ஸ்ரீ-ராமம்-61

 அத்தியாயம் 61 

"ரொம்ப நேரமா பேசிக்கிட்டே இருக்கோம் ... ஏதாவது சாப்பிடலாமா ... காஃபி .... காஃபி சாப்பிடலாமா ..." 


"ம்ம்ம்ம்.."  என அவள் லேசாக தலையசைத்தும், அங்கிருந்த இரண்டு கோப்பையில் ஃபிளாஸ்கில் இருந்த சூடான பாலை ஊற்றி , நெஸ்கஃபே துரித காப்பித்தூள் மற்றும் சர்க்கரை தூளின் சிறு பொட்டலங்களை திறந்து கொட்டி, தேக்கரண்டியில் நன்றாக துழாவி விட்டு விட்டு, அவளுக்கு ஒரு கோப்பையை கொடுத்தான்.


ஆவி பறக்க , அந்த இரவிற்கும் குளிருக்கும் இதமாக இருவரின் தொண்டையிலும் அந்த இனிப்பு திரவம் அம்சமாக இறங்க,


"முக்கியமான விஷயத்தை கேட்க மறந்துட்டேன் ... உன்னோட ஃபேவரிட் ஃபுட் என்ன... நீ வெஜிடேரியன்னு  உன் பாட்டி சொல்லி இருக்காங்க .... உனக்கு அதுல என்ன பிடிக்கும் என்ன பிடிக்காதுன்னு சொல்லு ,எந்த டிஷ் நல்லா குக் பண்ணுவ ..." என்றான் முதல் மிடறு முழுங்கி.


"நாம் பேசிக்கலி Foodie கிடையாது ...அதிக ஆயிலி ஸ்பைசி  இல்லாத ஹோம் மேட் வெஜ்  ஃபுட் எதானாலும் சாப்டுவேன் ... எனக்கு இந்த  பர்கர்,  பீட்சா,  பாஸ்தா,  மேகி எதுவுமே பிடிக்காது ...  டிரை ஃப்ரூட்ஸ், ஃப்ரூட்ஸ், ஓட்ஸ் , பிரெட், கான்ஃப்ளெக்ஸ்னு சிட்னில   இருக்கும் போது சாப்பிட்டு லைஃப்  ஓடிட்டேன்... அவ்வளவா சமையல் தெரியாது ...." என அவள் இழுக்க,


"அவ்வளவா  தெரியாதா.... அவ்வளவும் தெரியாதா  ...." எனக் கேட்டு குலுங்கி சிரித்தவன்,


"ஐயோ... இதுலயும் போச்சா ....  நம்ம ரெண்டு பேருக்குள்ள ஒரு விஷயம் கூட ஒத்துப் போகலயே.... குறைந்தபட்சம் வெஜ் பிரியாணியாவது சொல்லுவேன்னு எதிர்பார்த்தேனேம்மா ..... இப்படி பண்ணிட்டியே.... சோ சேட் ..." 

போலியாக அவன் வருந்துவதை பார்த்து அவள் நகைக்க, உடனே அவன் 


"நான் நல்லா சாப்பிடுவேன்.... நல்லாவும் சமைப்பேன் ....முதல்ல எனக்கு சமையல்  தெரியாது .... அப்ராட் போய் மாச கணக்குல தங்கும் போது ரொம்ப கஷ்டப்பட்டேன் .... அப்புறம் அம்மாகிட்ட கத்துக்கிட்டேன் ... இப்ப வீட்ல இருக்கவங்க மட்டும் இல்ல என் ஃபிரண்ட்சும்  நான் செஞ்ச  சாப்பாட்ட சாப்பிட்டு பெஸ்ட் ஃபுட்னு ப்ரெய்ஸ் பண்ணுவாங்க ...."


அவன் இயல்பாக தன் நள பாகத்தை விவரித்துக் கொண்டே செல்ல , கேட்டுக் கொண்டிருந்தவளுக்கோ, அயல்நாட்டில் தனியாகத் வசிக்கும்  சந்தர்ப்பம் தனக்கும் அமைந்தும், தான் ஏன் தன் தாயிடம் சமையலை கற்றுக்கொள்ள விழையவில்லை  என்ற அதி முக்கிய கேள்வி முளைக்க , பதில் தேடிக்கொண்டே அமைதியாகி போனாள்.


"என்ன .... நானும் தானே அப்ராட்ல இருந்தேன் நான் ஏன் அம்மா கிட்ட சமையல் கத்துக்கலன்னு யோசிக்கிறியா ...."


