ஸ்ரீ-ராமம்-65

 அத்தியாயம் 65 


தாய் சொன்னது புரிந்தாலும்,  ஏனோ உடலுக்கு ஒவ்வாமையை ஏற்படுத்தும் உணவு பொருள் போல், ரிஷியின் உள்ளுணர்வு அதனை ஏற்றுக் கொள்ள மறுக்க,


"பை மிஸ்டேக்,  ஸ்ரீலக்ஷ்மின்ற பேர்ல இருக்கிற வேற யாரையாவது  பத்தி கூட பிரின்ஸ்பல் மேடம்  சொல்லி இருக்கலாம் இல்ல ...."  

என்றான் சற்று முன் கேட்ட விஷயம் ஏதாவது ஒரு வகையில் பொய்யாகி விடாதா என்கின்ற நப்பாசையில். 


மகனின் மன வேதனையை புரிந்து கொண்ட தாய்,


"இங்க பாரு ரிஷி ... பிரின்ஸ்பல் மேடம் சோனாவோட டீச்சர் ஸ்ரீலட்சுமியை பத்தி தான் சொன்னாங்க....  சில விஷயங்கள் நமக்கு பிடிக்கலன்னாலும் ஏத்துக்கிட்டு தாம்ப்பா ஆகணும்...  அந்தப் பொண்ணு கொடுத்து வச்சது அவ்ளோ தான் ... இனிமே இந்த விஷயத்தை பத்தி  யோசிக்காத புரிஞ்சுதா..."  என மகனை தேற்றிவிட்டு உடல்நிலை சரியில்லாமல் இருக்கும் கணவரை கவனிக்க சென்று விட்டார். 


"எப்படியாவது ஸ்ரீலட்சுமி மிஸ்ஸ  கன்வின்ஸ் பண்ணி , உங்களுக்கு ஷாதி(Shaadi)பண்ணி வச்சு, என் சித்தியா இந்த வீட்டுக்கு கூட்டிட்டு வந்துடணும்னு ரொம்ப ஆசையா இருந்தேன் ... கடைசில இப்படி ஆயிடுச்சே சித்தப்பா ..."  கண் கலங்கிய அக்கான்ஷா ,


"இப்ப எல்லாம் ஸ்கூலுக்கு போகவே பிடிக்கல சித்தப்பா ...  புதுசா வந்திருக்கிற மேத்ஸ் டீச்சர் கடமைக்கு கிளாஸ் எடுத்துட்டு போறாங்க ... அவங்க பேசுறது முன்னாடி இருக்கிற ரெண்டு பெஞ்சுக்கு  கூட சரியா  கேட்க மாட்டேங்குது ...

ஸ்ரீலட்சுமி மிஸ் கிளாஸ் எடுத்தா , கடைசி பெஞ்ச்ல இருக்கிறவங்களுக்கு கூட தெளிவா கேட்கும் ... அருமையா புரியிற மாதிரி சொல்லிக் கொடுப்பாங்க ...

பொதுவா ஸ்டூடண்ஸ் யாராவது ஃபெயில் ஆயிட்டா டீச்சர்ஸ் ஏன் படிக்கலன்னு கேட்பாங்க ... இல்லன்னா ஒரு படி மேல போய், எல்லாருக்கும் ஒரே மாதிரி தான் சொல்லிக் கொடுக்கிறேன் மத்த ஸ்டூடண்ஸ்  எல்லாம் பாஸ் பண்றாங்க  நீ மட்டும் ஏன் ஃபெயில் ஆனனு கேட்பாங்க ... ஆனா லட்சுமி மிஸ், எல்லாருக்கும் புரியிற மாதிரி சொல்லிக் கொடுக்க தெரிஞ்ச எனக்கு உனக்கு புரியிற மாதிரி சொல்லிக் கொடுக்க தெரியல ... மொதல்ல உனக்கு என்ன புரியலன்னு சொல்லு, நான் உன்னை புரிஞ்சுக்கிறேன் அப்புறம் உனக்கு புரியிற மாதிரி சொல்லிக் கொடுக்க முயற்சி பண்றேன்னு பொறுமையா அந்த ஸ்டூடன்ட் கிட்ட  சொல்லுவாங்க ...படு தத்தியான ஸ்டூடன்ட்ட கூட அவங்களால  மேத்ஸ்ல பாஸ் பண்ண வைக்க முடியும் .... ஒரு கிளாஸ்ல 60 ஸ்டூடண்ஸ் இருந்தா 60 ஸ்டூடண்டுகாகவும் உழைப்பாங்க... எந்த வகையிலும் காம்ப்ரமைஸ் ஆக மாட்டாங்க ..."

