ஸ்ரீ-ராமம்-68

 அத்தியாயம் 68 


"எங்கடி போற ..." என்ற சத்யனின் குரலில்,  பரபரப்பாக படியேறியவள் , ஒரு கணம் நின்று, கணவனின் கரம் பற்றி தங்களது படுக்கை அறைக்கு அழைத்துச் சென்று, பொன்னம்பலம் பேசியதையும் அதற்கேற்றார் போல் வீரா , ஸ்ரீப்ரியாவிற்கு இடையே இணக்கம் இல்லாததையும் சூழ்நிலையோடு விலக்க, கேட்டுக் கொண்டிருந்தவன்,


"அந்தப் பொண்ணோட பாட்டி இறந்து ஒரு மாசம் கூட ஆகல....  அந்த பொண்ணு துக்கத்துல இருக்கு .... அதனால தான் பாண்டியன் ஹனிமூனுக்கு கூட பிளான் பண்ணலன்னு சொன்னான்  ....  நம்மளோடது மாதிரி அவங்களோடது லவ் மேரேஜ் இல்ல டி.... அவங்க ரெண்டு பேத்தையும் பார்த்தா இயல்பா இருக்கா மாதிரி தான் தெரியுது.... நீயா போய்  எங்கப்பன் குதருக்குள்ள இல்லன்னு ப்ரீத்திய பத்தி சொல்லி இல்லாத பிரச்சனையை இழுத்து விட்டுடாதே, கல்யாணம் ஆகி ரெண்டு நாள் தானே ஆகுது ... நாம அடுத்த வாரம் ஊருக்கு போறோம்  .... அதுக்குள்ள எல்லாம் சரியாயிடும்னு தோணுது .... சரியாகலன்னா கூப்பிட்டு பேசு ... இப்போதைக்கு எதையும் உளறி வைக்காத..." என முடிக்க, கணவனின் பேச்சு சரி என்றே பட, மென்மையாக தலையசைத்து,


"சரி, இப்போதைக்கு  வெயிட் பண்றேன் .... பிரச்சனை சால்வ் ஆகலன்னா,  ஊருக்கு போறதுக்கு முன்னாடி  ப்ரீத்திய பத்தி ப்ரியா கிட்ட பேசிட்டு தான் போகணும் ..." என முடித்த பிரபா, புகுந்த வீட்டிற்கு சென்று விட்டு திரும்பி இருந்த அன்பு , அவளது கணவன் செந்தில்,  சத்யனின்  இரு குழந்தைகள்,  பொன்னம்பலம் ஆகியோருக்கு அகல்யா உணவு பரிமாற உடன் ப்ரியா உதவி செய்து கொண்டிருப்பதை பார்த்து 

"நீங்களும் சாப்பிட வாங்க ...." என கணவனிடம் அழைப்பு விடுத்து விட்டு,  அடுக்களைக்கு சென்றாள்.


"ம்மா ப்ரியா , நீயும் இவங்க கூட உட்கார்ந்து சாப்பிடு .... நானும் பிரபாவும் பாத்துக்குறோம் " என அகல்யா சொன்னதும், 


"அ.... அவர்  வந்ததும் , அ... அவரோட சாப்பிடறேனே ..." என திக்கித் திணறி ஒருவித சங்கோஜத்துடன் ஸ்ரீப்ரியா  பதிலளிக்க , அந்தக் கண நேரத்தில் சத்யனின் பார்வை பிரபாவிடம் அர்த்த புஷ்டியாய் படிய


"பாண்டியன், கிரிக்கெட் விளையாட போனா அங்க கிடைக்கிற பர்கர் பீட்சாவ கொறிச்சிட்டு  சாயங்காலம் வரைக்கும் விளையாண்டுட்டு தான் வீட்டுக்கு வருவான்... நீ அவனுக்காக காத்திருக்காம சாப்பிடும்மா..." என்றார் அகல்யா வாஞ்சையாக .


திருமணமான கடந்த இரண்டு தினங்களாக,  கணவனுடனேயே  உண்டு பழகியவளுக்கு, உணவு தொண்டைக் குழியில் இறங்க மறுக்க,  வேறு வழி இல்லாமல் வீட்டு உறுப்பினர்களுக்காக சபையில் கொறித்து முடித்தவள், அகல்யா,  பிரபா உண்பதற்கும், அடுக்களையை சுத்தம் செய்வதற்கும் உதவி செய்துவிட்டு மிகுந்த சோர்வோடு  தன் அறைக்கு வந்து சேர்ந்தாள்.


கலைந்து கிடந்த கணவனின் துணிமணிகளை அவன்  அலமாரியில் சரி செய்வது, தன் துணிகளை தன் அலமாரியில்  அடுக்கி வைப்பது,  கடிகாரத்தை பார்ப்பது என நேரத்தை நெட்டி தள்ளினாள். 


மணி ஐந்தை  தொட்டதும், விறு விறுவென புத்துணர்வு பெற்று அவள் அடுக்களைக்குச் சென்ற போது அகல்யா வீட்டு உறுப்பினர்களுக்கு தேநீர் தயார் செய்து பரிமாறிக் கொண்டிருந்தார். 


