ஸ்ரீ-ராமம்-63

 அத்தியாயம் 63 


ஸ்ரீப்ரியாவுக்கு நெஞ்சு வலியே வந்துவிடும் போல்,  மூச்சு பந்தனம் செய்ய,  உடல் கட்டுப்பாடின்றி உதற, கண்களில் கண்ணீர் தாரை தாரையாய் வழிய, அவளையும் மீறி அவளது உதடுகள் விம்ம, ஓரிரு கணம் செய்வதறியாது சிலையாய் நின்றவள், உடனே சுயம் உணர்ந்து சுதாரித்துக் கொண்டு ஆழ்ந்த பெருமூச்சுகளை பலமுறை வெளியேற்றி,  துக்கத்தை குறைத்து அழுகையை நிறுத்தினாள்.


பிறகு தன் துப்பட்டாவின் நுனியால் முகத்தை அழுந்த துடைத்து, நெற்றி பொட்டு, தலை முடியை எல்லாம் சரி செய்து கொண்டு, தலை குனிந்த படி தோட்டத்திலிருந்து கூடத்திற்கு வந்தாள்.


என்னதான் அழுகையை  மறைக்க அதிரடி அரிதாரம் பூசி கொண்டாலும் அவளது சிவந்த களையிழந்த கண்களும்  முகமும், ப்ரீத்தி  வந்த வேலையை சரி வர  நிறைவேற்றி விட்டாள் என்பதை அப்பட்டமாக பறைசாற்ற அதனை  உள்வாங்கிக் கொண்ட பிரபா,


சோகமே உருவாய் காட்சியளிப்பவளை அழைத்து  விசாரிக்கலாமா ... வேண்டாமா  என்ற பட்டிமன்றத்தில் மூழ்கி இருக்கும் போது, அவளது இரண்டு குழந்தைகளும் ஒன்றோடு ஒன்று சண்டையிட்டுக் கொண்டு 'ஓ' வென்று அழ,  அழுகை சத்தம் ஆர்ப்பரித்து வந்த தன் படுக்கை அறையை நோக்கி விரைந்தாள்.


அப்போது அகல்யா ஸ்ரீப்ரியாவை பார்த்து,


"பிரபா எங்கம்மா..." என்றார் அவசரமாக.


"இவ்ளோ நேரம் இங்க தான் இருந்தாங்க ... குழந்தைங்க அழுகிற சத்தம் கேட்டது.... அவங்க ரூம்க்கு போயிருக்காங்க ..."


"சரி நீ ஒன்னு பண்ணு .... தேங்கா பை , கல்யாண பலகாரம் எல்லாம்  கிச்சன்ல  பெரிய கூடையில  பாக்கெட் பாக்கெட்டா இருக்கு ...  அதிலிருந்து ஒரு தேங்காய் பையும் ஒரு ஸ்வீட் பாக்கெட்டும் எடுத்துக்கிட்டு வா .... ப்ரீத்தி வீட்டுக்கு கிளம்பறாளாம்... அவளுக்கு கொடுக்கணும்..." என்றார் .


சமையல் அறையில் கடைசி கீழ் தட்டில் வைக்கப்பட்டிருந்த அந்தக் கூடையை கண்டுபிடித்து,  அதிலிருந்து  தேங்காய் மற்றும் இனிப்பு கார  பொட்டலத்தை  எடுக்கும் போது தான்,  ப்ரீத்தி பரிசளித்த,  பிரபா அவளிடம் இருந்து பிடிவாதமாய் வாங்கிச் சென்ற பெண் குழந்தையுடன் இருக்கும்  தம்பதி பொம்மையை கண்டாள்.


அதனை எடுத்து ஆழ்ந்து பார்த்ததில், ஆண் பொம்மை  வீராவை போலவும் பெண் பொம்மை  ப்ரீத்தியைப் போலவும் இருக்க,  ஓரளவு மட்டுப்பட்டிருந்த அழுகை,  மீண்டும் தலை தூக்க , தான் முழுவதுமாக ஏமாற்றப்பட்டு விட்டோம் என்ற எண்ணம் சுய இரக்கத்தையும் கோபத்தையும் ஒரு சேர  தூண்ட , மூளை வேலை நிறுத்தம் செய்ய, அப்படியே உறைந்து விட்டாள் பெண் .


"ப்ரியா ...." என்ற அகல்யாவின் அழைப்பில்,  நிகழ் உலகிற்கு  வந்தவள், பிறகு பார்த்துக் கொள்ளலாம் என  அந்த பொம்மையை அதே இடத்திலேயே வைத்துவிட்டு,   அருகில் இருந்த வாட்டர் பில்டரில் இருந்து தண்ணீர் எடுத்து பருகி துக்கத்தையும் அழுகையையும் அடக்கிக் கொண்டு  பொம்மை போல் போய் நின்றாள்.


