ஸ்ரீ-ராமம்-67B

 அத்தியாயம் 67B


ஸ்ரீப்ரியாவிற்கு அதிகாலையில் விழிப்பு வர, அருகில் உறங்கிக் கொண்டிருந்த கணவனை ஆழ்ந்து ரசித்தபடி எழுந்தமர்ந்தாள்.


அவனது ஆஜானுபாகுமான சரீரத்திற்கு கட்டிலின்  ஓரத்தில் ஒதுங்கிப் படுப்பது சிரமம் என்றாலும், அவளை நெருங்காமல் படுக்க எண்ணி ஒரு பெரிய தலையணை அளவிற்கு இடைவெளி விட்டே குப்புறப்படுத்து உறங்கிக் கொண்டிருந்தான்.


முன் தலைமுடி நெற்றியில் புரண்டு மழலையாய் காட்ட , கூர்மையான நாசியும் அடர்ந்த மீசையும் கவர்ச்சியை கூட்ட, சாந்தமாக உறங்கிக் கொண்டிருந்தவனைப் பார்ப்பதற்கு,  அவளுக்கு வளர்ந்த  குழந்தை போல் தோன்றியது.


திருமணம் முடிந்து கிட்டத்தட்ட இரண்டு நாட்கள் ஆன நிலையில் தற்போது தான் அவள் புறமாக ஒருகளித்திருந்தவனின் வதனத்தை  ஆழ்ந்து ரசிக்கும் சந்தர்ப்பம் அமைய, தன்னை மறந்து லயித்து பார்த்தாள்.


பிறகு நேரம் போவதை உணர்ந்தவள், துரிதமாக குளித்து முடித்து, அரக்கில் பாசிப்பச்சை ஜரிகை வேலை செய்த செமி சில்க் சுடிதாரை  அணிந்து கொண்டு கீழ் தளத்திற்கு சென்றாள்.


அகல்யா மட்டும் அடுப்பங்கரையில் காபி  தயார் செய்து கொண்டிருக்க, வீடே  அமைதியில் மூழ்கியிருந்தது.


பிரபா, சத்யன்  குழந்தைகளோடு பிரபாவின்  இல்லத்திற்கும், அன்பு அவளது  மாமியார் இல்லத்திற்கும்,  பொன்னம்பலம் அவர்  நண்பரை சந்திக்க சென்றிருப்பதாகவும் வழக்கம் போல் அகல்யா தன்னிச்சையாக தகவல் கொடுத்தபடி அவளுக்கு காபி கொடுக்க, வாங்கி கொஞ்சம் கொஞ்சமாக பருகிக்கொண்டே  காலை உணவிற்காக காய்கறிகளை  நறுக்கும் பணியில் ஈடுபட்டாள்.


கைகளும் கண்களும் பணியில் இருந்தாலும், அவளது   மனம் மட்டும் சிறு தவிப்பும் சிலிர்ப்புமாய் கணவனின் வரவை எதிர்பார்த்து வழி மேல் விழி வைத்திருந்ததால் , அகல்யா சொல்லிக் கொண்டிருந்த தங்கள் வீட்டு ராமாயண மகாபாரதத்தை  உள்வாங்கிக் கொள்ளாமலேயே ஊம் மட்டும் கூட்டிக் கொண்டிருந்தாள் .


புரண்டு படுத்தவனுக்கு விழிப்பு வர, அவனவள் அருகில் இல்லாததைக் கண்டு 


இவ எப்ப எழுந்தான்னே  தெரியலையே .... 


என்று முணுமுணுக்கும் போது  முந்தைய இரவு அவனுடைய செயலாளர் ப்ரீத்தியை பற்றி, அவள் வினாடி வினா நடத்தியது நினைவுக்கு வர,  உடன் மெல்லிய புன்னகை அவன் இதழை ஆக்கிரமிக்க,  அவளைக் காணும் ஆவல் கூட,  துள்ளி எழுந்தவன் துரிதமாக குளியலறைக்குள் புகுந்து கொண்டான். 


