ஸ்ரீ-ராமம்-70

 அத்தியாயம் 70


அதிகாலையில் கண் விழிக்கும் போதே , அருகில் மனைவி இல்லாததைக் கண்டு,


இவ எப்ப தான் எழுந்துக்கிறா....   எவ்ளோ சீக்கிரம் எழுந்தாலும் , இவளை பார்க்க முடியலையே ... 

என மனதோடு பேசியவனுக்கு, சீரான நடை பயிற்சி(Jogging) மேற்கொள்ளும் எண்ணம்  வர உடன் அன்றும் மறுதினமும் செய்ய வேண்டிய மலையளவு அலுவலகப் பணிகள் மனக்கண் முன் வந்து போக,  களைப்பு கண்ணைக் கட்ட, எதையும் செய்ய மனம் இல்லாமல்,  கண்கள் மூடி இளைப்பாற தொடங்கினான். 

மட்டைப்பந்து  , கால்பந்து விளையாடும் பழக்கமே  அவனுக்குத் தேவையான உடற்பயிற்சியை கொடுத்து விடுவதால் பிரத்தியேகமாக உடற்பயிற்சிக்கென்று அவன்  நேரம் ஒதுக்குவதில்லை.


ஆனால் வாரத்திற்கு நான்கு நாட்கள், குறைந்தபட்சம் மூன்று கிலோ மீட்டராவது சீரான நடை பயிற்சி மேற்கொள்வதை மட்டும்  வழக்கமாக்கி கொண்டிருந்தான். 


அலுவலகப் பணிச்சுமை அதிகமாக இருக்கும் நாட்களில்  உடலுக்கும் மனதுக்கும் ஓய்வு தேவை என்பதால் அம்மாதிரி சமயங்களில், உறக்கத்திற்கு  முன்னுரிமை  கொடுத்து விடுவான். 


அவன் கண் விழிக்கும் பொழுது மணி எட்டை தொட்டிருக்க, 

"ச்சே...அதுக்குள்ளயும் மணி 8 ஆயிடுச்சா ... ஓ காட் ... AVR ... கெட் ரெடி சூன் .... நாளைக்கு கிளையன்ட் கான்ஃபரன்ஸ் 100% சக்சஸ்ஃபுல் ஆகணும்னா,  இன்னைக்கு ரிப்போர்ட் பிரிப்பரேஷன் பக்கவா இருக்கணும் .... வுடு ஜூட் ..." என  தனக்குத்தானே  ஊக்கம் கொடுத்துக்கொண்டு,  குளியலறைக்குள் புகுந்து கொண்டான்.


புத்துணர்வு பெற்று வெளியே வந்தவன், கருப்பு நிற பேண்ட், மெல்லிய  கருப்பு நிறக் கோடுகள் குறுக்கும் நெடுக்குமாக போடப்பட்ட மென்மையான பச்சை  நிற ஸ்லிம் ஃபிட் சட்டையை அணிய,  அது கனக்கச்சிதமாக பொருந்தி அவன் அகன்ற தோள்களை கம்பீரமாக எடுத்துக்காட்டின.


நிலை கண்ணாடி முன்பு தலை வார சீப்பு எடுக்கும் பொழுது,  மனைவியின் நினைவு வர,


"இவ என்ன தான் கிச்சன்ல  பண்ணிக்கிட்டு இருக்கா .... மேல வந்தா என்ன வாம்..." வாய் விட்டே புலம்பிக் கொண்டிருக்கும் போதே,


தங்கத்தாமரை மகளே வா அருகே ...

தத்தி தாவுது மனமே வா அழகே...

வெள்ளம் மன்மத வெள்ளம்... சிறு விரிசல் கண்டது உள்ளம் ...

இவையெல்லாம் பெண்ணே உன்னாலே ...


என்ற  திரை இசை பாடல் சாளரத்தின் வழியே அவன்  காதுகளில் அனிச்சையாய் விழவும், அவன் மனையாள் அறை கதவை திறந்து கொண்டு உள்ளே வரவும் சரியாக இருந்தது .


முதன் முறையாய் பௌர்ணமியை ரசிக்கும் மழலை போல்,  புடவை அணிந்து பேரியாழ் மீட்டி அவள் நடையிடும் ஜதியில் இமைக்க மறந்தான் .


பாக்கு நிறத்தில் ஆங்காங்கே சிறு சிறு தங்க நிற பூக்களோடு அகலமான இளஞ்சிவப்பு நிற ஜரிகை கொண்ட மங்கள் புரி பருத்தி புடவையில்  அவனையே பார்த்துக்கொண்டு அன்ன நடையில் வந்தவளை , விழி விளக்காமல் பார்த்தவனின் கண்களில் சுவாரசியம் கூட ,


"எனக்கு..... பொ...  பொடவ சுமாரா தான் கட்ட தெரியும் .... நல்லா இருக்கா ..." என்றாள் வெட்கத்தோடு நாணி கோணி.


மணப் பெண்ணிற்கு அழகு கலை நிபுணர்கள் மடிப்பு கலையாமல் கட்டி விடுவது போல் அவள் புடவையை உடுத்தி இருந்தாள், என்று சொன்னால் அது உலக மகா பொய்.