அவளிடமிருந்து தேங்காய் பை மற்றும் பலகார பொட்டலத்தை வாங்கி அகல்யா ப்ரீத்தியிடம் கொடுக்க, 

"சாப்பாடு சூப்பரா இருந்தது அத்தை .... வரேன் அத்தை,  வரேன் மாமா ...." என்றவள் ஸ்ரீப்ரியாவை பார்த்து 


"வரேன் அக்கா... ஒன்ஸ் அகைன் ஹாப்பி மேரீட் லைஃப் ..." என  கிண்டலும் நக்கலுமாய் மொழிந்து கொண்டிருக்கும் போதே , அங்கு பிரபா வர அவளைப் பார்த்து, 


"நான் வந்த வேலை நல்லபடியா முடிஞ்சுது... வரேன் அக்கா ..." என இரு பொருள் படும்படி கூறிவிட்டு ஆணவத்துடன் கூடிய லேசான  புன்னகையோடு டாக்ஸியில் ஏறி பயணப்பட்டாள்.


சோர்ந்த முகத்தோடு தன் அறை நோக்கி சென்ற ஸ்ரீப்ரியாவை பார்த்ததும், தங்கையின் குட்டிக் கலகத்தை பற்றி  விசாரிக்கலாமா என்ற எண்ணம் மீண்டும் பிரபாவுக்கு தலை தூக்க,  உடனே அதற்கு தடை விதித்தாள்.


இத்தனை நாட்கள் அவளுக்கும் ப்ரீத்திக்கும் இடையே நடந்த ஆடுபுலி ஆட்டத்தில்,  அவள் மட்டும் தான் பாதிக்கப்பட்டிருக்கிறாள் ஆனால் இப்பொழுது ப்ரீத்தி நடத்தி விட்டு சென்ற நாடகத்தைப் பார்த்தால்,  புதிதாக மணமாகி இருக்கும் , மைத்துனனின் வாழ்க்கையில் ஏதோ ஒரு வகையில்  நிச்சயம் புயல் அடிக்க போவது உறுதி என தோன்ற,  வழக்கம் போல் அல்லாமல்   கணவனின் ஆலோசனை பெற்ற பிறகே, ஸ்ரீப்ரியாவை அணுகலாம் என்ற எண்ணமும் சடுதியில் உதயமாக , அமைதியை தத்தெடுத்துக் கொண்டு தன் அறை நோக்கி சென்றாள் பிரபா. 


அறைக்கு வந்த ஸ்ரீப்ரியாவுக்கு  அழுகை வந்தாலும்,  இதுவரை நடந்து முடிந்ததை அசை போட்டு பார்க்க அவகாசமும் தேவைப்பட,  மனதை ஒருநிலைப்படுத்த எண்ணி அமைதியாக படுக்கையின் ஓரத்தில் சாய்ந்தமர்ந்தாள் .


ஓரிரு கணம் கழிந்த நிலையில் , அங்கு வந்த வீரா, 


"ஹேய் ஸ்ரீ,  மாமா, மாமி , பாட்டி எல்லாரும் ஊருக்கு போறாங்க ... அவங்கள ஏர்போர்ட்ல டிராப் பண்ணிட்டு , அப்படியே ஒரு லாங் டிரைவ் போயிட்டு வரலாம் ... வர்றியா..." என்றான் அவளை நெருங்கி.


அவர்களுக்கு திருமணம் முடிந்து கிட்டத்தட்ட 24 மணி நேரம் கடந்த நிலையில்,  இப்பொழுதுதான் அவனது அருகாமை,  துருத்துரு பார்வை, அடர்ந்த மீசையை மேம்போக்காக தடவி மென்மையாய் முறுக்கும் பாங்கு ஆகியவை அவள் கருத்தை கவர்ந்து உள்ளத்தை ஊடுருவ,  ஒரு கணம் சிலிர்த்தவள்,


"நான் வரல ... ரொம்ப டயர்டா இருக்கு...  கொஞ்ச நேரம் தூங்கலாம்னு இருக்கேன் ..." என்றாள் பார்வையை தாழ்த்திக் கொண்டு. 


"ஓகே , ஆனா பாட்டி ஊருக்கு கிளம்பறாங்க... வா கீழ போய் சென்ட் ஆஃப்  கொடுத்துடலாம் அப்புறம் நீ ரெஸ்ட் எடுத்துக்க..."


 துக்கம்,  ஏமாற்றம் , கோபம் ,  அழுகையோடு தற்போது வேறொரு புரியாத புது உணர்வும் ஊடுருவி இம்சிக்க, அதனை ஆராயும் அவகாசம் இல்லாததால்,  அமைதியாக  அவனைப் பின் தொடர்ந்தாள்.


