ஸ்ரீ-ராமம்-64

 அத்தியாயம் 64 


குழம்பிக் கொண்டிருந்த ஸ்ரீப்ரியா  ஒரு முடிவுக்கு  வந்த அதே நேரத்தில், குடும்பத்தில் குழப்பத்தை விளைவிக்க , ப்ரீத்தி பரிசுப் பொருளாக கொண்டு வந்த  பொம்மையை காட்டி நடந்ததை தன் கணவனிடம் பொங்கி எழுந்த கோபத்தோடும் ஆற்றாமையோடும் பகிர்ந்து கொண்டிருந்தாள் பிரபா.


"ப்ரியா,  அந்த பொம்மையை  சரியா பாக்குறதுக்குள்ள நான் அவகிட்ட இருந்து வாங்கிட்டேன்னு நினைச்சு சந்தோஷப்பட்டேன்...  ஆனா அந்த  சந்தோஷத்துக்கு ஆயுசு கம்மி போல ... சாப்பிட்டு முடிச்சதும் ப்ரீத்தி வீட்டுக்கு போக கேப் புக் பண்ணனும் சொல்லி தம்பியோட  தோட்டத்துக்கு போய்  தனியா ஏதோ பேச ஆரம்பிச்சிட்டா ..


அவளோட எந்த விஷயமும் தம்பிக்கு தெரியாது ....  அவளை அவருக்கு கட்டிக் கொடுக்கணும்னு நான் நினைச்சது கூட அவருக்கு தெரியாது.... இப்படி இருக்கும் போது அவ  ஏதாவது உளறி கொட்டினா தம்பிக்கு என் மேல இருக்கிற மரியாதையே போயிடும்...


அதோட அவ என்ன சொல்றான்னு தெரிஞ்சுக்க, நானும் அவங்க கூட  போய் நிக்கவும் முடியாது ....  அப்படி நின்னா,அவங்க ரெண்டு பேரும் என்ன பேசுறாங்கன்னு தெரிஞ்சுக்க போனா மாதிரி ஆயிடும் ... அதனால தான் வேற வழி இல்லாம ப்ரியாவ அவங்க இருக்கிற இடத்துக்கு போக சொன்னேன்...


அப்ப பார்த்து நீங்க தம்பிய கூப்பிட்டீங்க,  அவர் கிளம்பினதும், ப்ரீத்தி ப்ரியா கிட்ட ஏதோ பேசினா ....  அதிலிருந்து அந்த பொண்ணோட முகம் சுத்தமா சரியில்ல ...  முகமெல்லாம் சிவந்து கண்ணெல்லாம் கலங்கின  மாதிரி ஆயிடுச்சு ...


ப்ரீத்தி இவ்ளோ கன்னிங்கா கால்குலேட் பண்ணுவான்னு  நான் கொஞ்சம் கூட எதிர்பார்க்கல .... தம்பிய தனியா கூப்பிட்டுகிட்டு போனா தான் , நான் ப்ரியாவ அங்க அனுப்பி  வைப்பேன்னு கரெக்டா என் தாட் பிராசஸை கெஸ் பண்ணி  காய் நகத்தி இருக்கானு, அவ என்னை பார்த்து நக்கலா சிரிக்கும் போது தான் புரிஞ்சுகிட்டேன் ..." 

என பிரபா முடிக்க,  சத்யனுக்கு ப்ரீத்தி மீதான கோபம் பொங்கி வழிய கட்டுப்படுத்திய படி பிரபாவை அமைதியாக பார்த்தான். 


" நான் ஒருத்தியே எவ்ளோ வேலை தான் பார்ப்பேன் ... ஒரு பக்கம் சமையல், ஒரு பக்கம் உறவுக்காரங்க , ஒரு பக்கம் குழந்தைங்க ... இதுல ப்ரீத்தி என்ன குட்டைய குழப்புவாளோனு அந்த டென்ஷன் வேற... கடைசில நான் பயந்த மாதிரியே எதோ செஞ்சிட்டு போய்ட்டா ....

இன்னைக்கு பாட்டி ஊருக்கு போகும் போது ப்ரியாவை பார்த்து பெண் குழந்தை பெத்து குடுன்னு ஆசிர்வாதம் பண்ணாங்க ... அத பாத்துட்டு பாட்டி சொன்ன மாதிரி  பாண்டி அண்ணனுக்கு பொண்ணு பொறந்தா ரொம்ப அழகா இருக்கும் இல்ல அண்ணினு அன்பு கேட்டா ...


