ஸ்ரீ-ராமம்- 77

 அத்தியாயம் 77 


மயங்கியவளுக்கு மூச்சுத் திணறலோடு  உடல் வெட்டி வெட்டி இழுக்க, அதிர்ச்சியில் சிந்திக்க மறந்து செயலற்று போனவன், அடுத்த கணமே தன்னை மீட்டு எடுத்துக் கொண்டு , அவளை அள்ளி படுக்கையில் கிடத்தி, ஜாடி தண்ணீரை கையில் எடுத்து அவள்  முகத்தில் தெளித்து 


" லஷ்மி...... லஷ்மி ....." என்று சற்று அழுத்தமாக அவள் கன்னத்தில் தட்டினான்.


முனகலோடு கூடிய மூச்சுத் திணறல் அதிகமானதை ஒழிய, வேறெந்த முன்னேற்றமும் நிகழாமல் போக, உடனே மேல் தளத்தில் உறங்கும்  தன் தந்தைக்கு அலைபேசியில் அழைப்பு விடுத்தான்.


ரங்கசாமி உறங்க ஆரம்பித்து அரை மணி நேரமே ஆன நிலையில்,  அலைபேசி அழைப்பதை அறிந்து அரை குறை உறக்கத்தில் அனுமதித்தவருக்கு,  மைந்தன் சுருக்கமாக சொன்ன செய்தி பதற்றத்தைக் கொடுக்க  ,அடுத்த கணமே மருத்துவமனையை தொடர்பு கொண்டு ஆம்புலன்ஸ்க்கு ஏற்பாடு செய்தவர், அவுட் ஹவுஸில் தங்கி இருக்கும் சிவகாமியை அலைபேசியில் அழைத்து தகவல் தெரிவித்து விட்டு மருமகளை காண பரபரப்போடு படி இறங்கினார். 


ரங்கசாமி வரும் போது , அவருக்கு முன்னதாகவே வந்திருந்த  சிவகாமி யூகலிப்டஸ் எண்ணை கொண்டு லட்சுமியின் பாதத்தில் சூடு பறக்க தேய்த்துக் கொண்டிருக்க,  ராம்சரண் ஈரத் துணியைக் கொண்டு தன் மனைவியின் முகத்தை துடைத்துக் கொண்டிருந்தான்.


இவ்வளவு செய்தும் வெட்டி வெட்டி இழுத்தது அடங்கியதே ஒழிய , மற்றபடி  ராம்சரணின் மனையாட்டியிடம் வேறெந்த  முன்னேற்றமும் இல்லாமல் போக, தாமதிக்க மனமில்லாமல் தன் காரிலேயே மனைவியை மருத்துவமனைக்கு அழைத்து செல்ல முடிவெடுத்து ராம்சரண் தன்னவளை கையில் அள்ளி எடுக்க முயலும் போது, வாசலில் பெருத்த சைரன் சத்தத்தோடு ஆம்புலன்ஸ் வந்து நின்றது.


அதற்கு மேல் நடந்ததெல்லாம் மின்னல் வேகம் தான்.


லட்சுமி அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட ,  கண்கள் கலங்கியபடி உயிரை கையில் பிடித்துக் கொண்டு  வெளியே ராம்சரண் நிற்க, அவளுக்கு மாதாந்திர பரிசோதனை அளித்து வரும் மருத்துவர் சுமதியே சிகிச்சை அளிப்பதால்,  சிறு நிம்மதியோடு இதர மருத்துவ சடங்குகளில் ஈடுபட்டார் ரங்கசாமி .



காதலித்து மணந்தவர்கள் திருமணத்திற்கு பின் அதே காதலோடு இருக்கிறார்களோ இல்லையோ ஆனால் காதல் என்ற வார்த்தையை காதல் காலங்களில் நிச்சயமாக  உருகி உருகி பயன்படுத்தி இருப்பார்கள் ... 


அது போல பெற்றோர்களால் நிச்சயிக்கப்பட்ட திருமணங்களில் கூட, இன்றைய காலகட்டங்களில்   திருமணத்திற்கு முன்பு மணமக்கள் ஒரு முறையேனும் காதல் என்ற வார்த்தையை பயன்படுத்தி தங்களது அன்பை பரிமாறிக் கொள்கின்றனர் ..


ஆனால் ராம்சரண் ஸ்ரீலட்சுமியின் வாழ்க்கையில் அப்படி ஒரு தருணம் அமைந்ததே இல்லை ... அப்படியான தருணங்களை அவன் அமைத்துக் கொள்ள முயன்றதும் இல்லை. 


தான் மணந்து கொள்ள போகும் பெண் இலட்சணமாக இருக்கிறாள்,  படித்திருக்கிறாள் , நல்ல குடும்பப் பின்னணியை சார்ந்தவள்  என்பதே போதும் என்ற ரீதியில்  முந்தைய தலைமுறை ஆண்கள்  போல் அவளது வெறுப்பு வெறுப்புகளை பற்றி துளியும் கவலைப்படாமல் சராசரி கணவனாக  மோகம், தாபம் , காமத்தால் தூண்டப்பட்டு  அவளுடன்  கூடிக்  களித்தானே ஒழிய ,

'நீ இன்றி நான் இல்லை' என்ற காதல் வசனமோ,  'உனக்கு பிடித்ததை சொல்'  .... என்று அவளை அறிந்து  கொள்ளவோ அவன் முயன்றதே இல்லை. 


