ஸ்ரீ-ராமம் - 5

அத்தியாயம்

 

வழக்கறிஞர் தினேஷின் அலுவலகம்

 

" ம்மா, லட்சுமி .... உங்க வீட்டுக்காரர் ராம் சரண் கோர்ட்ல ஜட்ஜ் கிட்டயே டிவோர்ஸ் வேண்டாம்னு சொல்லிட்டாரு.... இப்ப என்ன பண்ணறதா உத்தேசம்..." என்றான் ஸ்ரீ லட்சுமியின் வழக்கறிஞர் தினேஷ். 

 

" எனக்கு டிவோர்ஸ் வேணும் சார் ... எப்படியாவது எனக்கு டிவோர்ஸ் வாங்கி கொடுத்துடுங்க ..."

 

"அப்படின்னாநான் சொன்னபடி நீங்க சொன்னா உங்களுக்கு நிச்சயம்  டிவோர்ஸ் கிடைக்கும் .."

என்ன என்பது போல அவள் பார்த்து வைக்க,

 

" உங்க மாமியார் நாத்தனார்  வரதட்சணை கேட்டு  உங்களை அடிச்சாங்க .... உங்க வீட்டுக்காரரும் குடிச்சிட்டு வந்து அடிச்சுசிகரெட்டால சூடு வெச்சாரு, 

அப்படி இப்படின்னு சொல்லி  வரதட்சணை வன்கொடுமைல கேச ஃபைல் பண்ணினா டிவோர்ஸ் கிடைச்சுடும் ..." என்று தினேஷ் முடித்ததுமே அவளது மனக்கண்ணில் கடந்த கால காட்சிகள் விரிய தொடங்கியது.

 

ஸ்ரீ லட்சுமிக்கு திருமணம் முடிந்து ஒரு மாதமான நிலையில்,

 

"இங்க பாரு ... இந்த மாதிரி சின்ன சின்ன நகையெல்லாம் போட்டுக்கிட்டு எங்க   உறவுக்காரங்க  முன்னாடி வந்து  நிக்காத .... எங்க தரத்துக்கு ஏத்த இடத்திலிருந்து பொண்ணு எடுத்திருந்தா இதை எல்லாம் நான் சொல்ல வேண்டிய அவசியமே இருந்திருக்காது ...அன்னாடங்காட்சி வீட்ல பெண்ணை எடுத்ததால   எங்க எப்படி நடந்துக்கணும்னு  எல்லாத்தையும் சொல்லிக்  கொடுக்க வேண்டியதா  இருக்கு...

இங்க பாரு, எங்க  உறவு காரங்க வர்றதுக்கு முன்னாடி இந்தப் பெட்டில இருக்கிற நகையை எடுத்து போட்டுக்கோ அவங்க அப்படி போனதுக்கப்புறம் கழட்டி கொடுத்துடனும் அப்படியே அடக்கிடலாம்னு யோசிக்காத  ...  கல்யாணம் கட்டிக் கொடுத்திட்டா மட்டும்  போதாது முதல் ஒரு வருஷத்துக்கு  என்னென்ன சீர் செய்யணும்னு உங்க வீட்டு ஆளுங்களுக்கு தெரியாதா ... மறு வீட்டுக்கு கூட்டிகிட்டு போனாங்களே ஏதாச்சும் சீர் செஞ்சாங்களா .... வெறுங் கையோட இல்ல அனுப்பி வச்சாங்க... எல்லாம்  என் தலைவிதி ..." 

 

என்று அவள்  மாமியார் கற்பகம் அலுத்துக் கொண்டே சொன்னது  மனதில் வந்து போனது.

 

அம்மாதிரி பல குத்தல் பேச்சுகளை சுலபமாக கடந்தவளுக்கு கடைசியாக நடந்த அசிங்கங்களை கடக்க முடியாமல்  இந்தக் கணம் வரை  

வெளியே சொன்னால் வெட்கம்... நினைக்க நினைக்க துக்கம் .... என மனதோடு  மருகிக் கொண்டிருக்கிறாள்.

அவள் நினைத்தால் நடந்த அசிங்கங்களை அரங்கேற்றலாம்... ஆனால் குடும்ப சண்டைகளுக்கும் சூழ்ச்சிகளுக்கும் ஆதாரங்கள் இருக்குமா என்ன ....

