ஸ்ரீ-ராமம்-67A

 அத்தியாயம் 67A


தானாக வந்து தழுவிக் கொண்டவளை விட்டு விலகுவதற்கு அவன் முட்டாளா என்ன???  .... 


அவன் கண்மணியின் கட்டாயமற்ற இந்த கட்டியணைப்பிற்காக கணம் கணமாக காத்துக் கொண்டிருந்தவனுக்கு  கை மேல் பலன் கிடைத்து விட,  நெஞ்சில் படர்ந்திருந்தவளை நேசத்தோடு இறுக்கிக் கொண்டான் .

அவளோடு இணக்கம் காட்டினாலும், நீதிமன்றத்தில் இருக்கும்  விவாகரத்து குறித்து பேசாததை வைத்து தன்னை வாடகை தாயாகத்தான் எண்ணி கொண்டிருக்கிறானோ என்றெண்ணி குமுறிக் கொண்டிருந்தவளுக்கு 


"சாப்பிடலன்னா அம்மா அடிப்பேன் ..." என்று குழந்தையை பயமுறுத்தும் தாயின் அன்பும் அக்கறையை போல் அவளை தன்னோடு எல்லா ஜென்மங்களிலும் வாழ்ந்தே தீர வேண்டுமென்றவனின் வன்மையான  வாய்மொழி, அவன் தொட்டதும் கிளர்ந்தெழுந்த உடல் கிளர்ச்சியை காட்டிலும்,  அவன் மீதான மன உணர்வுகளை  மலையளவு  உயர்த்தியிருக்க, அதில் மதி மயங்கியே தன் மன்னவனின் மார்பில் சரண் புகுந்தாள் மங்கை.


அவனது மார்பு ரோமத்திற்குள் தன் கன்னத்தை பதித்து அவள் ஆழ்ந்து இளைப்பாற, மட்டுப்பட்டிருந்த அவன் மனக்குரங்கு மனையாளின் நெருக்கத்தால் மீண்டும் கிளை விட்டுக் கிளை தாவ, உணர்ச்சியின் உச்சத்தை தணிக்க  அவள் உச்சந்தலையில் ஆழ்ந்து  முத்தமிட்டான்.


உடலை சிலிர்க்க செய்த உஷ்ண முத்தத்தில் உவகை கொண்டு, மோகமும் காதலும்  பொங்கியோடிய படி  தன்னவனின் விழிகளை  தலை நிமிர்ந்து அவள் நோக்க, அந்தக் கவர்ச்சியில் கவிழ்ந்தவன், அவளது  இரு கன்னங்களையும் கைகளில் தாங்கி ரசித்துக்கொண்டே மெல்ல குனிந்து அவள் இதழோடு தன் இதழை பொருத்தினான்.


பலமுறை அனுபவித்த சொர்க்கம் தான் என்றாலும்,  ஒரு கட்டத்தில்  கிடைக்காமலே போய்விட, இனி கிடைக்குமா என ஏங்கித் தவிக்கும் போது பசித்தவனுக்கு படையலே கிடைத்தது போல் எதிர்பாராது கிட்டிட , அந்த இன்பத்தில் அவனது   உடல், பொருள், ஆவி அனைத்தும் உச்சத்தில் இயங்க, உடன் அவனவளின் மீது புதிதாய் வீசிய தாய்மையின் வாசம் அவனை பித்தம் கொள்ள செய்ய , மனையாளின் உடல்நிலை குறித்து மருத்துவர் அறிவுறுத்தியதை மறந்து மன்மதக் கலையில் மூழ்கி முத்தெடுகக எண்ணி அவள் அணிந்திருந்த ஜெர்கினை தாண்டி முந்தானையில் கை படரும் போது ,


"மேடம் ..." என்று மூடிய அலுவலக அறை கதவிற்கு பின்னாலிருந்து மேலாளர் முத்துராமனின் குரல் கணீரென்று ஒலிக்க,  பட்டுக் கத்தரித்தார் போல் தன்னவளை விட்டு விலகி நின்றான்.


