ஸ்ரீ-ராமம்-73

 அத்தியாயம் 73 


விமான நிலையம் பிரபாவின் வீட்டிற்கு அருகே இருப்பதால், மதிய உணவு முடிந்ததும் தன் தாய் தந்தையிடம் விடை பெற்றுக்கொண்டு தன் குடும்பத்தோடு அங்கு பயணமானான் சத்யன். 


அன்றிரவே சிங்கப்பூருக்கு பயணப்படவிருப்பதால், தங்கள் அறையில்  விடுபட்டிருந்த  ஒரு சில பொருட்களை பயணப் பொதிகளில் அடுக்கி வைக்கும் பணியில் அவன்  ஈடுபட்டிருக்க , பிரபாவோ உடல் நலம் சரியில்லாத தன் தாய்க்கு மருந்து மாத்திரைகளை கொடுத்து முடித்துவிட்டு,  அவரோடு சற்று நேரம் அளவளாவிக் கொண்டிருந்தாள்.


என்ன தான் அனுதினமும் தாயோடு அலைபேசியில் உரையாடிக் கொண்டிருந்தாலும்,  அருகில் இருந்து அவர் முகம் பார்த்தபடி அவரது கரங்களைப் பற்றிக் கொண்டு  உரையாடுவது அவளுக்கு மிகவும் பிடித்தமான ஒன்று என்பதால்  பயணத்திற்கு முன்பான சொற்ப நேரத்தை அவருடன் செலவிட்டு கொண்டிருந்தாள்.


சத்யனும்  பிரபாவும் வீட்டிற்கு  வந்ததிலிருந்து,  அடை காக்கும் கோழி போல் இம்மி அளவு கூட வீட்டை விட்டு நகராமல் ,  எங்கெல்லாம் பிரபா இருக்கின்றாளோ அங்கெல்லாம் சற்று விலகி நின்று அவளையே கண்காணித்துக் கொண்டிருந்தாள் ப்ரீத்தி.


வீரா , ஸ்ரீப்ரியாவுக்கு இடையேயான நெருக்கத்தை அறிந்த பின்பு,  ப்ரீத்தியை சத்யன்,  பிரபா  இருவருமே ஒரு பொருட்டாகவே மதிக்கவில்லை... 


இனி அவளால் ஒன்றுமே செய்ய முடியாது என்ற அதீத நம்பிக்கையில், அவள் பார்வை, செய்கை எதையும் கண்டு கொள்ளாமல் தங்கள் வேலையில் திளைத்தனர்.


கன்னக்கோல் வைக்க கண்ணும் கருத்துமாக காத்திருக்கும் கள்வன் போல், பிரபா தாயிடம் பகிரும் அவளது புகுந்த வீட்டு செய்திகளை  இயல்பாக தாயின் அறைக்குள் வந்து போவது போல் காட்டிக் கொண்டு  மும்மரமாக  ஒட்டு  கேட்டுக் கொண்டிருந்தாள் ப்ரீத்தி. 


அவள் ஒட்டு கேட்பது புதிதாக திட்டம் போடுவதற்காக அல்ல, ஏற்கனவே போட்டு வைத்திருக்கும் திட்டத்தை சரியாக செயல்படுத்துவதற்காக.


அதாவது மீன்களைப் பிடிப்பதற்காக மீனவன் வலை விரித்து காத்துக் கொண்டிருப்பது போல்,  கடைசி அஸ்திரமான ஸ்ரீப்ரியாவின் வீட்டு முகவரி,  அவள் தந்தையின் கைபேசி எண்,  அவரது அலுவலக முகவரி ஆகியவற்றை தன் தந்தைக்கு கொடுத்த

வீரா-ஸ்ரீப்ரியா திருமண அழைப்பிதழிலிருந்து தேடி எடுத்து வைத்துக்கொண்டு, தமக்கை ஊருக்கு செல்வதற்குள்  வேறு ஏதாவது தகவல் கிட்டாதா, அதை பயன்படுத்தி போட்டு வைத்திருக்கும் திட்டத்தை செவ்வனே செயல்படுத்தி விட மாட்டோமா  .... என்ற ரீதியில் காத்துக் கொண்டிருந்தாள். 


பிரபா வழக்கம் போல், தன் புகுந்த வீட்டு சொந்தங்களை பற்றி பேசும் போது , சிசிடிவி கேமராவில் முந்தைய இரவு பதிவான வீரா ஸ்ரீப்ரியாவுக்கு இடையே ஆன காதல் காட்சிகளை போட்டு காட்டி அப்பொழுது நடந்த நகைச்சுவையை பகிர,  நீண்ட நாட்களுக்கு பிறகு அவளது தாய் அதனை ரசித்துப் பார்த்து சிரித்து மகிழ, கேட்டுக் கொண்டிருந்த ப்ரீத்திக்கு யாரோ  நெஞ்சில் நெருப்பள்ளி கொட்டியது போல் இருந்தது.


அவள் போட்டு வைத்திருந்த திட்டத்திற்கு அந்த செய்தி முற்றிலும் முரணாக இருக்க,  அடுத்து என்ன செய்வது என்று  சிந்தனையில் அவள் மூழ்கி இருக்கும் கணத்தில்,  அவள் தாய் கழிப்பறைக்குச் செல்லவும், பிரபாவின் குழந்தைகள் வீட்டு வராண்டாவில் தொங்கிக் கொண்டிருந்த சிறிய சாண்டிலியரை ஏணி போட்டு ஏறி இழுத்து  உடைக்கவும் சரியாக இருந்தது. 