அவள் மனதில் இருப்பதை அட்ச்சர சுத்தமாக , அவன் எடுத்து இயம்ப, ஆச்சரியமும் அதிர்ச்சியமாய் விழிகளை விரித்தவள்,


"நீங்க குட் அப்சர்வ்வெண்ட்(Observant)  ..." என்றாள் பாராட்டும் விதமாக.


"அந்த குவாலிட்டி எல்லாம் அவசியமே இல்ல ... நீ மனசுல நினைக்கிறத தான் உன் முகம் கண்ணாடி மாதிரி  தெளிவா காட்டுதே ..." 


அவள் மீண்டும் முட்டை கண்களை விரித்து ஆச்சரியமாக பார்க்க,


"நிறைய கோவபடுவ  போல ..."


"உங்களுக்கு எப்படி தெரியும்...." இதழுக்கடியில் புன்னகையை மறைத்து அவள் கேட்க 


"அதான் பார்த்தேனே .... சிட்னில கோவிலுக்கு போயிட்டு திரும்பும் போது,  உன் முகத்துல எள்ளும் கொள்ளும் வெடிச்சதே..." 


நுண்ணிய விஷயங்களை கூட நினைவில் வைத்துக் கொண்டு,  அவன் கேட்கும் பாங்கு ஆச்சரியத்தோடு வெட்கத்தையும் கொடுக்க, 

 

"ஆமா,  சட்டுனு  கோவம் வரும் உடனே  போய்டும் ... உங்க அளவுக்கெல்லாம் பொறுமை கிடையாது ..." என்றாள் மென்மையாக. 


"ஐயோ ...  அப்படியெல்லாம் முடிவு பண்ணிடாதம்மா.... எனக்கு நல்லா கோவம் வரும்... ஆனா எப்ப வரும் எப்படி வரும்னு தெரியாது ...  எப்பவாவது வர்றதால அந்த கோவத்துக்கு என் வீட்ல,  ஆபீஸ்ல, பிரண்ட்ஸ் சர்க்கில்ல  மரியாதை அதிகம் .... ரொம்ப அக்ரஸிவா பிஹேவ் பண்ணுவேன்னு  சொல்லி இருக்காங்க ... தேங்க் காட், சமீப காலமா அப்படி எந்த ஒரு  சந்தர்ப்பமும் அமையல ..." 

என்றான் புன்னகையோடு அப்படியான ஒரு சந்தர்ப்பம்,  அவன் மண வாழ்க்கையில் கூடிய விரைவில் வர போவதை அறியாமல். 


அப்பொழுது பார்த்து அவனது கைபேசி அலற,  

"இப்ப யார் போன் பண்றா ..." என முணுமுணுத்துக் கொண்டே, மேஜையின் மீது இருந்த அலைபேசியை எடுத்து பார்த்தவன்,

"ஐயையோ  ...." என்றான் தன் முன் கேசத்தை அழுந்த கோதி.


"யாரு ...."


"பாட்டி ..." என்றான் கண்களில் குறும்புடன். 


" ஐயோ .... " என்றாள்  அவள் தன் கீழ் உதட்டை பற்களால் கடித்து .


அலைபேசி விடாமல் அடிக்க,


"என்ன பாட்டி ..." என்றான் அழைப்பை அனுமதித்து சற்று உயர்ந்த குரலில்.


"டேய், அங்க என்னடா பண்ணிக்கினு  இருக்க உன் ரூம்ல ரொம்ப நேரமா லைட் எரிஞ்சினு இருக்கு .... அணைச்சிட்டு,  படுக்கிற வழிய பாரு ..."


" பாட்டி .....அது ..."


" பேசாத சொன்னத செய் ..." என அவர் அழைப்பை துண்டிக்க, இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்து, வாய்விட்டு சிரித்தனர்.


"இனிமே தூங்கலன்னா  பாட்டி திட்டும் .... நான் ஃபர்ஸ்ட் டிரஸ் சேஞ்ச் பண்ணிட்டு வந்துடறேன் அப்புறம் நீ பண்ணிக்க ..." என்றவன் குளியலறைக்குச் சென்று ஷாட்ஸ் மற்றும் கையில்லா பனியன் சகிதமாக திரும்பினான் .


அவளும் குளியலறைக்குச் சென்று, இரவு உடையை அணிந்து கொண்டு  வெளியே வரும் போது , அவளுக்கான போர்வை, தலையணை எல்லாம் அவன் படுக்கையின் மறுபுறத்தில் தயாராக இருந்தது.


எப்பொழுதுமே அவன் அறையில் இரட்டைக் கட்டில் படுக்கை வசதி  தான். 


