ஸ்ரீ-ராமம்-69

 அத்தியாயம் 69 


"நான் அவர்  பெட் ரூமை எட்டி பாக்கல ... ஆனா தன்  பொண்டாட்டிய கூப்பிட்டுகிட்டு சினிமா, ஷாப்பிங்னு வெளிய போயிட்டு வந்தாரு .... நேத்து கூட கிரிக்கெட் அகாடமிக்கு ஸ்ரீப்ரியாவை சந்தோஷமா கூட்டிகிட்டு போனாரு......  அந்த பெண்ணையும் சும்மா சொல்லக்கூடாது .... எல்லார் கிட்டயும் நல்லபடியா பேசுது மரியாதையா பழகுது .... தானே இழுத்து போட்டுக்கிட்டு வீட்டு வேலை எல்லாம்  செய்யுது .... எல்லாத்தையும் விட பாண்டியன் மேல உயிரா இருக்குது ...

வழக்கம் போல என் மாமியார் வீட்ல  சந்தோஷத்துக்கு பஞ்சம் இல்ல ஒருத்தரை ஒருத்தர்  கலாய்ச்சிகிட்டு  ஜாலியா தான்  இருக்கோம் ... இந்த டீடைல் போதுமா... இல்ல இன்னும் வேற  ஏதாவது வேணுமா ..." 


பிரபாவின் வார்த்தைகள் ப்ரீத்தியை ஓங்கி அடித்தது போல் இருந்தது.


அதை விட சொன்ன செய்தி  கொதிக்கும் எண்ணெயை  அவள் தலையில் கொட்டியது போல் இருக்க , ஒரு கணம் எரிச்சல் தாங்காமல்  துடித்து விட்டாள்.


உள்ளுக்குள் ஆர்ப்பரிக்கும் கோபம் பொங்கியது,  தமக்கையின் மீதோ , வீராவின் மீதோ அல்ல .... ஸ்ரீப்ரியாவின் மீது ...


அவ்ளோ சொன்னேன்.... எவ்ளோ நெஞ்சு அழுத்தம் இருந்தா , சொன்ன விஷயத்தை இந்த காதுல வாங்கி அந்த காதுல விட்டுட்டு ,   யார்கிட்டயும் எதையும் கேட்டு பஞ்சாயத்து வைக்காம , பாண்டி அத்தானையும் கைக்குள்ள போட்டுக்கிட்டு சந்தோஷமா ஊர சுத்துவ...  உனக்கு இருக்குடி ... என வகைத்தொகை இல்லாமல்  கோபம் கொந்தளித்த படி  ஸ்ரீப்ரியாவை மனதோடு வசைப்பாடி தீர்த்தாள்.


தான் கொளுத்திப் போட்டு விட்டு வந்த செய்தி புஸ்வானம் ஆகியதை எண்ணி கொதித்துப் போனாள்.


தெரிந்து கொண்ட விஷயத்தின்  உண்மை தன்மை அறிய ஸ்ரீப்ரியா வீராவிடம் விவரம்  கேட்பாள் ...


என்ன தான் புது மனைவிக்கு விளக்கம் கொடுத்தாலும்,  உள்ளுக்குள் திருமணமான முதல் நாளே சந்தேகமா என்ற விரிசல் அவனுள்  விழுந்து விடும் ...

அதே போல் என்ன தான் சந்தேகத்தைக் கேட்டு நிவர்த்தி செய்து கொண்டாலும் நெருப்பில்லாமல் புகையுமா .... என்ற உறுத்தல் அவளுள்  இருந்து கொண்டே இருக்கும் ...

அதோடு ஸ்ரீப்ரியாவின் கோபக்கார   தந்தை விஷயத்தை அறிந்தால் பெரிய பஞ்சாயத்தை கூட்டுவார் ...


இரு குடும்பத்திற்கு இடையே கடும் வாக்குவாதம் நடக்கும் ...


பொன்னம்பலம், அகல்யா , அன்பு , வீரா , சத்யன் உட்பட அனைவரும் பிரபாவை திட்டி தீர்ப்பர் ....


இன்னும் ஒரு படி மேலே போய் சத்யன் பிரபா பிரிவு கூட நிகழலாம்...


இதற்கிடையில் நிச்சயம் தன்னையும்  கூப்பிட்டு விளக்கம் கேட்பார்கள் ....ஏற்கனவே தயார் செய்து வைத்திருந்த பொய்யில் இன்னும் கொஞ்சம் மசாலா தூவி  , மனம் போன போக்கில் வாய்க்கு வந்ததை அடித்து விடலாம் ....


வீரா இல்லை என மறுத்தாலும்  அதுதான் உண்மை என  ஸ்ரீப்ரியா முன்பு ஒற்றைக் காலில் நின்று கண்ணீர் சிந்தி நாடகத்தை அரங்கேற்றலாம்....