என சிறியவள் தன் மனம் கவர்ந்த ஆசிரியரின் புகழ் பாடி கொண்டே செல்ல, 

"அவ்ளோ தெளிவா எதுக்கும் காம்ப்ரமைஸ் ஆகாம இருந்தவங்க, இப்ப எதுக்காக காம்ப்ரமைஸ் ஆயி மாமனாரோட கிளம்பி போனாங்க ..." என்றான் ரிஷி வெடுக்கென்று  கோபத்தில்.


"அது .... அ... ஒரு வேளை கன்சீவ் ஆனதால போயிருக்கலாமில்ல சித்தப்பா  ..."


"ஐயம் டேம் ஷூர்... தட் வாஸ் அ மேரிட்டல் ரேப்... அப்படி கன்சீவ்வானதுக்காக காம்பரமைஸ் பண்ணிக்கிட்டு  போகணுமா ..." என தன்னை மறந்து கூறியவனின் விழிகளில் உறைந்து நிற்கும் இளையவளின் முகம் விழ, உடனே சுதாரித்தவன்,


"சோனா, எத பத்தியும் யோசிக்காம   ஒழுங்கா ஸ்கூலுக்கு போய் படிக்கிற வழிய பாரு... எதை எப்படி செய்யணும்னு எனக்கு நல்லா தெரியும் கூடிய சீக்கிரம்  உன்னோட சித்தியா ஸ்ரீலட்சுமி இந்த வீட்டுக்கு வருவாங்க ...போய் நிம்மதியா தூங்கு  ..." என  பேச்சை மாற்ற,


"நைட் போட வேண்டிய டேப்லெட்ட தாத்தா  எடுத்துக்கிட்டாறான்னு போய் பாத்துட்டு, அப்புறம் தூங்கறேன் சித்தப்பா ..."  என்ற  இளையவள்  அமர்நாத் அறை நோக்கி செல்ல , அதுதான் சந்தர்ப்பம் என அவள் அறைக்கு சென்றான் ரிஷி. 


அங்கு அக்கான்ஷா ஸ்ரீலட்சுமியோடு இணைந்து எடுத்துக்கொண்ட பெரிய புகைப்படம்  சுவரில் நடுநிலையாக மாட்டியிருக்க,  அதனை  வைத்த கண் வாங்காமல் பார்த்தவன் 


"கோதுமை நிறம்,  குழந்தை மாதிரி சருமம், முழங்கால் வரைக்கும் தலைமுடி, சிற்பம் மாதிரி உடம்பு , அதுல மயில் இறகு மாதிரி  காட்டன் புடவை, அத கண்ணியமா கட்டியிருக்கிற விதம், பாடத்தை தவற அதிகம் பேசாத செப்பு வாய் ,  வார்த்தைகள்ல உணர்த்த முடியாத நுண் உணர்வுகள கூட கதை கதையா  சொல்ற கண்ணு .... மல்லிப்பூ நாசி, அதுல இருக்கிற  ஒத்தக்கல் மூக்குத்தி ...  

ம்ம்ம்... நீ பெரிய அழகி ... உன் நடத்தையும் குணத்தையும் சேர்த்து தான் சொல்றேன் .... 

ஆனா என்ன ...  நான் உன்னை காலம் கடந்து சந்திச்சதுக்கு  கடவுள் மேல பழி போடறதா இல்ல  கர்மா மேல பழி போடறதான்னு  தெரியல ....  

கடவுள் மேல கோவம் கோவமா வருது,  பொம்பளை  பொறுக்கி, பொறம்போக்கு , குடிகார பரதேசிகளுக்கு தான் உன்னை மாதிரியான தங்கமான பொண்ணுங்கள கட்டி வச்சு கஷ்டப்படுத்தறாரு ....  

நிம்மதியா நேர்மையா வாழணும்னு நினைக்கிற என்னை மாதிரியான ஆளுங்களுக்கு , லிவின் ரிலேஷன்ஷிப்ல கண்டவனோடயும் ஊர சுத்துறவளும், தண்ணி தம்மு கஞ்சான்னு போதையிலயே காலத்தை கழிக்கிறவளயும்  கட்டி வச்சு சாவடிக்கிறாரு....

(பெருமூச்சொன்றை விடுத்து)  ஓகே ... இதுவரைக்கும் நடந்தது கடவுள் கையில இருந்துச்சு... அதனால அவரு இஷ்டத்துக்கு ஆட்டம் போட்டாரு ... இனிமே நடக்க போறது என் கையில  இருக்கு ...


நான் இனி யாருக்காகவும் எதுக்காகவும் உன்னை விட்டுக் கொடுக்க தயாரா இல்லை ...

நிச்சயமா உன் முதல் குழந்தை மட்டுமல்ல,  இப்ப நீ கன்சிவா இருக்கிறது கூட  உன் சம்மதம் இல்லாம தான் நடந்திருக்கும்னு தோணுது ...