உடனே பிரபா,


"ஏன்டா இப்படி விஷமம் பண்ணி உயிரை வாங்கறீங்க... கைய கால வச்சிக்கிட்டு சும்மாவே இருக்க மாட்டீங்களா ... "  என பெரிதாக கூப்பாடு போட்டுக் கொண்டே  வராண்டாவை நோக்கி ஓட,  எதற்கும் இருக்கட்டுமே என்று அந்த தருணத்தை சரியாக பயன்படுத்திக் கொண்டு, ரீல்ஸ் எடுப்பதற்காக தன் இருசக்கர வாகன சாவியோடு சேர்த்து வைத்திருந்த  சிறிய பென்டிரைவை பயன்படுத்தி,  அந்த 3 நிமிடத்திற்கும் குறைவான சிசிடிவி பதிவு  காணொளியை பிரதி எடுத்துக் கொண்டு,  அந்த இடத்தை விட்டு துரிதமாக வெளியேறினாள் ப்ரீத்தி. 


பிரபா,  ஒவ்வொரு முறை இந்தியா வரும் பொழுதும்  தங்கையை  குழந்தையாக பாவித்து,  அவளுக்கென்று துணிமணிகள், அழகு சாதன பொருட்கள் , வாசனை பூச்சுகள் போன்றவற்றை  பார்த்து பார்த்து வாங்கிக் கொண்டு வந்து பரிசாக வழங்குவாள் .


அதே போல் விடைபெறும் பொழுதும் தங்கையை கட்டி அணைத்து,  குழந்தைக்கு சொல்வது போல் பல அறிவுரைகளை வழங்கி,  உடன் கை செலவிற்கு சில ஆயிரங்களை அவள் கையில் திணித்து பாசம் பாராட்டி விட்டே விடை பெறுவாள்.


ஆனால் இந்த முறை விடைபெறும் பொழுது,  ப்ரீத்தி இருக்கும் திசையை கூட,  பார்க்காமல் தாய் தந்தையிடம் மட்டும் ஆசி பெற்றுக் கொண்டு தன் குடும்பத்தோடு விமான நிலையத்திற்கு பயணமானாள்.


சத்யன் குடும்பத்தை  வழி அனுப்ப, விமான நிலையத்திற்கு செல்வதற்காக  , வீரா அலுவலகத்திலிருந்து முன்னதாகவே கிளம்பி வீட்டிற்கு வந்தான்.


அழகான வெண் பட்டில் அரக்கு பார்டருடன் ஜர்தோசி வேலைப்பாடு செய்த  சுடிதாரில் தயாராகி இருந்த அவன் மனைவி , கணவனின் 'சிட்டு' என்ற அழைப்பை கேட்டதும் பால்கனியில் செடிகளுக்கு தண்ணீர் ஊற்றிக் கொண்டிருந்தவள்,   பாதியிலேயே விட்டுவிட்டு ஓடி வந்து எம்பி தன் இரு கரங்களையும் மாலையாக்கி அவன் கழுத்தை  கட்டிக்கொண்டாள்.


 மனையாளின் வரவேற்பு கொடுத்த உற்சாகத்தில் , அவள் இடைப்பற்றி  அவன் தூக்கி  கொஞ்ச,  காற்றில் மிதந்த  தன் இரு கால்களை தன்னவனின்  இடை சுற்றி பின்னிக் கொண்டவள், முகம் எங்கும் முத்தமிட்டு அவன்  கழுத்தில் முகம் புதைத்துக் கொண்டாள்.


"ஹவ் வாஸ் த டே"  என்றான்  குழந்தை போல் அவளை  சுமந்துக்கொண்டு நடந்தபடி.


"போரிங் .... உங்களுக்கு ..?.."


"மூச்சு விட கூட நேரம் இல்ல  ..."


சோபாவில் அமர்ந்து அவளை  மடியில் கிடத்திக்கொண்டவனிடம், அவன் முகம் பார்த்து 


"உண்மைய சொல்லுங்க ... இன்னைக்கு ஆபீஸ்ல என்னை எத்தனை தடவை நெனைச்சீங்க ... மொதல்ல நெனச்சிங்களா ..." என்றாள் ஏக்கத்தோடு. 


வாய்விட்டு சிரித்தவன்,


"உண்மைய சொல்லட்டுமா பொய் சொல்லட்டுமா ..." என்றான் இரு புருவங்களையும் ஒன்றன் பின் ஒன்றாக உயர்த்தி குறும்பாக.


"உண்மைய சொல்லுங்க ...."


"அனல் பறக்கிற வேலையில கல்யாணமானதே மறந்து போச்சும்மா...  மீட்டிங்கெல்லாம் முடிஞ்சு வீட்டுக்கு வர கார் எடுக்கும் போது தான்,  உன் ஞாபகமே வந்துச்சு ..." என்று முடித்தது தான் தாமதம்,  காதை பிடித்த திருகி அவன்  கன்னத்தை அவள் கடிக்க,


"ஐயோ வலிக்குது... விடுடி ..." என்றான் பொய் கோபத்தில்.


