ஸ்ரீ-ராமம்-72

 

அத்தியாயம் 72


இருவரும் தங்கள் அறைக்குச் செல்ல  படியேறும் போதே,  வீராவின் அலைபேசிக்கு குயிலோசை ஒலியில் மின்னஞ்சல் ஒன்று வர,
தட்டித்திறந்தவன் ,  அதில் இருந்த செய்தியில் கவனம் செலுத்தியபடி , வேகமாக முன்னேறி அறை கதவை திறக்க, பின் தொடர்ந்தவள்,

"என்ன ஆச்சு  ராம் ... ஏதாவது முக்கியமான விஷயமா ..." என்றாள் அவன் முனைப்பைக் கண்டு.

" ஒரு இம்பார்டன்ட் அப்ரூவல் கொடுக்கணும்   அதான் ..."  என்றவன் உடை கூட மாற்றாமல்,
மடிக்கணினியை தொட்டுத் துவக்க,
அவளோ புத்துணர்வு பெற இரவு  உடையை எடுத்துக் கொண்டு குளியல் அறைக்குள் புகுந்து கொண்டாள்.

இரவு உடைக்கு மாறி  அவள் வெளியே  வரும் போது அவன் தன் பணியை முடித்துவிட்டு
பூந்துவலையோடு குளியலறைக்குள் நுழைந்தான்.

புத்துணர்வு பெற்று வெற்று மார்போடு வந்து பூந்துவலையிலிருந்து  ஷார்ட்ஸ்க்கு மாறியவன் , படுக்கையில் இருந்த தலையணையை எடுத்துக்கொண்டு  அறையின் மூலையிலிருந்த சோபாவை நோக்கி செல்ல,

"ராம் .... இங்க தூங்கலையா ..." என்றாள் யோசனையாய்.

"நீ  நிம்மதியா தூங்கு ... குட் நைட் "   என அவன் நடக்க ,

"அதுக்கு   நீங்க ஏன் அங்க போய் தூங்கணும் ...." என்றாள்  கேள்வியாய் .

"முன்ன இருந்த ஸெல்ஃப் கண்ட்ரோல் இப்ப நிச்சயமா இல்ல...  தேவையில்லாம ரிஸ்க் எடுக்க வேணாமேன்னு தான் ...."

"அப்படியெல்லாம் ஒன்னும் நடக்காது ...   வாங்க"

"அங்க தான் தப்பு பண்ற .... நேத்து நைட்டோட என் பிரம்மச்சரியம்  முடிஞ்சது ....
இனிமே உன் பக்கத்துல அடக்கி வாசிப்பேன் ... சன்னியாசியா இருப்பேன்னு  நம்பாத.."

"சரி தப்பே நடந்தாலும் தப்பில்ல ....
வந்து தூங்குங்க ..." என்றாள் லேசான வெட்கத்துடன்.

"இன்னைக்கு ஒரு நாள் எதுவும்  வேண்டாம்.... நேத்திக்கே ரொம்ப கஷ்டப்படுத்திட்டேன் ...
இன்னும் நீ பெயின் கில்லர்ல தான் இருக்க....  மைண்ட் இட்..."

"எனக்கு உங்க மேல நம்பிக்கை இருக்கு ...  வாங்க..."

ஒரு வழியாக  அவள் அருகில் வந்து  விலகிப் படுத்துக் கொண்டான்....

பத்து நிமிடத்திற்கெல்லாம், ஒருக்களித்து படுத்தவன், தன் வலக்கரத்தை அக்டோபஸாய் விரித்து அருகில் முதுகு காட்டி  படுத்திருந்தவளை அலேக்காக இழுத்து முழுவதுமாய் தன்னுள் புதைத்துக் கொண்டான்.

உலகின் மிக பெரிய இறக்கைகள் கொண்ட அல்பாட்ரோஸ் வகை பறவை இனம் போல்,  அவனது பறந்து விரிந்த புஜத்திற்குள்,
அவள் முழுவதுமாக அடங்க,
அவள் பின் கழுத்தில் உஷ்ண மூச்சோடு முத்தமிட்டவன் , காது மடல்களை பிறந்த குழந்தை போல் கவ்வி கடித்து குதப்ப, கன்னக்கதுப்பில் சூடேறி ,
முகம் திருப்பிப் பார்த்தவள்,

"என்ன பண்றீங்க  ..." என்றாள் குறும்பாய்.

"ஒன்னுமில்லயே ... நீ வேற என்னை ரொம்ப நல்லவன்னு  சொல்லிட்டயா ... ஒண்ணுமே பண்ண முடியல ... " என்றவனின்  விழிகளில் தெரிந்த குறும்பும், முகத்தில் தெரிந்த  போலி சோகத்தையும் கண்டு அவள் களுக்கென்று  சிரிக்க, அதனை ரசனையோடு பார்த்தவன், அவள்  பிறை நெற்றியில் தவழ்ந்திருந்த  கேசத்தை ஒதுக்கி  ஆழ்ந்த முத்தம் ஒன்றை பதித்தான்.

