ஸ்ரீ-ராமம்-66

 அத்தியாயம் 66 


அதிகாலையில் விழித்தெழுந்தவளுக்கு,  உடல் உபாதைகள் அதிகம் படுத்த, உடன்  நேற்று இரவு நடந்த நிகழ்வுகளும் மனக்கண் முன் விரிந்து, தொண்டை கனத்து,  கண்களை பனிக்க செய்தன. 


நடந்ததை நினைத்துப் பார்க்கவே சித்தம் கலங்குவது போல் இருக்கும் நிலையில், மரணப் படுக்கையில் கூட மரணிக்காத அந்நிகழ்வுகளை  மனக்கண்ணில் கொண்டு வந்து , அன்றைக்கு அனுபவித்த கொடூர வலிகளை குழந்தைகளை சுமந்து கொண்டிருக்கும் இத்தருணத்தில்  எண்ணி துடித்தபடி  வாய் விட்டு கொட்டுவதெல்லாம்  இயலாத காரியம் ...


ஆயிரத்தில் ஒரு சதவீதமாய் சுமந்து கொண்டிருக்கும் சிசுக்களை பற்றி கவலைப்படாமல்  சொன்னாலும், ஆதாரம் இல்லாமல் அருமைத் தங்கையை நம்புவது போல் என்னை  நம்புவானா ...


மாட்டானே ...


ஆதாரம் கேட்பானே ..... ஆதாரத்துக்கு எங்கு  போவேன்...


எனக்கு சாதகமாக  ஆதாரம் இல்லை என்றாலும் எனக்கு எதிரான ஆதாரம் இருக்கின்றனவே ...  


அருமை தங்கை அதனை அத்தாட்சியாக காட்டினால் நம்பாமல் இருப்பானா ....


பசித்தவன் பழங்கணக்கு பார்த்தது போல்  கலங்கி அழுதவளின் மனம் மீண்டும் நடந்தவைகளை நினைத்து கலங்க தொடங்கியது. 


அவள் கர்ப்பம் தரித்திருந்த செய்தியை நண்பனின் அக்காவான டாக்டர் சுமித்ரா மூலம் எப்படியோ அறிந்து கொண்ட பின், குழந்தைகளை  தக்க வைத்துக் கொள்வதற்காக ஓடோடி வந்து அவளிடம் சமரசம் பேசினானே ஒழிய  , மற்றபடி அதில் காதலோ பாசமோ கடுகளவு கூட இருந்ததாக அவளுக்கு  தற்போது எண்ணுகையில் தோன்றவில்லை .


அதற்கு முன் நடந்த பள்ளி வளாக சந்திப்பில் கூட,  அவன் அவ்வாறு இறங்கி வந்து பேசவில்லை என அவளது மனம் அதிரடி குறிப்பெடுத்து கொடுக்க,


உடனே அவனுக்கு குழந்தைகள் என்றால் மிகவும் பிடிக்கும் ... இங்கு  வந்தது கூட எனக்காக அல்ல நான் சுமந்து கொண்டிருக்கும் அவன் குழந்தைகள் மற்றும் ஸ்ரீபாப்பாவுக்காக தான் ... நேற்று இரவு உதவியது கூட தன் குழந்தையை சுமந்து கொண்டிருக்கிறாள் என்ற இரக்கத்தில் தான் ... மற்றபடி என் மீதான கிறக்கத்தில் அல்ல என்ற முடிவுக்கே வந்தாள்.


கடைசியாக மருத்துவரின் இல்லத்தில் நடந்த பேச்சு வார்த்தையில் அவனே  சொன்னது  போல்,  அவன் குழந்தைகளை பெற்றுத் தர போகும்  வாடகை தாயாகத்தான்  என்னை பார்க்கிறான்  போலும் ...


நான் தான் அதனை எல்லாம் மறந்துவிட்டு கணவன் என்று காதலில் கசிந்துருகி கொண்டிருக்கிறேன்.. 


நடந்த அட்டூழியத்தை அவன்  அறியாவிட்டாலும் தன் தாயும் தங்கையும் தான் தன் குடும்ப பிரிவிற்கு காரணம்  என அவன் சிறிதளவேனும் உணர்ந்திருந்தால் கூட, முந்தைய இரவு அருணாவிடம் அத்துணை பாசத்தோடு பேசி இருக்க மாட்டானே...


நான் எவ்வளவு நேர்மையாகவும் உண்மையாகவும் இருந்தாலும் அருணாவிடம் இருக்கும் கண்மூடித்தனமான  நம்பிக்கையில்,  அணு அளவு கூட அவனுக்கு என் மீதில்லையே ....