"நான் ஊருக்கு போயிட்டு வரேன் ... கூடிய சீக்கிரம் நல்ல சேதி சொல்லு... சரியா ... " என்றார் சுந்தராம்பாள் ஸ்ரீப்ரியாவை வாஞ்சையாக பார்த்து.


" ம்ம்ம்..." என அவள் மெதுவாக தலையசைக்க, 


"பெரியவனுக்கு இரண்டுமே பசங்க,   அன்புக்கு கூட ஆண் குழந்தை தான் பொறக்கும்னு நாடி சொல்லுது ... உங்களுக்காச்சும் பொண்ணு  பொறக்கட்டும்... வீட்டுக்கு அழகே பொண் குழந்தைங்க தான் ... " என அவர் முடிக்கும் போது,  இருவரும் அவர் பாதம் பணிய,


"ரெண்டு பேரும் ஒத்துமையா சந்தோசமா தீர்க்காயுளோட இருங்க ..."   என வாழ்த்தியவர்,

ஸ்ரீப்ரியாவின் கரங்களைப் பற்றிக் கொண்டு ,


"மகராசியா இரும்மா ... " என்றார்.


ஏனோ அவரது ஆசிகள் எல்லாம் அவளது அப்பத்தாவை ஞாபகப்படுத்த , இருவரது ஆசிகளும் இந்த ராசி கெட்டவளுக்கு பலிக்கப் போவதில்லையே , என்றெண்ணி அவள் கலங்க,


"கவலைப்படாத பாட்டி ... கூடிய சீக்கிரம் நீ எதிர்பார்க்கிற நல்ல சேதி உன் காதுல விழும் அதுக்கு நான் கேரண்டி ..." என வீரா விஷமமாக வீர வசனம் பேசியபடி, அவள் முகம் பார்க்க அவளோ, பாட்டியை பார்த்துக் கொண்டிருந்தாள். 


"டேய் பேச்சை கொறடா,  செயல்ல காட்டு ..." என முடித்தார் பெரியவர்.


அனைவரும் காரில் ஏறி அமர்ந்ததும், 


"பை  ஸ்ரீ ...."  என  விடைபெறும் போது தான், அவளது விழிகள் லேசாக கலங்கி இருப்பது தெரிய, புரியாமல் காரணம் கேட்க அவன் விழையும் போது , அவன் மாமா அழைக்க,  கிளம்ப வேண்டிய சூழ்நிலையை உணர்ந்து வாகனத்தை நோக்கி நடை போட்டான்.


இதயமே வெடித்து விடும் அளவிற்கு மன அழுத்தத்தில் இருந்தவளுக்கு யாரிடமாவது நடந்த அனைத்தையும் கொட்டி  ஆலோசனைப் பெற வேண்டும் என்ற எண்ணம் எழ, அறைக்கு வந்ததுமே  அவளது ஆஸ்திரேலிய தோழி அனுவுக்கு அழைப்பு விடுத்தாள் ஸ்ரீப்ரியா.


சிவா உற்ற நண்பன் என்றாலும்,  அவன் ஆண்  என்பதால், கண்ணுக்குத் தெரியாத ஒரு லட்சுமண ரேகையை எப்பொழுதுமே  கடைப்பிடிப்பவள்,  அனுவிடம் மட்டும் மனம் விட்டு கதைப்பாள்.


அனு வேகம் மிகுந்த திருநெல்வேலி மண்ணை சார்ந்தவள் என்றாலும், விவேகம் கொண்டவள், எளிதில் உணர்ச்சிவசப்படாதவள்,  எல்லாவற்றுக்கும் மேலாக தன் கணவனை திருமணத்திற்கு முன்பே  அறிவாள்  என்பதாலேயே அவளிடம்  மனம் திறக்க  எண்ணினாள்.


பொதுவாக திருமணத்திற்கு பிறகு குடும்ப வாழ்க்கையில் பிரச்சனை தலை தூக்கும் போது,  உணர்ச்சிவசப்பட்டு  குடும்ப உறுப்பினர்களிடம் பகிர்ந்தால், ரத்த சம்பந்தம் என்பதால், அவர்களும் கிளர்ந்து எழுந்து, நடந்த பிசகிற்கு நடுநிலையாக தீர்வு காண பிழையாமல்,  இடர்பாட்டை இன்னமும்  அதிகப் படுத்தவே செய்வார்கள் ...


அவர்களைச் சொல்லி குற்றமில்லை, அவர்களது மனம் ஒரு சார்பாக தான் யோசிக்கும் ... யாதொரு சம்பந்தமும் இல்லாத , விவேகமாக நடந்து கொள்ளும்  மூன்றாம் நபரிடம் விவாதித்தால் அல்லது ஆலோசனை கேட்டால் மட்டுமே நடுநிலையான முடிவுக்கு வர முடியும்  என எங்கோ , எப்பொழுதோ படித்தது நினைவுக்கு வர,  தோழி அனுவின் உதவியை நாட நினைத்தாள் பெண் .