அதில் மெய் மறந்த மங்கையின் விழிகள்,  தன்னவனின் நயனங்களை நயமாக நோக்க,  அதில் கட்டுண்டவன் கண நேரத்தில் சுதாரித்து அவள் கன்னம் தொட்டு எதிர்ப்புறத்தில்  அவள் முகம் திருப்பி, தன் காலை அவள் கால்களின் மீது  போட்டுக்கொண்டு அவள் முதுகை  தன் மார்போடு புதைத்தணைத்து

"குட் நைட் ..." என்றான் அவள் காதில் மென்மையாய்.

அடுத்த பத்தாவது நிமிடத்தில் அவன் ஆழ்ந்த உறக்கத்தை தழுவ,  முதுகில் பரவும் அவன் வெம்மை மூச்சுக்காற்றின் கதகதப்பில்
அவளும் ஆழ்ந்த உறக்கத்தை தழுவினாள்.

"இங்க பாரு ப்ரீத்தி ...  உனக்கு பாண்டியன் மேல லவ் எல்லாம் கிடையாது ஒரு சின்ன ஈடுபாடு இருந்தது அவ்ளோ தான்....  இன்ஃபேக்ட்  உனக்கு இப்படி ஒரு எண்ணம் இருக்குனு கூட அவருக்கு தெரியாது ... அவர் உன்கிட்ட தேவைக்கு கூட பேசினதில்ல.... பின்ன எதுக்கு தேவையில்லாம  சீரியல் வில்லி மாதிரி  புதுசு புதுசா யோசிச்சு  திட்டம் போட்டுக்கிட்டு இருக்க.... இப்படி யோசிக்கிறதை விட்டுட்டு இருக்கிற அரியர்ஸ கிளியர் பண்ணிட்டு அடுத்து படிக்கலாமா இல்ல வேலைக்கு போலாமான்னு யோசிக்கிற வழிய பாருடி  ..." என்ற தன் தோழி கவிதாவை கோபத்தோடு பார்த்த ப்ரீத்தி,

 "நான் இத்தனை நாளா உன்கிட்ட கூட சொன்னதில்ல ...பாண்டி அத்தான் மேல எனக்கு இருந்தது சாதாரண ஈடுபாடு இல்ல, அவரை  ரொம்ப நாளா  ஒன் சைடடா லவ் பண்ணிக்கிட்டு இருக்கேன் .... இந்த வருஷம் டிகிரி முடிச்சுட்டு,  அவர்கிட்ட ப்ரொபோஸ் பண்ணலாம்னு இருந்தேன் ... ஆனா அதுக்குள்ள கல்யாணமே வேணாம்னு சொல்லிக்கிட்டு இருந்தவரு திடீர்னு அந்த ஸ்ரீப்ரியாவை பார்த்ததும் கல்யாணம் பண்ணிப்பாருன்னு நான் கொஞ்சம் கூட எதிர்பார்க்கல ... "

என்றாள் தன் சூழ்ச்சியை புரிந்து கொண்ட தமக்கை, தன்னை உதாசீனப்படுத்திய சத்யன்,  துளியும் மதிக்காத பொன்னம்பலம்,  அவ்வளவு கட்டுக்கதைகளை  சொல்லியும் பாண்டியனோடு சேர்ந்து வாழும்
ஸ்ரீப்ரியா ஆகியோர் மீது ஆலகால விஷமாய் இருக்கும் வன்மத்தை மறைத்து.

"சரி, இத்தனை நாளா ஒன்சைடடா லவ் பண்ணிக்கிட்டு இருந்த... ஓகே ...
இப்பதான் அவருக்கு கல்யாணம் ஆயிடுச்சு இல்ல ... விட்டுடு ... நீ  அந்த ஸ்ரீப்ரியா கிட்ட இல்லாததையும் பொல்லாததையும் சொல்லிட்டு  வந்தும் என்ன காரணமோ தெரியல இப்ப வரைக்கும்  எந்த பிரச்சினையும் வெடிக்கல.... ஒருவேளை  வெடிச்சிருந்தா நீ அவ்ளோ தான்...
உன் அக்கா உன்னை உண்டு இல்லன்னு பண்ணியிருப்பா ..... அதைவிட உன் அக்காவுக்கு மாமாவுக்கும் செம சண்டை வந்திருக்கும் .... குடும்பமே ஒன்னும் இல்லாம போயிருக்கும் ... கடவுள் அருளால அப்படி எதுவும் நடக்கல ....  இதோட நிறுத்திக்க ...
மறுபடியும்  அந்த  ஸ்ரீப்ரியாவோட அப்பாவ
மீட் பண்ணி இட்டு கட்டின கதைய சொல்லி நம்ப வைக்கப் போறேன்னு குப்பை பிளான் போடறதெல்லாம்  தேவையில்லாத ஆணின்னு தோணுது ... தயவு செஞ்சு விட்டுடு.."

"இல்ல கவி... நீ என்ன  சொன்னாலும் இந்த விஷயத்துல நான் பின் வாங்க போறதில்ல இப்ப என் கையில இருக்கற ஒரே துருப்பு  சீட்டு ஸ்ரீப்ரியாவோட  அப்பா தான் .... அந்த கோவக்கார மனுஷன் கிட்ட மட்டும்  ஏதாவது சொல்லி ட்ரிக்கர் பண்ணி விட்டுட்டா போதும் மத்தத அவரே முடிச்சி வச்சிடுவாரு...."