 

ஆதாரங்கள் இல்லாத நிலையில், அவள் சாட்டப் போகும் குற்றம் சபையில் செல்லுபடி ஆகாது   என்பதால்தீர்வு காண்பதை விட தனித்து நிற்பதே மேல் என்ற நிலையில் தானே வீட்டை விட்டே வெளியேறியிருந்தாள்.

பொதுவாக தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பெரும்பாலான  தொடர்களில் குடும்ப வன்முறை அதிகமாக காட்டப்படுகிறது ...  நல்ல சுபாவத்தில் இருப்பவர்களுக்கேஅம்மாதிரியான தொடர்கள் மன வக்ரங்களை உண்டு பண்ணும் பொழுதுஇயல்பிலேயே கற்பகம், அருணா போன்று மனவக்கிரதோடு பிறந்தவர்களை பற்றி  சொல்லவே வேண்டாம்.

 

அவர்கள் இருவரும் பார்க்கும்  தொலைக்காட்சி  நெடுந்தொடரில் கூட, நாயகனையோ நாயகியையோ கொண்டாடியது இல்லை மாறாக அதில் வரும் வில்லியையும் வில்லனையும் உயர்த்திப் பிடிக்கும்  உன்னத  சுபாவம் கொண்டவர்கள். 

 

இப்படிப்பட்டவர்கள் அப்படி மனம் மற்றும் உடல் கூசும் வகையான  வக்ரத்தோடு நடந்து கொள்ளாமல்  இருந்திருந்தால் தான் அதிசயம் என்றெண்ணியவளுக்கு அவள் கணவன் ஊருக்கு செல்லும் முன் நடந்த பெரும் பிரச்சனையில்அவளைக் கைநீட்டி அடித்ததும் காட்சியாய்  விரிந்தது .

 

அதுவரை குரலை  உயர்த்தி கூட அவன் பேசியதில்லை.  அப்படி இருவரும் பேசி சண்டை போடுவதற்கான நேரமும் இருந்ததில்லை .

ஆனால் அன்று அருணா  தன் தரப்பு  வாதத்திற்கு  வலு சேர்க்க அழுது கொண்டே ஏதேதோ சொல்ல, ஸ்ரீ லட்சுமியும் தன் பங்கிற்கு குரலை உயர்த்தி தன் வாதத்தை முன்வைக்க, என்றுமே குரலை உயர்த்திப் பேசாதவள், அன்று பேசியது, ராம் சரணுக்கு  வித்தியாசமாகப்பட,

 

" லட்சுமிவாய மூடு...." என்று அரற்றி

அவளது பேச்சுக்கு முற்றுப்புள்ளி வைக்க முயன்றான்.

 

அவளோ விடாமல் தன் பக்கத்து நியாயத்தை கூறிக்கொண்டே செல்ல  கடைசியில் அவன் கரம்  வெம்மையாய் அவள் கன்னத்தை பதம் பார்த்தது.

 

அப்படி அடிக்கும் போது அவன் கண்களும் வெகு லேசாக கலங்கித் தான் இருந்தன.  அவள் கதறி அழ ஆரம்பித்ததும், எங்கு  அண்ணன் தன் மனைவியின் அழுகையில் மனம் மாறி விடுவானோ என்று அஞ்சி

அவன் தங்கை அருணா மீண்டும் ஏதோ கூற வர,

 

" ஸ்டாப் இட் அருணா .... இனிமே இத பத்தி யாரும் எதுவும் பேசக்கூடாது ... இப்ப நீ  இங்க இருந்து போ ...." என்று கர்ஜித்து அவளை அனுப்பியதும், தன் தலையை இரு கரங்களால் பற்றி கொண்டு குனிந்து அவன் அமர்ந்த காட்சியும்  ஸ்ரீ லட்சுமியின்  மனதில் நிழலாடஓரிரு கணம் தாமதித்தவள்,

 

"அவங்க யாரும் அப்படி எல்லாம் செய்யல .... என் மாமியாரும் நாத்தனாரும் வார்த்தையால என்னை வறுத்தெடுத்தாங்க.... அளவுக்கு அதிகமா அவங்க செய்கையால என்னை காயப்படுத்தினாங்க .... அவ்ளோ தான்... மத்தபடி வரதட்சணை எதுவும் கேட்டு என்னை அடிச்சு கொடுமைப்படுத்தினதில்ல .... என் கணவருக்கும் குடிக்கிற பழக்கம் எல்லாம் கிடையாது .... "

 

 

வார்த்தையால  வறுத்தெடுத்ததை எல்லாம்  கோர்ட்ல பெருசா எடுத்துக்க மாட்டாங்கம்மா...உடல் ரீதியான வன்முறையா இருக்கணும் ... அப்படி இருந்தா தான் அத காரணமா வச்சு  டிவோர்ஸ் கிடைக்கும்  ..."