அதன் பின் முதல் கோணல் முற்றும் கோணல் என்பது போல் விரிசல் விழுந்தது விழுந்தது தான்,  என்றபடி தன் மகளை தன்னோடு  அழைத்துக் கொண்டு,  விவாகரத்துக்கும் விண்ணப்பித்து விடுவார்  ஸ்ரீப்ரியாவின்  தந்தை....


இவை அனைத்தும்  நடந்தேறியதும், என்னை உதாசீனப்படுத்திய சத்யன், அடித்து அசிங்கப்படுத்திய பிரபா,  என்னை வெறுக்கும்  பொன்னம்பலம் ஆகியோரை பழிவாங்கிய திருப்தி கிடைக்கும் ...


என்றெல்லாம் எண்ணி திட்டம் தீட்டி காய் நகர்த்தியவளுக்கு தமக்கையின் பதில் பெரிய ஏமாற்றத்தை கொடுக்க,  முகம் தொங்கிப்போய்,  மௌனத்தை தத்தெடுத்துக் கொண்டு யோசிக்கலானாள்.


அப்போது மனைவிக்கு மருந்து கொடுத்து விட்டு,  அவரது அறை கதவை லேசாக சாற்றிவிட்டு வந்த தன் தந்தையை பார்த்து பிரபா,


" அப்பா இவ படிச்சு கிழிச்சது போதும்  ... ஏகப்பட்ட அரியர்ஸ வச்சிக்கிட்டு ஊர சுத்திகிட்டு இருக்கா ... கூடிய சீக்கிரம் இவளுக்கு மாப்பிள்ள பார்த்து கல்யாணம் பண்ணி இந்த வீட்டை விட்டு அனுப்புற வழிய பாருங்க ..." என்றாள் அமைதியாக அமர்ந்திருந்த ப்ரீத்தியை காட்டி.


"இன்னும் மூணு மாசத்துல குரு பலன் வருதுன்னு ஜோசியர் சொல்லி இருக்காரு ... அடுத்த மாசம் ஒரு நல்ல நாள்ல இவளோட ஜாதகத்தை மேட்ரிமோனி சைட்ல போடலாம்னு இருக்கேன் ...  அப்படி போட்டுட்டா நிறைய வரன் வரும்.... எது பொருத்தமா இருக்குன்னு பார்த்து  சீக்கிரமே கல்யாணத்தை முடிச்சிடலாம்மா ..." என்றார்

வெகு இயல்பாக தன் இரு மகள்களுக்கு இடையே நடக்கும் ஆடுபுலி ஆட்டத்தை அறியாமல்.  


நடந்த அனைத்து சம்பாஷணைகளையும்  கேட்டுக் கொண்டே வந்த சத்யனுக்கு வழக்கம் போல் கோபம்  விண்ணை முட்டியது. 


இரவின் தனிமைக்காக காத்திருந்தான்.


படுக்கை அறைக்குள் நுழைந்தவள் "சத்யா " என அழைத்தது தான் தாமதம் , வெடிக்கென்று திரும்பி 


"ஓங்கி அறைஞ்சேன்னு வை ... அப்புறம் ஜென்மத்துக்கும் காது கேட்காது .... உன் மனசுல என்ன தாண்டி நெனச்சுக்கிட்டு இருக்க... உனக்கு அறிவு இருக்கா இல்லையா ..."  என எகிறியவனை பார்த்து ஒரு கணம் உறைந்து நின்றவள்,  உடனே குழந்தைகளின் படுக்கை அறை கதவை மூடிவிட்டு வந்து,


"என்ன ஆச்சு ... ஏன் கோவப்படறீங்க...  " என்றாள் மெய்யாகவே புரியாமல்.


"நீ, உன் தங்கச்சி, உன் அப்பா பேசின எல்லாத்தையும் கேட்டேன்  ... உன் தங்கச்சி கேட்டதை வச்சே,  அவ ஏதோ பாண்டியன் பொண்டாட்டி கிட்ட இல்லாததையும் பொல்லாததையும்  சொல்லிட்டு வந்து இருக்கான்னு உனக்கு புரியலையா ..." என்றான் ப்ரீத்தியின் குட்டிக் கலகம் ஊர்ஜிதமானதை அறிந்துகொண்டு. 


"புரியாமை என்ன .... அவ ஏதோ சொல்லிட்டு வந்திருக்கான்னு புரிஞ்சதால தான்,  பாண்டியன் அவர் பொண்டாட்டியோட சந்தோஷமா இருக்காருன்னு அவள வெறுப்பேத்துற மாதிரி பதில் சொன்னேன் ...."