பொறுமையா பொறுப்பா இருக்கிற நீயே டிவோர்ஸ்க்கு அப்ளை பண்ணியிருக்கேன்னா, அவன் உடம்பாலயும் மனசாலயும் உன்னை எவ்ளோ கஷ்டப்படுத்தி இருப்பானோ... நெனச்சு  பார்க்கவே கஷ்டமா இருக்கு லட்சுமி ...


இப்ப நீ கன்சீவா இருக்கிறத காரணம் காட்டி உன் மாமனார் கூட்டிட்டு போயிருக்காருனு கேள்விப்பட்டேன் .... உனக்காக பேச யாரும் இல்லன்னு தானே ஆளாளுக்கு ஆட்டம் போட்டு கிட்டு இருக்காங்க ..

கவலைப்படாதே நீ எங்க இருந்தாலும்  தேடி வந்து எப்படியாவது  உன்னை என் கூடவே கூட்டிட்டு வந்துடுவேன்...." 

என மானசீகமாக பேசுவதாக எண்ணிக்கொண்டு, அவள் புகைப்படத்தை பார்த்து மெய்யாகவே வாய்விட்டு பேசிக் கொண்டிருந்தான்.


அவன் ஸ்ரீலட்சுமியை பற்றி கேட்டறிந்து கொண்டதை வைத்து,


ஸ்ரீலட்சுமியின் கணவன் அவளைப் போல சாதாரண பொருளாதாரக் குடும்பப் பின்னணியை கொண்டவன்.... 

கம்பீரமற்றவன் ,  மது அருந்துபவன்,  பெண் பித்தன் , வேலை வெட்டி இல்லாதவனை பெற்றோரின் வற்புறுத்தலுக்காக  மணந்திருக்கிறாள் .... 

திருமணமாகி மூன்று ஆண்டுகளில், முதல் குழந்தைக்கு ஒரு வயதே ஆகி இருக்கும் நிலையில்  அடுத்த குழந்தையை அவள் சுமந்து கொண்டிருக்கிறாள் என்றால் அவன் நிச்சயம் காமுகனாகத்தான் இருப்பான் ...

 தினமும் மது அருந்திவிட்டு  பலதரப்பட்ட பெண்களோடு படுக்கையில் பொழுதைக் கழித்துவிட்டு, வீட்டிற்கு வந்து விருப்பமில்லாத மனையாளை படுக்கைக்கு அழைத்து, அவள் வர மறுத்த போது, அடித்து உதைத்து சித்திரவதை செய்பவனாக இருப்பான் ...

என்றெல்லாம்  சினிமாவில் பார்த்தது,  நண்பர்கள் வட்டத்தில் கேள்விப்பட்டது, தினசரிகளில் படித்ததை வைத்து அவளது விவாகரத்திற்கான  காரணத்தை  ஊகித்த  வியாபார வித்தகனுக்கு,  பொதுப்படையான காரணங்களை காட்டிலும் , குடும்ப சூழலுக்கு ஏற்ப, மனித சுபாவங்களுக்கு ஏற்ப காரணங்கள் வேறுபடும்  என்றும், அதீத அன்பு கூட சில சமயம் அளவுக்கு அதிகமான மன அழுத்தத்தை கொடுத்து  விவாகரத்துக்கு வழிகோலும்  என்றும் தெரியாமல் போனது தான் விந்தையின் உச்சம். 

வகையற்று வாழ்கிறாள் என்றெல்லாம்  எண்ணினானே  ஒழிய அவள் வழிவழியாய் வந்த ஆத்மார்த்தமான ஜென்ம பந்தத்தில் மூழ்கி திளைத்து  கொண்டிருக்கிறாள்  என்று  துளியும் எண்ணவில்லை ....

அல்லலுறுபவளை அவசரமாக  கண்டு அன்பு காட்டி அரவணைத்து  அள்ளி வர வேண்டும் என்று எண்ணினானே ஒழிய , அவள் அன்பனை   விட,  எத்துணை  பெரிய  பராக்கிரமசாலியாக இருந்தாலும், அவளது சிந்தையின் சில்லுகளை கூட தொட முடியாது என்றவன் அறிந்திருக்கவில்லை  ...


முகம் தெரியாத அவள் கணவனை தரம் அற்ற  வார்த்தைகளால் அர்ச்சித்துவிட்டு 


"கவலைப்படாத லஷ்மி, கொஞ்ச நாள் பொறுத்துக்க... கூடிய சீக்கிரம் உன்னை தேடி வந்துடுவேன் ...."


சித்திரவதைகளை சகித்து  கொண்டு ஸ்ரீலங்காவில் சிக்கி தவிக்கும்  தன் சீதையை மீட்பதாக எண்ணிக் கொண்டவனுக்கு தெரியாது,  அவள் தனது சீதாபதிதோடு அயோத்தி என்னும் ஆலயத்தில்  தான் ஆனந்தமாக வசித்துக் கொண்டிருக்கிறாள்  என்று ...


