ஸ்ரீ-ராமம்-79

 

அத்தியாயம் 79

லட்சுமி அபாய கட்டத்தை தாண்டி விட்டதால்  மருத்துவரின்  பரிந்துரையில் அவசர சிகிச்சை பிரிவிலிருந்து  டீலக்ஸ் வார்டுக்கு மாற்றப்பட்டிருந்தாள்.

சகல மருத்துவ வசதிகளும் கொண்ட
ஐந்து நட்சத்திர விடுதி அறை போல் காணப்பட்ட  அந்த அறையின் ஒரு பகுதியில்,
நோயாளிகளின்  உற்றார் உறவினர்களில் யாரேனும் ஒருவர் தங்கியிருந்து நோயாளியை பார்த்துக்  கொள்வதற்கு ஏதுவாக
தக்க வசதி செய்யப்பட்டிருந்தது.

ஆழ்ந்துறங்கும் மனையாளை ஒரு முறை பார்த்துவிட்டு தனக்கென ஒதுக்கப்பட்ட படுக்கையில் படுத்தவன் நீண்ட போராட்டத்திற்கு பின்பே கண்ணயர்ந்து போனான் .

மறுநாள் காலை 7:00 மணிக்கு அடிப்படை மருத்துவ சோதனை செய்ய செவிலி  பெண் அந்த அறைக்கு வருகை தரும் போது தான்
அரவம் கேட்டு கண்விழித்தான் ராம்சரண்.

செவிலி பெண்ணின் தொடுகையை உணர்ந்து கண்விழித்தவளுக்கு,
அடிப்படை மருத்துவ சோதனைகள் ஒன்றன்பின் ஒன்றாக செய்யப்பட்டு முடிவுகள்  திருப்திகரமாக வர,  நிம்மதி பெருமூச்சு விட்டான் .

செவிலி பெண் அகன்றதும், மனையாளின் தலைக்கோதி நெற்றியில் ஆழ்ந்து முத்தமிட்டு

" லட்சுமி  நீ ரெப்ரஷ் ஆகணும் இல்லையா ... வா நான் பாத்ரூம் கூட்டிகிட்டு போறேன் .... "  வாஞ்சையாக மொழிந்தவனிடம்

" இப்ப கொஞ்சம்  பரவால்ல ...
  நானே  போய்க்கிறேனே.."  அவள் தயங்க,

"நைட் ஃபுல்லும் ட்ரிப்ஸ் போய் இருக்கு ... கால்ல இன்னும் ஸ்ட்ரென்த்  வந்திருக்காது.... நானே கூட்டிட்டு போறேன்  ..."
அவளை வற்புறுத்தி கை தாங்கலாக அழைத்து சென்று கழிவறைக்குள்
அனுப்பிவிட்டு வெளியே காத்திருந்தான்.


கிட்டத்தட்ட 15 நிமிடத்திற்கு பிறகு  வெளியே வந்தவளின் முகம் புத்துணர்வு பெற்று காணப்பட,  அவளை தன் தோளோடு அணைத்தபடி அழைத்து வந்து படுக்கையில் அமரச் செய்து, சிவகாமி செய்து அனுப்பியிருந்த பஞ்சு போன்ற இட்லியை காலை உணவாக கொடுத்து உண்ண செய்தான் .

"நீங்க சாப்பிடல ...?... "

"நான் இன்னும் ப்ரஷே பண்ணல ...   நீ சாப்பிடு...   ஃப்ரெஷ் ஆயிட்டு  வந்து சாப்பிடறேன் ..." என்றவன் குளியல் அறைக்குள் புகுந்து கொள்ள,  தட்டில் இருந்த நான்கு இட்லிகளை  வெகு சிரமப்பட்டு உண்டு முடித்தவள்,  அருகில் இருந்த கிண்ணத்தில் கை கழுவிக்கொண்டு, அப்படியே கட்டிலில் சரிந்து படுத்தாள்.


சில மணித்துளிகளுக்கு பிறகு குளியலறையில் இருந்து வெளிப்பட்டவனுக்கு தன்னவள் அயர்ந்து உறங்குவது தெரிய, பசி வயிற்றைக் கிள்ள, ஓசை எழுப்பாமல் கேரியரில் இருந்து இட்லிகளை  அள்ளி தட்டில் போட்டு சட்னியை அதன் மேல் வகை தொகை இல்லாமல் ஊற்றி, அவள் உறக்கம் களைவதற்கு முன் அவசர அவசரமாக உண்டு முடித்து அறையை விட்டு வெளியேறியவன்
அதன் வாயிலில் இருந்த லாபியில் அமர்ந்து கொண்டு, தன் நிறுவனத்தின் பங்குதாரரான சந்தோஷிற்கு தன் மனையாளின் உடல்நிலை குறித்த குறுஞ்செய்தி ஒன்றை அனுப்பி வைக்க, செய்தி சென்று சேர்ந்த மறு கணமே சந்தோஷ் அவனை தொடர்பு கொண்டு லட்சுமியின்  உடல்நிலை குறித்து நலம் விசாரித்தான்.