அகல்யாவின் ஆலோசனைப்படி சமையலுக்கான காய்கறிகளை அவள் உணவு மேஜையில் வைத்து  நறுக்கிக் கொண்டிருக்கும் போது,  உள் படிக்கட்டில் காலடி சப்தம் கேட்க,  இதயத்துடிப்பு லேசாக கூடிய படி தன்னவனை எதிர்பார்த்து  அவள் மெதுவாக தலை தூக்கி பார்க்க, மென் புன்னகையோடு வந்தவனின் விழிகள் அவள் நயனங்களோடு மோதிக் கொள்ள ,  மின்சார கதிரால் தாக்கப்பட்டது போல் உணர்ந்தவள் மெல்லிய நாணத்தோடு புன்முறுவல் பூத்தபடி தலை குனிந்து கொண்டாள். 


அன்றும் அவள் சுடிதாரில் இருந்தது  ஏமாற்றமே என்றாலும், அதுவும் அவளது நிறத்திற்கும் உடல் வாகிற்கும் அழகாக பொருந்துவது போல்  தோன்ற,   தலைக்கு குளித்து கற்றை கூந்தலை மயில் தோகையாய் விரித்து போட்டு, உச்சியின் மத்தியில் முடிச்சிட்டிந்தது கூட தனித்துவமாக தெரிய, ஒப்பனை ஏதுமின்றி  நெற்றி பொட்டும் வகுட்டு குங்குமத்தோடும் காணப்பட்டவளை  விழிகளால் வருடிக் கொண்டே அவளுக்கு எதிரே  இருந்த நாற்காலியில் வந்தமர்ந்தான்.


சிறு அமைதிக்குப் பிறகு,


" எங்கேயாவது வெளிய போலாம்மா ..." 

என்றான் ஆர்வத்தோடு .


வீட்டு உறுப்பினர்கள் அனைவரும் மதிய உணவிற்கு வரவிருப்பதால் அகல்யாவிற்கு சமையலில்  கூட மாட ஒத்தாசை செய்யும் எண்ணம் இருந்ததோடு,  உடன் ப்ரீத்தியை பற்றி லேசர்  ஒளிக்கற்றை அளவிற்கு நெருடலும் இருந்ததால்,  


"இன்னைக்கு வேண்டாமே... அக்காவும், அன்பும் வெளிய போயிருக்காங்க  ...லஞ்சுக்கு தான் வருவாங்க  ... அத்தைக்கு சமையலுக்கு ஹெல்ப் பண்ண யாருமே இல்ல ... அதான் .... நாளைக்கு போலாமா ..." என்றாள் முதன்மை காரணத்தை மட்டும் சொல்லி மறுத்து.


"ஓகே ..." என ஸ்ருதி குறைந்து அவன் கூறும் போது, 

   

"பாண்டியா, காபி கலந்து கொடுக்கவா  ... " என  கேட்டுவிட்டு பதிலுக்கு காத்திராமல்,  பால், டிகாஷன், சர்க்கரையை அவன் ருசிக்கேற்ப சுட சுட கலந்து ஆவி பறக்கும் குவளையை மகன்  கையில் திணித்து,


"இவ்ளோ சொன்னேனே , இவனை பத்தி சொல்ல மறந்துட்டேம்மா ... பெரியவன்

( சத்யன்) குணத்துல  என் அண்ணன் மாதிரி ... கொஞ்சம் கோவப்படுவான் .... சமயத்துல கைய ஓங்கிடுவான் .... அதனால தான் பிரபா கூட கோவிச்சுக்கும்... ஆனா இவன் அப்படி இல்ல, இவங்க அப்பா  மாதிரி ...  பிறவி  சாந்தம்..."

என்ற தாயின் பேச்சால் பெருமையோடு இதழ் பிரியா புன்னகை  பூத்த படி தன்னவளை பார்த்தான். 