அன்புக்கு உங்கள விட உங்க  தம்பி மேல கொஞ்சம் ப்ரியம் ஜாஸ்தி ....கல்யாணம் வேணாம்னு சொன்ன உங்க தம்பிக்கு  பொண்ணு பார்த்து கொடுத்து  ஃபோர்ஸ் பண்ணி கல்யாணம் பண்ண வச்சதே அவ தான் ... அவளுக்கு மட்டும் ப்ரீத்தி பண்ணிட்டு போன  கூத்து தெரிஞ்சது, ப்ரீத்திய உண்டு இல்லன்னு பண்ணிடுவா,  என்னையும் ஒட்டு  மொத்தமா ஓரம் கட்டிடுவா ... உங்க தம்பிக்கு தெரிய வந்தா அவரும்  என்னை வெறுத்துடுவாரு....

எனக்கு புகுந்த வீட்ல இருக்குற மரியாதைய குலைக்க, எப்படி எல்லாம் ப்ரீத்தி திட்டம் போடறான்னு நினைக்கும் போது மனசு வலிக்குதுங்க ... இவயெல்லாம் என் கூட பொறந்தவனு சொல்லிக்கவே வெறுப்பா இருக்கு ...ச்சே...


இவ பண்ற கூத்த நான் வெளிப்படையா பேசவும் முடியாது ... அப்படி பேசினா உங்க வீட்டு ஆளுங்க ஒருத்தர் கூட என்னை மதிக்க மாட்டாங்க ....


என் புகுந்த வீட்டு சொந்தங்க என்னை  கௌரவமா நடத்தணும்னு நான் எதிர்பார்க்கிறது தப்பா ... உங்களுக்கே தெரியும் எங்க குடும்பத்துக்கு பெருசா சொந்தம்னு சொல்லிக்க ஆளுங்களே  கிடையாதுன்னு ....

அப்படியே ஒருத்தர் ரெண்டு பேர் இருந்தா கூட,  அவங்களும் பணத்துக்காக இல்ல வேற ஏதாவது உதவிக்காகத்தான் உறவு வச்சுக்கிட்டு  இருந்தாங்க ... அந்த மாதிரியான உறவுகளை பார்த்து உறவே வேணாம்னு நான் வெறுத்துப் போன காலங்கள் எல்லாம் உண்டு..


ஆனா உங்க வீட்ல, அத்தை, மாமா ,தம்பி, அன்புனு  எல்லாருமே என் குணத்தை பார்த்து,   என் உறவு முறையை பார்த்து மரியாதை கொடுத்துக்கிட்டு இருக்காங்க ...அவங்க யாருமே வேற எதையுமே என்கிட்ட எதிர்பார்க்கல ...


நானும் என்னால முடிஞ்சதை  மட்டும் தான்  அவங்களுக்கு செஞ்சுகிட்டு இருக்கேன் ...  செஞ்சா சந்தோஷப்படறாங்க செய்யலைன்னா என் நிலைமையை புரிஞ்சுகிட்டு,  சகஜமா கடந்து போயிடறாங்க எத்தனை பேருக்கு இப்படி ஒரு உறவு அமையும் ...." என்று புகுந்த வீட்டின் பெருமையை பாராயணம் பண்ணியவளுக்கு தொடக்க கால திருமண வாழ்க்கை ஒன்றும் அவ்வளவு சுலபமாக இல்லை.


சத்யனின் கோபம் ஒரு புறம்,  உப்பு பெறாத  விஷயத்திற்கெல்லாம் முகத்தை தூக்கி வைத்துக் கொண்டு தன் இருப்பைக் காட்டிய அன்பு ஒருபுறம், வேறு சமுதாயத்தை சார்ந்தவள் என்ற ஒரே காரணத்திற்காகவே உறவினர்கள் மத்தியில் அவளிடம்  பாகுபாடு காட்டிய அகல்யா ஒருபுறம் என அவளது ஆரம்ப கால திருமண வாழ்க்கை சற்று அந்தரத்தில் தான் தொங்கியது.


பிரபாவிடம் இருக்கும் நல்ல குணங்களில் ஒன்று ,எதை பற்றியும் அதிகம் யோசிக்க மாட்டாள்.


வைதாலும் வாழ்த்தினாலும்,  முக்கியத்துவம் கொடுக்காமல் தனக்கான  கடமையை சரிவர நிறைவேற்றி விடுவாள்.