அதற்கு பதில் அளித்த ராம் சரண் , இன்றும் நாளையும்  விடுப்பு எடுக்கப் போவதால்,  வாடிக்கையாளருடன் நடைபெறவிருக்கும் முக்கிய கலந்தாய்வை அவனை ஏற்று நடத்துமாறு  கூற,

"நீ எதை பத்தியும் கவலைப்படாம உன் வைஃப்ப நல்லபடியா பார்த்துக்க  ...  நான் கிளைன்ட் மீட்டிங்க பாத்துக்கறேன் சரண்  ... "
சந்தோஷ் ஆதரவாக கூற, நன்றி கூறி
அழைப்பை துண்டித்தவன்,  உடனே வீராவை தொடர்பு கொண்டான்.

காலை ஓட்டத்தில் ஈடுபட்டிருந்த வீராவின் அலைபேசி ஒலிக்க , ஒளித்திரையில் நண்பனின் பெயரைக் கண்டதும் துரிதமாக அனுமதித்து,

"ஹாய் சரண் குட் மார்னிங் ...." என்றான் ஆர்வத்தோடு.

"வீரா ... ஆ.. ஆபீஸ்ல இருக்கியா டா..." என ராம்சரண் தயங்க ,

"இல்லடா .... ஜாகிங்ல இருக்கேன் ... இவ்ளோ சீக்கிரம் எப்படி ஆபீஸ் போவேன் .... உனக்கு என்ன ஆச்சு ... திடீர்னு இந்த டைம்ல போன் பண்ணி இப்படி விசாரிக்கிற .... லஷ்மி நல்லா இருக்கா இல்ல ..." என்று நண்பன் அழைத்த நேரம் மற்றும் தடுமாற்றத்துடன் கேட்ட கேள்வியை வைத்தே ஏதோ சரி இல்லை என்றுணர்ந்து அவன்  கேள்விகளை அடுக்க,  அதற்கு மேல் பொறுக்க மாட்டாமல்,  தேயிலைத் தோட்டத்தில்  சந்தித்த மூதாட்டி சொன்ன ஆருடம், அதன்படி செல்லக்கண்ணு பாம்பு கடித்து இறந்தது,  அந்த செய்தி லட்சுமியின் மனநிலையை வெகுவாக பாதித்து முன் தின இரவு  அவள் பித்து பிடித்தாற் போல் அவனிடம் நடந்து கொண்டு மயங்கி சரிந்தது,  அவசர சிகிச்சை பிரிவில்   அனுமதிக்கப்பட்டவளுக்கு சிகிச்சை அளித்த மருத்துவர் அவளது செய்கைக்கான  விளக்கத்தை அனுமானித்து கூறி அவனை கலங்கடித்தது ,  தற்போது அவள் உடல்நிலை தேறி டீலக்ஸ் அறைக்கு மாற்றப்பட்டிருப்பது என ஒன்று விடாமல் தொடர்ச்சியாக கூறி முடித்தான்.

கேட்டுக் கொண்டிருந்த வீரா, ஒரு கணம் அதிர்ச்சியில் உறைந்தே போனான் .

அவனுக்கு ஏதோ மர்ம நாவல் கேட்பது போல் இருந்தது.

எவ்வளவு யோசித்தும்,  அந்த தேயிலைத் தோட்டத்து  பாட்டி சொன்னது செல்லக்கண்ணுவிற்கு
பொட்டில் அடித்தது போல் பலித்ததை எல்லாம் அவனால்  இந்த விஞ்ஞான உலகத்தில் பொருத்திப் பார்க்கவே முடியவில்லை .

அது அமானுஷ்யமா , ஆன்மீகமா என்ற குழப்பத்தோடு கற்பகம் , அருணா லட்சுமியிடம்  கொடூரமாக  நடந்து கொண்டது வேறு  ஜீரணிக்க முடியாமல் போக

"சரண்,  என்னால நம்பவே முடியல டா  ...
  உன் அம்மாவும் தங்கச்சியும் லட்சுமி விஷயத்துல சரியா  நடந்துக்கலனு தெரியும் ... ஆனா இவ்ளோ தரம் தாழ்ந்து போயிருப்பாங்கன்னு   கொஞ்சம் கூட எதிர்பாக்கல ..." என்றான் ஆதங்கதோடு.

