ஸ்ரீ-ராமம்-74

 அத்தியாயம் 74 


ரங்கசாமி ஊர் திரும்பி கிட்டத்தட்ட 3 நாட்கள் ஆகி இருந்தன.


மழையால் மலைச்சரிவு ஏற்பட்டு  போக்குவரத்து பிரச்சனை உண்டானதால்  அண்டை மாநிலங்களுக்கும், வெளிநாட்டிற்கும் உற்பத்தி  பொருட்களை அனுப்புவதில் தாமதம் ஏற்பட,  போதாததற்கு  டிரான்ஸ்பார்மர் பிரச்சனை,  மாசமாக இருக்கும் மருமகளின் கால் வீக்கம், போன்றவற்றால், போன இடத்தில்  இருப்புக் கொள்ளாமல் தன் பணியை துரிதமாக முடித்துக் கொண்டு ஊட்டிக்கு திரும்பி இருந்தார் ரங்கசாமி.


ஸ்ரீலட்சுமியின் உடல் நிலையை மகன் மூலம்  அறிந்ததுமே,  அவளை அலைபேசியில் தொடர்பு கொண்டு, முக்கிய தினங்களில் மட்டும்  தொழிற்சாலைக்கும், தோட்டத்திற்கும்  சென்று வந்தால் போதுமானது மற்ற தினங்களில் வீட்டிலிருந்தபடியே  முதல்   தணிக்கைக்கு உட்படுத்தப்பட்ட ஆண்டு இறுதிக்கான வரவு செலவு  கணக்குகளை சரி பார்த்து அனுப்பி வைக்குமாறு ரங்கசாமி பணிக்க, அந்தப் பணியோ அவளை சுனாமியாய் சுருட்டி இழுத்துக் கொண்டு அறையிலேயே முடக்க,  அவளிடமிருந்து விலகி இருக்க எண்ணி,  அவளிடமே  உதவி கேட்டிருந்தவன் தான் கடைசியில் அவளது கடாக்ஷம் கிடைக்காமல் தவியாய் தவித்துப் போனான். 


உணவு உண்ண,  நடை பயிற்சி மேற்கொள்ள, குழந்தையோடு  விளையாட போன்ற தருணங்களில் மட்டுமே அவன் தேவியாரின் தரிசனம் அவனுக்கு  தவணை முறையில் கிட்ட ,  கடைக்கண் பார்வையால் கண்ணாட்டியை களவாடும்  நேரங்கள் வெகுவாக குறைந்தது  அவள் மீதான ஏக்கத்தையும் காதலையும் வகைத்தொகை இல்லாமல் கூட்ட, ஆண்டிற்கு ஒரு முறை வரும் தேர் திருவிழா போல், சிரிக்கும் பழக்கமுடையவனுக்கு, மனையாளின் அருகாமையும் , அவள் இன்முகத்தை காணும் ஆவலும் கூடிக் கொண்டே போக, அதன் விளைவு  மதிய உணவிற்கு வீட்டிற்கு வருவதை வழக்கமாக்கிக் கொண்டான்.


அவனது மாற்றம் அவளுள் பூமழையை பொழிந்தாலும் அவனே அவனை நெருங்க கூடாது என்ற சட்டத்தை இயற்றி இருக்கும் நிலையில் , அவன் வாசத்திற்காக ஏங்குபவள் விலகி நின்று தானே ஆக வேண்டும் என்பதால் வழியற்று விலகியே நின்றாள் .


உடலுக்கு தான் விலகலே ஒழிய, உள்ளத்திற்கும் கண்களுக்கும் அல்லவே... அவளது கண்கள் சமயம் கிடைக்கும் போதெல்லாம் அவன் அறியா வண்ணம்  அவனை பின் தொடர்ந்து அவன் செய்கைகளை ரசித்து கொண்டு தான் இருந்தன.


அவர்களது பெண்ணரசியை குளிக்க வைத்து அழைத்து வந்து அதன்  சின்னஞ்சிறு பாதங்களை  மடியின் மீது தூக்கி வைத்து அதற்கு யூகலிப்டஸ் எண்ணெய் போட்டு மசாஜ் செய்து அவன் சாக்ஸ் அணிந்துவிடும் அழகும்,  தந்தையின் சேவையை தோரணையாக ஏற்றபடி  தன் கை பொம்மையோடு விளையாடிக் கொண்டிருந்த அந்த மழலையின் அழகும், 

வகுடு சரியாகஎடுக்காமல் ,  அந்தச் சின்னஞ்சிறு கற்பூர முல்லைக்கு அவன் இரட்டை சிண்டுகளை போட்டுவிட்டு,அவளை பூக்கொத்து போல் தன் ஒற்றைக் கரத்தில் அனாயாசமாக  சுமந்து கொண்டு கம்பீரத்தோடு வெளியே  அவன்  அழைத்து செல்லும் பாங்கை கண்டு மெய் மறந்து தான் போயிருந்தாள் மங்கை .