தமையனின் மகன்கள் பெரும்பாலான நேரங்களில் அவனுடன் விளையாடிவிட்டு அங்கேயே உறங்கி விடுவதற்கு அது ஏதுவாக இருந்தது.


மற்றபடி அவனது அஜானுபாகுவான சரீரத்திற்கு,  கை கால்கள் நீட்டி  படுத்துக்கொள்ள,  அந்தப் படுக்கை வசதியாக இருந்த நிலையில், முதன்முறையாக மிகுந்த கவனத்தோடு அடங்கி ஒடுங்கி படுக்க வேண்டிய சூழல் ஏற்பட்டிருப்பது புரிய,  கவனமாக தன்னவளுக்கு இடத்தை ஒதுக்கி விட்டு,  கட்டிலின் மறுபுறத்தில் சென்று படுத்துக் கொண்டான்.



அவள் அவன் புறமாக ஒருகளித்து  படுத்துக் கொண்டு குளிரின் காரணமாக , கழுத்து முதல்  உள்ளங்கால் வரை  கம்பளிப் போர்வையை நன்றாக போர்த்திக்கொள்ள, அவள் முகத்தை ஆழ்ந்து நோக்கி கொண்டே ,  விளக்கை அணைத்து,  விடிவிளக்கை ஒளிரவிட்டான்.


ஓரிரு கணம் அங்கு அமைதி நிலவ,

"குட் நைட் " என இரவு உறக்கத்தை நாயகன் துவக்கி வைக்க,  நாயகியும் அதற்கு பொருத்தமான எதிர்வினை ஆற்ற, அடுத்த ஐந்தே நிமிடத்தில் இருவரும் ஆழ்ந்த உறக்கத்தினை தழுவினர். 


எப்படி பத்து வயது  சிறார்களுக்கு பொருத்தமான புதிய நட்பு வட்டம் அமைந்தால், யாதொரு எதிர்பார்ப்பும் இல்லாமல்  கொண்டாடி மகிழ்வார்களோ, அப்படி ஒரு அழகான நட்பு அவர்களுக்கிடையே உருவாகி இருந்ததால்,  வேறு சிந்தனை ஏதுமில்லாமல் ஆழ்ந்த நித்திரை அவர்களை அழகாக ஆக்கிரமித்தது.


மூன்றாம் ஜாமத்தில் நல்ல உறக்கத்தில் இருந்தவன் தன்னை மறந்து திரும்பிப் படுக்கும் போது, அவன் விழிகள் லேசாக திறக்க,  ஜன்னலுக்கு அருகில் ஏதோ நிழல் ஆடுவது போல் தோன்றியது.


உடனே உறக்கம் கலைந்து எழுந்தமர்ந்தவனுக்கு,  அவன் மனையாள் அந்தப் பெரிய ஜன்னலின் வழியே தூரத்தில் தெரிந்த வானத்தை பார்த்துக்கொண்டே நிற்பது தெரிய,மெல்ல நடந்து , நெருங்கி அவள் தோளில் கை வைத்து 


"ஸ்ரீ .... தூக்கம் வரலையா ..." என்றான் மென்மையாக.


அவன் கரத்தை உணர்ந்து மெதுவாக திரும்பியவள் அவன் முகம் பார்க்க,  அவள் கண்கள் கண்ணீரால் குளம் கட்டியிருப்பது தெரியவர, துணுக்குற்றவன்,


" ஏய்.... ஏன்  அழற ...."  என்றான் லேசாக பதறி.


" பாட்டி போனதுக்கு அப்புறம் என்னால முழுசா தூங்கவே முடியல ...நல்ல தூக்கத்துல இருந்தா கூட எப்படியோ  அவங்க ஞாபகம் வந்துடறது  .... உடனே தூக்கம் போயி, அழுக வருது ..." என்றாள் தொண்டையை கமறிக்கொண்டு.


"என் தாத்தா இறந்தப்ப எனக்கும் இப்படித்தான் இருந்துச்சு .... சப்கான்ஷியஸ் மைண்ட்ல அவரோட நினைவுகள், அதிகமா இருந்ததால  ஆழ்ந்த தூக்கத்துல கூட அவரோட  ஞாபகம் வந்துடும் .... உடனே தூக்கம் போயிடும் .... வருத்தப்பட்டு கிட்டே உட்கார்ந்துகிட்டு இருப்பேன் ... அப்புறம் நாளாக ஆக கொஞ்சம் கொஞ்சமா சரி ஆயிடுச்சு ... நீயும் இன்னும் கொஞ்ச நாள்ல சரியாயிடுவ.... ரொம்ப ஃபீல் பண்ணாத... வா தூங்கலாம் .."