கூடத்தில் தொலைக்காட்சி  தன் வேலையை செவ்வனே செய்து கொண்டிருக்க, வீட்டு உறுப்பினர்கள் உணவு மேஜையில் அமர்ந்து கதைத்த படி தேநீர் அருந்திக் கொண்டிருந்தனர். 


"வேலை தெரியாம இருக்கலாம் தப்பில்ல... ஆனா கத்துக்காம தான் இருக்கக் கூடாது ... கண் பார்த்தா கை செய்யணோம் கண்ணு ...." என சிறுவயது முதலே செல்வராணி அறிவுறுத்தி வளர்த்ததால்,  வந்த இரு தினங்களிலேயே தன் புகுந்த வீட்டின் உணவு முறை, தினசரி பழக்கவழக்கத்தை உள்வாங்கிக் கொண்டு,  இரவு உணவிற்கு ஏற்றவாறு காய்கறிகளை  எடுத்து வைத்து ஸ்ரீப்ரியா நறுக்க  முற்படும் போது , அவளிடம் ஒரு குவளை தேநீரை அகல்யா கொடுக்க, அப்போது  வாயிலில் இருசக்கர வாகனம் வந்து நிற்கும் சப்தம் கேட்க,  ஆவலோடு பார்த்தவளை ஏமாற்றாமல் பார்த்தபடி  அவளவன் வந்து கொண்டிருந்தான்.


மிகுந்த களைப்போடு காணப்பட்டான்.


வெயிலில் விளையாடியதால் அவனது நிறத்திற்கு ஒரு பூச்சு நிறம் குறைந்தாற் போல் தோன்றினாலும்,  துறுதுறு கண்களும் , கலைந்த முன் தலை கேசமும் அவன் கவர்ச்சியை கூட்டி காட்ட, அவனையே பார்த்துக் கொண்டிருந்தவளின் கண்களை தேடி இயல்பாய் அவன் பார்வையும் கலக்க,  அப்போது  

"நீ காலா காலத்துல கல்யாணம்  கட்டி இருந்தா,  இந்நேரம் உன் புள்ள கிரிக்கெட் விளையாண்டுகினு இருக்கும் .... அதை பத்தின சிந்தனை இல்லாம  நீ கிரிக்கெட் விளையாண்டுகுனு இருக்க ...என்னத்த சொல்ல ..." என பொன்னம்பலம் புலம்ப, அதனைக் கண்டு கொள்ளாமல் சிரித்தபடி கடந்த மைந்தனை எதிர்கொண்ட அகல்யா,


" டீ குடிகிறயாப்பா ..." என்றார் பாசத்தோடு.


" சரிம்மா..." என்ற படி தன் உடைமைகளை மேஜையின் மேல  வைத்துக் கொண்டிருக்கும் போது, அவன்  காதோரத்தில் லேசாக வியர்வைத் துளி வழிய, அவனையே வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டிருந்த அவன் மனையாட்டியின்  கரம் அனிச்சையாய் உயர,  அதற்குள் அகல்யா தன் முந்தானையை கொண்டு மைந்தனின் முக வியர்வையை  துடைத்து விட்டு, அவன் கையில் தேநீரை திணித்தபடி ஸ்ரீப்ரியாவை பார்த்து 

"இவன் சின்ன வயசுல,  உன்னய மாறியே சிகப்பா இருந்தாம்மா... இந்த பாழாப்போன கிரிக்கெட்ட விளையாண்டு விளையாண்டு  இப்படி கருத்துட்டான்..." என  முடித்தது தான் தாமதம் அன்பு, சத்யன் இருவரும்  அந்த வீடே அதிரும் படி சிரிக்க , உடன் பிரபாவும் இணைந்து கொள்ள ,


"அண்ணி,  அம்மா சொன்னத நம்பாதீங்க .... அது பக்கா பொய் .... அண்ணன் பொறந்ததிலிருந்தே இதே கலர் தான் ....அவரு மட்டுமில்ல நாங்க மூணு பேருமே மாநிறம் தான் .... பாண்டி அண்ணனை அம்மாவுக்கு கொஞ்சம் ஜாஸ்தியா  புடிக்கும், அதான் வித விதமா உருட்டுறாங்க ..." என அன்பு  ஸ்ரீப்ரியாவை பார்த்து சிரிப்பினுடே சொல்ல ,


"நல்ல வேளை மொபைல், லேப்டாப்  பார்க்கிறதால தான் கருப்பாயிட்டானு சொல்லாம இருந்தாங்களே"

என தன் பங்கிற்கு வீரா வார, கலகலவென சிரித்துக்கொண்டே


"சரியா சொன்ன டா ... இன்னும் கொஞ்ச நாள் போனா அப்படி சொன்னாலும் சொல்லுவாங்க" என்றான் சத்யன் தம்பிக்கு ஆதரவாய் .