அலைபேசியின் அழைப்பொலி முழுதாக சென்று முடிந்தது.


அனு அழைப்பை எடுக்கவில்லை.


மீண்டும் அழைக்கலாமா என்றெண்ணியவள் , உடனே அனுவே தொடர்பு கொள்ளட்டும் என்று அந்த முயற்சியை கை விட்டாள்.


காத்திருப்பு நேரத்தில்,  மீண்டும் அவள் மனம் கண்டதையும் அசை போடத் தொடங்கியது. 


முந்தைய இரவில் நடந்ததை

நினைத்துப் பார்த்தாள். 


சோபன இரவிற்கு செல்லும் முன்பாகவே திருமண உறவை தள்ளிப் போடும் முடிவை,  அவள் எடுத்திருந்தாலும் யாரிடமும் பகிரவில்லை. 


அவளது அப்பத்தாவின் இறப்பை  காரணம் காட்டி அவன்  திருமண உறவை தள்ளிப் போட எண்ணுவதாக பாட்டியின் மூலம் அறிந்தவள் அவனாக அது குறித்து பேச்சை தொடங்கினால், தான் எடுத்திருக்கும் முடிவை சொல்லலாம் என்றெண்ணியே சோபன அறைக்கு சென்றாள். 


ஆனால் அவனோ அவள் விருப்பத்தையும் கேட்கவில்லை,  தன் எண்ணத்தையும்  சொல்லவில்லை.


மற்றபடி ஒரு கண்ணியமான ஆண்,  தன் தோழியை எவ்வாறு  நடத்துவானோ,  அப்படியான நட்பின் அறிமுக தினமாகத்தான்  அவளோடு அந்த இரவை கழித்ததாக அவள் எண்ணினாள். 


 நடு இரவில் அவள் அப்பத்தாவை நினைத்து அழுதது,  அவன் ஆறுதல் கூறி அணைத்துக் கொண்டது .... எதுவுமே அவள் நினைவிற்கு வரவில்லை ....


பொதுவாக மனித மனங்கள் தன் சந்தேகத்திற்கு சாதகமாகத்தான் சாட்சிகளை  காட்சிப்படுத்தும் ... அதுபோல் தான் தன் சிந்தனைக்கு சாதகமானதை மட்டும்  ஒரே நேர் கோட்டில் நிறுத்தி பார்த்தவளுக்கு , ப்ரீத்தியின் மேல் இருக்கும் காதலால் புதிதாக மணம் முடித்த பெண்ணோடு தன் பேரன்  திருமண உறவை ஏற்படுத்திக் கொள்ள மாட்டான் என்று  தெரிந்திருந்ததால் தான் பாட்டி  தானே முன் வந்து அப்படி ஒரு பொய் சொன்னதாக எண்ணிக்கொண்டாள்.


பிறகு, இன்று வீடு தேடி வந்த ப்ரீத்தியின் வரவை பொன்னம்பலமும் சத்யனும் விரும்பவில்லை என்பதை அவர்களது பேச்சு மற்றும் நடவடிக்கை காட்டிக் கொடுத்ததை காட்சிப்படுத்தி பார்த்தாள்...


அடுத்தது ...


ப்ரீத்தியின் வரவை,  பிரபாவும் விரும்பவில்லை... எப்படியாவது அவளை அப்புறப்படுத்த வேண்டும் என்ற எண்ணத்திலேயே செயல்பட்டதும் நினைவுக்கு வந்தது ...


மற்றவர்களின் கருத்தைக் கவர்வதற்கு முன்பே, ப்ரீத்தி கொண்டு வந்த பொம்மையிலிருந்த வில்லங்கத்தை அறிந்துக்கொண்டு அதை தன் கையில் இருந்து பிடுங்காத குறையாய்  பிரபா  செயல்பட்டதை எண்ணிப் பார்த்தவள்,


கடைசி காட்சியாய்  ப்ரீத்தி வீராவுடன் தனிமையில் பேசிக் கொண்டிருப்பதை பார்த்ததும், கணவன் மற்றும் மாமனாருக்கு அஞ்சியே தன்னைத் துரிதமாக அவர்களுடன் போய் நிற்குமாறு பிரபா பணித்ததாக எண்ணிக் கொண்டு, ப்ரீத்தி சொன்னது 100 சதவீதம் உண்மை என்ற முடிவுக்கே வந்திருந்தாள்.


என்ன ஒன்று, அந்த முடிவை ஒத்துக் கொள்ளும் மனப்பக்குவம்  தான் அவளிடம் இல்லை. 