மொத்தத்தில் அவன் தாய் தங்கையின் மீது இருக்கும் பாசத்தில்,நம்பிக்கையில் ஒரு சதவீதம் கூட என் மீது இல்லை என்பது நேற்றைய இரவு நடந்த அருணா உடனான உரையாடல்கள்  ஊர்ஜிதம் செய்கிறது. 


குழந்தைக்காக மட்டும் நெருக்கம் காட்டுவதால்   விண்ணப்பித்திருக்கும் விவாகரத்து குறித்தும் இதுவரையில்   வாய் திறவாமலே இருக்கிறான் ...


அடுத்த மாதம் நிச்சயம்  விவாகரத்து கிடைத்துவிடும் ... அதற்குப் பின் திருமண உறவு தொடர்வதற்கான சாத்திய கூறுகள் இல்லை ...


இன்னும்  நான்கு மாதம் கழித்து  குழந்தை பிறந்ததும்,  அவனே சொன்னது போல் பாதி நாட்கள் குழந்தைகளை பார்ப்பதற்காக வந்து போகப் போகிறான்....


எப்படிப் பார்த்தாலும்,  அவன் பேசிய வார்த்தைகளில் இருந்து அவன் துளி கூட  மாறுபடவில்லை ..... நான் தான்  நடந்த அனைத்தையும் மறந்து விட்டு அவன் பின்னே அலைகிறேன் ...


ரங்கசாமி நல்ல மாமனார் மட்டுமல்ல நல்ல மனிதரும் கூட ,  என்றாலும் விவாகரத்திற்கு பின்பு  அவரது மகனுக்கு மனைவியாக இல்லாமல் அவரது சொத்துகளுக்கு மட்டும் வாரிசாக இருப்பதில் எனக்கு  உடன்பாடு இல்லை. 


இன்னும் சரியாகச் சொன்னால், பிறந்த குழந்தை ஸ்ரீஷாவும்,  பிறக்கப் போகும் இரு குழந்தைகளும் தான் இந்தக் குடும்ப சொத்திற்கான முறையான  வாரிசுகள் அவர்கள்  பருவமடையும் வரையில் சொத்துகளுக்கு நான்  பாதுகாவலனாக  இருக்கலாம் அவ்வளவே...


மற்றபடி குழந்தைகளை கூட 100% என்னுடையது என சொந்தம் கொண்டாட  முடியாத கையறு நிலை தான் என் நிலை... 


சுருங்கச் சொன்னால் நான்  நிறுவனத்தில் மட்டுமல்ல, இந்த  வீட்டிலும் ஒரு வகையில் ஊழியர் தான் ....


என்றெல்லாம் தன்னுள்ளேயே பேசி ஒரு முடிவுக்கு வந்தவள்  இனி ஓய்வெடுக்காமல் வாங்கும் சம்பளத்திற்கு  உழைக்க வேண்டும் .... என சுய இரக்கத்தால் தீர்மானித்தாள்.


அருணாவின் மேல் கொழுந்துவிட்டு எரிந்து கொண்டிருக்கும்  அபரிமிதமான ஆத்திரமும் தன்னவன் வழக்கம் போல் தங்கையிடம்  காட்டியதாக தோன்றிய கண்மூடித்தனமான பாசமும் சேர்ந்து , அவன்  காதலோடு நெருங்கி நடந்ததை பகிருமாறு பலமுறை வேண்டியது,  அவள் பகிராமல் ஒற்றைக்காலில்  விடாப்பிடியாக நின்று  விவாகரத்து வேண்டியது ஆகியவற்றை  மறந்ததோடு அவனாகவே வந்து வீராவின் திருமணத்தின் போது  மண்டப அறையில் அவளை கட்டி அணைத்ததும்,  அவளை அழைத்துக் சென்று மஹிக்காவிடம் அறிமுகப்படுத்தி வைத்ததையும் கூட அருணாவின் மீது இருக்கும் வெறுப்பின் காரணமாக மறந்துவிட்டு , நடந்து முடிந்த மற்றும் நடந்து கொண்டிருக்கும் அனைத்திற்கும் மீண்டும் கணவனையே குற்றவாளி ஆக்கி முடித்தாள்.


கணவன் மீது கட்டுக்கடங்காத காதலை  கொண்டிருந்தவளுக்கு அவன் குறித்த புரிதல் இல்லாமல் போனதோடு உடன் கர்ப்ப கால மாற்றங்களும் சேர்ந்து கொண்டு  மீண்டும் அவளைக் குழப்பி நிலைகுலையச் செய்ய, முந்தின இரவு அவன் அவளுக்காக  இறங்கி வந்ததாக தோன்றிய தருணங்கள் அனைத்தும் தற்போது குழந்தைகளுக்காக இறங்கி வந்ததாக தோன்றத் தொடங்கின. 