ப்ரியா பதில் பேசாமல்  புன்னகைத்தபடி தன்னவனை  பார்க்க, அவளையே பார்த்துக் கொண்டிருந்த பிரபா,


"ப்ரியா, அத்தைக்கு மொபைல்ன்னா சுத்தமா புடிக்காது... என் வீட்டுக்காரருக்கு சளி புடிச்சா கூட மொபைல் தான் காரணம்னு திட்டுவாங்க"  என கூற,  மீண்டும் அங்கொரு சிரிப்பலை விண்ணை முட்டியது. 


இரவு உணவிற்கு உதவி செய்து முடித்ததும்  பிரபாவின் குழந்தைகளோடு சற்று நேரம் விளையாடி விட்டு,  ஸ்ரீப்ரியா  தன் அறைக்கு சென்ற போது, ஆர்ம்கட் பனியன் , ட்ராக் பேண்ட் சகிதமாக வீரா  தன் மடிக்கணினியோடு  மல்லு கட்டிக் கொண்டிருந்தான்.


அவனோடு பேசும் ஆவலில்  நெருங்கும் போது, வெடுக்கென்று திரும்பி 


"ஹேய் வா , உன்கிட்ட கொஞ்சம் பேசணும்..." என்றான் அவளுக்கு ஒரு இருக்கையை கொடுத்து .


"நான் நாளன்னிக்கு ஆபீஸ் ஜாயின் பண்றேன்"  


" ஐயோ ...நாளன்னிக்கே வா ..."


"ஆமா, நம்ம கல்யாணத்துக்கு மொத்தமா ஆறு நாள் தான் லீவு எடுத்தேன் ..."


" ஓ...."


"சில ப்ரோபோசல்ஸ் ஃபைனலைஸ் பண்ணாம ஆஃப் ஹேண்டடா விட்டுட்டு வந்துட்டேன்.... இன்னைக்கு நைட்டு உன்னை எங்கேயாவது வெளிய  கூட்டிட்டு போலாம்னு நினைச்சேன் ... ஆனா நைன் ஓ க்ளாக்  ஒரு ஜூம் மீட்டிங்ல ஜாயின் பண்ண வேண்டிய சிச்சுவேஷன்..." என அவன் அலுத்துக் கொள்ள 


" லீவுல தானே இருக்கீங்க ..."


" லீவுல தான் இருக்கேன் ... ஆனா நான் அட்டென்ட் பண்ண வேண்டிய ப்ரொபோசல்ஸ் அது.... நாளன்னிக்கு ஜாயின் பண்ணதும் அதுக்காக  ரெண்டு இம்போர்ட்டண்ட் மீட்டிங் இருக்கு ....சோ... இன்னைக்கே ஒரு 2 டு 3 ஹவர்ஸ் ஜூம் மீட்டிங்ல  உக்காந்து கொட்டேஷன் ப்ரிப்பேர் பண்ணிட்டா, ஹெல்ப் ஃபுல்லா இருக்கும்  அதான் ..."


" ஓ...." என்றவள் ஸ்ருதி குறைய , அவள் முகத்தை ஆழ்ந்து ரசித்தவன் 



"ஒன்னு சொல்லட்டுமா ... உன்னை எங்க கூட்டிட்டு போறதுன்னே எனக்கு தெரியல எங்க கூப்பிட்டாலும் வர மாட்டேன்னு சொல்ற, உனக்கு புடிச்ச மாதிரி இடத்துக்கு கூட்டிகிட்டு போகணும்னா லைப்ரரிக்கு தான் கூட்டிட்டு போகணும்... நீ தான் பொறந்த உடனேயே படிக்க ஆரம்பிச்சிட்டயே ....அதனால அந்த இடம் தான் உனக்கு  சரியா இருக்கும்னு தோணுது  ...." என்று கண்களில் குறும்பு மின்ன கூற,  அதற்கு களுக்கென்று சிரித்தவள்,


"இன்னைக்கு கிரிக்கெட் விளையாட போகும் போது என்னை கூட்டிட்டு போய் இருக்கலாமில்ல ...."


"ஹேய்.... உனக்கு தான் கிரிக்கெட்டே பிடிக்காதுன்னு சொன்னியே ..."


"கிரிக்கெட் பிடிக்காது தான் .... அதுக்காக நீங்க விளையாடினா பாக்க மாட்டேன்னு சொன்னேனா ..." என்றவளின் விழிகளில் நாணமும் காதலும் போட்டி போட அதனை ரசித்த கொண்டே 


"வாவ் சூப்பர்ப் ... நாளைக்கு ரெண்டு பேரும் போலாம் சரியா ... " என்றான் விடலைச் சிறுவனின் உற்சாகத்தோடு.



அப்போது இரவு உணவிற்காக அகல்யாவிடம் இருந்து அழைப்பு வர,


"நீ போ .... ஒரு சின்ன வேலை இருக்கு  முடிச்சுட்டு வந்துடறேன் ..." 