"அதனால தான் இவனை எல்லா பெண்களுக்கும் புடிக்கும்மா..."  என்று அடுத்த குண்டை அவர் அசால்டாக தூக்கிப் போட, 

அய்யய்யோ .... இது என்ன டிராக் மாறுது .... என உள்ளுக்குள் பதறியவன்


"அப்படியெல்லாம் ஒன்னுமில்ல... என்னை எந்த பொண்ணுக்கும் புடிக்காது ..." என்றான் அவசரமாக.


" கொஞ்ச நேரம் சும்ம்ம்மா இருப்பா ... பேச விடு " என அவனை அடக்கியவர் தொடர்ந்து


"நான் என்ன நினைச்சேன்னா, இவன் கொஞ்சம் சாந்தங்கிறதால இவன் தான் யாரையாவது லவ் பண்ணி கூட்டிகினு வருவான்னு நெனச்சேன் .... கடைசில கல்லுளி மங்கன் மாதிரி இருக்கிற  பெரியவன் தான் லவ் பண்ணி,  கட்டினா அந்த புள்ளைய தான் கட்டுவேன்னு தர்ணா பண்ணி ஒரு வருஷத்துக்கு மேல போராடி பிரபாவ கட்டினான் ...."  

என அவர் முடிக்க,  நிம்மதி பெருமூச்சு விட்டான் மைந்தன், அதற்கு ஆயுசு அதிகமில்லை என தெரியாமல். 


"அந்தா  தெரியுது பாரு ... அந்த  வீட்ல தான்  மிலிட்டரிகாரு இருந்தாரு ....அவருக்கு ஒரு பொண்ணு ... நல்லா அழகா இருக்கும் .... அது எப்பவும் ஒரு பொச பொசனு ஒரு நாயை வச்சிக்கிட்டு  சுத்திக்கினே இருக்கும் ... அந்தப் புள்ளைக்கு  உர்ருனு இருக்கிற சத்யனை கண்டாலே புடிக்காது...  நம்ம பாண்டியனை தான் புடிக்கும் ..."


ப்ரியா தன் கண்களில்  தீ ஜவாலையை காட்டியபடி அவனை முறைத்துப் பார்க்க, 


"அம்மா உளறாதம்மா ...."  என்றான் மைந்தன் தாயின் பேச்சை தடுத்து நிறுத்தும் விதமாக. 


"அட சும்மா இருடா ... பேச விடு ... அந்தப் புள்ள அடிக்கடி நம்ம வீட்டுக்கு வந்துகினும் போய்க்கினும் இருக்கும் ... அப்ப இன்னாடா நீ படிச்சிகினு இருந்த ...." என அகல்யா இயல்பாக கேள்வி எழுப்ப ,


"ம்.... செகண்ட் ஸ்டாண்டர்ட் ..." என்றான் கோபத்தில் .

"ஆ... செகண்ட் ஸ்டாண்டர்ட்டா... இல்லையே ... 

ஆ.... இப்ப தான் ஞாபகத்துக்கு வருது ..காலேஜ் செகண்ட் இயர்  படிச்சுக்கினு இருந்தாம்மா...நாலாவது செமஸ்டர்... இல்லடா....."


"புள்ளி விவரம்  ரொம்ப முக்கியம் ..." என மைந்தன்  குமுற ,


"அப்பதான் அடிக்கடி அந்த பொண்ணு வீட்டுக்கு வந்து இவன் கிட்ட பாடத்துல சந்தேகம் கேட்கும் .... இவனும் சொல்லிக் கொடுப்பான் ... நானும் அந்த பொண்ணை தான் இவனுக்கு புடிச்சிருக்குன்னு நினைச்சேன் ... தினமும் காலங்கார்த்தால அந்த பொண்ணு அந்த பொச பொச நாய் குட்டி பின்னாடி ஓடும் அந்த பொண்ணு பின்னாடி  இவன் ஓடுவான்  ..."


