ஸ்ரீ-ராமம்-60

 அத்தியாயம் 60


"அம்மா அப்பா சாப்பிட்டு முடிச்சிட்டாங்க... நான் போய் அவங்கள வீட்ல விட்டுட்டு வந்துடறேன் ..."  என்றாள் பிரபா கணவனின் முகத்தில் பார்வையை பதித்து.


"வா ..... நாம ரெண்டு பேருமே போய் அவங்கள டிராப் பண்ணிட்டு வந்துடலாம்...."  

கணவனின் எதார்த்த பேச்சில்,எச்சில் கூட்டி விழுங்கியவளுக்கு , ஒரு கணம் தங்கையோடு கடைசியாக உரையாடியது மனக்கண் முன் வந்து போக,  உள்ளுக்குள் புதுவிதப் பதற்றம் எரிபந்து போல் தணலை கக்கியபடி லேசாக உருண்டோடியது. 


நடந்ததை நடந்தபடியே கணவனிடம் மறைக்காமல் கூறி இருக்கலாமோ .... என்ற எண்ணம் கூட உருவானது. 

தங்கையை நன்கறிவாள்.  இவள் பேசியதற்கெல்லாம் சேர்த்து வைத்து  வஞ்சம் தீர்க்க எண்ணி ஏதாவது  பெரிய திட்டத்தோடு காத்துக் கொண்டிருப்பாள் என்ற எண்ணமே, அவள் மனதை வெகுவாக பிசைய  வெளிப்படையாக கணவனிடம் அதைக் கூற முடியாத நிலை என்பதால்,


"வேணாங்க ... நீங்க குழந்தைகள பாத்துக்குங்க .... நான் அவங்களை டிராப் பண்ணிட்டு வந்துடறேன்..." என சமாளித்தாள்.


"இப்ப டிராபிக் ஜாஸ்தியா இருக்கும் ... உன்னால சமாளிக்க முடியாது .... நான் கார் ஓட்றேன்.. அத்தை மாமாவ ட்ராப் பண்ணிட்டு இம்மீடியட்டா வீடு திரும்பிடலாம் குழந்தைங்க விளையாடிக்கிட்டு இருக்காங்க... இப்போதைக்கு தேட மாட்டாங்க .... சீக்கிரமா போயிட்டு சீக்கிரமே வந்துடலாம் ... வா ..."


அதற்கு மேல் மறுத்து பேசினால், பிரச்சனை வேறு வடிவம் எடுக்க வாய்ப்பிருக்கிறது என்பதால், அமைதியாக தன் தாய் தந்தையை அழைத்துக் கொண்டு கணவன் சத்யனோடு தன் வீட்டிற்கு பயணமானாள்.


"எப்படியோ என் ஃபோன் ஃபிளைட் மோடுக்கு போயிட்டு இருக்குது ... அதான் காலையில இருந்து ஒரு ஃபோனும் வரல.... ப்ரீத்தி போன் பண்ணாளானு தெரியல ....அவளுக்கு போன் போட்டாலும் போகல ..." என பிரபாவின் தந்தை லேசாக புலம்பிக்கொண்டே வர,  பிரபாவுக்கு மூச்சு முட்டியது.


சூர்ப்பனகை....  என்ன சூழ்ச்சி செய்து வைத்திருக்கிறாளோ .... என உள்ளுக்குள் அவள் தங்கை மீது கொலை வெறியோடு கொந்தளித்தாலும்  அதனை வெளிக்காட்டிக் கொள்ளாமல், 

"ரொம்ப யோசிக்காதீங்கப்பா ... அவ போன்ல ஏதாவது பிரச்சனையா இருக்கும் ... இல்லன்னா அவளுக்கு சிக்னல் கிடைச்சிருக்காது ..."  என்றாள் இயல்பாய்.


அரை மணி நேர பயணத்திற்கு பிறகு,  அவர்களது கார் வீட்டை அடைய,  அந்தத் தனி வீடு இருளில் மூழ்கி இருந்தது.


"எங்கம்மா போயிருப்பா .... நைட் 10 ஆக போகுது .... ஃபோன் போட்டாலும் போகல ...."  என மீண்டும் பிரபாவின் தந்தை ஆரம்பிக்க, உடன் அவள் தாயும் இணைந்து கொள்ள, பிரபாவின் முகத்தில் ஆங்காங்கே வியர்வைத் துளிகள் துளிர்க்க, அதனைக் கைக்குட்டையால் அழுந்த துடைத்தபடி 


"யாராவது ஃபிரண்டு வீட்டுக்கு போய் இருப்பா, அவ என்ன குழந்தையா .... இன்னும் கொஞ்ச நேரத்துல வீட்டுக்கு வந்துடுவா இல்லன்னா காலையில வரப்போறா.... நீங்க போய் அம்மாவுக்கு மெடிசன் கொடுத்து தூங்க வைங்க..."  என அவள் சமாதானம் சொல்லிக் கொண்டிருக்கும்போதே, மாற்றுச் சாவியை பயன்படுத்தி வீட்டுக் கதவை திறந்தான் சத்யன்.