"ஏண்டி லூசா நீ ...  எதுக்கு தேவையில்லாம அவளை ப்ரவோக் பண்ண.... இப்ப அடுத்து என்ன பிரச்சனை பண்ணலாம்னு  யோசிக்க ஆரம்பிச்சிருப்பா ... தேவையில்லாம பேசி குடும்பத்துல குழப்பத்தை உண்டு பண்றதே உன் வேலையா போச்சு ....  "


அவன் பேசுவதில் இருந்த நியாயத்தை புரிந்து கொண்டு அவள் அமைதி காக்க,


"இருந்து இருந்து இப்பதான் பாண்டியன் கல்யாணம் பண்ணியிருக்கான் .... அவனை, உன் தங்கச்சி  நிம்மதியா வாழ விடமாட்டா போல இருக்கே... என்னைக்காவது அவ கிட்ட பாண்டியன் ஒரு வார்த்தையாவது பேசியிருப்பானா ..... சம்பந்தமே இல்லாதவனோட வாழ்க்கையை கெடுக்கிறதுல அப்படி என்ன சந்தோஷம் அவளுக்கு ....


கல்யாணமான மொதல் நாளே, அவ பாண்டியன் பொண்டாட்டி கிட்ட அவனை பத்தி இல்லாததையும் பொல்லாததையும் சொல்லி இருக்கா ....  பாவம் அந்த பொண்ணுக்கு எவ்ளோ அதிர்ச்சியா இருந்திருக்கும்னு... கொஞ்சம்  யோசிச்சு பாரு ....

ஆனா இவ்ளோ நடந்தும்  அந்த பொண்ணு எதையும் பெருசு படுத்தாம பொறுமையா இருக்கறது ரொம்ப பெரிய விஷயம் .... 


அது இடத்துல வேற யாராவது இருந்திருந்தா  பாண்டியன் கிட்ட உன் தங்கச்சி சொன்னத சொல்லி  உண்மையா பொய்யான்னு  நேரடியா கேட்டிருப்பாங்க ... கேக்கிறத நான் தப்புனு சொல்லல ... கேட்கிறதுக்கு அந்த பொண்ணுக்கு  முழு உரிமை இருக்கு .... 

இருந்தும் அந்த பொண்ணு  அப்படி செய்யாம பொறுமையா இருக்கிறது தான்  பெரிய விஷயமா படுது ..." என்றவனின் பேச்சில் இடை புகுந்து 


"ஒரு வேளை விசாரிச்சிருந்தா, அவ்ளோ தான் பாண்டியனுக்கு என் மேலயும் எங்க வீட்டு ஆளுங்க மேலயும் இருந்த மரியாதையே போயிருக்கும் ...


உங்களுக்கும் அன்புவுக்கும் கோவம் சீக்கிரம் வரும் ... சீக்கிரமே போயிடும் ... ஆனா பாண்டியனுக்கு கோவம் அவ்ளோ சீக்கிரமா வராது ...  வந்துட்டா அவரை சமாதானப்படுத்துறது  ரொம்ப கஷ்டம்னு உங்க அம்மா சொல்லி கேட்டிருக்கேன் ... நல்ல வேளை  ஸ்ரீப்ரியா பாண்டியன் கிட்ட கேட்காதது நல்லதா போச்சு ..." என்றாள் பிரபா  பெருமூச்சு ஒன்றை வெளியேற்றி .


"நீ பாண்டியனை பத்தி மட்டும் பேசற... என் அம்மா , அன்புவ விட்டுட்டயே.... அவங்க ரெண்டு பேரும்  தேவைன்னா தூக்கி வச்சு பேசுவாங்க...  தேவையில்லன்னா தூக்கி எறிஞ்சு பேசுவாங்க... அவங்களுக்கு  விஷயம் போயிருந்தா உன்னோட,  உன் அம்மா, அப்பா, தங்கச்சினு எல்லாரையும் கூப்பிட்டு  வச்சு பெரிய பஞ்சாயத்து பண்ணி இருப்பாங்க  ....


உன் அம்மாவுக்கு ஏற்கனவே ரொம்ப உடம்புக்கு முடியல ... தேவையே இல்லாத இந்த பிரச்சனையால வயசான காலத்துல உங்க அப்பாவும் ரொம்ப கஷ்டப்பட்டு போயிருப்பாரு ....

இத்தனை நாளா  எங்க வீட்டுக்காக  நீ உழைச்ச உழைப்பெல்லாமும் வீணா போயிருக்கும் டி..." என்றான் ஆதங்கத்தில். 


"சரியா சொன்னீங்க ... நம்ம கல்யாணத்துல கூட நடக்காத பிரச்சனை எல்லாம் இப்ப நடந்திருக்கும் .... 