 

" அந்த மாதிரி யாரும் செஞ்சது இல்ல சார் ...."

 

" சரிஉங்க கணவருக்கும் வேற ஒரு பொண்ணுக்கும் தொடர்பு இருக்குது ... அந்த பொண்ணு வீட்டிலேயே தங்கிடறாரு ... வீட்டுக்கே வர்றதில்ல.. போன் பண்ணாலும் எடுக்கறது இல்ல....  வீட்டு செலவுக்கும் காசு கொடுக்கறது இல்லனு ... எக்ஸ்ட்ரா மேரிட்டல் அஃபர்ஸ்ல கேஸ் கொடுக்கலாம் ..." என தினேஷ் அடுத்த அம்பை பாய்ச்சஅவள் மனம் அவள் கணவனைப் பற்றிய எண்ணத்தில் மூழ்க ஆரம்பித்தது.

 

அவளது நினைவு அடுக்குகளில் எவ்வளவு தேடியும் அவன்  எந்தப் பெண்ணையும்  ரசனையாய் ரசித்து  பார்த்ததாக சிறு சம்பவம் கூட இல்லாமல் போனதோடு அவர்களுக்கான பிரத்தியேக நேரங்களில் அவளை ஆழ்ந்து ரசித்ததும்  நினைவுக்கு வர  தலையைக் குலுக்கி மனதை சமன் செய்தவள்,

 

" எனக்கு தெரிஞ்சுஅவர் எந்த பொண்ணையும் ஏறெடுத்து கூட பார்த்ததில்ல....  அவர் ஆபீஸ் பார்ட்டிக்கு ஒருமுறை என்னையும் கூட்டிகிட்டு போயிருந்தாரு ... எத்தனையோ பொண்ணுங்க அவங்களாகவே வந்து அவர்கிட்ட நிறைய பேசினாங்க .... என்னென்னா என்னன்னு பேசிட்டு அவங்களையெல்லாம் கட் பண்ணிட்டாரு ....  அதோட நான் கேட்காமலே கை செலவுக்கு  பணம் கொடுப்பாரு... " என்றவளை பார்த்து கொலை வெறி கொண்ட தினேஷ்,

 

" என்னம்மா விளையாடறியா ... எதை சொன்னாலும் அவங்க அப்படி இல்ல இவங்க இப்படி இல்லன்னு சொல்லிக்கிட்டு இருந்தா டிவோர்ஸ் எப்படி கிடைக்கும் ... "

 

" இருந்தா தானே சொல்ல முடியும் சார் ... டிவோர்ஸ்காக  என்னால பொய் எல்லாம் சொல்ல முடியாது ..."

 

" ஒரு பேச்சுக்கு  நீ சொல்ற மாதிரி எல்லாரும் நல்லவங்கன்னே வச்சுப்போம் .... பின்ன எதுக்காக டிவோர்ஸ் கேக்குற ... ஊர் நாட்டுல எவ்ளோ  பொண்ணுங்க நான் சொன்ன  கொடுமைகளை எல்லாம்  தாங்கிக்கிட்டு கஷ்டப்பட்டு குடும்பம் நடத்திக்கிட்டு இருக்காங்க தெரியுமா ...

 

புருஷன் குடிக்க மாட்டாரு, வேற பொண்ண பார்க்க கூட மாட்டாரு ... உன்னை அருமையா பார்த்துக்கிட்டாரு .... உன் மாமியாரும் நாத்தனாரும் ஏதோ ரெண்டு மூணு வார்த்தை திட்டிட்டாங்க  அவ்ளோ தான் ... அதுக்கே நீ டிவோர்ஸ் கேட்டு கோர்ட் படி ஏறிட்ட....  இல்லையா ... இங்க பாரு உண்மையா உனக்கு  உன் புருஷன் கிட்ட இருந்து  டிவோர்ஸ் வாங்கணும்னு எண்ணம் இருந்தா, நான் சொன்ன பொய்யை சொல்லுஅப்படி சொல்ல மாட்டேன்னு அடம் பிடிச்சா இந்த ஜென்மத்துல உனக்கு டிவோர்ஸ் கிடைக்காது ..." என திட்டவட்டமாக  தினேஷ் பேசி முடிக்க, ஒரு கணம் கண் கலங்கியவள் 

 

" வேற வழியே இல்லையா ..." என்றாள் பாவமாக .