"விட முடியாது .... அது எப்படி, கல்யாணமானதே மறந்து போகும் ..."


"நீதான உண்மைய சொல்ல சொன்ன... உண்மைய சொன்னா கடிக்கிற ..."


"ஆமா கடிப்பேன்.." என்றவள் அவன் மறுக்கன்னத்தையும்  கடிக்க,


"இங்க பாரு நேரமாச்சு .... ஏர்போர்ட் போகணும்....  கீழே இறங்கு .... நான் போய் பிரஷ் ஆயிட்டு வரேன் ..."


"இறங்க மாட்டேன் .... இப்படியே தான் இருப்பேன் ..." என உட்கார்ந்த நிலையிலேயே  அவன் கழுத்தை  இறுக்கமாக கட்டிக் கொண்டு அவள்  தர்ணா செய்ய, 


"உன்னை எப்படி இறங்க வைக்கணும்னு எனக்கு தெரியும் ..." என்றவன்  விஷம சிரிப்போடு அவளை அள்ளிக்கொண்டு பால்கனிக்கு சென்று,  அங்கிருந்து தூக்கி வீசுவது போல் போக்கு காட்ட,  ஐயோ ... என்று சிரிப்பினுடே அவள் அலற, 


"என்ன பயமா...  கீழ போட்டுடுவேன்... போட போறேன் ..." என்று அவளை இறுகப்பற்றிக் கொண்டே அவன் மிரட்ட, 


"ராம்,  நீங்க என்னை கீழ போட மாட்டீங்கனு எனக்கு நல்லா  தெரியும் ..."  அவள் வக்கனையாகப் பேச,

"அவ்ளோ நம்பிக்கையா ...இப்ப உன்னை கீழ தூக்கி போட தான் போறேன்....  நீ நிச்சயமா பயப்படத் தான் போறே.."  என்றவன் அவளை அள்ளிக் கொண்டு சென்றது குளியல் அறை.


ஒற்றைக் காலால் குளியல் தொட்டியின்  உள்ளிருப்பு பொத்தானை தள்ளி மூடி விட்டு,  வெந்நீர் மற்றும் குளிர்ந்த நீர் குழாய்களை முழு வீச்சோடு திறந்து விட்டவன் 


"இப்ப இந்த தண்ணில உன்னை தூக்கி போட்டுட்டு,  நானும் உன் கூடவே குளிக்க போறேன் ..."


"ஐயோ   வேணாம் ... விட்டுடுங்க... புது டிரஸ்...  வைட் டிரஸ் .... ப்ளீஸ் வேணாம் .... டைம் ஆயிடுச்சு...  இறக்கி விடுங்க .... ஏர்போர்ட் போகணும் ... அக்கா வெயிட் பண்ணிக்கிட்டு இருப்பாங்க ... ப்ளீஸ்  ஏர்போர்ட் போகணும் ..." என கை கால்களை ஆட்டி சந்தைக்கு போகணும் காசு கொடு ஆத்தா வைய்யும்னு 16 வயதினிலே சப்பாணி கூறுவது போல்,  அவள் பயத்தில் சொன்னதையே சொல்லிக் கொண்டிருக்க 


"அப்படி வா வழிக்கு.... சும்மா இருந்தவனுக்கு இப்படி ஒரு ஐடியாவை கத்து கொடுத்துட்ட....  கூடிய சீக்கிரம் ஒரு  ஜலக் கிரீடை  நடத்திட வேண்டியது தான் ..." என்றவன் துளிர்த்த மோகத்தை அவள் இதழ் தீண்டி தணித்துக் கொண்டே விட்டான். 


பிறிதொரு நாளில்  இந்த இனிமைகளை எல்லாம் நினைத்துப் பார்த்து இருவருமே ஏங்க போகின்றனர் என தெரியாமல் அரக்கப் பறக்க,  விமான நிலையத்திற்கு பயணித்து அங்கு  காத்திருப்பு பகுதியில் காத்துக் கொண்டிருந்த  சத்யன் குடும்பத்தை சந்தித்து மிகுந்த மகிழ்ச்சியோடு அளவளாவ தொடங்கினர். 


அலுவலக சம்பந்தமான பேச்சில்  சத்யன், வீரா ஈடுபட தொடங்கியதும்,  ஸ்ரீப்ரியாவை தனியே அழைத்து உரையாடத் தொடங்கிய பிரபா,


"ஹனிமூன்க்கு எங்க போறதா பிளான்  ..."  என்றாள் இன்முகத்தோடு.


"இப்போதைக்கு ஹனிமூன்  ப்ளான் பண்ணலக்கா ... ஜாப்ல ஜாயின் பண்ணனும்னு ஒரு ஐடியா இருக்கு ..."


"ஓ.... ஆல் தி பெஸ்ட் .... " என்றவள் ஓரிரு கணம் தாமதித்து,


"நான் சிலது உன்கிட்ட கேட்கணும்... சிலது உன்கிட்ட சொல்லணும் ... பேசலாமா  ..." என்றாள் ஸ்ரீப்ரியாவின் முகத்தை உற்று நோக்கி.


" சொல்லுங்க அக்கா ..."


