ஸ்ரீ-ராமம்-75

 அத்தியாயம் 75 


எப்படியோ சமாதானம் செய்து, மனைவியை அவன் சாப்பிட வைத்துக் கொண்டிருக்கும் போது ரங்கசாமி அங்கு வந்து சேர்ந்தார்.


இருவர் முகத்திலும் அப்பியிருந்த அளவு கடந்த  சோகத்தை கண்டு, அவர்களுக்கிடையே ஏதோ பிரச்சனை என்றெண்ணி,

"ஏம்ப்பா சரண்,  லட்சுமி கிட்ட  சண்டை போட்டயா..."  என்றார்.


உடனே ராம்சரண் நடந்த அனைத்தையும் ஒன்று விடாமல் சொல்லி முடிக்க,


"ப்ஃபூ.... இதுக்கா நீங்க ரெண்டு பேரும் இவ்ளோ சோகமா இருக்கீங்க...  இந்த ஊர்ல இந்த மாதிரி நிறைய பேர் சுத்திக்கிட்டு இருக்காங்க ....  சும்மா குறி சொல்றன்ற  பேர்ல பணத்துக்காக  வாய்க்கு வந்ததை அடிச்சு விடுவாங்க .... அதை எல்லாம் பெருசா எடுத்துக்காதீங்க ..."


"இல்ல மாமா .... அந்தப் பாட்டி   பணத்துக்காக   எல்லாம் சொல்லல ....    அவங்க முகத்துல ஒரு தீட்சண்யம் தெரிஞ்சது .... அவங்க வார்த்தை பலிச்சிடுமோன்னு  பயமா இருக்கு  .... செல்லக்கண்ணுவ ( போட்டோ எடுத்த இளம் கர்ப்பிணி பெண்)    அமாவாசை முடியற வரைக்கும் நம்ம வீட்டுல தங்க செல்லலாமா...  ஏன்னா அவ வீடு யூகலிப்டஸ் தோட்டத்துக்குள்ள இருக்கு .... அங்கு பாம்புங்க வர்ற வாய்ப்பு இருக்கு ... அதனால தான் ......"

அதனைக் கேட்டு வாய்விட்டு சிரித்த ரங்கசாமி,


"அந்த பொண்ணோட அப்பா சோமனே ஒரு பெரிய பாம்பாட்டி .... அவங்களுக்கு இந்த காடு , மலை எல்லாம் ரொம்ப பழக்கம்மா.... அதோட இந்த ஒன்னும் இல்லாத விஷயத்துக்கெல்லாம் அந்த பொண்ணு நம்ம வீட்டுக்கு வந்து தங்காது .... எதுக்கும் மேனேஜரை விட்டு பேச சொல்றேன் ..." 

என்றவர் துரிதமாக அதற்கான ஏற்பாட்டை  செய்ய , அடுத்த அரை மணி நேரத்தில்,  ரங்கசாமி சொன்ன காரணங்களை சொல்லியே,  அந்தப் பெண் வர மறுத்து விட்டாள் என்ற செய்தி மேலாளர் மூலம் கிட்ட,


"பாத்தீங்களா , அந்த பொண்ணு வர மாட்டேன்னு சொல்லிட்டா... எனக்கு இந்த ஊரை பத்தி நல்லா தெரியும்... காட்டு விலங்கு, பாம்பு எதுக்கும் இந்த ஜனங்க பயப்பட மாட்டாங்க .... அந்த பாட்டி சொன்னது அந்த பொண்ணுக்கே பலிக்காதுன்னும் போது , லட்சுமிக்கு  மட்டும் எப்படி  பலிக்கும் ....? "


நாயகன் நாயகி இருவரும் ஒருவரை ஒருவர் அமைதியாக நோக்க, 


"சரண்,  நான் இங்க இருக்கிற வேலை எல்லாம் பார்த்துக்கிறேன் ... நீ லக்ஷ்மியை கூட்டிட்டு போய் வீட்ல விட்டுடு ... லட்சுமி .... இதை எல்லாத்தையும் மறந்துட்டு  வீட்டுல  நிம்மதியா தூங்கி  ரெஸ்ட் எடும்மா..." என இளையவர்களுக்கு அறிவுறுத்திவிட்டு அவர் தன் வேலையில் மூழ்க,  அதற்கு மேல் அங்கிருக்க மாட்டாமல் தம்பதியர் விடை பெற்றனர்.


வீட்டை அடைந்ததும், தாயைப் பார்த்து தாவி வந்த குழந்தையை கண்டு லட்சுமியின் கண்கள் குளம் கட்ட,  குனிந்து  குழந்தையை தூக்க முயலும் போது,


"லட்சுமி ... குழந்தையை தூக்காத .." என்றவன் தானே குனிந்து குழந்தையை அள்ளிக் கொண்டான்.