" என் அப்பத்தா  சொல்லும் இறந்து போனவங்க வானத்துல  துருவ நட்சத்திரமா இருப்பாங்கன்னு...  என் அப்பத்தா அந்த நட்சத்திரத்துல  இருக்கிற மாதிரியே தெரியுது... அதான் அதையே பாத்துட்டு இருக்கேன் ...  ..." என்றாள் அவன்  பேச்சில் சமாதானம் அடையாமல் லேசாக விம்மியபடி.


மூதாட்டி இறந்து ஒரு மாதம் கூட ஆகாத நிலையில் அவரது நினைவுகளால் அலைகழிக்கப்பட்டு , அவர் சொல்லிச் சென்ற கதைகளை எல்லாம் குழந்தை போல் நினைத்துக் கொண்டு,  நிம்மதி இன்றி தவிப்பவளை காண,  அவன் மனமும் கலங்க, அவளை இழுத்து தன் நெஞ்சோடு அணைத்துக் கொண்டான் சமாதானம் செய்யும் நோக்கில்.


அவனது பறந்து விரிந்த புஜங்களில் முழுவதுமாக பெண்ணவள் பொருந்தி போக , அவள் கேசத்தை வருடிக் கொண்டே 


"சீக்கிரமே எல்லாம் சரியாயிடும்..." என்றான் ஆழ்ந்த குரலில்.


அந்த அணைப்பு அவளுக்கு ஆறுதலை தர,  அவனுக்கோ ஆனந்தத்தையும், அவள் மீதான ஆசையையும் அள்ளி அள்ளி தந்தது.


சிலையாய் நின்றிருந்த தருணங்கள் உறையாதோ என அவன் ஏங்கிக் கொண்டே இருக்கும் போது, அவனிடமிருந்து அவள் லேசாக விலக எத்தனிக்க, 

" ஏன் ..." என்றான் விலக மனம் இல்லாமல் .


" தண்ணி குடிக்கணும் ..." என்றதும் அவன் தன் கைகளை விலக்கிக் கொள்ள , அவள் தண்ணீர் குடித்துவிட்டு அவனுக்கும் ஒரு குவளை கொடுத்தாள்.


" சரி போய் தூங்கு ..." என மீண்டும் அவன் மனம் வராமல் ஊக்க,  அவள் தன்னிடத்திற்கு சென்று  ஒருகளித்து படுத்துக்கொண்டு, முகத்தைத் தவிர   உச்சந்தலை முதல் உள்ளங்கால் வரை முழுவதுமாக போர்வையால் மூடிக்கொண்டவள், சற்று நேரத்திற்கு எல்லாம் கண்ணயர்ந்து போனாள்.


தன் உறக்கத்தை அவளுக்கு தாரை வார்த்துவிட்டு,  அவளையே பார்த்தபடி  அமர்ந்திருந்தவனுக்கு முன்னிரவு நடந்த உரையாடல்களும் அப்போதிருந்த அவன் உணர்வுகளையும் நினைத்து வியப்பாகத்தான் இருந்தது.


அவர்களுக்கான பிரத்தியேக இரவு என்று அறிந்தும்,  அவளை நெருங்கும் எண்ணம் துளி கூட எழாமல் ,  முழுக்க முழுக்க  நட்பு பாராட்டியதெல்லாம் , ஏதோ யுகங்களுக்கு முன்பான மனநிலை போல் தோன்றின.


இவ்வளவு  ஏன்  அவளை அணைத்தபடி மூன்று மணி நேரம்  காரில் பயணித்த போது கூட தோன்றாத கிளர்ச்சி, இந்த மூன்றாம் ஜாமத்தின் மூன்று  நொடி  தொடு உணர்ச்சியில் தொடங்கியதை நினைத்து அதிசயத்து போனான். 


ஏன் இப்படி ஒரு தேவையில்லாத ஆராய்ச்சி ....