தன் தமையன்  மகள்,  தன் தாயுடன் பேசிக் கொண்டு வரும் அரவம் கேட்டதும், அந்த இடத்தை விட்டு துரிதமாக காலி செய்தவன், தன் அறைக்குச் வந்து வழக்கமாக அவனது நிறுவனத்திற்காக பணிபுரியும் துப்பறியும் நிறுவனத்தை தொடர்பு கொண்டு,


"மனோஜ் .... நான் ஒருத்தவங்களோட டீடைல்ஸ் அனுப்பறேன்... அவங்க இப்ப ஊட்டில இருக்காங்க ...  ஊட்டில எங்க இருக்காங்க ... அவங்க வீட்டு அட்ரஸ் ... அவங்க கூட யார் யாரெல்லாம் இருக்காங்க... அவங்க எல்லாம்  எங்க வேலை செய்றாங்கனு எனக்கு எல்லா டீடைல்ஸும்   தெரிஞ்சாகணும்.."  என்றவன்,  ஸ்ரீலட்சுமியின் பள்ளி முகவரி மற்றும் கோயம்புத்தூரில் இருக்கும் அவளது இல்ல முகவரியை வாட்ஸ் அப் குறுஞ்செய்தியாக அனுப்பினான்.


அடுத்த 10 நிமிடத்திற்கெல்லாம் இணைப்பில் வந்த மனோஜ்,


"சார் ....  லாஸ்ட் டைம் மாதிரி  கென்யா டைமண்ட் கேங்ஸ்டர்ல யாரையாவது பத்தி இன்ஃபர்மேஷன் கலெக்ட் பண்ண சொல்லுவீங்கன்னு நினைச்சேன் .... போயும் போயும் ஒரு பொண்ண பத்தின டீடைல்ஸ் கலெக்ட்  பண்ண சொல்றீங்க....  அதுவும் ஒரு ஸ்கூல்  டீச்சர்... ஏன் சார் ..."


"காரணம் கேட்காத... சொன்னத செய் ...." என்றவன்


"அவங்கள பொண்ணுன்னு சொல்லாத மரியாதையா சொல்லு ..."என்றான் கடின குரலில். 


"ஓகே சார் ... இன்னும் ஒரு  ரெண்டு மூணு நாளுக்குள்ள எல்லா டீடெயில்ஸ்யும் அனுப்பிடறேன் சார்..."  என எதிர் முனையில் மனோஜ்  பவ்யமாக முடிக்க, லேசான கர்வத்தோடு  வெற்றி புன்னகை பூத்தான் ரிஷி, ஸ்ரீலட்சுமி உடனான சந்திப்பு அவ்வளவு எளிதாக நடைபெறப் போவதில்லை என்றும்,  நடைபெறும் போது சகல விதங்களிலும்  அவன் அளவிற்கு,  ஏன் அவனை விட ஒரு படி மேலாக இருக்கும் ஒருவனைத் தான் சந்திக்கப் போகிறான் என்றும் அறியாமல். 




முந்தைய தினம் நடைபெற்ற  வீராவின் திருமணத்தில் கலந்து  கொண்டு விட்டு ஊட்டிக்கு திரும்பும்   போது,  ஸ்ரீலட்சுமி மகிழ்ச்சியாக மட்டுமல்ல நிம்மதியாகவும் இருந்தாள்.


மஹிக்காவை எண்ணி அவள் பயந்ததெல்லாம்  ஒன்றுமில்லாமல்  போனதோடு, கணவன் காட்டிய நெருக்கமும் அவளை நெகிழச் செய்திருக்க, அதன் வெளிப்பாடாக முகமெங்கும் மத்தாப்புகளாய் 

லேசான வெட்கத்தோடு  அமர்ந்திருந்தவளை கீழ்கண்களால் ஆழ்ந்து ரசித்தபடி காரை செலுத்தினான் ராம்சரண்.


மலைப்பயணம் பழகிய ஒன்றுதான்  என்றாலும்,  மசக்கையின் காரணமாக குமட்டல் , வாந்தி  படுத்தியெடுக்க சோர்ந்து போய்விட்டாள் பாவை.


அவள் நிலைமையை அறிந்து பொறுமையாக காரை செலுத்தியவன்,  அவள் காரை நிறுத்த சொல்லும் போதெல்லாம் நிறுத்தி வாந்தி எடுப்பவளுக்கு தண்ணீர் கொடுத்து உதவியோடு எலுமிச்ச பழ சாறை வாங்கி பருகக் கொடுத்து தேற்றினான்.