என்றவனை விடை பெற்றுச் செல்லும் போது,  அப்படி ஒரு ஆழ்ந்த நம்பிக்கை தன்னவனிடத்தில் அவளுக்கு  தோன்றியிருந்தது .


எங்கு எப்போது எந்த புள்ளியில் அப்படி ஒரு நம்பிக்கை தோன்றியது எனக் கேட்டால்,  அவளால் நிச்சயம் பதிலளிக்க முடியாது.

காலையில் அகல்யா  பேசிய வெள்ளந்திப் பேச்சு அவளவனின் மீதான நம்பிக்கைக்கு  சிறு அச்சாரம்  என்றாலும்  தற்போது அவளுள் தோன்றி இருக்கும் மலை அளவு நம்பிக்கை அவள் கண்ணாளனே, ப்ரீத்தி கூறியது உண்மை என கூறினாலும்,  அதை பொய் என்று அடித்துச் சொல்லும் அளவிற்கு உறுதியான நிலைப்பாட்டை  விதைத்திருந்ததோடு  பிரபா, சத்யன், பொன்னம்பலம் ஆகியோரின் மீதான சந்தேகப் பார்வையையும் முற்றிலும் அகற்றி இருப்பதை  எண்ணி அதிசயத்து தான் போனாள்.



 இரவு உணவின் போது வீட்டு உறுப்பினர்களோடு கதைத்த படி   இருவரும் அருகருகே அமர்ந்து உண்டது அவளுள் நிறைவை தந்திருக்க,  அவன் முகத்திலும் மகிழ்ச்சியோடு  ஒரு பூரணத்துவம் தெரிய, அவளைப் போலவே அவனும் அன்று மதிய உணவின் போது அவளை நினைத்திருக்கிறான்  என்பதை அது சொல்லாமல் சொல்ல,  மனம் மகிழ்ந்து போனாள் மாது .


தன் அறைக்கு சென்று தன்னவனோடு இருக்க ஆசை என்றாலும் ,  அவனுக்கு அலுவலகப் பணி இருப்பதை அறிந்திருந்ததால்,  அடுக்களையை சுத்தம் செய்ய உதவி விட்டு  பிரபாவின் குழந்தைகளோடு தோட்டத்தில் விளையாடிக் கொண்டிருந்தவளிடம்,


"தம்பி என்ன பண்றாரு ..." என்றாள் பிரபா ப்ரியாவை ஆழம் பார்க்க. 


"நாளன்னிக்கு அவர் ஆபீஸ்ல ஜாயின் பண்றதால,  ஒரு இம்பார்டன்ட் ஜூம்  மீட்டிங்ல இருக்காரு ..."


பதில் சொல்லும் பொழுது அவள் முகத்தில் தெரிந்த கனிவை கண்ணுற்றவளுக்கு ஒருவித நிம்மதிப் பரவ,


"பொதுவா அன்பும், என் வீட்டுக்காரரும் ரொம்ப கோவப்படுவாங்க .... ஆனா தம்பி  மாமா மாதிரி... ரொம்ப சாந்தம் .... " என பேச்சை மெதுவாக தொடங்கினாள் பிரபா.


பிரபாவிற்கு  தனது  புகுந்த வீட்டு சொந்தங்களை பிடிக்கும். அவள் மணம் முடித்து வந்து இத்தனை ஆண்டுகளில் , அவளால் அந்த வீட்டில் சிறு பிரச்சனை கூட வந்ததில்லை ...  சரியாகச் சொன்னால் அவள் வர விட்டதில்லை ... ஆனால் தற்போது  தன் தங்கையால் ,  மைத்துனன் வாழ்க்கையில் சிக்கல் உருவாகும் அபாயத்தை எண்ணி,  அதனைத் தவிர்க்கும் பொருட்டே தொட்டும் தொடாமல் பட்டும் படாமல் குடும்ப உறுப்பினர்களை பற்றி இயல்பாக கூறுவது போல்  மேம்போக்காக ஸ்ரீப்ரியாவிடம் மொழிய ஆரம்பித்தாள்.


"ஆமா ராம் ரொம்ப சாஃப்ட் நேச்சர் தான் ..." என புன் சிரிப்போடு  ப்ரியா ஒத்து பேச ,


"எங்களோடது லவ் மேரேஜ்னு உனக்கு தெரியுமில்ல ... ஆனா கோவம் வந்தா என் வீட்டுக்காரர் எதை பத்தியும் யோசிக்க மாட்டாரு.. அடிச்சிடுவாரு..."


" ஐயோ  ..." 


"ஆனா அவரை சொல்லி தப்பில்ல... அந்த மாதிரி சூழ்நிலையில நான் தான் ஏதாவது  தப்பு பண்ணி இருப்பேன் ... அத பொறுமையா எடுத்து சொல்லி புரிய வைக்கிற அளவுக்கு அவருக்கு பொறுமை கிடையாது ... அதான் கை நீட்டிடுவாரு  ..."


"பரவாயில்லையே ... மாமா கோவப்பட்டா கூட அவரை விட்டுக் கொடுக்காம பேசறீங்களே ..."