"அவருக்கு மொட்டைக் கடுதாசி எழுத போறயா... இல்ல அவரை போன்ல காண்டாக்ட் பண்ணி பேச போறயா ..... என்ன பண்ணறதா உத்தேசம் ..."

"நீ சொல்ற டெக்னிக் எல்லாம் வேத  கால  டெக்னிக் ....  அப்படி எல்லாம் பண்ணா கையும் களவுமாக மாட்டிக்குவேன் ...   புதுசா ட்ரெண்டியா ஏதாவது பண்ணனும் ... அதே சமயத்துல நான் தான் பண்ணேன்னு
யாருமே கண்டுபிடிக்க கூடாது ...
அதான் யோசிச்சுக்கிட்டு இருக்கேன் ..."
என்றாள் கூடிய விரைவில் அவள் எதிர்பார்த்த சந்தர்ப்பம் அவளைத் தேடி அமையப்போவதை அறியாமல்.

"நான் ஓன்னும் ரொம்ப நல்லவ கிடையாது... இருந்தாலும்  ஒரு விஷயம் சொல்றேன் கேட்டுக்க... நமக்கு யாராவது கெட்டது பண்ணாலும் திரும்ப அவங்களுக்கு கெட்டது பண்ணாம கடவுள் பார்த்துப்பார் விட்டுட்டு போன்னு நம்ப வேதம் சொல்லுது .... 
பாண்டியனும், அந்தப் பொண்ணு  ஸ்ரீப்ரியாவும் உன்கிட்ட சரியா பேசினது கூட கிடையாது .... சம்பந்தமே இல்லாத அவங்கள பார்த்து தேவையில்லாம பொறாமைப்பட்டு நீ செய்யப் போற காரியம் நிச்சயம் உனக்கே பேக் ஃபயராயிடும் பாத்துக்க ...."

"திடீர்னு வேதம் , கடவுள்... பொறாமைன்ற .... என்ன ...  அட்வைசா ..... "

"நல்லது சொன்னா உனக்கு பிடிக்காதே...  நாத்திகம் பேசுறவங்க, தன்னை நம்பாதவங்களுக்கு கூட கெடுதல் செய்யக்கூடாதுன்னு நம்ம சாமி சொல்லுது ... ஆனா நீ  உன்னை நம்பற உன் அக்காவுக்கு பிரச்சனைய உண்டு  பண்றயே... இது கொஞ்சம் கூட  நல்லா இல்ல  ...
கெடுவான் கேடு நினைப்பான் ... ஞாபகம் வச்சுக்க.."

"எனக்கு எந்த சாமி மேலயும் நம்பிக்கை கிடையாது .... மை லைஃப் மை ரூல்ஸ் ...."

"இப்படி சொன்னவங்க எத்தனையோ பேர் எங்க இருக்காங்கனு எனக்கு நல்லா தெரியும் ஆள விடு ஆத்தா ...  கிளம்புறேன் ..."

தோழி போடும் திட்டம், அவர்கள்  குடும்பத்தில் பெரிய பிரச்சினையை உருவாக்கப் போகிறது என்ற முடிவுக்கு வந்த கவிதா , அவள்
வீட்டிலிருந்து தன் இரு சக்கர வாகனத்தை கிளப்பிக்கொண்டு விட்டால் போதும் என பஞ்சாய் பறந்து விட்டாள்.

தான் செய்யப் போகும் தகுடு தத்தம்
உள்ளூர் காவல்துறை மட்டுமல்லாமல் இந்திய காவல்துறையுடன் தேசிய புலனாய்வு
அமைப்பின் விசாரணை வட்டத்திற்குள்ளும் தன்னை  கொண்டு போய் விடப் போகிறது என அறியாமல், தன் தமக்கை மற்றும் அவளது புகுந்த வீட்டு உறவினர்களை தரமாக பழி வாங்க தீவிர சிந்தனையில் ஆழ்ந்தாள் ப்ரீத்தி.

மறுநாள்  காலை அவன் கண் விழிக்கும்  பொழுது மனையாள் அருகில் இல்லாததை கண்டு,

வழக்கம் போல சிட்டு ... சிட்டாய் பறந்துடுச்சு டோய் ....

வாய்விட்டு சிறு புன்னகையோடு பேசிக்கொண்டே குளியல் அறைக்குள் புகுந்து கொண்டான் வீரா. அதே நேரத்தில் அடுக்களையில் நடக்கும்  சமையலை, கண்களை விரித்து ஆச்சரியமாக பார்த்துக் கொண்டிருந்த அவன் சிட்டு

"அக்கா, உங்களுக்கு பாவக்காய் ரொம்ப பிடிக்குமா .....  ரொம்ப கசக்குமே... எப்படி சாப்பிடறீங்க   ..." என்றாள் கிட்டத்தட்ட ஒரு கிலோ பாகற்காயை வறுவலாக செய்து கொண்டிருந்த  பிரபாவை  பார்த்து .

"ஐயோ ... எனக்கு மட்டுமில்ல அத்தை மாமாவுக்கு கூட பிடிக்காது ப்ரியா  ..."

"பின்ன ஏன் இவ்ளோ செய்யறீங்க ..."