பொங்கி எழுந்த உணர்வுக்குவியல்கள் அடங்குவதற்கு இருவருக்குமே சற்று நேரம் தேவைப்பட, அதற்குள்ளாகவே மீண்டும் ஒருமுறை மேலாளர் அழைத்து விட,  துரிதமாக தன்னை சரி செய்து கொண்டவன்,


" நீ உன் சாரியை  சரி பண்ணிக்கிட்டு பொறுமையா வா ..." என மொழிந்தபடி,  அந்த சிறிய அறை கதவை சாற்றி விட்டு வெளியேறியவனுக்கு ஏதோ ஒரு குற்ற உணர்வு குடைய , அதனை ஆராயும் தருணம் அதுவல்ல என்பதால் ஒதுக்கி வைத்துவிட்டு,


"வாங்க முத்து ..." என்றான் அலுவலக மேஜையில் அமர்ந்துக்கொண்டு கம்பீரமாக.


"உடைஞ்ச ரூம் கண்ணாடிய மாத்தறதுக்காக ஆள கூட்டியாந்திருக்கேன் சார் ..." என கண்ணாடி வாயிற் கதவை  திறந்தபடி புதிய நபரோடு மேலாளர்  முத்துராமன் உள்ளே வர,


"யூ கேரி ஆன் ..." என்றான் அந்தப் பெரிய அறையின் ஒரு மூலையில் உடைந்திருந்த கண்ணாடி ஜன்னலை காட்டி. 


அப்போது அந்த சிறிய ஓய்வறையில் இருந்து  ஸ்ரீலட்சுமி வெளிப்பட,


"வா,  வீட்டுக்கு போலாம் ...." என்றான் இறுகிய முகத்தோடு அவள் முகம் பாராமல் .


அவனது திடீர் முக இறுக்கம் அவளை ஏதோ செய்ய , யோசித்தபடி அவனை  பின் தொடர்ந்து காரில் அவன் அருகில் அமர்ந்தாள்.


கர்ப்ப காலங்களில் பெண்மைக்கான அங்கங்கள் எல்லாம் ஹார்மோன்களின் தாக்கங்களால்  உணர்வுக்குவியல்களின் ஊற்றுகளாய் இருக்கும் ...  இந்நிலையில் மனதிற்கினிய கணவனின் நெருக்கம் மோக உணர்வுகளை வகைத்தொகையற்று கூட்டி காதல் கொள்ளத் தூண்டும் ..... ஆரோக்கியமாக இருந்தால் கூடிக் களிக்கலாம். அவன் மனையாளோ பூஞ்சை உடம்பு கொண்டவள் என்பதோடு அவளது கருப்பையும் பலவீனமாக இருப்பதால் , அவளிடம் அவன் காட்டும் நெருக்கம் அவளது உடலையும் மனதையும் ஒருசேர பாதிப்பிற்குள்ளாக்குமே ஒழிய  எந்நிலையிலும் அவளுக்கு  திருப்தியை தராது என்பதை தாமதமாக  உணர்ந்தவன்  அவளிடம் இருந்து விலகி இருக்க  முடிவெடுத்து


"லட்சுமி,  இனிமே நீயும் என் பக்கத்துல வராத.... நான் உன் பக்கத்துல வந்தா தள்ளி போய்டு .... உன் யுட்ரஸ் வீக்கா இருக்குன்னு  டாக்டர் சொல்லியும், ரொம்ப நாள் கழிச்சு நீயா பக்கத்துல வந்ததால, அப்படி நடந்துக்க வேண்டியதா ஆயிடுச்சு  ..." என்றவனின் குரலில் ஏகத்துக்கும் வருத்தம் தென்பட, 


"இதுல வருத்தப்பட என்ன இருக்கு ...." என்றாள் மென்மையாக சங்கோஜத்துடன்  .



"வருத்தப்பட்டு தான் ஆகணும் ... நீ ஹெல்த்தியா இருக்கணும் .... நம்ம குழந்தைங்க நல்லபடியா பொறக்கணும்னா ,  ஸ்ரீபாப்பாவை நீ கன்சீவ் ஆன டைம்ல எப்படி இருந்தேனோ,  அப்படி இனிமே நான் இருந்தா தான்  நல்லது  ....." என்றான் வெடுக்கென்று .