அதற்காக மனைவியை வெறும் படுக்கை அறைக்கு மட்டும் பயன்படுத்திக் கொண்டான் என்று சொல்லி விட முடியாது ....


அவளை அருமையாக பார்த்துக் கொண்டான்..

அவளது குடும்ப சூழ்நிலையை அறிந்து தன்னால் ஆன பல உதவிகளை செய்தான் ...


என்ன ஒன்று அவைகள் எல்லாம் தன்னிச்சையாக  அவன் இயல்பிலேயே இருக்கும் நற்குணம் மற்றும் உதவும் மனப்பான்மையால் நிகழ்ந்தனவே ஒழிய, அவள் மனம் அறிந்து,  புரிந்து, அவள் மீதுள்ள காதலில் செய்தான் என்றெல்லாம் சொல்லி விட முடியாது . 


முதல் குழந்தை கருவிலேயே இறக்க,  இரண்டாவது குழந்தை சில போராட்டங்களுக்குப் பிறகு  பிறக்க என வாழ்க்கை பல மேடு பள்ளங்களோடு பயணித்த தருணங்களில் தம்பதியருக்கிடையே சில முட்டல் மோதல்கள் வந்து போன போதும்,  சமாளித்து குடும்பம் நடத்தினானே ஒழிய,  மனைவி தரப்பு நியாயத்தை  புரிந்து கொள்ள அவன் முயற்சிக்கவே  இல்லை ...


கோவா பயணத்தை தவிர்த்துப் பார்த்தால் பெரும்பாலான அவனது 'காதல்' எல்லாம் நான்கு சுவற்றுக்குள்ளேயே அரங்கேறிய ஒன்றாகத்தான் இருந்திருக்கிறது ...


கூடலை தாண்டி சிறு சிறு சில்மிஷங்களும்,  சிணுங்கல்களும் அத்தி பூத்தார் போல் அரங்கேறியதும் கூட அங்கு தான் ....


ஆற அமர ஒருவரை ஒருவர் பார்த்தபடி அமர்ந்து கொண்டு  தேநீர் பருகுவது,  ஹாஸியம் பேசி மகிழ்வது,  சமையல் கட்டில் வேலை செய்பவளுடன் பேச்சு கொடுத்தபடி உதவி செய்வது... யாரும் மற்ற சமயத்தில் பின்புறமாக அணைத்துக் கொண்டு அவள்  கன்னத்தோடு கன்னம் வைத்து  கொஞ்சுவது , தோட்டத்தில் அன்றைய அலுவல்களை பேசியபடி கரம் பற்றிக் கொண்டு நடப்பது  போன்ற சிறு சிறு சந்தோஷங்கள் கூட அவன் வாழ்க்கையில் நடந்தேறியதே இல்லை ... அதற்கான சந்தர்ப்பமும் அமைந்ததில்லை ...


 ராணுவ கட்டுப்பாடு போல் படுக்கை அறையைத் தாண்டி அவளிடம் அவன் இயல்பாக நெருங்கி பழகியதே இல்லை எனலாம் ...


காரணம் நேரமின்மை மற்றும் தன் சுபாவம் என்று எண்ணினானே ஒழிய  தன் குடும்ப உறுப்பினர்களின் சதி என்று அப்போது  உணரவே இல்லை ...


கடைசியாக சில நாட்களுக்கு முன்பு தன்னவள்  வீட்டை விட்டு சென்று விட்டாள் , என்ற செய்தி கிடைத்தும், அதற்கு தாய் தங்கை சொன்ன காரணத்தை அப்படியே நம்பிக் கொண்டு,  தன்னகங்காரத்தோடு இருந்தானே ஒழிய தன்னவளின்  தரப்பு நியாயத்தை கேட்கத் தவறி விட்டான் ....


அதன் பின் மூன்று மாதங்களுக்கு மேலாகியும் கணவன் தரப்பிலிருந்து உறவை நிலை நிறுத்திக் கொள்ள எந்த ஒரு முயற்சியும்  எடுக்கவில்லை என்ற நிலையில்,  அவனவள் விவாகரத்து கோர, படிப்பு , பணம் , அந்தஸ்து என எவ்வகையிலும்  தனக்கு இணை இல்லாதவளே , விவாகரத்தை நாடும் பொழுது ,  தான் எதற்கு மறுக்க வேண்டும் என்ற இறுமாப்போடும்  வீராப்போடும் அதற்கும்  சம்மதித்தான்....


இப்படிப்பட்டவன் தான் இன்று காதலால் கசிந்துருகி தன் கண்மணி நலம் பெற்று வரவேண்டும் என்று உலகில் உள்ள அத்துணை கடவுள்களையும் துணைக்கு அழைத்துக் கொண்டு அவசர சிகிச்சை பிரிவு  

அறையின் வாயிலில் ஒற்றைக்காலில் நின்று தவம் செய்து கொண்டிருக்கிறான் .