நீ ஒரு பரிபூரண ஆண்,  அவள் உன் மனைவி, உங்கள் இருவருக்குமான பிரத்தியேக தனிமையில் அவளிடம் மோகம் கொள்வது இயல்பு தானே,  இதற்கு ஏன் காரணங்களை தேடுகிறாய் ... என அவன் மனம் கடிந்த போதும்,  அதற்கு இணங்காமல் யோசித்ததில்,

மங்கையின் விழிகளில் மழலையை கண்டதால் வந்த வினை எனப் புரிய ,


" பொதுவா சின்ன வயசுல  நிலால  பாட்டி வடை சுடும்னு கதை கேட்டு இருக்கேன் .... இவ என்ன நட்சத்திரத்துல பாட்டிய பார்த்தேன்னு புது கதை  சொல்றா .... "  


அவள் அந்த கதையை சொல்லி கலங்கும் போது அவனும் கலங்கியது வாஸ்தவம் தான் ஆனால் தற்போது, அதே  கதையால்  காதல் உணர்வு காட்டாற்று வெள்ளமாய் கரை புரண்டோட,  அனைத்தையும் அசைப்போட்டு பார்த்தவனுக்கு, களிப்போடு சிரிப்பு தான் வந்தது. 


தன்னை மறந்து அவளையே  பல மணித்துளிகளாய்  பார்த்துக் கொண்டிருந்தவனுக்கு சிறு அசைவு கூட இல்லாமல் அவள் அயர்ந்து உறங்குவது ஆச்சரியத்தை கொடுக்க 


" இவ ஏன் சீட் பெல்ட் போட்ட டெடி பியர் மாதிரி தூங்குறா.... கொஞ்சம் கூட அசைய மாற்றாளே..." என வாய்விட்டு புலம்பியவனின் கண்கள் சற்று நேரத்திற்கெல்லாம்   சோர்வில் சொக்க,  தன்னை மறந்து நிம்மதியான நித்திரையை தழுவினான். 

   


அவன் காலை ஏழு மணிக்கு மேல் கண் விழிக்கும் பொழுது , குளித்து முடித்து அவள் புத்தம் புது மலர் போல் மஞ்சள்  , மெருன் கலந்த கண்ணாடி வேலைபாடுகள் செய்யப்பட்ட ராஜஸ்தானி கோரா காட்டன் சுடிதாரில் அம்சமாக தயாராகி இருந்தாள்.


" ஹேய் குட் மார்னிங் ..." என்றான் அவள் தன் உடைமைகளை தனக்காக  ஒதுக்கப்பட்ட அலமாரியில் அடுக்கிக் கொண்டிருப்பதை பார்த்து.


குரலைக் கேட்டு திரும்பியவள்

" குட் மார்னிங் ..." என்னும் போது தான் , அவளது ஆடை அணிமணி கருத்தை கவர, புடவை அணிந்திருந்தால் இன்னும்  அழகாக இருந்திருக்குமே  என புதிதாக முளைத்திருந்த மோக உணர்வு நினைக்க வைக்க , அதை வெளிப்படுத்தாமல்


" கீழ போய் காபி குடிச்சிருக்கலாம் இல்ல .... " என்றான் சோம்பல் முறித்தபடி.


" எனக்கு தனியா கீழ போக என்னவோ மாறி இருக்கு ...." அவள் தயங்க,


" காலேஜ் ஃபர்ஸ்ட் டே  ராகிங் மாதிரி பயப்படற போல ...  என் அம்மா இன்னசென்ட்  , அப்பா ரொம்ப கேஷூவல் கேரக்டர் ,அண்ணி ஃசாப்ட்  ,  அண்ணன் கொஞ்சம் டெரர், ஆனா சமாளிச்சிக்கலாம் , அன்பு சென்சிடிவ் கேரக்டர்  எதுக்கு அழுவுறா, எதுக்கு சிரிக்கிறான்னே  தெரியாது  .... மாமா மாமி எல்லாம் ரொம்ப ஃப்ரெண்ட்லி டைப் ...  என்ன ஒண்ணு என் பாட்டியை சமாளிக்கிறது தான் கொஞ்சம் கஷ்டம் .... பாத்துக்கலாம்... யாமிருக்க பயமேன் ... பத்து நிமிஷத்துல ஃபிரஷ் அயிட்டு வந்துடறேன் ..." 


என்று படபடத்தவன் சொன்னது போலவே  , பத்து நிமிடத்திற்குள் பல் துலக்கி, முகம் கழுவிக் கொண்டு வந்து சேர்ந்தான். 


