ...  சாப்பிட்டு முடிச்சுட்டு செக் பண்றேன்... செல்லு பிரச்சனையா இருந்தா கூட ஓடாது ..."



தந்தை மகனுக்கு இடையே ஆன உரையாடல்களை கேட்டதும் அதுவரை மகிழ்ச்சியாக உணவு அருந்திக் கொண்டிருந்த ஸ்ரீப்ரியாவுக்கு கோபமும் கேள்வியும் வகைத் தொகை இல்லாமல் தலைக்கேற, விரு விருவென்று உணவு அருந்தி முடித்துவிட்டு , அடுக்களையை சுத்தம் செய்துவிட்டு தன்னறைக்குச் சென்று தன்னவனுக்காக காத்திருக்களானாள்.


கிட்டத்தட்ட 15 நிமிடத்திற்கு பிறகு , அறைக்கு வந்தவன்,  மடிக்கணினியை மடியில் வைத்துக்கொண்டு மல்லு கட்டிக் கொண்டிருந்த மனையாளை பார்த்து ,


"என்ன லேப்டாப்போட கட்டி புரண்டுகிட்டு இருக்க ..." என்றான் குறும்போடு  அவள்  தீவிரமாக மடிக்கணினியில் மூழ்கி இருப்பதை பார்த்து. 


"முதல்ல நான் கேக்குறதுக்கு பதில் சொல்லுங்க ... ஷோபனா யாரு .."


" என்னோட ஐஐடில படிச்சவ ..."


"அவ எதுக்காக உங்களுக்கு வாட்ச் கிப்ட் பண்ணனும் ..."


"என்னமா விசாரணை எல்லாம் வில்லங்கமா போகுது ..."


" ம்ச் ...கேட்ட கேள்விக்கு பதில் சொல்லுங்க ..." என்றாள்  பெண்ணவள்  முகம் சிவந்து.


"நான் என்ன பாய்ஸ் மிலிட்டரி ஸ்கூல்லயா படிச்சேன்...  ஐஐடி ம்மா... நாங்க படிக்கிற காலத்துல பைனல் இயர்ல  கிப்ட் டேன்னு ஒரு டே செலிபிரேட் பண்ணுவாங்க ... அன்னைக்கு யார் வேணாலும் யாருக்கு வேணாலும் கிப்ட் கொடுக்கலாம் ... ஷோபனா என் கிளாஸ் மெட் திடீர்னு அன்னிக்கு வாட்ச்சை கிப்ட் பண்ணா அவ்ளோதான் .."


"பதிலுக்கு நீங்க என்ன கிப்ட் கொடுத்தீங்க ..."


" என்ன நீ ...EDல கேள்வி கேக்குற மாதிரி இவ்ளோ கேள்வி கேக்குற ..."


"ம்ச் ... கேட்ட கேள்விக்கு பதில் சொல்லுங்க ..."


"கூட படிச்சவங்க கிப்ட் கொடுத்தா பதிலுக்கு நாமளும் கிப்ட் கொடுக்கணும்னு அவசியம் இல்ல...  நான் ஜஸ்ட் தேங்க்ஸ் சொல்லி வாங்கிட்டேன் அவ்ளோ தான்..."


"நான் ஏன் உங்க கூட படிக்காம போனேன் ..." உலக மகா அபத்தமான கேள்வியை அவள் முன் வைக்க ,

 வாய்விட்டு சிரித்தவன்,


"நீ ஏன் எட்டு வருஷம் கழிச்சு பொறந்த... என் கூடவே பொறந்திருந்த என்னோடவே  படிச்சிருக்கலாமில்ல ... படிச்சு முடிச்சதுமே கல்யாணம் பண்ணிக்கிட்டு இருக்கலாம் இவ்ளோ நாள் நான் உனக்காக காத்துகிட்டு இருக்க வேண்டிய அவசியமே இருந்திருக்காதே ..." என்றான் சிரித்தபடி அவளைப் போலவே உலக மகா அபத்தமான பதிலை சொல்லி.


அந்த பதிலில் திருப்தி அடையாதவள் முகம்  திருப்பிக் கொள்ள  


"ஏய் ஸ்ரீ .... எனக்கு சோபனா முக்கியம்னா அவ கொடுத்த வாட்சை நான் இல்ல யூஸ் பண்ணி இருக்கணும் ... ஏன்  என் அப்பாவுக்கு கொடுத்தேன்னு கொஞ்சமாவது யோசிச்சியா ..." என்றதும் தான் கார்மேகம் விலகிய முழு நிலவாய் அவள் முகம் ஜொலிக்க,  நெருங்கியவன் நெற்றியோடு நெற்றி முட்டி,


" நீ சரியான லூசு டி ..." என்றான் குழைந்து.


உடனே சிரித்த முகத்தோடு அவள் பாதியில் விட்டிருந்த  பணியை  மடிக்கணினியில் தொடர,


" ஏய் என்ன பண்ற ..." 


" ரெஸ்யூமே ப்ரிப்பேர் பண்றேன் ..."