காதல் கொண்டு மணம் முடிப்பவர்கள் ஒரு ரகம் ...


மணம் முடித்து ஓரிரு ஆண்டுகளில் , மனையாளின் மீது காதல் வயப்படுபவர்கள்  மற்றொரு ரகம் ....


இவன் ஒருவன் தான் வித்தியாசமாக மணம் முடித்து மூன்றாண்டுகளாகியும் மனையாளின் மீது  இருக்கும் காதலை உணராமல் விவாகரத்து வரை சென்றவன்....


ஊட்டிக்கு வந்த பின்னர் தான், திருமணத்திற்கு முன் துளிர்க்கும் காதல் போல்,  தன்னவளின் அருகாமைக்காக ஏங்கியது, ஜாடை மாடையாக அவளுடன் ஊடல் கொண்டது ..... அவள் அறியாமல் அவளை அணுஅணுவாய் ரசித்தது அவளுடைய ஒற்றை முத்தத்திற்காக ஏங்கித் தவித்தது ... என காதல் பாடத்தின் அரிச்சுவடியை,  கட்டில் கலையில் மன்மதனுக்கு விஞ்சி  கற்றுத் தேர்ந்த பின்னரே அறிய  ஆரம்பித்திருந்தவனுக்கு எதிர்பாராத பேரிடியாய் இப்படி ஒரு சம்பவம் நடந்தேறி உருக்குலையச் செய்ய , கண்ணாடி சில்லுகள் போல் உடைந்து விட்டான் காளை.


மஞ்சத்தில் அதிகாலை வேளையில் துயில் விழித்தவளை  எழ விடாமல், அவளது  மேகப் பஞ்சாய் விரிந்த  கூந்தலில் முகம் புதைத்துக் கொண்டு  இறுக்கி அணைத்தபடி  ஆழ் துயில் கொண்டது  ...


குளித்து முடித்து புது மலராய் கஸ்தூரி மஞ்சளின் வாசத்தோடு வந்தவளை  எதிர்பாராத தருணத்தில்  இடைப்பற்றி தூக்கி அவளுக்கே உரிதான  பிரத்தியேக வாசத்தை நுகர்ந்து கிறங்கியது....


இரண்டாவது முறையாக கர்ப்பம் தரித்திருப்பதை  அதிகாலையில் கண்களில் லேசாக ஆனந்தக் கண்ணீர் ததும்ப  உணர்ச்சிப் பெருக்கில் கூறி மகிழ்ந்தவளை  அணைத்துக் கொண்டு கொண்டாடியது ....


நீதிமன்றத்தில் அறிமுக தினத்தன்று, விவாகரத்து தர மாட்டேன் என அவன்  வாதம் செய்து கொண்டிருக்கும் போது,  கண்களில் நீர் தளும்ப, வைத்த கண் வாங்காமல் அவனையே அவள் பார்த்துக் கொண்டிருந்தது ...


இன்று மாலை அவன் கடிந்து கொள்ளும் போது கூட பதில் பேசாமல்  அவள் கண்கள் கலங்கியது என அவன் மனதைத் தொட்ட உணர்ச்சிகரமான சம்பவங்கள் மனக்கண் முன் வந்து போக,


லக்ஷ்மி ... ப்ளீஸ் லஷ்மி....  நீ இல்லாம என்னால வாழவே முடியாது டி .... இனிமே உன்னை திட்டவே மாட்டேன்   .... இப்ப தான் புரியுது  உன்னை எவ்ளோ சின்சியரா லவ் பண்றேன்னு  சீக்கிரம் கண் முழிச்சிடு லட்சுமி  நீ போய்ட்டா ஸ்ரீபாப்பா மட்டும் இல்ல நானும் ஒன்னும் இல்லாம போயிடுவேன் டி....  ப்ளீஸ் ... ப்ளீஸ்மா ... என்னை ஏமாத்திடாத  ....


என தன்னவளோடு மானசீகமாக அழுது புலம்பிக் கொண்டிருந்தான் உளவியலாளர் மணியம்மை சொன்னது போல் இங்கு புரிந்து கொண்டு வாழ்பவர்களை விட, வாழும் போது புரிந்து கொள்பவர்கள் தான் அதிகம்  என்பதை அனுபவரீதியாக உணர்ந்து .


அரை மணி நேர போராட்டத்திற்கு பிறகு,  சிகிச்சையை முடித்துக் கொண்டு வெளியே வந்த மருத்துவர் சுமதியிடம் 


"லட்சுமிக்கு என்ன ஆச்சு டாக்டர்... இப்ப எப்படி இருக்கா .... " என பரபரத்தவனிடம்,


"பிபி ஷூட் அப் ஆனதால ஃபிட்ஸ்  வந்து அன்கான்ஷியஸ் ஸ்டேஜ்க்கு  போய்ட்டாங்க ....  ட்ரீட்மென்ட் கொடுத்து பிபியை நார்மலைஸ் பண்ணியிருக்கோம் ... இப்ப லேசா  அவங்க கிட்ட  அசைவு தெரியுது ... கூடிய சீக்கிரம் கண் முழிச்சிடு வாங்க ... அதுக்கப்புறம்  நீங்க  பாக்கலாம் ..." என்றவர் ஒரு கணம் தாமதித்து


"ஆமா... ஏன் இப்படி திடீர்னு ஆச்சு ...    எனி ஸ்பெசிபிக் ரீசன் ... ஏன் கேட்கறன்னா  இன்னொரு தடவை இந்த மாதிரி நடந்தா நிச்சயம் கோமாக்கு போயிடுவாங்க .... அப்புறம் அவங்களயும் குழந்தைகளையும் காப்பாத்தறது ரொம்ப கஷ்டம்..." 


