ஸ்ரீ-ராமம்-71

 அத்தியாயம் 71 


ஒரு பத்து அடி நகர்ந்திருப்பான் , மனையாளின் நினைவு வர , உடன் வந்து கொண்டிருந்த ஸ்ரீனியிடம் ,


"நீ போய்கிட்டே இரு ... ஒரு கால் பண்ணிட்டு வந்துடறேன் ..."  என நழுவி தன் கண்ணாட்டிக்கு அழைப்பு விடுத்தான்.


அலைபேசி ஒலியைக் கேட்டு ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தவள் லேசாக சுயம் உணர்ந்து,  கண்களைத் திறவாமல் ஒற்றை கரத்தால் படுக்கைக்கு அருகில் இருந்த முக்காலியில் அலைபேசியை தேடி எடுத்து கண்களை சுருக்கி ஒளிர் திரையை  பார்த்தாள்.


அதில் கணவனின் பெயர் தெரிந்ததும்,  துணிக்குற்று எழுந்தமர்ந்தவள், அந்த அறை முழுவதும் அவனை தேடி பார்வையை சுழல விட்டபடி , அழைப்பை அனுமதிக்க,


"ஹேய் ஸ்ரீ ..." என்றான் எதிர்முனையில்  குழைந்து .


"ரா...ராம்... நீங்க ... எங்க இருக்கீங்க ..." என்றாள் உறக்கம் விலகாத குரலில். 


"இன்னுமா தூங்கற.... இப்ப டைம் என்ன தெரியுமா ..."  


"ஐயோ டைம் 10:30யா.. இவ்ளோ நேரமாவா தூங்கி இருக்கேன்..  நீங்க ஆபீஸ் போய்ட்டீங்களா ..." என்றாள் சுவர் கடிகாரத்தை பார்த்து அதிர்ந்து.


"நான் ஆபீஸ்க்கு வந்து ஃபர்ஸ்ட் செஷன் ப்ரசன்டேஷன் முடிச்சு,  ஃபர்ஸ்ட் ஃபேஸ் எம்ஓயூம் சைன் வாங்கிட்டு டீ குடிக்க  ஃபுட் கோர்ட்க்கு போய்க்கிட்டு  இருக்கேன் ..."


அவன் பெருமையாக முழங்க, அதற்கான அவன் உழைப்பை அறிந்தவள் என்பதால் 


"வாவ்... கங்கிராஜுலேஷன்ஸ்..."  மனதார பாராட்டும் போது,  அவன் உயர் அதிகாரி  வெங்கட், அவன் முதுகை லேசாக தட்ட, திரும்பிப் பார்த்தவன்,


"அப்புறம் கூப்பிடறேன் ...." என அழைப்பை துண்டிக்க,


"கம்மான்... AVR...  கிளையன்ட் லீட்ஸ் ஆர் வெயிட்டிங் ஃபார் அஸ் .... லெட்ஸ் கோ ..."  என நட்பாகப் பேசியபடி வெளிநாட்டு நிறுவன வாடிக்கையாளரின் குழுவை நோக்கி  அவனை அழைத்துச் சென்றார்.


நேரமாகி விட்டதை எண்ணி துள்ளி எழ  மனம் பரபரத்தாலும்,   உடல் துளி கூட ஒத்துழைக்காததால், சற்று நேரம் இளைப்பாற நினைத்து புரண்டு படுத்தவளுக்கு , அப்போது தான் தன் நிலை புரிய ,  உடன் வெட்கமும் புன்னகையும் போட்டி போட, படுக்கையின் ஒரு மூலையில் இருந்த முந்தைய இரவின் இரவு உடையை பற்றி இழுத்தெடுத்து தலை வழியாக அமர்ந்த நிலையிலேயே அணிந்து கொண்டு,  எழுந்து நிற்க முயன்று தோற்றுப் போனாள்.


காய்ச்சல் கண்டது போல் உடலெங்கும்  ஒரு வித உஷ்ணம், ஆங்காங்கே  மெலிதாக 'வின் வின் ' என்று தெறிக்கும் வலி, கால்களில் லேசான நடுக்கம்,  இடுப்பில் தசைப்பிடிப்பு போல் இறுக்கம் , அளவுக்கு அதிகமான அசதி ஆகியவை வகைத்தொகை இல்லாமல் அவளை வாட்டி வதைக்க  ஓர்  அடி கூட எடுத்து வைக்க  தெம்பில்லாமல் படுக்கையிலேயே உடலை குறுக்கி படுத்துக் கொண்டாள்.


யாரிடமாவது கூறி ஆலோசனை கேட்க எண்ணியவளுக்கு தாயிடமே கூற கூட கூச்சம் தடுக்க,  கணவனை தேடியது மனது ....