இந்நிலையில் அவள் தேயிலை தோட்டத்திற்கு கிளம்பிக் கொண்டிருக்கும் போது , 


"அம்மா லட்சுமி,  நான் இப்ப  ஃபேக்டரிக்கு போயி வேலைய முடிச்சிட்டு, மதியத்துக்கு மேல  எஸ்டேட்டுக்கு வரேன் .... பத்து மணிக்கு மேல  நீ எஸ்டேட்க்கு போனா போதும் ..... வண்டி அனுப்பறேன் ..." என ரங்கசாமி  லட்சுமியிடம் உரைத்துக்கொண்டிருக்கும் போது ,


"அப்பா,  நீங்க வண்டி அனுப்ப வேணாம்... நான் இன்னைக்கு வொர்க் ஃப்ரம் ஹோம் தான்... நானே இவளை எஸ்டேட்டுக்கு கூட்டிகிட்டு போறேன்  .." என்றான் ராம்சரண் மனையாளை விழுங்குவது போல் பார்த்து  .

 

இயல்பாக கேட்பது போல் கேட்டுக் கொண்டிருந்தாலும் மைந்தனுக்கும் மருமகளுக்கும் இடையே நடக்கும் ஆடுபுலி ஆட்டம் ரங்கசாமிக்கு சிரிப்பை வரவழைக்க, வருந்தி அழைத்தாலும் தொழிற்சாலைக்கும் தேயிலைத் தோட்டத்திற்கும் வராத மகன் , தற்போதெல்லாம்  காரணத்தை உருவாக்கிக் கொண்டு அங்கு வருகிறான் என்றால் அதற்கு  மருமகளே காரணம்  என்பதை உணர்ந்து,  அதை வெளிக்காட்டாது 

" சரி ப்பா ...  ரோடு சரி இல்ல... பார்த்து சேஃபா  வந்து சேருங்க ..." என்றபடி அவர் இடத்தை காலி செய்ய,  கேட்டுக் கொண்டிருந்த லட்சுமிக்கு குளுமையும் வெம்மையுமாய் புதுவித உணர்வு  உடலெங்கும் பரவ, அதற்கு மேல் அங்கு நிற்க மாட்டாமல் தன் அறைக்குள் புகுந்து கொண்டாள்.


நீண்ட நாட்களுக்குப் பிறகு கணவனுடன் பயணிக்கவிருப்பதால், அவள் கரங்கள் தானாக தேடி அவன் வாங்கிக் கொடுத்த அடர் மாதுளை முத்து நிறத்தில், வெந்தய நிற ஜரிகை கொண்ட செமி காஞ்சிபுரம் பட்டுப்புடவையை தேர்ந்தெடுக்க, அதனை  அம்சமாக தரித்துக்கொண்டு,  பொருத்தமான  அணிமணிகளோடு  மிகுந்த மகிழ்ச்சியுடன் தயாராகி வந்தாள்.


காலை உணவை அருந்திக் கொண்டிருந்தவன் அரவம் கேட்டு விழிகளை உயர்த்திப் பார்க்க,  சிலை ஒன்று ஆடை ஆபரணங்களோடு வருவதைக் கண்டு  உறைந்து தான் போனான் .


ஸ்ரீபாப்பாவை சுமந்து கொண்டிருக்கும் போது கூட,  அவள் இத்துணை அழகாக  காட்சியளித்ததாக தோன்றவில்லை ...


அவ்வளவு ஏன் அவர்களது திருமணத்தின் போது கூட, இன்றைய அழகில் அவள் பாதி  கூட இல்லையென்றே அவன் மனம் உரைக்க,  இமைக்க மறந்தான்.


சிவகாமியோ, அவள் வழக்கமாக உண்ணும் இரண்டு தோசைகளை விட மேலும்   இரண்டு தோசைகளை  வைக்க, அதை மறுத்து அவள் விவாதிக்க , அதில் சுயம் உணர்ந்தவன்,


"இன்னும் ரெண்டு தோசை அதிகமா  சாப்பிட்டு வெயிட் போட்டாலும்  இப்ப எப்படி இருக்கியோ அப்படித்தான் இருக்கப் போற  .... அழகா ஒன்னும் ஆயிட மாட்ட ..... "  

என அவளது அழகில் மதி மயங்கிக் கொண்டிருந்தவன், மனசாட்சிக்கு விரோதமாக மாற்றி உரைக்க,  அவன் விழியும் வாயும்  வெவ்வேறு பேசுவதை உணர்ந்து கொண்டவள், மென் புன்னகை பூத்தபடி, அவன் சொன்னது போல் மேலும் இரண்டு தோசைகளை சிரமப்பட்டு வயிற்றுக்குள் தள்ளினாள். 