"எல்லாம் நான் வாங்கிட்டு வந்த வரம்.... சொந்த வீட்லயே என் பொண்டாட்டிக்கு பாதுகாப்பு இல்லன்னும் போது வேற யாரை நம்பி எங்க விட்டுட்டு போவேன் டா ...
என்னால டாக்டர் சொன்னதை கற்பனை பண்ணி கூட பார்க்க முடியல  வீரா... பாவம் லட்சுமி ... இதையெல்லாம் தாங்கிக்க முடியாம தான் ஸ்டெரஸ்ல தூங்க முடியாம கஷ்டப்பட்டிருக்கா ...  நான் ஒரு பைத்தியக்காரன் ... அந்த ரெண்டு அரக்கியும் சொன்னத நம்பி லட்சுமிக்கு ஒரு ஃபோன் பண்ணி கூட விசாரிக்காம, வெட்டி ஈகோவ தூக்கி சுமந்துகிட்டு டிவோர்ஸ் வரைக்கும் போயிட்டேன் ... மருமக தலையில
மண்ணெண்ணெய ஊத்தி கொலை பண்ற மாமியார் நாத்தனாருக்கும்,
இவளுங்களுக்கும் என்னடா வித்தியாசம் ....
எவ்ளோ பிரச்சனை இருக்கும் போது  கூட லட்சுமி  அட்ஜஸ்ட் பண்ணிட்டு அந்த வீட்லயே இருந்தா டா .... தனக்கு செக்யூரிட்டி  இல்லன்னு  போது தான் அவ வீட்டை விட்டே போயிருக்கானு இப்ப இல்ல புரியுது ... சொல்லவே அசிங்கமா இருக்கு ... எவனோ ஒரு பொறுக்கி,  பொறம்போக்கு, ****** ,  நான் இல்லாத நேரத்துல என் பெட்ரூம்க்கே வந்து  என் பொண்டாட்டி மேல கை வச்சிருக்கான்னா , இதைவிட ஒரு கொடுமை வேற என்னடா இருக்கு ..."

"லட்சுமி வழக்கமா உங்க  பெட்ரூம்ல தாழ்ப்பாள் போட்டுட்டு  தானே தூங்குவா... பின்ன எப்படி டா  ..." வீரா தொக்கி நிறுத்த,

"நான் ஊர்ல இருந்தாலும் சரி இல்லனாலும் சரி  பெரும்பாலும் எங்க பெட் ரூம் கதவு  திறந்து தான்டா இருக்கும்...
ஏன்னா அருணா பசங்க  எப்பவுமே எங்க ரூம்ல தான் குதிச்சு விளையாண்டுக்கிட்டு இருப்பாங்க .... இப்ப ஸ்ரீபாப்பா வேற இருக்காளா ... அதனால  நைட்டு தூக்கம் வர வரைக்கும்  எங்க ரூம்ல தான் ஆட்டம் போட்டு கிட்டு இருப்பாங்க ... அருணா தன்  பசங்கள தூங்க கூட்டிட்டு போனதும்  கதவை தாழ் போடாம,  வெறுமனே மூடிட்டு லட்சுமி  தூங்கி இருந்திருப்பா... அதை தனக்கு சாதகமாக பயன்படுத்திக்கிட்டு எவனோ உள்ள வந்திருக்கான் .... ஆனா ஒன்னு வந்தவனுக்கு  லட்சுமியை  தெரியுமோ தெரியாதோ ஆனா அந்த ரெண்டு ராட்சசிகளையும் நல்லா தெரியும்.... "

"துணிஞ்சு வீட்டுக்குள்ள வர்ற அளவுக்கு  யாரா இருக்கும் டா ...."

"வேற யாரு அருணாவுக்கு தெரிஞ்சவன் அறிஞ்சவன் எவனாது இருப்பான் .... " என பற்களை நறநறவென்று கடித்தவன்,

"எனக்கு அவளுங்கள விட லட்சுமி மேல தான் டா கோவம் கோவமா வருது ....
சொந்த வீட்டுல பாதுகாப்பா தூங்க கூட முடியாத அளவுக்கு  பெரிய அட்டூழியம் அவளுக்கு நடந்து இருக்கு ...
என்கிட்ட ஒரு வார்த்தை அன்னைக்கே  சொல்லி இருந்தான்னா அந்த ரெண்டு ராட்சசியையும்  உண்டு இல்லன்னு பண்ணி இருப்பேன் ... அத விட்டுட்டு இப்படி அடக்கி வாசிச்சி இப்ப தனக்கு தானே ஆபத்தை தேடிக்கிட்டு இருக்கா ..." 

"ம்ச்... திரும்பவும் தப்பு பண்ற சரண் ....  இப்ப எதுக்கு தேவையில்லாம லக்ஷ்மி மேல கோவப்படற ...   நான் அன்னைக்கே  கோர்ட் வாசல்ல சொன்னேன்... ஒன்னும் இல்லாத விஷயத்துக்கெல்லாம்  கோர்ட் படி எற்ர ஆள் லட்சுமி கிடையாதுனு....

நீ எஙக அதையெல்லாம்  காது கொடுத்து கேட்ட .... அப்ப உனக்கு உன் ஈகோவே பெருசா இருந்தது .... இப்பவும் சொல்றேன் லக்ஷ்மி இந்த விஷயத்தை உன்கிட்ட சொல்லாம மறைச்சதுக்கும் ஏதாவது முக்கிய காரணம் இருக்கும் .... அதனால அவகிட்ட உன் கோவத்தை காட்டாம ,பொறுமையா நடந்துக்க...  டெலிவரி நல்லபடியா முடியட்டும் அப்புறம் மத்ததெல்லாம் அவ கிட்ட கேட்டுக்கலாம் .... அதுவரைக்கும்
உன் அம்மா, அருணாகிட்ட கூட  எதையும் காட்டிக்காம எப்பவும் போல சாதாரணமா பேசி பழக பாரு ..."