அகல்யா, அன்பு  இருவருமே சின்னத்திரையில் காட்டும் அளவிற்கு கொடூரமான வில்லிகள் எல்லாம்  அல்ல ...  மிகவும் இயல்பானவர்கள் தான் ... அதே சமயத்தில்  நிலையான குணம் கொண்டவர்களும் அல்ல ... சில சமயம் ஆஹா ஓஹோ என்று புகழ்வார்கள் .... பல சமயம் எடுத்தெறிந்து பேசுவார்கள் ... அன்புவைக் காட்டிலும் அகல்யா சற்று வெள்ளந்தி தான்,  என்ன ஒன்று  அன்புவின் ஆலோசனை பல சமயங்களில் அகல்யாவை அடியோடு மாற்றிவிடும் ...

இப்படி அவர்களது குத்தல் பேச்சுகளும் கோப தாபங்களும் பிரபாவை தொடக்க காலத்தில் பாதிக்கவே செய்தன. 


தாய் மற்றும்  மகளின் குணம் நொடிக்கு நொடி மாறினாலும், பிரபா எந்நிலையிலும் தன்னை மாற்றிக் கொள்ளாமல் இருக்க , ஒரு கட்டத்தில் அவளது குணத்தை புரிந்து கொண்டு,  தாயும் மகளும் அவளோடு ஒன்றி உறவாடத் தொடங்கினர்.


சுருங்கச் சொன்னால்,  பிரபாவின் பொறுமை தான்,  அவளது புகுந்த வீட்டு உறவினர்களுக்கு மத்தியில் அவளுக்கு மதிப்பு மரியாதையை தேடி கொடுத்தது எனலாம்.


மனைவியை வெளிப்படையாக புகழ்ந்ததில்லை என்றாலும், அவள் கடந்து வந்த பாதையை அறிந்தவன் என்பதால், அவள் தன் மனதில் இருப்பதைக் கொட்டி நிம்மதி அடைய சந்தர்ப்பம் கொடுத்து அவள் பேச்சை இடை மறைக்காமல் அமைதி காத்தான் அவள் கணவன்.


"ஒரு வகைல நான் ரொம்ப லக்கி ... உங்க இடத்துல வேற யாராவது இருந்தா, ப்ரீத்தியோட பிஹேவியர வச்சு , என் கேரக்டரையும் தப்பா பேசி இருப்பாங்க ... ஆனா இப்ப வரைக்கும் நீங்க அந்த மாதிரி ஒரு கம்பேரிசனும் பண்ணினது இல்ல..." என கண் கலங்கி மனம் உருகி கூறியவளிடம் 


"என் இடத்துல வேற எவன் டி வருவான்  ... "  என சத்யன் குரலை உயர்த்தி அதே சமயத்தில் மென் புன்னகையோடு கேட்க , முதலில் புரியாமல் திணறியவள், அடுத்த கணமே புரிந்துகொண்டு, கண்ணீர் வடியும் கண்களோடு 'களுக்'கென்று சிரித்தாள்.


மனையாளை நெருங்கி லேசாக அணைத்துக் கொண்டவன்,


"இந்த விஷயத்துல உன் தப்பு எதுவுமே இல்ல .... வேணும்னே ப்ரீத்தி பண்ணினதுக்கு எல்லாம் நீ பொறுப்பாளியாக முடியாது ... அதே மாதிரி அந்த ப்ரியா கிட்ட போய் எதையும் கேட்டு வான்டடா வண்டில ஏறாது .... ப்ரீத்தி என்ன சொல்லிட்டு போனானு  தெரியாது... ப்ரியா அவங்க பாட்டி இறந்தது , இல்ல வேற ஏதாவது காரணத்துக்காக கூட சோகமா இருந்திருக்கலாம் ... சம்மன் இல்லாம ஆஜர் ஆகாத... அப்படியே விட்டுடு..பிரச்சனை வந்தா பார்த்துப்போம்..." என்றான் ஆறுதலாக.


ஸ்ரீப்ரியாவின் மனம் ஓரளவு தெளிவு பெற்றதும்,  ப்ரீத்தி கொடுத்து விட்டுச் சென்ற பொம்மையை தேடிச் சென்றாள். ஆனால் அது அங்கு இல்லை என்றதுமே,  மீண்டும் ஒருவித குழப்பம் தலை தூக்க, சோர்ந்து போனாள் பாவை.


வீராவை மட்டும் தனியாக ஆராய்ந்து பார்த்தால்,  அவளுக்கு குழப்பம் என்ற ஒன்று இல்லவே இல்லை. 