" ப்ஃபூ... இதுக்கா இவ்ளோ பெரிய அளப்பற ... நான் டூ மினிட்ஸ்ல உனக்கு பக்கா ஃபார்மட்ல ப்ரிப்பர் பண்ணி தரேன் ..."


" வாவ் தேங்க்யூ ..."


"ஆனா அதுக்கு சில  ஸ்டெப்ஸ் ஃபாலோ பண்ணனும் ..." என்றான் தீவிரமாக. 


"என்ன சொல்லுங்க ... ரெஸ்யூமே ஃபார்மேட்ட  டவுன்லோட் பண்ணனுமா .... " என்றாள்  ஆர்வமாக. 


"முதல்ல லேப்டாப்ப மூடு ..." என்றவனின் கண்களில் தெரிந்த குறும்பை கண்டதுமே , அவன் எண்ணம் விளங்க,


"முதல்ல சோபனா எப்படி இருப்பான்னு சொல்லுங்க ..." என்றாள் பெண் விடாக்கண்டன் கொடாக்கண்டனாக.


"அடியேய்... விட்டா நைட் ஃபுல்லும் அவ பேரையே  சொல்லிக்கிட்டு இருப்ப போல இருக்கே ... அவளுக்கு கல்யாணம் ஆகி மூணு குழந்தை இருக்கு..."


" நான் கேட்டதற்கு இது பதில் அல்லவே ...." 


"சரி உனக்கு சோபனாவ பாக்கணும் ..."


" ஆமா ..."


"அப்ப லேப்டாப்பை மூடி வச்சிட்டு,   என் பக்கத்துல வந்து உட்காரு மொபைல்ல காட்டறேன் ..."


அவன் முகத்தில் தெரிந்த தீவிரத்தை நம்பி , மடிக்கணினியை மூடி வைத்துவிட்டு வந்தவள்  கட்டிலில்  சரிந்தமர்ந்தவனின் அருகில் அமர்ந்து கொண்டு அவன் கையில் இருந்த அலைபேசியின் திரையில்  பார்வையை பதித்தாள்.


கருமமே கண்ணாக,  கேலரிக்கு சென்று  அவன் புகைப்படத்தை தேட,  அவளும் அதிலேயே தீவிரமாக மூழ்கி இருக்கும்போது,  திடீரென்று பக்கவாட்டில் திரும்பி  குழல் விளக்கை அணைத்து விட்டு இரவு விளக்கை அவன்  ஒளிர விட,


"எதுக்கு லைட் ஆஃப் பண்றிங்க ..."


"மொபைல்ல தானே பார்க்கறோம் எதுக்கு லைட் .."


"ஓ.... " என்றவள் 


"வெயிட் ... இந்த போட்டோ எங்க எடுத்தது " என்றாள் வீரா, சத்யன், அன்பு மூவரும் மலையடிவாரத்தில் நின்றபடி இருந்த  புகைப்படத்தை பார்த்து. 


"இது டார்ஜிலிங் போனப்ப எடுத்தது ..."  என அதைப் பற்றி ஒரு நீண்ட கதை சொன்னவன் அதற்கு மேல் தீவிரமாக தேடி ஒரு புகைப்படத்தை கண்டுபிடித்தான்.


கல்லூரி விரிவுரையாளர்களோடு அவனுடன் படித்த 60 பேரும் இணைந்து எடுத்துக்கொண்ட கல்லூரி நிறைவு விழா புகைப்படம் அது.


"ஒன்பதாவது வரிசையின் கடைசியில்  முகம் கூட சரியாக தெரியாத நிலையில் 60 பேரில் ஒருத்தியாக  நின்று கொண்டிருந்த ஒரு பெண்ணை காட்டி,  "இவ தான் ஷோபனா ....." என்றவனை,  அந்த இரவு விளக்கொளியிலும் அவள் முறைத்துப் பார்க்க ,


"என்னம்மா ஒரு மாதிரி பாக்குற ..." என்றான் பொங்கி எழுந்த சிரிப்பை மறைத்து. 


" மூஞ்சே தெரியல ... இப்படியா ஒரு போட்டோவை காட்டுவீங்க ... தனியா நிக்கிற மாதிரி ஒரு போட்டோவை காட்ட மாட்டீங்களா .... இது கம்ப்ளீட் சீட்டிங் ..."


"அடியேய் அவ என் கிளாஸ்மேட்னு எத்தனை தடவை தான் சொல்றது ...அவளை எதுக்காக நான் தனியா போட்டோ எடுக்கணும் ... இந்தா என் மொபைல வச்சுக்க ... எல்லா போட்டோஸையும் பாரு  ... காலேஜ் டூர் போனப்ப நிறைய குரூப் போட்டோஸ்  எடுத்துக்கிட்டோம் ... அதுல எங்கயாவது சிக்கினா சிக்கு வா ..."

என்றவன் அவள் கையில் தன் அலைபேசியை திணித்துவிட்டு முதுகு காட்டி படுத்துக்கொள்ள,  கிட்டத்தட்ட 15 நிமிடங்கள் அலைபேசியை அக்கு வேறு ஆணிவேராக அலசிப் பார்த்தவளுக்கு அவள் எதிர்பார்ப்பு  அவ்வளவாக பூர்த்தி அடையவில்லை. 