காருக்கு அருகே நின்று குழந்தையை கொஞ்சிக் கொண்டிருந்தவன், இவளது வருகையை கண்டதும், தோட்டத்தை பராமரித்துக் கொண்டிருந்த  சிவகாமியிடம் குழந்தையை  ஒப்படைத்துவிட்டு , ஓட்டுனர் இருக்கையில் அமர்ந்துக்கொண்டு,


"அக்கா,  எங்க ரெண்டு பேருக்கும்  லஞ்ச்ச, எஸ்டேட்க்கே அனுப்பி வச்சிடுங்க ..."  என்றான் நீண்ட நாட்களுக்குப் பின்பான நிம்மதியில்.  


"சரிங்க தம்பி ..."  என சிவகாமி   குழந்தையோடு நகர்ந்ததும் ,


"வண்டில ஏறு, நேரமாச்சு ..."  என்றான் தன்னவளின் முகம் பாராமல் ஏதோ கடமைக்கு அழைப்பது போல்.


சற்று முன்பிலிருந்தே அவன் முக உணர்வுகளை அணு அணுவாக உள்வாங்கிக் கொண்டிருந்தவளுக்கு , அவன் உதடுகள் நடிப்பது தெரிய,


"நீங்க யாரு .... நான் எதுக்காக உங்க கூட வரணும் ...."  என்றாள் பொங்கியெழும் புன்னகையை  மறைத்து. 


"ம்ம்ம்ம்... உன் வயித்துல இருக்கிற  ரெண்டு குழந்தைகளையும் கேளு ...    உனக்கு நான் யாருன்னு  அவங்க சொல்லுவாங்க ... சும்மா வாய் பேசாம .... வண்டில ஏறு டி..." என அவன்  கடுகடுக்க,


"என் மாமாவுக்கு போன் பண்ணா  கார் அனுப்புவாரு .... நான் அதுல போறேன்... நீங்க கிளம்பலாம் ..." அவள் கெத்தாக மொழிய,


"சும்மா  கோவத்த கிளறாத... ரொம்ப பண்ண..  குண்டு கட்டா உன்னை   தூக்கி வண்டில போட்டுக்கிட்டு எங்கயாவது ரெண்டு மூணு நாளைக்கு கண் காணாம கூட்டிகிட்டு போயிடுவேன் .... அப்புறம் உன் மாமா என்ன, போலீஸ் வந்தா கூட கண்டு புடிக்க முடியாது.." என்றான் பற்களை நறநறவென்று கடித்து .

 

ஊடுதல் காமத்திற்கு இன்பம் அதற்கின்பம் கூடி முயங்கப் பெறின் ... என்பது வள்ளுவர் வாக்கு. 


இருவருக்கிடையேயான  ஊடல் கூடலுக்குப் பின்பான காதலின் இன்பத்தை அதிகப்படுத்தும் ... என்பது அதன் பொருள்.


கூடலே இல்லாவிடிலும் கொண்டிருக்கும் ஊடல் இவர்களுக்கிடையேயான காதலை அதிகப்படுத்த,  அதில் இருவரும் பரிபூரணமாக மனம் லயித்து , மற்றவரின் அருகாமையை ரசித்துக்கொண்டே பயணத்தை தொடங்கினர். 


சற்று நேர அமைதிக்குப் பிறகு,


"உனக்கு நிறைய ட்ரெண்டி நைட் கவுன்ஸ்,  சல்வார்  எல்லாம் ஆர்டர் பண்ணி இருக்கேன் ... இன்னைக்கு வீட்டுக்கு வந்துடும்... வாங்கிக்க..." என்றான் அவள் முகம் பார்த்து. 


"அதெல்லாம் ஒன்னும் வேணாம் ...    என்கிட்ட இருக்கிற நைட்டீஸ், சல்வார்லயே    நான் கம்பர்ட்டபுளா தான் இருக்கேன் .... "


"ஆனா நான் கம்பர்ட்டபுளா இல்லையே ..." என்றான் அவள் மீது பார்வையை எக்கு தப்பாக பதித்து .


மாதம் ஏற ஏற , மழலையை தாங்கி இருக்கும் மாதுவின் அங்கங்கள் எல்லாம்  செழுமையில் பூரிக்க, வேலை , வேலை என்று கண் விழிக்காமல் வேளா வேலைக்கு உறங்குகிறாளா  என பார்க்க, அவன் அவள்  அறைக்கு வரும் பொழுது , பழைய ஆடைகள் அவளுக்கு இறுக்கத்தை கொடுப்பது பட்டவர்த்தமாக தெரிய ,  உடன் ஆடவனின் மனமும் கட்டுப்பாடற்று அலைபாய, உடனே அதற்கு உடனடி   தீர்வு காணும் எண்ணத்தில் தான் புதிய ஆடைகளை வரவழைத்திருந்தான். 