ஆனால் ப்ரீத்தியின் வாய்மொழி,  அதனை மெய் படுத்தும் வகையில் பொன்னம்பலம், சத்யன், பிரபா ஆகியோரின் நடவடிக்கை தான், அவளை மீண்டும் சந்தேக சுழலில் சிக்க வைக்க, புகுந்த வீட்டில் ஏற்பட்டிருக்கும் புரியாத புதிருக்கு விடை காணும் நாளுக்காக காத்திருக்கலானாள்.



இரவு 8:00 மணிக்கு மேல் வீடு திரும்பிய வீராவை விடாது கருப்பு போல் நோட்டமிட தொடங்கினாள் நாயகி .


விமான நிலையம் செல்லும் பொழுது இருந்த முக கலக்கமெல்லாம் மறைந்து,  தற்போது தன் தாய், அண்ணியோடு அவள் இயல்பாக இருப்பது,  அவன் மனதிற்கு மகிழ்ச்சி அளிக்க,  அவளைப் பார்த்து இயல்பாக புன்னகைத்தான்.


கண்களில் பெருத்த கேள்வியோடு பதிலுக்கு அவளும் புன்னகைக்க, அவளது விழிகளில் தெரிந்த வினாவை அறிந்து கொண்டவன்,


 இவ கண்ணுல ஏதோ கேள்வி இருக்கு ... ஆனா என்னன்னு தான் தெரியல ... என மனதோடு பேசிக்கொண்டு அவள் அருகே அமர்ந்து இரவு உணவை உண்டான்.


கவலை தோய்ந்த முகம் இல்லாமல் ஸ்ரீப்ரியா இயல்பாக பழகியது பிரபாவிற்கு மகிழ்ச்சியை தந்தது .


காலையில்  அவள் முகத்தில் தெரிந்த கலக்கத்திற்கு கணவன் கூறியது போல் வேறு ஏதாவது காரணமாக கூட இருக்கலாம் என நூறில் ஒரு சதவீதமாக எண்ணிக்கொண்டு நிம்மதியுற்றாள் பிரபா.


நொடிக்கு நொடி குணம் மாறும் அன்புவும் , இயல்பு நிலைக்கு மாறி, ஸ்ரீப்ரியாவிடம் தானாகவே முந்திக்கொண்டு பேச்சு கொடுத்தாள்.


" அண்ணி,  வெந்தய சட்னி போட்டு சாப்பிடுங்க ... கொஞ்சம் கசக்கும் ஆனா உடம்புக்கு  ரொம்ப நல்லது ...."  என்பன போன்ற பல ஆலோசனைகள், எதார்த்த பேச்சுகள், பாராட்டுகளோடு கலகலத்தாள்.


அன்பு இயல்பு நிலைக்கு திரும்பி விட்டாள் என்பதை புரிந்து கொண்ட வீராவுக்கு இன்னொன்றும் புரிந்தது.


அதாவது அன்புவின் கோபம் சத்யனின் பேச்சால் வரவில்லை, அவர்களது தந்தை  பொன்னம்பலத்தின் பேச்சால் வந்தது என்று.


எப்பொழுதுமே கடைக்குட்டி என்று  அவளைத் தூக்கி கொண்டாடுபவர் அன்று காலை , அவளை மட்டம் தட்டுவது போல் பேசி ஸ்ரீப்ரியாவை  உயர்த்திப் பேசியது தான் , அவளை ஸ்ரீப்ரியாவோடு தன்னை ஒப்பீடு செய்ய வைத்து, அவளிடம் பாராமுகமாக இருக்க வைத்தது என்பதையும் புரிந்து கொண்டான். 


ஆக மொத்தம் காலையில் இருந்த சலசலப்பு தற்போது சுவடே  இல்லாமல் காணாமல் போக, பெரியவர்கள் இளையவர்கள் அனைவரும் இயல்பாக உரையாடி மகிழ, ஏதோ இனம் புரியாத  நிம்மதி ஸ்ரீப்ரியாவை சூழ்ந்து கொண்டது. 



உண்டு முடித்ததும் சற்று நேரம் அளவளாவி விட்டு வீரா அறைக்கு செல்ல , அவனைப் பின் தொடர்ந்து செல்ல ஒருவித கூச்சம் தடுக்க, பிரபாவின் குழந்தைகளோடு தோட்டத்தில் சற்று நேரம் விளையாடிவிட்டு , குழந்தைகள் உறங்கச் சென்றதும் வேறு வழி இன்றி அவர்களது படுக்கையறைக்கு வந்தாள்.