உள்ளுக்குள் நுழைந்ததும்,  அவளது இதயத்துடிப்பு ஏகத்துக்கும் எகுற, வேக வேகமாக ப்ரீத்தியின் அறைக்கு சென்று , அவளது படுக்கை, மேஜை புத்தகங்கள், துணிகள் வைக்கும்  மர அலமாரிகள் என எல்லா இடங்களிலும் சிறு தேடுதல் வேட்டை நடத்தி முடித்து,  கடிதம் எதுவும் கிட்டவில்லை என்றதும் பெருமூச்சொன்றை வெளியேற்றி லேசாக  நிம்மதியுற்றாள்.


அதேபோல் சத்யன் மற்றும் தாய் தந்தையின் பார்வையை உறுத்தாமல் ,  வீட்டின் மற்ற இடங்களிலும்  மேம்போக்காக துப்பறிந்தவளுக்கு எதுவுமே கிட்டாமல் போக, ஏனோ  இம்முறை முன்பிருந்த நிம்மதி முற்றிலும் வடிந்து,


சொன்னது போலவே,  சொல்லாமல் கொள்ளாமல் ஏதாவது செய்து கொண்டு விட்டாளா .... என்ற கலக்கம் பிறக்க,  அவள் கண்கள் லேசாக கலங்கியது. 


உடனே தங்கையை தொடர்பு கொள்ள முயன்றாள், ஆனால் இம்முறையும் இணைப்பு கிட்டாமல் போக,  அடுத்த கணமே அவளது தோழி கவிதாவிற்கும் அழைப்பு விடுத்தாள் ....


அதிலும் பலன் இல்லாமல் போக, ப்ரீத்தியின் வேறு நட்பு வட்டங்களை பற்றிய தகவல்கள் ஏதும்  தெரியாததால்  தடுமாறிக் கொண்டிருந்தவளிடம்,


"ஏன் ஒரு மாறி  இருக்க .... " என்றான்  சத்யன் அவள் முகமாற்றத்தைக் கண்டு.


"அது வந்து.... ப்ரீத்திக்கு போன் போட்டேன் ..... லைன் கிடைக்க மாட்டேங்குது ..." என கமரியக் குரலில்  முடிப்பதற்குள் 


"அடியேய் .... கடைசியா அவகிட்ட என்ன பேசின  .... மறைக்காம உண்மைய சொல்லு.." 


அதற்கு மேல் மறைக்க இயலாமல், தன் அறைக்கு அழைத்துச் சென்று அனைத்தையும் அவள் மெல்ல மெல்ல  பகிர்ந்து முடித்தது தான் தாமதம், சத்யனின் கரம் பேரிடியாய் அவள் கன்னத்தில் இறங்கியது.


துடித்து துவண்டு விட்டாள் பாவை .


"பொறுமையா கையாள வேண்டிய விஷயத்தை,  இப்படி சந்தி சிரிக்கிறா மாதிரி செஞ்சு வச்சிருக்கியேடி ....பாவி... உன்னை எல்லாம் என்ன பண்ணா தகும் ... இப்ப வயசு பொண்ண காணோம் .... அவளா ஏதாவது பண்ணிக்கிட்டாளா ... இல்ல அவளை யாராவது ஏதாவது பண்ணிட்டாங்களானு ஒரு விவரமும் இல்ல .... நாளைக்கு காலையிலயும் அவ வரலன்னா போலீஸ் ஸ்டேஷன் தான் போயாகணும்...


அங்க போலீஸ்காரன்,  உன்னை  கேள்வி கேட்க மாட்டான் என்னை தான் சந்தேகமா பார்ப்பான் ....  ஏன்னா என் உறவு முறை அப்படி நீயே உன் மச்சினியை ஏதோ பண்ணிட்டு இங்க பொண்டாட்டியோட வந்து மிஸ்ஸிங் கேஸ் குடுக்குறியான்னு வாய்க்கு வந்தபடி வண்ட வண்டையா கேட்பான் .... அப்ப உனக்கு சந்தோஷமா .... எதெல்லாம் நடக்க கூடாதுன்னு நினைச்சேனோ,  அதெல்லாம் நடந்திடும் போல இருக்கு .... இந்த பிரச்சனை என்னோட மட்டும்  போகாது ...என் குடும்பத்துக்கும் தேவை இல்லாம கெட்ட பேரை வரவழைச்சிடும் ...."