அங்கு அலுவலகத்தில்  பேச்சும் கும்மாளமுமாய் விதவிதமான சிற்றுண்டிகளோடு  தேநீர் விருந்து ஜெகஜோதியாக களைக்கட்டி கொண்டிருக்க, அதற்கு சற்றும் பொருத்தம் இல்லா மனநிலையில் கடமைக்கே என்று நின்று கொண்டிருந்தான் வீரா.


ஏதோ ஒரு உறுத்தல் திடீரென்று நெருஞ்சி முள்ளாய் நெஞ்சை தைக்க, சற்று முன் திளைத்த பாராட்டு மழை எல்லாம், வடிந்து பாலைவன மனநிலைக்கு தள்ளப்பட்டான் நாயகன். 


திருமணம் முடிந்து இந்த சொற்ப தினங்களில் தன் மனைவியைப் பற்றி அறிந்து கொண்ட விஷயங்களில், அவளது அதிகாலையில் விழித்தெழும் வழக்கமே, அவனை வெகுவாகக் கவர்ந்த ஒன்றாகும்.


ஆனால் இன்றோ அவள் உறக்கம் விழிக்க,  வெகு நேரமானதோடு , குரலும் இயல்புக்கு மாறாக நலிந்து ஒலித்தது  ஏதோ சரி இல்லை என்று சொல்லாமல் சொல்ல,  சபை நாகரிகம் கருதி தனியே சென்று அலைபேசியில் அழைத்துப் பேச முடியாத நிலை என்பதால்,


"ஹொவ் ஆர் யு பீலிங் நவ் .... ஆர் யூ ஓகே ...." என்ற குறுஞ்செய்தியை கண நேரத்தில் தன்னவளுக்கு தட்டி விட்டான். 



சற்று நேரம் படுக்கையில் இளைப்பாறியது,  ஓரளவிற்கு தெம்பை தர , குளியலறைக்கு செல்ல எத்தனிக்கும் போது  அவளவன் அனுப்பிய செய்தி கிட்ட, அத்துணை பெரிய முக்கிய  கூட்டத்தில் இருக்கும் போதும் அவனுடைய  சிந்தனை தன்னை சுற்றியே  இருப்பதை எண்ணி மகிழ்ந்தவள், ஒளிவு மறைவு இல்லாமல் தன் உடல் உபாதையை  குறுஞ்செய்தியாக வடித்து பதில்  அனுப்பினாள்.


அதனை படித்ததும், 

ஓ காட் .... என்ன டா பண்ணி வச்சிருக்க நீ...  ஏதோ ஒரு பழமொழி சொல்லுவாங்களே அது  மாதிரி, கொஞ்சம் கூட பொறுமையே இல்லாம அக்ரசிவ்வா பிஹேவ் பண்ணியிருக்க போல...  பாவம் டா அவ ....  என உள்ளுக்குள் ஓங்காரமாக தன்னைத்தானே வசைப்பாடிக்கொண்டவனுக்கு அங்கு இருப்பே கொள்ளவில்லை ....


பாதியில் விட்டு விட்டும் கிளம்ப முடியாத நிலை ...


தற்போது இணையத்தில், மழலை முதல் மரணம் வரை அனைத்து விதமான தகவல்கள் கிடைத்தாலும், ஏட்டுச் சுரக்காய் கறிக்கு உதவாது என்பது போல் அனுபவம் என்ற ஒன்று அமையும் போது தானே அதில் இருக்கும் பிரச்சனையே புரிய வருகிறது என்பதை உணர்ந்தவன் உடனே யோசித்து, 


குளியலறை தொட்டியில் வெந்நீரை நிரப்பி  சற்று நேரம்  மூழ்கி இளைப்பாறுமாறு  பணித்ததோடு காலை உணவிற்குப் பிறகு தன் அலமாரியில் இருக்கும் மருந்து பெட்டியில் இருந்து வலி நிவாரணியை உட்கொள்ள சொல்லி அறிவுறுத்தியும்  தன்னவளுக்கு பதில் குறுஞ்செய்தி ஒன்றை அனுப்பி வைத்தான். 



செய்தி கிட்டியதும்  அவன் சொன்னது போல் சற்று நேரம் குளியல் அறையில் இளைப்பாறி விட்டு அவள் கீழ்த்தளத்திற்கு சென்ற போது மணி சரியாக 11:30ஐ தொட்டிருக்க, உணவு மேஜையில்  மதிய உணவிற்காக காய்கறிகளை நறுக்கிக் கொண்டிருந்த அகல்யா அவளைக் கண்டதும்,


"ஏம்மா உனக்கு உடம்பு ஏதாச்சும் சரி இல்லையா .... இவ்ளோ நேரம் நீ தூங்க மாட்டியே ... பாண்டியும் ஒன்னும் சொல்லாம காபி கூட குடிக்காம கால்ல சக்கரத்தை கட்டிக்கிட்டு ஆபீசுக்கு கிளம்பிட்டான் ... இவ்ளோ நேரமாயும்  நீ கீழ வராததால இப்ப தான் நான் மேல வரலாம்னு இருந்தேன்... என்னம்மா ஆச்சு ..." என்றவரின் கேள்வியில் அக்கறையும், வாஞ்சையும் மலிந்திருக்க,


" த....தலைவலி ...." என்றாள் தயக்கத்தோடு .