 

"வச்சிக்கிட்டு வஞ்சனையாம்மா  பண்றேன்...  சட்டத்துக்கு எப்பவும் ஆதாரம் வேணும் மா... புகுந்த வீட்டு ஆளுங்க வார்த்தையால வறுத்து எடுத்தாங்க ... அதனால எனக்கு மன உளைச்சல் அதிகமாச்சுனு சொன்னா கவுன்சிலிங்கு தான் ஏற்பாடு பண்ணுவாங்க... டிவோர்ஸ் கொடுக்க மாட்டாங்க ... டிவோர்ஸ் வேணும்னா நான் சொன்ன வழிய தான் ஃபாலோ பண்ணனும் ....  

ஒன்னு பண்ணலாம் ... உங்க கணவர் கிட்ட பேசி மியூச்சுவலுக்கு ஒத்துக்க வையுங்க ... அப்படி செஞ்சா சுலபமா டிவோர்ஸ்  கிடைச்சிடும் ...." என்று நிறுத்தியவன்

 

" ஆனா இதெல்லாம் நடக்கும்னு   எனக்கு தோணலை

முதல் நாளே அவர் கோர்ட்ல டிவோர்ஸ் கொடுக்க மாட்டேன்னு  ஏகப்பட்ட அலப்பறை   பண்ணிட்டாரு.... 

சோ... இப்போதைக்கு நீ தாம்மா யோசிக்கணும் ..." என்று அவன் முடிக்கலேசான கேவலுடன் அவளது கண்களில் இருந்து கண்ணீர் வரமுகம் காட்டப் பிடிக்காமல் கழுத்தை திருப்பிக் கொண்டாள்.

 

அவளது செய்கையை பார்த்துமனம் கனிந்தவன்,

" நாங்க பணத்துக்காக தான்இங்க வேலை பார்க்கிறோம் இருந்தாலும் மனசாட்சினு ஒன்னு இருக்கு இல்லையா....  உனக்கு ஒரு சகோதரனா இருந்து சொல்றேன்.... உனக்கு உன் வீட்டுக்காரரை விட்டுக் கொடுக்க மனசு இல்ல .... அவருக்குமே அப்படித்தான் இருக்கு ... இந்த நிலையில நீங்க ரெண்டு பேரும் பேசி முடிவு எடுத்தா நிம்மதியான வாழ்க்கை வாழலாம் ... அத விட்டுட்டு எதுக்குமா இந்த கோர்ட்டு கேசு எல்லாம் ... நானும் எத்தனையோ பேருக்கு டிவோர்ஸ் வாங்கி கொடுத்து இருக்கேன் ... ஆனா டிவோர்ஸ்க்கு அப்ளை பண்ணினவங்க யாரும்  அவங்க துணை மேல இவ்ளோ காதலாவும் பாசமாவும் இருந்து நான் பார்த்ததே இல்லை ....  அடுத்தவங்கள கோடாரியால குத்தி கிழிக்கிற மாதிரி வார்த்தையாலேயே  மாறி மாறி வன்முறை செஞ்சிக்குவாங்க ... மனசறிஞ்சே காதுல கேட்க முடியாத அளவுக்கெல்லாம் பொய் சொல்லுவாங்க.... 

 

ஆனா உங்க ரெண்டு பேரு விஷயத்துல அப்படி எதுவும் நடக்கல ...  உனக்கு ஒரு பெண் குழந்தை இருக்கு ... அது நல்லபடியா இருக்க வேண்டாமா .... இந்தக் கோபம் ஈகோ எல்லாம் விட்டுட்டு உன் புருஷனை பார்த்து பேசு .... ஒரு நல்ல முடிவா எடு ...என்று அவன் போதித்துக் கொண்டிருக்கும் போது,

 

"நல்ல வார்த்தை சொன்னீங்க வக்கீல் சார் .... நானும் என்னால ஆனத சொல்லி பார்த்துட்டேன் .... கேக்க மாட்டேங்குறா ..." என்றார் ருக்மணி இடைப்புகுந்து.