" அது எப்படி விட்டுக் கொடுப்பேன்... நான் லவ் பண்ணி கல்யாணம் பண்ணியிருக்கேன்... அதோட இப்பவும் லவ் பண்ணிக்கிட்டு இருக்கேனில்ல .." என கெத்தாக ஒருவித புன்னகையோடு கூறிய பெரியவளின் கண்களில் லேசான காதலும் இருக்க, 


"நீங்க நிறைய ஆன்ட்டி ஹீரோ நாவல்ஸ் படிப்பீங்களா ... அதுல வர ஹீரோயின் மாதிரியே பேசுறீங்க ..."

குலுங்கி நகைத்தவள்,


" சட்டுனு கோவப்படுற விஷயத்துல மட்டும்   என் வீட்டுக்காரர் ஆன்ட்டி ஹீரோ ... ஆனா மத்தபடி ரொம்ப தங்கமான மனுஷன் ...ஆனா பாண்டியனுக்கு அந்த கோவம் கூட வராது ரொம்ப தங்கமான குணம் ... அவரு எனக்கு உறவு முறையில மச்சினனாலும் என் கூட பொறக்காத தம்பி தான் ... நீயும் அவரை மாறியே பொறுமையா இருக்க ...அதனால லவ் பண்ணி கல்யாணம் பண்ணிக்கிட்ட எங்கள விட, நீங்க தான் பெஸ்ட் ஜோடியா இருப்பீங்கன்னு தோணுது ...." என மறைமுகமாக வீராவின் குணத்தை எடுத்துக் கூறியதோடு , இருவரையும் மனம் ஒத்து வாழும் படி வாழ்த்தையும் பிரபா தெரிவிக்க, 


"தேங்க்ஸ் ..." என்றாள் ஸ்ரீப்ரியா பெருமையோடு.


"ரெண்டு பேரும்  வெளியே எங்கேயாச்சும் போயிட்டு வரலாமில்ல...."


" நாளைக்கு  கிரிக்கெட் அகாடமிக்கு கூட்டிட்டு போறேன்னு சொல்லி இருக்காரு ..."


" குட் ..." என்றவளிடமிருந்து ஸ்ரீப்ரியா  விடைபெற்று தன் அறைக்கு வந்த போது வீரா  மடிக்கணினி முன் அமர்ந்து அதி தீவிரமாக  கலந்தாய்வில்  ஈடுபட்டிருந்தான். 


மடிக்கணினி திரையில் வீராவிடம் பணி புரியும்  ஊழியர்கள் வெவ்வேறு நாடுகளில் இருந்து ஜூம் வழியாக   இணைந்து திட்ட வரைவுக்கான கணக்கீடுகளில் ஈடுபட்டிருப்பது தெரிய, அவனது கவனத்தை சிதைக்காத வகையில் மென்மையாக நடந்து சென்று வழக்கம் போல் படுக்கும் இடத்தில்  படுத்துக் கொண்டாள். 


 மில்லியன் , ட்ரில்லியன் டாலர்கள் வருவாய் குறித்து அவர்கள் அனாயாசமாக கலந்துரையாட ,  உடன் நாளை மறுநாள் நடக்கவிருக்கும் திட்ட வரைவுக்கான விளக்கக் காட்சி, அது குறித்த செய்முறை விளக்கமும் இடம் பெற , அவற்றையெல்லாம் கேட்டபடி கண்ணயர்ந்து போனாள் நாயகி .


இரவு மணி பதினொன்றை கடக்கும் போது,


"ஓகே கைஸ், தேங்க்ஸ் பார் ஜாயினிங் ... மீட் யூ டே ஆப்டர் டுமாரோ ..." என்று முடித்தவன், அப்போது தான் அவன் மனையாட்டி ஆழ்ந்த உறக்கத்தில் இருப்பதை பார்த்தான்.



"ஐயோ இவ எப்ப வந்தா... எப்ப தூங்கனா... எதையுமே நான் கவனிக்கலயே ... ஓ காட் ,இப்படியா இருப்பேன் ..."


உடனே 


"என்னை சொல்லி தப்பில்ல... கல்யாணம் ஆனதுக்கு அடையாளமா நடக்க வேண்டியது நடந்திருந்தா தானே பொண்டாட்டிய பத்தி நினைப்பு இருந்திருக்கும் .... இன்னும் சிங்கிளாவே இருக்கிற மாதிரி ஃபீல் ஆகுறதால , கல்யாணம், பொண்டாட்டி எல்லாத்தையும் மறந்துட்டு எப்பவும் போல வேலைல மூழ்கிட்டேன் போல... " என வாய்விட்டே முணுமுணுத்தபடி  போர்வையால் உடல் முழுவதையும் மூடி சுருக்கிக்கொண்டு,  முகத்தை மட்டும் காட்டியபடி உறங்கும் கண்ணாட்டியை காதலோடு பார்த்தபடி உறங்கிப் போனான். 