"வெயிட் ஃபார் த மொமண்ட்...     கொஞ்ச நேரத்துல தெரியும் இதுக்கு எவ்ளோ டிமாண்ட் இருக்குன்னு ... ..." என்றாள் பிரபா நமட்டுச் சிரிப்போடு.

அலுவலகத்திற்கு தயாராகி வந்த வீரா,

"அப்பா எங்கம்மா ...."  அகல்யாவை பார்த்து கேட்டுக் கொண்டே உணவு மேஜையில் வந்தமர,

"ஃப்ரெண்ட்  வீட்டுக்கு போயிருக்காரு டா...  இப்ப வந்துடுவாரு ... " என்ற பதிலை தாயின் சார்பாக மொழிந்தபடி காலை உணவருந்த  தன் குழந்தைகளோடு வந்தமர்ந்தான் சத்யன்.

"அண்ணே, நான் சீக்கிரமே ஆபீஸ்ல இருந்து வந்துடறேன்....  எப்ப  ஃப்ளைட்டு..."  என்ற கணவனின் குரலில் திரும்பிப் பார்த்தவள் ஒரு கணம் இமைக்க மறந்தாள்.

கருப்பு நிற ஸ்டோன் டெனிம் சட்டை, வெளிறிய பழுப்பு நிற பேண்ட்டில் ஆணழகனாக காட்சியளித்தவனை,
அவள் கண்கள் ரகசியமாய் ரசிக்க, பேச்சினூடே  தன்னவளை  தேடியவனின் பார்வையும் அவள் மீது அதே சுவாரசியத்தோடு நிலைத்தது.

மெல்லிய தங்க கம்பியிட்ட , உடலெங்கும் மிளகாய் பழ நிற சிவப்பில் , கருப்பு நிற ஜரிகை கொண்ட டசார் புடவை, கருப்பு நிற ரவிக்கையில் புதுப்பொலிவோடு மின்னியவளை  அவன் கண்கள் ஆழ்ந்து ரசித்துக் கொண்டிருக்கும் போது, 
தன் இரு மகன்களுக்கும்,
பாகற்காய்  வறுவலை சரி சமமாக  அவர்களது தட்டில் காலை உணவான தோசையுடன்  பரிமாறினார் அகல்யா.

மனையாளிடமிருந்து பார்வையை விளக்கி தட்டை பார்த்தவன் ,

"தாயே என்ன இது ..." என்றான்  அதிர்ச்சியாக .

"என்னடா ...."

"தலை பிள்ளை தான் செல்லப்பிள்ளை, இளைய பிள்ளை எடுப்பார் கைப்பிள்ளை என்று காண்பித்த உங்களுடன் இனி ஒரு கணமும் இருக்க மாட்டேன் ..."

"என்னடா ஆச்சு இவனுக்கு... ஏன் இப்படி  பேசறான்.." என அகல்யா சத்யனை பார்த்து  புரியாமல் கேட்க ,

"நீ எனக்கு மட்டும் கொஞ்சம் அதிகமா வறுவல வச்சிட்டேனு நெனச்சு  திருவிளையாடல் முருகன் மாதிரி டயலாக் உட்றாம்மா ..."

"இரண்டு பேருக்கும் ஒரே அளவா தாண்டா வச்சிருக்கேன்.... பாருப்பா..." --- அகல்யா.

"இல்ல தாயே ... தவறிழைத்து விட்டீர்கள் ... இனி நான் இங்கு ஒரு கணமும் இருக்க மாட்டேன் ..."

"என்னடா சொல்ற... எங்கடா போக போற ..."

"எனக்கென்று ஓர் உலகம் , என் நாடு, என் மக்கள் என்று ஏற்படுத்திக் கொண்டு தனிமையில் வசிக்கப் போகின்றேன் முடிந்தால் என்னை அங்கு வந்து பாருங்கள் ..." என வீர வசனம் பேசிக் கொண்டே வீரா
வறுவல் தட்டோடு எழுந்து கொள்ள,

"தம்பி, எங்க போறதா இருந்தாலும்  தட்ட வச்சுட்டு போப்பா ..." என சத்யன்
குலுங்கி நகைத்த படி தடை போட ,பிரபா, ப்ரியா  குலுங்கி சிரிக்க,

"அது நாகப்பழம் ... இது பாவக்கா வறுவல் ஆனா பிரச்சனை ஒன்னு தான் ..." என விடாமல் சிரித்துக் கொண்டே வீரா வாதாட,

"டேய் அது நாகப்பழம் இல்ல  ஞானப்பழம் டா " என சத்யன் சிரிப்பினூடே சொல்ல 

"ஏதோ ஒன்னு ... தம்பிக்கு கொடுக்காம அண்ணனுக்கு கொடுத்தது தான் இப்ப பிரச்சனையே ..."