என வீரா நண்பனுக்கு ஆத்மார்த்தமாக அறிவுரை கூற, ஏற்கனவே அதே மனோ நிலையில் இருந்தவனுக்கு,  உயிர் நண்பனின் அறிவுரை மேலும் வலு சேர்க்க,
தெளிந்த மனதோடு நன்றி கூறி அழைப்பை துண்டித்து விட்டு மனையாளை பார்க்க அறைக்கு சென்றான்.

கதவைத் திறந்து  பார்த்தவனுக்கு அவள் ஆழ்ந்த உறக்கத்தில் இருப்பது தெரிய ,  அறைக்குள் நுழைய எத்தனிக்கும் போது  அவனது அலைபேசி செணுங்கியது.

ஒளித்திரையில் தெரிந்த புதிய எண்ணை கண்டு யோசித்தபடி,
தன்னவளின் உறக்கத்தை கெடுக்க விரும்பாமல்,  அறை கதவை மூடிவிட்டு லாபிக்கு சென்று அழைப்பை  அனுமதித்தவனுக்கு,

" ஹலோ,  நான் மஹிக்கா பேசறேன்..." 

என்றதைக் கேட்டதும்  கோபம் ராக்கெட் வேகத்தில் விண்ணை  முட்ட,  அவன் தன்னை ஆசுவாசப்படுத்திக்கொள்ள ஓரிரு கணம் எடுத்துக் கொள்வதற்குள்

" ஹலோ சரண் ... ஆர் யூ தேர்..."
   என்றாள் மஹிக்கா அவசரமாக .

"எஸ் ...." என்றான் கடின குரலில்
தன்னை சுதாரித்துக் கொண்டு.

"உங்க வைஃப்க்கு  உடம்பு சரி இல்லையாமே.... இப்பதான் சந்தோஷ் சொன்னாரு .... டு டேஸ்   ஆபீஸ் வர மாட்டீங்களாமே ... ஏன் என்ன ஆச்சு ... அவங்க இப்ப எப்படி இருக்காங்க  ..."

அவன் முன்பு போல்  இருந்திருந்தால்,  இந்நேரம் அவளது காது சவ்வு கிழியும் அளவிற்கு வசைப்பாடி தீர்த்திருப்பான்.

ஆனால் எப்பொழுது அவள் தான் பார்த்துக் கொண்டிருந்த  வேலையை  கோயம்புத்தூரில் ராஜினாமா செய்துவிட்டு  அவனைத் தேடி ஊட்டிக்கு வந்து அவனுடைய நிறுவனத்திலேயே  பணிபுரியும் அளவிற்கு  திட்டம் போட்டு காய் நகர்த்த ஆரம்பித்தாளோ , அந்தக் கணத்திலிருந்து
அவளைத் தள்ளி நிறுத்தவும், 
அவளிடம் இருந்து தள்ளி நிற்கவும்
முடிவெடுத்திருந்தான்.

ஆம் .... மஹிக்கா தற்போது  ராம்சரண் நிறுவனத்தில் புதிதாக சந்தோஷால்  பணி அமர்த்தப்பட்டுள்ளாள்.

இரண்டு நாட்களுக்கு முன்பு தேயிலை தோட்டத்தில் அந்த பாட்டி
ஆருடம் சொல்லிவிட்டு சென்ற அன்று,  லட்சுமியை எஸ்டேட்டில் இருந்து அழைத்து வந்து வீட்டில் விட்டுவிட்டு அலுவலகம் சென்றவனுக்கு காத்துக் கொண்டிருந்த அதிர்ச்சி  இவள் தான் ...

அன்று ...

தன் அறையில் அதிரி புதரியாக வேலை செய்து கொண்டிருந்தவனுக்கு சந்தோஷிடமிருந்து அழைப்பு வந்தது.

"சரண்,  ஒரு நிமிஷம் என் கேபினுக்கு வர முடியுமா ப்ளீஸ் ..." என சந்தோஷ் கேட்டுக்கொள்ள, அடுத்த கணம் அவன் கேபினுக்குச் சென்றவனை இன்முகத்தோடு வரவேற்றாள் மஹிக்கா.

அவளை  கண்டதும், லேசான அதிர்ச்சியில் யாதொரு எதிர்வினையும் ஆற்றாமல்  உறைந்து நின்றவனிடத்தில்

"ஹேய் சரண் ... மஹிக்காவ என்ன புதுசா பாக்கற....  " என சந்தோஷ் இயல்பாக கேட்க, வேறு வழி இல்லாமல்  ரெடிமேட் புன்னகையை கண நேரத்தில் உதட்டில் ஒட்ட வைத்துக் கொண்டவன்

"இல்ல ... இவங்க எப்படி இங்கன்னு யோசிச்சேன் ..." என்றான் சிரமப்பட்டு சுதாரித்து.