உடல் களைப்பு, மனச்சோர்வு ஆகியவற்றுக்கு எல்லாம் முக்கியத்துவம் கொடுத்து ஓய்வெடுக்கும் தகுதி இனி  தனக்கு இல்லை ... என கண்கள் கரித்தபடி எண்ணிக்கொண்டு அந்தக் கடும் குளிரிலும் மிகுந்த உடல் உபாதையோடு குளித்து முடித்து வழக்கம் போல் கைத்தறி புடவையை அணிந்து , அதன் மேல் ஸ்வட்டரை அணிந்து கொண்டு  தேயிலை தொழிற்சாலைக்கு புறப்பட ஆயத்தமானாள்.


"ம்மா,  மணி 7:30 தான் ஆகுது .... பனி அதிகமாக இருக்கு ... எதிர்க்க வர்ற  வண்டி கூட கண்ணுல பட மாட்டேங்குதே.... இப்ப போய் ஃபேக்டரிக்கு கிளம்பறயே..."  என்றார் சிவகாமி ஆதங்கத்தோடு.


"இன்னைக்கு மலேசியாவுக்கு லோடு ஏத்தி ஆகணும் ....  மேனேஜர் ஏற்கனவே வேலை ஆரம்பிச்சிட்டாரு... நான் இப்ப  போகலன்னா சரி வராது ... "


"அப்ப தோசை போட்டு தரேன் சாப்பிட்டு கிளம்பும்மா ..."


"வேணாம் அக்கா காபி மட்டும் போதும் .... போய் சேர்ந்ததும் போன் பண்றேன் சாப்பாடு அனுப்பி வைங்க ... " என்றவள் ஆவி பறக்க காபியை அருந்திவிட்டு,  காரில் ஏறி பயணப்பட்டாள்.


இரவு வெகு நேரம் கழித்து உறங்கியதால் காலை ஒன்பதரை மணிக்கு மேல் கண் விழித்தான் ராம் சரண்.


அப்பொழுது தான் விழித்தெழுந்த குழந்தையோடு புத்துணர்வு பெற்று கூடத்திற்கு உணவருந்த வந்தவன், மூடியிருக்கும் தன்னவளின் அறை கதவை தொட , அது உடனே திறந்து கொண்டு அறையில் யாரும் இல்லை எனக் காட்ட, உடனே சிவகாமியிடம் விசாரித்தான் .


"காலைல வெறும் காபியை மட்டும் குடிச்சிட்டு, வேலை இருக்குனு  கிளம்பிட்டாங்க  ...  சமைச்சு முடிச்சிட்டேன் ... கொடுத்து விடலாம்னு பாத்தா இன்னும் ஃபோன் வரல ... ஃபோன் பண்ணா கால் போக மாட்டேங்குது ... அதான் என்ன பண்றதுன்னு தெரியாம இருக்கேன் ..." என்றார் சிவகாமி கவலையாக.


கேட்டுக் கொண்டிருந்தவனுக்கு கோபம் விறுவிறுவென்று உயர்ந்து விண்ணை முட்ட,


இவ என்னதான்  நினைச்சுகிட்டு இருக்கா .... நேத்து ராத்திரி கால் வீங்கி போயி நடக்க முடியாம அவ்ளோ கஷ்டப்பட்டா... இப்ப என்னடான்னா ரெஸ்ட் எடுக்காம கொட்ற பனில கிளம்பி போய் இருக்கா ....


என்னை புருஷனா தான் மதிக்கல மனுஷனாவது மதிச்சிருக்கலாமில்ல ... நேத்து கால் வீங்கி போனதுக்கு பார்த்து பார்த்து கவனிச்சா,  இன்னைக்கு காலையில சொல்லாம கொள்ளாம வேலைக்கு கிளம்பி போயிருக்கா ... இவ்வ்வள ... என உள்ளுக்குள் குமுறியபடி பற்களை நறநறவென்று கடித்தவன்,


"அக்கா சாப்பாட்ட பேக் பண்ணுங்க ... நான் ஃபேக்டரில போய் கொடுத்துட்டு அப்படியே ஆபீஸ் போறேன் ..." என்றான் காபி அருந்தி கொண்டே. 


அவசரகதியில் அலுவலகம் கிளம்பியவன், காரில் அமர்ந்ததும் அவளது அலைபேசிக்கு அழைப்பு விடுத்தான்.


அழைப்பு சென்று சேரவில்லை.  உடனே தொழிற்சாலை தொலைபேசிக்கு அழைப்பு விடுத்து பார்த்தான் ... அதுவும் போகவில்லை. உடனே மேனேஜரை தொடர்பு கொண்டான்.