"இனிமே உங்க ரெண்டு பேத்துக்கும் பாவக்கா வறுவல் வைக்கும் போது ,
கையோடு ஒரு எடையை கொண்டுட்டு வந்து அளந்து வைக்கோணும் போல ..." என அகல்யா அங்கலாய்க்க,

"இவனுங்க ரெண்டு பேரும் பணம் காசுக்கு போட்டி போட்டு கூட நான் பார்த்ததில்ல... ஆனா இந்த பாழாப்போன பாவக்காய் செஞ்சா மட்டும் எப்பவுமே இதே பிரச்சனை தான் .... இனிமே இந்த வீட்ல பாவக்காயே செய்யக்கூடாது ... சொல்லிட்டேன்...." என அசரீரி போல் பொன்னம்பலம் கூறிக்கொண்டே வீட்டினுள் நுழைய,

"வந்ததுமே நாட்டாம தீர்ப்பு சொல்லிட்டாரு டா ...." என சன்னமாக சத்யன் கூறி சிரிக்கவும்,  உடன் தலை குனிந்து கொண்டு அவனோடு இணைந்து நகைத்தான் வீரா.

உண்டு முடித்து அறைக்கு வந்தவனுக்கு அலுவலக ஊழியரிடமிருந்து  அலைபேசி அழைப்பு வர,  அதில் அவன் சுவாரசியமாக பேசிக் கொண்டிருக்கும் போது, ஸ்ரீப்ரியா அவனைத் தேடி அங்கு வந்தாள்.

வந்தவள் அவன் அலைபேசி அழைப்பில் இருப்பதை பார்த்துவிட்டு, களைந்து கிடந்த சில  துணிகளை   சரியாக மர அலமாரியில் அடுக்குவதும்,  மேஜையின் மேல் சிதறி கிடந்த பொருட்களை அதனதன் இடத்தில் பொருத்தி  வைப்பதுமாக காலத்தைக் கடத்த,
அலைபேசியில் என்னதான்
அவன் காதும் வாயும் பணியாற்றிக் கொண்டிருந்தாலும், அவன் கண்கள்  மட்டும்  அவள் பின்னூடே பயணித்து  உச்சி முதல் பாதம் வரை அவளை அங்குல அங்குலமாக அளந்து ரசித்துக்கொண்டிருந்தன ...

ஆனால் அதில் கடுகளவிற்கு கூட கண்ணியம் தான் இல்லை....

அள்ளி முடிந்த கொண்டையிலிருந்து கொடியாய் படர்ந்த சுருள் முடிகள் அவள் பின் கழுத்து, மென் முதுகு, மூங்கில் தோளில்  கோலமிட,  பெண்மையின் மாந்தளிர் மென்மையாய் இரு நிலவுகள் நெஞ்சில்  ஊஞ்சலாட, ஆடை தளர்ந்ததில்  தங்கப்பாளமாய்
தெரிந்த பஞ்சு இடை இசை கூட்ட,
அணு அணுவாய் அளவெடுத்து லயித்து கொண்டிருந்தவன் துரிதமாக அழைப்பை முடித்துவிட்டு அவளை நெருங்க, காத்துக் கொண்டிருந்தவள்

"இந்த பொடவ எப்படி இருக்கு ....
  நல்லா கட்டி இருக்கேனா ..." என்றாள் தும்பைப் பூ கண்களை அகலமாக  விரித்து .

"பொடவ நல்லா இருக்கு... கட்டுனது தான் சரியில்ல .... எல்லாத்தையும் களைச்சிட்டு  முதல்ல இருந்து ஆரம்பிக்கலாமா ..." என்றான் கண்களில் ஆர்வத்தை தேக்கி.

"என்னது ..."

"உனக்கு கம்ஃபர்டபுளா இருக்கத்தான்  யூடியூப்ப பார்த்து முதல்ல இருந்து பொடவை கட்டலாமேன்னு கேட்டேன் ..."

"எனக்கு கம்போர்ட்டபுளா இல்ல தான்.. ஆனா  நீங்க கவலைப்படாதீங்க ... ஆபீஸ் கிளம்பற வழிய பாருங்க ..."

"ஆனா எனக்கு ரொம்ம்ம்ம்ம்ப கம்ஃபர்டபுளா இருக்கே ..."  குறும்போடு  மொழிந்து கொண்டே அவள் இடை பற்றி தன்னோடு இணைத்துக் கொண்டு அவன் மென் நகை புரிய ,  வரிசைப் பற்கள்,  குழி விழுந்த மோவாய் , அடர்ந்த மீசை
அவன்  அழகைக் கூட்டி காட்ட  ரசித்துப் பார்த்தவள்,

"கட்டழகன் கண்களுக்கு மை எடுத்து எழுதட்டுமா ...
கண்கள் படக்கூடும் என்று பொட்டு ஓன்று வைக்கட்டுமா ..."  என தேன்குரலில்  பாடிக்கொண்டே தன் விழியிலிருந்த மையை மோதிர விரலால் தொட்டெடுத்து அவன் நெற்றியின் ஓரத்தில்  சிகைக் களைத்து பொட்டிட்டாள்.

"என்னடி இது ..." என்றான் குழைந்து.

"ம்ம்ம்ம், இந்த ஷர்ட்  ரொம்ப அழகா இருக்கு ... யாராவது திருஷ்டி போட்டுட்டா அதான் ..."