ரங்கசாமியும் மருமகளின் நிலைமையை புரிந்து கொண்டு ராம்சரணின் காரை பொறுமையாக பின் தொடர்ந்ததோடு , வீடு போய் சேரும் வரை பேத்திக்கு விளையாட்டு காட்டி தன்னுடனேயே  இறுத்தி கொண்டார் .


ஒரு வழியாக ராம்சரணின் குடும்பம் வீடு வந்து சேரும்போது ஆதவன் தன் கிரணங்களை சுருக்கிக் கொண்டு நிலா மகள் வருவதற்கு ஏதுவாக வழிவிட்டு ஓய்வெடுக்க சென்று விட்டான்.


லட்சுமி உடலால் சோர்ந்திருந்தாலும்   கணவனின் அருகாமையும் அனுசரணையும் அவளுள் வடிந்திருந்த தெம்பையும் உற்சாகத்தையும்  மீட்டெடுக்க பயணக் களைப்பும்,  மசக்கை குமட்டலும் முற்றிலும் காணாமல் போய் ஏதோ ஊக்க மருந்து குடித்தது போல்  ஓய்வெடுக்காமல் சிவகாமியுடன் இரவு உணவு தயாரிப்பதில்  ஈடுபட்டாள்.



கணவன், மாமனார், குழந்தையை  அமரச் செய்து அவள் இரவு உணவு பரிமாறத் தொடங்க,


" நீயும்  எங்களோடவே சாப்பிடும்மா..." 


என ரங்கசாமி வாஞ்சையாக கூற,  மாமனாரின் வார்த்தையை மறுக்க மாட்டாமல் அவளும் அவர்களோடு அமர்ந்து உண்ண தொடங்கினாள் .


"நான் நாளைக்கு ஒரு முக்கிய டீலரை  மீட் பண்ண ஏற்காடு போறேன்  ... வர மூணு நாள் ஆகும் ..." என்றார்   ரங்கசாமி பொதுப்படையாக.


சற்று முன் பயணத்தின் போது கண்ணுற்ற மகன் மருமகளுக்கிடையே முளைத்திருக்கும் அன்னியோன்யத்தை மேலும் அதிகப்படுத்தும் எண்ணத்தில், இல்லாத பயணத்தை அவர் திடீரென்று உருவாக்கிக் கொள்ள, அதனை இளையவர்கள் புரிந்து கொண்டார்களோ இல்லையோ, சிவகாமி சரியாகப் புரிந்து கொண்டார்.


ராம்சரண் ஊட்டிக்கு வந்து கிட்டத்தட்ட 4 நாட்களே  ஆன நிலையில்,  கணவன் மனைவி இருவரும் எதிர் எதிர்  அறையில் தாங்கிக் கொண்டு  இயல்பாக கூட உரையாடாமல் தத்தம் பணிகளில் கவனத்தை செலுத்துவதும்,  குழந்தையோடு தனித்தனியே நேரத்தை கழிப்பதுமாய்  இருப்பதை பார்த்து இருவருக்கும் இடையே ஏதோ பிணக்கு என்பதை அறிந்து கொண்டார் சிவகாமி.


அந்த வீட்டுப் பெரியவர் ரங்கசாமியே அதனைக் கண்டும் காணாமல் சமரச முயற்சியிலும் இறங்காமல் இருக்கும் போது, தன்னுடைய தராதரத்திற்கு அது குறித்து விவாதிப்பது தவறு என்றெண்ணி மன வருத்தத்தோடு தள்ளி நின்றார்.


திருமணத்திற்காக மதுரைக்கு சென்று விட்டு திரும்பியதில் இருந்து லட்சுமியின் கண்கள் கள்ளத்தனமாய் கணவனை ஏறிடுவதும்,  அவனும் எங்கோ பார்ப்பது போல் அவளையே பார்வையால் பின் தொடர்வதையும் கண்டும் காணாமல் கண்டு கொண்டவருக்கு , அந்த இணக்கம் நிம்மதியை தர,  உடன் ரங்கசாமியின் திடீர் திட்டமும் பிடித்துப் போக, நல்லது நடந்தால் சரி என்றெண்ணி அமைதியானார்.


அதற்கு மேல் ரங்கசாமி இயல்பாக வியாபாரத்தை பற்றி சில விஷயங்களை பேசிவிட்டு,  தட்டில் வைத்திருந்த இரு இட்லிகளில் முக்கால் இட்லியை தன் சின்னஞ்சிறு கைகளால் கொறித்துக் கொண்டிருந்த குழந்தையோடு சிறிது நேரம் செலவிட்டு சாப்பிட வைத்துவிட்டு தன் அறைக்குச் சென்றார்.