தன்னவள் உயிர் பிழைக்க வேண்டுமே என்ற சிந்தனையிலேயே சிக்கித் தவித்துக் கொண்டிருந்ததால், மயங்கி விழுவதற்கு  முன்  பித்து பிடித்தாற் போல் அவள்  நடந்து கொண்டதைப் பற்றி அவன் சிந்திக்கவே இல்லை. 



மருத்துவர் அவள் மயங்கி விழுந்ததற்கான  காரணத்தை கேட்டதும்  தான்  நடந்ததை  அவசரக் கதியில் மணக்கண்ணில்  ஓட்டிப் பார்த்தவனுக்கு நிகழ்ந்த நிகழ்வுகள் முற்றிலும் ஒன்றோடு ஒன்று சம்பந்தமில்லாமல் போக,  ஒன்றுமே விளங்காமல்  சிலையாகி நின்றான் சில நொடிகள். 


"வாங்க,   அவங்க மெடிக்கல் ஹிஸ்டரியை கொஞ்சம் டிஸ்கஸ் பண்ணனும் ... கேபின்ல போய் பேசலாம்...."

என உறைந்திருந்தவனிடம் உரைத்துவிட்டு மருத்துவர்  முன்னேற,  பெருங்குழப்பத்துடன் அவரை பின் தொடர்ந்தான்.


மருத்துவர் தன் கணினியிலிருந்து லட்சுமியின் மருத்துவ தகவல்களைத் தேடி எடுத்து,


"உங்க வைஃப் என்னை ஃபர்ஸ்ட் டைம்  மீட் பண்ணும் போதே அவங்க ஸ்ட்ரெஸ்காக XXXX டேப்லெட்ஸ எடுத்துக்கிட்டு இருந்ததா சொன்னாங்க ...."


" வாட் ..... ஸ்ட்ரெஸ்காக மெடிசன் எடுத்துக்கிட்டு இருந்தாளா....  எவ்ளோ நாளா  எடுத்துக்கறதா சொன்னா டாக்டர் ...."



"சீ  திஸ் ... ( கணினியின் திரையை அவன் புறமாக திருப்பி)  உங்க வைஃப்  சொன்ன டேட்டை வச்சு பார்த்தா   த்ரீ மன்ஸ்  அந்தப் பவர்ஃபுல் டேப்லெட்ஸ்ஸ எடுத்துக்கிட்டு இருந்திருக்காங்க....   கன்சீவ் ஆனது தெரிஞ்சதும்  அந்த டேப்லெட்ஸ நிறுத்தியிருக்காங்க ....டேப்லட்ஸ நிறுத்தினதால மறுபடியும்   டிப்ரஷன் ரெய்ஸ் ஆகி  தூங்க முடியாம போனதும் என்னை மீட் பண்ண வந்திருந்தாங்க  ... அப்பதான் சொன்னாங்க  டிப்ரஷன் டேப்லட்ட  நிறுத்தினதால  கொஞ்ச நாளா சரியா தூங்க முடியல டாக்டர் .... கெட்ட கெட்ட கனவா வருது ரொம்ப ஸ்ட்ரெஸ்டா  ஃபீல் பண்றேன்... நான் கன்சீவா இருக்கிறதால  சைடு எபக்ட்ஸ் இல்லாத வேற மெடிசனை பிரிஸ்கிரைப் பண்ண முடியுமான்னு கேட்டாங்க .... நானும் பிரிஸ்கிரைப் பண்ணேன்...

அடுத்த முறை வந்த போது, நான் கொடுத்த  மெடிசன்  நல்ல தூக்கத்தை கொடுக்குதுன்னு  சொன்னாங்க ... இன்னைக்கு அந்த மெடிசனை எடுத்துகிட்டாங்களா... உங்களுக்கு தெரியுமா ..." என்று  அந்த மாத்திரையின் பெயரை குறிப்பிட்டு  மருத்துவர் கேட்க,  தடுமாறி 


"தெரியல டாக்டர் ...." என்றவனுக்கு ஒன்று மட்டும் நன்றாக தெரிந்தது, அவனுடைய வீட்டை விட்டு வெளியேறிய பின்பு தான் அவனவள் மிகுந்த மன அழுத்தத்திற்கு உள்ளாகி இருக்கிறாள் என்று. 