"அதுக்கு நீ ஷர்ட்ல இல்ல  வைக்கணும் எனக்கு ஏன் வெச்ச ..." என கண்களில் மட்டும் சிரித்து அவன் கேட்க,  உடனே அவன் காதை பிடித்து திருகி,

"நீங்க இந்த டிரஸ்ல ரொம்ப அழகா இருக்கீங்கன்னு  சொல்ல வந்தேன் .... ம்ஹூம்... என்ன தான் ஐஐடில படிச்சு  AVPயா வேலை  பார்த்தாலும் என் அளவுக்கு  அறிவு இல்லன்னு அடிக்கடி ப்ரூவ் பண்றீங்க..."
என்றவளின் மூக்கை பிடித்து அவன் ரசனையாய் திருகும் போது,

"உங்ககிட்ட ஒரு  விஷயம் சொல்லணும் ..." என்றாள் சற்று தீவிரமாக.

"என்ன மேடம் ..."  அவன் கொஞ்சலில் ஈடுபட்டுக் கொண்டிருக்க,

"நாம மதுரைக்கு போயிட்டு வந்ததும்,
  நான் வேலைக்கு அப்ளை பண்ணட்டுமா ....  வீட்ல இருந்தா ரொம்ப போர் அடிக்குது ..."

சாதாரண விஷயம் தான் ....
எதிர்பார்த்த விஷயமும் கூட ... இருந்தாலும் ஏனோ அந்த செய்தி அவனுள் ஒரு சிறு அதிர்வை ஏற்படுத்த, காரணத்தை தேட முயன்று  தோற்றவனின் முகம் லேசாக மாற,

"வேலைக்கு போய் தான் ஆகணுமா சிட்டு  ..." என்றான் யோசனையாய்.

"வீட்ல  பெருசா வேலை எதுவுமில்ல ....
வெட்டியா எவ்ளோ நேரம் தான் இருப்பேன் ... ஆன்சைட் எக்ஸ்பீரியன்ஸ் இருக்கு அப்ளை பண்ணா ஒரே வாரத்துல கிடைச்சிடும்..."

"நீ பைனான்சியல் இண்டிபெண்டன்ஸ்காக வேலைக்கு போகணும்னு நினைச்சா,  இந்தா இது என்னோட கார்டு .... இதுல ஒன் லேக்  இருக்கு ... உனக்கு என்ன வேணுமோ ஸ்பெண்ட் பண்ணிக்கோ...
இன்னும் ஏதாவது வேணும்னாலும்
உன்னோட ஜிபேக்கு மணி ட்ரான்ஸ்பர் பண்றேன் .... " என்றவனின் பேச்சை அவசரமாக இடைவெட்டி,

"அதுக்காக இல்ல ...   வீட்ல சும்மா இருந்தா அப்பத்தாவோட நினைப்பு அதிகமா வருது .... அதைவிட ஆபீஸ்க்கு போனா,  புது  புது விஷயங்களை தெரிஞ்சுக்கலாம் ..... படிச்ச படிப்பும், பார்த்த வேலையும்  வேஸ்ட் ஆகாது... அதனால தான் ..."

" அப்ப உன் ரெஸ்யூமை கொடு ....
   என் ஆஃபீஸ்லயே அப்ளை பண்றேன் ..."

"வேணாம் ....  நவ்க்ரி டாட் காம் மாதிரியான ஜாப் வெப்சைட் , இல்ல வாக்-கின் அட்டென்ட் பண்ணாலே  ஜாப் கிடைச்சிடும்.. எனக்கு நம்பிக்கை இருக்கு .... உங்க வழியா போனா ப்ராசஸ் ரொம்ப ஈசி ... ஆனா அதுல என்னோட திறமை என்ன இருக்கு ..."

என்றவளின்  தன்மானத்தை மெச்சியவன்,  மேலும் சில பல கொஞ்சல்களை முடித்துவிட்டே அலுவலகத்திற்கு புறப்பட்டான்.

மிகுந்த மகிழ்ச்சியோடு மடிக்கணினியை எடுத்து, தன் தற்குறிப்பை(Resume) தயார் செய்ய தொடங்கினாள்,  அதுவரை கண்டிராத அகல்யாவின் மற்றொரு  முகத்தை பார்க்கப் போகிறாள் என அறியாமல்.

கோயம்புத்தூரில்  பிரபல 5 நட்சத்திர விடுதியில் .....

"மது.... ப்ளீஸ் மது ... என் கூடவே இரு மது....  விட்டுட்டு போயிடாத மது ..."

கண்களைத் திறவாமல் உறக்கத்திலேயே புலம்பிக் கொண்டிருந்தவனின் கரம்
அவன் அருகில் ஆடையின்றி
வெறும் போர்வையை மட்டும் நெஞ்சுவரை மூடிக்கொண்டு அரை தூக்கத்தில் இருந்த
பெண்ணின் இடை மீது விழ,
அவளும் சிணுங்கிக்கொண்டே,
அவன் கையை பற்றி தன் இடையில்  அழுத்த,  விருட்டென்று எழுந்தமர்ந்தான் முந்தைய இரவு முழுவதும் அவளுடன் யுத்தம் புரிந்தவன்.

"ராணா .....க்யா ஆப் முஜே அவுர் அதிக்  ச்ஹாஹத்தி ஹோ ...( நான் இன்னும் உங்களுக்கு வேணுமா  ....)  அவள்
ஹிந்தியில் சிணுங்க , அவளை உற்றுப் பார்த்துவிட்டு

" ஜாவ் ( போ ...)"  என முடித்தவன்,  அவள் படுக்கையை விட்டிறங்க முற்படும் போது ஓங்கி அவள் கன்னத்தில் அறைந்தான்.