சிவகாமி அடுப்படியில் இருப்பதை அறிந்து கொண்டவள் அழுகையை மறைக்க எண்ணி தன் அறைக்குள் புகுந்து கொள்ள,  அவளைக் குழந்தையோடு பின்தொடர்ந்தவன், நெருங்கி அவள் உச்சந்தலையை வருடி,


"இன்னைக்கு உன் கூட டைம் ஸ்பென்ட் பண்றதுக்காக தான் வொர்க் ஃப்ரம் ஹோம் போட்டேன்... ஆனா கடைசில  ஏதேதோ  ஆயிடுச்சு ... என் அப்பா  சொன்னதை கேட்ட இல்ல ... அவருக்கு இந்த ஊரை பத்தி நல்லா தெரியும்... நீ எதை பத்தியும் யோசிக்காம நல்லா தூங்கி ரெஸ்ட் எடு ... ஆபீஸ்ல மீட்டிங் இருக்கு ... நான் போய் முடிச்சுட்டு வந்துடறேன்" 


சமீப காலமாக அவனிடம் குடி கொண்டிருந்த  தன்னகங்காரம், மோகம், தாபம் எல்லாம் ஈரத்துணி வைத்து துடைத்தார் போல் காணாமல் போய்,  பாசமும் அக்கறையும் மட்டுமே அவன் பேச்சில்  விரவி இருக்க  , அதனை உணர்ந்து கொள்ளும் நிலையில் இல்லாதவள், இயந்திரத்தனமாய்  தலையசைத்து விடை கொடுக்க,  சற்றும் எதிர்பார்க்காத  ஒன்று அலுவலகத்தில்  அவனுக்காக   காத்துக் கொண்டிருப்பதை அறியாமல் மனையாளின் கன்னத்தை மென்மையாக  தட்டி விட்டு, அலுவலகம் நோக்கி பயணப்பட்டான்.

 மனதை திசை திருப்ப,  அன்றைய பொழுது முழுவதும் அலுவலகப் பணி,  குழந்தையுடன் விளையாடுவது, உறங்குவது போன்றவற்றில் ஈடுபட்டு நேரத்தை நெட்டி தள்ளினாள் நாயகி.


மாலை மங்கும் நேரத்தில் வீடு திரும்பிய ரங்கசாமி,  குழந்தை மற்றும் லட்சுமியோடு  இரவு உணவு உண்டு கொண்டிருக்கும் போது  சிவந்த முகமும் , இன்னதென்று  பிரித்தறிய முடியாத  முக பாவத்தோடும்  வழக்கத்தை விட  நேரம் கழித்தே   வீடு வந்து சேர்ந்தான் ராம்சரண்.


 

"என்னப்பா ஒரு மாதிரி இருக்க ...   ஆபீஸ்ல வேலை அதிகமோ.... சரி,   சரி,  முதல்ல போய் ப்ரெஷ் ஆயிட்டு வா....  சாப்பிட்டு கிட்டே பேசலாம் ..." 

என ரங்கசாமி விசாரித்த மாத்திரத்தில் தன் அறைக்குள் நுழைந்தவன், அடுத்த பத்தாவது நிமிடத்தில் ஓரளவிற்கு புத்துணர்வு பெற்று மலர்ந்த முகத்தோடு உணவருந்த வந்தான்.


எப்பொழுதும் போல் இயல்பான உரையாடல்களுடன் உணவருந்தும் படலம் முடிய,  தன் அறைக்கு சென்றவளை பின் தொடர்ந்தவன்,


"லக்ஷ்மி,  ஆர்டர் பண்ணின டிரஸ்ஸஸ ட்ரை பண்ணி பார்த்தியா ..."  என்றான் ஆர்வமாய்.


"இன்னும் ட்ரை பண்ணல ... ஆனா சரியா இருக்கும்னு தோணுது ..." என்றவளின் முகம் சோகமே உருவாய் காட்சி அளிக்க, 


"பர்பிள் கலர்ல இருக்கிற கேஃப்டன் (Kaftan) மாடல்   நைட்டியை போட்டுட்டு வா.." என்றான் அவள் மனதை திசை திருப்பும் எண்ணத்தில்.


அடுத்த சில மணித்துளியில் ,  நீண்ட கைகளும், உடலின் இரு புறமும் மீனின் துடுப்பு போல் ஃபிரில்கள் கொண்ட  சற்று தொள தொளவென தூய்மையான பருத்தியில் தயாரான இரவு உடையில் தயங்கியபடி அவன் அறைக்கு அவள் வந்து நிற்க,  ஏற இறங்க பார்த்தவன்,


"லுக்கிங் குட் ...."  என்று திருப்திகரமாக மொழிந்து விட்டு 


"லேப்டாப்ல டைம் ஸ்பென்ட் பண்ணாம  போய் நிம்மதியா தூங்கற ...நான் வந்து பார்ப்பேன் ..."  என மிரட்டுவது போல் அக்கறையாய் கூறி அனுப்பிவிட்டு, எதையெதையோ நினைத்தபடி , நள்ளிரவுக்கு மேல் உறங்கிப் போனான். 


மறுநாள் காலை மணி எட்டை கடந்து உறக்கம் விழித்தவன்,  அன்று முழுவதும் மனையாளின் அருகிலேயே இருக்க திட்டமிட்டு முந்தைய தினமே  அலுவலகத்தில் 

முக்கிய கலந்தாய்வுகளை முடித்து விட்டே வந்திருந்தான்.


பொறுமையாய் புத்துணர்வு பெற்று கூடத்திற்கு வந்தவனின் பார்வையில்,  அவன் மனைவி குழந்தைக்கு உணவு ஊட்டிக் கொண்டிருக்கும் காட்சி பட,  மென் புன்னகையோடு உணவருந்த அமர்ந்தவனிடம், 

"இன்னைக்கு ஆபீஸ் போகணுமா ..."    என்றாள் அவன் மனைவி எதிர்பார்ப்போடு.