"என் தங்கச்சி ப்ரீத்தி உன்கிட்ட  ஏதோ  சொல்லி இருக்கான்னு மட்டும் தெரியும்  .... "  என்ற போதே இளையவளின் விழிகளில் தெரிந்த வலியே  அவள் ஆமோதிப்பை சொல்லாமல் சொல்ல, 


" என்ன சொன்னா...  சொல்லு ..." என்றதும், சற்றும் தயங்காமல்  மடை திறந்த வெள்ளம் போல் அன்று ப்ரீத்தி கூறிய அனைத்தையும்,  ஒரு வார்த்தை கூடுதல் குறைச்சல் இல்லாமல்  ஸ்ரீப்ரியா  சொல்லி முடிக்க, 


கேட்டுக் கொண்டிருந்த பிரபாவுக்கு  கோபம் தலைக்கேற,


"நினைச்சேன் இந்த மாதிரி,  ஏதாவது தகடு தத்தம் பண்ணியிருப்பான்னு.. அதே மாதிரியே செஞ்சு வெச்சிருக்கா... ஆனா நீ கிரேட் ... எவ்ளோ பெரிய விஷயத்தை, எவ்ளோ  பொறுமையா ஹேண்டில் பண்ணி இருக்க  ...  


இப்ப உனக்கே  பாண்டியனை பத்தி தெரிஞ்சிருக்கும் நான் சொல்ல வேண்டிய அவசியமே இல்லை... இருந்தாலும் சொல்றேன்..


ப்ரீத்தி சொன்னது பச்ச பொய் ...  இவளா போய் ஏதாவது கேள்வி கேட்டாளே  ஒழிய மத்தபடி இவளை பாண்டியன்  திரும்பி கூட பார்த்ததில்ல... உறவு முறைல மச்சினன்னாலும் அவரு  எனக்கு கூட பொறக்காத தம்பி  தான் .... நான் சத்யனை கல்யாணம் பண்ணிக்கிட்டு நம்ம வீட்டுக்கு வரும் போது  ,  மாமியார், மாமனார் ,அன்பு  எல்லாரும் என்னை எதிரி மாதிரி தான் பார்த்தாங்க .... பாண்டியன் மட்டும் தான் அண்ணினு ரொம்ப மரியாதையா நடத்தினாரு...


இப்ப வரைக்கும் அப்படித்தான் நடந்துகிறாரு.... நிறைய விஷயத்துல எனக்கும், சத்யனுக்கும் சப்போர்ட் பண்ணி நம்ம வீட்ல பேசி இருக்காரு... சரியா சொல்லணும்னா, எங்க லவ்வ  ஃபர்ஸ்ட் அக்சப்ட் பண்ணது அவரு தான் ....


எனக்கும் சத்யனுக்கும் நடுவுல ஆரம்ப காலத்துல சில பிரச்சனைகள்  மாமியார்,  அன்புவால வரும் போது கூட எதையும் பெரிசு படுத்தாம, பேச வேண்டியத மட்டும் பேசிட்டு , கடந்து போயிருக்காரு ....


ரொம்ப பொறுமைசாலி, புத்திசாலி அதே சமயத்துல ரொம்ப சென்சிடிவ் ... 


ஆனா என் தங்கச்சி ப்ரீத்தி அவருக்கு நேர் மாதிரி ... அவளுக்கு என்னைக்குமே  பொறுமை,  பொறுப்பு கிடையாது .... இப்படி இரு அப்படி இருனு  அட்வைஸ் பண்ணா உடனே பெண்ணியம் ஆணாதிக்கம்னு ஆரம்பிச்சிடுவா ... இத்தனை நாளா ஏதோ குழந்தைத்தனமா சொல்லிக்கிட்டு இருக்கானு நினைச்சுக்கிட்டு இருந்தேன் ... இப்பதான் தெரிஞ்சது அவ தரிக்கெட்டு அலையறதுக்கும் மனம் போன போக்குல வாழுறதுக்கும் அந்த வார்த்தைகளை பயன்படுத்துகிறானு...


அதனால தான் அவ பாண்டியனை கல்யாணம் பண்ணிக்க ஆசைப்படறேன்னு சொன்னதும்  நாங்க ஒத்துக்கல..." என முடித்தாள் ப்ரீத்திக்கு சத்யனின் மீதிருந்த தவறான ஆர்வத்தை முற்றிலும் மறைத்து. 


"உனக்கு இருக்கிற எக்ஸ்பீரியன்ஸ்க்கு நிச்சயமா சீக்கிரமே ஜாப் கிடைச்சிடும்... நீ ஃபினான்சியல் இண்டிபெண்டன்டா  இருக்கணும்னு நினைக்கிறது  நல்ல விஷயம் தான் , அதே சமயத்துல எந்த காரணத்தை கொண்டு மொதல் குழந்தையை தள்ளிப் போட்டுடாதே  ...