மறுநாள் வழக்கம் போல் அதிகாலையில் விழித்தெழுந்து துரிதமாக குளித்து முடித்து புத்துணர்வு பெற்று   நீலமும் , மென் சிவப்பும் கலந்த ஜார்ஜெட் துணியில் தயாரான  அனார்கலி சுடிதாரை அணிந்து,  அதற்குப் பொருத்தமாக அணிமணிகள் பூட்டிக்கொண்டு,  நெற்றியில் மென் சிவப்பு நிற பொட்டிட்டு, அதே நிறத்தில் உதட்டுச் சாயத்தை லேசாக தன் இதழ்களில் அவள்  பூசும் போது  அவளது நாயகன் உறக்கம் கலைந்தான்.


கடந்த இரு தினங்கள் போல்,  இன்றும் அவளது அலங்காரம் அவன் கண்களைக் கவர்ந்தாலும், ஏனோ அவள் புடவை அணியாதது ஏமாற்றமாகவே இருக்க,


எப்ப பாரு சுடிதார் ... ஒருவேளை இவளுக்கு  புடவை கட்டவே தெரியாதோ...  என மனதோடு பேசியவன்


"ஜஸ்ட்  10 மினிட்ஸ்ல ரெடி ஆயிடுவேன் ..." என புன்னகையோடு மொழிந்து விட்டு குளியல் அறைக்குள் புகுந்து கொண்டான்.


சொன்னது போலவே அவன் தயாராகி வர,  இருவரும் குடும்ப உறுப்பினர்களோடு  காலை உணவை கதைத்த படி முடித்துவிட்டு கிளம்பும் போது அவன் தன் கிரிக்கெட் மட்டையை கையில் எடுக்க , 


"அதை கொஞ்சம் குடுங்க ..." என ஆவலோடு முதன்முறையாக கிரிக்கெட் மட்டையை கையில் வாங்கியவள்,


"ஐயோ இவ்ளோ  வெயிட்டா..." என்றபடி தன் இரு கரங்களையும் சேர்த்து பிடிக்க, அவள் பிடித்திருந்த விதத்தை பார்த்து குலுங்கி நகைத்தவன்


"அது என்ன ...பிரியாணி அண்டாவ  தூக்கற மாறி,   பேட்டை பிடிச்சிருக்க..."  என்றான் குறும்பாக.


அவளும் புன்னகைத்தபடி,


"இதுவரைக்கும் நான் பேட்ட தொட்டதே கிடையாது இதான் ஃபர்ஸ்ட் டைம் .... " என்றாள் இயல்பாக.


அவர்களுக்கிடையேயான உரையாடல்களை சத்யன் ,பிரபா மனநிறைவோடு பார்க்க,


"இந்த பேட் 1.3kg ... பிளேயரோட ஹைட், பேலன்ஸ்ஸ பொருத்து பேட்டோட சைஸ் வெயிட் மாறுபடும் ..." 


கிரிக்கெட் மிகவும் பிடிக்கும் என்பதால் அது குறித்த  தகவல்களை நாயகியிடம் ஆர்வத்தோடு பகிர்ந்த படி அவன் தன் இரு சக்கர வாகனத்தை இயக்க,  அவன் பின்னே தத்தையாய்  தாவி அமர்ந்து கொண்டாள் அவன் மனையாட்டி. 


 அவன் தோளை தொட்டபடி நெருங்கி அமர்ந்து பயணித்த அந்த அரை மணி நேரம் , வார்த்தைகளில் விவரிக்க முடியாத அளவிற்கு  இன்பமான இம்சையை இருவருக்குள்ளேயும் முதன் முறையாக  தட்டி எழுப்பியது. 


அவள் அதுவரை பார்த்தறியாத உலகமாக இருந்தது அந்த கிரிக்கெட் பயிற்சி நிறுவனம்.


90% ஆண்கள் 10% பெண்கள் பயிற்சியில் ஈடுபட்டிருந்தனர்.


தன்னவளை மிகுந்த உற்சாகத்துடன் தன்  குழுவில் இருப்பவர்களுக்கு அவன் அறிமுகப்படுத்த, அவர்களும்  இன்முகத்தோடு கை குலுக்கி அவளிடம் நட்பு பாராட்டினர்.


பிறகு ஆட்டம் தொடங்கியது. அவனுடைய குழுவே இரண்டாகப் பிரிந்து விளையாடத் தொடங்கினர். 


பயிற்சி நிறுவனம் என்பதால் பெரிதாக பார்வையாளர்கள் இல்லாவிட்டாலும்   விளையாடுவோரின் உற்ற நண்பர்கள், உறவினர்களே  அந்த சிறிய கேலரியை முழுவதுமாக ஆக்கிரமித்து கண்டு  களித்தனர்.


மூன்றாவது மட்டை வீச்சாளராக களம் இறங்கிய அவளவன் ,  பந்தை நான்காகவும் ஆறாகவும் அதிரடியாய்  அடித்து பறக்க விட்டான் ...