" சடனா  பிபி ஷூட்டப் ஆகுறதுக்கு  ஸ்டெரஸ் தான் ரீசன் ... அவங்க வேற ஏதாவது ஸ்ட்ரெஸ்ல இருந்தாங்களா ..."  என மருத்துவர் மீண்டும் கேள்வி எழுப்ப, 


"எங்க எஸ்டேட்ல வேலை பார்த்துகிட்டு இருந்த ஒரு  ப்ரெக்னன்ட் பெண்ணு இன்னைக்கு காலையில  பாம்பு கடிச்சு செத்துட்டா... அந்த விஷயம் தெரிஞ்சதிலிருந்து இவ  சரியா சாப்பிடல .... தூங்கல... ஒரே அழுகை... இப்படியே சாப்பிடாம கொள்ளாம இருந்தா வயித்துல இருக்கிற குழந்தைங்க நிலைமை என்ன ஆகிறதுனு நான் சத்தம் போட்டேன் ....  பதில் சொல்லாம  அழுதா ... அதுக்கப்புறம் அவ டின்னர் சாப்ட்டு தூங்கிட்டா .... கொஞ்ச நேரம் கழிச்சு நானும் டின்னர் சாப்ட்டு வந்து படுத்துட்டேன்  ...  திடீர்னு எழுந்து உட்கார்ந்துகிட்டு தூங்கிட்டிருந்த என் சட்டையை பிடிச்சு எழுப்பி,   நீ யாரு....  வெளிய போனு கத்த ஆரம்பிச்சிட்டா ....  எவ்வளவோ பேசி சமாதானப்படுத்த ட்ரை பண்ணேன்  ஆனா அவளுக்கு நான் யாருன்னும் தெரியல ... என் பேச்சும் புரியல .... பைத்தியம் பிடிச்சா மாதிரி வெளியே போ.... என் கிட்ட வராதன்னு சொன்னதயே திருப்பி திருப்பி சொல்லிக்கிட்டு இருந்தவ ஒரு கட்டத்துல தலையில இருந்த ஹேர்-பின்னை எடுத்து கிட்ட வந்தா ஸ்விட்ச் போர்டுகுள்ள விட்டுடுவேன்னு மிரட்டினா.... வேற வழி இல்லாம நான் அந்த இடத்தை விட்டு போற மாதிரி போக்கு காட்டினதும், மயங்கி விழுந்துட்டா..." 

என்றவன் தேயிலைத் தோட்டத்தில் சந்தித்த பாட்டி அவளுடைய உயிருக்கு ஆபத்து இருப்பதாக சொன்னது அதை மெய்ப்பிக்கும் வகையில் கர்ப்பமுற்றிருந்த  செல்லக்கண்ணுவின் மரணம் நடந்தேறியது என  அனைத்தையும் கூறி முடிக்க, மருத்துவரின் முகம் இயல்பு நிலையில் இருந்து மாறி தீவிரத்தை தத்தெடுத்துக்கொண்டு


"உங்க வைஃப் உங்களுக்கு முக்கியம்னா,  நான் கேட்கப் போற கொஸ்டின்ஸ்க்கு நீங்க உண்மையை மட்டும் பேசணும் ... " என்றார் பார்வையை அவன் மீது கூர்மையாய் செலுத்தி.


" கேளுங்க டாக்டர் ..."  என்றான் தீர்க்கமாய். 


"நீங்க சொன்ன விஷயத்துக்கும் அவங்க உங்ககிட்ட  நடந்துக்கிட்டதுக்கும் கொஞ்சம் கூட சம்பந்தம் இருக்கிறதா தெரியலையே மிஸ்டர் ராம் சரண்  ....


அவங்க எதுக்காக திடீர்னு  உங்களை யாருன்னே தெரியல...  வெளிய போனு அரைகுறை தூக்கத்துல எழுந்து சொல்லணும்... 


அதுவும் தினமும் இரண்டு பேரும் ஒண்ணா தூங்கும் போது,  இன்னைக்கு மட்டும் ஏன் அவங்க அப்படி உங்ககிட்ட  நடந்துக்கணும் ...


அது மட்டும் இல்ல   கடந்த  நாலு மாசமா தான் அவங்க ஓவர் ஸ்ட்ரெஸ்ல இருக்காங்க.... அதுக்காக டிப்ரஷன் டேப்லட்ஸ் எடுத்துக்கிறாங்க ... அந்த விஷயம் கூட  உங்களுக்கு தெரியலயே ஏன்....


உங்க ரெண்டு பேருக்குள்ள ஏதாவது பிரச்சனையா .... அது தான் அவங்க டிப்ரஷனுக்கு  காரணமா....


ப்ளீஸ் டெல் மீ த ட்ருத்.... அப்பதான் அவங்களுக்கு ப்ராப்பர்  ட்ரீட்மென்ட் கொடுக்க முடியும் ... இல்லன்னா இன்னொரு தடவை இதே மாதிரி  ஃபிட்ஸ் வந்தா  அவங்களை ஆண்டவனால கூட காப்பாத்த முடியாது ..." 


என மிக நுணுக்கமாக மருத்துவர் கேள்விகளை முன் வைக்க, ஒரு கணம் அமைதி காத்தவன், பிறகு வெளிப்படையாக அவன் வாழ்க்கையில் நடந்த சில முக்கிய சம்பவங்களை பதிலாக  கூறி முடித்தான்.