அழகிய மனையாள், அதை விட அவனது அன்பிற்கு ஏக போகமானவளிடமிருந்து விலகி நிற்க மனம் ஒத்துழைக்காததால் ,  அவளையே விலகி நிற்குமாறு பணித்தான் என்பதை விட மறைமுகமாக வேண்டினான் என்றால் சரியாக இருக்கும்.


"நான் உன்னை வீட்டுல டிராப் பண்ணிட்டு  ஆபீஸ்க்கு கிளம்பறேன்... ஒரு இம்பார்டன்ட் மீட்டிங்  இருக்கு ..." என்றவன் மௌனத்தை தத்தெடுத்துக்கொண்டு  சொன்னதைப் போலவே அவளை வீட்டில் விட்டுவிட்டு அலுவலகத்திற்கு புறப்பட்டான்.


அலுவலகம் வந்தவனுக்கு வேலை பளு கழுத்தை நெறித்தாலும்,  அவ்வப்போது மனையாளுடனான நெருக்கமும் மன கூட்டில் வந்து வந்து போக, எந்நிலையிலும் நிதானத்தை கடைப்பிடிப்பவன்,  அன்று அம்மாதிரி நடந்து கொண்டதற்கு காரணம் தேட, ஆழ்ந்து யோசித்ததில் காரணம் பிடிபட்டது.


ஸ்ரீபாப்பாவை அவள் சுமந்து கொண்டிருக்கும் போது,  இருவருமே இயல்பாக இணக்கமாக இருந்ததால்,  அவன் மன உணர்வுகள் கட்டுக்குள் இருந்தன.


ஆனால் தற்போது  இருவருக்கும் இடையே பெரிய இடைவெளி ஏற்பட்டு கிட்டத்தட்ட நான்கு மாதங்களாக  ஒருவரை ஒருவர் புறக்கணிக்கும் நாடகத்தை மேற்கொண்டு வந்ததால்  பொங்கி வந்த கிளர்ச்சியே  அறையில் நடந்த அத்துமீறலுக்கான காரணம் என புரிந்துகொண்டான்.


அவளாக  இணக்கம் காட்டியது அவனது  ஆசையை பூர்த்தி அடையச் செய்திருந்தாலும்,  அவளை பார்க்கும் போதெல்லாம் அலைப்பாயும் மனதோடு  உணர்வுகளை கட்டுக்குள் கொண்டு வராமல், அவள் இருக்கும் உடல் நிலையில்  ஒட்டி உறவாடுவது  தவறு....


அவளிடம் அன்பும் அக்கறையும்  மட்டுமே கொள்ள வேண்டும் என்றால் , அதிக நெருக்கம் காட்டாமல் இயல்பாக அவளோடு பேசி பழக முதலில்  மனக்கட்டுப்பாட்டை கொண்டு வரவேண்டும் ...


அப்படி ஒரு திடம் வரும் வரை  தன்னவளிடமிருந்து  தள்ளியே இருக்க முடிவு செய்துவிட்டே  இரவு வீடு வந்து சேர்ந்தான். 


கூடத்தில் விளையாடிக் கொண்டிருந்த குழந்தையை தூக்கிக் கொஞ்சிய படி ஒருக்களித்திருந்த தன்னவளின்  கதவையே பார்த்துக் கொண்டிருந்தவனிடம்


"தம்பி,   இவ்ளோ நேரம் லஷ்மிம்மா இங்கதான் இருந்தாங்க .... இப்பதான் ரூமுக்கு போனாங்கப்பா ... நீங்க சாப்பிட வாங்க " என்றார் சிவகாமி.


புத்துணர்வு பெற்று வந்தவனுக்கு, சுட சுட இட்லியை, மீன் குழம்போடு அவர் பரிமாற,  முதல் விள்ளலை எடுத்து வாயில் வைத்ததுமே  தெரிந்து போனது,  அது அவனவளின் அம்சமான கைப்பக்குவம் என்று .


உடனே, 

"மீன் குழம்பு நீங்களா வச்சீங்க ..." என்றவனிடம் 


" அ..ஆ... ஆமா  தம்பி ... நான் தான் ...வ...  வச்சேன் ..." என தடுமாறினார் சிவகாமி. 


"பொய் சொல்லாதீங்கக்கா ... மூணு வருஷமா என் பொண்டாட்டி சமையல சாப்பிட்டிருக்கேன் .... எனக்கு தெரியாதா அவ கை பக்குவம் ..."