"நேத்தே மீட்டிங் எல்லாம் ஓவர் ...  இன்னைக்கு வீட்ல இருந்தே கனெக்ட்  பண்ணிக்கலாம்னு இருக்கேன்....  ஆமா ஏன் கேக்குற ..."


"இன்னிக்கு ...அ... அமாவாசை ...  எனக்கு அந்த பொண்ணு   செல்லக்கண்ணுவ பாக்கணும் போல இருக்கு .... எஸ்டேட் போலாம்னு இருக்கேன் ... வரீங்களா ..."  என்றவளின் முகத்தில் லேசான பதற்றம் தெரிய,


"வா போலாம் .... இன்னைக்கு ஈவினிங் வரைக்கும் அங்கயே அந்த பொண்ணு கூடயே இருந்துட்டு வரலாம் ... போதுமா ..." என்றவனின் புரிதலில் அவள் முகம் தெளிய,


"நீ பயப்படற மாதிரி அந்த பொண்ணுக்கு ஒன்னும் ஆகப் போறதில்ல .... அந்த பாட்டி சொன்னது  சுத்த பொய்யின்னு இன்னிக்கு சாயங்காலமே தெரிஞ்சிடும்  பாரு .."

என்றவன் அதற்கு மேல் சற்றும் தாமதிக்காமல்,  தன்னவளோடு  கிளம்பி எஸ்டேடுக்கு பயணமானான்.


அவள் காரை விட்டு இறங்கிய மாத்திரத்தில்,  மலர்ந்த முகத்தோடு அவளை எதிர் கொண்ட செல்லக்கண்ணு,


"நிம்மதியா நேத்து ராவு தூங்கனீங்களா ...  எனக்கு அந்த பாட்டி சொன்ன மாதிரி ஏதாச்சும் ஆயிடும்னு பயந்து , அமாவாசை முடியற வரைக்கும் உங்க வீட்ல என்னை தங்க வச்சுக்க போவறதா மேனேஜர் என் அப்பா கிட்ட சொன்னாராம் ... அதைக் கேட்டு நான் எவ்ளோ சிரிச்சேன் தெரியுமா .... மீன் குஞ்சுக்கு தண்ணில சாவுன்னு சொன்னா எப்படி நம்ப முடியாதோ....அதே மாதிரி தான்,  பாம்பால எனக்கு சாவுன்னு அந்த பாட்டி ஓளறினதும் ...." 

என தொடங்கி ஒரு அரை மணி நேரம் தன் வீர பிரதாபத்தை எல்லாம் பிரஸ்தாபித்துவிட்டே பணிக்குச் சென்றாள் செல்லக்கண்ணு. 


பின் தம்பதியர் மடிக்கணினியில் அவரவர்களுக்கான வேலையில் மூழ்கி போனாலும் ,  லட்சுமி மட்டும்  காலாற நடப்பது போல் காட்டிக் கொண்டு  அவ்வப்போது செல்வக்கண்ணுவை  பைனாகுலர் மூலம்  கண்காணித்துக் கொண்டிருந்தாள். 


அவளது  செய்கையை கண்டு  விழிகளில் பரிதாபம் வழிய நெருங்கியவன் 


"அந்த பொண்ணுக்கு ஒன்னும் ஆகாது  ... உனக்கும் ஒன்னும் ஆகாது...சரியா..."  என்றான் வாஞ்சையாய்.


 "நான் என்னை பத்தி கவலைப்படல ...  சாவ பார்த்தும் பயப்படல ... பூமில பொறந்தவங்க அத்தனை பேரும் ஒரு நாள் செத்து தான் ஆகணும் .... ஆனா  அடுத்தவங்களுக்கு வகைத்தொகை இல்லாம கெட்டது  செஞ்சவங்க தான் சாவுக்கு அப்புறம்  எமதர்மராஜனோட தீர்ப்பு எப்படி இருக்குமோனு பயப்படணும் ....  என் மனசறிஞ்சு நான் யாருக்குமே கெடுதல் நினைச்சதில்ல... அதனால இந்த பூமியோட  இருக்கிற உறவு எப்ப முடிஞ்சு போனாலும்  கவலை இல்ல ... ஆனா.... ஒண்ணுமே தெரியாத ஸ்ரீபாப்பாவை விட்டுட்டு  போகணுமேன்னு நினைச்சா தான் வருத்தமா இருக்கு ... நான்  இல்லாம குழந்தை ரொம்ப கஷ்டப்படுவா ..."  என தாய் பாசத்தில்  விழி நீரோடு கூறியவளை , அவளவன் வித்தியாசமாக உற்று நோக்க,


" ஏன் ஒரு மாதிரி பாக்கறீங்க ..." என்றாள் கண்களை துடைத்துக்கொண்டே.


"புள்ள.. சொந்த ரத்தம் ... புருஷன் வேற ரத்தம் ... அதான் புள்ளைய  மட்டும் நெனச்சு கஷ்டப்படற... இல்ல ..."


"ஐயையோ ... நான் அப்படி சொல்ல வரல .... குழந்தை சின்னவ ... அம்மா இல்லாம கஷ்டப்படுவாளேனு சொன்னேன் ..."