" அப்ப.... அவங்க எதுக்காக உங்க வீட்டை விட்டு போனாங்க .... எதுக்காக டிவோர்ஸ் கேட்டாங்க ...எதுவுமே உங்களுக்கு தெரியாது , எதையுமே  தெரிஞ்சுக்காமலே டிவோர்ஸ் கொடுக்க சம்மதிச்சிருக்கீங்க ... இல்லையா ..." என காட்டமாக மருத்துவர் கேட்டு முடிக்க, 

பதில் அளிக்க முடியாமல் தலை குனிந்து கொண்டான். 


" உங்களோடது அரேஞ்சிடு மேரேஜ் தானே ..."


" எஸ் டாக்டர் ..."


" ஓகே ...  ஒரு விஷயத்தை கிளரிஃபை பண்ணுங்க.... அவங்க தங்கச்சி கல்யாணம் நின்னு போனதுக்கு உங்க தங்கச்சி தான் காரணம்னு சண்டை வந்ததை எல்லாம் ஒதுக்கிடுங்க... உங்க ரெண்டு பேருக்குள்ள கடந்த ஒரு வருஷமா உறவு எப்படி இருந்தது ... அதை மட்டும் சொல்லுங்க ..."


" எனக்கும் அவளுக்கும் பர்சனலா எந்த சண்டையுமே வந்தது இல்ல டாக்டர் .... அவளுக்கு என்னை ரொம்ப புடிக்கும் ... எனக்கும் அவளை ரொம்ப புடிக்கும் ... நான் அவளை ரொம்ப லவ் பண்றேன் ..." என்றவனின் பேச்சை இடைவெட்டி 


" ஹவ் அபௌட் யுவர் இன்டிமேட் லைஃப் ... இதை ஏன் பர்டிகுலரா கேட்கிறேன்னா , சில பேர் எல்லா விஷயத்துலயும் நல்லா  நடந்துப்பாங்க .... வேர்அஸ் பிசிகல் இன்டிமேசினு வரும் போது  இன்ட்ரஸ்ட் காட்ட மாட்டாங்க .... நெருங்கி போனாலும் நோ சொல்லுவாங்க ... ரொம்ப ஃபோர்ஸ் பண்ணா பாஸிவ்(Passive) பார்ட்னரா பிஹேவ் பண்ணுவாங்க ... அந்த மாதிரி உங்க வைஃப் ..." என மருத்துவர்  பேச்சை இழுக்க 


" நோ நோ... நோ டாக்டர்... ஃப்ராங்க்ளி ஸ்பீக்கிங் ... வி ஹேட் (had) அ பியூட்டிஃபுல் செக்ஷுவல் லைஃப் .... ஷீ வாஸ்  வெரி ஆக்டிவ் அண்ட்  கோ-ஆப்பரேட்டிவ்... நான் அவளை  ஃபோர்ஸ் பண்ணதேயில்ல...  அவளும் ஒரு முறை கூட நோ சொன்னதில்ல...  சில சமயம் அவளே கூட லவ் மேக்கிங்க இனிஷியேட் பண்ணி இருக்கா ... " என்றவனின் குரலில் தயக்கமும் வெட்கமும் போட்டி போட, 


" ஓ.... அப்ப அந்த விஷயத்துல உங்க ரெண்டு பேருக்குள்ள எந்த பிரச்சினையுமே வந்ததில்ல... ரைட் .."


" எஸ் டாக்டர் ..."


" உங்க வீட்ல உங்க அம்மா தங்கச்சியை தவிர வேற யார் யாரெல்லாம் இருக்காங்க ..." என அவர் வேறு சில சந்தேகங்களை கேள்வியாய் முன் வைக்க ,


" அம்மா தங்கச்சியை தவிர கோயம்புத்தூர் வீட்ல  வேறு யாருமில்ல டாக்டர் ...."


" உங்களுக்கு கூட பொறந்த  அண்ணன் தம்பி வேற யாராவது ...?"


"இல்ல டாக்டர் ... நான் ஒரு பையன் தான் எங்க வீட்டுல ..."


" உறவுக்கார பசங்க வேற யாராவது வீட்டுக்கு அடிக்கடி வந்து போறதுண்டா ..."


" இல்ல டாக்டர் ... ஏன் இதெல்லாம் கேக்கறீங்க ..."


" இப்பெல்லாம் உறவுமுறைல சிக்கல்  அதிகமாயிடுச்சு ....  ஹஸ்பண்ட் சைட் ரிலேஷன்ஸ், ஹஸ்பண்டோட  ஃப்ரெண்ட்ஸ்ங்கிற பேர்ல வீட்ல இருக்குற பொம்பளைங்களுக்கு பாலியல் ரீதியான பிரச்சினைகள் அதிகமா வருது ... அதான் கேட்கறேன்  ..."


ஒரு கணம் யோசித்தவன் ,


"அப்படி யாருமே ... அதுவும்  பர்ட்டிகுலரா ஜென்ஸ் வீட்டுக்கு வரவே மாட்டாங்க டாக்டர் ... "


" எப்படி இவ்ளோ ஸ்ட்ராங்கா சொல்றீங்க .... யாராவது உங்க வீட்டுக்கு வந்திருக்கலாம் ....