கைல படிப்பு இருக்கு ஹேண்ட் புல் ஆன்சைட்  எக்ஸ்பிரியன்ஸ் இருக்குனு எடுத்தோம் கவிழ்த்தோம்னு அவசர கதில பிரச்சனை பண்ணாம யார்கிட்டயும் எதையும் கேட்காம  பாண்டியனோட குணத்தை அப்சர்வ் பண்ணி  வந்த ரெண்டு நாள்லயே அவரை புரிஞ்சுகிட்டதோட  வீட்ல இருக்கிறவங்களயும் புரிஞ்சுகிட்டா பாருங்க ...  ஸ்ரீப்ரியா  உண்மையிலேயே கிரேட்ங்க ..."


"அதைவிட ரொம்ப முக்கியமான விஷயம் .... தன் கோவக்கார அப்பாகிட்ட அவ சொல்லாம இருந்தது தான் .... அவருக்கு விஷயம் தெரிஞ்சிருந்தா,  யார் சமாதானப்படுத்தினாலும் கேட்காம பொண்ண தன்னோட கூட்டிகிட்டு போயி டிவோர்ஸ்க்கு அப்ளை பண்ணிட்டு தான் மறுவேலை பார்த்திருப்பாரு..."


"ஒரு வேளை ஸ்ரீப்ரியா அவங்க அப்பா கிட்ட சொல்லாம  அம்மா கிட்ட மட்டும்  சொல்லி இருப்பாளோ ..." --- பிரபா. 


"சொல்லி இருக்கலாம் .... அவங்க ரொம்ப பொறுமைசாலிங்கிறதால, இவளை பொறுத்துப் போக சொல்லி  அட்வைஸ் கூட பண்ணி இருக்கலாம் ... அதனால கூட அந்த பொண்ணு பொறுமையா இருந்திருக்கலாம் ..."


"அவங்க அட்வைஸே பண்ணி இருந்தா கூட ஸ்ரீப்ரியா  அதை ஃபாலோ பண்ணனும்னு  ஒன்னும்  அவசியம் இல்லையே... என் தங்கச்சிய எடுத்துக்கோங்க... யார் அட்வைஸ் பண்ணாலும் புடிக்காது.... கேட்கிற மாதிரி தலைய தலைய ஆட்டிட்டு அவ என்ன செய்யணும்னு  நினைக்கிறாளோ அதை தான் செய்வா.... அந்த விஷயத்துல ஸ்ரீப்ரியா  பொறுமைசாலி மட்டுமில்ல புத்திசாலினும் சொல்லுவேன்.."---- பிரபா .


"இது எல்லாத்தையும் விட ரொம்ப முக்கியமான விஷயம் , ஒருத்தவங்கள பத்தி அடுத்தவங்க சர்டிபிகேட் கொடுக்குறத விட, நாமளா அவங்கள புரிஞ்சுக்கிறது தான் தரமான புரிதலுக்கு அடையாளம்னு  பொறுமையா இருந்து பாண்டியனை அந்த பொண்ணு புரிஞ்சுகிட்டது அவங்க வாழ்க்கைக்கு மட்டுமல்ல நம்ம எல்லாருக்குமே நல்லதா போச்சு... நீயோ நானோ பாண்டியனை பத்தி எடுத்து சொல்லி புரிய வைக்கிறத விட,  அந்த பொண்ணா அவனை புரிஞ்சுகிட்டதால , இனிமே அவங்களுக்குள்ள எந்த பிரச்சனையும் வராது ..."


என்று கோபம் தணிந்தது போல் முடித்தவன்,  திடீரென்று உக்கிரத்துடன் ,

"ஏண்டி உனக்கு கல்யாணம்னா விளையாட்டா போச்சா ... போயும் போயும் உன் தங்கச்சிக்கு கல்யாணம் பண்ணனும்னு  உன் அப்பா கிட்ட சொல்லிக்கிட்டு இருக்க...

மேரேஜ்க்கு தேவையான லவ், அஃபெக்ஷன் பேஷன்ஸ் , டிவோஷன், லாயலிட்டி , கண்சிஸ்டெண்சி,  டிட்டர்மினேஷன்னு  ஏதாவது ஒன்னு உன் தங்கச்சி கிட்ட இருக்கா ...


வர்ற பையன் மட்டும் ஹஸ்பண்ட் மெட்டீரியலா இருக்கணும்னு நினைக்கிறீங்க, பார்த்து பார்த்து எல்லாத்தையும் செய்யணும் பொறுமையா நடந்துக்கணும்னு  எதிர்பார்க்கறீங்க ... ஆனா உங்க வீட்டு பொண்ணு வைஃப்  மெட்டீரியலா இருக்க வேணாம் அட்லீஸ்ட் ஹியூமன் பீயிங்காவாது இருக்கணும்னு ஏன் உங்களுக்கெல்லாம் தோண மாட்டேங்குது ...