அவளுக்கு பகலில் இரவு உடை அணியும் பழக்கம் கிடையாது.


அப்படி  இரவு உடையில் இருக்க நேர்ந்தால் ,  தன் அறையிலேயே  முடங்கி விடுவாள்...


அணியும் ஆடைகளில் அப்படி ஒரு நேர்த்தியை கையாளுவாள் ....


சிவகாமி கூட அவளை வெகு அரிதாகத்தான் இரவு உடையில் பார்த்திருக்கிறார் ....


திருமணத்திற்கு பின் அவள் தொழிற்சாலை பணியை கையில் எடுத்ததுமே அவளை தன் தொழில் துறை பங்குதாரராக ரங்கசாமி இணைத்து கொண்டு, தன் மருமகளே தன் தொழிலை அடுத்த கட்டத்திற்கு  எடுத்துச் செல்லும் வாரிசு,  என மனமார நம்பியிருந்த நிலையில் , குடும்பத்தில் ஏற்பட்ட பிணக்கின் காரணமாக விவாகரத்து வரை சென்றவள் தன் பொருளாதார நிலையை காரணம் காட்டி உண்டாகி இருக்கும் கருவை கலைக்க முற்பட, அப்போது தான்  தனி மனுஷியாக அவள்  அன்றாட வாழ்க்கையை நடத்துவதற்கே அல்லலுறுகிறாள் என்ற நிதர்சனம் உரைக்க, உடனே அவள் செய்யும் பணிக்காக மாதா மாதம் ஒரு குறிப்பிட்ட  தொகையை சம்பளமாக கொடுக்கத் தொடங்கினார்.


தற்போது அவளுக்கு  பணத்திற்கு பஞ்சமில்லை என்றாலும், தன் பணியில்  கிடைக்கும் பணத்தை தன் குடும்பத்திற்கு கொடுத்துவிட்டு  தனக்கென்று எதையும் அவள் வாங்கிக் கொள்ளாமல் இருப்பதை  அறிந்து அவளவனே அவளுக்காக வாங்கி குவிக்க,  அதைப் புரிந்து கொண்டவள் மனம் நிறைந்த காதலோடு மனமார ஏற்றுக் கொண்டதற்கு அடையாளமாக, அதற்கு மேல் மறுத்துப் பேசாமல்  இன்முகத்தோடு தன்னவனுடன் பயணமானாள்.


மனையாளின் சாந்தமான முகம் மனதிற்கு நிறைவை தர,  இதே சூழ்நிலையில் அவள் தங்கை ராமலட்சுமியின் திருமணம் குறித்து அவன் செய்திருக்கும் ஏற்பாட்டை பகிரலாமா  என்று யோசித்தான்.


கடந்த முறை தேயிலை தொழிற்சாலையில்  நடந்த  விவாதத்தின் போது ராமலட்சுமியின்  திருமணம் குறித்து அவள் வருந்தி பேசியது அவனுக்கு மிகுந்த வேதனையை அளித்திருந்தது.


நடக்கவிருந்த அந்த  திருமணத்தை அவதூறு கூறி தடுத்து நிறுத்தியது 100% அருணா கற்பகம் என்றாலும், தாய் தங்கையின் மீதிருந்த கண்மூடித்தனமான  நம்பிக்கையால், தன்னவளின் வார்த்தைகளை நம்பாமல் நடந்து கொண்டது, அவன்  செய்த மாபெரும் பிழை.


அந்தக் குற்ற உணர்வுக்காக மட்டுமல்லாமல் ,  அவளது குடும்பத்தின் மூத்த மாப்பிள்ளை என்ற கடமைக்காகவும்   ராமலட்சுமிக்கு நல்ல வாழ்க்கையை அமைத்துக் கொடுக்கும் பொறுப்பை கையிலெடுத்து சில ஏற்பாடுகளை செய்து முடித்திருந்தவனுக்கு  அது குறித்து தன்னவளிடம்  பேச ஒருவித தடுமாற்றம் இருக்கவே செய்தது. 


காரணம் அந்தப் பேச்சு  தானியங்கியாக தன் தாயும் தங்கையும்  அடித்து ஆடிய அயோக்கியத்தனத்தை  தன்னவளுக்கு ஞாபகப்படுத்தி  மன அழுத்தத்தை கூட்டி அவள் உடல் நிலையை பாதிப்புக்கு உள்ளாக்கி விடுமே என்ற பயமே அவனை யோசனையில் ஆழ்த்த,   திடீரென்று தீவிர சிந்தனையில் அமைதியாக ஆழ்ந்திருப்பவனை காரணம் புரியாமல் அருகில் அமர்ந்திருந்தவள்   நோக்கும் போது அவன் அலைபேசி சிணுங்கியது.