அவன் அடித்தது அந்தக் கணம் மட்டுமே வலித்தது.  ஆனால்  அவன் பேச்சில் இருந்த உண்மையோ அணு அணுவாக அவளைத் தகிக்க செய்ய செய்வதறியாது குலுங்கி அழுதாள்.


ஓரிரு கணம் அங்கு அமைதி நிலவ,  கோபம் குறைந்ததும்,  மனையாள் ப்ரீத்தியிடம் எதிர்வினை ஆற்றியதன் பின்னணியில் இருந்த நியாயம் லேசாக உரைக்க,  அவளை நெருங்கி,


"இப்ப அழுது என்ன பிரயோஜனம் ... அழுகையை நிறுத்து ....  உன் அப்பா அம்மா கிட்ட எதுவும் சொல்லாத ... வா வீட்டுக்கு போலாம் ... மத்ததை நாளைக்கு  பாத்துக்கலாம் ...."


கோபத்தில் மனைவி தரப்பு நியாயத்தை புரிந்து கொள்ளாமல்,  வாய்க்கு வந்தபடி வசை பாடி, அவளை கை நீட்டியும் அடித்து விட்டு கோபம் குறைந்ததும்,  அவளிடம் சமாதானம் பேசுவான் ....


அதே போல் அவன் கோபத்தில் இருக்கும் நியாயத்தை புரிந்து கொண்டு, பெண்ணவளும் இறங்கி வந்து விடுவாள் ...


இப்படியான நிகழ்வுகள்  அவர்களது அன்றாட வாழ்வின் அங்கம் என்பதால், வழக்கம் போல் இருவரும் சமாதானமாகி,  அடுத்த கட்ட பணியை நோக்கி பயணமாயினர்.


அன்பு,  பிரபா இருவரும் சேர்ந்து, சந்தனமும் அரக்கும் கலந்த அழகிய  ஷிபான் புடவையில்,  மிதமான ஒப்பனையில் அம்சமாக ஸ்ரீப்ரியாவை அலங்கரித்தனர்.


அன்பு மட்டும்  வாய் ஓயாமல்  ஏதேதோ பேசி  ஸ்ரீப்ரியாவை அவ்வப்போது மெல்லிய புன்னகைக்கு ஆட்படுத்த, பிரபாவின் சிந்தனையோ, சதா தங்கையை சுற்றியே வலம் வந்து கொண்டிருந்ததால்,  வெகு லேசான புன்னகையை உதட்டில் ஒட்ட வைத்த படி கருமமே கண்ணாக அலங்காரப் பணியில் ஈடுபட்டிருந்தாள்.


ஸ்ரீப்ரியாவும் தான் எடுத்திருக்கும் முடிவை கணவனின் மனம் கோணாமல் செயல்படுத்தும் எண்ணத்திலேயே மூழ்கி இருந்ததால் அவள் சிந்தனையும் எங்கெங்கோ சஞ்சரித்து கொண்டிருக்க, ஒப்பனை முடியும் தருவாயில் அங்கு வந்த சுந்தராம்பாள் அவள் மீது மெச்சும் பார்வை ஒன்றே பதித்து 


"என் பேரனுக்கு  வயசு 30 முடிய போவுது ....  அதனால எதையும் தள்ளி போடாம கூடிய சீக்கிரமே புள்ளைய பெத்துகிட்டு உங்க ரெண்டு பேத்துக்குமான குடும்பத்தை அமச்சிக்க பாருங்க ..." என்றவர் உடனே குரலை  சன்னமாக தாழ்த்தி ,


"உன் பாட்டி செத்துப் போனதால,  சாந்தி முகூர்த்தம் எல்லாம் வேணாம்னு என்கிட்ட ஒளரிக்கிட்டு இருந்தான் .... அந்த மாதிரி ஏதாச்சும் உன்கிட்ட  பேசினா ஒத்துக்காதே .... என்ன... நான் சொல்றது புரியுதா... " என பூடகமாக அவர் முடிக்க, பருத்தியே புடவையாய் காய்த்தது போல் உணர்ந்தாள் பெண்ணவள்.


அவள் மீதான அவன் விருப்பத்தையும்,  இந்த திருமணத்தின் மீதான ஈடுபாட்டையும் நன்கு அறிவாள்.


திருமண பந்தத்தில் இணைய போகும் இருவர், தன் உணர்வை மட்டும் பெரிதாக எண்ணாமல்  தன் இணையின் உணர்வுக்கும் மதிப்பளித்தால் தான் அவர்களது திருமண  வாழ்வு மிக சிறப்பாக அமையும் .


உணர்வு என்பது இருவருக்கும் பொதுவானது.