கொஞ்சம் கூட யோசிக்காம யாரோ ஒரு அப்பாவி தலையில உங்க வீட்டு தருதலைய கட்ட பாக்குறீங்களே அவன் வாழ்க்கை என்ன ஆகும்னு கொஞ்சமாச்சும் யோசிச்சீங்களா ....


இவ எல்லாம்  கல்யாணம் முடிஞ்ச ரெண்டாவது நாளே, வரதட்சணை கொடுமைனு புகுந்த வீட்டு ஆளுங்க மேல பொய் கேஸ கொடுத்து அவங்க குடும்பத்தையே சந்தி சிரிக்க வச்சிடுவா .....


நீங்க தப்பிக்கணுங்கிறதுக்காக உன் தங்கச்சி மாதிரியான பொறம்போக்குக்கு  கல்யாணம் கட்டி வைக்கிறதால தான்.... நாட்டுல கண்ட மேனிக்கு டிவோர்ஸ் கேஸ் அதிகமாகுது ...


உன் தங்கச்சி மாதிரியான ஆளுங்களுக்கு   கல்யாணம்னா என்ன, குழந்தைங்கன்னா என்ன, குடும்பம்னா என்ன, வாழ்க்கைன்னா என்னனு எல்லாத்தையும் பட்டு தெரிஞ்சுக்கிட்டு வந்து எனக்கு கல்யாணம் பண்ணி வையுங்கன்னு கதறி அழுதா தான்  கல்யாணம் பண்ணி வைக்கணும் .... அத விட்டுட்டு நீயும் உன் குடும்பமும் நிம்மதியா இருக்கணும்னு நினைச்சு அவளுக்கு கல்யாணம் பண்ணி வச்சீங்க,  கோர்ட் கேசுனு அலைய வேண்டியது தான் ....பாத்துக்க ..


அவ தானும் கல்யாணம் பண்ணிக்கிட்டு ஒழுக்கமா   வாழ மாட்டா... அடுத்தவங்களையும்  வாழ விட மாட்டா....


இனிமே பாண்டியன் ஸ்ரீப்ரியாவை பத்தி அவ கிட்ட பேசின... நடக்கிறதே வேற .. என் தம்பி வாழ்க்கை எனக்கு ரொம்ப முக்கியம் ... அந்த பொண்ணு ஸ்ரீப்ரியாவும்  ரொம்ப நல்ல பொண்ணா இருக்கு ... அவங்க ரெண்டு பேரும் நல்லா வாழனும்னு ஆசைப்படறேன் ... புரிஞ்சுதா .... இனிமே ஏதாவது இப்படி மடத்தனமாக உளறி வச்ச நான் மனுஷனாவே இருக்க மாட்டேன் ..." 


என ஸ்ரீப்ரியாவுக்கு அங்கு சத்யனும், பிரபாவும் அளவுக்கு அதிகமாக புகழாரம் சூட்டிக் கொண்டிருக்க,  சம்பந்தப்பட்டவளோ இங்கு அரை தூக்கத்தில் பதறி அடித்துக் கொண்டு கண்களில் கண்ணீர் பெருக எழுந்தமர்ந்தாள்.


நெஞ்சமெல்லாம் படபடக்க, விழிகளில் வழியும் கண்ணீரை துடைக்க  முயலும் போது தான் அருகில் உறங்கிக் கொண்டிருக்கும் கணவனை கண்டாள்.


அன்புவை  அவன் மருத்துவமனையில் கொண்டு சேர்த்ததும்,  அவளைப் பரிசோதித்த மருத்துவர், கர்ப்ப காலத்தில் கருப்பை விரிய தொடங்கும் பொழுது , இம்மாதிரியான தசை பிடிப்புகள் ஏற்படுவது சகஜம் ...பயப்படுவதற்கு ஒன்றுமில்லை ... ஒரு மணி நேரம் மருத்துவ கண்காணிப்பில் இருந்துவிட்டு, வீட்டிற்கு அழைத்துச் செல்லலாம் என அறிவுரை வழங்க, குடும்ப உறுப்பினர்கள் ஒரு மணி நேரம் மருத்துவமனையில் இருந்து, அன்புவின் உடல் நலத்தில் பிரச்சனை ஏதும் இல்லை என்று தெரிந்து கொண்ட பின்னரே  அனைவரும் வீடு வந்து சேர்ந்தனர். 


வலி நிவாரணையை முதுகில் தெளித்திருந்ததால்  மருத்துவமனைக்கு செல்லும் பொழுதே,  முதுகு வலி என்பது சதவீதம் குறைந்திருக்க,  நேரம் கடக்க கடக்க மீதமும் காணாமல் போனதால், மருத்துவமனையில் இருந்து திரும்பி  அறைக்கு வந்தவன் ஆழ்ந்த உறக்கத்தில் இருக்கும் மனையாளை பார்த்தபடி அருகில் படுக்க, அடுத்த பத்து நிமிடத்திற்கெல்லாம் ஆழ்ந்த நித்திரையில் மூழ்கிப் போனான். 