"சைனஸ் தலை வலியா ... முகமெல்லாம் சிவந்திருக்கு..." 


இயல்பாக கேட்டுக் கொண்டே, தோட்டத்தில் அறுத்தெடுத்த  புடலங்காயுடன்  பிரபா வர,


"ம்ம்ம்ம்..."  என்றாள் ஸ்ரீப்ரியா தலை குனிந்து கொண்டு .


"மதிய சாப்பாட்டுக்கு நேரம் ஆகும் ....     இப்ப முதல்ல  இட்லி சாப்பிடு ...    அப்புறம் ரெண்டு மணி நேரம் கழிச்சு சாப்பாடு சாப்படலாம் ..." 

என்றபடி அகல்யா தட்டில் 5 இட்லிகளை வைத்து கொடுக்க , என்றும் இல்லாத பசியில் அது தேவாமிர்தமாய் தொண்டையில் இறங்கின.


 உண்டு முடித்தவளிடம் அகல்யா ஓய்வெடுத்துக் கொள்ள அறிவுறுத்த,  விட்டால் போதும் என அறைக்கு வந்தவளுக்கு கண் விழிக்கும் போதிருந்த உபாதைகளில் 60 சதவீதம் குறைந்திருந்தன.


என்றாலும்  வலி நிவாரணியை உட்கொண்டு விட்டு சற்று நேரம் உறங்கி எழுந்தால், மிச்சம் மீதியிருக்கும் களைப்பும் வலியும் காணாமல் போய்விடும் என்றெண்ணி மாத்திரை உட் கொண்டவள்,  கணவனுக்கு தற்போதைய தன் உடல்நிலை குறித்த தகவல்களை குறுஞ்செய்தியாக அனுப்பிவிட்டு உறக்கத்தை தழுவினாள்.


செய்தியை பார்த்தவனுக்கு மனம் நிம்மதி அடைந்தாலும், ஏனோ அலுவலகத்தில் இருக்க பிடிக்கவில்லை. 


அவன்  இருந்து  செய்ய வேண்டிய வேலைகள் இருந்ததால், மதிய உணவிற்கு பிறகு கொக்குக்கு ஒன்றே மதி என்பது போல் ,அதிரடியாக செயல்பட்டு அனைத்து  வேலைகளையும்  முடித்தவனுக்கு ஏதோ ஒரு குற்ற உணர்வு நெஞ்சை பிசைந்து கொண்டே இருந்தது.


மாலை வரை, நேரத்தை நெட்டி தள்ளியவன்,  தேநீர் விருந்து தொடங்கியதும் , தன் மூத்த அதிகாரி வெங்கட்டை சந்தித்து ,


"வெங்கட்,  கிளைன்ட் டின்னருக்கு நான் இல்ல ...."


"வொய்....  திஸ் இஸ் யுவர் டே மேன் ... யூ ஹேவ் டன் வொண்டர்ஸ் ... பாப்பிங் ஷேம்பெய்ன் பண்ணி என்ஜாய் பண்ணாம , எங்க அவசரமா கிளம்பறீங்க AVR...."


"என் வைஃப்க்கு உடம்பு சரியில்ல டாக்டரை பார்க்க போகணும் ... அபிஷியல் ஒர்க் எல்லாம் முடிஞ்சிடுச்சி ... கிளையன்ட் டின்னரை  ஸ்ரீனி மேனேஜ் பண்ணிப்பான் ...  ஹேவ் டு கோ ..."


"ஓகே AVR, டேக் கேர் ஆஃப் ஹேர் ..."


வேறு வழி இல்லாமல் வெங்கட் விடை கொடுக்க, விட்டால் போதும் என்று தன் இயந்திரப் புரவியில்  பஞ்சாய் பறந்தவன் அடுத்த அரை மணி நேரத்தில் வீட்டை அடைந்ததும், வரவேற்ற தாயைப் பார்த்து,


" எங்க மா  அவ..." என்றான் பரபரப்பாக.


" யார கேக்கற ..."


" யாரை கேப்பேன்....  ஸ்ரீயை தான்...."