திருமண உறவை தள்ளிப் போடலாம்  என்ற அவளது எண்ணத்திற்கு அவன் மதிப்பளிக்க வேண்டும் என்றெண்ணுவது போல்,   திருமண உறவு வேண்டும்  என்று  கேட்டால் அவன் உணர்வுக்கும் உரிமைக்கும் அவள்  மதிப்பளித்தே ஆக வேண்டியதும் முக்கியம் என்கின்ற  நிலையில் முடிவுக்கு வர முடியாமல்  , உள்ளுக்குள் தடுமாறிக் கொண்டிருக்கும் போது தாம்பத்திய உறவு குறித்து அவனது நிலைப்பாட்டை சுந்தராம்பாள்  மூலம் தெரிந்து கொண்டது அவள் மனதிற்கு நிம்மதி அளிக்க, அதனை வெளிக்காட்டிக் கொள்ளாமல், அவரது பேச்சை ஆமோதிப்பது போல் மென்மையாக தலையசைத்து வைத்தாள் பெண். 


"ஹேவ் எ பியூட்டிஃபுல் நைட் .... ஆல் தி பெஸ்ட்"  என பிரபா நட்போடு முடிக்க,  உடன் அன்பும் இணைந்து கொள்ள,  கடைசியாய் சுந்தராம்பாள் " நானும் ஆல் த பெஸ்ட்  ..." 

என்றார் கம்பீரமாய்.


அவரது தோரணை அவள் முகத்தில் மென் புன்னகையை  பூக்க செய்ய,  லேசான வெட்கத்தோடு விடை பெற்றவளுக்கு,  அவன் அறையில் நுழைவதற்குள் 1008 தடுமாற்றம்.


புதுவகையான படபடப்பு ....


இனம் புரியாத ஆர்ப்பரிப்பு ...


என பெயரிடப்படாத உணர்வுக்குவியல்களால் முக்குளித்தபடி  தன் முந்தானை நுனியை பற்றிக்கொண்டு மெதுவாக நடந்து  ஒருகளித்திருந்த கதவை திறந்துக்கொண்டு அவன் அறைகுள்ளும்  வாழ்க்கைக்குள்ளும்  பிரவேசமானாள்.



அழகாக அதே சமயத்தில்,  மிதமாக சோபன இரவுக்காக அந்த அறை தயார் செய்யப்பட்டிருக்க, அந்த பெரிய அறையின் மூலையில்,  சுழல் நாற்காலியில் அமர்ந்தபடி மேஜையின் மேல் இருந்த மடிக்கணினியில் பணி செய்து கொண்டிருந்த அவள் கணவன் அரவத்தைக் கேட்டு திரும்பிப் பார்த்து,


" ஹாய்.... வா ...." என்றான் வெகு இயல்பாக.


அதுவரை இருந்த தடுமாற்றம், தயக்கம் எல்லாம் ஒரு நொடியில் காணாமல் போய், இயல்பான புன்னகை அவள் முகத்தில் குடிகொள்ள, அதனை உள்வாங்கிக் கொண்டே,


"வா .... இங்க வந்து உட்காரு ..." என்றான் தனக்கு அருகில் இருந்த சோபாவை காட்டி.


அவள் சென்று அமர்ந்ததும் , ஒரு கணம் இருவருக்கும் இடையே அமைதி நிலவ,


"கல்யாணத்துக்கு முன்னாடி நமக்கு பேசிக்க நேரமே இல்ல... உன்னைப்பத்தி எனக்கு ஓரளவுக்கு தெரியும் ஆனா என்னை பத்தி உனக்கு எதுவுமே தெரியாதுன்னு எனக்கு தெரியும்.... ஆனா உனக்கு  என்னை பிடிக்கும்னு  தெரியும் .... ஆம் ஐ ரைட்  ..."


பார்வையில் ஆர்வத்தைத் தேக்கி, அவன் கேட்ட கேள்வியில் மனம் மகிழ்ந்தவள் ,


"எஸ் வெல்செட் ...."  என புன்னகையில் மொழிந்து


"ஒரு விஷயம் கிளரிஃபை பண்ணுங்க...  நீங்க பொண்ணு பாக்க வந்த அன்னைக்கு தான் முதல் முதல்ல நான் உங்ககிட்ட பேசினேன் ....  பின்ன எப்படி என்னை பத்தி உங்களுக்கு  தெரியும்.. ..." என்றாள் ஆர்வத்தோடு. 


"நான் மொதல்  உன் அப்பா கிட்ட தான் பேசினேன் .... "


"அப்பா கிட்டயா ...????"