சில விஷயங்கள்  இயற்கையா நடந்தா தான் அழகாவும் ஆரோக்கியமாவும் இருக்கும் காலம் கடந்ததுக்கப்புறம்  IUI, IVFக்காக எடுத்துக்கிற டேப்லட்ஸ்,  ஹார்மோனல் இன்ஜெக்ஷன் எல்லா உடம்ப ஒன்னும் இல்லாம பண்ணிடும் .... பாண்டியனுக்கு ஏற்கனவே லேட் மேரேஜ் .... அவருக்கு குழந்தைகள்னா ரொம்ப பிடிக்கும் ..." என்றவள் ஒரு கணம் தயங்கி,


" நீ வேலைக்கு போறது, குழந்தைக்கு பிளான் பண்றது எல்லாம் உங்க பர்சனல் ... அதுல தேவையில்லாம மூக்க நுழைக்கிறேன்னு என்னை தப்பா நினைக்கறியா ..." என்றாள் வெகு சிறு அச்சத்தோடு. 


" ஐயோ அப்படியெல்லாம் இல்ல  க்கா ..."


" உன்னை ஓரகத்தியா பார்க்காம,  என் தம்பி பாண்டியனோட பொண்டாட்டியா  நினைச்சதால தான் என் மனசுக்கு சரின்னு பட்டதை சொன்னேன்.... நீ ப்ரீத்தி மாதிரி இருந்திருந்தா,  இவ்ளோ தூரம் பேசி இருக்கவே மாட்டேன் ... நீ ரொம்ப எதார்த்தமா இருக்க , இடத்துக்கு ஏத்த மாதிரி நல்லது கெட்டது புரிஞ்சுகிட்டு பொறுமையா  புத்திசாலித்தனதோட நடந்துக்கிற ... அதனால தான் உன்கிட்ட மனசு விட்டு பேசினேன் , தப்பா எடுத்துக்காத .." என்றவளின் விழிகளில் சகோதர பாசம் மின்ன,


"நீங்க  எதுவும் தப்பா சொல்லல க்கா .... எங்க நல்லதுக்கு தான் சொல்றீங்க..."  என ஸ்ரீப்ரியா முடிக்க, மேற்கொண்டு இயல்பான பிரிவு உபசார உரையாடல்களுக்குப் பிறகு நிறைந்த மனதோடு சத்யன் குடும்பம் விடைபெற்று விண்ணில் பறந்தது.


அவர்களை வழி அனுப்பியதும், பசி வயிற்றை கிள்ள,  நீண்ட தூரம் உணவுக்காக பயணிக்க மனம் இல்லாமல் அருகில் இருந்த ஒரு உயர்தர உணவு விடுதிக்கு மனைவியுடன் சென்றான் வீரா. 


இரவு மணி பத்தை கடந்ததால் எளிதில் ஜீரணமாகும் ஒரு சில உணவு வகைகளை  மட்டும்  குறிப்பிட்டு எடுத்து வருமாறு அவன் சிப்பந்தியிடம் பணிக்கும் போது, கை கழுவும் இடத்தை அவன் மனைவி தேட அவர்கள் அமர்ந்திருந்த இடத்திற்கு  எதிர் திசையில் இருந்த அறிவிப்பு பலகையை பார்த்தவன் 

"அதோ அங்க இருக்கு பாரு   ..." என தன்னவளுக்கு  காட்டிவிட்டு அவளோடு செல்ல எத்தனிக்கும் போது  அவன் அலை பேசி சிணுங்கியது.


சமிக்ஞைகள் சரியில்லாததால் ஒரு கணம் நின்று, காதில்  மாட்டி இருந்த ப்ளூடூத்தை  சரி செய்துவிட்டு திரும்பியவனின் பார்வையில்  இடது புறத்தில் கை கழுவுவதற்கான இன்னொரு வாஷ் பேசின் பட, அருகில் இருந்ததால் பேச்சில் கவனம் செலுத்திய படி அங்கு சென்று கை கழுவிக்கொண்டு தன் இருக்கைக்கு வரவும், அவன் மனையாள் லேசான பதட்டத்தோடு,  கரங்களை கைக்குட்டையில் துடைத்தபடி துப்பட்டாவை பறக்க விடாமல் பற்றி கொண்டு,  வேகமாக வந்து அவன் முன் அமரவும் சரியாக இருந்தது.


எடுத்து வர சொன்ன உணவு வகைகளை  சிப்பந்தி வைத்துவிட்டு  செல்ல,  பசி அதிகம் இருந்ததால் இருவரும் பேசாமல் உணவில் கவனம் செலுத்தி வேக வேகமாக உண்டு முடித்தனர். 


 காசாளர் பகுதிக்கு  சென்று பணம் செலுத்திவிட்டு, தன்னவளின் தோள் மீது கரம் போட்டு லேசாக அணைத்தபடி  கார் நிறுத்தி இருந்த இடத்தை அடைந்தவன் , காரில் தன் மனைவியை அமர செய்யும் போது  ரியர் வியூ  கண்ணாடியினுடே  எதையோ கண்டு விட்டு ,

" ஒரு நிமிஷம் .... இதோ வந்துடறேன் ...." என்று சொல்லி வேக நடையிட்டு  உணவு விடுதியை நோக்கி  நடக்க,  காரணம் புரியாமல் பெரும் குழப்பத்தோடு அவன் செல்லும் திசையை உற்று நோக்கலானாள் அவன் நாயகி. 