கணவனை பிடித்திருந்தாலும்,  காதல் வயப்படவில்லையே என்று எண்ணி கொண்டிருந்தவளுக்கு அவன் அடுத்தவளின் உரிமை என்ற செய்தி, அவளுள் ஒளிந்திருந்த அவன் மீதான  உரிமை உணர்வோடு காதலையும் மோகத்தையும்  தட்டி எழுப்ப தவித்துப் போய்விட்டாள் பாவை. 


அப்பத்தா,  நாம  ஏமாந்துட்டோம் ....நீ சொன்ன மாதிரி அவரும் அவர் குடும்பமும் நல்லவங்க இல்லை ...இனிமே என் வாழ்க்கை என்ன ஆகுமோனு பயமா இருக்கு அப்பத்தா  ....

என மனதோடு பேசி,  கண்களில் கண்ணீர் சிந்தினாள் .


அப்போது பார்த்து அனுவிடம் இருந்து  அலைபேசி அழைப்பு வந்தது. 


" ஹாய் அனு,  ஹவ் ஆர் யூ ..." என மெல்லிய குரலில் பேச்சை துவக்க, 


"ஹே ப்ரியா, ஹனிமூன்ல இருப்பேன்னு பார்த்தா  , எனக்கு போன் பண்ணி இருக்க....  வாட் எ சர்ப்ரைஸ் ... மேரேஜ் போட்டோஸ் எல்லாம் ரொம்ப நல்லா இருக்குப்பா... சரி சொல்லு, எப்படி இருக்க... மேரேஜ் லைப் எப்படி போய்கிட்டு இருக்கு ... " என்ற தோழியின் குதூகலம், அழுகையை பொத்துக் கொண்டு வரச் செய்ய, பதில் சொல்ல நாவெழாமல் அமைதி காத்தாள் நாயகி .


"ஹேய் ப்ரியா ... ஆர் யூ ஓகே ..." என்றாள் அனு  ஏதோ சரி இல்லை என புரிந்துகொண்டு.


"ராம்,  ராமோட ஃபேமிலி மெம்பர்ஸ் எல்லாரும் என்னை ஏமாத்திட்டாங்களோனு தோணுது அனு.."  என்றாள் கமரிய குரலில் .


"என்ன உளர்ற....  தெளிவா  சொல்லு ..."  என்றாள் அனு அதிர்ச்சியில் .


வீரா அவளை பெண் பார்க்க வந்ததிலிருந்து,  சற்றுமுன் விமான நிலையத்திற்கு அழைத்தது வரை,  ஒன்று விடாமல் நடந்த   அனைத்து நிகழ்வுகளையும் சாதக பாதகங்கள் இன்றி  அழுகையை அடக்கிக் கொண்டு சொல்லி முடித்தவள்,


"அவர் என்னை முதல்ல புடிக்கலன்னு சொன்னதுக்கு சரியான காரணம் சொல்லல அப்புறம் புடிச்சிருக்குன்னு சொன்னதுக்கு சொன்ன  காரணமும் சரியானதா தோணல  இதையெல்லாம் வச்சு பார்த்தா ப்ரீத்தி சொன்னது சரின்னு தான் தோணுது ..."  என தழுதழுத்த குரலில்   தான் கணித்த அனைத்தையும்  வரிசைப்படுத்தி முடித்தாள். 



"உலகத்துலயே வெட்டிங் நைட் அன்னிக்கு  கிட்டிப்புல், இந்தியன் ஹிஸ்டரியை பத்தி பேசின ஒரே கரகாட்ட கோஷ்டி நீயும் உன் ஹஸ்பெண்ட் வீராவுமாத்தான் இருப்பீங்கன்னு தோணுது ...  


பொண்ணு பாக்க வந்ததுக்கு அப்புறம் நடந்ததை பத்தி மட்டும் பேசற நீ  , அதுக்கு முன்னாடி உன்னை பார்க்க சிட்னிக்கு வந்தாரே... அதை ஏன் யோசிக்கல .... சரியா சொன்னா,  சிட்னில நாம ஒரு 40 நிமிஷம் அவரோட ட்ராவல் பண்ணி இருப்போம் ரொம்ப ஜெனியூனா பிஹேவ் பண்ணினாரு...  உன்னை பிடிக்கலைன்னா அவர் ஏன் இல்லாத வேலையை உருவாக்கிக்கிட்டு  உன்னை தேடி அவ்ளோ தூரம் வரணும் .... அப்பவே அவர்  கண்ணுல உன் மேல இருக்கிற ஆர்வத்தையும் காதலையும்  பார்த்தேன்.... 