ஐயோ என் இமேஜை மொத்தமா  டேமேஜ் பண்ணிட்டயே.... நீ தாயே இல்ல பேய் ... என உள்ளுக்குள் பொங்கியவன் 


" ஐயோ அம்மா,  நான் ஜாகிங் போகும் போது அந்த பொண்ணோட நாய் எனக்கு முன்னாடி ஓடினதால, அந்த பொண்ணு நாய் பின்னாடி ஓட, நான் அந்த பொண்ணு பின்னாடி ஓடினா மாதிரி பாக்கிற உனக்கு தோணியிருக்கு ... அது ஜஸ்ட்  ஆப்டிக்கல் இல்யூஷன்ம்மா ..."

என்றான் அவசர அவசரமாக தன்னிலை விளக்கம் கொடுத்து. 


அதனை கொஞ்சம் கூட கண்டுகொள்ளாமல், 


"அதுக்கப்புறம் கொஞ்ச நாள் கழிச்சு, இவன் கிரிக்கெட் விளையாட அகாடமிக்கு  போகும் போது டென்னிஸ் கோச்சிங்க்கு பொண்ணு வந்துச்சு ......"


"நாய் வச்சிருந்த அதே பொண்ணா ..."  ஸ்ரீப்ரியா மும்மரமாக கேட்க, 


" இல்ல...  இது வேற பொண்ணு ..."


அய்யய்யோ ... அம்மா என் வாழ்க்கைல ஏம்மா கிரிக்கெட் , கபடி , வாலிபால், புட்பால்னு எல்லாத்தையும் கலந்து கட்டி விளையாடற .... எனக்கு போய் பிளேபாய் இமேஜை கிரியேட் பண்றீயே இது நியாயமா...  இன்னும் எங்களுக்குள்ள எதுவுமே நடக்கல... நீ பேசறத எல்லாம் பாத்தா எதுவுமே நடக்காது போல இருக்கு .... 

கூடிய சீக்கிரம் டிவோர்ஸ் வாங்கி கொடுத்துடுவனு தோணுது......  

என உள்ளுக்குள்ள அவன் கொந்தளித்து  கொண்டிருக்க, அதே நேரத்தில் 

 உன் பேரு அதிவீர ராம பாண்டியன் இல்ல மைக்கேல் மதன காமராஜன் .....  என அவனை லேசாக முறைத்த படி அவன் மனையாள் குமைந்து கொண்டிருந்தாள். 


"ம்மா தயவு செய்சு இதெல்லாம் பேசாதம்மா .... உனக்கு கோவில் கட்டி கெடா வெட்றேம்மா... நான் அந்த அளவுக்கெல்லாம் வொர்த் இல்லம்மா...  உன் பையன் என்ன அஜித்தா அரவிந்த்சாமியா... ஓவரா பில்டப்  பண்ணிட்டு இருக்காத ..."


மீண்டும் அவன் புலம்பலை  கண்டு கொள்ளாத அகல்யா 


"அந்த டென்னிஸ்  பொண்ணு இவனை லவ் பண்ணிச்சோன்னு  நினைச்சேன் .... கடைசில இவன் ஃப்ரெண்டட  லவ் பண்ணிருக்கு..."  என  அவர் முடிக்க,


"நாய் வச்சிருந்த  பொண்ணு என்ன ஆச்சு ...???" 

என ஸ்ரீப்ரியா சந்தேகம் கேட்க ,


"அது ஒரு பெரிய கதை ... அந்தப் பொண்ணு  வடகத்திகாரனோடு ஓடிப் போச்சு ...  அவங்க அப்பா  துப்பாக்கியை தூக்கினு சுத்திகினு இருந்தாரு .... அப்பதான் தெரிஞ்சுது ... இவனுக்கும் பொண்ணுங்களுக்கு ராசியே இல்லன்னு ..."


ம்மஹும்... இப்ப சொல்லு இத ... என மனதோடு பேசியவன் 


"பாத்தியா ... அந்த அளவுக்கெல்லாம் நான் ஒர்த் இல்ல ... " என பொதுப்படையாக  முடிக்க, 

வாசலில் கீரைக்காரி அழைக்க, அகல்யா நகர்ந்ததும், 

"ஏன் எதுவும் செட் ஆகலனு வருத்தப்படறீங்களோ .... " என்றாள் ஸ்ரீப்ரியா வெடுக்கென்று. 