அவள் புடவையை அள்ளி சொருகவில்லை அதே சமயத்தில் அம்சமாகவும் கட்டவில்லை என்று சொன்னால் தான் சரியாக இருக்கும்.


ஆனால் அவனுக்கு அதுவே, பேரழகாக பட,  வெகுவாக நெருங்கி அவள் கன்னம் தாங்கி ,  விழிகளுக்குள் பார்த்து 


"நீ என்னை கட்டிக்கோ நான் உனக்கு  புடவைய சரியா கட்டி விடறேன் ..." என்றான் குறும்பும் காதலுமாய். 


அவர்களது முதல் இரவின் போது கூட  குறுகுறுவென பார்த்து வெட்கப்பட வைக்காமல் இயல்பாக நட்பு பாராட்டியவனின்,  திடீர் சரச பேச்சு , அவளை ஏகத்துக்கும் நாணம் கொள்ளச் செய்ய, கன்னங்கள் சிவக்க தலை குனிந்தவளின் இடைப்பற்றி தன்னோடு இறுக்கிக் கொண்டான்.


அழகு செய்பவைகள் அவளுக்கு தேவை இல்லை ...

ஆனால் அவைகளை  பற்றி எழுத நிச்சயம் அவள் தேவை ....


எங்கோ, என்றோ ,யாரோ கூறிய கவிகள் எல்லாம் அவன் நினைவுக்கு வர,  அடர்ந்த புது தாலியும்,  தங்கச் சங்கிலிமாய் மினுமினுத்தவளின் கழுத்தில் முதல் முத்தத்தை ஆழ்ந்து பதித்த ஆணவனுக்கு ஆக்சிடோசின் ஆறாக ஊற்றெடுக்க, பெண்ணுக்கு டோபமைன் மழையாய் பொழியத் தொடங்க,  மன்மதக் கலையின் அரிச்சுவடியில் மனதை தொலைக்கத் தொடங்கினர்.


கழுத்திலிருந்து கன்னத்திற்கு அடர்ந்த மீசையால் வருடியபடி அவன்  இதழ் ஒத்தடத்தில் முனைப்பாக இருக்கும் போது,


"பாண்டி .... டிபன் சாப்பிட வாப்பா ..." என்ற அகல்யாவின் குரல், கீழ் தளத்திலிருந்து கனத்து ஒலிக்க, வெடுக்கென்று  விலகி நின்றாள் நாயகி.


"அத்தை கூப்பிடறாங்க ...வாங்க போலாம் ..."  ஒருவித கூச்சத்தோடு, அவன் முகம் பாராமல் மொழிந்து விட்டு, அவள் விடை பெற முயலும் போது, முந்தானையை பற்றி இழுத்து மீண்டும் தன்னோடு காற்று புகாதவாறு அணைத்துக் கொண்டான்.


சாதாரணமாகவே ஆணவனின் மனம்  தப்பாட்டம் ஆடிக் கொண்டிருக்கும் நிலையில்  அவனது சீமாட்டியின் வெட்கம், கூச்சமெல்லாம் அவன் வேகத்தைக் கூட்ட,  நெஞ்சில் படர்ந்திருந்தவளின் முகம் பற்றி ஆழ்ந்து ரசித்தவன்,  அவள் இதழோடு தன் இதழை வன்மையாக பொருத்தினான்.


இன்றோடு இந்த கணத்தோடு உலகமே அழிந்து விடப் போவது போல் எண்ணிக்கொண்டு, முதல் முத்தத்தை இறுதி முத்தம் போல் இசை பாடிக் கொண்டிருந்தான்.


ஆயிரம் முத்தங்கள் அணிவகுத்து வந்தாலும் ,  முதல் முத்தத்தின் சத்தமும் சரசமும் கொடுக்கும் போதையின் அளவு,  உலகின் எந்த ஒரு ஆகச் சிறந்த போதை வஸ்துவாலும் கொடுக்க முடியாது என இருவரின் நாடி நரம்புகளும் நல்லிசை பாடி உணர்த்திட, கால நேரம், சூழ்நிலை மறந்து, முத்தத்தில் மூழ்கி முத்து எடுக்க விழையும் போது 


"பாண்டி ...  ஆபீஸ்க்கு சீக்கிரமே போவணும்னு சொல்லிட்டு டிபன் சாப்பிட கூட வராம அங்கன என்ன பண்ணிக்கிட்டு இருக்க .... வேலை பார்த்தது போதும் லேப்டாப்ப மூடிட்டு சீக்கிரம் வாப்பா ..."

என்ற அகல்யாவின் குரல் மீண்டும் இடி போல் இறங்க,  வெடுக்கென்று தன்னை விடுவித்துக் கொண்டு


"சீக்கிரம் கீழ வாங்க ..." என மொழிந்து விட்டு,  அவள் வெளியேற,


"இருக்கிற நாளெல்லாம் விட்டுட்டா...      இன்னிக்கு போய் புடவையை கட்டிட்டு வந்து டெம்ட் பண்றா ..." என புலம்பிக்கொண்டே, மடிக்கணினியை மூடி பையில் வைத்துக் கொண்டு வெளியேறினான்.