"நீ இல்லாம நான் மட்டும் கஷ்டப்பட மாட்டனா....  ஸ்ரீபாப்பா குழந்தை ... நான் பெரியவன்.... அதாண்டி வித்தியாசம் ..... மத்தபடி எங்க ரெண்டு பேருக்கும் நீ இல்லாம வாழவே தெரியாது ...."  


ஒரு மாதத்திற்கு முன்பு விவாகரத்துக்கு சம்மதம் சொன்னவனா  இவன்  ....என ஆச்சரியப்படும் அளவிற்கு, அவன் குரல் கரகரக்க, பதில் சொல்ல  தெரியாமல் வாயடைத்து போனாள் பெண் .


சிறு மணித்துளிகள் அமைதிக்குப் பிறகு ,


" வா லட்சுமி...  சாப்பிடலாம் ... "    சமாதான குரலில் அவன் கூப்பிட,  ஒரு கணம் யோசித்தவள்,


"செல்லக்கண்ணுவ நம்ம கூட சாப்பிட சொல்லலாமா ...." என்றாள் மென்மையாய். 


உடனே அவன் சம்மதிக்க, செல்லக்கண்ணுவோ எடுத்த எடுப்பில் மறுத்துவிட்டாள்.


மிகுந்த வற்புறுத்தலுக்குப் பிறகே, சிவகாமி கொடுத்த அனுப்பிய உணவு வகைகளை  ரசித்து ருசித்தவள்,


" சாப்பாடு ரொம்ப ருசியா இருக்கு ..."       என்றாள் சப்பு கொட்டியபடி. 


"அப்ப நான் இங்க வரும் போதெல்லாம் உனக்கும் சேர்த்து சாப்பாடு கொண்டு வரேன் ரெண்டு பேரும் ஒண்ணா சாப்பிடலாம் ..." 

என லக்ஷ்மி கூறிய மாத்திரத்தில்,


"ஐயோ அதெல்லாம் வேணாம்மா...இன்னைக்கு நீங்க ரொம்ப கேட்டுக்கிட்டதால உங்க கூட சாப்பிடறேன் ... இல்லாட்டி போனா என் வூட்டுகாரோட தான் சாப்பிடுவேன் ... எனக்கு அத வுட்டுட்டு சாப்பிட புடிக்காது... அதுக்கும் அப்படித்தான் ..." என்றவள்  தன் கணவனைப் பற்றிய கதைகளை அளக்க, அதனை  கேட்டு சிரித்து படி உணவு உண்டு முடித்தனர் ராம்சரண் தம்பதியர். 


உணவிற்கு பிறகு  தோட்டவேலை செய்ய சென்றவளை , மீண்டும் மாலை நேர தேநீருக்கு வருந்தி அழைத்தாள் லட்சுமி.


இம்முறை அதிகம் மறுக்காமல்,  ஆவி பறக்கும் இஞ்சி, ஏலம் தட்டி போட்ட தேநீரை பிஸ்கட் சகிதமாக ரசித்து விழுங்கியவள், அதற்கும் பாராட்டு பத்திரம் வாசித்ததோடு , சில பல கதைகளை கட்டவிழ்க்க,  கேட்டு மகிழ்ந்த படி தேநீர் அருந்திய லட்சுமி,


"மணி அஞ்சு ஆயிடுச்சு ... இன்னிக்கு அமாவாசை .... சீக்கிரமே இருட்டிடும் ... அப்புறம் யூகலிப்டஸ் தோட்டத்துக்குள்ள போக கஷ்டப்படுவ ... இப்பவே கிளம்பு செல்லக்கண்ணு  ..."  என்றாள் நட்பாக. 


"ஐயோ சின்னம்மா .... நான் பாக்காத அமாவாசை பௌர்ணமியா .... எத்தனையோ அமாவாசை இருட்டுல மொபைல் டார்ச்ச வச்சிக்கினு தனியா வீட்டுக்கு போயிருக்கேன்  தெரியுமா ... வீடு ஒன்னியும் ரொம்ப தொலவு எல்லாம்  கிடையாது .... இங்கிருந்து கூப்பிடற தூரம் தான்....   அமாவாசை ஏறக்குறைய முடிஞ்சி போச்சு  ... கிழவி சொன்னது பொய்யின்னு ஆயிடுச்சு... அத நெனச்சு சந்தோஷப்படாம திரும்பத் திரும்ப பயப்படறீக ..."


"இன்னும் அமாவாசை முடியல ... இன்னைக்கு ராத்திரியும் நல்லபடியா போனா தான் பாட்டி சொன்னது பொய்யின்னு அர்த்தம் ...சும்மா  பழசை பேசி டைம் வேஸ்ட் பண்ணாம   சீக்கிரமா வீட்டுக்கு கிளம்புற வழியை பாரு ..." 

என லட்சுமி உறுதியாக சொன்னதும் , சிரித்த முகத்தோடு வீட்டுக்கு விடை பெற்றாள் செல்லக்கண்ணு .


லட்சுமி,  ராம்சரண் இருவருக்குள்ளேயும் எதோ ஒரு பெரும் பாரம் குறைந்த உணர்வு உதயமாக , முந்தைய இரவின் தூக்கமின்மை மற்றும் மன அழுத்தம் காரணமாக பயணம் தொடங்கிய மாத்திரத்திலேயே லட்சுமி ஆழ்ந்த நித்திரைக்கு செல்ல, வண்டியில் இருந்த தலையணைகளை அவள் உறங்க ஏதுவாக முட்டுக் கொடுத்தவன் , உறங்கும் தன்னவளை  பெருத்த நிம்மதியோடு  பார்த்து ரசித்துக் கொண்டே வீடு நோக்கி காரை செலுத்தினான்.  