கணவன் உறங்க ஆரம்பித்து அரை மணி நேரம் தான் ஆகிறது என அறியாமல்,  

இவரு எப்ப வந்தாரு... என மனதோடு எண்ணியபடி  , அழுகையை கட்டுப்படுத்தவும்,  துடிதுடிக்கும் மனதை இளைப்பாற செய்யவும் படுக்கையை விட்டு எழுந்து சென்று தண்ணீர் பருகினாள்.

தண்ணீரை ஜாடியில் இருந்து குவளையில் ஊற்றும் சப்தத்தில் கண் விழித்தவன்,


" ஸ்ரீ.... என்ன ஆச்சு ..." என்றான் கண்களை கசக்கிய படி.


"அது வந்து .... " என தழுதழுத்த குரலில் ஆரம்பித்தவள்,


"அ... அப்பத்தா க..கனவுல வந்தாங்க ...   உன் கல்யாணத்துல உன் கூட  இல்லாம  போயிட்டேனேனு வெசனமா இருக்கு, எமராஜன் எனக்கு கருணை காட்டி இருக்க கூடாதா .... உன் கல்யாணம் முடிஞ்ச மத்தா நிமிஷம் என்னை கூட்டிகிட்டு போயிருக்கலாமேனு சொல்லி ரொம்ப வருத்தப்பட்டாங்க ... அவங்க ஆன்மா இன்னும்அமைதி அடைல  போல ..." விம்மிக்கொண்டே முடிக்க , அவளது ஆழ்மனது இன்னமும் அவள் பாட்டியை தேடுகிறது என்பதோடு செல்வராணியின் ஆன்மா, தன் ஆசை பேத்தியை சுற்றியே பயணிக்கிறது என்பதையும் புரிந்து கொண்டவன் , அவளை நெருங்கி


"பாட்டி இறந்து  இன்னும் ஒரு மாசம் கூட ஆகல  மாச திதிக்கு நாள் நெருங்கிடுச்சு இல்லையா ... அதான் அவங்க ஆன்மா உன்னோட பேசுது ....முதல் வருஷத்து திதி முடியற வரைக்கும் , இந்த மாதிரி அடிக்கடி கனவுல வந்துட்டு போவாங்க .... " என்றான் வாஞ்சையாய் அவள் தலைக்கோதி.


அவளை கையணைப்பில் வைத்துக் கொள்ளும் எண்ணம் பிறந்தாலும்,  காலையிலிருந்தே அவளது நெருக்கம் கொடுக்கும்  அதிகமான மோகமும், உடல் கிளர்ச்சியும் ,அவளின் தற்போதைய  மன உணர்வுகளுக்கு முற்றிலும் முரண்பாடானவை  என்பதால்,  பரீட்சித்துப் பார்க்க மனமில்லாமல், 


"எதை பத்தியும் யோசிக்காம,  நிம்மதியா தூங்கு ஸ்ரீ .... நாள் ஆக ஆக இந்த நினைப்பெல்லாம் தானா குறைஞ்சிடும்  ..." 

என்றவனின் ஆறுதலில் தேறியவள் மீண்டும் தன் இடத்தில் படுத்து நித்திரையை தழுவ முயன்று அதில் வெற்றியும் கண்டாள்.


அருகில் படுத்திருந்தவனுக்கோ , தாபமும் தவிப்பும் வகைத்தொகை இல்லாமல் கூடி போக,  உடலும் வஞ்சனை இன்றி விரகத்தின் உச்சத்தில் உஷ்ணத்தை வாரி வழங்க, அருகில் உறங்கும் மனையாளை ஆட்கொண்டே ஆக வேண்டும் என்ற பித்தம்  தலைக்கேற, எழுந்தமர்ந்தவன் குளிர்ந்த நீர்ப்பருகி உடலோடு மனதை சாந்தப்படுத்தியதோடு, பால்கனியில் சற்று நேரம் நடைபயிற்சி  மேற்கொண்ட பிறகே, இயல்பு நிலைக்குத் திரும்பி  நித்திரையைத் தழுவினான்.


காலையில் கண் விழிக்கும் பொழுது வழக்கம் போல் மனையாட்டி அருகில் இல்லாததை கண்டு,


இவ எப்ப எழுந்து குளிக்கிறான்னே தெரிய மாட்டேங்குதே  ... என முணுமுணுத்தவன் குளித்து முடித்து அலுவலக உடை அணிந்து நிலை கண்ணாடியை பார்த்து தலை சீவும் போது,


"கல்யாணத்துக்காக ஆறு நாள் லீவு எடுத்தும்,  பொண்டாட்டி வாசமே படாம காலம் கடத்தின ஒரே ஆள் நானா தான் இருப்பேன் .... இந்த விஷயம்  மட்டும் கடுகளவு கசிஞ்சா கூட கம்பெனில ஒரு பய மதிக்க மாட்டான்...