"நம்ம ஃபேக்டரியோட ரெண்டு ட்ரான்ஸ்பார்மருமே நேத்து ராத்திரி பெஞ்ச மழை,  குளிர்ந்த காத்துல ஷார்ட் சர்க்யூட் மாதிரி ஏதோ ஆயி ரிப்பேர் ஆயிடுச்சு .... நிலச்சரிவு அதிகமானதால ஃபேக்டரி ஃபோனும் வேலை செய்ய மாட்டேங்குது .... கம்ப்ளைன்ட் கொடுத்திருக்கேன் ...

ஜெனரேட்டரை வச்சு தான் இன்னைக்கு காலைல ரெண்டு லாரி லோடை ஏத்தினோம்.... இன்னும் நாலு லாரி லோடு இருக்கு ... ஆனா ஜெனரேட்டரும் இப்ப வேலை செய்ய மாட்டேங்குது ...  ஃபேஸ் மாத்தணுமா என்னன்னு சரியா தெரியல ... ஆறுமுகத்துக்கு போன் பண்ணி இருக்கேன்...


மேடம் இவ்ளோ நேரம் எங்க கூட தான் இருந்தாங்க .....  மொபைல்ல சார்ஜ் போட மறந்துட்டாங்க போல ...பேட்டரி சார்ஜரும் எடுத்துட்டு வரலன்னு சொன்னாங்க ... என்னோடத கொடுத்திருக்கேன் ...


ஒரு முக்கியமான விஷயத்தை சொல்ல மறந்துட்டேனே ... மேடமோட ரூம்ல இருக்கிற கண்ணாடி  ஜன்னல்ல நேத்து அடிச்ச குளிர் காத்துல மரக்கிளை விழுந்து கொஞ்சம் பெரிய விரிசல் வந்துடுச்சு... அது மாத்தணும்னு ஆள கூப்பிட்டு இருக்கேன் ...." என அன்று காலையிலிருந்து தான் செய்த வேலைகள் அனைத்தையும் மேலாளர் முத்துராமன் ஒவ்வொன்றாக பணிவோடு விவரிக்க,  ராம் சரணுக்கு தேவையான அனைத்து பதிலும் அதில் கிட்ட,  ஓகே என்று கூறி அழைப்பை துடித்தவனுக்கு மீண்டும் கோபம் தலைக்கேறியது. 


தன்னவள் தானாக வந்து தன்னை தழுவி கொள்ள வேண்டும் , வேண்டாம் என்று உதவி தள்ளிய திருமண உறவை பலர் அறிய பறைசாற்ற வேண்டும் என்றெல்லாம் எண்ணிக் கொண்டு  ஊட்டிக்கு  வந்தவனுக்கு,  இந்தக் கணம் வரை அப்படி ஒரு சந்தர்ப்பம் அமையாமலே போனதோடு அவன் எண்ணி வந்ததெல்லாம் அவனே செய்ய வேண்டிய நிலைக்கு சூழ்நிலை தள்ளியதை  எண்ணி கடுகடுத்துப் போனான். 


அவன் அவளைத் தேடி ஊட்டிக்கு வந்து கிட்டத்தட்ட ஒரு வார காலம் ஆகப்போகிறது...


இந்த கணம் வரை  ஒருவித ஒதுக்கத்தை தான் கடைப்பிடிக்கிறாள் ...


அவனைக் காணும் போதெல்லாம் அவள் விழிகள் காதலயும் ஏக்கத்தையும் பறைசாற்றினாலும் , முன்பு போல் உரிமையாய் நெருங்காமல் உறவினர் போல் அவள் உபச்சாரம் செய்வதை அவனால்  ஏற்றுக்கொள்ள முடியவில்லை  ...


அவனாக அவளை நெருங்கும் பொழுது இணக்கம் காட்டி நெகிழ்கிறாள் ... மற்றபடி எப்பொழுதுமே அவளிடத்தில் ஒரு விலகல் தன்மை தான்  ...


அவர்களது திருமண வாழ்க்கை நீதிமன்ற வளாகத்தில் வலம் வந்து கொண்டிருந்தாலும் , பலர் அறிய மஹிக்காவிடம் அவளை தன்னவள் என அறிமுகப்படுத்தி அவர்களது திருமண வாழ்க்கையை மறைமுகமாக உறுதிப்படுத்தியது அவன் தான் ...


இதில் அவளைச் சொல்லி குற்றமில்லை .... மஹிக்காவிடம் தன் திருமண நிலைப்பாட்டை பறைசாற்ற வேண்டிய கட்டாயத்தால்  அவன்  அப்படி நடந்து கொள்ள வேண்டிய சூழல் ...