வீரா சுழல் நாற்காலியில் அமர்ந்தபடி மடிக்கணினியில் பணி செய்து கொண்டிருக்க, அவனைக் கண்டு கொள்ளாதது போல் குளியலறைக்குச் சென்று பல்துலக்கி விட்டு,  கட்டிலின் ஓரத்தில் முன்தினம் அவள் படுத்துறங்கிய இடத்தில் சென்று ஓருகளித்து படுத்துக்கொண்டாள்.


என்னதான் விடுப்பில் இருந்தாலும், அவனுக்கான பணி குறித்த தகவல்கள் மின்னஞ்சல்கள் மூலமாக வந்த வண்ணம் இருக்க, அதில் மிக முக்கியமான திட்ட வரைவுக்கான கணக்கீடுகளின்  பணியில் மூழ்கி இருந்தவன்,  ஒரு கணம் தன்னவளை திரும்பிப் பார்த்துவிட்டு,  மீண்டும்  பணியை தொடர்ந்தான்.


காலையில் இருந்த மன உளைச்சல்கள் எல்லாம் காணாமல் போனதால் படுத்த 15-வது நிமிடத்தில் ஆழ்ந்த நித்திரையை தழுவினாள் அவன் மனையாட்டி .


மணி 9:30ஐ தொடும் பொழுது , அவனுக்கும் லேசாக கண்கள் சொருக,  மடிக்கணினியை மூடிவிட்டு, இரவு விளக்கை ஒளிர செய்து, கட்டிலின் மறு ஓரத்தில் தன்னவளை விட்டு சற்று தள்ளி படுத்துக்கொண்டான்.


அப்போது பார்த்த அவனது அலைபேசி ஒலிக்க , எடுத்துப் சில தகவல்கள் பேசியவன் 


"இட்ஸ் ஓகே ப்ரீத்தி .... நோ ஒரீஸ் ... டேக் கேர் ..." என முடிக்கும் தருவாயில்,  அருகில் ஆழ்ந்த உறக்கத்திலிருந்து அவன் மனையாள் விருட்டென்று எழுந்தமர்ந்தாள் .


அலைபேசியின் அழைப்பை துண்டித்து விட்டு,


"என்ன ஸ்ரீ .... என்ன ஆச்சு ...   ஏதாவது கனவு கண்டயா..." என்றான் வாஞ்சையாக. 


" யாரு ப்ரீத்தி ..." என்றாள் கண்களை கசக்கியபடி எடுத்த எடுப்பில்.


"என் செகரட்டரி ... ப்ரீத்தி வினய் ..."


" இப்ப எதுக்கு ஃபோன் பண்ணாங்க ..."


"அவ அப்பாவுக்கு உடம்பு சரி இல்லன்னு பாக்க யூஎஸ் போயிருந்தா ... அதனால தான் நம்ம கல்யாணத்துக்கு கூட அவளால வர முடியல ... அவ அப்பாவுக்கு நடந்த ஆப்பரேஷன்ல ஏதோ காம்ப்ளிகேஷன் போல ... அதான் இன்னும் நாலு நாள் லீவ் எக்ஸ்டெண்ட் பண்ணலாம்னு இருக்கேன்னு சொன்னா ... ஓகேன்னு சொன்னேன் ... பாரு அவ பேசினத ரிட்டன்லயும் whatsapp மெசேஜா அனுப்பிட்டா..." என்று அவனது செயலாளர் ப்ரீத்தி அனுப்பிய செய்தியை காட்டினான்.


டியர் பாஸ் எனத் தொடங்கி தேங்க்யூ பாஸ் என பதிவு செய்திருந்த  செய்தியை  பார்த்தவள் நிம்மதி பெருமூச்சு விட்டபடி தனக்குள்ளே,


ஹிந்தி, மராட்டி ,பெங்காலி,  பஞ்சாபினு ஆல் லாங்குவேஜ்லயும் எனக்கு பிடிக்காத பேரு ப்ரீத்தி தான் ... என முணுமுணுத்து விட்டு


"அவங்க இல்லாம உங்களால  வேலை பார்க்க முடியாதா ..." என்ற அபத்தமான கேள்வியை  திடீரென்று முன் வைக்க 