துடித்துப் போய் கன்னத்தைப் பற்றிக் கொண்டு,

"ஏ... ஏன் அடிச்சீங்க ரா... ராணா... நான் என்ன தப்பு பண்ணேன் ... எப்பவுமே இப்படி நடந்துக்க மாட்டீங்களே ..." என அரைகுறை தமிழில் அவள் கேள்வி எழுப்ப

" நான் ஒருத்தர் மேல கோவப்படணும், திட்டணும் , அவங்கள அடிக்கணும்னா எனக்கு அவங்க மேல கொஞ்சமாவது எமோஷனல் அட்டாச்மெண்ட் இருக்கணும் ....
நீ பணத்துக்காக படுக்க வந்தவ ....
உன் மேல எனக்கு எந்த எமோஷனல் அட்டாச்மென்ட்டும் கிடையாது ....
பல வருஷத்துக்கு அப்புறம் அருமையான கனவு கண்டேன் ....
கனவுல என் மது வந்தா....அவளை  கனவுல பார்த்து பேசிக்கிட்டே இருக்கும் போது , நீ குறுக்க பேசி என் கனவ கலைச்சிட்ட.... அந்த கோவத்துல தான் உன்னை அடிச்சேன் ....  இதான் லாஸ்ட் வார்னிங் .... இனிமே நான் தூக்கத்துல மதுவை பத்தி பேசும் போது  நீ குறுக்க பேசின... அவ்ளோ தான் ...

பாட் மே ஜாவ்...( Get lost....) "
என அவன் கர்ஜிக்க,  இதுவரை கண்டிராத அவன் கோபத்தை கண்டு நடுங்கியபடி  அந்தப் பெண் கையில் கிடைத்த ஆடைகளை எடுத்து மாட்டிக்கொண்டு ஏறக்குறைய ஓடி மறைய , நேற்று இரவு அருந்திய மதுவும்
உடன் அவனுடைய 'மது'வும் சேர்ந்து
அவனை ஆட்டிப் படைக்க , தலையில் பின்னிப்பிணைந்திருக்கும் ஒவ்வொரு நரம்பிற்கும் மின்சாரம் விட்டு விட்டு பாய்வது  போல் சுளீர் சுளீரென்று விட்டு விட்டு வலிக்க,
கண்கள் இரண்டும் வெடித்து ரத்தம் அதன் வழியே  வெளியேறி விடுமோ,
என்று எண்ணும் அளவிற்கு , வலி,  உஷ்ணம் , எரிச்சலில் அவன் விழிகள்  துடிக்க  ,  தலையை ஒரு கரத்தால் அழுந்த பற்றிக் கொண்டு தட்டித் தடுமாறி தன் சிறிய பெட்டியில் இருந்து, மஞ்சள் நிற மாத்திரை ஒன்றை தேடி எடுத்து வாயில் போட்டு தண்ணீர் ஊற்றி  விழுங்கிவிட்டு அப்படியே படுக்கையில் சரிந்தான்.

ஒரு 20 நிமிடம் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தவனின் அலைபேசி சிணுங்க ,
கண் விழிக்க மனம் இல்லாமல்,
அருகில் இருந்த அலைபேசியை தேடி எடுத்து அனிச்சையாய் அனுமதித்து காதுக்கு கொடுத்தவனிடம் ,

" ராணா .... வீட்டுக்கு வர்ற ஐடியா இல்லையா ..." என்ற கேள்வியில் இருந்தே தன் உற்ற தோழன் திலக் பேசுகிறான் என புரிந்துகொண்டு,

"எதுக்கு வீட்டுக்கு வரணும் ..." என்றான் விட்டேற்றியாய்.

"உன் பையன் பர்த்டே டா ... மறந்துட்டயா ....  மான்சி உன்னை வலை வீசி தேடிக்கிட்டு இருக்கா ...
மொதல் ஃபோனே எனக்கு தான்  ... நீ எங்க இருக்கன்னு தெரியவே தெரியாதுன்னு சொல்லிட்டேன் .... கடுங்கோவத்துல இருக்கா ...."

"அவன் ஒன்னும் என் பையன் இல்லை .... அவன் யாருக்கு பொறந்தான்னு அந்த ********* தான் தெரியும் .... என்னமோ பேஷன் ஷோல ப்ராண்ட பூஸ்டப் பண்ணப் போறேன்னு  போனாளே, கண்டவனோடயும் ஊர் மேஞ்சிட்டு வீடு வந்து சேர்ந்துட்டாளா .... " என்று  பச்சையாய் பேசியவனிடத்தில்

"மான்சி மேல இருக்குற கோவத்துல உன் பையனை அசிங்கப்படுத்தாத  ராணா ... அவனை  பார்த்தாலே தெரியும் அவன் உனக்கு தான் பொறந்தான்னு .... ஒரு டீன் ஏஜ் பையனுக்கு அம்மா அப்பா மாதிரியா நீங்க ரெண்டு பேரும் நடந்துக்கிறீங்க .... கொஞ்சம் கூட பொறுப்பு  இல்லாம போட்டி போட்டுக்கிட்டு  நீயும் அவளும்  தறி கெட்டு அலையறது கொஞ்சம் கூட நல்லா இல்ல...