இருவரும் படியிறங்கி வந்ததுமே 


" இன்னைக்கு கூட குளிக்காம தான் காபி குடிக்கணுமா ....  போடா போய் குளிச்சிட்டு வா இனிமே குளிக்காம  அடுப்பங்கற பக்கம் நீ வரவே கூடாது ..." என பாட்டி, கட்டளை இட ,


" இப்ப உடனே குளிக்க போகலைன்னா,  பாட்டி என் மானத்தை பப்ளிக்கா வாங்கிடும் ...பத்தே நிமிஷத்துல குளிச்சிட்டு ஓடி வந்துடறேன் ..." என தன்னவளிடம் அவன் கிசுகிசுத்து விட்டு  விடைபெற,  ஓரளவிற்கு அறிந்திருந்த கணவன் திடீரென்று விடை பெற்றதும் அங்கிருந்தவர்கள்  அனைவரும் முற்றிலும்  அந்நியமாய் தெரிய, தடுமாறிப் போனாள் பெண்.


கூடத்தில் இருந்த தொலைக்காட்சியில் செய்திகள் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்க, அதனைப் பார்த்துக் கொண்டே  வீட்டு ஆண்கள் அன்றைய தினசரியை  கையில் ஏந்திக்கொண்டு அரசியல் பேசிக் கொண்டிருந்தனர். 


அடுக்களையில் பிரபாவும் , அகல்யாவும் காலை உணவு தயாரித்துக் கொண்டிருக்க,  லதா (வீராவின் மாமி) உணவு மேஜை நாற்காலியில் அமர்ந்தபடி  காய்கறிகளை நறுக்கி கொண்டிருக்க, அவருக்கு அருகில் அமர்ந்து கொண்டு தன் மாமியார் வீட்டுக்கு  சென்றிருக்கும் கணவனுக்கு கைபேசியில் செய்தி அனுப்பி கொண்டிருந்தாள்  அன்பு. 


தயங்கி தயங்கி வந்த ஸ்ரீப்ரியாவை  சுந்தராம்பாள் ஆராய்ச்சி பார்வை பார்க்க,  ஏதேச்சையாகத் திரும்பிய பிரபா அவளைப் பார்த்து 


"வாம்மா புது பொண்ணு .... காபி குடிக்கிறியா, தம்பி எங்க ....?" என்றாள் நட்போடு .


"குளிச்சுக்கிட்டு இருக்காருக்கா..  அவர் வந்ததுமே நான் காபி குடிக்கிறேனே ..." என்றதும் ,


மென் புன்னகை பூத்தவள் 

" சரி,  இந்த காபியை கொண்டு போய் கூடத்துல இருக்கிறவங்களுக்கு எல்லாம்  கொடுத்திடு ..."  என்றாள் உரிமையாய். 


பொன்னம்பலம்,  தாமோதரன்(வீராவின் தாய் மாமன்) ,  சத்யன் என வரிசையாக அவள் காபி கொடுத்துக் கொண்டே வர, தனக்கான குவளையோடு அங்கு வந்த வீரா, தன்னவளை பார்த்து ,


" போ... உன் காஃபியை கொண்டு வா ..." என்றான் அங்கிருந்த நாற்காலியில் அமர்ந்தபடி.


தனக்கான குவளையோடு வந்தவளை தன் அருகே இருந்த நாற்காலியில் அமரச் சொல்லிவிட்டு, அன்றைய தினசரியை எடுத்துக் கொடுத்தான்.


கையில் தினசரி கிடைத்ததும் , அருமையான ஆவி பறக்கும் காபியை ரசித்து குடித்த படி அதில் மூழ்கிப் போனாள் ஸ்ரீப்ரியா .


ஏதோ சினிமா செய்திகளை படித்து விட்டு கிளம்பி விடுவாள் என்றெண்ணி கொண்டிருந்த பொன்னம்பலத்திற்கு,  அவள் அரசியல் பக்கங்களில் மூழ்கி இருப்பது ஆச்சரியத்தை தர, 


" ஏம்மா, மதுரைல மொத்தமே ஆறு சட்டமன்ற தொகுதி தானே..."  என்றார் அவளது அரசியல் அறிவை தெரிந்து கொள்வதற்காக. 


" இல்ல மாமா .... மொத்தம் பத்துனு நினைக்கிறேன்...  திருப்பரங்குன்றம், திருமங்கலம், உசிலம்பட்டி,அப்புறம் ... சோழவந்தான்.... " என தடுமாறி யோசித்து ஒரு வழியாக தனக்குத் தெரிந்ததை கோர்வையாக கூறி முடித்தாள்.


பொன்னம்பலத்தை போலவே சத்யன் ,  தாமோதரனுக்கும் அரசியலில் கூடுதல்  ஆர்வம் என்பதால்  பேச்சு ,  வரவிருக்கும் தேர்தலில் எந்தக் கட்சி எத்தனை தொகுதிகளை கைப்பற்றும் ,  மாநிலக் கட்சியா , தேசியக் கட்சியா  யாருக்கு தனி பெரும்பான்மை கிடைக்கும்,  என சுவாரசியமாக பயணிக்க,  அவரவர்கள் தத்தம் கருத்துக்களை பகிர,  ஸ்ரீப்ரியாவும் தனக்குத் தெரிந்ததை பகிர்ந்தாள்.