"அவ இல்லாம நான் எப்படிம்மா..." என அவன் எதார்த்தமாக வார்த்தைகளை விட,


"என்னாது...???" என்றவளின் கண்களில் லேசான கோபமும் உரிமை உணர்வும்  வெளிப்பட, அந்தக் கணநேரம் ரசாயன மாற்றத்தை  ரசித்தபடி புருவங்களை உயர்த்தி கண்கள் விரிய அமர்த்தலோடு 


"என்னோட ட்ராவல் பிளான், எக்ஸிக்யூடிவ்  மீட்டிங் ஸ்கெடியூல், மீட்டிங்  அஜெண்டா, டைம் ஷீட்னு நிறைய இருக்கு .எல்லாத்தையும் அவ தான் பார்த்துப்பா ..." என்றான் மென் புன்னகை பூத்து .


தகவலுக்காக  கேட்கிறாள் என்றெண்ணி கொண்டிருந்தவனுக்கு, அவளது இந்த  கேள்வி அவன் மீதான  உரிமை உணர்வைக் பறைசாற்ற , உற்சாகத்தோடே பதில் அளித்தான்  அந்தக் காளை.


"ஏன் உங்களுக்குன்னு மீட்டிங் காலண்டர் கிடையாதா ..."  என்றாள் தன் வேலையைப் போல் கருதி. 


"இருக்கு ஸ்ரீ ... ஆனா அதையெல்லாம் நான்  பண்ணிக்கிட்டு இருந்தா என்  வேலைய யார் பண்ணுவா ..."


சற்று நேரம் அங்கு அமைதி நிலவ,


"எங்கள மாதிரி டீம் மேனேஜர்ஸ், ப்ராஜெக்ட்  மேனேஜர்ஸ்ல மேல், ஃபீமேல் நிறைய பேர் இருக்காங்க .... அது என்ன பெரும்பாலும் செக்கரட்டரி போஸ்ட்க்கு மட்டும் ஃபீமேல அப்பாயின் பண்றாங்க..."


சற்றும் எதிர்பார்க்காத அந்த கேள்வியில் குலுங்கி நகைத்தவன்,


"இத நீ என்கிட்ட கேட்க கூடாது  ... ஹெச் ஆர் கிட்ட கேக்கணும் ..." என்றான் குறும்பாக.


மீண்டும் ஒரு கணம் அமைதி நிலவ, அந்த இரவு விளக்கு ஒளியில்,  அவன்  விழிகளை அகற்றாமல் அவளையே சுவாரசியமாய்  பார்த்துக் கொண்டிருக்க,


" உங்க செகரட்டரிக்கு என்ன வயசு இருக்கும்.." என்றாள் லேசான கடுகடு முகத்தோடு சன்னமாய். 


"உன்னை விட கொஞ்சம் பெரியவளா இருப்பானு நினைக்கிறேன்... பர்த்டே கூட இப்பதான் வந்துட்டு போச்சு ...  ப்ரொபைல் எடுத்து பார்த்தா தான் அவளோட இயர் ஆஃப் பர்த் தெரியும் ..."  என்றான் ஊற்றெடுக்கும் உற்சாகத்தை மறைத்து  வேண்டுமென்றே கூடுதல் தகவல்களை பகிர்ந்து.


"அவங்க பேர் என்ன சொன்னீங்க ..."


" ப்ரீத்தி வினய்...."


" கல்யாணம் ஆயிடுச்சா .."


" ஆயிடுச்சு ... ஒரு குழந்தை கூட இருக்கு ...."



ப்ரீத்தி வினய்... எனக்கு செய்வினை வைக்காம இருந்தா சரிதான் .... என அவள் வாய்க்குள் முணுமுணுத்துக் கொள்ள, அவனோ அவள் விழிக்குள் நோக்கி  குறும்பு கண்ணனாய் 


"வேற ஏதாவது டீடைல்ஸ் வேணுமா .." என்றான் புன்னகைத்து.


அவனை குறுகுறுவென்று பார்த்தவள்,  உடனே ஒருக்களித்துக் படுத்து  கொண்டு போர்வையை இழுத்து போர்த்திக் கொண்டாள். 


ஒரு கணம் தாமதித்து இருந்தாலும் அவன் காதை பிடித்து திருகி  இருப்பாள் .....


அத்துனை கோபம் அல்ல அத்துனை காதல் அவன் மீது ... அதை உணரவும் தொடங்கி விட்டாள் மனமார எந்த ஒரு நெருடலும் இல்லாமல் ஏற்றுக்கொள்ள தான் மனம் இல்லை ...