"அது வந்து.... தம்பி.... நான் மீனை கழுவும்  போதே,  உங்களுக்கு இப்படி வச்சா தான் புடிக்கும்னு  சொல்லி தானாவே வந்து லட்சுமிம்மா குழம்பு  வச்சாங்க..." என்றார் தயக்கத்தோடு .


"அக்கா, அவளுக்கு ரொம்ப கால் வீங்குது....  ரொம்ப நேரம்  நிக்க விடாதீங்க ...  இனிமே அவ சமையல் செய்யறேன்னு சொன்னா ஒத்துக்காதீங்க ... ஆமா அவ சாப்ட்டாளா..."


"இன்னும் கொஞ்ச நேரம் கழிச்சு சாப்பிடறேனு சொன்னாங்க தம்பி ..."


"இவ்வவள....."  என்று கோபத்தில் அவன் முணுமுணுத்துக் கொண்டிருக்கும் போது,  அறை கதவை திறந்து கொண்டு மெல்லிய கொலுசொலியோடு அவள் வர , அப்போது பார்த்து வீட்டு தோட்டக்காரர் சிவகாமியை அழைக்க,


"இதோ வந்துடறேன் தம்பி ..." என அவர் நகர்ந்ததும், அங்கு வந்த மனைவியை பார்த்து 


" சீக்கிரமா சாப்பிடணும்னு உனக்கு தெரியாதா ... இதை கூட ஒருத்தன் சொல்லணுமா ... இன்னைக்கு  போனா போவுதுன்னு  சாப்பிட்டேன் ... இனிமே நீ சமைச்சா  சாப்பிடவே மாட்டேன் ஞாபகத்துல வச்சுக்க... இப்ப ஒழுங்கா சாப்பிட்டு,  நிம்மதியா போய் தூங்கு... நான் வந்து பார்க்கும் போது நீ முழிச்சுக்கிட்டு இருக்கக் கூடாது புரிஞ்சுதா ...  "  என்று படபடத்தபடி கை கழுவிவிட்டு சாப்பிட்டு முடித்து  விளையாடிக் கொண்டிருந்த குழந்தையை அள்ளிக்கொண்டு தன் அறைக்கு சென்று விட்டான்.



அவனது  சுபாவத்திற்கு அவன் தற்போது பேசியது சரியென்றே பட்டாலும், காலையில் சொன்னது போல் அவளிடம் இருந்து விலகி நிற்க விழைக்கிறான் என்பதை  புரிந்து கொண்டவளுக்கு, ஒருபுறம் சிரிப்பும் மறுபுறம் அவன் மீதான காதலும் கூடித்தான் போனது.


சாப்பிட்டு முடித்து அறைக்கு வந்தவள்,  சற்று நேரம் மடிக்கணினியில் அன்றைய பணிகளை பதிவேற்றும் போது கணவன் சொன்ன வார்த்தைகள் நினைவுக்கு வர,  அனைத்தையும் ஒதுக்கி வைத்து விட்டு உறங்குவதற்காக கண்களை மூடினாள்.


அன்று முழுவதும் ஏற்பட்ட அலைச்சலில் படுத்த பத்தாவது நிமிடத்திலேயே அவள் ஆழ்ந்த நித்திரையில் மூழ்க,  அறையில் இரவு விளக்கு எரிவதை பார்த்து வந்தவன், அவள் ஆழ்ந்த உறக்கத்தில் இருப்பதைக் கண்டு, அவள் தலை கோத எத்தனித்த கரத்தை கட்டுப்படுத்தியபடி, ஒரு கணம் நின்று ரசித்துவிட்டே தன் அறைக்கு வந்தான் . 


உறங்கும் குழந்தையின் தலையை வருடியபடி அவன் உறங்க முற்படும் போது ரங்கசாமியிடம் இருந்து அழைப்பு வந்தது.