உணவு விடுதியின் வாயில் கதவை நெருங்கும் போது,  எதிர்புறத்தில் நான்கு ஐந்து இளைஞர்கள்  கூட்டாக பேசி சிரித்தபடி வர,  அதில் ஒருவன் கண்ணாடி கதவை உள்நோக்கி  இழுத்துத் திறக்க முற்படும் போது, வீரா மின்னல் வேகத்தில் அவர்களை நோக்கி அதே கண்ணாடி கதவை தன் முழு பலத்தையும் திரட்டி தள்ள, கண்ணாடி மீது செலுத்தப்பட்ட அபரிமிதமான விசை ஏற்படுத்திய  அதிர்வால் , கதவை திறக்க முயன்ற அந்த இளைஞன் நிலை தடுமாறி அவனைத் பின் தொடர்ந்து வந்த இளைஞர்களின் மீது மோதி விழ,  கண்ணாடி கதவிற்கு இரு மருங்கிலும் அழகுக்காக மாட்டியிருந்த போட்டோ ஃபிரேம்களும் தரையில் விழுந்து நொறுங்க, சற்றும் எதிர்பாராத அந்த அதிர்ச்சியில் உணவு விடுதியே ஒரு கணம் ஸ்தம்பித்து போனது.


கண்களில் சிறு பயத்தோடு அந்த  இளைஞர்கள் எச்சில் கூட்டி  விழுங்கிக் கொண்டே எழ முயல, அவர்களைக் கண்டு கொள்ளாமல் காசாளரை நோக்கி  சென்ற வீரா, 


" ஐ அம் சாரி ..... டோர் டேமேஜுக்கும் , விழுந்து உடைஞ்ச  போட்டோ ஃப்ரேம்ஸ்க்கும்  எவ்ளோ ஆகும்னு சொல்லுங்க .... பே பண்ணிடறேன்..."  என்றான் விக்கித்து நின்ற இளைஞர்களை மேலிருந்து கீழாக தெனாவட்டோடு பார்த்து.


அதில் ஒரு இளைஞன் வீராவிடம் மிகுந்த கோபத்தோடு,


" என்ன... உங்களுக்கு ஒரு கதவை கூட ஒழுங்கா ஓப்பன் பண்ண தெரியாதா ...."  என்று எகுற , அப்போது காசாளர்,


" தம்பிகளா,  நீங்க என்ன பண்ணீங்கன்னு எனக்கும் தெரியும் அவருக்கும் தெரியும் ஒழுங்கா வியாபாரத்தை கெடுக்காம வெளியே போயிடுங்க ... அவர் தான் உடைஞ்ச பொருளுக்கு எவ்ளோ பணம் கொடுக்கணும்னு நேர்மையா வந்து கேக்குறாரு இல்ல ... அப்புறம் என்ன ... கிளம்புங்க கிளம்புங்க ..." என தீவிரமாக விரட்ட,  கூட்டமாக இடத்தை காலி செய்தனர் அந்த இளைஞர்கள். 


அரை மணி நேரத்திற்கு முன்பு நடந்தவைகள்..


ஸ்ரீப்ரியா கை கழுவ சென்ற போது, அங்கிருந்த  இளைஞர் குழுவில் ஒருவன் அவள்  துப்பட்டாவை பற்றி இழுக்க,  கோபமும் பதட்டமுமாய் திரும்பி பார்த்தவளிடம் 


" சாரி,  என் ஃப்ரெண்ட்  வரேன்னு சொல்லி இருந்தா.... அவ உங்கள மாதிரி தான் இருப்பா... அவளோனு நெனச்சு துப்பட்டாவை இழுத்துட்டேன் ..."  என்று சமாதானம் பேசியவனின் முகத்தில் துளி கூட அதற்கான வருத்தம் தெரியவில்லை ... மாறாக அவன் முகத்திலும்,  அவன் நட்பு வட்டத்தின் முகத்திலும்  எள்ளல் நகையே இருக்க, அதனை பெரிது படுத்தாமல் கை கழுவு சென்று விட்டாள் பெண்.


கை கழுவி விட்டு துப்பட்டாவை இழுத்துப் பற்றிக் கொண்டு அவள்  அவர்களைக் கடக்க, இம்முறை மற்றொருவன் அவள் இடைக்கு கீழே தட்ட , கொதித்துப் போனவள் திரும்பி பார்த்து 

"பொறுக்கி ராஸ்கல்..." என கர்ஜித்துக்கொண்டே  அவனை அடிக்க கை ஓங்க...


"ஹேய்.... சாரி ... சாரி ..... தெரியாத்தனமா கை பட்டுடுச்சு ... "  என்றான் அதே நக்கல் புன்னகையுடன் .


'சாரி' என்ற வார்த்தையை வைத்துக்கொண்டு தன் சபல புத்தியை காட்டுபவர்களிடம் சண்டையிடுவது வீண் என்றெண்ணி அவள்  இடத்தை காலி செய்ய, தன்னவள் கோபப்பட்டு ஒரு இளைஞனை தாக்க கை ஓங்கியதை மட்டும்  இடப்புற கண்ணாடியினூடே எதேச்சையாக பார்த்த வீரா ,  நடந்ததை ஓரளவிற்கு ஊகித்தபடி  , அவளது வாக்குமூலத்திற்காக ஆர்வமாக காத்திருக்க , வந்தவளோ, பிரச்சனையை பெரிதாக்க விரும்பாமல்,  மௌனமாக உணவருந்த , குமுறும் எரிமலை மனதோடு கோபத்தை வெளிக்காட்டிக் கொள்ளாமல் தக்க சந்தர்ப்பத்தை எதிர்பார்த்தபடி உணவில் கவனம் செலுத்த தொடங்கினான்  நாயகன். 