என்றாலும்,  தன்னவளின்  காதலுக்காகவும் அவர்களது திருமண பந்தத்திற்காகவும் அவன் தான் எல்லா தருணங்களிலும் மெனக்கெடுவதாக அவனுக்குத் தோன்றியது ...


அப்படியான சந்தர்ப்ப சூழலும் தவிர்க்க முடியாமல் அமைந்தது வேறு அவனை இம்சித்தது. 


சுருங்கச் சொன்னால் அவன் நினைத்து வந்தது ஒன்று நடந்து கொண்டிருப்பது முற்றிலும் வேறு ஒன்று என்பதே  அவனை நெருஞ்சி முள்ளாய் குத்தி கிழித்து  கொண்டிருந்தது....


மேம்போக்காக அவனது இந்த உணர்வினைக்  யோசித்தால்  திருமண வாழ்க்கையில் மனைவியிடம் தன் அகங்கார (Ego) உணர்வை பறைசாற்ற எண்ணுகிறான்  என்று  எண்ண  தோன்றும் ஆனால் அவனைப் பொருத்தமட்டில் ஒரு காதல் கணவனின் அடிப்படை எதிர்பார்ப்பு ... அவ்வளவே...


அவன் செய்தது இரு பிழைகள் தான்... அவள் வீட்டை விட்டுச் சென்றது தெரிந்தும் மூன்று மாத காலம் அவளைத் தொடர்பு கொள்ளாமல் இருந்தது , எடுத்ததும் விவாகரத்திற்கு சம்மதித்தது என்பது மட்டும் தான் ..


மற்றபடி இந்த தருணம் வரை, அவன் பலவாறு கேட்டும் அவன் வீட்டில் நடந்ததை  கூறாமல்  அவனை  விலக்கி நிறுத்தி இருப்பது அவள் தான் ...


இயல்பிலேயே சற்று கோபமும் தன்னகங்காரமும் கொண்டவனுக்கு இதெல்லாம் தன்மானத்திற்கு விழுந்த அடியாக  தோன்றினாலும்,  தளிர் மேனியோடு கர்ப்பவதியாக வலம் வரும் மனையாளை காண்கையில்  அந்த உணர்வுகள் எல்லாம் மனதின் ஓரத்தில் சென்று ஒளிந்து கொள்ள ஒட்டி உறவாடவும் முடியாமல்,  ஒதுங்கி நிற்கவும் முடியாமல் தவித்து போனான்.


நிலச்சரிவுக்கு வேலை நடந்து கொண்டிருந்ததோடு மழை பெய்ததால் சாலையில் சேரும் சகதியும் அதிகமாகிப் போக,  சுற்றி வர வேண்டிய நிலைக்கு ஆளாக்கப்பட்டதால் தொழிற்சாலையை வந்தடையும் நேரத்தை விட முக்கால் மணி நேரம் அதிகமாகிப் போனது.


அவன் அங்கு வரப் போவதாக மேலாளரிடம் தெரிவிக்காததால், அறை கதவை திறந்து கொண்டு பரபரப்பாக  நுழைந்தவனை நடுநிலையாக இருந்த பெரிய மேஜையின் முன்பு குஷன் நாற்காலியில் அமர்ந்திருந்தவள் சோர்வையும் மீறி ஆச்சரியதோடு நோக்கினாள்.


வந்தவன் ஒரு கணம் கூட தாமதிக்காமல்,


"என்ன லக்ஷ்மி இது ... நேத்து நைட் அவ்ளோ கஷ்டப்பட்ட...  இன்னைக்கு கொஞ்சம் கூட ரெஸ்ட் எடுக்காம கொட்ற பனில  இங்க என்ன பண்ற ..."  என்றான் காட்டமாக. 


ஓரிரு கணம் அங்கு அமைதி நிலவ, கம்மிய குரலை செருமியவள் 


"என்னை நம்பி மாமா,  அவரோட பிசினஸ்ல என்னை பார்ட்னரா  சேர்த்திருக்கிறாரு... சம்பளம் மட்டும் இல்ல லாபத்துலயும் பங்கு கொடுக்கிறாரு... அப்ப உழைச்சு தானே ஆகணும் ..." என்றாள்  அழுத்தமாக.



"ஏண்டி நீ மாசமா இருக்கேனாவது உனக்கு ஞாபகம் இருக்கா இல்லையா .... கொஞ்சம் கூட உடம்ப பாத்துக்காம என்னமோ பணத்துக்காக உழைக்கிறேன்னு சொல்ற ..."


"நீங்களும் உங்க குழந்தைகளும், ஏன் உங்க பரம்பரையே காலம் காலமா  கோடீஸ்வரங்க ..