"அவளுக்கு சைனஸ் தலைவலி டா... காலைல 11:30 க்கு தான் கீழ வந்து டிபனே சாப்பிட்டா....  முகம் எல்லாம் வீங்கின மாதிரி செவந்திருந்துச்சு ...  ரெஸ்ட் எடுக்க சொன்னேன் .... அப்ப சாப்பிட்டு  போனவ தான் ... மதிய சாப்பாட்டுக்கு கூட வரல ... இப்ப தான் டீ குடிக்க வந்தா... குடிச்சிட்டு பிரபா ஊருக்கு போக கூட மாட ஒத்தாசை  பண்ணிக்கிட்டு இருக்கா ..." என வழக்கம் போல் அன்றைய முழு கதையையும் அகல்யா கூறி முடிக்க , 


இவ ஏன் அவங்க ரூமுக்கு போனா ... 

என  புலம்பிக்கொண்டே சத்யனின் அறைக்குள் நுழைந்தவனுக்கு, குழந்தைகளின் துணிகளை ஒரு பையில் இட்டு விரித்து வைத்திருந்த பயணப் பொதியில் அவனவள் வைத்துக் கொண்டிருக்கும் காட்சி  பட, வலக்கையில்  இருந்த கோட்டை( Coat) இடக்கைக்கு மாற்றி விட்டு,  வலக்கையால் கழுத்தில் இருந்த டையை தளரச் செய்து, பெருமூச்சொன்றை ஆழ்ந்து வெளியேற்றிவிட்டு,  அழுத்தமாக  அடி மேல் அடி வைத்து அவளை நெருங்க, அரவம் கேட்டு தலைத் தூக்கிப் பார்த்தவள்  கணவனைக் கண்டு ஆச்சரியத்தோடு கண்களை  விரிக்க,  அவள் முகத்திலிருந்து பார்வையை விளக்காமல் ரசித்துக்கொண்டே நெருங்கி,


"ஆர் யூ ஓகே நவ் ..." என்றான் வாஞ்சையாக.


உடனே அவள் முகம் சிவந்து தலை குனிந்துக்கொள்ள,


" ம்ச்... வெட்கப்படாத ஸ்ரீ ... பதில் சொல்லுடி ..." என்றான் மென் புன்னகையோடு  அவள்  கன்னம் தாங்கி.


" தள்ளி நில்லுங்க ராம் ... அக்கா பால்கனில குழந்தைக்கு சாதம் ஊட்டிக்கிட்டு இருக்காங்க ..."


" சரி வா நம்ப ரூமுக்கு போலாம் ..."


" இல்ல ... இன்னும் கொஞ்சம் பேக்கிங் வேலை இருக்கு ..."


" அதை அண்ணி பார்த்துப்பாங்க.... நாம டாக்டரை பார்க்க போலாம் ... கிளம்பு .."


"  வேணாம்.... இப்ப பரவாயில்ல ..." அவள் லேசான சங்கடத்தோடு மொழிந்து கொண்டிருக்கும் வேளையில்,  


" சைனஸ்க்கு ஆயுர்வேதிக் மெடிசன் நல்லது தம்பி ..." என கூறிக்கொண்டே குழந்தையோடு அறைக்குள் நுழைந்த பிரபா, தனக்குத் தெரிந்த ஒரு சில மருத்துவர்களை பரிந்துரைக்க, இருவரும் ஆமோதிப்பது  போல் தலை ஆட்டிவிட்டு  தங்கள் அறைக்கு வந்து சேர்ந்தனர்.


அறைக்குள் நுழைந்ததும் அவள் தோள் பற்றி நிறுத்தி,  முகத்தை பார்த்து  குனிந்து தன் இரு கரங்களால் தன் இரு காதுகளை பற்றியபடி,

" ஐ அம் சாரி ஸ்ரீ ..." என்றான் விழிகளில் வலி சுமந்து.


"அச்சோ....  இப்ப எதுக்கு சாரி ராம் ....  ஐ அம் கம்ப்ளீட்லீ ஆல்ரைட் நவ் ..." என்ற போது கூட அவள் முகம் குங்குமப்பூவாய் சிவந்து வெட்கத்தை காட்ட,  அப்படியே அவளை தன் மார்போடு புதைத்துக் கொண்டு ஓரிரு கணம் மோன நிலையில் இருந்தவன்,


" நான்  எந்த விதத்துலயும்  உன்னை  ஹர்ட் பண்ண கூடாதுன்னு நினைக்கிறேன் ... ப்ளீஸ் வா டாக்டருக்கு போலாம் .... எனக்கும் சில க்குவரிஸ்  இருக்கு .... யார்கிட்ட கேட்க முடியும்.... டாக்டர் கிட்ட தானே கேட்கணும் ....  கிளம்பு .." என்றான் அவளை அணைத்திருந்த கரங்களை விளக்காமல் .


"500 மில்லியன் ப்ராஜெக்ட் என்ன ஆச்சு ..." என்றாள் பேச்சை மாற்ற எண்ணி .


" கிடைச்சிடுச்சு .... " என்றான் பெரும் உற்சாகத்துடன். 


" குட்,  அதை என்ஜாய் பண்ண கிளைன்ட்  டின்னர்க்கு போயிருக்கலாம்ல... இப்ப எதுக்கு வந்தீங்க ..."