"ராணி அக்காவோட பேத்தி பெரியவளாயிட்டாளாம்... நானும் பிரியாவும் போய் பாத்துட்டு ,  வரலாம்னு  இருக்கோம் ..." 


காலை உணவு உண்டு கொண்டிருந்தவனிடம் அகல்யா கூறியதும் தான், அவன் மனையாட்டி  புடவை அணிந்ததற்கான காரணமே அவனுக்கு விளங்க , உணவு மேஜையில் அவனோடு அமர்ந்து உண்டு கொண்டிருந்தவளை  தலைநிமிர்த்தி பார்த்தான்.


அவள் பார்வையும் அவன் விழியோடு கதை பேச, 

"பாண்டி .... இன்னைக்கு ஆபீஸ்ல ஏதோ மீட்டிங்னு சொன்னையே .... வர லேட் ஆகுமா "  என அப்போது அகல்யா கேட்க,  


"சீக்கிரமே வர பார்க்கறம்மா.." என்றான்  மனையாளின் மீதிருந்த பார்வையை அகற்றாமல். 


நேற்றை விட இன்றைய நிலைமை கொடுமையாக இருக்க, அலுவலகம் சென்றே ஆக வேண்டும் என்ற காலத்தின் கட்டாயத்தால், தன்னவளை பார்த்து லேசாக தலையசைத்து விட்டு  வாகனத்தில் ஏறி அலுவலகத்திற்கு  விரைந்தான்.


அலுவலகத்திற்குள் நுழைந்தது தான் தாமதம்,  கண் சிமிட்ட கூட நேரமின்றி, மறுதினம் வெளிநாட்டு வாடிக்கையாளர் தலைமைகளோடு  நடைபெறவிருக்கும் உலகத் தரம் வாய்ந்த  கலந்தாய்வுக்காக தன் குழுவுடன் இணைந்து முன்னேற்பாட்டு பணியை மேற் கொண்டான்.


உறவினர் வீட்டிற்குச் சென்ற  அவன் மனையாளோ ஏதோ மந்திரித்து விட்டது போல், அவன் கொடுத்த ஈரத்தை இன்னமும் இதழ்களில் உணர்ந்து கொண்டிருந்ததோடு, அவனது மூச்சுக்காற்றையும் தன் நுரையீரலில் நிரப்பிக் கொண்டு நுகர்ந்து கொண்டிருந்தாள் ....


முத்தத்தை படித்திருக்கிறாள் பார்த்திருக்கிறாள் ..... இன்றல்லவா முதன் முறையாய் உணர்ந்திருக்கிறாள்....


உணர்ந்திருக்கிறாள் என்பதை விட உணர்த்திருக்கிறான் என்றால் சரியாக இருக்கும் ...


அவள் மீதான ஒட்டுமொத்த நேசத்தையும்,  ஒற்றை இதழ் முத்தத்திலேயே காட்டி,  சலனமில்லா அவள் மனதை அவஸ்தைக்கு உள்ளாக்கியவனின் நினைவிலேயே  இருந்ததால், உறவினர்களோடு அதிகம் ஒன்ற இயலாமல்  உபச்சார வார்த்தைகளை மட்டும்  உதிர்த்துவிட்டு   மதிய உணவிற்குப் பிறகு அகல்யாவோடு வீடு வந்து சேர்ந்தாள். 


வந்தவள் வழிமேல் விழி வைத்து தன் மன்னவனுக்காக காத்திருக்க மாலை தொடங்கிய பின்னரும் அவன் வீடு வந்து சேரவில்லை. 


அவனின் அன்றைய பணிச்சுமையை அறிந்திருந்ததால்  அழைத்து கேட்க மனம் இல்லாமல் அகல்யாவோடு இரவு உணவு தயாரிக்கும் பணியில் ஈடுபட்டாள்.


அப்போது வழக்கம் போல் ஏதோ  பழங்கதையை பகிர ஆரம்பித்த அகல்யா,  


"சத்யனுக்கு சளைச்சவன் இல்ல உன் புருஷன்..

ரெண்டு பேரும் சின்ன வயசுல செய்யாத சேட்ட இல்ல ....

ஏதாச்சும் விஷமம் செஞ்சு என் அண்ணன் கிட்ட மாட்டிக்கிடுவானுங்க .... என் அண்ணன் பெரிய கோவக்காரரு.... சத்யனை போட்டு அந்த  அடி அடிப்பாரு ... கெத்தா வாங்கினு அப்படியே நிப்பான் ... இனிமே செய்ய மாட்டேன்னு சொல்லுன்னு சொன்னாலும் சொல்லவே மாட்டான் ....