ஆனா நாங்க அப்படி இல்லையே ... நான் உழைச்சு  சம்பாதிச்சா தான் என் தங்கச்சிக்கு கல்யாணம் பண்ண முடியும் .... எங்க வீட்ல கொஞ்சம் கடன் இருக்கு அதை அடைக்கணும் என் அம்மாவுக்கு உடம்பு சரியில்ல நல்லா ஹாஸ்பிடலுக்கு கூட்டிட்டு போய்  ட்ரீட்மென்ட் பண்ணனும் இதுக்கெல்லாம் எனக்கு பணம் வேணுமே..."


"ஓங்கி அறைஞ்சேனு வச்சிக்க தாங்க மாட்ட....  என்னமோ குழந்தைங்க என்னோடது மட்டும் மாதிரி பிரிச்சு பேசுற... இந்த குழந்தைங்களுக்கு அம்மாவே நீ தான டி .... உனக்கு என்ன... பணம் தானே வேணும் ... அதை நான் கொடுக்கறேன் ... உன் வீட்டு ஆளுங்களுக்கு  இதுவரைக்கும் நான்  செய்யாம இருந்திருக்கேனா ... ஏன் இப்படி வித்தியாசமா பேசற... உனக்கு என்ன தான் ஆச்சு ..."



" உங்களோட பணம் எனக்கு எதுக்கு ... நீங்க எதுக்காக என் குடும்பத்தை பார்த்துக்கணும் அடுத்த மாசம் எப்படியும் நமக்கு ஜட்ஜ்மெண்ட் வந்துடும் ... அப்புறம் நீங்க யாரோ நான் யாரோ ..." என்றாள் வெடுக்கென்று தழுதழுத்த  குரலில்.


"ஐயோ லக்ஷ்மி .... உனக்கு என்னடி ஆச்சு என்னென்னமோ பேசுற ... நான் எவ்வளவோ கேட்டும் எதுக்காக நம்ம வீட்டை விட்டு போனேன்னு இப்ப வரைக்கும் நீ  சொல்லவே இல்ல ... அதோட டிவோர்ஸ் கேட்டதும் நீ தான்,

இப்ப என்னவோ நான் டிவோர்ஸ் கேட்ட மாதிரியில்ல பேசற... சரி சொல்லு , எதுக்காக வீட்டை விட்டு போன..."


வெகு லேசாக கண்ணீர் திரையிட தலை குனிந்தவளின் முகம் வழக்கத்தை விட அதிகமாக சிவக்க ,


"ஏதோ பெரிய விஷயம் நடந்திருக்குனு புரியுது  என்னன்னு சொல்லு ..." என்று தன்மையாக மொழிந்தவனுக்கு காமாட்சியை சந்தித்ததை சொல்லலாமா என்ற எண்ணமும் உதயமாக,  தன்னவள்  இருக்கும் மனநிலையில் காமாட்சியை சந்தித்து உண்மையை தெரிந்து கொண்ட பின்பு தான் தன்னை தேடி வந்திருக்கிறான் என்றெண்ணி கொண்டு விட்டால் இன்னமும்  விபரீதமாகிவிடும் என்று அதற்கு முற்றுப்புள்ளி வைத்தான்.


அவள் அமைதியாக அசையாமல் உட்கார்ந்திருக்க ,


"சரி ... ரொம்ப ஸ்ட்ரெஸ் எடுத்துக்காத ... உனக்கா எப்ப சொல்லனும்னு தோணுதோ அப்ப சொல்லு ... "  என்றவன்


கூடிய சீக்கிரம் என்ன நடந்ததுன்னு நானே கண்டுபிடிக்கிறேன் டி....  என மனதோடு சொல்லிக் கொண்டு,


"இன்னும் ஒன்னுத்தையும் சொல்றேன் கேட்டுக்க... டிவோர்ஸ் வேணும்னு கேட்டது நீ... நான் இல்ல .... அடுத்த மாசம் ஜட்ஜ்மெண்ட்டே வந்தாலும் நீதான் என் வைஃப் அதுல எந்த மாற்றமும் இல்ல .... அதே மாதிரி  நான் தான் உன் ஹஸ்பண்ட். ... அதையும் எந்த காலத்துலயும் மாத்த விடமாட்டேன் ..." என்று முடித்தான் உடலை ஊசியாய் குத்திய குளிரை போக்க தன் இரு கரங்களையும் ஒன்றோடு ஒன்று அழுந்த தேய்த்தபடி. 