"செட்டா .... அந்த மாதிரி எல்லாம் ஒண்ணுமே இல்ல ஸ்ரீ...."  என அவன் சமாதானப்படுத்த முயலும் போது,


"பொன்னாங்கண்ணிக் கீரையை கொண்டுட்டு வர சொன்னா, அத வுட்டுட்டு மத்த கீரை எல்லாம் கொண்டாந்தா என்ன அர்த்தம் ..."  என கீரைக்கார அம்மாவை வசை பாடிக் கொண்டே  வந்த அகல்யா ,


" ஆ..... எதுல வுட்டேன்..."  என்றார் ஸ்ரீப்ரியாவை பார்த்து .


" எம்மா .... கதையா சொல்ற நீ ..." என மைந்தன் மீண்டும் இடைபுக, 


"இவருக்கும் பொண்ணுங்களுக்கும் ராசி இல்லன்னு சொன்னீங்களே ..." என அவனவள் அடி எடுத்துக் கொடுக்க,


"ஆ..... அதுக்கப்புறம் படிப்பு வேலைன்னு போயிட்டாம்மா .... பொண்ணு பார்க்கணும்னு நாங்க பேச்சு எடுக்கும் போதெல்லாம் அன்புக்கு கல்யாணம் முடியட்டும்னு சொல்லுவான் ...  அன்புக்கு கல்யாணம் முடிஞ்சு கூட இவன் பிடி கொடுத்தே பேசல என் அண்ணி சைடு உறவுல  ஒரே ஒரு பொண்ணு இருந்துச்சு .... ரெண்டு பேத்துக்கும் ஆறு மாசம் தான் வித்தியாசம் ....  அந்த பொண்ணையும் இவன் வேணாம்னு சொல்லிட்டான்... கடைசில ஜாதகமும் பொருந்தாம போயிடுச்சு .... அப்புறம் மேட்ரிமோனில உன் ஜாதகம் கிடைச்சது .... வயசு வித்தியாசம் அதிகமா இருக்குதே உங்க வீட்ல ஒத்துப்பாங்களான்னு  யோசிச்சுக்கிட்டே தான் அன்பு சொல்லி, இவங்க அப்பா உங்க அப்பா கிட்ட பேசினாரு.... ஒரு நாலு நாள் கழிச்சு உங்க அப்பா ஜாதக பொருத்தம் நல்லா இருக்குன்னு சொன்னாரு .... அப்பதான் இவனுக்கு உன்னோட போட்டோவையும் ஜாதகத்தையும் அனுப்பினோம்.... உன்னையும் புடிக்கலன்னு தான் சொன்னாம்மா...."  என அகல்யா நிறுத்த,


"அம்மா உனக்கு என்னம்ம்மா பிரச்சனை ...  அதான் கல்யாணம் ஆயிடுச்சு இல்ல அப்புறம் என்ன ..."  என்ன பேசுவது என்று தெரியாமல் அவன் அவசரத்தில்  வார்த்தையை விட,  அவன் மனையாட்டியின் முகம் கோபத்தில் சிவக்க, அதனை கண நேரத்தில் கண்டு கொண்டவன்,


"எனக்கு இவளை ரொம்ப புடிச்சிருக்கு ... புடிச்சு தான் கல்யாணம் பண்ணி இருக்கேன் போதும்மா..." என்றான் தாய்க்கு பதில் அளிக்கும் விதமாக மனையாளை பார்த்துக் கொண்டே.


அந்த பதில் லேசான மழைச்சாரலை தூவியதோடு , அதற்கு முன் நடந்த உரையாடல்களும் ஏதோ ஒரு முக்கிய விஷயத்தை உணர்த்துவது போல் தோன்ற, அது என்ன என்று அவள் சிந்திக்கும் போது அவன் அலை பேசி ஒலித்தது.