"ப்ராஜெக்ட் கிடைக்கலன்னாலும், ஏன் இந்த வேலையே போனாலும் கூட எனக்கு கவலை இல்லை .... ஏன்னா என் கிட்ட ஸ்கில் செட், ஹார்ட் வொர்க் இருக்கு .... அதனால அடுத்த வேலை ரொம்ப ஈஸியா  கிடைச்சிடும் ... அதைவிட  வேலையே தேடாம ஒரு  கம்பெனிய உருவாக்கக்கூடிய  அளவுக்கு கூட எனகிட்ட திறமை இருக்கு ...


ஆனா நீ என்னோட சோல் மேட் (Soul mate)... எத்தனை பேருக்கு அவங்களோட சோல் மேட் இவ்ளோ  ஈசியா கிடைச்சிருக்காங்க ... படிப்பு ,பணம் பதவி, அழகு,  திறமை, முயற்சினு எல்லாம் இருந்தும் சில பேருக்கு வாழ்க்கையில  அவங்க சோல்மேட்ட மீட் பண்ற சந்தர்ப்பம் அமையாமலே போயிடுது... அந்த விதத்துல  நான் ரொம்ப லக்கி...


மனசுல இருக்கிறத சொல்ல தெரியாம, எந்தப் பெண்ணையும் புடிக்காம கல்யாணமே வேணாம்னு சொல்லிக்கிட்டு  இருந்தேன் .... உன்னோட பயோடேட்டாவ என் அம்மா அனுப்பும் போது கூட, அத சரியா  பாக்காம பிடிக்கலன்னு சொன்னேன் ...


கல்யாணத்துல விருப்பம் இல்லன்னு சொல்லத்தான் உன் நம்பர் கேட்டு உன் அப்பா கிட்ட பேசினேன் ....அப்ப  ஏதோ ஒரு உணர்வு  நான்  தேடிகிட்டு இருக்கிற சோல் மேட்  நீ தான்னு  சொல்லுச்சு ...  அப்புறம் தான் உன்னை தேடி சிட்னி வந்தேன் ...  ரெஸ்ட் யூ நோ ....  


நீ என் வாழ்க்கைல வர்றதுக்காக நான் பெருசா எதுவும் பண்ணல ஆனா உன்னை என் வாழ்க்கைல  தக்க வச்சிக்கிறதுக்காக  எது வேணாலும் பண்ணுவேன் ... 

பொதுவா லக்  அது இஷ்டத்துக்கு வர்றதால தான் அத  அதிர்ஷ்டம்னு சொல்றாங்க ...  அதை எதைக் கொண்டும் வாங்க முடியாது அந்த மாதிரி தான் நீயும் ....  ஐ டோன்ட் வான்ட் டு லூஸ் யூ ...  அதுக்கு தான் ஓடி வந்தேன்.." என்றான் கண்களில் காதல் வழிய. 


" அதாவது , தவமின்றி கிடைத்த வரம்னு உருட்டறீங்க  ..."

குலுங்கி நகைத்தவன், 


" உருட்டெல்லாம் இல்ல... உண்மை தான் ... நீ சொல்ற மாதிரி தான் சொல்ல வந்தேன் ...  நான் அதிகம் சினிமா பாக்கறதில்ல .... புக்ஸ் படிக்கிறதில்லயா... உன்னை மாதிரி நச்சுனு ஒரு வரில சொல்ல தெரியல ..." என்றவனின் முகத்தில் தெரிந்த குழந்தைத்தனத்தில் மயங்கி அவன் மார்பில் முகம் புதைத்துக் கொண்டாள் மங்கை.


தன்னவளுக்கு எவ்வகையிலும் வலியை கொடுத்து விடக்கூடாது என்பதில் விடாப்பிடியாக  இருப்பவன் தான், எதிர்காலத்தில் அவளுக்கு வலியை உணர்த்தியே  தீர வேண்டும் என்ற   தருணத்திற்காக கங்கணம் கட்டிக் கொண்டு காத்திருக்கப் போகிறான் என அறியாமல், மார்பில் மாலையாய் விழுந்தவளை அழைத்துக் கொண்டு  மகிழ்ச்சியுடன் மருத்துவமனைக்கு பயணப்பட்டான்.


அவன் அலுவலகத்தில் இருந்து வீட்டிற்கு பயணப்படும் போதே, அந்தப் பகுதியின் தலைசிறந்த மருத்துவமனையின் மகப்பேறு மருத்துவரிடம் முன் அனுமதி வாங்கி இருந்ததால், சொற்ப நேரத்திலேயே மருத்துவரை அவர்களால் சந்திக்க முடிந்தது.