அவ்வளவு நேரம் அசையாமல் பொம்மை போல் அமர்ந்திருந்தவளின் முகத்தில் மெல்லிய புன்னகை முளைக்க, அதில் மயங்கினாலும் வெளிக்காட்டிக் கொள்ள விருப்பம் இல்லாமல், 


"இப்படி எல்லாம் பேசறதால உன் மேல கோவம் இல்லனு மட்டும் நினைச்சிடாத .... நீ காரணமே சொல்லாம என் ப்ரெண்ட்ஸ் , என் அப்பா முன்னாடி என்னை  ரிஜெக்ட் பண்ணதோட, மத்தவங்க என்னை சந்தேகப்படற மாதிரி குற்றவாளி கூண்டுல நிக்க வச்சிட்ட.... அத நான் எந்த காலத்துலயும் மறக்க மாட்டேன் ....  நீ நம்ம குழந்தைகளுக்காக என்னோட சேர்ந்து வாழ்ந்து தான் ஆகணும் ... இந்த ஜென்மத்துல மட்டுமல்ல ஏழு ஜென்மம் எடுத்தாலும் நான் உன்னை விடறதா இல்ல ..." 


அவனுக்கே உரிய கோபத்தோடு கூறி முடித்தவன்,


"சரி வா சாப்பிடலாம் .... சாப்பிடாம கூட கிளம்பி வந்திருக்க.... எனக்கு வர்ற ஆத்திரத்துக்கு... உன்ன......." என பற்களை நறநறவென்று கடித்தபடி அவள் முகம் நோக்கும் போது தான் ஏதோ சரியில்லை என்று பட,


"என்னடி ஒரு மாதிரி இருக்க ..." என்றான் அவளை நெருங்கி. 


மிகுந்த பயத்தோடு,


"கா.... கால் ரெண்டும் வீங்கி  போனதோடு குளிர்ல மரத்து போச்சு .....  உ... உடம்பெல்லாம் ரொம்ப  ஷிவரிங்கா இருக்கு ....  கால ஊணி எழுந்துக்கவே  முடியல..."  லேசான விம்மலில் வார்த்தைகள் வந்து விழ ,


"ஓ காட் ...." என்றவனுக்கு அப்போது தான் அவளது அறை ஜன்னல் உடைந்திருப்பதாக மேலாளர் சொன்னது நினைவுக்கு வர,  உடன் அங்கிருந்த கணப்படுப்பில்(Hearth) முற்றிலும் நெருப்பு அணைந்து  சாம்பல் மண்டி இருப்பது கண்களில் பட,  மின்சாரம் இல்லாததால் மின்சார கணப்புக்கு வழி இல்லாமல் போனது புரிய,


"ஒரு நிமிஷம் ..." என்ற படி பக்கத்து அறைக்கு விரைந்தவன் அங்கிருந்த கணப்படுப்பில் காய்ந்த விறகு சுள்ளிகளை போட்டு , பரபரவென்று பற்ற வைத்தான்.


ஒற்றைப் படுக்கையறை மற்றும் குளியலறை கொண்ட அந்த சிறிய அறையில்  ஐந்து நிமிடத்திற்குள்ளாகவே நெருப்பின் வெப்பம் வேகமாய் பரவ, அவள் இருக்கும் அலுவலக அறைக்கு வந்து


"இந்த ஊர்லயே பொறந்து வளர்ந்தவன்... என்னாலேயே இந்த குளிர் தாங்க முடியல .... பெரிய இவளாட்டம் கிளம்பி வந்துட்ட..." 


என பொரிந்து தள்ளிக்கொண்டே , மேஜையை  நகர்த்திவிட்டு, தான் அணிந்திருந்த ஜெர்கினை கழற்றி அவளது கைகளைப் பற்றி அணிவித்து விட்டவன்,  ஒற்றை முட்டியில் அவள் முன்பு மண்டியிட்டு  அமர்ந்து,  வீங்கி இருந்த அவளது கால்கள் இரண்டையும் சூடு பறக்க தேய்த்து விட்டான்.


ஜில்லென்று இருந்த அவளது கால்களில் ஓரளவிற்கு வெப்பம் பரவ,  ஸ்மரணை வந்ததும் மெல்ல எழ முயற்சித்தாள்.


நீண்ட நேரமாக ஒரே இருப்பில் இருந்ததால்,  கால்கள் உணர்வு பெற்றாலும் , அவளது உடல் எடையை தாங்கும் சக்தி பெறாமல் போக, தடுமாறியவளை  தாங்கிப் பிடித்தான்  அவளது கணவன். 


அவன் வரவில்லை என்றால் அவளது கதி அதோகதி தான் .... அலைபேசியில் உயிர்ப்பு இல்லை ... அடுத்தவர்களின் உதவியை நாடலாம் என்ற போது அவளது கால்கள் உணர்விழந்து ஒத்துழைக்க மறுக்க, எழ முடியாமல்,  அளவுக்கு அதிகமான குளிரில் வாடியபடி   விதியை நொந்து கொண்டே அவள் அமர்ந்திருக்கும் போது தான் அவளது அன்பன் அவளை தேடி வந்தான்.