அவனது இயல்பான பேச்சே, அணி சேர்ப்பது போல் அவன் கவர்ச்சியை கூட்ட, உடன் அவன் பார்வையும் அவளை மயக்கி மாய்மாலம் செய்ய,  சிறுதுளி சந்தேகத்தோடு காதலும் உரிமை உணர்வும்  ஓடு பாதையில் ஓடும் விமானம் போல் கணத்திற்கு கணம் பன்மடங்காய் உயர்ந்து கொண்டே  இம்சிக்க ,வெளிப்படையாக பேசவும் முடியாமல்,  பொறுமை காக்கவும் இயலாமல்  உள்ளுக்குள் போராடியவள் ,கடைசியில் அவனுக்கு முதுகு காட்டியபடி  போர்வைக்குள் சரண் அடைந்தாள்.


அவளின் நளினமும் கூச்சமும், அவனை அசைத்துப் பார்க்க  சத்தம் வராமல் சிரித்தவன், 


இதென்ன அப்பத்தா,  அன்பு பிரச்சனையிலிருந்து யு டர்ன்  எடுத்து புது பிரச்சனை ....

பார்ட்னர்ஷிப்  அக்ரிமெண்ட் கூட சட்டுனு  புரிஞ்சுக்கலாம் போல இருக்கு இவள புரிஞ்சிக்க முடியலயே ...

இன்னைக்கு தான் இரண்டாவது நாள் ... இவ பண்ற அலப்பறைய எல்லாம்  பாத்தா இன்னும் ஒரு வாரம் கூட தாக்கு பிடிக்க மாட்டேன் போல இருக்கே .....  ஓ காட் ... சத்திய சோதனை...


என மனதோடு புலம்பியபடி  நெடுமரமாய் நிமிர்ந்து படுத்தவனின்  வெற்று புஜத்திற்கும், அவனவளின் முதுகிற்கும் இடையே வெறும் ஒரு அடி தொலைவே இருக்க,  ஆக்டோபஸாய் கையை விரித்தால் மெனக்கெடாமல், அவளை இழுத்து நெஞ்சோடு அணைத்துக் கொண்டு விடலாம் என்ற எண்ணம் தோன்ற, 


வெறும் அணைப்போடு நிற்குமா என்ற கேள்வியும் பிறக்க ....


நிற்காது என்ற பதிலை  இதயம் கூற....


ஆழ்ந்த பெருமூச்சு எடுத்து தன்னை சமன்படுத்த முயன்றவன், சற்று நேரத்திற்கெல்லாம் அதில் வெற்றி கண்டு ஆழ்ந்த நித்திரைக்குச் சென்றான். 



" ஆர் யூ ஷியூர் சோனா ..."  என்றான் ரிஷி,  தன் அண்ணன் மகள் அக்கான்ஷாவை பார்த்து அவள் சொன்னதை நம்பாமல். 


"ஆமா சித்தப்பா,  லட்சுமி மிஸ் வேலையை விட்டுட்டு போய்ட்டாங்களாம்... மத்த சப்ஜெக்ட் டீச்சர்ஸ் கிட்ட விசாரிக்கும் போது தான் தெரிஞ்சது  ..." என்றாள் அக்கான்ஷா சோகமாக .


ஸ்ரீலட்சுமி வேலையை விட்டு  கிட்டத்தட்ட ஒரு மாதம் ஆன நிலையில்,  முதல் ஒரு வாரம் பள்ளி முதல்வரை தவிர அனைவருமே அதனை இயல்பான விடுப்பாக தான் கருந்தினார்கள் ...


இரண்டாவது வாரம் , அவளது வகுப்பு பிள்ளைகளுக்கு  லேசாக சந்தேகம் வர மூன்றாவது வாரம் மற்ற ஆசிரியர்களிடம் கேட்டு உறுதி செய்து கொண்டனர்.


ஸ்ரீலட்சுமியை அவளது இல்லத்தில்  விட்டுச் சென்ற மூன்றாவது தினமே, ரிஷி ஆப்பிரிக்காவில் இருக்கும் போட்ஸ்வானாவிற்கு வைரங்களை கொள்முதல் செய்வதற்காக சென்று விட்டான்..


போட்ஸ்வானா  உலகிலேயே நல்ல தரமான வைரங்களை விற்பனை  செய்வதில் இரண்டாவது இடத்தில் உள்ளது.


போட்ஸ்வானா (Botswana) ஆப்பிரிக்காவில் இருக்கும் ஒரு நாடு.  வைரத்தை கொள்முதல் செய்வதற்காக அங்கு பலமுறை சென்றிருக்கிறான்.