இரவு உணவு அருந்தும் போது ரங்கசாமி மிகுந்த பெருமிதத்தோடு, தன் மகன், மருமகளை பார்த்து 


"அந்த பாட்டி சொன்னது உண்மையா இருந்தா நேத்து நைட்டே  அந்த பொண்ணுக்கு ஏதாவது  நடந்திருக்கணும்... இல்லனா இன்னைக்காவது  நடந்திருக்கணும் .... இப்ப வரைக்கும் எதுவும் நடக்கல ....  இன்னைக்கு ராத்திரியோட அமாவாசையே முடியப்போகுது .... இனிமேலாவது இந்த மாதிரி பொழுதுபோக்கா ஓளறிட்டு போறவங்க வார்த்தைக்கு  இம்பார்ட்டன்ஸ்  கொடுத்து உங்க நிம்மதியை கெடுத்துக்காதீங்க  ..." 

என்றவருக்கு தெரியாது அன்றைய இரவோடு அந்த வீட்டில் உள்ளவர்களின் நிம்மதி எல்லாம்   காணாமல்  போக போகிறதென்று .


அன்றைய இரவு கணவன் மனைவி இருவருமே தத்தம் அறையில் , மனக்கலேசம் ஏதுமின்றி ஆழ்ந்த நித்திரையில் மூழ்கினர். 


மறுநாள் காலை ஏழு மணி அளவில் கண் விழித்தவள் , இனம் புரியாத உற்சாகத்தோடு  குளியல் அறைக்கு சென்று புத்துணர்வு பெற்று வந்ததும்,  முதல் வேலையாக மேலாளரை அழைத்து 


"செல்லக்கண்ணு வேலைக்கு வந்திருக்காளா..."  என்றாள் எதிர்பார்ப்போடு.


"வந்திருக்கும்மா...  ஆரஞ்சு மரத்துக்கு மருந்தடிக்கிற வேலை கொடுத்திருக்கேன் ..." 


 கேட்டதும் நிம்மதி பெருமூச்சு விட்டவள் ,


"நான் ஒரு பத்து மணிக்குள்ள அங்க வரேன் ..." என்று அழைப்பை துண்டித்துவிட்டு என்றும் இல்லாத மனநிறைவோடு தயாராகி  உணவருந்த கூடத்திற்கு வந்தாள். 


சீரான  ஓட்டத்தை முடித்து கொண்டு  வந்த அவள் கணவன்,  தன்னவளின்  முகத்தில் காணப்பட்ட தெளிவை ரசித்தபடி,  லேசாக நெருங்கி,


"என்ன டி ரொம்ப சந்தோஷமா இருக்க ..." என்றான் கிசுகிசுப்பாக.


அவன் விழிகளில்  தளும்பிய காதல்,  அடர்ந்த மீசைக்கிடையே மறைந்திருந்த மென் சிரிப்பு, திடீர் நெருக்கமெல்லாம் மங்கையை மயக்க,


"செல்லக்கண்ணு வேலைக்கு வந்துட்டாளாம்..." லேசான வெட்கத்தோடு அவள் மிழற்ற, 


"ஓ.... அதான் இவ்ளோ சந்தோஷமா ...." என்றான் அவளை விட 100 மடங்கு சந்தோஷத்தில் மிதந்து.


"நான் இன்னைக்கும் எஸ்டேட் போகலாம்னு இருக்கேன் .... நீங்க கொஞ்சம் வர முடியுமா ..."  தயக்கத்தோடு அவள் கேள்வி எழுப்ப 


"ஐ அம் ஆல்வேஸ் அட் யுவர் சர்வீஸ் மிஸ்ஸஸ்  லட்சுமி காரு...." என என்றைக்கும் இல்லாத திருநாளாக வழிந்து கொண்டே  அவளது நுனி மூக்கை அவன் லேசாக  திருக,


"ஐயோ விடுங்க ...."  வெட்கத்தோடு விலகியவள், உணவு மேஜைக்கு வந்து சிவகாமி வைத்த ஆறு இட்லிகளை மறுக்காமல் உண்டு முடித்துவிட்டு , அறைக்குத் திரும்பி முந்தைய தினத்தின் விடுபட்ட பணிகளை மடிக்கணினியில் முடிக்கலானாள்.


காலை உணவருந்த ரங்கசாமி கூடத்திற்கு வந்த பொழுது , டிப் டாப் ஆக தயாராகி மைந்தன் உணவருந்திக் கொண்டிருக்க,


"என்னப்பா ஆபீஸ் கிளம்பிட்டியா ..."


"இல்லப்பா .... லக்ஷ்மி இன்னிக்கு எஸ்டேட் போகணும்னு சொன்னா... அவ கூட போகலாம்னு இருக்கேன் ..."


"ஊட்டி பக்கமே வராம இருந்த உன்னை எஸ்டேட், பேக்டரினு என் மருமக வரவழைச்சிட்டா இல்ல  ..." என கம்பீரத்தோடு அவர் நகைக்க 


"சின்ன பொண்ணு ... பிரக்னண்டா வேற இருக்கா ..... அதான் கூப்பிட்டதும் நோ சொல்ல முடியாம போக வேண்டியதா இருக்கு ..." 