தன்னவன் சிறப்பாக விளையாடுவதைப் பார்த்து,  இத்துணை நாட்களாய் எட்டிக்காயாய்  கசந்த கிரிக்கெட் தேன் துளியாய் இனிக்கத் தொடங்க, கைதட்டி ஆரவாரத்தோடு மெய் மறந்து ரசித்தாள்.


மிக அதிக ரன்கள் எடுத்த பிறகே அவன் களத்தை விட்டு வெளியேற, அவன் நண்பர்களோடு அவளும் அவனை உற்சாகமாகவே வரவேற்றாள்.


ஏதேதோ கதைகள் பேசியபடி மதிய உணவினை இருவரும் ரசித்து உண்ட பிறகு,  மீண்டும் பந்துவீச்சாளராக களம் இறங்கி கலக்கினான்.


அவளது விழிகளில் தெரிந்த ஆர்வத்தைக் கண்டு, வலைப்பயிற்சிக்குள்  அழைத்துச் சென்று, நிற்பது, மட்டையை பிடிப்பது , பறந்து வரும் பந்தை  எப்படி எதிர் கொள்வது என ஒன்றன்பின் ஒன்றாக அவளுக்கு செய்து காட்டியவன், அவளிடம் மட்டையை கொடுத்து பின்புறம் நெருங்கி நின்று அவள் கரத்தோடு தன் கரத்தை வைத்து மட்டையை விலாச, பந்து ஏகத்துக்கும் பறந்தது .


பந்து மட்டுமா....  முதன் முறையாய் அவனது நெருக்கத்தில் திளைத்தவளின் மனதும் ஏகத்துக்கும் எகுற , அவனோ இயந்திரத்திலிருந்து வெளிப்படும் பந்தினை எதிர்கொள்வதிலேயே இருக்க,  ஒரு கட்டத்தில்  முழுமையாய் அணைத்திருந்த அவனது நெருக்கத்திலிருந்து நெளிந்தபடி விலக முயன்று 


"போதும் ..." என நாணத்தால் சிவந்த முகத்தோடு கூறியவளை நோக்கியதும் தான்,  அவளது விலகளுக்கான காரணம் புரிய மென் புன்னகையோடு விலகி நின்றான்.


"எப்பவுமே வீரா நல்லா தான் விளையாடுவான் இன்னைக்கு உங்களை கூட்டிகிட்டு வந்ததால சும்மா ஃபோர், சிக்ஸ்ன்னு அடிச்சு தூள் கிளப்பிட்டான் ..." 

 

அவனது நண்பர்கள் அவளிடத்தில் வீராவின் புகழ் பாட, பெருமையும் ரசனையுமாய் நோக்கியவளை காதலோடு பார்த்தவன் , அந்த பயிற்சி நிறுவனத்தை முற்றிலும்  சுற்றிக் காட்டிவிட்டே அந்தி சாய்ந்த வேளையில் தன்னவளோடு வீடு வந்து சேர்ந்தான் .


பிரபாவின் வீட்டிற்கு சத்யன் தன் குழந்தைகளோடு  சென்றிருக்க , இரவு உணவை தன் கணவனோடு அருந்தி  கொண்டிருந்த அன்பு , வீரா ஸ்ரீப்ரியாவை இன்முகத்தோடு வரவேற்றாள் .


அன்புவின் செயல்பாடுகள் அனைத்தும் அந்தந்த தருணத்தில் இருக்கும் அவளது  மனநிலையை பொறுத்தது என புரிந்து கொண்டதால்,  முதல் தினத்தில் தோன்றிய சுணக்கங்கள் அனைத்தும் மறைந்து  வெகு இயல்பாக  ஸ்ரீப்ரியா அவளை எதிர்கொண்டதோடு, அவர்களுடனேயே தன் கணவனோடு  இரவு உணவை கதைத்தபடி உண்டு முடித்தாள்.


அடுக்களையில் அவள் அகல்யாவிற்கு உதவி விட்டு தன் அறைக்கு  வந்த போது உடம்பில்  சட்டை இல்லாமல்,  பின் இடுப்பை கரங்களால் பற்றிய படி வீரா ஏதோ உடற்பயிற்சி போல் செய்து கொண்டிருந்தான்.


 கடந்த இரு தினங்களில் இப்போது தான் முதன்முறையாக சட்டையில்லாமல் அவனை எதிர்கொள்கிறாள். 


லேசான நாணத்துடன் கூடிய தயக்கம் தோன்ற , அப்படியே நின்றவள்,


"என்ன ஆச்சு ராம் ...."  என்றாள் யோசனையாக. 


"லேசா முதுகு வலிக்குது ..."


"ஐயோ ... கிரிக்கெட் விளையாடினா முதுகு வலி வருமா ...


" யூசுவலா எனக்கு வராது ....   இன்னிக்கு நீ வந்ததால ரொம்ப நல்லா விளையாடணும்னு வித்தை காட்டினேனா லேசா முதுகு வலி வந்திருச்சு  .... அதான் மைல்டா எக்சர்சைஸ் பண்ணிக்கிட்டு இருக்கேன் ..." என்றான் குழந்தை போல்.