"ஆமா ... இந்த கல்யாணம் வேண்டாம்னு சொல்றதுக்காக தான் அவருக்கு  ஃபோன் பண்ணேன் ... உன்கிட்ட நேரடியா  இந்த கல்யாணத்துல இஷ்டம் இல்லன்னு சொல்ல நினைச்சு உன் ஃபோன் நம்பரை கேட்டேன் .... உடனே அவரு வேற மாதிரி புரிஞ்சுகிட்டு, என் பொண்ணு நான் சொன்னா கேப்பா .... கவலைப்படாதீங்க இந்த கல்யாணம் நிச்சயமா நடக்கும்னு சொன்னாரு... அப்ப நான் என்ன ஃபீல் பண்ணேன்னு எனக்கே புரியல, மேற்கொண்டு எதுவுமே பேசாம சரின்னு சொல்லி அமைதியா வச்சுட்டேன்  ..."  எனத் தொடங்கி,  அவளை ஜூம் மீட்டிங்கில் பார்த்தது  ....


பார்த்ததும் மனதை பறிகொடுத்து விட்டு,  அவள் மனதை அறிந்து கொள்ள ஆஸ்திரேலியா பறந்தது....


அங்கு அவள் தன் நண்பர்களோடு உணவு விடுதியில் பேசிக் கொண்டிருந்ததை ஒன்று விடாமல் கேட்டு விட்டு ,  மறுநாள் ஹெலன்ஸ் பர்க் கோவிலுக்கு சென்று அவளையும், அவளது நண்பர்களான சிவா அனுவை சந்தித்தது .....


கடைசி தினம் அலுவலக வாயிலில் காத்துக் கிடந்து அவளை ரயில் நிலையத்திற்கு அழைத்துச் சென்றது .....


அவளைப் பெண் பார்த்து விட்டு செல்லும் போது, அவளுடன் பேசுவதற்காக  செல்வராணியிடமிருந்து ,அவரது 10 இலக்க அலைபேசி எண்ணை மனதில் பதிய வைத்துக்கொண்டது ...


பிறகு , பெண் பார்க்க வந்த இடத்தில் வீட்டு ஆண்கள் யாருமே பேசாமல் அகல்யா மட்டும் பேசுவதை காரணமாக சொல்லி அம்மையப்பன் திருமணத்தை நிறுத்த முற்பட்டது ... செல்வராணியின் பிடிவாதத்தால் திருமணத்திற்கு ஒத்துக்கொண்டதை அறிந்துஅவன் மனம் வருந்தியது ....


என ஒன்று விடாமல் அனைத்தையும் பொறுமையாக கூறி முடித்தான். 


அவன் சொன்னவைகள் அனைத்துமே அவளுக்கு புதிது என்பதால்,  மிகுந்த ஆச்சரியமும் ஆர்வமாய்  கேட்டுக் கொண்டிருந்தவளுக்கு, செல்வராணி மருத்துவமனையில் இருந்த அன்று அலைபேசியில் பேசும் போது அவன் குரலில் தெரிந்த லேசான இறுக்கம் மற்றும் கோபத்திற்கான காரணம் புரிய வர, 


"என் அப்பா உங்களையும் உங்க குடும்பத்தையும் சரியா புரிஞ்சுக்காம கல்யாணத்தை நிறுத்தனும்னு சொன்னத நினைச்சு நானும் அன்னைக்கு ரொம்ப  வருத்தப்பட்டேன்  ....


இவ்ளோ வருஷமா கூட வாழ்ந்த என் அம்மாவ மட்டும் இல்ல,  என்னையும் என் தம்பியை கூட அவர் புரிஞ்சுக்க முயற்சி பண்ணினதே இல்ல அடிப்படையில நல்ல மனுஷன்னாலும் , கொஞ்சம் கோவக்காரர் .... பொதுவா யாரோடயும் அவர் அதிகமா பேச மாட்டாரு ..."  என அவள் அம்மையப்பனின் குணாதிசயங்களை அடுக்கிக் கொண்டு செல்ல,  அதனை இடைவெட்டி 


"நீ தான் உன் அப்பாவ இன்னும் சரியா புரிஞ்சுக்கல .... அன்னைக்கு கல்யாணத்தை நிறுத்த நினைச்சு நான் உன் போன் நம்பரை அவர் கிட்ட கேட்டப்ப , என் பொண்ணு நான் சொன்னா கேட்டுப்பானு ரொம்ப ஸ்ட்ராங்கா சொன்னாரு .... அந்த வார்த்தைல ஒரு கர்வம் இருந்தது .... என் பொண்ணு என் வார்த்தைக்கு மரியாதை கொடுப்பாங்கிற நம்பிக்கை இருந்தது ...


முக்கியமா  கல்யாணத்தை நிறுத்த அவர் சொன்ன காரணத்துக்கு பின்னாடி இருந்தது கோவம் இல்ல... உன் மேல அவர் வச்சிருந்த அளவுக்கு அதிகமான அன்பும் அக்கறையும் தான் காரணம்  ....