"எனக்கு சேல்ஸ் டீம்க்கு ஒரு மேனேஜர் தேவையா இருந்தது  .... லிங்க்டு இன்ல இருக்கிற பிரெண்ட்ஸ் கிட்ட சொல்லி இருந்தேன் ... அவங்கள்ல ஒருத்தர் மஹிக்காவோட ப்ரோபைல எனக்கு பார்வேர்ட் பண்ணி இருந்தாங்க ...
என்னோட ரெக்வயர்மென்ட்க்கு பக்கவா மேட்ச் ஆச்சு ...  நம்ப டிஎம் குமார் தான் இவங்களை  இன்டர்வியூ எடுத்தாரு .. எல்லா ரவுண்ட்ஸையும் கிளியர் பண்ணிட்டாங்க ... ஜாயின் பண்ண  ஒரு மாசமாவது டைம் கேட்பாங்களோனு நினைச்சுகிட்டு இருந்தேன் ஆனா  இம்மிடியட்டா ஜாயின் பண்ணிட்டாங்க .... ஜாயின் பண்ணதும் தான் உன்னை ரொம்ப நல்லா தெரியும் ...  உன்னோட டீம்ல ஒர்க் பண்ணதா   சொன்னாங்க... அதான் உன்னை கூப்ட்டு சர்ப்ரைஸ் கொடுக்கலாம்னு..." என சந்தோஷ முடிக்க,

அவனது சிறு இதழ் விரிப்பு கூட
தனக்காக தான் .... என்றெல்லாம்  கற்பனையில் கோட்டை கட்டுபவளிடம் கோபத்தைக் காட்டினால்
உரிமையுள்ள இடத்தில் தான் கோபம் வரும் என அதற்கு வேறு  பொழிப்புரை எழுதுவாள் என்பதால், இறுகிய முகத்தோடு நிறுவனத்தின் தலைமையாக செயல்பட
முடிவெடுத்து, 

"கங்கிராஜுலேஷன்ஸ் அண்ட் வெல்கம் டு அவர் கம்பெனி ..." என அளந்து வைத்தது போல் பேச்சை  முடித்துக் கொண்டான் ராம்சரண்.

உடனே அவள் அவனை ஆழ்ந்து  ரசனையாய்  நோக்கி

"எனக்கு  ஏனோ அந்த கம்பெனில இருக்க பிடிக்கல ... அதனால அந்த வேலையை ரிசைன்  பண்ணிட்டு ரெண்டு மாசமா வீட்ல தான் இருந்தேன்...  என் ப்ரெண்ட் என்னோட ரெஸ்யூமே இந்த கம்பெனிக்கு பார்வர்ட் பண்ணி இருந்தா .... உடனே இண்டர்வியூ வந்தது ... அட்டன் பண்ணேன் ... வேலை கிடைச்சது உடனே ஜாயின் பண்ணிட்டேன் ..."

அதாவது நீ இல்லாத நிறுவனத்தில்
வேலை செய்ய மனம் ஒப்பாததால் வேலையை விட்டுவிட்டு உன்னைத் தேடி உன் நிறுவனத்திற்கே வந்திருக்கிறேன் ...

என்ற மறைபொருள் அவள் பேச்சில் இருப்பதை புரிந்து கொண்டவன்,
அவளது வரவு அவனுக்கு முக்கியமில்லை என்பது போல் , வெகு லேசான புன் சிரிப்பை  நல்கி அதற்கு முற்றுப்புள்ளி வைத்துவிட்டு பார்வையை சந்தோஷிடம் திருப்பி

" சந்தோஷ்,  நான் நியூசிலாந்து  ப்ராஜெக்ட்சோட கொட்டேஷன்ஸ ப்ரிப்பேர்  பண்ணி கொடுத்துடறேன் ... அதுக்கு நீ மார்ஜின் ப்ரிப்பேர் பண்ணிடு..." என அவள் இருப்பைக் கண்டு கொள்ளாதது போல்,  தனக்கான வேலையில் கண்ணும் கருத்துமாக காட்டிக்கொண்டு  கிளம்பி விட்டான்.

அதற்கு மேல் அவளை சந்திக்கும்
சந்தர்ப்பம் அமையாமலே போக,
அவனும் அவள் வரவை மறந்தே போய்விட்டான்.

தற்போது சந்தோஷ் மூலம் லட்சுமியின் உடல் நிலையை அறிந்து கொண்டு,  நலம் விசாரிப்பது போல் அவள் அவனைத் தொடர்பு கொள்ள, தன்னை முழுவதுமாக ஆசுவாசப்படுத்திக் கொண்டு

" யா... ஷீ இஸ் டூயிங் குட் ..."  என்றான் இறுகிய குரலில் ஒட்டாமல்.

" ஏன் திடீர்னு அவங்களுக்கு பிபி ஷூட்டப் ஆச்சு....  அவங்க ட்வின்ஸை கன்சீவா இருக்காங்க இல்ல .... குழந்தைங்க நல்லபடியா இருக்கா ..."