 

" நான் கொஞ்சம் யோசிக்கணும் ... அப்புறம் பேசுறேன் ..." என்றவள் தன் தாயுடன்  கிளம்ப எத்தனிக்க,

" நல்ல முடிவா சொல்லும்மா..." என்று வழி அனுப்பி வைத்தான் தினேஷ். 

 

 

      ------------------------------

 

மனமெங்கும்  மத்தாப்புகளோடு, முதன் முறையாய் ஆஸ்திரேலியா பயணத்திற்கு ஆனந்தமாய் தயாராகிக் கொண்டிருந்தான் அதிவீர ராம பாண்டியன்.

 

அழகு, கவர்ச்சி, புத்திசாலித்தனத்தை தாண்டி அவளிடம் வேறு ஏதோ இருப்பது போல் தோன்ற , அது என்ன என்று வரையறுக்கும் முன்னரே  அந்தக் காந்த பெண் இந்த இரும்பு மனிதனை தன்னை நோக்கி இழுத்துக் கொண்டிருந்தாள். 

 

கல்லூரி காலத்தில் அவன் பெயருக்காகவே அவனுக்கு பெண் தோழிகள் அதிகம்.   

 

சங்க கால பாண்டிய மன்னர்களின் ஒருவரான சடையவர்மன் அதிவீரராம பாண்டியனின் பெயரைத்தான் அவனுக்கு வைத்திருந்தார்  அவன் தந்தை பொன்னம்பலம்.

 

பொன்னம்பலம் தமிழ் பற்றாளர்.  தேசியவாதியும் கூட.  

 

தன் முதல் மைந்தனுக்கு சத்தியவர்மன் என்றும் இரண்டாம் மைந்தனுக்கு சடையவர்மன் அதிவீர ராம பாண்டியன் என்றும் தான் முதலில் பெயர் சூட்டினார்.

 

பள்ளிக்காலத்திலேயே அவனது பெயர்

" சடை சடை " என்று நண்பர்களால் கேலி பேசப்படபள்ளிக்குச் செல்ல மாட்டேன் என அவன் அழுது புரள  வேறு வழி இல்லாமல் முன்பாதியை கத்தரித்துவிட்டு அதிவீரராம பாண்டியன் என்ற பெயரை மட்டும் இழுத்துப் பிடித்து நிறுத்தினார் பொன்னம்பலம். 

 

பெயரைத் தாங்கியவனும் அதற்கேற்றார் போல் ஆஜானுபகுவான தோற்றத்தில் கம்பீரமாக  காணப்பட்டதோடுஎப்பொழுதுமே ஒட்டிக் கொண்டிருக்கும் மென் புன்னகையும் அதனைப் பறைசாற்றும் அவன் கவர்ச்சிகரமான கண்களுமே கோகுல கண்ணனாக பெண் தோழிகளுக்கு மத்தியில் அவன் வலம் வர காரணமாகி போனது.

 

ராம்சரண் பெண் விஷயங்களில் பத்தடி தள்ளி நின்றால் இவன் 5 அடி தள்ளி நிற்பான். அவ்வளவே.

 

ஆனாலும் இவனாக வலிய சென்று எந்த பெண்ணிடமும்   பேசியதாக சரித்திரம் பூகோளம் இன்று வரை இல்லை.

 

தன்மையான முகத்துடன் வளைய வருபவனுக்கு 

கோபம் ஆமை போல் தான் வரும் என்றாலும்   அதற்கு ஆயுசும் அதிகம் என்பதால், அப்படி ஒரு சூழலை ஏற்படுத்த  விரும்பாத  அருமையான நட்பு வட்டமும்  அமைதியான குடும்ப சூழலும்  இயற்கையாகவே அமையப்பெற அவன் வாழ்க்கை தெளிந்த நீரோடை போல் இதமாக நகர்ந்து கொண்டிருந்த நிலையில் இப்படி ஒரு விமான பயணம்.