ஏதாவது பிரச்சனை நடந்திருக்கலாம் ....  அதனால கூட உங்க வைஃப் உங்க வீட்டை விட்டு போயிருக்கலாம் .... நீங்க கேட்டா சொல்லலாம்னு நெனச்சிருக்கலாம் ... நீங்க உங்க அம்மா தங்கச்சி பேச்சை  கேட்டுக்கிட்டு  அவங்க கிட்ட ஒரு ஃபோன் பண்ணி கூட விசாரிக்காம இருந்துட்டு கடைசில டிவோர்ஸ் வரைக்கும் போயிருக்கீங்க ...


அன்னைக்கே கேட்டிருந்தீங்கன்னா அவங்க மன பாரம் குறைஞ்சிருக்கும் ... பிரச்சனையும் சால்வாயிருக்கும்  ... ஆனா நீங்க அப்ப கண்டுக்காம விட்டுட்டீங்க ... இப்ப அவங்க ட்வின்ஸ கன்சிவா இருக்கிறதால அவங்க பாடி அண்ட் மைண்ட்  ஏகப்பட்ட ஹார்மோன்ஸ ஹேண்டில் பண்ணிக்கிட்டு இருக்கு.. கூட இந்த பிரச்சனையும் சேர்ந்து அவங்கள கம்ப்ளீட் டிப்ரஷன்ல தள்ளிடுச்சு ...."




அவன் மீண்டும் தான் செய்த தவறை உணர்ந்து மௌனமாக தலை குனிய,


" வெல்.... இவ்ளோ  நேரம் உங்க கிட்ட பேசினதை வச்சு உங்க வைஃப் இஷ்யூல  சில விஷயங்களை என்னால  கண்க்ளுட்  பண்ண முடியுது ... 


நான் சொல்றேன் உங்களுக்கு புரியுதான்னு பாருங்க ...


உங்க எஸ்டேட்ல வேலை செஞ்ச பொண்ணு அந்த பாட்டி சொன்னது போல இறந்து போனதால, தனக்கும் அப்படி நடந்திடுமோங்கிற மன அழுத்தத்துல உங்க வைஃப்  இருக்கும் போது  நீங்களும் அவங்க  மேல கோவப்பட்டிருக்கீங்க ...  சோ வேற வழி இல்லாம டின்னர் சாப்டுட்டு தூக்கம் வர்றதுக்காக  நான் கொடுத்த டிப்ரஷன் டேப்லெட்டை  எடுத்துக்கிட்டு அவங்க  தூங்கி இருக்கணும் ...


அவங்க எடுத்துக்கிட்ட மெடிசன்  கான்ஷியஸ் மைண்ட்ட  தூங்க வச்சிருக்கு... ஆனா சப்-கான்ஷியஸ் மைண்ட்ல  அவங்கள தூங்க விடாம துரத்தி கிட்டு இருக்கிற , அவங்க கெட்ட கனவுனு சொல்ற, சமீபத்துல நடந்த ஏதோ ஒரு  கெட்ட சம்பவம்,  திடீர்னு நீங்க நெருங்கி படுத்து  அவங்க மேல கைய போட்டதும் , நினைவுக்கு வந்து அவங்களுக்கு முழிப்ப கொடுத்திருக்கு ....


அது மட்டும் இல்ல அவங்க தூங்கும் போது தனியா படுத்தது வேற அவங்க மைண்ட்ல ஸ்ட்ராங்கா ரெஜிஸ்டரானதால ,  நடந்து முடிஞ்ச அந்த கெட்ட சம்பவத்தோட நீங்க நெருங்கி படுத்ததையும்  ரிலேட் பண்ணினதால, அவங்களால உங்கள ரெகக்னைஸ் பண்ண முடியாம போயிடுச்சு ... அதனால தான் யார்கிட்டயோ பேசற மாதிரி கோவப்பட்டு அப்படி நடந்துக்கிட்டு  இருக்காங்கன்னு தோணுது ...." என பட்டும் படாமல் தொட்டும் தொடாமல் நடந்து முடிந்த விஷயத்தை அனுமானித்து மருத்துவர்  நாசூக்காக எடுத்து சொல்ல, அவர் சொன்னதை கேட்க கேட்க  மூளைக்குச் செல்லும் ரத்த நாளங்களில் ரத்தம் உறைவது போலான பெருத்த வலி எடுக்க, துடி  துடித்தபடி தன் தலையை இரு கரங்களால் பிடித்துக் கொண்டான் நாயகன். 



"ஆர் யூ ஓகே ...." என மருத்துவர் அளவுக்கு அதிகமாக சிவந்திருக்கும் அவன் கண்களைப் பார்த்து  கேட்டதும்,  தலையை குலுக்கி சுதாரித்தவன்,


" யு மீன் .... நான் வீட்ல இல்லாதப்ப , என் வைஃப் தூங்கிக்கிட்டு இருக்கும் போது , யாராவது அவளை  நெ..... நெருங்கி இருப்பாங்கனு  சொல்றீங்களா ...." எனத் தடுமாற்றத்தோடு அவன் முடிக்க,


"ஏறக்குறைய அந்த மாதிரி தான் ஏதோ ஒரு விஷயம் நடந்திருக்கு ... சரியா சொல்லனும்னா , நடந்த அந்த விஷயத்தை உங்க வைஃப்    அவங்களுக்கே தெரியாம உங்களுக்கு  ரீ-கிரியேட் பண்ணி காட்டி இருக்காங்கன்னு தோணுது .... ஒன் மோர் திங் ...