ஆனா பாண்டி இருக்கானே .... படு மூளைக்காரன்  ... பெரியவன் அடி வாங்குறதை பார்த்தே உஷாராகி சாரி மாமா, இனிமே சேட்டை எல்லாம்  செய்ய மாட்டேன்னு சொல்லி ஒரு அடி கூட வாங்காம தப்பிச்சிடுவான் .... திரும்ப அரை மணி நேரத்துல தன் வேலையை காட்ட ஆரம்பிச்சிடுவான் .... " 


என்றதை கேட்டு ஸ்ரீப்ரியா கலகலவென சிரிக்க ,


"ஏன்னா உசுரு முக்கியம் பிகிலு ..."   என சொல்லிக்கொண்டே அவளவன் வீட்டிற்குள் நுழைய, தன்னவனின் குரல் கேட்டதும் சமையலறையில் இருந்து வெளியேறி ஆச்சரியம் பொங்கும்  விழிகளால்,

"வாங்க ராம் ..." என வரவேற்றவள் அவனிடமிருந்து உணவு பையைப் பெற்றுக் கொள்ள, 


"வா ப்பா..." என்றழைத்த அகல்யா,


"ஆனா சின்ன வயசுல இவங்க அப்பா கிட்ட பெரியவனை விட  இவன் தான் நிறைய அடி வாங்கியிருக்காம்மா ..." என்றார் விடாமல். 


"அம்மா ... தயவு செஞ்சு கொஞ்சம் வாய மூடறியா ..."


"ஏன்டா ... சின்ன வயசுல நடந்ததை  சொன்னா தப்பா ..."


"அம்மா உனக்கு புண்ணியமா போகும் ... அடுத்த பிறவிலயும் நீயே எனக்கு அம்மாவா பொறக்கணும்னு ஆண்டவன் கிட்ட வேண்டிக்கிறேன் ... ஆள விடும்மா ..."


"பேச விடு டா ..."


"உன்னோட ஸ்டார்டிங்கும் பினிஷிங்கும் நல்லாத்தான் இருக்கும் நடுவுல தான் என்னை நாரடிச்சிடுவ.... வேணாம்மா ... ப்ளீஸ்"


"போய் கை கால் முகம்   கழுவிட்டு வாடா சாப்பிடலாம் ..." என மகனிடம் கட்டளை பிறப்பித்து விட்டு, மருமகளை பார்த்து,


"நம்ம வீட்டு ஆளுங்க   இவனை பாண்டினு   கூப்பிடுவாங்க.... கூட படிச்சவங்க , பிரெண்ட்ஸ்ங்க வீரானு கூப்பிடுவாங்க, ஆபீஸ்ல AVRனு கூப்பிடுவாங்க .... ஆனா நீ மட்டும் தான் அழகா ராம்னு கூப்பிடற..." என்றார் இயல்பாக. 


அதை கேட்டு ப்ரியா மென் புன்னகை பூக்க,

"இவனோட முழு பேர் என்னனு தெரியுமா ... சின்ன வயசுல  பேரு சரியில்லனு பள்ளிக்கூடம் போக மாட்டேன்னு  அடம் பிடிச்சு அவங்க அப்பா கிட்ட அவ்ளோ அடி வாங்கி இருக்காம்மா ..." 


 தன் அறை நோக்கி செல்ல படியேறியவன் துணிக்குற்று திரும்பி வந்து 


"அம்மா ... இதையெல்லாம் ஏம்மா சொல்ற ... "      என்றான் அவசரமாக.


"எனக்கு பொழுது போகணுமில்ல.."


"உனக்கு  பொழுது போகறதுக்கு நான் தான் கிடைச்சேனா ..."என்றவனை கண்டு கொள்ளாமல் 

   

"இவங்கப்பா தமிழ் பற்றாளர்.... அதனால   பெரியவனுக்கு சத்யவர்மன் .... இவனுக்கு ..." என்றவரின் பேச்சை அதிவேகமாக  இடைமறித்து, 


"அம்மா ... உன் கால்ல  விழுறம்மா... ப்ளீஸ்மா வாய மூடும்மா ..." என மைந்தன் கெஞ்ச  சற்றும் சட்டை செய்யாமல், 

"சடையவர்மன் அதிவீரராம பாண்டியன்னு பேரு வச்சாரும்மா..." என முடித்தார் அவசரமாக.


இந்தப் பேர்ல அப்படி என்ன பிரச்சனை....  என்றெண்ணியபடி ஸ்ரீப்ரியா அமைதியாக இருவரையும் நோக்க,


"பள்ளிக்கூடத்துல பசங்க இவனை  சட சடன்னு கூப்பிட... அதிலிருந்து பள்ளிக்கூடமே போக மாட்டேன்னு படுத்தி எடுத்துட்டாம்மா ...


அப்புறம் இவங்கப்பா வெறும்   அதிவீரராம பாண்டியன்னு பேரை மாத்துனதுக்கு அப்புறம் தான் படிக்கப் போனான்..."


"என் பேரு வெறும் அதிவீரராம பாண்டியன் இல்ல அதிவீர ராம பாண்டியன் அவ்ளோ தான்.." என சிறார்கள் போல் அவன் திருத்த, அதனைக் கண்டு ரசித்தபடி ப்ரியா குலுங்கி  நகைத்தாள். 


அப்பொழுது சத்யனின் குடும்பம் காரில் வந்திறங்க,  பிரபா தன் இரண்டு குழந்தைகளை அழைத்துக் கொண்டு வேகமாக வீட்டிற்குள் நுழைந்தாள்.