ஐந்தாம் மாதம் கடந்து விட்டதால், அவள் வயிறு நன்றாகவே பெருத்திருக்க , முன்பு போல் குழந்தையை அள்ளிக் கொள்ளவோ, அதனோடு தரையில் அமர்ந்து விளையாடவோ முடியாததால், பாசம் பொங்கி வழிந்தாலும் உடல்நிலை ஒத்துழைக்காததால் குழந்தையை தன்னிடமிருந்து  சற்று  தள்ளி நிறுத்தி இருந்தாள்.


 முதலில் சற்று அடம்பிடித்த குழந்தை , பிறகு தந்தைக் காட்டிய  அன்பிலும் அரவணைப்பிலும்  தாயைப் மறந்து தந்தை பாசத்தில் திளைக்க,  அது பல வகையில் அவளுக்கு  நன்மை பயப்பதாக அமைந்துவிட,  தந்தை மகளின் பிணைப்பில் தலையிடாமல் தள்ளி நின்று ரசிக்கத் தொடங்கினாள்.


இரவு உணவிற்கு பிறகு வழக்கம் போல் இருவரும் தத்தம் அறைகளுக்குச் சென்று தங்களது பணிகளில் கவனம் செலுத்த,  குழந்தையோ இரு அறைக்கும் இடையே பொம்மையும் கையுமாய் நடைபயின்று  கொண்டிருந்தது. 


தன் அலுவலக வேலைகளை அவசர அவசரமாக முடித்துவிட்டு,  குதலை பேசும் தன் மழலையோடு மனம் விட்டு பேசி மகிழ்ந்தவன் 


"அம்மா என்னடா பண்ணிக்கிட்டு இருக்கா...."  என்றான் மனையாளை பற்றிய சிந்தனையில் மெல்ல மிதந்து .



திக்கி திணறிய குழந்தை,


"தண்ணில காலு ஸ்விம் பண்ணறா.." 

என தான் பார்த்ததை கூற,  புரியாமல் விழித்தவன்


" என்னாது தண்ணீல நீச்சல் அடிக்கிறாளா .... அதுவும் இப்ப ... நீ பார்த்தியா ..."


" ம்ம்ம்ம்... அம்மா ஸ்விம் பண்ணுது..." என்றாள் அவன் பெண்ணரசி பலமாக தலையை ஆட்டி.


எதோ சரி இல்லை என்று பட,  இரவு மணி பத்தை கடந்திருக்க , அவள் அறைக்குச் செல்லலாமா  வேண்டாமா என்று பட்டிமன்றம் நடத்தியவன்,


" என் பொண்டாட்டி ரூமுக்கு போக யார் கிட்ட பர்மிஷன் வாங்கணும் ...." என தனக்கு தானே மொழிந்தபடி , குழந்தையை அள்ளிக்கொண்டு ஒருகளித்திருந்த அவளது அறை கதவை திறந்து கொண்டு அறைக்குள் பிரவேசித்தான்.


எதிர்பாராத அவனது வரவைக்கண்டு கட்டிலில் அமர்ந்திருந்தவளின் முகத்தில் இன்ப அதிர்ச்சியும், மெல்லிய காதலும் இழையோட அப்போது தான் அவள் செய்து கொண்டிருந்த வேலை அவன் கண்ணில் பட்டது .


நீண்ட தூர பயணத்தை மேற்கொண்டிருந்ததால் அவளது பாதங்கள் இரண்டும் அளவுக்கு அதிகமாக வீங்கி லேசான வலியையும் குடைச்சலயும் கொடுத்திருக்க,  அதற்கு முதலுதவி செய்யும் விதமாக சிறிய பக்கெட்டில் வெந்நீரை கொண்டு வந்து வைத்துக் அதில்  சிறு துண்டை அமுழ்த்தி எடுத்து ஒவ்வொரு  பாதத்திலும் வைத்து  தனக்குத்தானே ஒத்தடம் கொடுத்துக் கொண்டிருந்தாள்.


பருத்த வயிறு தடையாக இருந்ததால்  குனிய  அவள்  மிகவும் சிரமப்பட  பார்ப்பதற்கு பாவமாக இருக்க,  அதனை அப்படியே வெளிப்படுத்தினால் அவன் ராம்சரண் அல்லவே....


"ஏண்டி குத்துக்கல்லாட்டம் எதிர் ரூம்ல தான வெட்டியா  உட்கார்ந்துகிட்டு இருக்கேன் ... ஒரு வார்த்தை சொன்னா , வந்து  இதையெல்லாம் செஞ்சு கொடுக்க மாட்டேனா ...  இன்னைக்கு ஊட்டிக்கு வரும் போதும் வழிநெடுக்க வாந்தி எடுத்துக்கிட்டு தானே வந்த .... கூட இருந்து ஹெல்ப் பண்ணாமலா போயிட்டேன் ..." என வார்த்தைகள் வீரியத்தோடு வந்து விழுந்தாலும்,  பார்வை மட்டும்  அவள் மீது வாஞ்சையாக படிய, அருகில் இருந்த மொடாவை இழுத்து போட்டு அமர்ந்து கொண்டு, அவள் பாதத்தை பற்றி தன் மடி மேல் வைத்து ஒத்தடம் கொடுக்கத் தொடங்கினான்.