அவர் ஒரு செல்ப் இண்டிபெண்டன்ட் மேன் அவரோட பொசிஷனுக்கும்,  ஸ்ட்ரெயிட் பார்வேர்ட்னஸ்க்கும் , அண்ணன், அப்பா பேச்சைக் கேட்டு, லவ் பண்ண பெண்ணை கல்யாணம் பண்ணிக்கலன்னு  சொல்றதெல்லாம் கொஞ்சம் கூட மேட்ச் ஆக மாட்டேங்குது ..." என்ற அனுவின் பேச்சை இடைவெட்டி, 



"தேவையே இல்லாம அந்த பொண்ணு ப்ரீத்தி  ஏன் தானா வந்து அப்படி சொல்லணும் ..." என்றாள் ப்ரியா அவசரமாக. 


"அவ தேவையை பூர்த்தி பண்ணிக்கிறதுக்காக சொல்லி இருக்கலாம் இல்லையா..."


" புரியல அனு ..."


"ஒரு வேளை அந்த பொண்ணுக்கு வீராவ மேரேஜ்  பண்ணிக்க எண்ணமிருந்திருக்கும் வீராவுக்கு  இன்ட்ரஸ்ட் இல்லாம இருந்திருக்கலாம் .... அதனால பொய் சொல்லி இருக்கலாம் ...


"இந்த மாதிரியான விஷயத்துல ஒரு பொண்ணு பொய் சொல்லுவாளா... அதுவும் கைய அறுத்துக்கிட்டு சூசைட் அட்டம்ட் பண்ணி இருக்காப்பா...."


"நீ எந்த காலத்துல இருக்க  ... 70, 80ஸ்ல இருக்கியா ... இந்த விஷயத்துல பொண்ணு பொய் சொல்ல மாட்டானு ஸ்ட்ராங்காஆ சொல்றதுக்கு ... யானை இருந்தாலும் ஆயிரம் பொன் இறந்தாலும் ஆயிரம் பொன்னுங்கற மாதிரி, அவ சொன்ன பொய்யோடு அவுட்புட் எதுவாயிருந்தாலும் அவளுக்கு சாதகமா தான் அமையும்னு சரியா யோசிச்சி காய் நகர்த்தி இருக்கா அந்த ப்ரீத்தி  ..."


" நிஜமாவே புரியலடி ..."


" லிசன்,  இந்த மாதிரி சிச்சுவேஷன்ல யாராயிருந்தாலும் 2 வகையா தான் ரியாக்ட் பண்ணுவாங்க ...


 ஒன்னு,  மனசுல வச்சுக்காம,  நேரடியா ஹஸ்பண்ட் கிட்ட கேட்டு  உண்மை எது பொய் எதுன்னு தெரிஞ்சுக்க பார்ப்பாங்க ...

 

ஒருவேளை அந்த மாதிரி நீ வீரா கிட்ட கேட்டு, அந்த பொண்ணு சொன்னது பொய்னு தெரிய வந்தா, உன் புகுந்த வீட்ல பெரிய பிரச்சனை நடக்கும் ... உன் வீட்டுக்காரர் அந்த பொண்ணு ப்ரீத்தி, அண்ணி பிரபா மேல கோவப்படுவாரு..


பிரபாவுக்கும் அவ ஹஸ்பண்டுக்கும்  சண்டை வரும் ... வந்து ஒரு நாள் கூட ஆகல,  வந்ததும் சண்டையை கிளப்பிட்டானு உன் மாமியார் நாத்தனார் உன்னை தான் தப்பா சொல்லுவாங்க ...


சரி இதையெல்லாம் விட்டுடு... இவங்கள பத்தி உனக்கு  அக்கறை இல்லனாலும், யாரோ சொன்னத கேட்டு மொதல் நாளே சந்தேகப்படறானு வீரா நினைச்சிட்டாருன்னா, உனக்கு அவர் மேல இருக்கிற எமோஷனல் அட்டாச்மென்ட்,  அவருக்கு உன் மேல இல்லாமலே போய்டும்... அப்புறம் நீ எதிர்பார்க்கிற அன்னியோன்யமான திருமண வாழ்க்கை  கனவு தான்... ஏன்னா இங்க பெரும்பாலான ஆம்பளைங்க, மனசுல வச்சுக்காம பொண்டாட்டி கேட்டு தெரிஞ்சுக்கிட்டாளேனு சந்தோஷப்படற ரகம் கிடையாது ...


இது எல்லாத்தையும் விட,  அக்கா லைஃப்ல பிரச்சனை வரும்னு தெரிஞ்சே,  அக்காவோட புகுந்த வீட்டுக்கு  வந்து  அந்தப் பொண்ணு இப்படி  சொல்றான்னா,  அந்தப் பொண்ணுக்கு அவ அக்கா மேல எவ்ளோ வன்மம் இருக்கும்னு யோசிச்சு பாரு ...