அலுவலக சம்பந்தமான விஷயங்களை அவன் நண்பன் மறுமுனையில்  பேச, யோசித்துக் கொண்டிருந்த  விஷயத்தை முற்றிலும் மறந்து, தேயிலை தோட்டம் வரும் வரை அலுவலகப் பணி குறித்த உரையாடல்களிலேயே முழுகிப் போனான் அவள் மணாளன் அவன் பேசத் தயங்கிய விஷயத்தை அவள் வேறு வழியாக அறிந்து கொள்ள போவது அறியாமல்.


6000 ஏக்கர் தேயிலைத் தோட்டத்தின் மத்திய பகுதியில்  5000 சதுர அடியில் பழமையும் புதுமையுமாய் வெகு  அழகாக அமைந்திருந்தது அந்த பங்களா.


ராம் சரணின்  தாத்தா  பிரிட்டிஷாரிடம் இருந்து சொற்ப விலைக்கு  வாங்கிய அரண்மனை அது. 


நிறப் பூச்சு, மராமத்து பணிகள் , ஒரு சில நவீன மயமாக்கல்  மட்டுமே மேற்கொள்ளப்பட்டு வேறு எந்த  மாற்றமும் செய்யாமல் பராமரிக்கப்பட்டு வரும் பளிங்கு மாளிகை அது.


தேன் நிலவின் போது, ராம்சரண் ஸ்ரீலட்சுமியோடு அங்கு  வந்து ஓரிரு தினம் தங்கி இருக்கிறான்.


அதன் பின் கடந்த மாதம் லக்ஷ்மியை ரங்கசாமி ஊட்டிக்கு அழைத்து வந்த பிறகு, அவள் இருமுறை வந்திருக்கிறாள் ... 


மற்றபடி ரங்கசாமி மட்டும் தான் அந்த பளிங்கு இல்லத்திற்கு அடிக்கடி வந்து போகும் ஒரே நபர். 


அந்த பங்களாவின் மூன்றாவது  மாடியில் இருந்து பைனாக்குலர் கருவியின் மூலம் பார்த்தால் சுற்றுவட்ட எஸ்டேட்  முழுவதும் ஓரளவிற்கு  நன்றாகவே  தெரியும்.


என்றாலும் வனவிலங்குகள் மற்றும் வேறு அசாதாரண சூழ்நிலைகளிலிருந்து  பெண் ஊழியர்களை  பாதுகாக்க ஆங்காங்கே சிசிடிவி கேமராக்கள் மூலம் பிரத்யேக  கண்காணிப்புக்கு ஏற்பாடுகளை செய்திருந்தார் ரங்கசாமி. 


காரிலிருந்து இறங்கும் ராம்சரண் ஸ்ரீலட்சுமியை பார்ப்பதற்கே பங்களாவை ஒட்டி வேலை செய்து கொண்டிருந்த பெண்கள் கூட்டமாக கூடினர்.


தேயிலைகள் துளிராக வளரும் காலம் என்பதால், அதில் அதிக வேலை இல்லாமல்,  ஊடு பயிராக வேலிகள் ஓரத்தில்  ஆரஞ்சு,  மாதுளை,  சப்போட்டா , எலுமிச்சை போன்ற  செடிகளுக்கான வேலை மட்டுமே நடந்து கொண்டிருந்ததால், பெண் பணியாளர்கள் ஆசுவாசமாக வந்தவர்களிடம் நலம்  விசாரிக்க தொடங்கினர்.


 காலத்திற்கு ஏற்ப சம்பளம் வங்கி அட்டையின் மூலம் கொடுக்கப்பட்டாலும்  போனஸ் மட்டும், தொழிலாளர்களை சந்தித்து  நேரடியாக தாள் உறையில் கொடுக்கும் பழக்கத்தை ரங்கசாமி கடைப்பிடிப்பதால்,  அதனை கொடுக்கவே  ஸ்ரீலட்சுமி அங்கு வந்தாள். 


அங்கிருந்த பெண்மணிகளில் பெரும்பாலானவர்கள் மத்திய வயதை கடந்தும் , வெகு சிலர் இளம் பெண்களாகவும் இருந்தனர்.


ஸ்ரீலட்சுமியை கண்டதும்,  மிகுந்த ஆவலோடு அவளது கரம் பற்றாத குறையாய் நெருங்கிய மதிய வயதைக் கடந்த பெண்மணி ஒருவர்,


"எப்படி  இருக்கீக...  சொகமா இருக்கீகளா  காலண்டர்ல பாக்கற  சாமி கணக்கா அம்பூட்டு லட்சணமா  இருக்கீக ....  மாசமா இருக்கீகளோ... எத்தனையாவது மாசம் குழந்தை உதைக்குதா ..." 


ஏகப்பட்ட கேள்விகளை,  மிகுந்த எதிர்பார்ப்போடு மகிழ்ச்சி பொங்க அவர் அடுக்க,  அவற்றுக்கெல்லாம் மிகுந்த பொறுமையும் புன்னகையுமாய் பதில் அளிக்கத் தொடங்கினாள் நாயகி.