 ஐந்து ஆண்கள் இரண்டு பெண்கள்,  அல்லது 10 ஆண்கள் மூன்று பெண்கள் என விதவிதமாக குழு புகைப்படங்களில் ஒரே ஒரு புகைப்படத்தில் ஷோபனா சிக்கினாள்.  அதுவும் ஆறு ஆண்கள் நான்கு பெண்கள் உள்ள புகைப்படத்தில் பெண்களுக்கு மத்தியில் காட்சி அளித்தாள்.


அதற்கு மேல்  யாதொரு புகைப்படத்திலும் அவளை காண முடியவில்லை.  அவள் மட்டுமல்ல வேற எந்த பெண்ணும் ஒன்றிற்கும் மேற்பட்ட  புகைப்படத்தில் இடம் பெறவில்லை ... பெரும்பாலான புகைப்படங்கள் முழுவதும் ஆண்களே ஆக்ரமித்திருந்தனர் ... அதுவும் காட்டுப் பகுதியில் வனவிலங்குகளோடும் , பாம்புகள் முகாமிலும் எடுக்கப்பட்ட புகைப்படங்களே அதிகமாக இருந்தன ... அதோடு அவன் தன் குழுவோடு  விளையாடிய கிரிக்கெட், மற்றும் சமீபத்தில் நடந்த அன்புவின் திருமண  புகைப்படங்கள், காணொளிகளோடு அவர்களது திருமண புகைப்படங்களும் பெருமளவில் மலிந்து கிடக்க,  சோர்ந்து போனாள் பெண் .


அலைபேசியை தலையணைக்கடியில் வைத்தவள், மெதுவாக புரண்டு படுத்து அவன் கால் மேல் தன் கால்களைப் போட்டு பின்புறமாக அணைத்துக் கொள்ள, ஸ்பரிசத்தை உணர்ந்து திரும்பிப் பார்த்தவன்,


"என்ன சந்தேகம் தீர்ந்து  போச்சா ..." என்றான் குறும்போடு.


"சந்தேகம் எல்லாம் இல்ல ... அவ்ளோ காஸ்ட்லியான வாட்ச்ச கொடுத்த அந்த பொண்ண பார்க்கணும் போல தோணுச்சு அதான் ..."


" பாத்தியா ..."


" பார்த்தேன் பார்த்தேன் .. ஒரே ஒரு போட்டோல இருந்தா ... பரவால்ல .... பார்க்க சாதாரணமா சுமாரா  இருக்கா ..."


குலுங்கி சிரித்தவன் ,


"ஏன் உனக்கு யாரும் இந்த மாதிரி கிப்ட் எல்லாம் கொடுத்ததில்லையா ..."


" எங்க ... உங்க கூட படிச்ச பொண்ணு கொடுத்த வாட்ச்சை உங்க அப்பா இவ்ளோ வருஷமா அழகா கையில  கட்டிக்கிட்டு இருக்காரு ... எனக்கு  யாராச்சும் இப்படி வாட்ச் கொடுத்திருந்தா  என் அப்பா அவனுக்கு கையோட சேத்து தலையுமில்ல எடுத்திருப்பாரு..."


என்றவள் முடித்ததும்,  கலகலவென்று சிரித்துவிட்டு


"அப்ப எங்க ஃபேமிலி மாதிரி உங்க ஃபேமிலி  எஜுகேட்டட் ஃபேமிலி இல்லயா.."   கண்களில் மட்டும் சிரிப்பை காட்டி அவன் சொல்ல,  அந்த விளக்கொளியிலும் அவனது விழுங்கும் விழிகளை முறைத்தபடி அவன் தலையில் ஒரு குட்டு வைத்துவிட்டு  பாவையவள்  திரும்பிக் கொள்ள,  அதற்கு மேல் தாமதிக்காமல் அதிரடியாய் அவளை திருப்பி அவளது ஆக்கையை முழுவதுமாய்  ஆக்கிரமித்தான் நாயகன். 

 

சின்ன சின்ன சிணுங்களோடு  அவனது இரும்பு தேகத்தை தள்ள முயன்று தோற்றவள் , கடைசியில் தன்னவனோடு  அம்சமாக ஐக்கியமாகிக் போனாள் ,  விடியலில் இருந்து வில்லங்கங்கள் தொடங்கப் காத்திருக்கிறது என  அறியாமல்..


ஸ்ரீராமம் வருவார்கள் ....


என் வாசகக் கண்மணிகள் அனைவருக்கும்,

இனிய ஸ்ரீராமநவமி நல்வாழ்த்துக்கள் ...

( கதை பேர் ஸ்ரீராமம்னு வச்சுட்டு, ஸ்ரீ ராம நவமி அன்னைக்கு யூடி போடலன்னா தெய்வ குத்தம் ஆயிடும் ...😜😜😜அடுத்த யூடி  வெள்ளி இரவு) 

   

ப்ரியமுடன் 

ப்ரியா ஜெகன்நாதன் 














  





 



Comments

Post a Comment