இது எல்லாத்தையும் விட கல்யாணத்துல உன்னை  கன்னிகா தானம்  பண்ணி கொடுக்கும் போது ஒரு அப்பாவா அவர் எவ்ளோ  தலைநிமிர்ந்து நின்னாரு தெரியுமா ...


அவர் கண்ணுல அவ்ளோ பெருமிதம் தெரிஞ்சது ... அப்படிப்பட்ட  பெருமிதம் எப்ப வரும்னா தன்  பொண்ணு மேலயும், அவளை தான் வளர்த்த வளர்ப்பு மேலயும் நம்பிக்கை இருக்கும் போது மட்டும் தான் வரும் ...


இவ்ளோ கம்பீரமான மனுஷன் கண்ணுல ஒரே ஒரு சமயத்துல  பயத்தையும் பார்த்தேன்...


அது எப்ப தெரியுமா .... நான் உன்னை  ஊருக்கு கூட்டிட்டு போறேன்னு சொன்னனே அப்ப ....


உன் அப்பாவுக்கு உன் மேல அளவுக்கு அதிகமா ப்ரியம் இருக்கு ... அவரோட சுபாவத்தால அத காட்டிக்க முடியல அவ்ளோ தான்.... " என்று முடித்தவனின் பேச்சில்,  வாயடைத்துப் போய்விட்டாள் அவன் மாது.


இத்துணை காலமாக பெற்று வளர்த்த தந்தையை அவளால் கூட சரியாக புரிந்து கொள்ள முடியாத நிலையில்,  சொற்ப தருணங்களை மட்டுமே அவரோடு கழித்தவன் , அவரது குணாதிசயத்தின் மறுபக்கத்தை ஆராய்ந்து அறிந்து புட்டு புட்டு வைத்ததை கேட்டு வியந்தவள் 

"என் அப்பாவை நான் கூட இவ்ளோ அனலைஸ் பண்ணினது இல்ல ...யோசிச்சு  பார்த்தா நீங்க சொன்னதெல்லாம் ரொம்ப சரியா  இருக்கு ..." என முடித்தாள் கமரிய குரலில்.


ஒரு கணம் அங்கு அமைதி நிலவ, இருவரின் பார்வையும் ஒரே நேர் கோட்டில் சந்திக்க,  துருதுரு கண்களோடு அவன் மந்த காச புன்னகை பூக்க, அதில் ஒரு கணம் லயித்தவள் , உடனே பார்வையை திருப்பி அந்த அறை முழுவதும் சுழல விட்டு,


"ஷேர் டிரேடிங் மேகசைன்ஸ் தவிர  ஒரு புக்ஸ் கூட உங்க ரூம்ல இல்லயே ..."  என பேச்சை மாற்றினாள்.


"புக்ஸுக்கும் எனக்கும் ரொம்ப தூரம்மா... உட்கார்ந்து புக்ஸ் படிக்கிற அளவுக்கு எல்லாம் எனக்கு பொறுமை கிடையாது ..."


" அப்ப உங்க ஹாபி ..."


"இன்டோர் அவுட்டோர் கேம்ஸ் எல்லாம் விளையாட பிடிக்கும் ...விளையாடுவேன் கிரிக்கெட் ரொம்ப பிடிக்கும் ...வீக் எண்டுல அகாடமிக்கு போய் ஃப்ரெண்ட்ஸோட விளையாடுவேன் .... நீ கிரிக்கெட் விளையாடுவியா ..."


கேட்டதும் அவள் குலுங்கி சிரிக்க,


" ஏன் சிரிக்கிற ..."


" எனக்கு கிரிக்கெட் மட்டுமல்ல எந்த கேம்ஸ்லயும் இன்ட்ரஸ்ட் கிடையாது ... கிரிக்கெட் ஒக்காந்து பாக்குற அளவுக்கு எல்லாம் பொறுமையே கிடையாது ..."


" ஓ காட் ... அட்லீஸ்ட் செஸ், கேரம் போர்டு ....???"


" எதோ..... விளையாடுவேன் ..."


" ஓ மை காட்,  கிட்டிபுல்,  கோலிகுண்டு , தாயக்கட்டை பல்லாங்குழி, பம்பரம் ...."


அவன் அடுக்கிக் கொண்டே செல்ல அவள் தெரியாது என்பது போல் தலை அசைத்துக் கொண்டே சிரிக்க,


"அச்சச்சோ,  உனக்கு எதுவுமே தெரியலயே... எல்லாத்தையும் நான் தான் சொல்லிக் கொடுக்கணும் போல இருக்கே... இட்ஸ் டூ பேட் .." என்று தானும் உடன் குலுங்கி சிரித்தவன்,


" சரி உன்னோட ஹாபீஸ் தான் என்ன ..." என்றான் குறும்பாக.


" புக்ஸ் படிக்கிறது ..."