வந்தவள் உணவு மேஜைக்கு அருகில் நின்று பேசிக் கொண்டிருந்த ஸ்ரீப்ரியா மற்றும் வீராவை ஒரு சேர நட்போடு  பார்த்து 


"நியாயமா பாத்தா உங்க ரெண்டு பேரையும் எங்க வீட்டுக்கு விருந்துக்கு கூப்பிட்டிருக்கணும் ... அம்மாவுக்கு ரொம்ப உடம்பு சரியில்ல வீட்டு நிலைமையும் சரியில்ல .... அதனால தான் கூப்பிட முடியல ...

நாளன்னிக்கு நாங்க ஊருக்கு கிளம்பறோம்.... அதனால இப்ப  உங்க ரெண்டு பேரையும் கடைக்கு கூட்டிட்டு போய் நல்லதா  டிரஸ் வாங்கி கொடுக்கலாம்னு வந்தோம்  ..."


"வேணாம் அண்ணி .... எதுக்கு இந்த ஃபார்மாலிட்டீஸ் எல்லாம் ... அத்தைக்கு உடம்பு தேறினதும், இன்னொரு தடவை நீங்க  ஊருக்கு வரும் போது நாங்க ரெண்டு பேரும்  உங்க வீட்டுக்கு விருந்துக்கு வரோம் ...."


"ஆமா அக்கா .... ஊருக்கு போகணும்னா எக்கச்சக்கமா பேக்கிங்  வேலை  இருக்கும் ... இந்த டைம்ல இந்த  பார்மாலிட்டீஸ் எல்லாம் வேணாமே .... இன்னொரு தடவை பாத்துக்கலாம் ..." என்றாள் ஸ்ரீப்ரியா கணவனின் வார்த்தைகளை மறுமொழிந்து.


அதனை ஏற்றுக் கொள்ளாமல் விடாப்பிடியாக சத்யன், பிரபா அவர்களை சமாதானப்படுத்து முயல,வீரா மறு தினம் நடக்கவிருக்கும் முக்கிய கலந்தாய்வை குறிப்பிட்டு  மறுக்க, ஒரு கட்டத்தில் பிரபா,


"ஒன்னு பண்ணு ப்ரியா , தம்பி நாளைய மீட்டிங்காக ப்ரிப்பேர் பண்ணட்டும் ... நீ எங்க கூட வந்த உங்க ரெண்டு பேருக்கும் டிரஸ் எடுத்துக்க ..."  என்ற மாற்று வழியை கண்டுபிடிக்க,   மறுக்க முடியாமல் ஸ்ரீப்ரியா வீராவின் முகத்தைப் பார்க்க,  அவன் விழிகள்  கண நேரத்தில் ஆமோதிக்க ,


"சரிங்க்கா  போலாம் ..." என்றாள்  மென்மையாக.


"அப்ப நீங்க மூணு பேரும் சீக்கிரம்  சாப்பிட்டு கிளம்புங்க .... கடையை அடைச்சிட போறாங்க.... " என அகல்யா சொல்லிக் கொண்டிருக்கும் போதே, வீராவின் அலை பேசி ஒலித்தது. 


ஓரிரு கணம்  அலைபேசியை காதில் வைத்து அமைதி  காத்தவன், 


"ஓகே ப்ரீத்தி,  நைன் ஓ க்ளாக் கால்க்கு  எல்லாருக்கும் இன்வைட் அனுப்பிடுங்க  ..."   என முடித்தவனிடம், துரிதமாக புத்துணர்வு பெற்று உணவு அருந்த வருமாறு அழைப்பு விடுத்தார் அகல்யா. 


மிகப்பெரிய துணிக்கடையில் விலை உயர்ந்த பட்டுப் புடவைகளை எடுத்துப் போடச் சொல்லி அங்குலம் அங்குலமாய் ஆராய்ந்து  பார்த்த பிரபா, ஸ்ரீப்ரியாவின் விருப்பங்களை கேட்டு, அவளுக்கு  பொருத்தமான  மிகவும் தரமான மயில் கழுத்து நிறத்தில் , இளஞ்சிவப்பு நிற அகலமான உயர்தர  ஜரிகை கொண்ட பட்டுப் புடவையை  தேர்வு செய்தாள்.


வீரா ஏறக்குறைய  சத்யனின் உயரம், உடல்வாகு கொண்டவன்  என்பதால் , சத்யனின் அளவை அடிப்படையாக வைத்து வீராவிற்கு அழகான ஷெர்வாணியை தேர்வு செய்து  வாங்கினர்.


பிறகு குழந்தைகளுக்கு தேவையானவைகள்  மற்றும் வீட்டிற்கு தேவையான சில சாதனங்களை வாங்கிக் கொண்டு  அவர்கள் வீடு வந்து சேரும்போது மணி பத்தரையை கடந்திருக்க, கையில் பையோடு அறைக்குள் நுழைந்தவளை ,கணினியில் தீவிர  கலந்தாய்வில்  ஈடுபட்டிருந்த வீரா, பார்வையால் தலையசைத்து வரவேற்றான்.


அவன் வேலை மும்மரத்தில்  இருப்பதை அறிந்து கொண்டவள், பேச்சு கொடுக்காமல் குளியல் அறைக்குச் சென்று புத்துணர்வு பெற்று இரவு உடைக்கு மாறி உறங்குவதற்காக கட்டிலில்  வந்தமர்ந்தாள் .