என முகத்தை கடினப்பட்டு சோகமாக வைத்த படி இளையவன் கூற,


"பொண்டாட்டி பேச்சைக் கேட்கறதும்,   அவ ஆசைப்பட்டத  செய்யறதும் தப்பே இல்ல .... அதை சொல்ல  முகத்தை  கஷ்டப்பட்டு சோகமா வச்சிக்க வேண்டிய அவசியமும் இல்ல...."

என ரங்கசாமி  மீண்டும் குலுங்கி நகைக்க, மைந்தனும் உடன் இணைந்து கொள்ள, அப்போது அவர்  அலைபேசி ஒலித்தது .


அழைப்பை அனுமதித்து பேச தொடங்கியவரின் முகம் வெளிறி போக,


"ஓ காட் .... எப்ப நடந்தது ... எங்க நடந்தது ..."


"......."


"போலீசுக்கு இன்ஃபார்ம் பண்ணிட்டீங்களா..." 


"......"


"இம்மீடியட்டா இன்ஃபார்ம் பண்ணுங்க .... போலீஸ் வந்து போஸ்ட்மார்ட்டம்  பண்ணா தான் நாளைக்கு நமக்கு எந்த பிரச்சனையும் வராது .....  கொஞ்சம் லேட் பண்ணா கூட நியூஸ் பேப்பர்ல ஆரம்பிச்சு youtube சேனல் வரைக்கும்,  கண்டமேனிக்கு கதை கட்ட ஆரம்பிச்சிடுவாங்க .... "


" ........"


"சொன்னதை செய்ங்க .... நான் இப்பவே கிளம்பி வரேன் ..." என அழைப்பை முடித்தவரிடம்,


"என்னப்பா ஆச்சு ..." என்றான் மைந்தன் தீவிரமாக.


"செல்லக்கண்ணு இஸ் நோ மோர் ...." என்றார் அதிர்ச்சியோடு. 


"வாட் ....  ஐ காண்ட் பிலிவ் திஸ் ... எப்ப நடந்தது ... பாம்பு கடிச்சா செத்துட்டா ..."


"ஆமாம்பா....   8:30 மணி வாக்குல நீராகாரம் குடிக்கிறதுக்காக அவளோட குடிசைக்கு போயிருக்கா... அங்க ரொம்ப நாளா யூஸ் பண்ணாத பழைய உப்பு பானைல அவ கைய விட,  அங்க எப்பயோ  பதுங்கி இருந்த விஷ பாம்பு அவ  கையிலயும் கழுத்துலயும் கொத்திடுச்சாம் ... உடனே வாயில நுரை தள்ளி,  இழப்பு மாதிரி வந்து அந்த பொண்ணு செத்துப் போச்சாம்..."

எதற்குமே கலங்காதவரின் குரல்  லேசான பதற்றத்தோடு ஒலிக்க, கேட்டுக் கொண்டிருந்த மைந்தன் சிலையாகிப் போனான். 


கேட்ட விஷயத்தின் வீரியத்தை   விட  அதை மனையாளிடம் எப்படி பகிர்வது, அவள் அதை  எவ்வாறு எதிர்கொள்ள போகிறாள்  .... என்பதே அவன் சிந்தையை  பிரதானமாக ஆக்கிரமித்துக் கொள்ள,


"சரண்,  இந்த விஷயத்தை லட்சுமி கிட்டயிருந்து  மறைக்க முடியாது ... நீ தான்  பக்குவமா அவளுக்கு  எடுத்து சொல்லணும் ...  ஹை ரிஸ்க் பிரக்னன்சினு டாக்டர் சொல்லி இருக்காங்க ... ஹய் பிபி இருக்கு  ... அவ ரொம்ப எமோஷனல் கேரக்டர் வேற ...பார்த்து  பொறுமையா எடுத்து சொல்லுப்பா ... நான் ஸ்பாட்டுக்கு கிளம்பறேன் ..." 

என அவசரமாக பெரியவர் விடை பெற்றதும் , பயத்தில் எச்சில் கூட்டி விழுங்கியவன்,  ஒரு கணம் பேச வேண்டிய வசனங்களை தனக்குள்ளே  ஓட்டி பார்த்துவிட்டு லேசான கலக்கத்தோடு அவள் அறைக்குள் நுழைந்தான்.


அவனைக் கண்டதும், 

"சாப்டீங்களா? கிளம்பலாமா ...."    அவள் கேட்க,  அவன் முகமோ ஆழ்ந்த சோகத்தை பிரதிபலித்தபடி  ரத்த சிவப்பில் மின்ன,  இது நாள் வரை காணாத அந்த முக பாவத்தை கண்டு 


"ஏன் ஒரு மாதிரி இருக்கீங்க என்ன ஆச்சு ...."  என்றாள் துணுக்குற்று .


"அ.... அது ........அது வந்து..... காலையில போட வேண்டிய டேப்லட்ஸ் எல்லாத்தையும்  போட்டுட்டயா ..." அவன் தடுமாற,


"ம்ம்ம்... இப்பதான் சாப்பிட்டு முடிச்சேன் ...  " என்றாள் பார்வையை அவன் முகத்தில் இருந்து விளக்காமல்.