தற்போது :


"சார், இந்த பசங்களுக்கு இதே வேலை தான் சார் .... லைட்டா கஞ்சா அடிச்சிட்டு வந்து போதையில இப்படி நடந்துப்பாங்க ... இந்த மாதிரி ரெண்டு மூணு தடவை நடந்திருக்கு சார் .... இந்த ஹோட்டல் ஊருக்கு ஒதுக்குப்புறமா இருக்கிறதால போலீஸ் வர நேரம் ஆகும்... சில சமயம் போலீசுக்கு போன் பண்ணி கூப்ட்டாலும்  வரவும் மாட்டாங்க, அதனால தான் சார் இவங்களுக்கு இவ்ளோ தைரியம் .... 


இடி, மின்னல் , பூகம்பத்துக்கு கூட ஒண்ணுமே ஆவாதுன்னு அட்வெர்டைஸ்மென்ட் வந்தத பாத்துதான் இந்த கண்ணாடி கதவை  எங்க ஓனர் வாங்கி மாட்டினாரு.... நீங்க இடி மாதிரி  பலமா தட்டியும், அந்த அதிர்ச்சில சுத்தி இருக்கிற போட்டோ ஃப்ரேம்ஸ் விழுந்து உடைஞ்சதே ஒழிய , இந்த கண்ணாடி கதவுக்கு ஒண்ணுமே ஆவல  .... சரியாதான் அந்த கம்பெனி  அட்வர்டைஸ்மென்ட் கொடுத்திருக்காங்க.... இல்ல சார்...

அதை விட ஒரு அடி கூட அந்த பசங்கள அடிக்காம மரண பயத்தை மட்டும்  காட்டிட்டீங்களே... சூப்பர் சார் நீங்க ..." என மனமார வீராவை பாராட்டிய காசாளர் உடனே சற்று தயங்கி 

"சார், நான் ஏதேதோ பேசிட்டேன் ...  நீங்க போலீஸ் இல்லையே ...."  என்றான் சிறு பயத்தோடு. 


" வாட் ..."  என புரியாமல் வீரா வினவ 


"என்ன வேலை செய்யறீங்க  சார் .." என அவன் கேள்வியை மாற்ற,


"ஐடில ஒர்க் பண்றேன் ..."


"ஐடிலயா சார் ஒர்க் பண்றீங்க ....   உங்க ஹேர் கட்டும், உங்களையும் பார்த்தா போலீஸோ, இல்ல ஆர்மியோனு நினைச்சிட்டேன் சார் ..."


வீரா புன்னகைக்க,


"சார் நீங்க எதுக்கும் பணம்  கொடுக்க வேண்டாம் ...  இனிமே இந்த பசங்க இந்த பக்கம் வர மாட்டாங்கன்னு தோணுது ..கதவுல ஒரு சின்ன கீறல் கூட விழல... இந்த போட்டோ ப்ரேம்ஸ்  எல்லாம் வெறும் 200 , 300 ரூபாய் தான் சார் ....  ஓனர் வர்றதுக்குள்ள புதுசா வேற வாங்கி வச்சிடறேன் சார் ... நீங்க கிளம்புங்க" 

என்றவனிடம் வற்புறுத்தி,  1000 ரூபாய் தாள் ஒன்றை திணித்த வீரா, வேக நடையிட்டு தன் கார் நோக்கி வர, காரில் இருந்த படி அனைத்தையும் பார்த்து கொண்டிருந்தவளுக்கு  1+1 = 2 என அனைத்தும் புரிந்து போனது.


கணவனின் காணா அவதாரத்தை கண்டு குழம்பியவளுக்கு ,விடலை சிறுவனாய்  அவன் அகல்யாவிடம் திட்டு வாங்கியது, அன்பு , சத்யன் இருவரும் அவனை கேலி செய்ததெல்லாம் மனக்கண் முன் வந்து போக , அந்த வீராவுக்கும் தற்போது இருப்பவனுக்கும் கிட்டத்தட்ட 10 வித்தியாசங்களுக்கு மேல் அவள் சிந்தை அவசரகதியில் அடுக்க,  அதிர்ச்சியில் உறைந்தே போனாள் பாவை.


பொதுவாக மனிதர்களுக்கு கோபம் வருவது இயல்பு ... அதனை அன்றாட வாழ்க்கையில் ஏதாவது ஒரு சந்தர்ப்பத்தில்  அவர்கள் வெளிப்படுத்தவும் செய்வார்கள்  ... ஆனால் அவளுக்கு  திருமணமாகி  கிட்டத்தட்ட பத்து நாட்கள் ஆன நிலையில் கடந்த இரண்டு மணி நேரத்திற்கு முன்பு வரை,

அவன் கோபப்பட்டு ஒரு கணம் கூட  காணாதவளுக்கு,  நடந்த நிகழ்வு அதிர்ச்சியோடு ஆச்சரியத்தையும் கொடுத்திருக்க, வாயடைத்துப் போனாள் வனிதை. 