" என்ன மாதிரியான புக்ஸ் ... காமிக்ஸ், ரொமான்ஸ் , திரில்லர் ஹாரர் ......" 


"அந்த மாதிரியான புக்ஸும் படிப்பேன் ... நிறைய இந்தியன் பேஸ்ட் ஹிஸ்டரிஸ் புக்ஸ் படிக்க பிடிக்கும்  ... இந்தியா  டிவைடட்,  பாகிஸ்தான் ஆர் தி பார்ட்டீஷியன்  ஆஃப் இந்தியா, சர்ச் ஃபார் ட்ரூத்... "  

ஆச்சரியத்தில் புருவத்தை வில்லாய் வளைத்தவன் , அவள் பேச்சை இடைவெட்டி,


"இப்ப நீ சொன்ன புக்ஸ் எல்லாம் வாங்கி படிக்கணுமா ...."  


"இல்ல ... ஏற்கனவே படிச்சிருக்கேன் ... அந்த புக்ஸ் எல்லாம் மதுரைல  இருக்கு  ..." என்றாள் புன்னகையோடு.


"ஏன் அந்த மாதிரியான புக்ஸ் நிறைய படிக்கிற  ..."


" எனக்கு எப்பவுமே இந்தியன் பேஸ்ட்  ஹிஸ்டரி  புக்ஸ் ரொம்ப பிடிக்கும் ... அதோட ஐஏஎஸ் பாஸ் பண்ணனும்னு ஆசை .... சிவில் சர்வீஸ் எக்ஸாம் எழுதினேன் ....ப்ரிலிம்ஸ் கிளியர் பண்ணினேன் ... தாத்தா இறந்து போனதால சரியா எழுதாம மெயின் எக்ஸாம்ல விட்டுட்டேன் ... அதுக்கு மேல  படிக்க புடிக்கல ...ஐடி ப்ரொபஷன்ல போயிட்டேன் ..."


"வாவ் கிரேட் ..." என்றவன் ஒரு கணம் நிதானித்து  அவளை ஆழ்ந்து நோக்கி 


"இப்ப படிக்கலாமே ....  " என்றான். 


"இப்ப வா ..."


"ஆமா , உனக்கு வயசு இருக்குது ... உங்க பாட்டி இறந்தத நினைச்சு வருத்தப்படாம , உனக்கு பிடிச்ச விஷயத்துல கான்சன்ட்ரேட் பண்ணு ..."


அவள்  மௌனமாக தலை குனிந்து கொள்ள,


" ஏன் என்னாச்சு ..."


"மெயின் எக்ஸாம்ல ஃபெயில் ஆனதும் ரொம்ப ஃபீல் பண்ணேன் ....மறுபடியும் ஃபெயிலாயிடுவேனோனு பயமா இருக்கு ..."


"நீ அப்ப ஃபெயில் ஆனதும் ஒரு விதத்துல நல்லது தான் ..."


" ஏன் ...."


" நீ சிவில் சர்வீஸ் எக்ஸாம் கிளியர் பண்ணி ஐஏஎஸ் ஆயி இருந்தா, உன் அப்பா  ஐஏஎஸ்,  ஐபிஎஸ் மாப்பிள்ள தான் வேணும்னு ஒத்த கால்ல நின்னு தேடி இருப்பாரு... என்னோட சேலரி, பெர்க்ஸ் எல்லாம் ஏறக்குறைய   ஐஏஎஸ் ஆபிஸர் லெவல்ல இருந்தாலும்,  அந்த ப்ரொபஷன்கான பவர் இல்லாததால நிச்சயமா என்னை  கன்சிடர் பண்ணி இருக்கவே மாட்டாரு.... நீயும்  உன் அப்பா சொல்லாம என் கிட்ட பேசி இருக்க மாட்ட ..."


அவள் மென்மையாக சிரிக்க, 

"சூரியவம்சம் தேவயானி மாதிரி, இப்ப படிச்சு பாஸ் பண்ணு ....ஸ்ரீப்ரியா அம்மையப்பனா பாஸ் பண்ணி இருந்தா தான்  எனக்கு பிரச்சனை ....  ஸ்ரீப்ரியா அதிவீரராம பாண்டியனா இனிமே படிச்சு பாஸ் பண்ணா எனக்கு ரொம்ப ரொம்ப சந்தோஷம் தான் ..." என்றான் கண்களை சிமிட்டி இதழ் விரித்து.


"இன்னும் கொஞ்ச நாள் ஐடில ஒர்க் பண்ணலாம்னு இருக்கேன் ... அப்புறமா ஐஏஎஸ் பத்தி யோசிக்கிறேனே ..." என தயக்கமாக அவள் பதிலளிக்க 


"நோ வாரிஸ் .... உனக்கு என்ன புடிச்சிருக்கோ அதை பண்ணு ..."என முடித்தான். 