 இம்மாதிரி பெண் ஊழியர்கள் அவர்களது தேன் நிலவின் போதே  அவன் மனைவியை சூழ்ந்து கொண்டு நலம் விசாரித்திருந்தாலும் ஏனோ இந்த முறை தான், அதனை வெகுவாக ரசித்தான் நாயகன்.


அவன் நினைத்ததை,  பாராட்ட மறந்ததை அவர்கள் செய்தது அவனுக்கு இனிக்கவே செய்ய, அலைபேசிக்கு சற்று நேரம் விடுப்பு கொடுத்துவிட்டு  அவர்களது பேச்சில் மூழ்கிப் போனான். 


என்னதான் சூழ்ந்திருந்த பெண்களிடம்  லட்சுமியின் கவனம் இருந்தாலும் , துளைக்கும் பார்வையோடு அவளையே பார்த்துக் கொண்டிருந்த கணவனை ஓரப்பார்வையால் கவனிக்க அவள் தவறவில்லை. 


அந்த பெண்களுக்கு ராம்சரணிடமும் நலம்  விசாரிக்கும் ஆர்வம்  இருந்தாலும்,  அவனது  கம்பீரம், தோரணை, முகத்தில் எப்பொழுதுமே குடி கொண்டிருக்கும் இறுக்கம் ,  ஒரு வித பயத்தை கொடுக்க,  மரியாதையை மட்டும் உடல் மொழியில் காட்டி விலகியே நின்றனர்.


ஆனால் அதிலும் ஒரு துருதுருப்பான இளம் பெண், தம்பதியை ஒரு சேரப் பார்த்து,


"நீங்க ரெண்டு பேரும் சேர்ந்து வர்றதே கஷ்டம் , அம்சமான ஜோடியா இருக்கீக .... உங்க ரெண்டு பேத்தையும் ஒரு போட்டோ எடுத்துக்கவா ..." என்றாள் ஆவலோடு .


கேட்டவளை அப்பொழுதுதான் உற்றுப் பார்த்தாள் லட்சுமி.


அவளும் லட்சுமியை போல்,  5 மாதத்தைக் கடந்த கர்ப்பிணி என்பதை பார்த்த மாத்திரத்திலேயே புரிந்து கொண்டவள், மிகுந்த மகிழ்ச்சியோடு அவளை அணுகி நலம் விசாரிக்க தொடங்கினாள்.


மிகுந்த மகிழ்ச்சியோடு பதில் அளித்து முடித்த  அந்த இளம் பெண் 


"சேர்ந்து நில்லுங்க என் ஃபோன்ல ஒரு  போட்டோ எடுத்துக்கிறேன் ..." என்றாள்  மீண்டும். 


அதுதான் சாக்கு என்று,  சற்று தள்ளி நின்றிருந்த மனையாளை நெருங்கி அவள் தோள் மீது கை போட்டு தன் மார்போடு அணைத்துக் கொள்ளாத குறையாக புகைப்படத்திற்கு போஸ் கொடுத்தான் ராம் சரண்.


ஸ்ரீலட்சுமியின் முகம் செங்காந்தள் மலராய் செக்கச் செவேலென்று வெட்கத்தால் சிவப்பதை கண்டு புகைப்படம் எடுக்கும் இளம் பெண்ணோடு மற்ற பெண்களும்  கேலி பேசி மகிழும் போது, முதலில் லட்சுமியை  நலம் விசாரித்த அந்த மத்திய வயது  பெண்மணி லட்சுமியை பார்த்து, 


"என் அக்கா  கொல்லிமலையிலிருந்து வந்திருக்குது ....  அதுக்கு கல்யாணம் காட்சி எதுவும்  ஆவல... யார் கூடயும் அவ்வளவா  பேசாது....  சித்தம் போக்கு சிவம் போக்குனு மலை மலையா ஊர் ஊரா மனம் போன போக்குல சுத்திக்கினு இருக்கும் .... மூணு வருஷத்துக்கு முந்தி இங்கன வந்து ஒரு பத்து நாள் இருந்துட்டு போனது தான் .... அதோட இப்பதான் வந்திருக்குது.... அது உங்க முகத்தை  பார்த்தாலே உங்களுக்கு எப்ப குழந்தை பொறக்கும், என்ன குழந்தை பொறக்கும்னு நாள் நட்சத்திரத்தோடு சரியா சொல்லிபூடும்.... கூட்டியாரட்டுமா ..."  என்றார் ஆவலோடு. 


"ம்ம்ம்ம்...  கூட்டிட்டு வாங்களேன் ..." என மென் புன்னகையோடு லட்சுமி சம்மதம் சொன்னதுமே,


"வேணாம் லக்ஷ்மி... அவங்க வர ரொம்ப நேரம் ஆகும் ... நீ வந்த வேலையை முடிச்சிட்டு சாப்பிட்டு கிளம்பற வழியை பாரு ..." என்றான் ராம் சரண் இடைமறித்து.