புத்தகம் படிக்க எண்ணியவளுக்கு அறையின் மெல்லிய இரவு விளக்கொளி தடை விதிக்க,  வழியற்று அலைபேசியில் சற்று நேரம் அவள் கவனம் செலுத்த, வீரா ஜூம்  மீட்டிங்கை  திருப்தியாக முடித்துவிட்டு,


"ஓகே கைய்ஸ்....   ப்ளீஸ் கீப் ஆல் த இம்பார்டன்ட் ரெக்கார்ட்ஸ் சேப்லி ஃபார் டுமாரோஸ் பிக் டே  ப்ரசன்ட்டேஷன்  ... தேங்க்ஸ் ஃபார் ஜாயினிங் ...."  என மடிக்கணினியை மூடி  வைத்தவன் கைகளை தலைக்கு மேல் உயர்த்தி நெட்டி சோம்பல் முறித்து விட்டு அருகில் இருந்த டைரியை எடுத்து  எதையோ யோசித்து பார்த்து எழுத தொடங்கினான். 


காலையில் விடாமல் முத்தமிட்டவன், தற்போது காத்திருக்கும் மனைவியை கண்டு கொள்ளாமல்,  மடிக்கணினியோடு மல்லு கட்டுவதும்,  ஏதோ குறிப்பெடுப்பதுமாக இருப்பதை பார்த்து பொருமி


"ராம் ...." என அழைத்தாள் மென்மையாக .


அவன் திரும்பவே இல்லை ... மீண்டும் "ராம்" என்று சற்று குரலை உயர்த்தி அழைத்துப் பார்த்தாள்...


அப்பொழுதும் அவன் திரும்புவதாக இல்லை ....


" AVR ..." என்று இன்னும் சற்று குரலை உயர்த்தி  அழைத்துப் பார்த்தாள்...


அதற்கும் பதில் இல்லை ...


"வீரா ..." என்றும் அழைத்துப் பார்த்தாள் ...


அவன் திரும்பவில்லை ...


அவன்  தான் மனக்கண்ணில் எண் கணிதத்தோடு சதுரங்கம் விளையாடி  கொண்டிருக்கிறானே ... அவளது அழைப்பு எப்படி  அவன் காதுகளை சென்றடையும் .....


"மிஸ்டர் அதிவீரராம பாண்டியன் ..." கோபத்தோடு குரலை உயர்த்தியும் அழைத்துவிட்டாள்.


அதற்கும் அவள் மன்னவன் மசியவில்லை.


" சடைய வர்மன் அதிவீரராம பாண்டியன்...." 


ம்ஹும்... அதற்கும் பதில் இல்லை ...


"சடை .... மிஸ்டர் சடை ..." என குரலை உயர்த்தி சிரிப்பினூடே அவள் அழைக்க,  ஏதோ பெரும் கனவில் இருந்து மீண்டவன் போல்,


"ஹேய்...  என்ன சொல்லிக் கூப்பிட்ட ..." என்றான் அவசரமாக. 


"சடை .... ஸ்கூல்ல உங்க ப்ரெண்ட்ஸ் அப்படித்தானே கூப்டாங்க... மிஸ்டர் சடை ..."


" வேணாம் அப்படி கூப்பிடாத ..." என்ற படி அவன் விருட்டென்று எழுந்து நிற்க 


"நான் எப்படி எல்லாமோ கூப்பிட்டு பார்த்தேன் நீங்க திரும்பவே இல்ல... சடைனு கூப்பிட்டதும் தான் திரும்பியே பாக்கறீங்க  .... அதனால இனிமே அப்படித்தான் கூப்பிடுவேன்.... சடை ... மிஸ்டர் சடை ..." என அவள் கொஞ்சி அழைக்க, 


"அடி வாங்க போற நீ..."   புன்னகைத்துக் கொண்டே அவளை நோக்கி அவன் வேக நடையிட, வேகமாக உருண்டு கட்டிலின் மறுபுறம் இறங்கி பெரிய சாளரத்தின் அருகில் அவள் ஓடி  ஒளிய, 700 சதுர அடி கொண்ட அறையில் , அதற்கு மேல்  செல்ல வழியில்லாமல் தவித்தவளை ஒரே தாவலில் நெருங்கினான் அவளவன் .

மாசி மாசம் ஆளான பொண்ணு... மாமன் எனக்கு தானே ....

நாளை எண்ணி நான் காத்திருந்தேன்.... மாமன் உனக்குத்தானே ...


அவர்களுக்காகவே அமைத்தது போல், எங்கோ மிட் நைட் மசாலாவில் , தொடக்க இசையில் இருந்தே பாடல் ஆரம்பமாகி சாளரத்தின் வழியே இனிய மாருதத்தோடு வீச , ஆழ்ந்த நிசப்தத்தில் அலராத மெல்லிசையில்,  அணைக்கட்டியிருந்த ஆணவனின் மனம் இசைக்கேற்ப  அலைபாய,  இரு பௌர்ணமிகளை கண்களில் தேக்கி அவள் நாணத்தோடு  நோக்க , பேராழி கண்களின் காந்த ஈர்ப்பு விசையில் ஈர்க்கப்பட்டு அவள் இதழ் நோக்கி நெருங்கினான்.