 AVRக்குனு ஒரு மரியாதை இருக்கு ... 

அதை எப்படியாவது  காப்பாத்துடா சூனா பானா ...

பயங்கரமா ஓட்டுவானுங்க ... இருந்தாலும் 

எல்லாம் தெரிஞ்ச ஏகாம்பரம் மாறி கெத்த மட்டும் விட்டுடாம மெயின்டெயின் பண்ணுடா ..."

என தனக்குத் தானே அறிவுரைக் கூறிக்கொண்டு கம்பீரமாக தயாராகி கீழ் தளத்திற்கு வர,  அவன் கண்ணாட்டி அகல்யாவுடன் பேசிய படி அவனுக்கான மதிய உணவை சிறிய 3 அடுக்கு டப்பாவில் போட்டு மூடிக்கொண்டிருந்தாள்.


உணவு மேஜையில் வந்தமர்ந்தவனுக்கு அகல்யா காலை உணவு பரிமாறினார்.


உண்டு  முடித்து அலுவலகம் கிளம்பும் போது,  அவன் மனைவி அவன் கரத்தில்  மதிய உணவுப்பையை கொடுக்க,


"ஸ்ரீ .... நீயா சமையல் பண்ண ..." என்றான் குறும்பும் புன்னகையுமாய்.


"இல்ல அத்தை தான் செஞ்சாங்க ... ஆனா கூடிய சீக்கிரம் கத்துப்பேன் ..." என ஆர்வத்தோடு அவள் கூற, "தட்ஸ் மை கேர்ள் " என அவள் கன்னத்தில் லேசாக தட்டி விட்டு விடை பெற்றவன், முதல் நாள் பள்ளிக்குச் செல்லும் சிறுவனின் மனநிலையில் இருந்தான்.


அவன் ரசித்துப் பார்க்கும் பணியே என்றாலும்,  முன் தினம் கிரிக்கெட் பயிற்சி நிறுவனத்தில்  மனையாளுடன் ஏற்பட்ட நெருக்கத்தை எண்ணி மனம் அலுவலகம் செல்ல முரண்டு பிடிக்க, அதற்குள் அவனது செயலாளர் ப்ரீத்தியிடமிருந்து அழைப்பு மேல் அழைப்பு வர வேறு வழி இல்லாமல், தன் காரை அலுவலகம் நோக்கி செலுத்தினான்.


அன்று மதிய உணவிற்கு பிறகு நடைபெறப் போகும்  கலந்தாய்வுக்கு தேவையான அனைத்து தரவுகளையும் திரட்டியவனுக்கு , முன் தினம் ஏற்பட்ட அளவுக்கதிகமான அலைச்சல் காரணமாக கண்கள் சொக்க, சுழல் நாற்காலியின் குஷனில் தலை வைத்து  பின்புறமாக சாய்த்துக்கொண்டு சிறு துயில் கொண்டான் .


அப்பொழுது  அறையின் கண்ணாடி கதவை திறந்து கொண்டு உள்ளே நுழைந்த ஸ்ரீனி,  அவன் நிலையைப் பார்த்து,


"என்னடா புது மாப்பிள்ள....   ரொம்ப சந்தோஷமா இருக்க போல .... ஆபீஸ்ல எல்லாம்  தூங்கற ... "  


ஸ்ரீினியை பின் தொடர்ந்து வந்த  , அவனது திட்ட விரைவில் பணிபுரியும் வேறொரு அலுவலக ஊழியனும்,


"கல்யாணம் ஆகி ஒரு வாரம் தானே ஆகுது .... பழக்கம் இல்லல்ல ... அதனால இப்படித்தான் இருக்கும் போக போக சரியாயிடும் ..." என வார,

"சும்மா தேவையில்லாம பேசாதீங்க ... மார்ஜின் ரிப்போர்ட்ஸ் எல்லாம் ரெடியா இருக்கு ... வாங்க மீட்டிங்கு போலாம் ..." என்றான் பேச்சை மாற்ற நினைத்து. 