என்ற குரலில் மருந்த அளவிற்கு கூட அக்கறை தெரியவில்லை,  மாறாக  அன்று அவன்
தன் மனையாள் இரட்டைக் குழந்தைக்கு தாயாகப் போவதை  கர்வமாகச் சொன்னதை தற்போது வெகு லேசான நக்கலோடு நினைவு படுத்திய தொனியே  தெரிய , அதை உணர்ந்தும், வெளிக்காட்டிக் கொள்ளாமல்,

" பேபீஸ் ஆல்சோ  டூயிங் குட் ..." என்றவன்,

"சந்தோஷ்,  மார்ஜின் வொர்க்  முடிச்சிட்டாரான்னு கேட்டு எனக்கு ஒரு மெயில் போட்டுடுங்க ...."

இதற்கு மேல் என் குடும்ப விஷயத்தை நான் பேச விரும்பவில்லை,  என்பதை சொல்லாமல் சொல்லி அழைப்பை வெடிக்கென்று துண்டித்தவன்,

"இருக்கிற பிரச்சினைல...  இவ வேற ....  கூடிய சீக்கிரம் இவளை கம்பெனியை விட்டே வெளியே அனுப்பினா தான் நிம்மதி ... " என புலம்பிய படி தன்னவளை சந்திக்க சென்றவனுக்கு ஸ்ரீனிடமிருந்து அழைப்பு வந்தது .

அப்போது பார்த்து மருத்துவர் அறைக்கு வர , ஸ்ரீனியின்  அழைப்பை ஏற்காமல்
அமைதி நிலைக்கு தள்ளிவிட்டு, அவரைப் பின் தொடர்ந்தான்.

வந்தவர் அப்போது தான் உறக்கம் கலைந்திருந்த லட்சுமியிடம் நலம் விசாரித்துவிட்டு,

" உங்க வைஃப் பர்பெக்ட்லி ஆல்ரட் நவ் .... நான் கொடுத்த மெடிசின்ஸ அவங்க  பர்பெக்டா ஃபாலோ பண்ணனும் .... நிறைய ரெஸ்ட் எடுக்கணும் ....  கவலை, கஷ்டம், கோவத்தைக் கொடுக்கிற எந்த ஒரு  விஷயமும் அவங்க பார்வைக்கு வராம இருக்கிறது ரொம்ப  நல்லது ... குழந்தை பொறக்கிற வரைக்கும் அவங்க பிபி எந்த காரணத்தை கொண்டும் ஷுட்டப் ஆகாம பார்த்துக்கோங்க ... இன்னும் ஒன் ஹவர்ல நீங்க  இவங்களை டிஸ்டார்ஜ் பண்ணி கூட்டிட்டு போகலாம் ..."

என ராம்சரணை பார்த்து மொழிந்து விட்டு அவர் விடை பெற, அதற்காகவே காத்திருந்தது போல் உடனே  லக்ஷ்மி வரண்டிருந்த தன் தொண்டையை செருமிக் கொண்டு

"குட்டி  ஃபோன் பண்ணி இருந்தா ...
  உங்க ஃப்ரெண்ட் ஸ்ரீனி அவ  ஆஃபீஸ்க்கு போய் கல்யாணத்தை பத்தி பேசினாராம் ..."

என ஆர்வத்தோடு  அரைகுறையாக முடிக்க,  அவள் சொல்ல வரும் விஷயத்தை புரிந்து கொண்டு

"இத பத்தி நானே உன் கிட்ட பேசணும்னு இருந்தேன் ... அதுக்குள்ள என்னென்னமோ ஆயிடுச்சு ....   நான் நேரடியா விஷயத்துக்கு வரேன் .... ஸ்ரீனி ரொம்ப நல்லவன் .... பெரிய படிப்பாளி ...  உழைப்பாளி ... எந்த கெட்ட பழக்கமும் கிடையாது ... கம்பெனில ரொம்ப நல்ல பொசிஷன்ல இருக்கான் ... அவங்க குடும்பமும் ரொம்ப நல்ல குடும்பம் ...
என்ன ஒன்னு பொம்மை கல்யாணம் மாதிரி அவனுக்கு முதல் கல்யாணம் ஒன்னு நடந்தது . அந்த கல்யாணத்தால அவனும் அவன் குடும்பத்து ஆளுங்களும் பட்ட கஷ்டம் கொஞ்சநஞ்சம் இல்ல ..." என  தொடங்கி ஸ்ரீனியின் முதல் திருமணத்தைப் பற்றி அனைத்தையும் ஒருவாறு கூறி முடித்தவன்,