பந்தய குதிரையின் வேகத்தில் , இதயம் படபடக்க, கணவனின் மூச்சுக்காற்று சிலிர்ப்பை கொடுக்க, அடுத்த நிகழவிருக்கும் பேரின்பத்தை எதிர்பார்த்து கண்களை  இறுக மூடி கொண்டாள்.

அந்த மழலை செய்கையில்,  மெய் மறந்தவன், மென் புன்னகையோடு  கண்ணிமைக்காமல் ரசிக்க, இதழ் ஒத்தடத்தை எதிர்பார்த்து  காத்திருந்தவள் ஏமாற்றத்துடன் அரைக் கண்களால் விழித்துப் பார்க்க, குலுங்கி நகைத்தான் நாயகன் .


அவன் குறும்பில் கூச்சம் கூடிப் போய்  தன் கைகளை அவன் மார்பில் பதித்து  அவள் தள்ள முயலும் போது,  இடையில் கரம் பற்றி தன்னோடு இறுக்கிக் கொண்டு, அவள் எதிர்பார்த்த சூடான  முத்தத்தை அவள் இதழ் மடலில் வடிக்கலானான். 


ஆடை நழுவுதலை கூட , ரசித்து ருசித்து அழகாய் நிகழ்த்தி, அவனை அவளுள், அவளை அவனுள் இடமாற்றும் அற்புதக் கலையை அம்சமாக தொடங்கினான்...


விரல்களால் அவள் உடல் வீணையை மீட்டும் போது, பெண்மையின் ரீங்காரத்தோடு கொலுசும் வளையலும் பக்கவாத்தியம் வாசிக்க, அழகாய் இன்னிசை கச்சேரியை அரங்கேற்றம் செய்தான்...


இது நாள் வரை அவளுக்கே உரிமையாய் இருந்த அவள் உடலை, அவள் ஒத்துழைப்போடு தனக்கு உரிமை ஆக்கிக் கொண்டான்.....


சுகம் என்னும் அமுதத்தை அள்ள அள்ள குறையாமல் அனுபவித்தவர்கள் சாகாமலேயே சொர்க்கத்திற்கு சென்று வைகறை வரை சஞ்சரித்து விட்டு வந்தார்கள்..


மனையாளை பின்புறமாக அணைத்த படி,  மயிலிறகின் மென்மையோடிருந்த அவளது  வெற்று முதுகில் முகம் புதைத்து, மனம் லயித்து நித்திரையை தழுவியிருந்தவனுக்கு,  திடீரென்று ஆழ்மனதின் அறிவுறுத்தலால் உறக்கம் களைய, அனிச்சையாய் சுவர் கடிகாரத்தை பார்த்தவனுக்கு அது காலை மணி எட்டை காட்ட ,


"ஓ காட் ... இன்னைக்கு பார்த்து இவ்ளோ நேரமாவா தூங்குவேன் ..." என தனக்கு தானே பேசியபடி வாரிசு சுருட்டிக்கொண்டு துரிதமாக குளியல் அறைக்குள் பாய்ந்து, புத்துணர்வு பெற்று வந்தவன், வெளிநாட்டு நிறுவன வாடிக்கையாளர்களுக்கு முன்பாக வியாபார விளக்கவுரை ஆற்றவிருப்பதால்  கோட்,  டை சகிதமாக கம்பீரமாக  தயாரானான்.


அடர்ந்த கேசத்தை நிலை கண்ணாடி பார்த்து சீவும் போது, இயல்பை காட்டிலும் அவனது முகக் கவர்ச்சி கூடி இருப்பது போல் தோன்ற, முந்தைய இரவின் கூடலும் நினைவுக்கு வர, ஆழ்ந்துறங்கும் மனையாளின் போர்வையை சரி செய்தபடி


"இருக்கிற நாளெல்லாம் விட்டுட்டு, நேத்து தானா உனக்கு மூடு வரணும் .." என புன்னகையோடு மென்மையாய் மொழிந்தவன்,  அவள் நெற்றியில் முத்தமிட்டு விட்டு,


"வுடு ஜூட் ... இனிமே லேட் பண்ணேன்..  500 மில்லியன் அம்பேல் ..." என மனதோடு அலறிக்கொண்டே படி இறங்கினான் அவசரமாக. 


"பாண்டி ... ஆபீஸ்க்கு கிளம்பிட்டயா டிபன் எடுத்து வைக்கவா ..." என பரபரக்கும் மைந்தனை பார்த்து அகல்யா கேட்க ,


"இன்னைக்கு கிளைன்ட் விசிட் இருக்கும்மா... ஆபீஸ்ல சாப்டுக்கிறேன் ..."


"காபியாது குடிச்சிட்டு போப்பா ..."


"வேணாம்மா..." என்றவனின் குரலோடு காரை இயக்கம் சத்தமும் கேட்க,  மகனின் அவசரத்தை புரிந்து அமைதியானார் அகல்யா.