அக்காவும் அக்கா வீட்டுக்காரரும் சண்டை போட்டு பிரியணும்னு  நெனச்சு   கூட, அவ அப்படி பொய் சொல்லி இருக்கலாம் ...


அடுத்ததா, 

ஒருவேளை அந்த பொண்ணு ப்ரீத்தி  சொன்னது உண்மைனு வீரா ஒத்துக்கிட்டு, நான் அவளை லவ் பண்ணேண்.. எங்க வீட்ல ஒத்துக்கல ... அதனால அவள மறந்துட்டு உன்னை கல்யாணம் பண்ணிக்கிட்டேன் ... இனிமே என் வாழ்க்கைல நீ மட்டும் தான் ... நான் உனக்கு லாயலா இருப்பேன்னு சொன்னா உன் பதில் என்னவா இருக்கும் ..."


"என்னால அதை ஏத்துக்க முடியாது அனு .. நீங்க உங்க எக்ஸ் லவ்வ பத்தி சொல்லாம ஏன் ஏமாத்தனீங்கனு கேட்டுட்டு  நான் இனிமே உங்க லைஃப்ல இருக்க விரும்பலன்னு சொல்லிட்டு, என் வீட்டுக்கு போயிடுவேன் ..." என்று படபடத்தாள் ஸ்ரீப்ரியா  சற்றும் சிந்திக்காமல். 



"ஏய், ப்ரியா நீ பேசிக்கா கன்வென்ஷனல் டைப் ...  பாலச்சந்தர் , பாரதிராஜா ஹீரோயின் மாதிரி,  ஓ... ஒரு  தென்றல் புயலாகி வருதேனு பொட்டிய தூக்கிக்கிட்டு வீட்டுக்கு போறதெல்லாம் உனக்கு மட்டும் இல்ல உன் ஃபேமிலி  சிச்சுவேஷனுக்கும் பொருத்தமா இருக்காது ...


கொஞ்சமாச்சும் உன் அப்பா அம்மாவை யோசிச்சு பாரு ...உன் பாட்டி இறந்து  ஒரு மாசம் கூட ஆகல ... உன் அப்பா ரொம்ப உடைஞ்சு போய் இருக்காரு ... ஏற்கனவே கோவக்காரர் வேற ...உன் பிரச்சனைல எடுத்தோம் கவுத்தோன்னு முடிவு எடுத்துட்டு போய் தேவையில்லாம அவருக்கு ஏதாவது இழுத்து  விட்டுடாத ...கொஞ்சம் பொறுமையா யோசி  .... 

இந்த காலத்துல எக்ஸ் லவ்வர் மட்டுமில்ல , ஒய் , ஸட் லெவர் வரைக்கும் ஆம்பள பொம்பள பேதம் இல்லாம எல்லாருக்கும் இருக்காங்க உனக்கு இல்லன்னா மத்தவங்களுக்கும்  இருக்க கூடாதுன்னு நினைக்கிறதுல அர்த்தமேயில்ல... இனிமே வீரா  உனக்கு உண்மையா இருக்காரானு பார்த்து  உன் வாழ்க்கையை முடிவு பண்ணு ..."


"இல்ல அனு ...  என்னால இந்த ஏமாற்றத்தை ஏத்துக்கவே முடியல..."


"முட்டாளாட்டம் பேசாத ... மறுபடியும் சொல்றேன் இது 70, 80ஸ் கிடையாது இதெல்லாம் இப்ப ரொம்ப சாதாரண விஷயம் இயல்பா கடந்து போக பாரு ..."


" சரி,  அவர் எனக்கு உண்மையா இருக்காரானு எப்படி கண்டுபிடிக்கிறது ... அவர் பின்னாடியே போக சொல்றியா இல்ல அவருக்கு டிடெக்டிவ் வைக்க சொல்றியா ..."


"முன்னாடி எல்லாம் இந்த விஷயத்தை கண்டுபிடிக்கிறது ரொம்ப கஷ்டம் ... ஆனா இப்ப  ரொம்ப ஈசி ... 24 /7 மணி நேரமும் போன்லயே இருப்பாங்க ... இல்லன்னா வீட்டுல இருக்கிற நேரம் ரொம்ப கம்மியா இருக்கும் ... இப்படி ஏதாவது இருக்கான்னு ஒரே மாசம் அவரோட இருந்து கவனிச்சாலே , அவரைப் பத்தி தெரிஞ்சிடும் ...