"நீங்க ஏன் சிவில் சர்வீஸ் ட்ரை பண்ணல ...." என்றாள். 


"எனக்கு பொதுவா தியரி படிக்கிறது பிடிக்காது .... அதுவும் ஹிஸ்டரி,  பாலிடிக்ஸ்னா சுத்தமாவே  பிடிக்காது ...நியூஸ் பேப்பர்ல கூட ஸ்போர்ட்ஸ் காலம் மட்டும் தான் பார்ப்பேன் .... எனக்கு மேத்தமேடிக்ஸ் அண்ட் ப்ரோக்ராமிங் ரொம்ப பிடிக்கும் ... பிளஸ் டூல மேத்ஸ்ல நான் ஸ்டேட் ஃபர்ஸ்ட் .... பத்து வரி கணக்க அஞ்சு வரிலயே போட்டு முடிச்சிடுவேன் .... என்னால 15 டிஜிட்ஸ் வரைக்கும் நம்பர்ஸ ஈஸியா ஞாபகம் வச்சுக்க முடியும் .... ஐ ட்ரெயின்டு மை  மைண்ட் இன் தாட் வே..." என அவன் பேச பேச,  ஆச்சரியமாக நோக்கியவள், அவனை மனமார பாராட்ட, திடீரென்று 


"பொண்ணு பாக்க வரும் போது நீ என்ன பாட்டு பாடின ..." என்றான் ஆர்வமாய். 


"ஏன் ,  பாடும் போது   நீங்க  கேக்கலையா ..."


" நான் உன்னையே பார்த்துக்கிட்டு இருந்தேனா...  எனக்கு பாட்டே  காதுல விழல..." என்றதும் அவள்  நாணத்தோடு மென் புன்னகை பூத்து 


" எனக்கு ரொம்ப பிடிச்ச கிருஷ்ணர் பாட்டு பாடினேன் ..."


" ரெண்டு லைன் பாடறியா..."


அசைந்தாடும் மயில் ஒன்று கண்டால்... 

 நம் அழகன் வந்தான் 

என்று சொல்வது போல் தோன்றும் ...


என கணீர் குரலில் அவள் பாட, மெய்மறந்து கேட்டான்.


அன்றைய இரவு அவர்களுக்கான சோபன இரவு என்பதே இருவருக்கும் முற்றிலுமாக மறந்தே போனது.


இருவருக்கும் இடையே இருந்த தயக்கங்கள் மறைந்து காதலுக்கு அடிப்படையான நட்புணர்வு அழகாக வேர் விட்டு அந்த ஓர் இரவிலேயே வளரத் தொடங்கியது.


"ரொம்ப அழகா பாடற... எனக்கு பாட்டு எல்லாம் பாட தெரியாது ... கேக்க மட்டும்தான்  பிடிக்கும் ...." என்றவன்


"ஒன்னு கவனிச்சியா ... நம்ம ரெண்டு பேரோட டேஸ்ட், ஹாபிஸ்,  இன்ட்ரஸ்ட் கொஞ்சம் கூட ஒத்துப் போகல ..."


"ஆமா இல்ல ..." என அவள் ஆச்சரியமாக வினவ 


"பட் ... வீ வில் பி த பெஸ்ட் கப்புல் ... பிகாஸ் ஆப்போசிட்ஸ் அட்ராக்ட் ஈச் அதர் ..." என முடித்தான் கண்களில் அளவு கடந்த  காதலோடு .

அன்றைய இரவு உரையாடலில், அவள் அவன் மீதி இருக்கும் ஈர்ப்பை எவ்வகையிலும் வெளிப்படுத்தவில்லை என்றாலும்,   அவன் தன் பேச்சில் ஒவ்வொரு அட்ச்சரத்திலும்  அவள் மீதான காதலை வெளிப்படுத்த தவறவில்லை .


காதல், உரிமை , நட்பு , நேசம் என எல்லா   உணர்வுகளை அவன் பேச்சு மற்றும் செய்கையின் மூலம் உள்வாங்கிக்கொண்டவளுக்கு ஒரு பெண்ணாய் , அதுவும் மனைவியாய் பெருமிதமாக இருந்தது. 


அவனிடம் தென்பட்டதெல்லாம் நேர்மறை குணங்களே என்றாலும், எல்லா வித குணத்திற்கும் பக்க வாத்தியம் போல்,  பக்கவிளைவுகள் உண்டு  என்பதை அப்போது அவள் அறிந்திருக்கவில்லை. 


ஸ்ரீ-ராமம் வருவார்கள்..... 

Dear Friends,

Happy New Year to ALL!!!

Priya Jagannathan

















































 





















































Comments

Post a Comment