பல சந்தர்ப்பங்களில்,  அவர்களது பிரத்தியேக நேரங்கள் உட்பட, அவளது பாதத்தை பற்றி இருக்கிறான்...  ரசித்திருக்கிறான்... லயித்திருக்கிறான் .....


அப்போதெல்லாம் தோன்றாத அதீத உணர்ச்சியும் அடிவயிற்று சிலிர்ப்பும் தற்போது தோன்றி அவளை அலைகழிக்க,  தன்னை மறந்து குழைந்தாள் .


நகப்பூச்சு ஏதும் இல்லாமல் மெட்டி மட்டுமே இருந்த அந்த பஞ்சு  பாதங்கள் அவனைப் பித்தம் கொள்ள செய்ய,  முத்தமிட எத்தனிக்கும் போது அவன் மழலைப் பின்புறமாக அவன் கழுத்தைக் கட்டிக் கொண்டு இழுக்க, அந்த செய்கையில் கணவன் மனைவி இருவருமே சுயம் உணர்ந்து சுதாரித்துக் கொண்டனர். 



திருமணமான புதிதில் மனையாளை நெருங்கும் போதெல்லாம் தோன்றும் தவிப்பும் தகிப்பும் , தற்போது தோன்றி அவன் உடலில் உஷ்ணத்தைக் கூட்ட, சிரமப்பட்டு சகித்தபடி, அருகில் இருந்த  பூந்துவலையை எடுத்து  ஒத்தடம் கொடுத்த பாதங்களை   நன்றாகத் துடைத்து, யூகலிப்டஸ் எண்ணையை தடவி  சாக்ஸ் அணிவித்து விட்டு உயர்ந்தவனின் விழிகள்,  அவனையே நோக்கிக் கொண்டிருந்த விழிகளோடு கலக்க, அவன் உயிர் உருவும் பார்வையின் காந்த மின்னல்கள் , அவள் உடல் எங்கும் மென் தீ மூட்ட,  வெடுக்கென்று முகம் திருப்பிக் கொண்டாள் தன்னுணர்வை காட்டிக் கொள்ள விரும்பாமல்.


படுக்கையில் அமர்ந்திருந்தவளை  நெருங்கி  பாந்தமாக படுக்கச் செய்வதற்கு ஏதுவாக ,  தலையணைகளை  சரி செய்யும் போது அவன் விழிகள் அவளது பக்கவாட்டு முக அழகை வெகுவாக ரசிக்க,  கணவனின் நெருக்கமும் அவனுக்கான பிரத்தியேக வாசனையும் அவள் நாசியை தாண்டி நுரையீரலை ஆக்கிரமித்து கிறுகிறுக்க செய்ய,  மெல்லிய துடிப்பு அவள் உடலில் கூடி அடங்க,  அதனை உணர்ந்தவனின் இதழ்கள் மென் புன்னகை பூத்தபடி  முகம் நோக்கி குனிந்து, அவளது பஞ்சு இதழில் கவி பாட நெருங்கும் போது, குழந்தை கையில் இருந்த மின்னணு தொழில்நுட்ப விளையாட்டு சாதனம் வீரிய கதியில் ஒலி எழுப்ப,  உணர்வுகளின் பிடியில் சிக்கி இருந்த இருவருமே நிகழ் உலகிற்கு திரும்பிய கணத்தில்  

"ப்பா.... தூங்க வர்து... " என்றது குழந்தை தளர்வாய்.


இளையவர்களின் விழிகள் நான்கும் ஏக்கமாய் ஒன்றை ஒன்று உரசிக் கொள்ள,  ஆழப் பெருமூச்செடுத்து தன் தலை கேசத்தை அழுந்தக்கோதியவன், குழந்தையை அள்ளிக்கொண்டு தன்னவளின் விழிகளை பார்த்துக் கொண்டே தன் அறை நோக்கி நடந்தான். 


இருவரின் எதிர்பார்ப்பும் பார்வையால் பரிமாறிக் கொண்டாலும்,  சொல் வடிவம் கொடுக்க சுய கௌரவம் தடுத்ததால், தனிப் படுக்கையில் தஞ்சமடைந்தனர்.


குழந்தை படுத்த பத்தாவது நிமிடத்தில் உறங்கிப் போக,  உறக்கம் வராமல் புரண்டு புரண்டு படுத்தான் அவளவன் .