ஆனால் இந்த முறை தான், அங்கிருந்த தென்னாப்பிரிக்காவின் தலைசிறந்த வைர நிறுவனத்தோடு உடன்படிக்கை செய்து கொள்ளும் வாய்ப்பு தானாக அமைய, அதற்கெல்லாம் காரணம்,   அவர்களது சமுதாயத்து முறைப்படி அந்த ஆண்டின் முதல் நகை உருக்கும் வைபவத்தில் ஸ்ரீலட்சுமி கலந்து கொண்டது தான் என மனமார நம்பியவன்,


"ஸ்ரீலட்சுமி,  நீ நெஜமாவே மகாலட்சுமி தான் .... கொஞ்சம் கூட முயற்சியே பண்ணாம,  அவ்ளோ பெரிய டைமண்ட் மைனிங் கம்பெனி, எங்க கம்பெனியோட அக்ரீமெண்ட் போட்டு இருக்காங்கன்னா அதுக்கு நீ தான் காரணம் ... நீ என் வீட்டுக்கு ஒரு முறை வந்ததுக்கே, இவ்ளோ ப்ராஃபிட்னா, நான் உன்னை கல்யாணம் பண்ணிக்கிட்டு,  நீ நிரந்தரமா என் கூட தங்கிட்டா, அப்புறம் அம்பானி அதானிக்கு அப்புறம் இந்த ரிஷி ஷா தான் ... அதனால  உனக்கு ஒரு சின்ன கிப்ட் வாங்கி இருக்கேன் ... ஜஸ்ட் 3 க்ரோர்ஸ்ல ஒரு டைமண்ட் செட் ... உனக்கு ரொம்பவே அழகா இருக்கும் ..."  என அவ்வப்போது கைபேசியில் அவளது நிழல் படத்தைப் பார்த்து ரசித்துக்கொண்டிருந்தவனுக்கு,  அவனது தந்தை அமர்நாத் உடல்நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாக செய்தி கிட்ட,  பல லட்சம் மைலுக்கு அப்பால் இருப்பவன் தவித்து போய் விட்டான்.


பிறகு அவன் அண்ணன் ராகேஷ் தான், வியாபாரத்தை லாபகரமாக முடித்துக் கொண்டு வரும் வழியை பார்... நான் தந்தையையும் குடும்பத்தையும் கவனித்துக் கொள்கிறேன் என ஆறுதல் கூற,  ஒரு வழியாக

வியாபாரத்தில் கவனம் செலுத்தி வெற்றியை நிலைநாட்டியவன், நாடு திரும்பிய தினத்தன்று தான் அவனது தந்தை அமர்நாத்தும் உடல்நிலை தேறி வீடு திரும்ப, நீண்ட மன அழுத்தத்தில் இருந்து விடைபெற்றான். 


 இந்நிலையில் தான் அவன், ஸ்ரீலட்சுமியை பற்றி அக்கான்ஷாவிடம் விசாரிக்க, அவள் கூறிய தகவல்கள்  நம்பும்படியாக இல்லாமல் போக,  விபரம் அறிய, உடனே  தன் தாயை ஸ்ரீலட்சுமி பணியாற்றிய பள்ளியின் முதல்வரை தொடர்பு கொள்ள செய்தான்.


"ஸ்ரீலட்சுமியோட மாமா வந்து அவளை ஊட்டிக்கு கூட்டிட்டு போயிட்டதா  அவ அம்மா அவளோட ரிசிக்னேஷனை சப்மிட் பண்ணும் போது பிரின்ஸ்பல் கிட்ட சொன்னாங்களாம்..." என அவன் தாய் அம்ருத்தா தகவல் கூற, 


" தாய் மாமனா...???"


" இல்லப்பா மாமனாராம்..."


அவன் அதிர்ச்சியில் உறைந்து நிற்க ,


"இன்னொரு முக்கியமான விஷயம்ப்பா... ஸ்ரீலட்சுமி பிரக்னண்டா இருந்ததால தான்,  அவ மாமனார் ஊட்டிக்கு  கூட்டிட்டு போனதா , அவங்க அம்மா சொன்னாங்களாம் ..." என வெகு சோகமாக அம்ருத்தா முடிக்க , உறைந்து நின்றான் ரிஷி.



ஸ்ரீ-ராமம் வருவார்கள் ....












 

































































Comments

Post a Comment