அவ தான் யோசிக்கலன்னாலும் நீயாவது உன்  பையனை பத்தி கொஞ்சம் யோசிக்கக் கூடாதா  .... மீடியாக்கு பயப்படற அளவுக்கு கூட நீங்க  ரெண்டு பேரும்  மனசாட்சிக்கு பயப்பட மாட்டேங்கிறீங்களே டா...."

"சரி அத விடு ....  மது என் கனவுல வந்தாடா ....." என ராணா முடித்தது தான் தாமதம்

"மாத்திரை சாப்பிட்டியா ..." என்றான் திலக் அவசரமாக.

சற்று நேரம் அங்கு அமைதி நிலவ,

"தலைவலி வந்துடுச்சி... மாத்திரை போட்டு  கொஞ்சம் நேரம் தூங்கி எழுந்தேன்... இப்ப  பரவாயில்ல...சரி அதை விடு .... நான் சொல்றதுக்கு பதில் சொல்லு .... காலையில மது என்னை தேடி வர்ற மாதிரி கனவு வந்தா என்னடா அர்த்தம் ..."

"அது வெறும் கனவுனு அர்த்தம் ... முட்டாள்தனமா இப்படி உளறிக்கிட்டு திரியாம  உன் பையனோட பர்த்டேக்கு வீடு வந்து சேர்ற வழியை பாரு...
போன வாரம் நீயும் மான்சியும் AXA டிவிக்கு கொடுத்த இன்டர்வியூ,  நாளைக்கு ரிலே ஆக போகுது .... அதோட லிங்க் உனக்கு ஷேர் பண்ணி இருக்கேன்... பாரு ...
மறுபடியும் சொல்றேன் ... மறக்காம உன் பையன் ஷிவான்ஷோட பர்த்டே பார்ட்டிக்கு வந்து சேரு   ..."
என மீண்டும் அறிவுறுத்திவிட்டு அழைப்பை துண்டித்தான் திலக்.

44 வயதாகும்  ராணா கிட்டத்தட்ட 800 பேர் பணிபுரியும் சிறிய  தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தின்  தலைமை நிர்வாகி ...

சிந்தி தாய்க்கும் , தமிழ் தந்தைக்கும்
பெங்களூரில் பிறந்தவன் ...

ஆறடிக்கு இரண்டு இன்ச்  குறைவான உயரம் .. சிவந்த நிறம்,  சற்று மெல்லிய உடல் வாகு.... வெகு லேசான தொப்பை .... முதுமையின் தொடக்கத்தை சுட்டிக்காட்ட
காதுகள் அருகே வெள்ளி முடிகள் ....
பத்து வார்த்தை பேச வேண்டிய இடத்தில்  இரண்டு வார்த்தைகள் மட்டுமே பேசுவான் ...
மற்றவை அவன் கண்கள் பேசும் ...
பேரழகன் என்றெல்லாம் சொல்ல முடியாது , பார்க்க அம்சமானவன் என்று சொன்னால் சரியாக இருக்கும்  ...

மான்சி,  அவன் மனைவி ...
அழகு கலை நிபுணர் ...
'மான்சி'ஸ் பியூட்டி லான்ஜ்...' என்ற பெயரில்
உலகத்தரம் வாய்ந்த அழகுக்கலை நிலையங்களை வெற்றிகரமாக நடத்தி வருகிறாள் .... இந்திய பெரு நகரங்களில் அவளது அழகு நிலையத்தின்  கிளைகள் பல உள்ளன ...

சினிமா துறையில் அவளை அறிந்தவர்கள் அதிகம் ....

நண்பன் அனுப்பிய இணைப்பைத் தட்டி துவக்கினான் ராணா....

அவனும் அவன் மனைவி மான்சியும் அருகருகே அமர்ந்து கொண்டு
கொஞ்சி குலாவி அந்த பிரபல தொலைக்காட்சிக்கு பேட்டி கொடுக்க,
தொகுப்பாளினியும் பெரும் புன்னகை பூத்தபடி

" வாவ் ...யூ போத் ஆர் மேட் ஃபார் ஈச் அதர் ...,
  மோஸ்ட் பியூட்டிஃபுல் கப்புள்...."
என்றெல்லாம் சிலாகிக்க, அதற்கு மேல் பார்க்க பிடிக்காமல் காணொளியை தொட்டு நிறுத்தியவன்,

"ச்ச , இதெல்லாம் ஒரு பொழப்பு ..."
என்றான் விரக்தியாய்.

ஸ்ரீ-ராமம் வருவார்கள் ....

 







































































Comments

  1. New track opening?🤩🤩🤩
    ❤️❤️❤️❤️❤️

    ReplyDelete
  2. இந்த கம்பெனியில் பிரியா சேர போறார் சரியா.

    ReplyDelete
  3. Wow superb sis... Bitter gourd comedy vera level. Anna thambi rendu perum pavakai ku thiruvilaiyadaley nadathitanga pola. New entry villain uh irukumo?

    ReplyDelete
  4. Supperrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrr

    ReplyDelete

Post a Comment