"நேரமெல்லாம் ஆவாது ... அதோ தெரியுதே வேலிக்கு அந்தாண்ட ஒரு குடிசை .... அங்க தான் கை நெறய  வில்வ இலையை வச்சுக்கினு ஏதோ முணுமுணுத்துக்குனே ஒக்காஞ்சிகிட்டு இருக்குது .... நீங்க ரெண்டு பேரும் சரின்னு சொன்னீங்கன்னா ரெண்டு நிமிஷத்துல கூட்டியாந்திடுவேன்..."

என கெஞ்சாத குறையாக அந்தப் பெண்மணி கேட்க,  அதற்கு மேல் மறுக்க மாட்டாமல் இருவரும் சம்மதம் தெரிவித்தனர். 


அதற்குள் அந்த கர்ப்பிணியான  இளம் பெண், அவர்களை மேலும்  விதவிதமாக நிற்க வைத்து  புகைப்படங்களாக எடுத்துத் தள்ள,  அப்போது அந்த மத்திய வயது பெண்மணி,  தன் வயது முதிர்ந்த அக்காளோடு அங்கு வந்து சேர்ந்தாள்.


பெரியவள்  அணிந்திருந்த புடவையில் ஆயிரம் அழுக்குகள் .... தலை முழுவதும் விழுதுகளாய் வடியும் ஜடாமுடிகள்.. நெற்றி முழுவதும் திருநீறு...  புடவை முந்தானையை இடுப்பில் மடித்து சுருக்கி அதில் வில்வ இலைகளை நிரப்பியிருந்தவளின் விழிகள் மட்டும், நாகரத்தினத்தை  கக்கும் பாம்பின் பளபளப்போடு மின்ன, ஸ்கேன் செய்வது போல் ஸ்ரீலக்ஷ்மி ராம்சரண் இருவரையும் உச்சாதி பாதம் வரை உற்று நோக்கினாள்.


"என்ன சும்மா பார்த்துக்கினே இருக்க .... கொழந்தை எப்ப பிறக்கும் என்ன குழந்தை பொறக்கும்னு சரியா சொல்லு ...." என ஊக்கினாள் இளையவள்.


ஆனால் பெரியவளோ அதனை சற்றும் சட்டை செய்யாமல்,  மீண்டும் மீண்டும் ஸ்ரீலட்சுமியை தலை முதல் கால் வரை பார்வையால் வருடி விட்டு ,


"வலுத்த உசுருக்கு ஆபத்து இருக்கு ..."  என சன்னமாக முடிக்க 


"என்ன.... என்ன  அக்கா ஒளர்ற .... அவுக ரெட்டை குழந்தையை முழுவாம இருக்காக... இப்படி சொன்னா எப்படி .... நல்ல வார்த்தையா சொல்லு ... அதுக்கு தானே உன்னைய கூட்டியாந்தேன்..." கூட்டி வந்த இளையவள் பதற, 


"அதுக்கு ஈசன் உத்தரவு தர்லயே ... நான் என்ன செய்ய ..."

கேட்டுக் கொண்டிருந்த தம்பதிக்கு  ஒரு கணம் மூச்சே நின்று விடும் போல், மன அழுத்தம் ஏகத்திற்கும் எகுற, வந்தவள் அதையெல்லாம் கண்டு கொள்ளாமல்,


"இந்தா இத வச்சிக்க... காலன்  நெருங்காம கால பைரவன் காப்பாத்துவான்..." என ஒரு கைப்பிடி வில்வ இலைகளை அள்ளி , ஸ்ரீலட்சுமியின் கரத்தில்   திணித்துவிட்டு அவள் விடைபெற முயல,


"அக்கா போவாதக்கா ... ஏதாச்சும் நல்ல வார்த்தை சொல்லிட்டு போ ..." என இளையவள் கெஞ்ச,


"அவங்க போகட்டும் விடுங்க ..." என்றான் ராம்சரண் அதிர்ச்சியில் இருந்து மீளாமல்.


நான்கடி கடந்த  முதியவள், திடீரென்று  ஈரடி பின்னோக்கி வந்து, கர்ப்பவதியாக இருக்கும் இளம் பெண் தேயிலை  தொழிலாளியிடம் ஒரு கணம் நின்று,  அவளை ஏற இறங்கப் பார்த்துவிட்டு,


"இப்பவே இந்த மலையை விட்டு போய்டு ..... உனக்கு நேரம் சரியில்ல... நாளைக்கு அமாவாசை....அது  முடிஞ்சதும் இங்கன வா ...... உன் காலத்தை முடிக்க கார்கோடகன்  சுத்திக்கினு இருக்கான் ..."  