மருத்துவரை சந்திக்க வந்ததற்கான காரணத்தை  வீரா  சுருக்கமாக சொல்ல, உடனே மருத்துவர் ஸ்ரீப்ரியாவை தனி அறைக்கு அழைத்துச் சென்று  பரிசோதித்து விட்டு வந்து  சில அந்தரங்க கேள்விகளை  பொதுவாக  முன் வைத்தார்.


அவளோ பேச வெட்கப்பட, வேறு வழி இல்லாமல் வீராவை வெளியே இருக்குமாறு பணித்துவிட்டு, அவளிடம் வார்த்தைகளை பிடுங்கி பதில்களை தெரிந்து கொண்டதும், அவனையும் அழைத்து அவனது கேள்விகளையும்  கேட்டு தெரிந்து கொண்டு, ஸ்ரீப்ரியா எதிர்கொண்ட உடல் உபாதைகள்  40 சதவீத இந்திய பெண்கள் திருமணத்திற்கு பின்பான உறவில் எதிர்கொள்ளும் பிரச்சனை தான் ... பயப்படத் தேவையில்லை... எனத் தொடங்கி பொறுமையாக பாலியல் உறவு குறித்த சந்தேகங்களுக்கு  விளக்கம் கொடுத்தோடு இருவருக்கும் சில அறிவுரைகளை வழங்கிவிட்டு, ஸ்ரீப்ரியாவுக்கு சில மாத்திரைகளை பரிந்துரைத்து , அவற்றை சில மாதங்கள் தொடர்ந்து எடுத்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தி அனுப்பி வைத்தார். 


அங்கிருந்து காரை கிளப்பியவன்,  இரவு உணவு உண்ண மனையாளை உயர்தர நட்சத்திர விடுதிக்கு அழைத்துச் சென்றான்.


அவளுக்கு பெரிதாக உணவில் நாட்டம் இல்லை என்பதால், தனக்கு பிடித்த சைவ உணவுகளையே அவளுக்கும் சேர்த்து கொண்டு வருமாறு ஏற்பாடு செய்துவிட்டு, அன்று காலையில் அலுவலகத்தில் கலந்தாய்வின் போது நடந்தவைகளை  பகிர்ந்தவன் உடன்  ஸ்ரீனி அவனை கேலி பேசியதையும் சொல்ல,  மிகுந்த வெட்கத்தோடு வாய்விட்டு சிரித்தாள் ஸ்ரீப்ரியா.


"அம்மா ஃபோன் பண்ணாங்க ...   நீங்க கொடுத்த எல்லா டாகுமெண்ட்ஸையும் வச்சு அப்பா,   நம்ம மேரேஜ் ரிஜிஸ்ட்ரேஷனுக்கு  ஏற்பாடு செய்துட்டாராம் ....  அடுத்த வாரம் மதுரைக்கு வந்தா வேலை முடிஞ்சிடும்னு சொல்றாங்க ... மதுரைக்கு போலாமா ..." என்றாள் ஆர்வத்தோடு. 


"போலாமே ... இன்னும் ஒரு வாரத்துக்கு நான் கொஞ்சம் ப்ரீ தான் ..."


"கோபாலும்  ஊர்ல இருந்து வரானாம்...." என்றதும் சிரித்தவன்


"உங்க வீட்ல ஒவ்வொருத்தரும் ஒவ்வொரு மாதிரி இருக்கீங்க ... உன் அப்பா பேசவே மாட்டாரு... ஸ்ட்ரீட் ஆபிசர்.... உன் அம்மா ரொம்ப ரொம்ப பயந்த சுபாவம் .... உன் பாட்டி ரொம்ப யதார்த்தம் .... உன் தம்பிகிட்ட ரெண்டு வார்த்தை பேசினா போதும், உங்க குடும்பத்தோட ஹிஸ்டரியையே சொல்லிடுவான்... அப்படி ஒரு உளறுவாயன் ..நீ மட்டும் எப்படி டி,ரொம்ப பேலன்ஸ்டா இருக்க.." என்றான் குறும்போடு. 


அவள் முறைக்க முயன்று தோற்றுப் போய் சிரிக்க ,


" ஆமாம் சிட்டு ...  உங்க வீட்ல நீ கொஞ்சம் வித்தியாசம் தான் ..."


" அது என்ன சிட்டு ..." என ஆர்வத்தோடு அவள் கேட்க 


" சிட்டுக்குருவி மாறி துருதுருன்னு இருக்க இல்ல அதான் .... கல்யாணமான முதல் நாளே உனக்கு இந்த பேர வச்சுட்டேன் ...." என்றான் ஒற்றைக் கண் சிமிட்டி. 


பொதுவாக காதலர்களுக்கிடையே  நடக்கும் 'ஸ்வீட் நத்திங்ஸ்' பேச்சுக்களை அவர்கள் இப்போது தான் தொடங்கி இருக்க உணவகத்தில் ஆரம்பித்த பேச்சு, வீடு வந்து சேரும் வரை நீண்டு கொண்டே இருந்தன.