அதில் புன்னகைத்த படி தயங்கி தயங்கி  நெருங்கியவளிடம்  

"இந்த  ஸ்பிரேவ  கொஞ்சம் அடிச்சு விடேன் ..."  என்றான் இயல்பாக .



திண்மையான சதைப்பற்றுள்ள தோள்களும்,  வலிமையான இறுகிய முதுகுத்தண்டையும் கண்களால் ஸ்பரிசித்த படி நெருங்கி , அவன் கொடுத்த வலி நிவாரணியை வாசனை திரவியங்களை அடிப்பது போல் மென்மையாக அடித்து முடித்தாள்.


அப்போது பார்த்து அவன் அலைபேசி சிணுங்க, எடுத்து காதில் வைத்தவன் சற்று நேர அமைதிக்கு பின்,


" ஷுயூர் ப்ரீத்தி ... டுமாரோ ஐ வில் பி தேர்  அரௌண்ட் 10 ஓ கிளாக் ..."  என முடித்தவனை அவன் கண்ணாட்டி குறுகுறுவென பார்த்துக் கொண்டே இருக்க,

"என்ன ...." என்றான் இதழுக்குள் சிரிப்பை அடக்கி. 


"ஒன்னும் இல்லையே ...."


"அப்ப சரி .... ஆனா ஒன்னு பண்றயா .... கொஞ்சம் முதுகு மேல நிக்கறயே ..."


"நானா... ஐயோ .... மாட்டேன் பா .... இன்னும் முதுகு வலி அதிகமாயிடும் ..."


" ஸ்ரீ.... நீ ஒரு 55 கிலோ இருப்பியா... அதெல்லாம் ஒரு வெயிட்டே இல்ல ... கொஞ்சம் ட்ரை பண்ணு... ப்ளீஸ் ..."


" இல்ல வேண்டாம் ..."


" ஏய், ஒன்னும் ஆகாது...  ஜஸ்ட் மசாஜ் பண்ண மாதிரி இருக்கும் அவ்ளோ தான் ...."  

என்றவனின் வேண்டுகோளுக்கு இணங்க,  குப்புறபடுத்துக் கொண்டவனின் முதுகின் மத்தியில் தத்தித் தடுமாறி  அவள் தன் பாதத்தை தூக்கி வைக்க முயலும் போது,  அவர்களது அறை கதவு தட்டப்பட்டது.


இந்த நேரத்துல யார் கதவை தட்றா...  என வாய்விட்டே முணுமுணுத்த படி எழுந்து சென்று கதவு திறந்தவனைப் பார்த்து,


" அன்பு  அடி வயிறு வலிக்குதுன்னு அழுவுற .... நாளைக்கு வேற அவங்க ஊருக்கு போறாங்க, கொஞ்சம்  வண்டி எடுப்பா ... டாக்டரை போய் பார்த்துட்டு வந்துடலாம் ..." என அகல்யா படபடக்க, 

"இதோ வந்துடறேன் மா ..." என்றவன் துரிதமாக சட்டையை அணிந்து கொண்டு 


"நீ வீட்ல பாத்து இருந்துக்க... நாங்க டாக்டருக்கு போயிட்டு வந்துடறோம் ...." என  மனையாளை பார்த்து மொழிந்து விட்டு , தாயோடு கிளம்பினான் நாயகன் .


பிரபாவின் இல்லத்தில் .....


தமக்கை வந்ததிலிருந்து அவளை ஆராய்ச்சி பார்வை பார்த்துக் கொண்டிருந்தாள் ப்ரீத்தி .


அவள் எதையோ கேட்க வேண்டுமென்ற எண்ணத்தில் தன்னையே பார்த்துக் கொண்டிருக்கிறாள் என்று தெரிந்தும் , கண்டுகொள்ளாதது போல் வலம் வந்து கொண்டிருந்தாள் பிரபா. 


ஒரு கட்டத்தில் பொறுமை இழந்த ப்ரீத்தி,


"அக்கா,  உங்க மாமியார் வீட்ல எல்லாரும் நல்லா இருக்காங்களா ..." என ஆர்வத்தோடு கேள்வி எழுப்ப,


"அவங்களுக்கு என்ன ... எல்லாரும் நல்லா தான் இருக்காங்க  ...."


"பாண்டி அத்தான் நல்லா இருக்காரா ...." 


"ஏன் பாண்டியனுக்கு என்ன... அவரும்  நல்லா தான் இருக்காரு ..."


"இ....இல்ல....  கல்யாணம் முடிஞ்சிருக்கே சந்தோஷமா இருக்காரானு கேட்டேன்...."  கேட்டவளை தீப்பார்வை பார்த்தாள் பிரபா .

 

ஸ்ரீ-ராமம் வருவார்கள் ....


















































 




 





 












 





































 



Comments

  1. Story Nicely going sis .... waiting for Sri Lakshmi ud... Take care of yourself and kids too.

    ReplyDelete
  2. Supperrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrr

    ReplyDelete

Post a Comment