வெகு சன்னமாக மொழிந்து விட்டு, மூதாட்டி நடையை கட்ட,  ஒன்றுமே புரியாமல் ராம்சரண் ஸ்ரீலட்சுமி அதிர்ச்சியில் உறைய,


"சின்னம்மாவுக்கு குறி சொல்ல  கூட்டிகினு வந்தா , அவங்களுக்கு ஏதோ ஓளறிபோட்டு போற போக்குல , எனக்கே விபூதி அடிச்சுட்டு போவலாம்னு பாக்கறியா கெழவி ....என் அப்பனே பெரிய பாம்பாட்டி .... சின்ன வயசுலயே பூனை குட்டி நாய் குட்டிக்கு பதிலா பாம்பை புடிச்சு விளையாண்டவ நான்... எங்கிட்ட உன் உருட்டெல்லாம் செல்லுபடி ஆவாது கிளம்பு கிளம்பு காத்து வரட்டும் ..." 


என அந்த துருதுரு இளம் பெண் , தன் உதட்டை சுழித்து, காரசாரமாக பேச,  அதையெல்லாம் கேட்க அந்த மூதாட்டி நின்று கொண்டிருந்தால் தான் ஆச்சரியம் ..... ஏதோ வந்த வேலை முடிந்தது போல்,  எதையும் கண்டு கொள்ளாமல் அந்த இடத்தை விட்டு அவள் எப்பொழுதோ காலி செய்திருக்க,  


"மன்னிச்சுக்குங்கம்மா ....  வழக்கமா எல்லாருக்கும் நல்லது தான் சொல்லும் அதுக்கு தான் கூட்டியாந்தேன்...  ஏதோ கிறுக்கு புடிச்சிடுச்சி போச்சு போல .... அதான் ஓளறிட்டு போவுது...  நீங்க மனசுல எதுவும் வச்சுக்காதீகம்மா ..." 


என்று கண்ணீர் வடிக்காத குறையாக நயந்து பேசினாள் அந்த மத்திம வயது பெண் .


அதற்கு மேல் கண நேரம் கூட தாமதிக்காமல் , தொழிலாளர்களுக்கு போனஸ் கொடுக்கும் வேலையை, மனைவியின் மூலம்  முடித்தவன்,


"லட்சுமி,  நேரமாச்சு... சாப்பாடு வந்துடுச்சு ...சாப்பிடலாம் வா ..." வாஞ்சையாக அழைக்க


"எனக்கு பசிக்கலங்க ..." என்றாள் அவன் கண்ணாட்டி வெளிறிய முகத்தோடு.


இயல்பாக இருப்பது போல் காட்டிக் கொள்ள முயற்சித்தாலும், அந்த மூதாட்டி பேசி விட்டு சென்றது அவன் அடி மனதை ரம்பம் இல்லாமல் யாரோ அறுப்பது போலான உணர்வை தர , ஏற்கனவே பயந்திருக்கும் தன்னவளின் முன்பு காட்டிக் கொள்ள விரும்பாமல்,


"அதான் அந்த சின்ன பொண்ணு சொல்லுச்சே... அந்தக் கிழவி ஏதோ ஒளறிட்டு போகுதுன்னு ... அதான் கரெக்ட் ... அந்த ஓளறலுக்கெல்லாம் இம்பார்ட்டன்ஸ் கொடுக்காத ... வா... வந்து சாப்பிடு ..."  என கரம் பற்றி அழைத்தவனின் மார்பில் முகம்  புதைந்து கொண்டு லேசாக விம்மியபடி,


"அந்த பாட்டி சொன்ன மாதிரி அந்த பொண்ணுக்கு ஏதாவது ஆயிடுச்சின்னா ...................... அப்பவாது நம்புவீங்களா ... " 


என்றவளின் தழுதழுத்த  கேள்வியில்  உள்ளுக்குள் உருக்குலைந்து போனவன், அதனை வெளிக்காட்டாது

"அப்படி எதுவும் நடக்கப்போறதில்ல... அப்புறம் அந்த பாட்டி சொன்னது பொய்ன்னு நீயே சொல்ல  போற ..." தளும்பிய விழிகளோடு கரகரத்த குரலில் கூறியபடி தன்னவளை மார்போடு இறுக்கிக் கொண்டான் அவர்கள் பயந்த செய்தி கூடிய விரைவில் அவர்களை வந்து சேரப் போவதை  அறியாமல்.


ஸ்ரீ-ராமம் வருவார்கள் ....












 

   

   

   






   


 

















 










  


  














































  

   





































Comments

  1. Awesome as always 💕💕💕💕💕

    ReplyDelete
  2. Superb sis ... After lot of uds Sri Lakshmi story potuteenga... But pavam Sri Lakshmi ethuvum ketathu nadakama konjam nalla tha ezhuthunga pls

    ReplyDelete
  3. Supperrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrr

    ReplyDelete

Post a Comment