அவன் அலுவலகத்தை அடைந்தது தான் தாமதம்,   செயலாளர் ப்ரீத்தி,  ஸ்ரீனி , இன்னும் சில முக்கிய குழு ஊழியர்கள் அவனை சூழ்ந்து கொள்ள,  அவர்களிடம் அன்றைய கலந்தாய்வுக்கான ஏற்பாட்டினை பற்றி விசாரித்துக் கொண்டே , அவன் கான்ஃபரன்ஸ் அறையை அடையவும்,  அவனது தலைமை அதிகாரி வெங்கட்  , வெளிநாட்டு நிறுவன வாடிக்கையாளர்களோடு பேசியபடி  அங்கு வரவும் சரியாக இருந்தது.


மரியாதை நிமித்த  நலம் விசாரிப்புகளுக்கு பிறகு கலந்தாய்வு இனிதே தொடங்கியது.


ஏற்கனவே அனைத்து தரவுகளும் விளக்கப் படங்களும் தயார் நிலையில் இருந்ததோடு அது குறித்த தகவல்களையும் அவன் விரல் நுனியில் வைத்திருந்ததால், அழகான ஆங்கிலத்தில், அடை மழை போல்  வியாபார எண் கணிதங்களையும் விளக்கப் படங்களையும் துல்லியமாக  அவன் விளக்கி முடிக்க , அடுத்த  நிலையில் இருந்த ஸ்ரீனி கடைசி மிச்ச சொச்ச,உரையை தரமாக நிறைவு செய்தான்.



வீராவின்  தலைமைக்கு மட்டுமல்ல, வந்திருந்த வெளிநாட்டு நிறுவன வாடிக்கையாளர் தலைமைக்கும்,  நடந்து முடிந்த விளக்க உரை மிகுந்த திருப்தியை தர,  உடனே அவன் தரவுகளில்  குறிப்பிட்டிருந்த உச்சபட்ச தொகைக்கே முதல் கட்ட ஒப்பந்தம் கையெழுத்தானது.


அனைத்து சம்பிரதாயங்களும் நடந்து முடிந்த பின்னர் ,   குழுவை தனிமையில் சந்தித்த வீராவின் தலைமை அதிகாரி வெங்கட்,  அவனை வகைத்தொகை இல்லாமல் வானுயர புகழ்ந்து 


"AVR ... நீங்க இந்த கிளையன்ட்காகவும், ப்ராஜெக்ட்டுக்காகவும் நேத்து ராத்திரி முழுசும் தூங்காம கஷ்டப்பட்டு ஹார்டுவொர்க்  பண்ணி இருக்கீங்கன்னு உங்க கண்ணே சொல்லுது ....  நீங்க அவ்ளோ கஷ்டப்பட்டதால தான் இன்னைக்கு நமக்கு இந்த ப்ராஜெக்ட் நல்ல காஸ்டிங்ல கிடைச்சிருக்கு..." என அவர்  மனமார பாராட்ட  உடன் ஸ்ரீனியும் இணைந்து கொண்டு, அவனது கடின உழைப்பை மெச்ச, வீராவோ திருடனுக்கு தேள் கொட்டியது போல் உள்ளுக்குள்  நெளிந்தான் .


முந்தைய இரவின் சல்லாபம் மன கண் முன் வந்து போக , 

அன்னைக்கும் சரி, இன்னைக்கும் சரி என் சிச்சுவேஷன் தெரியாம நான்-சிங்கா தான் டா பேசறீங்க ...

என மனதோடு பேசியவன், மிகுந்த வெட்கத்தோடு தலையசைத்து அனைவரின் பாராட்டுகளையும் புன்னகையோடு ஏற்க,


"பொதுவா உன்னை பாராட்டினா ,    சின்னதா ஒரு சிரிப்பு சிரிப்ப...    இல்லன்னா இதெல்லாம் ஒரு மேட்டரே இல்லனு அசால்டா சொல்லுவ .... ஆனா இன்னைக்கு  இவ்ளோ வெக்கப்பட்டு சிரிக்கிறியே, என்ன மேட்டர் ..." என ஸ்ரீனி கிசுகிசுக்க ,


 "ஒன்னும் இல்லடா ... எப்பவும் போல தான் இருக்கேன் ..." என வெட்கியபடி மீண்டும் அவன் புன்னகைக்க 


"பார்ரா ... திரும்பவும் வெக்கப்பட்டுக்கிட்டே பதில் சொல்ற ... என்னடா ஆச்சு உனக்கு .."


"ம்ச்... நீ  இன்னைக்கு எங்கிட்ட அடி வாங்காம வீட்டுக்கு போகக்கூடாதுனு முடிவு பண்ணிட்ட போல  ..."  என கிசுகிசுப்பாக நாயகனும் மிரட்ட, அப்போது தேநீர் விருந்துக்காக   அழைப்பு வர, நிறுவனத்தின் பரந்து விரிந்த தோட்டத்தில்  பிரத்தியேகமாக அலங்கரிக்கப்பட்டிருந்த உணவு மன்றத்தை நோக்கி அனைவரும்  நடை போட்டனர்.


ஸ்ரீ-ராமம் வருவார்கள் ...



   
















































 

























 

















Comments

Post a Comment