அழைப்பை எடுத்து இயல்பாக நலம் விசாரித்தவன்,


"அருணாவுக்கு மாச மாசம் கை செலவுக்கு  கொடுக்கிற பணத்தை நிறுத்தாதீங்கப்பா .... அவளுக்கு உங்க மேல லேசா டவுட் வந்துருக்கு  அவ எந்த எக்ஸ்ட்ரீக்கும் போவானு இப்பதான் அவள பத்தியே தெரிஞ்சுகிட்டோம் ... அவளும் அம்மாவும் லட்சுமி விஷயத்துல எதோ பெரிய தப்பு பண்ணி இருக்காங்கன்னு நல்லா  தெரியுது ... நம்ம சுதாரிச்சு கிட்டத்து தெரிஞ்சிருச்சின்னா, அவ லட்சுமியை தேடி  இங்க வந்து பிரச்சனை பண்ணாலும் பண்ணுவா...  அவளை சமாளிக்கிறது ரொம்ப ஈசி .... ஆனா  லஷ்மி  ரொம்ப வீக்கா இருக்காப்பா ... கால் அடிக்கடி வீங்குது ...பிபி வேற அதிகமா இருக்கு.... அவ நிம்மதியா இருந்தா தான் டெலிவரில பிரச்சனை வராது...   எனக்கு இப்போதைக்கு அவளும் பொறக்கப் போற குழந்தைகளும் தான்  முக்கியம் அதனால இந்த நேரத்துல நாம சத்ரியனா இருக்கிறத விட சாணக்கியனா இருக்கிறது தான் நல்லதுனு தோணுது....  குழந்தை பொறக்கிற வரைக்கும் அம்மாவுக்கும் அருணாவுக்கும் சந்தேகமே வராம பாத்துகுங்கப்பா  ..." 


ரங்கசாமி  ஸ்ரீலட்சுமியை அவளது இல்லத்தில்  சந்தித்து பேசியதாகவும், அவள்  விவாகரத்து வேண்டுமென்று  ஒற்றைக்காலில் நின்றதாகவும்  அருணா,  கற்பகத்திடம் கோயம்புத்தூரில் இருந்து ஊட்டிக்கு  வந்த பிறகு கூறியிருந்தார். 


தாயும் மகளும் வெளிப்படையாக காட்டிக் கொள்ளாவிட்டாலும்    அளவில்லா மகிழ்ச்சி அடைந்ததை அவர்களது  இட்டுக்கட்டும் பேச்சில் அறிந்து கொண்டவர்,  அவர்களுக்கு  கை செலவிற்காக மாதா மாதம் கொடுக்கும் தொகையை  அடியோடு  நிறுத்த , திடீரென்று தந்தையிடம் காணப்பட்ட மாற்றத்தை கண்டு துணுக்குற்ற அருணா, ராம்சரணை தொடர்பு கொண்டு  ஆழம் பார்த்ததை தான் தற்போது ரங்கசாமியிடம்  பகிர்ந்து முடித்தான் ராம்சரண். 


"நீ சொல்றதும் ஒரு வகைல சரிதான்ப்பா ... அப்படியே செய்யறேன்  ... நான் ஊருக்கு வர இன்னும் ரெண்டு மூணு நாள் ஆகும் ... டிரான்ஸ்பார்மர் பிரச்சனை,  கிளாஸ் உடைஞ்சது  எல்லாத்தையும் மேனேஜர் சொன்னாரு .... நான் ஊருக்கு வர வரைக்கும் அவரே எல்லாத்தையும் பாத்துக்குவாரு ... லஷ்மிய பேக்டரிக்கு போக வேணாம்னு சொல்லிடு ... "  என்று அவர் அழைப்பை துண்டிக்க,  ஆழ்ந்த நித்திரை கண்களை சொருக, நிம்மதியாக கண் அயர்ந்தான் நீண்ட நாட்களுக்குப் பிறகு.


Dear friends,


அத்தியாயம் 67Bயும் பதிவேற்றப்பட்டுள்ளது.





Comments

  1. Supperrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrr

    ReplyDelete
  2. Hurray!! Two ud uh sis.... Engaluku unga story padika kasakuma enna?? Ethana uds potalum sincere uh ella read panitu than next work papom. Take care of your health too. Don't strain too much on typing

    ReplyDelete
  3. Epi 100 varai plan?
    Interesting. Please continue as your wish. We are waiting!!!❤️❤️❤️❤️❤️

    ReplyDelete
    Replies
    1. thanks ma.... i didnt have any plan da... lets go by flow of the story

      Delete

Post a Comment