மௌனமாக இருக்கும் மனைவியை பார்த்தபடி,  ஓட்டுனர் இருக்கையில் அமர்ந்தவன் பக்கவாட்டில் திரும்பி, 


"சீட் பெல்ட் போட மறந்துட்டயே சிட்டு... " என்று இயல்பாக மொழிந்தபடி அவனே நெருக்கமாக குனிந்து அவள் இடையில் சீட் பெல்ட்டை பூட்டிவிட்டு உல்லாசமாக சீட்டி அடித்தபடி காரை வெகு வேகமாக செலுத்த ,


"அந்த பசங்க என் துப்பட்டாவ பிடிச்சு இழுத்தத பார்த்தீங்களா  ..." என தலைகுனிந்த படி அவள்  சன்னமாக கேள்வி எழுப்பியது தான் தாமதம்,  அவன் 'கிரீச்' என்ற சப்தத்தோடு வேக கட்டையை அழுத்தி வண்டியை நிறுத்தி,


"உன் துப்பட்டாவை புடிச்சு  இழுத்தாங்களா ... இது எப்ப நடந்தது ..."  என்றான் கனலை கக்கும் விழிகளோடு.


அவள் நடந்த அனைத்தையும் பொறுமையாக சொல்லி முடிக்க,


"நீ ஒன்னும் தனியா இல்லையே ... உன் கூட பவுன்சர் மாதிரி நான் ஒருத்தன் இருக்கேனில்ல ..... இப்படின்னு முன்வே சொல்லி இருந்தா அந்த  பொறம்போக்குகளை  அடிச்சு பொளந்திருப்பேனே.... ஏண்டி சொல்லல ....  " 

அவன் கர்ஜிக்க, 


"நீங்க பிறவி சாந்தம் .... தேவையில்லாம இந்த பிரச்சினைய சொல்லி உங்களை கஷ்டப்படுத்த வேண்டாமேனு பார்த்தேன் ....  இப்ப இல்ல தெரியுது உங்களுக்கு அடிக்கிற அளவுக்கெல்லாம் கோவம் வரும்னு ..." 


"நான் என்ன ரமண மகரிஷியா இல்ல  ராமகிருஷ்ண பரமஹம்சரா எப்பவும் கோவப்படாம இருக்கறதுக்கு ... ஒரு பொண்ண பாத்து ஃப்ளர்ட்  பண்றதே தப்பு ...  எதோ  சின்ன பசங்க வயசு கோளாறுல செய்யறாங்கன்னு விட்டா, தொட்டு பாக்கணும்னு நினைக்கிறது எவ்ளோ பெரிய அயோக்கியத்தனம் ... அவன்களோட எலும்ப முறிக்காம வந்தது ரொம்ப தப்பா போச்சு ... " 

 வகைத்தொகை இல்லாமல் அவன் குமுற,  மேற்கொண்டு பேசி அவன் கோபத்தை அதிகப்படுத்த விரும்பாதவள் அமைதி காக்கத் தொடங்கினாள். 


ஒரு வழியாக நள்ளிரவிற்கு முன்பு இருவரும் வீட்டை அடைய, குளியலறைக்குச் சென்று இரவு உடைக்கு மாறி புத்துணர்வு பெற்று  படுக்கையில் விழுந்தவளுக்கு  உணவு விடுதியில் நடந்ததே ஓடிக்கொண்டிருக்க, வெற்று மார்போடு ஷார்ட்ஸ் மட்டும் அணிந்து நெருங்கி படுத்தவன்,


" என்ன ஸ்ரீ.... என்ன யோசனை ..." என்றான் தன் இதழால் அவள் கன்னத்தில் கோலமிட்டபடி.


" என் அப்பாவுக்கு ரொம்ப கோவம் வரும் தான் ஆனா உங்கள மாறி அடுத்தவங்கள அடிக்கிற அளவுக்கு எல்லாம் கோவம் வராது.... " என்றவளின் உடம்பில் ஒருவித இறுக்கம் தெரிய,


" எப்பயாவது வர்ற கோவத்துக்கு ஏன் இவ்ளோ இம்பார்ட்டன்ஸ் கொடுக்கற..."


"அடிக்கடி கோவப்படுறவங்களை விட எப்பவாவது வர்ற உங்க கோவம் ரொம்ப பயத்தை கொடுக்குது ... உங்க கிட்ட எனக்கு  பிடிச்சதே உங்க புத்திசாலித்தனமும் பொறுமையும் தான் ....  " என்றவளின் கீழ் உதட்டை தன் இரு விரலால் பற்றிக் கொண்டவன்,


" ஆக்ஷன் சீன்ஸ் எல்லாம் எப்பவோ முடிஞ்சு போச்சு .... இனிமே ரொமான்ஸ்.... ஒன்லி ரொமான்ஸ் தான்..." என்றபடி அவள் கழுத்தில் முத்தமிட்டு முன்னேற,  முதலில் இணங்க மறுத்தவள் நேரமாக ஆக ஆக அவன் காட்டிய வித்தைகளில் , மயங்கி அவனுடன் இரண்டறக் கலந்தாள்.



ஸ்ரீ-ராமம் வருவார்கள்...





































































 





  







 












   











































Comments

Post a Comment