அந்த ஒரு மாசத்துல  அவர் உனக்கு உண்மையா  இல்லனு தெரியவந்தா , வேற வழி இல்ல  நீ உன் வீட்டுக்கு தான் போய்  ஆகணும்... ஆனா  அதுக்கு முன்னாடி  நீயே எல்லா ப்ரூபையும் கலெக்ட் பண்ணிட்டா  உனக்கு  அவர் மேல இருக்கிற எமோஷனல் அட்டாச்மென்ட் போயிடும் ... மெதுவா உன் அப்பா அம்மாவுக்கு புரிய வைக்க சுலபமாவும் இருக்கும் ... ஒருவேளை கடவுள் அருளால இப்படி எதுவும் நடக்காம வீரா அந்த பொண்ண மறந்துட்டு உனக்கு நூறு சதவீதம் உண்மையா இருந்தாருன்னா உன் வாழ்க்கை நல்லா இருக்குமில்ல... அதுக்காகத்தான் சொல்றேன் ...


இப்ப கூட ஏனோ எனக்கு அந்த பொண்ணு சொன்னதுல சுத்தமா நம்பிக்கையே இல்ல ...


ஜாதிக்காக கல்யாணத்த வேணாம்னு  வீராவோட ஃபேமிலி மெம்பர்ஸ்  சொல்றவங்களா இருந்தா,  பிரபா கிட்ட  இப்ப இவ்ளோ க்ளோசா  மூவ் பண்ண மாட்டாங்க ..

நீ இப்ப ரொம்ப கன்ஃபியூஸ்ட் அண்ட் எமோஷனல் ஸ்டேட்ல இருக்க ... உன் இடத்துல யார் இருந்தாலும் இப்படித்தான் யோசிப்பாங்க ...எட்டு வருஷம் மாஞ்சி மாஞ்சி லவ் பண்றவனே ஏமாத்திட்டு போற காலம் இது ... உனக்கும் வீராவுக்கும்  கல்யாணம் ஆகி முழுசா ஒரு நாள் தான் ஆகுது... அதான் அவரைப் பத்தி ஒரு முடிவுக்கு வர முடியாம கஷ்டப்படறேனு புரியுது... ஆனா  கொஞ்சம் பொறுமையா இரு ...


இப்போதைக்கு எதையும் யார்கிட்டயும் கேட்காத ...அவரையும் அவங்க வீட்டு ஆளுங்களையும் கொஞ்சம் அப்சர்வ் பண்ணு... ஏன்னா  அந்தப் பொண்ணு  சொன்னத மட்டும் வச்சு ஒரு முடிவுக்கு வர்றது ரொம்ப முட்டாள் தனம்..." என அனு பேசிக் கொண்டே செல்ல ,  அன்று காலை அவள் கணவன் 


"இங்க பாரு , ஒரு விஷயத்தை ஒருத்தரோட வெர்ஷன்ல இருந்து  மட்டும்  பார்த்து முடிவுக்கு வர்றது ரொம்ப தப்பு ... பார்க்கணும்னா எல்லாரையும் முன்னிறுத்தி  எல்லா சாதகப் பாதகங்களையும்  நுணுக்கமா

 பார்க்கணும் இல்லனா அப்படியே விட்டுடணும்..."  என்று சொன்னது நினைவுக்கு வர, யோசிக்க தொடங்கினாள். 


"இவ்ளோ குழப்பத்துலயும் நீ செஞ்ச  நல்ல விஷயம் உங்க அப்பா அம்மாவுக்கு போன் பண்ணாம எனக்கு  ஃபோன் பண்ணினது தான் ப்ளீஸ் ப்ரியா, அவசரப்படாம  இன்னும் ஒரு மாசம் யார்கிட்டயும் இந்த பிரச்சனைய பத்தி பேசாம அமைதியா அப்சர்வ் பண்ணு ... அதே சமயத்துல அவரைப் பத்தி ஒரு முடிவுக்கு வராம பிசிகல் காண்டாக்ட்க்கு ஒத்துக்காத ....நீ இன்னைக்கு எடுக்கிற சரியான முடிவு,  உன் நாளைய வாழ்க்கையை சரியா முடிவு பண்ணும்...  ஆல் தி பெஸ்ட் ... " என முடித்தாள் அந்த ஆருயிர் தோழி.


சற்று முன் இருந்த குழப்பம் எல்லாம், சூரியனைக் கண்ட பனிபோல் மறைய,  தோழி சொல்லியதை செயல்படுத்த முடிவு செய்தாள் நாயகி .



ஸ்ரீ-ராமம் வருவார்கள் ...
























































Comments

  1. பாவம் பிரியா. அந்த பிரீத்தி ய என்ன செஞ்சாலும் திருந்த மாட்ட போல. அடுத்தவர்கள் வாழ்க்கையில் இப்படி கெடுதல் செய்வது எல்லாம் ஒரு பொழப்பா... அவளுக்கு தக்க தண்டனை இறைவன் விரைவில் கொடுக்கட்டும்.

    ReplyDelete
  2. Supperrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrr

    ReplyDelete

Post a Comment