"ஸ்ரீனிக்கு அவங்க அக்கா தீவிரமா பொண்ணு தேடிக்கிட்டு இருக்காங்க  ...  வீரா கல்யாணத்துல குட்டியை  பார்த்து  பேசினவனுக்கு அவளை ரொம்ப பிடிச்சு போச்சு ...  போன வாரம்
எங்கிட்ட தன் விருப்பத்தை சொன்னவன்,  முதல் கல்யாணத்துல நடந்த மாதிரி  எதுவும் நடந்திட கூடாது அதனால நான் முதல்ல ராமலட்சுமியை மீட் பண்ணி பேசி அவ மனச தெரிஞ்சுக்கிட்டதுக்கு அப்புறம்,  என் வீட்ல பேசலாம்னு இருக்கேன்னு சொன்னான்... குட்டியோட போன் நம்பர் கேட்டான் ... கொடுத்தேன் ... நேத்து ஈவினிங் அவள அவளோட ஆபீஸ்ல மீட் பண்ணி பேச போறதா  நேத்து மார்னிங் மெசேஜ் பண்ணி இருந்தான்...  மீட் பண்ணி பேசி இருப்பானு நினைக்கிறேன் ... அத சொல்லத்தான்  இப்ப ஃபோன் பண்ணியிருக்கான் ... டாக்டர் வந்ததால ஃபோனை எடுக்க முடியல  ... அதுக்குள்ள குட்டியே உனக்கு போன் எல்லாத்தையும் சொல்லிட்டா போல ...
ஆமா ... அவளுக்கு  ஸ்ரீனிய பிடிச்சிருக்கா ..." என்றான் ஆர்வத்தோடு.

" ம்ம்ம், குட்டிக்கு அவரை பிடிச்சிருக்கு ...
  ஆனா அம்மா கிட்ட நீயே பேசிடுக்கானு சொன்னா .... உங்களுக்கு என் அம்மாவை பத்தி தெரியுமில்ல ... எல்லாம் முறையா நடக்கணும்னு எதிர்பாப்பாங்க இந்த மாதிரி விஷயம் எல்லாம் அவங்களுக்கு பிடிக்காது .... "

"குட்டியோட விருப்பம் தெரிஞ்சா போதும் ... நானே உங்க அம்மா கிட்ட பேசலாம்னு இருந்தேன் ... ஏற்கனவே ஸ்ரீனியோட அக்கா , மாமா, அம்மா, அப்பான்னு  எல்லார்கிட்டயும் பேசிட்டேன் ...."  என அவன் ஆர்வத்தோடு சொல்லிக் கொண்டிருக்கும் போது அவன் பேச்சை இடைவெட்டி,

"குட்டியோட கல்யாண விஷயத்தை எதுக்காக  இழுத்து போட்டுக்கிட்டு செய்றீங்க ..." என்றாள் வெறுமையான குரலில்.

"பிராய சித்தம் பண்றேன்னு  வச்சிக்க..." என்றான் வெடுக்கென்று.

அப்படி ஒரு பதிலை சற்றும் எதிர்பார்க்காதவள் அவனை ஆச்சரியத்தோடு ஆழ்ந்து நோக்க,

"பிராய சித்தம் மட்டுமல்ல , வீட்டுக்கு மூத்த மாப்பிள்ளைங்கிற கடமையும்  எனக்கு இருக்கு  ..." என்றான் தெளிவுபடுத்தும் விதமாக.

"பிராய சித்தமா .... அப்ப .... குட்டியோட கல்யாண நின்னு போனதுக்கு அருணா தலையீடு தான் காரணம்னு நான் சொன்னதை நம்பறீங்களா ..."

"ஆமா.... 100%  நம்பறேன் ..."

அந்த பதிலில் அசந்து போனவள்,

" திடீர்னு .... எப்படி இப்படி ஒரு நம்பிக்கை என் மேல வந்தது ...." என்றாள் ஆச்சரியத்தோடு.

"உன் மேல நம்பிக்கை இல்லாம இல்ல .... அன்னைக்கும் உன் வார்த்தை மேல எனக்கு நம்பிக்கை இருந்தது ... என்ன... அதை ப்ரூவ் பண்ண உன்கிட்ட அப்ப  ப்ரூஃப் இல்லை ...  அதை கூட நான் எனக்காக கேட்கல .... அருணாவுக்காக  தான் கேட்டேன் ... "

" இப்ப கூட  அதுக்கு என்கிட்ட ப்ரூஃப் இல்ல ..."

" தேவையும் இல்லை .... எனக்கு உன் மேல நம்பிக்கை இருந்தாலும்,  மத்தவங்களும் நீ சொன்னதை   நம்பனுங்கிறதுக்காக தான் ஆதாரத்தை கேட்டேன்  ....   ஆனா இப்ப ஒரு தீர்க்கமான முடிவுக்கு வந்துட்டேன் .... எனக்கு  உன் வார்த்தைகள்  போதும் ... அடுத்தவங்களுக்காக நான் ஆதாரத்தை கேட்கப்போறதில்ல...  நம்பறதும் நம்பாததும் அவங்க இஷ்டம்..." என்றவன் லட்சுமியை நெருங்கி அவளது ஒளி இழந்த கண்களை
ஆழ்ந்த நோக்கிய படி அவள் கரங்களைப் பற்றிக் கொண்டு,

"நான் என் லட்சுமியை 1000% நம்பறேன்.... ஆண்டவனே வந்து உன் லட்சுமி சொன்னது பொய்யின்னு சொன்னாலும் நான் நம்ப மாட்டேன் ..." என்றான் தீர்க்கமாக.