அதை எதையும் கண்டுகொள்ளாமல், விளையாட்டுச் செய்திகளை மட்டும் படித்துவிட்டு,  பங்குச்சந்தைகளுக்கான நாளிதழில் மூழ்கி இருந்தான் வீரா .



அப்போது அகல்யா 


" பரவால்ல உனக்கு  அரசியல்ல ஆர்வம் இருக்கு ... பாண்டிக்கு அரசியல்னாலே  பிடிக்காது ப்ரியா ..." என முடிக்க, உடனே பிரபா


"வீட்ல மாமா , என் வீட்டுக்காரர் இருந்தா  மட்டும் தான் டிவில  நியூஸ் ஓடும்...  மத்தபடி நான், அன்பு ,அத்தை எல்லாம் சீரியல் , சினிமா, கிரிக்கெட்  தான் பார்ப்போம் ...  நீயும் சினிமா பார்ப்பல்ல..." என்றாள் ப்ரியாவை பார்த்து கேள்வியாய்.


"சினிமா நல்லா பார்ப்பேன்...  நியூஸ் நிறைய பாப்பேன்.... சீரியல், கிரிக்கெட் மட்டும் பார்க்க மாட்டேன் ....." என அவள்  முடிக்கும் போது,


"பாலிடிக்ஸ்ங்கற வார்த்தையை கேட்டாலே எனக்கு கடுப்பா  இருக்கும் ..."  என்றாள் அன்பு இயல்பாக. 


உடனே சத்யன் அவளைப் பார்த்து 


" அதான் தெரியுமே ... நீ பிஏ ஹிஸ்டரில வேர்ல்ட் பாலிடிக்ஸ் பேப்பரை மூணு தடவை கோட் அடிச்சு இல்ல பாஸ் பண்ண ..." என சிரித்தான் ஏதோ பெரிய ஜோக் சொன்னது போல்.


அன்புவின் முகம் முழுவதுமாக விழுந்துவிட,  அவளது உணர்வுகளை உள்வாங்கிக் கொள்ளாமல்,


" அன்புக்கு லோக்கல் பாலிடிக்ஸே தெரியாது நீ வேர்ல்ட் பாலிடிக்ஸ் பத்தி பேசிக்கிட்டு இருக்க ... அவளுக்கு ஸ்டேட் எது சென்ட்ரல் எதுன்னே தெரியாதும்மா .... உன் மாவட்டத்துல எத்தனை தொகுதி இருக்குன்னு நீ புட்டு புட்டு வைக்கிற ஆனா அவளுக்கு தமிழ்நாட்டுல மொத்தம் எத்தனை தொகுதி இருக்குன்னு கூட தெரியாது .... " என பொன்னம்பலம் ஸ்ரீப்ரியாவை பார்த்துக் கூற,  அன்புவின் முகம்  மேலும்  அவமானத்தால்  சிவந்து போனது .


"அப்பா , அரசியல்ல எல்லாருக்கும் இன்ட்ரஸ்ட் இருக்கணும்னு அவசியம் இல்லப்பா...  எனக்கும் தான் நம்ம கோயம்புத்தூர்ல எத்தனை தொகுதி இருக்குனு சரியா தெரியாது ... ஐஏஎஸ் ஆகணும்னு இவ யுபிஎஸ்சி எக்ஸாம் எழுதி இருக்கா ... ப்ரிலிம்ஸ்ல பாஸ் பண்ணிட்டா மெயின்ல விட்டுட்டா அதனால பாலிடிக்ஸ்,  கரண்ட் அஃபர்ஸ் தெரிஞ்சதால உங்க கேள்விக்கு பதில் சொல்லி இருக்கா... இதெல்லாம் ஒரு பெரிய விஷயமா பேசாதீங்க .."  என்றான் வீரா தங்கையை விட்டுக் கொடுக்காமல்.


வீரா பேசியது  நிதர்சனம் என்றாலும்,  ஸ்ரீப்ரியாவுக்கு தனது தோல்வியை பலர் அறிய பறைசாற்றியது  ஒரு வித சங்கடத்தை கொடுத்திருக்க 


" ஓ... நீ சிவில் சர்வீஸ் எக்ஸாம் எழுதினியாம்மா.. வெரி குட் ..." என பொன்னம்பலம் ஆரம்பிக்க, உடனே சத்யன், தாமோதரன் , பிரபா, அகல்யா என அனைவரும் அது குறித்த கேள்விகளை அவளிடம் முன் வைக்க,வேறு வழி இல்லாமல் அதற்கெல்லாம் பதில் அளிக்க வேண்டிய கட்டாயத்தில் நிறுத்தப்பட்டாள் வீராவின் மனையாட்டி.