அழைப்பை ஏற்று பேசியதை வைத்து  நீண்ட கால நண்பனோடு உரையாடுகிறான் எனப் புரிய,  மேற்கொண்டு அதில் கவனம் செலுத்த மனமில்லாமல், மதிய உணவு தயாரிப்பில் கவனம் செலுத்தியவளுக்கு, திடீரென்று  கன்னங்கரு கானகத்தில் விடிவெள்ளியாய் ஒரு செய்தி கிட்டியது .


அது என்னவென்றால்,  அகல்யா ஒளிவு மறைவில்லாமல் பேசும் குணமுடையவர்.  அடுத்தவர்களிடம் ஒரு விஷயத்தை பகிரலாமா வேண்டாமா என்ற ஆராய்ச்சி எல்லாம் மேற்கொள்ளாமல்  தன் மனதில் இருப்பதை  அப்படியே கொட்டும் சுபாவம் கொண்டவர் என்பதை இந்த இரண்டு தினங்களிலேயே ஸ்ரீப்ரியா அறிந்திருந்தாள்.


முந்தைய இரவு பேச்சுக்கு பிறகு,  கணவனின் மீது கடுகளவு  கூட சந்தேகம் இல்லை என்றாலும், ப்ரீத்தி, பிரபா , சத்யன் ஆகியோரின் நடவடிக்கையில் மட்டும் சில நெருடல்கள்  இருந்து வந்த நிலையில்,  அகல்யாவின் வெட்ட வெளிச்சமான பேச்சு, அந்த சில உறுத்தல்களையும் துடைத்தெறிய உதவியதாக அவளுக்கு தோன்றியது .


பழைய விஷயங்கள் பலவற்றை பேசிய அகல்யா ஒரு இடத்தில் கூட ப்ரீத்தி என்ற பெயரை உச்சரிக்கவே இல்லை .... ப்ரீத்தியை தன்னுடைய இரண்டாவது மைந்தனுக்கு மணம் முடிக்க வேண்டும் என்ற  எண்ணமே அவருக்கு இருந்ததாகவும் தெரியவில்லை என்பதை உறுதிப்படுத்தியவளுக்கு ப்ரீத்தி  கூறியது அனைத்தும் கட்டுக்கதை என்று ஊர்ஜிதமாகி போக, மனம் குளிர்ந்தவள் தன் மன்னவனை தேட, அவனோ  நீல நிற கிரிக்கெட் ஜெர்சியை அணிந்து கொண்டு கையில் மட்டையோடு கிரிக்கெட் விளையாட தயாராகி வந்தான்.


அப்போது பார்த்து சத்யனின் குடும்பம் காரில் வந்து இறங்க, பிரபாவை கண்டதும், அகல்யாவிற்கு ஒத்தாசைக்கு ஆள் வந்து விட்டதால், இனி கணவனோடு வெளியே செல்லலாம் என்று அவள் காதல் மனம் கூற ,கணவனை நோக்கி அவள் ஓரடி எடுத்து வைக்கும் பொழுது, அவனே அவளை துரிதமாக நெருங்கி,


"உனக்கு கிரிக்கெட் பிடிக்காது ,  ஆனா எனக்கு கிரிக்கெட் தவிர வேற எதுவும் பிடிக்காது வீட்லயே அடைஞ்சி கிடக்க ஒரு மாதிரி இருக்கு .... கிரிக்கெட் அகாடமிக்கு என் டீம் வராங்க ...போய் ஒரு சின்ன மேட்ச் விளையாடிட்டு ஈவினிங் வந்துடறேன் .... " என மொழிந்தவனை ,  லேசான ஏமாற்றத்தோடு கண்களில் காதல் வழிய பார்த்தவளை 


இவ ஏன் ஒரு மாதிரி பாக்கறா... ஒன்னுமே புரிய மாட்டேங்குதே... வெளிய கூப்பிட்டாலே வரமாட்டா... இதுல கிரிக்கெட் அகாடமிக்கு நோ வே ... வேற என்ன தான் வேணும் இவளுக்கு ... 