"மார்ஜின் ரிப்போர்ட் ரெடியா இருந்தா என்ன...  மீட்டிங் மதியம் தானே ... மறந்துட்டயா AVR..." என கிண்டலோடு ஸ்ரீனி கேட்டுவிட்டு  சிரிக்க , 


"இப்ப எதுக்கு இங்க தேவையில்லாம வந்தீங்க, ரொம்ப பேசினீங்க ரேட்டிங்ல கைய வச்சிடுவேன்.... "  என சிரிப்பை அடக்கி கொண்டு நாயகன் மிரட்ட


"ஆபீஸ்ல ஏன் தூங்கறீங்கனு கேட்டா ஆபிஸர் கோச்சிக்கிறாரு... காலக்கொடுமைடா ..." என்றபடி அவர்கள் வெளியேற,


அடேய் உங்க கற்பனைல தீய வைக்க ... நேத்து ஃபுல்லும் தூங்காம ஹாஸ்பிடலுக்கு அலைஞ்சதோட, கட்டின பொண்டாட்டியை நெருங்க முடியலயேனு  நடுராத்திரில நடையா நடந்தது எனக்கு தான்டா தெரியும் .... 

சும்மா வாய்க்கு வந்ததை பேசி கடுப்ப கிளப்பாதீங்கடா ...


என தனக்குத்தானே பேசி சிரித்தவன்,  மதிய உணவிற்கு பிறகு கலந்தாய்வில் கலந்துகொண்டு சிறப்பாக உரையாற்றி முடித்தான்.


அவனது கணக்கீடுகளும் விளக்கப்படங்களும் தரமாக இருந்ததால்,  அந்தப் பெரும்  நிறுவனத்தின் புதிய  திட்ட வரைவும் அவர்களுக்கே கிட்ட  மறுநாள் நடைபெறவிருந்த கடைசி கலந்தாய்வு மேலும் ஒரு நாள் தள்ளிப்போனது.


புதிதாக பணிச்சுமை கூடியதால்,   வீடு திரும்ப சற்று தாமதமாகி போக, அன்புவும் அவள் கணவனும் அன்று இரவே மும்பைக்கு பயணப்படவிருப்பதால் துரிதமாக தன்னவளோடு இரவு உணவை முடித்தவன், அவர்களை அழைத்துக் கொண்டு மனைவியோடு விமான நிலையத்திற்கு பயணமானான்.  


சத்யனும் தன் மாமனாரின் இல்லத்தில் இருந்து நேரடியாக விமான நிலையத்திற்கு வந்தான்.


இந்தியாவில் இருந்தால் இரு தமையனும் சேர்ந்து வழி கூட்டி அனுப்பும் வழக்கத்தில்  திளைத்த அன்பு மிகுந்த மகிழ்ச்சியோடு  மும்பைக்கு  பயணப்பட ,  வீரா ஜோடி வீடு திரும்ப நள்ளிரவுக்கு மேலாகிப் போனது.


வரும் வழி முழுவதும் அவன் மனையாட்டி தூங்கி வழிய, அதனை புன்னகையோடு பார்த்து ரசித்தவன் வீடு வந்ததும் அவளை கையில் அள்ளிக்கொள்ள முயலும் போது,  அவளே உணர்வு பெற்று  விழித்தெழுந்து, அவன் ஆசையில் மண்ணள்ளி போட,


இவ்ளோ நேரம் தூங்கினவ இன்னும் கொஞ்ச நேரம் தூங்கினா என்னவாம்.....  என மனதோடு பேசிக்கொண்டே  தன்னவளோடு அறைக்கு வந்து சேர்ந்தான்.


படுத்ததும் வழக்கம் போல் அவள் உறங்கிவிட  , அன்றும் தனக்கு விடியா இரவாக அமைந்ததை எண்ணி நொந்து போனான் நாயகன்.


அன்னைக்கு நிகரான அப்பத்தாவை இழந்துவிட்டு  மனம் முழுவதும் ரணத்தோடு அணு அணுவாக அழுது கொண்டிருப்பவளிடம் கணவனுக்கான உரிமையும் திருமணத்திற்கான உறவையும் அடித்து பிடுங்குவது போல் ஏற்படுத்திக் கொள்வதில்  மனம் வராமல்  தான் தடுமாறிப் போனான்.


அதே சமயத்தில் திருமணமாகியும் பிரம்மச்சாரியாக காலம் கடத்துவது காலக்கொடுமை என்று புரிய , அவனவள் இருக்கும் சூழ்நிலையில்  உறவுக்கான  முதலடியை அவளிடம் எதிர்பார்ப்பது தவறு , ஆண் மகனான தான் தான் அதற்கான முன்னுரையை கூடிய விரைவில் அவள் சம்மதத்தோடு எழுத வேண்டும் என்ற முடிவுக்கு வந்தான்.


அவன் மனையாளே அவர்களுக்கிடையேயான முதல் கூடலுக்கு வித்திடப் போகிறாள் என்றும், அதுவும் மறு தினமே அம்சமாக நடந்தேறப் போகிறதென்றும் அறியாமல், வராத நித்திரையை இழுத்து பிடித்து ஒரு வழியாக  உறங்கிப் போனான்.



ஸ்ரீ-ராமம் வருவார்கள் ....


 




































































Comments

Post a Comment