ஏற்கனவே அன்புவிற்கு  தன் தந்தை மற்றும் அண்ணன் சத்யன் மீது கொதித்துக் கொண்டிருந்த கோபம்  தற்போது வீரா மற்றும் அவன் மனையாளின் மீது அதிவேகமாக பாய்ந்தது.


அண்ணன் சபையில் தன்னை விட்டுக் கொடுக்காமல் பேசினான் எனப் புரிந்து கொள்ளாமல், தன் மனையாளின் பெருமையை பலர் அரிய பறைசாற்றி மேலும் தனக்கு அவமானத்தை தேடி கொடுத்து விட்டான் என்று புரிந்துகொண்டு மனம் குமைந்து போனாள்.


இவ்வளவு மனக்குமுறல்களில் அவள் மூழ்கிக் கொண்டிருக்கும் போது அதனைப் புரிந்து கொள்ளாமல் சுந்தராம்பாள், 


"இந்த கதையை கேளு ... ஒரு முறை  அன்பு எலக்ஷன் டயத்துல மத்திய பிரதேஷ்ல இருக்கிற  அவங்க  மாமா வீட்ல இருந்தா ... ஓட்டு போட வாடின்னு பல தடவை கூப்பிட்டு பாத்துட்டோம் ... எனக்கு அரசியலே பிடிக்காது நான் யாருக்கும் ஓட்டு போட மாட்டேன்னு சொல்லிட்டா... சரி அவளுக்கு அரசியல் பிடிக்காது போலன்னு  நாங்களும் விட்டுட்டோம் ... அப்புறம்தான் தெரிஞ்சது மத்திய பிரதேஷ்ல இருந்து தமிழ்நாட்டுக்கு தனியா பிளேன்ல ஏறி வர பயந்துக்குன்னு  அப்படி சொல்லி இருக்கான்னு..." என தன் பங்குக்கு  கொளுத்தி போட்டு சிரிக்க, அன்புற்கு துக்கம் தொண்டை அடைக்க, கலங்கிய கண்களை வெளிக்காட்டாமல் தலை குனிந்து கொண்டாள். 


"பிரபா கூட உன்னை மாதிரி தான் , தனியா சிங்கப்பூர், மலேசியான்னு  போயிட்டு வந்துடும் ... ஆனா அன்பு இங்கு இருக்கிற மும்பைக்கு  கூட தனியா போவாது...  ரொம்ப பயப்படும்...  அண்ணனுங்க இல்ல அப்பா யாராவது கூட வந்தா தான் போவும்..."


தன் பெண்ணின் இயலாமையை சொல்கிறோம் என தெரியாமல் பெண்ணின் சுபாவத்தை சொல்வதாக  எண்ணிக்கொண்டு அகல்யா வெள்ளந்தியாய் ஸ்ரீப்ரியாவை பார்த்து  கூற , அது மேலும்  எரியும் நெருப்பில் எண்ணெய் ஊற்றியது போல் அன்புவின் கோபத்தை அதிகரிக்கச் செய்து அவள் முகத்தில் அளவுக்கு அதிகமான இறுக்கத்தை கொண்டு வர,  மற்றவர்கள் கவனிக்கத் தவறிய அந்த மாற்றத்தை பிரபாவும் ஸ்ரீப்ரியாவும் ஒரு சேர கவனித்து வருந்தினர். 


அப்போது வீட்டு வாயிலில் டாக்ஸி வந்து நிற்கும் சத்தம் கேட்க, கூடத்திலிருந்து எட்டிப் பார்த்த பொன்னம்பலம்,


" பிரபா உன் தங்கச்சி வந்திருக்காம்மா..."  என்றார் ப்ரீத்தியை பார்த்தபடி.


அழகான பிங்க் நிற டாப்,  ஜீன்ஸ் சகிதமாக,  மிதமான ஒப்பனையோடு டாக்ஸியில் இருந்து இறங்கி, வீட்டை நோக்கி ஒயிலாக நடந்து வந்து கொண்டிருந்தாள் ப்ரீத்தி.



ஸ்ரீ-ராமம் வருவார்கள் ....











































































Comments

Post a Comment