என புரியாமல் பார்த்தவன், ஒரு வழியாக விடை பெற்று தன் இருசக்கர வாகனத்தை இயக்க,  ஜன்னல் வழியே அதை பார்த்தவளுக்கு ஆசையும் அழுகையும் போட்டி போட்டுக் கொண்டு பொங்கி வந்தன.


அவளது தம்பி , அப்பாவை தவிர இருசக்கர வாகனத்தில் வேறு எவருடனும்  அவள் பயணித்ததில்லை.


முதன்முறையாக கணவனோடு பயணிக்கும் சந்தர்ப்பம் அமைந்தும் அதை தவறவிட்டதை எண்ணி,  அவள் மனம் கலங்கிக் கொண்டிருக்கும் போது, நண்பர் வீட்டுக்குச் சென்றிருந்த பொன்னம்பலம்,  மைந்தன் கிரிக்கெட் விளையாடச் செல்வதை பார்த்தபடி இருசக்கர வாகனத்தில் வந்திறங்கினார்.


"இன்னும் அரை மணி நேரத்துல அன்பும் மாப்பிள்ளயும் வராங்களாம்..." என அகல்யா அவரைப் பார்த்துக் கூறியதும்,


" நீயும் உன்  மகனும் மனசுல என்ன தான் நெனச்சுக்கிட்டு இருக்கீங்க ..." என்றார் குரலைத் தாழ்த்தி வெடுக்கென்று. 


" ஏன் வந்ததும் வராததுமா  கோவிக்கிறீங்க ..." 


" ம்ம்ம்...  துரை அந்த பொண்ண புடிச்சி தானே கல்யாணம் கட்டி இருக்கான்... "


" என்ன இப்படி கேக்குறீங்க ....நீங்க தான் பாத்தீங்களே.... அவன் ரொம்ப புடிச்சி தான் கல்யாணம் கட்டி இருக்கான் ..."


"பார்த்தா அப்படி தெரியலையே ... அவன் எப்பவும் போல சின்ன புள்ள கணக்கா  மட்டையை தூக்கிக்கினு கிரிக்கெட் விளையாட போய்ட்டான் ... நீ அந்த பொண்ண அடுப்பங்கரையில  வேலை வாங்கிக்கினு இருக்க .... பெரியவன்  பொண்டாட்டிய கூட்டிகினு புதுசா கல்யாணம் ஆனவன் மாறி எங்கேயோ  ஊர சுத்திட்டு இப்பதான் வரான் என்ன தாண்டி நடக்குது இந்த வீட்ல ...." 


மாமனாரின் குரல் சன்னமாக ஒலித்தாலும்,  அவர் பேசிய பேச்சுக்கள் அட்சர சுத்தமாய் தோட்டத்தில் வாழை இலையை வெட்டி எடுத்துக் கொண்டிருந்த பிரபாவின் காதுகளில் விழ, கடந்த இரு தினங்களாக நடந்த அனைத்தையும் அவசரகதியில் அசை போட்டுப் பார்த்தவளுக்கு, பெரியவரின் பேச்சு 100% சரி என்றே பட்டது.


அவளுடனும்,  அவளது குழந்தைகளுடனும் தான் ஸ்ரீப்ரியா அதிக நேரம் செலவிட்டாள் என்பது  நினைவுக்கு வர, பெரியவர் சொன்னது போல் வீரா ஸ்ரீப்ரியாவுக்கு இடையே புதுமண தம்பதிகளுக்கான இணக்கம் இல்லை ...

அதற்கு ப்ரித்தி காரணமா ....

அல்லது  வேறு ஏதாவது பிரச்சனையா .... என  குழம்பியவள், ஒரு கட்டத்தில் ஸ்ரீப்ரியாவை அழைத்து நேரடியாகவே பேசிவிடலாம் என்று முடிவெடுத்து, அவளை தேடிப் போனாள்.


ஸ்ரீ-ராமம் வருவார்கள் ....










 

  
































































































 


























Comments

Post a Comment