அவள் எதிர்பார்த்தது, ஏங்கியது , கண்ணீர் வடித்தது, கலங்கி துடித்ததெல்லாம் இந்த ஒரு வார்த்தைக்கு தான் ....

இந்த உலகத்தில் யாரும் ஹரிச்சந்திரன் இல்லை .... ஏதோ ஒரு சந்தர்ப்பத்தில் எல்லா உறவுகளும் ஏதோ ஒன்றுக்காக
பொய்யுரைக்க வேண்டிய நிலைமை
இருக்கத்தான் செய்கிறது ....

ஆனால் லட்சுமியை பொருத்தமட்டில் சிறு வயதில் இருந்து விளையாட்டுக்காக கூட பொய்யுரைக்க மாட்டாள்.

என் வாழ்க்கையில் எச் சூழ்நிலையிலும்  பொய்யுரைக்க மாட்டேன் என்ற கொள்கையோடும்  தன்னங்காரத்தோடும் வாழ்பவள்....

அவளுடைய இந்த பிரத்தியேக குணத்தை  குடும்பத்தாரிலிருந்து உற்றார் ,உறவினர் , நண்பர்கள் அனைவரும் அறிவர் ....

மகாபாரதத்தில் எப்படி  தர்மனின் வாக்கு எச்சூழ்நிலையிலும் கண்மூடித்தனமாக 

ஏற்றுக்கொள்ளப்பட்டதோ, அது போல் அவள் ஒன்றைக் கூறினால், கண்களை மூடிக்கொண்டு நம்பும் அவளது உறவுகள் வட்டம் ....

கழுத்துக்கு கத்தி வந்தால் கூட பொய் உரைக்க மாட்டாள் என்ற நம்பிக்கை ...

இப்படிப்பட்ட என்னை   உடலும் உயிருமாய் மூன்றாண்டு காலம் வாழ்ந்த என் கணவன் நம்பவில்லையே .... என்ற ஆற்றாமையில் துடித்து துவண்டு கொண்டிருந்தவளுக்கு, 
அவனது வார்த்தைகள் பனிச் சாரலாய் வீச, கண்கள் குளம் கட்ட,
உதடுகள் துடிக்க,  லேசான விம்மலோடு தலை குனிந்து கொண்டு குலுங்கி அழுதாள்.

இத்துணை மாதங்களாக சுமந்து கொண்டிருந்த மன பாரத்தை
இறக்கி வைத்ததற்கான ஆனந்த கண்ணீர் அது ...

காதலின் அடிப்படையே நம்பிக்கை தான் .... இத்தனை வருடங்களாக  காதலித்த கணவன் தன்னை நம்பவில்லையே என்ற கசடோடு வாழ்ந்து கொண்டிருந்தவளுக்கு ,  கரை புரண்டோடும் வெள்ளமாய் அவனது தீர்க்கமான வார்த்தைகள் அதனை அடித்துக் கொண்டு செல்ல, பொங்கி எழுந்த உணர்வுகளை வார்த்தையில் வடிக்க இயலாமல்,  கண்ணீர் விட்டு கரைந்தாள் அவன் கண்ணாட்டி .

அவளது திடீர் அழுகையை கண்டு பதறி

"லக்ஷ்மி,  எதுக்காக அழற... நான் ஏதாவது தப்பா சொல்லிட்டேனா..."

ஒரு வித பயத்தோடு  நாயகன் கேட்க,

பதில் கூற நினைத்தாலும், அவள் உணர்ந்து கொண்டிருக்கும் உச்சபட்ச உணர்வுகள்,  அவளை வாயடைக்க செய்ய,  தலையை மட்டும் இடவலமாக அசைத்தவள்,  அருகில் நின்றிருந்தவனின் சட்டையை பற்றி இழுத்து அவன் வயிற்றில் முகம் புதைத்துக் கொண்டாள்.

இத்துணை நாட்களாக இந்த வார்த்தைகளுக்காக தான் காத்துக் கொண்டிருந்திருக்கிறாள் போலும்  .... என்பதை அவளது செய்கைகள் சொல்லாமல் சொல்ல, அவனையும் அறியாமல் கண் கலங்கியவன்

" லட்சுமி ... ஐ லவ் யூ ...."

என்றான் அவளது முன் நெற்றியில் ஆழ்ந்து முத்தமிட்டு.





ஸ்ரீ-ராமம் வருவார்கள்....



வாசகக் கண்மணிகள் அனைவருக்கும்,

இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்....

உள்ளங்களிலும் இல்லங்களிலும்
மகிழ்ச்சியும் ஆனந்தமும் பெருகட்டும் ....

ஆரோக்கியம், சந்தோஷம், செல்வ வளம்,  வெற்றி என அனைத்தும் தரவல்ல ஆண்டாக இந்த ஆண்டு அமையட்டும் ...

ப்ரியமுடன்
ப்ரியா ஜெகன்நாதன்




































































  





Comments

  1. Awesome as always 💕💕💕💕💕

    ReplyDelete
  2. Superb sis... Very nice 🌹இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்

    ReplyDelete

Post a Comment