"இங்க பாரு லட்சுமி .... நான் சொல்ல போற விஷயத்தை கேட்டு  நீ எமோஷனல்  ஆக கூடாது ... புரிஞ்சுதா ..." 


அவன் முகபாவமும்,  பீடிகை போட்ட விதமும்,  அவன் சொல்லாமலேயே விஷயத்தை அவன் கண்ணாட்டிக்கு கடத்தி இருக்க ,


"செல்ல கண்ணுக்கு என்ன ஆச்சு ..."   என்றாள் நேரடியாக. 


அவளது நேரடி தாக்குதலில்,  ஒரு கணம் மனப்பாடம் செய்திருந்த வசனங்கள் மாறிப்போக, கலக்கத்தோடு  வார்த்தைகளை  அவன்  தேடிக் கொண்டிருக்கும் போதே முடிவுக்கு வந்தவள்,


"செல்லக்கண்ணு பா.... பாம்பு கடிச்சு செ... செத்துட்டாளா   ...? "  என்றாள் நடுக்கத்தோடு  கண்களில் வெகு லேசாக கண்ணீர் மின்ன .


அவன் பதில் சொல்லாமல் லேசாக தலையசைத்து ஆமோதிக்க,  அதிர்ச்சியில் உறைந்தவளின்  விழிகள் கண்ணீரால் நிரம்பி வழிய,


"லட்சுமி.... லட்சுமி .... இங்க பாரு ரொம்ப யோசிக்காத .... பாட்டி சொன்ன வார்த்தை பலிச்சிடுச்சுன்னு பயப்படாதே .... நேத்தே அமாவாசை முடிஞ்சிடுச்சு .... இன்னைக்கு இப்பதான் அரை மணி நேரத்துக்கு முன்னாடி அந்த பொண்ணு பாம்பு கடிச்சு செத்துப் போய் இருக்கா .... சோ எப்படி பார்த்தாலும் இது ஜஸ்ட் அ  கோ இன்சிடென்ஸ் ... அவ்ளோ தான்..."   அவன்  நெருங்கி  சமாதானம் கூறிக் கொண்டிருக்கும் போது,  அவளது விழிகள் அவர்களது நிறுவனத்தின் சற்று பெரிய  தினசரி நாள்காட்டியை உற்றுநோக்கிக் கொண்டிருந்தன.


"அங்க என்ன பாக்குற  .... என்னை  பாரு லட்சுமி ...." 


கெஞ்சலாக மொழிந்தவனிடமிருந்து விலகிச் சென்று அன்றைய நாள்காட்டியை உற்றுப் பார்த்தவள் 


" பாட்டி சொன்னது ப....பலிச்சிடுச்சு..." என்றாள்  உதடுகள் விம்ம .


" வாட்.... " 


"நேத்து காலையில தொடங்கின அமாவாசை திதி,  கால் மணி நேரத்துக்கு முன்னாடி தான் முடிஞ்சிருக்கு .... அப்ப பா..... பாட்டி... பாட்டி...  சொன்னது சரிதானே ..."


அதிர்ந்தவன்,


"ஓ காட் .... அமாவாசைனதும் நாள் கணக்குனு நினைச்சிட்டோமே... திதி கணக்குனு இப்ப இல்ல புரியுது ..."


என்று அதிர்ந்து உரைத்து விட்டு,


திதி முடியும் போது, அந்த பொண்ணு கதையும் முடிச்சிடுச்சு ....

என மனதோடு பேசினான்.


பிறகு  மனையாளை நெருங்கி  தோளோடு அணைத்தவன்


"அந்த பாட்டி சொன்னது நடந்து போச்சு .... அதுக்காக நம்ம வாழ்க்கைலயும் நடக்கும்னு நினைச்சு குழப்பிக்க வேண்டாம் ... உனக்கு எதுவும் ஆக விட மாட்டேன் ... இது உனக்காக சொல்லல எனக்காக சொல்றேன்... நான் வாழனுங்கிற சுயநலத்துக்காக சொல்றேன் ப்ளீஸ் ... எனக்காக தைரியமா இரு லஷ்மி   ..." 


என கண்கள் குளம் கட்ட கண்ணாட்டியை இறுக்கிக் கொண்டு கூறிவிட்டு விருவிருவென்று கூடத்திற்கு வந்து சிவகாமியிடம் விஷயத்தை சொல்லி லட்சுமியை கண்ணும் கருத்துமாக  பார்த்துக் கொள்ள அறிவுறுத்தி விட்டு எஸ்டேட்க்கு விரைந்தான்.


அவன் அங்கு போய் சேரும் போது , கூடியிருந்த மக்கள் முன்பு  இரு காவல்துறை அதிகாரிகள் செல்லக்கண்ணுவின் கணவன் மற்றும் தந்தையிடம் விசாரணை நடத்திக் கொண்டிருக்க , அரசு மருத்துவமனையில் இருந்து ஒரு மருத்துவர் உட்பட மூன்று பேர்  இறந்த பெண்ணின் சடலத்தை மேம்போக்காக ஆய்வு செய்துவிட்டு, உடற் கூராய்வு செய்ய வாகனத்தில் ஏற்ற முயன்று கொண்டிருந்தனர். 