மணி இரவு பத்தரையை கடந்திருந்ததால்,  வீட்டின் வாசல் விளக்குகள் அணைக்கப்பட்டிருந்தன.

முன் தோட்டத்தில் புது வகையான அல்லி மலர்கள் பூத்துக் குலுங்க,  பௌர்ணமி வெளிச்சத்தில் அவைகள் பார்ப்பதற்கு மிகவும் அழகாக இருக்க, வீரா காரை போர்டிகோவில் நிறுத்தி விட்டு வருவதற்குள் , ஸ்ரீப்ரியா தன்னால் முடிந்தவரை , அந்தப் பூக்களைப் எம்பி பறிக்க முயன்று  கொண்டிருந்தாள்.


"ஸ்ரீ .... உனக்கு  அந்த பூ தானே வேணும் ...." என்றவன் அவள் இடை பற்றி அலேக்காக தூக்க ,


"ஐயோ ... இறக்கி விடுங்க .... யாராவது பார்க்க போறாங்க .." என்றாள் ஒரு பூவை துரிதமாக பறித்துக் கொண்டு .


இறங்கவிடாமல் தன் இரு கைகளிலும் குழந்தை போல் அவளை ஏந்திக் கொண்டவன்


" சிட்டு ... பௌர்ணமி நிலா வெளிச்சத்துல இப்படி  ரொமான்ஸ் பண்றது கூட நல்லா இருக்கு இல்ல ..." என அவள் நெற்றியோடு தன் நெற்றியை முட்டி கொஞ்ச ஆரம்பித்தான்.


" ப்ளீஸ் ராம் இறக்கி விடுங்க ..."  அவள் கெஞ்ச, 


"  கிஸ் பண்ணு இறக்கி விடறேன் ..."


" இங்க வேண்டாமே ... ப்ளீஸ் " 


"இங்க யாருமில்ல .. சீக்கிரம் கிஸ் பண்ணா சீக்கிரம் வீட்டுக்குள்ள போலாம் .... இல்லன்னா இங்கயே இப்படியே உன்னை கிஸ் பண்ணி ரொமான்ஸ் பண்ணிக்கிட்டு இருப்பேன்  ... பரவாயில்லையா ..." என்றான் விடாக்கண்டன் கொடா கண்டனாக. 


அதற்கு மேல் தாமதிக்காமல்,  அவன் கன்னத்தில்  அவள்  முத்தமிட, அவனோ அதனை உதட்டுக்கு இடமாற்றும் போது ,


" சித்தப்பா ..." என்று சத்யனின் குழந்தைகள் ஒரு சேர  பால்கனியில் இருந்து தலையை நீட்டி அழைக்க, விரட்டென்று மனையாளை கீழ் இறக்கியவன், அவளை அழைத்துக் கொண்டு துரிதமாக  கதவின் பாதுகாப்பு பூட்டமைப்பில் தன் கட்டை விரலை பதித்து கதவை திறந்து வீட்டிற்குள் நுழைந்தான்.


அப்போது அடுக்களையின் விளக்குகளை அணைத்துக் கொண்டிருந்த அகல்யா,  அவர்களைப் பார்த்ததும்,


"டாக்டர் என்ன சொன்னாங்க ...  மாத்திரை கொடுத்தாங்களா .... இப்ப தலைவலி எப்படி இருக்கு ..."


என தொடர் கேள்விகளால் துளைத்தெடுக்க , ஒரு வழியாக இருவரும் அதற்கு பதில் அளித்து முடிப்பதற்குள் போதும் போதும் என்றாகி விட, அப்போது உணவு மேஜையின் மீதிருந்த சிசிடிவி கேமராவின் அட்டைப்பெட்டியை பார்த்தவன்

"இது யாரோடது ...  ஏன் இங்க வந்தது ..." என்றான்  யோசனையாய்.


"அதுவா....  கொய்யாக்கா செடியிலிருந்து ஒரு கொய்யா விடாம யாரோ பறிச்சிக்கிட்டு போறாங்க... அது மாடா மனுஷனானு தெரிய மாட்டேங்குதுன்னு  சத்யன் கிட்ட சொல்லியிருந்தேன் ... அவன் சிங்கப்பூர் வீட்டுக்கு வேற சிசிடிவி  கேமரா வாங்கிட்டதால அங்க இருந்ததை கொண்டுகிட்டு வந்திருந்தான் போல ...  இன்னைக்கு சாயங்காலம் தான் வாசல்ல ஃபிக்ஸ் பண்ணான் ..." 


வீரா, ஸ்ரீப்ரியா இருவருக்கும் பகீரென்று இருக்க , 

"உன் கொய்யாக்கா செடில தீய வைக்க ... ஏம்மா இப்படி புது புது பிளான் போட்டு என் கழுத்தை அறுக்குற..."