கணவனை கண்டதும்,  உள்ளுக்குள் ஆயிரம் பட்டாம் பூச்சிகள் ஒருசேரப் பறந்தாலும்,  அருணாவின் மீது இருக்கும் ஆத்திரத்தால்  அவள் அமைதி காக்க,   வந்தவனோ,  தாட் புட் தஞ்சாவூர் என கோபத்தில் குதிக்க ஆரம்பித்தும், தன்நிலை கூற வந்தவள் கூறாமல் , அவனோடு மல்லுக்கட்டும் பணியில் ஈடுபட வேண்டிய நிலைக்கு ஆளாகிப் போனாள்.


தடுமாறி விழுந்தவளை  அழகாய் அள்ளிக் கொண்டவன்,  அடுத்த அறைக்குச் சென்று படுக்கையில் அமர்ந்து , தன் மடியில்  கிடத்திக் கொண்டான்.


எந்நிலையிலும் நிதானத்தை விடாதவன்,  அந்தத் தனிமையில் தன்னவளின் நெருக்கத்தில் சற்று தடுமாறித்தான் போனான். 


அவளது இடையில் படிந்த  அவன் கரமும்,   காட்டிய நெருக்கமும் அவளுள் மின்சாரம் பாய்ந்தது போலான உணர்வை கூட்ட,  மௌனமாக விழி தழைத்தவளின் வெட்கத்தை ரசித்தவன்,  இறுக்கி அணைத்துக் கொண்டு அவள் தோளில் இதழ் பதித்தான் .


கணவனின் சீரான உஷ்ண மூச்சுகளும்,  அவன் கரங்களின் தேடல்களும் அவன் எதிர்பார்ப்பை சொல்லாமல் சொல்ல,  தயக்கத்தோடே அவனது இறுகிய அணைப்பிலிருந்து நெளிந்தவாறே விலக முயன்றாள்.


ஆனால் அசைய கூட முடியவில்லை.


அவளது காது மடல்களில் உஷ்ண மூச்சை செலுத்திய படி,  கன்னத்தில் அழுத்தமாக முத்தமிட்டவன், அதன் வழுவழுப்பில் தொலைந்தே போனான்.


அங்கு மௌனம் மட்டுமே ஆட்சி மொழியாகி போனது.


இருவருக்குமே தவிப்பு தான் .


உணர்வுகள் காட்டாற்று வெள்ளமாக பெருகிக் கொண்டே செல்ல , இதுவரை தோன்றாத  உணர்ச்சியும் கிளர்ச்சியும் கூடி அந்த அழகிய பூம்பாவை புணரும் வேட்கையை கொடுக்க , ஏதோ ஒரு அதிர்வு திடீரென்று தோன்றி அவனை அடக்க,  சட்டென்று விட்டு விலகினான் .


என்னதான் அந்த அறையின் கணப்படுப்பு வெப்பத்தை கொடுத்தாலும்,  அதை அவள் உடல் உணர நேரம் எடுக்கும் என்பதால்,  அவளுள் உஷ்ணத்தை உருவாக்கி   நடுக்கத்தை குறைக்க எண்ணியே அவளை  மடியில் கிடத்தி அணைத்துக் கொண்டான்.


ஆனால் நீண்ட இடைவெளிக்கு  பின்பான அந்த நெருக்கம் , அவன் சிந்தையை தடுமாற வைக்க, அத்துமீற முயன்றவனின் அகத்தில் ஏதோ ஒரு உணர்வு அதிரடியாய் எட்டிப் பார்த்து அடக்க, சுதாரித்தவன்,  அவளை தன்னிடம் இருந்து பிரித்து படுக்கையில் அமர வைத்துவிட்டு எழுந்து நின்றான்.


மனையாளை நெருங்க துடிக்கும் ஆணவனின் தவிப்பும் தாபமும், அவன் கண் சிவப்பில் தெரிய, அத்துமீறி விடுவோமோ என்றஞ்சிய படி விலகி நின்று தலைக்கோதியபடி  ஏக்க பார்வை பார்த்தவனின் பாவனை,  அவனது கவர்ச்சியை மேலும் கூட்ட, அதில் மயங்கியவள்,  எழுந்து  சென்று அவன் மார்பில் முகம் புதைத்துக் கொண்டாள். 



ஸ்ரீ-ராமம் வருவார்கள் .....































































































  





Comments

  1. கதை மிகவும் அருமை அக்கா... லக்ஷ்மி எப்பொழுது suspense சொல்ல போறா

    ReplyDelete
  2. Supperrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrr

    ReplyDelete

Post a Comment