இது முழுக்க முழுக்க  அசெம்ப்ஷன் தான் .... நடந்தது தெரிய வந்தா தான் உண்மையோட எவ்ளோ பொருந்துதுன்னு தெரிய வரும் ..."


இப்படி ஒரு கொடூரமான மனிதாபிமானமற்ற அராஜகம் தன் கண்மணியின் மீது கட்டவிழ்க்க பட்டிருப்பதை எண்ணி துடித்தவனுக்கு,  கோபம் எரிமலையாய் கொந்தளிக்க,

அதனை அவன் முகத்திலிருந்தே படித்த மருத்துவர்,


" அவசரப்படாதீங்க ராம்சரண் ... உங்க வைஃப்க்கு இன்னைக்கு நைட் நடந்த எதுவுமே ஞாபகத்துல இருக்காது ... அவங்க கண் முழிச்சதும் அவங்க கிட்ட இயல்பா அன்பா பேசுங்க .... இப்போதைக்கு இந்த விஷயத்தை பத்தி எதுவும் கேட்காதீங்க  ... அவங்க மனசு ரொம்ப ரணமா இருக்கு .... மெண்டலி அவங்களுக்கு ரொம்ப ரெஸ்ட் தேவைப்படுது ப்ளீஸ் ..."


" ஓகே  டாக்டர் ....  நடந்தது என்னன்னு தெரியாம  தவிச்சுக்கிட்டு இருந்த எனக்கு ஓரளவுக்கு விஷயத்தை ஃப்ரேம் பண்ணி  புரிய வச்சிட்டீங்க ... தேங்க்ஸ் எ லாட் ... நான் வெளிய  வெயிட் பண்றேன் ..."  


பொங்கிய கோபம், ஆத்திரம், ஆற்றாமை, ஆவேசத்தை எல்லாம், தன் காதலிக்காக கட்டுப்படுத்திய படி அந்த அறையை விட்டு எரியும் மனதோடு வெளியேறினான். 



"வா மனோஜ் ..."  என்றான் ரிஷி , தன் அலுவலக அறையிலிருந்த கணினியில் இருந்து விழிகளை அகற்றாமல்.


வந்தவன் தயங்கி நிற்க,


" பைட்டீயே பையா ..." என குறும்பாக ரிஷி மொழிய,  வந்தவனோ அமராமல்  தயங்கி தயங்கி நிற்க,


" ஏன் ஒரு மாறி இருக்க மனோஜ் ...    நான் சொன்னவங்கள பத்தின டீடைல்ஸ்  கிடைச்சதா ..."


" கிடைச்சது சார் .."


" அப்ப சொல்லு... எதுக்கு தயங்கற ..."


" அது வந்து .... இதுவரைக்கும் நீங்க ஒருத்தரைப் பத்தி ஸ்கெட்ச் போட்டுக் கொடுத்தா அது பக்கவா பொருந்தும் சார் .. ஆனா இந்த முறை ..."


" என்ன ஆச்சு .... லட்சுமியை பத்தி ஃபுல் டீடைல்சும் கிடைச்சுருச்சு இல்ல ...  அவங்க ஹஸ்பண்ட் யாரு.. என்ன வேலை செய்றான்... ஊட்டில அவங்க வீடு எங்க இருக்கு .... எல்லா இன்ஃபர்மேஷனும் கலெக்ட் பண்ணிட்ட இல்ல ... பின்ன என்ன... சொல்லு..." என ரிஷி பரபரக்க 


"அயோத்தி  டீ ப்ளான்டேஷன் அண்ட் ஃபேக்டரியோட ஓனர் ரங்கசாமியோட ஒரே மகன் ராம் சரணை  தான் லஷ்மி  கல்யாணம் பண்ணி இருக்காங்க ..."


" வாட் ...  அயோத்தி எஸ்டேட் ரங்கசாமியோட மகனையா லஷ்மி  கல்யாணம் பண்ணி இருக்காங்க ..." என்றான்  ரிஷி அதிர்ச்சியோடு மீண்டும் ஒரு முறை உறுதி செய்து கொள்ளும் எண்ணத்தில். 



ஸ்ரீ-ராமம் வருவார்கள்.... 


































































Comments

  1. Wow very very interesting sis. semmaya poguthu

    ReplyDelete
  2. Super.... Doctor light aa oru line potu katitanga...ini ramsaran kandupidichiduvan....
    Super ka..... Next episode epo poduvernga.....ean ka week la 2 episode kooda poda matringa

    ReplyDelete
    Replies
    1. thanks ma... kozhithaikaluku exam da... athaan one episode podave kashta padren... next week free aiyuven

      Delete
    2. Ok akka ... thank you for your reply

      Delete
  3. Supperrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrr

    ReplyDelete

Post a Comment