"டேய் .... என் கொய்யாக்கா செடியை பத்தி மட்டும் பேசின, கெட்ட கோவம் வரும் .. பாத்துக்க  ... அது நல்ல நாட்டு கொய்யா செடி தெரியுமா  ... எங்க ஊர்ல இருந்து கஷ்டப்பட்டு கொண்டுட்டு வந்து  வளத்தி  வச்சிருக்கேன் ..." என அகல்யா நீள அகலமாக கொய்யா செடிக்கு விளக்கம் கொடுக்க,  கேட்டுக் கொண்டிருந்தவனின் மன அழுத்தம் ஏகத்துக்கும் எகுற ,

"சரி ... சிசிடிவி கேமரா எந்த டிவைசோட கனெக்ட்டாயிருக்கு.... " என்றான் அடுத்த கட்ட முயற்சியாக .


 "பிரபா அவ லேப்டாப்ல தான், இப்போதைக்கு ஏதோ கனெக்ஷன் கொடுத்து பார்த்துக்கிட்டு  இருந்தா..." 


" சுத்தம் ..."  என செய்வதறியாது சன்னமாக மொழிந்தான் வீரா. 


"ரெண்டு பேரும் ஹோட்டல்ல சாப்பிட்டு தானே வந்தீங்க ..." இயல்பாக அகல்யா கேள்வி எழுப்ப 


"ஆமா ..."  என்ற பதிலை ஒருசேர பெற்றதும்,


" நான் தூங்க போறேன் நீங்களும் தூங்குங்க ..."  என்றவர் விடை பெற்றதும்,


"அண்ணன் பசங்க பாத்துட்டாங்களேன்னு ஓடி வந்தா, இப்ப சோசியல் மீடியால இருந்து OTT பிளாட்பார்ம்  வரைக்கும் நம்ப ரொமான்ஸ் ஒளிபரப்பாயிடும் போல இருக்கே ..." என அவன் வார்த்தைகளை கடித்து துப்ப,  


"நான் அப்பவே சொன்னேன் நீங்க தான் கேட்கல ..."  

ஸ்ரீப்ரியா சொல்லி சிரிக்கவும், மாடியில் இருந்து மடிக்கணினியோடுசத்யன், பிரபா அவர்களைப் பார்த்து சிரித்துக் கொண்டே வரவும் சரியாக இருந்தது.


இப்போது இளையவர்கள் இருவரும் அசடு வழிய, 

"சும்மா சொல்ல கூடாது ... ரொமான்ஸ் எல்லாம் வேற லெவல்ல இருக்கு ..." என சத்யன் குறும்பாக தொடங்க,


"அண்ணே...  ப்ளீஸ் ... அதை எல்லாம் டெலிட் பண்ணிடு..."


" ஏன் டெலிட் பண்ணனும் .... இப்பெல்லாம் ப்ரீ வெட்டிங் ஷூட்னு இதை விட ரொமான்டிக்கான சீன்ஸ் எல்லாம் எடுத்து சோசியல் மீடியால அப்லோட் பண்றாங்க .... நீங்க என்ன தம்பி  இதைப்போய் டெலிட் பண்ண சொல்றீங்க ... நான் டெலிட் போறதில்ல ... உங்களுக்கு வேணும்னா  வீடியோவ  அனுப்பறேன் ..."  என குறும்பும் புன்னகையுமாய்  பிரபா முடித்தாள். 


அதற்கு மேல் விவாதிக்க மனம் இல்லாமல்,  அவர்களது பயணத்தைக் குறித்து  விசாரித்துவிட்டு இளையவர்கள் இருவரும் கூச்சத்தோடு விடை பெற,


" இருந்த ஒரு பர்சன்ட் சந்தேகமும் போயிடுச்சு சத்யா ....  மனசு ரொம்ப சந்தோஷமா இருக்கு ... நாளைக்கு நாம நிம்மதியா ஊருக்கு போலாம் ..." என்றாள்  பிரபா சந்தோஷமாக, ப்ரீத்தி அடுத்த அஸ்திரத்தை செலுத்த  தயாராகி விட்டாள் என அறியாமல் .



ஸ்ரீ-ராமம் வருவார்கள் ....

























 


   


    





















 





























Comments

  1. Wow superb akka very nice
    Intha Preethi enna panrathu than therila avanga akka kitta adi vankiyum thirunthathu pola

    ReplyDelete
  2. Awesome as always 💕❤️❤️❤️💖

    ReplyDelete
  3. ராம்சரணும் லட்சுமியும் வேண்டும்.

    ReplyDelete
  4. அருமையோ அருமை. கதை super uh poguthu sis. Again Preethi creating problem uh, OMG... Ava thirunthavey matala sis.

    ReplyDelete
  5. Supperrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrr

    ReplyDelete

Post a Comment