கர்ப்ப கால மாற்றத்தால் உடலும் மனமும் உணர்வுக்குவியல்களால் நிரம்பி வழிய,  கணவனின் அருகாமைக்காக மனம் ஏங்கித் தவிக்க, காலை வீராவின் திருமணத்திலிருந்து தற்போது நடந்தது வரை எண்ணிப் பார்த்தவளுக்கு அவன் தான் கொண்டிருக்கும் காதலை தானாக முன்வந்து பலவிதங்களில் உரைத்ததோடு அவளை உணரச் செய்ததும் நிறைவை தர,


எல்லா நேரமும் அவரா தான் இறங்கி  வரணுமா.... நானா  ஏன் அவர்கிட்ட போகக்கூடாது ... என் வீட்டுக்காரரோட போய் தூங்குறதுக்கு எனக்கு முழு உரிமை இருக்கு ... 


என யாரோ தடுத்தது போல் தனக்குத்தானே சொல்லிக்கொண்டு அவன் அறை நோக்கி சென்றாள் புதுமணப் பெண்ணின் வெட்கத்தை சுமந்து கொண்டு.


ஒருக்களித்திருந்த கதவின் மீது அவள் தன் மெல்லிய கரத்தை வைக்கும் போது,


" சொல்லு அருணா ..." என்றவனின் குரலை கேட்டு தீ மிதித்தார் போல் உறைந்து விட்டாள்.


" ஓகே ....."



"........"



" ஓகே ...."


"..........."


" கவலைப்படாத அருணா ... நீ எந்த ஆதாரத்தையும் அனுப்ப வேண்டாம் .... நான் என்னைக்குமே உன்னை கண்ண மூடிக்கிட்டு நம்புவேன் ... எல்லாத்தையும் நான் பாத்துக்கிறேன் ... உனக்கு எவ்ளோ பணம் வேணும் அதை சொல்லு ... உடனே மணி ட்ரான்ஸ்பர் பண்றேன் ...."


"....."


"அழாத அருணா ... அப்பாவை விட்டு தள்ளு ... எப்பவுமே அவர் அப்படித்தான் .... நான் இப்ப மணி டிரான்ஸ்பர் பண்றேன் ... இந்தியா  வந்ததும் மத்தத பேசிக்கலாம் ..." என அழைப்பை துண்டித்தவன்


அப்பா அலர்ட் ஆயிட்டாருன்னு  புரிஞ்சுகிட்ட.. நானும் அலர்ட் ஆயிட்டேன்னானு ஆழம் பாக்கறியா.... என்னை ஆழம் பாக்கற அளவுக்கு நீ இன்னும் வளரல அருணா....  

ஒரு நிமிஷம் ஆகாது என் பொண்டாட்டிய பேச வைக்க ...ஆனா அவ இப்ப இருக்கிற நிலைமைல  நான் ரிஸ்க் எடுக்க விரும்பல ....  இன்னும் நாலு மாசம் போகட்டும்னு  பார்த்தா அதுக்குள்ள நீ பண்ற கூத்துல நடந்ததை நானே கண்டுபிடிச்சிடுவேனோனு தோணுது கூடிய சீக்கிரம் அதுக்கான ஸ்டெப் எடுக்கறேன் .... என மனதோடு குமுறினான்.


சற்று முன் தோன்றிய காதல் உணர்வுகள் அனைத்தும் மழுங்கடிக்கப்பட்டு,


வீட்டை விட்டு வருவதற்கு முந்தைய தின இரவில்,  மூன்றாம் ஜாமத்தில் அவள் அலறிக் கொண்டு ஓடும் காட்சி மனக்கண் முன் மீண்டும் தோன்ற , அந்த ஊட்டி குளிரிலும் அவள் உடல் முழுவதும் வியர்வை வெள்ளம் பாய, லேசான உடல் நடுக்கம் ஏற்பட,  கால்கள் சுவாதீனமற்று மரத்து போக , அதற்கு மேல் சிந்திக்காமல்  தன் அறைக்கு வந்தவள் மருத்துவர் பரிந்துரைத்திருந்த வீரியம் குறைந்த மன அழுத்தத்திற்கான மாத்திரையை கை நடுக்கத்தோடு எடுத்து வாயில் போட்டு விழுங்கி விட்டு, படபடக்கும் இதயத்துடிப்பு இயல்பு நிலைக்கு வருவதற்காக அமைதியாக படுக்கையில் சென்று படுத்துக் கொண்டாள். 


ஸ்ரீ-ராமம் வருவார்கள்..... 





 

























 



















 































   





































































  





Comments

  1. அப்படி என்ன தான் நடந்தது.சீக்கிரம் சொல்லுங்கள்.ஆர்வம் தாங்கமுடியவில்லை.

    ReplyDelete
  2. Sis this is too much... Epo than suspense reveal pana poringa... Climax la thanu sollidathinga. We are eagerly waiting for next ud... Konjam pathu karunai kaminga.

    ReplyDelete
  3. Supperrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrr

    ReplyDelete

Post a Comment