"என் புருசன் மாறி புருசன் உலகத்துல யாருக்குமே அமையாது  ...  நான் நூறு வயசு வாழப் போறேன்... பத்து கொழந்தைங்க பெத்துக்க போறேன்னு சொன்னயே டி ... இப்ப பெத்த ஒரே புள்ளய வுட்டு போட்டு வயத்துபுள்ளகாரியா  போயிட்டயே .... அந்தப் பாழா போன பாம்பு கிழட்டு சிறுக்கி என்னைய கடிச்சிருக்க கூடாதா ..."


என கூட்டத்திலிருந்த 70 வயது மதிக்கத்தக்க மூதாட்டி , செல்லக்கண்ணுவின் ரெண்டு வயது பெண் குழந்தையை கையில் ஏந்திய படி கண்ணீர் விட்டு புலம்ப,  


"என் புருசன் அப்படி.. என் புருசன் இப்படினு வாய்க்கு வாய்  வேலை செய்ய சொல்ல அவனை  பத்தியே பேசிகினு இருப்பியே .... இப்ப அவனை  அனாதையா வுட்டுட்டு போயிட்டியே... நீ இல்லாம அவன் எப்படி இருக்க போறானோ ...." 


என உடன் பணிபுரியும் ஒரு மத்திய வயது பெண்மணி அழுகையோடு பகிர,


"கொமரியோ ,  கெழவியோ யாராச்சும் அவ புருசனை உத்து பார்த்துட்டா போதும் , உடனே அவிங்க காலடி மண்ணை எடுத்து அவ புருசனுக்கு சுத்தி போட்டுடுவா ... அதே போல பௌர்ணமி அமாவாசைல அவ புருசனோட காலடி மண்ணை எடுத்து முந்தானைல முடிஞ்சுகினு அதர்வண காளி கோயிலுக்கு  போய் கும்பிட்டு வருவா ... இதோ .... இதான் அந்த முடிச்சு ..." 


என வேறொரு  இளம்பெண் சடலமான செல்லக்கண்ணுவின் முந்தானையை காட்டி காவல் துறை அதிகாரியிடம் சொல்ல,  மற்றவர்களுக்கு எப்படியோ, ராம் சரணுக்கு யாரோ 100 கிலோ கொதிக்கும்  இரும்பை நெஞ்சில் ஏற்றி வைத்தது போலான உணர்வில் துடித்து மருகினான்.


செல்லக்கண்ணுவின் கணவன், மிக சாதாரண வாழ்க்கையை வாழும்  குடியானவன் , எவ்வளவு பாசத்தையும் காதலையும் அந்த பெண்ணின் மீது பொழிந்திருந்தால்,  அவள் இப்படியெல்லாம் நடந்து கொண்டிருப்பாள்....


அவள் இழப்பை சொல்லி வருந்தியவர்களை விட அவள் கணவனின் நிலை இனி என்ன ஆகுமோ என்று வருந்தியவர்களே அதிகம் என்பதை கண்கூடாக கண்டவனுக்கு,


ஒரு பெண்ணை நேசிக்கவும், நேசிக்க வைப்பதற்கும் படிப்பு, பணம் பதவியை விட உண்மையான , ஆழமான எந்நிலையிலும் குன்றாத காதல் தான் தேவை என்ற ஞானம் பிறக்க, உடனே  தன்னவளுடனான திருமண வாழ்க்கையை அவசர கதியில் அசை போட்டுப் பார்க்க ஆரம்பித்தது அவன் மனது.


மூன்றாண்டு கால திருமண வாழ்க்கையில்,  முதல் கரு கலைந்த போதும் சரி, அதன்பின் முதல் குழந்தை பிறந்த போதும் சரி மனைவி மீது மோகம் , ஈர்ப்பு , பிடித்தம் எல்லாம் இருந்ததே ஒழிய  நீ இல்லாமல் நான் இல்லை என்று சொல்லும் அளவிற்கு  காதல் இருந்ததா என்றால் அவனிடம் பதில் இல்லை.. 

 விவாகரத்து வழக்கு நீதிமன்றத்தில் இருக்கும் போது கூட தன்னகங்காரத்தோடு வளைய வந்தானே ஒழிய தன்னவளின் மனதை அறிந்து கொள்ள அவன் முற்படவில்லை ...

அப்படி இருந்தவன் தான் கடந்த சில மாதங்களாக மனைவியை உயிர் உருக காதலிக்க ஆரம்பித்திருந்தான்...


தான் காதலிக்காத காலங்களில் காலன் அவளை நெருங்கவில்லை ... காதலிக்க தொடங்கியதுமே காலன் அவளது காலத்தைக் குறித்து விட்டானே ... 


என உள்ளுக்குள் கலங்கியவன்  இரண்டு வயது குழந்தையை சுமந்தபடி,   தலையில் அடித்துக் கொண்டு அழும்  செல்லக்கண்ணுவின் கணவனோடு தன்னையும் ஸ்ரீ பாப்பாவையும் பொருத்திப் பார்த்து துவண்டு போனான் இதை விட பெரிய அதிர்ச்சி  அன்றிரவே அவனுக்காக காத்துக் கொண்டிருப்பதை  அறியாமல்.


ஸ்ரீ-ராமம் வருவார்கள் .....


















































   









   


















































Comments

  1. OMG 😱 sis pavam antha Chella kannu... Lakshmi ku nallatha ethachum nadakura mathiri next ud podunga ... Pls Lakshmi ku end card poturatheenga..

    ReplyDelete
  2. Supperrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrr

    ReplyDelete

Post a Comment