 

இன்று வரை அவன் அலுவலக சம்பந்தமான பணிகளுக்காகவே விமான பயணத்தை மேற்கொண்டு இருந்ததால்விமான பயணம் என்றாலே ஒரு வித கசப்போடு எதிர்நோக்குவான்.

 

ஆனால் இந்த முறை தன் மனம் கவர்ந்தவளை  சந்திக்கப் போகும் ஆவல் கூடிக் கொண்டதால், குதூகலமாக கிளம்பி கொண்டிருந்தவனுக்குதிடீரென்று ஒரு வேகத் தடை முளைத்து  அவன் மகிழ்ச்சிக்கு முற்றுப்புள்ளி வைக்கஉள்ளுக்குள் ஓய்ந்து போனான் அந்தக் காளை.

 

அது என்னவென்றால்அந்தப் பெண்ணின்  தந்தை பேசியதை வைத்துப் பார்த்தால்அவள்  முழுக்க முழுக்க அவரது  கட்டுப்பாட்டில் இருப்பதாகவே தெரிய, தந்தையின் வற்புறுத்தலுக்காக அந்தப் பெண் அவனை  மணந்து கொண்டால், எதிர்காலத்தில் அவன்  வாழ்க்கையும்  அவனது நண்பன் ஸ்ரீனிவாசனின் வாழ்க்கை போல் ஒன்றுமில்லாமல் ஆக கூடும் என்பதால் 

அவளை சந்தித்து அவள் மனதை அறிந்து கொண்ட பின்னரே திருமணத்தைப் பற்றி முடிவெடுக்க வேண்டும் என்று முடிவு கட்டிக் கொண்டான். 

 

தன் குடும்ப உறுப்பினர்களிடமிருந்து விடை பெற்று விமானத்தில் அமர்ந்தவனுக்கு உள்ளுக்குள் ஏதோ ஒரு துள்ளல் இருக்கவே செய்தது.

 

காலில் சக்கரத்தை கட்டிக்கொண்டு ஓய்வில்லாமல் ஓடிக் கொண்டிருப்பவனுக்கு எப்பொழுதுமே விமான பயணம் தான் இளைப்பாறும் நேரம்.

 

ஆனால் அவளை காணொளியில் கண்டதிலிருந்து சலனமின்றி இருந்தவனின் மனதில் அவனவள் கலகம் செய்ய தொடங்க, இதமாக இளைப்பாறும் பயணம்இனிமையான இம்சையாக மாற அவன் பயணித்த இயந்திரப் பறவை ஆஸ்திரேலியாவின் இரண்டாவது பெரிய நகரமான மெல்போர்னில் தரை இறங்கியது.

 

செய்ய வேண்டிய  சடங்குகளை எல்லாம் முடித்து பயணப் பொதிகளை பெற்று  தள்ளுவண்டியில் தள்ளிக் கொண்டே, பாட்டு கேட்கும் எண்ணத்தோடு தன் அலைபேசியை உயிர்ப்பித்து அனிச்சையாய் தனது பிளே லிஸ்ட்டை அவன் தொட்டு துவக்கிய மாத்திரத்தில் 

 

முதல் நாள் இன்று ....எதுவோ ஒன்று ....

வேறாக உனை மாற்றலாம் ...

 

அங்கங்கு அனல் ஏற்றலாம் ...

என் உள்ளம் பாடுகின்றது ....

யார் சொல்லி கற்றுக்கொண்டது ...

 

நில் என்றால் சட்டென்று  நிற்காதம்மா .....

யார் சொன்னாலும் என் உள்ளம் கேட்காதம்மா ...  

 

...

 

.....

 

காதல் கிருமிகள் நெருங்காமல் ....

 

 

 

என்ற பாடல் ஒலிக்க ஆரம்பிக்க ,

 

 

" அட... ச்சச.... இப்படியா ஒரு ஆன்ட்டி சிச்சுவேஷன் சாங்  எடுத்ததும்  பக்காவா பிளே ஆகணும் ....

 

வீரா ... நீ வந்திருக்கிற வேலை ஊத்திக்க போகுதுன்னு சிம்பாலிக்கா இப்பவே தெரிஞ்சிடுச்சி டா.... 

 

அந்த பொண்ண நீ பாக்க போறதில்ல .... அப்படியே பார்த்தாலும் பேச போறதில்ல ....

 

அப்படியே பேசினாலும் அந்த பொண்ண பத்தி நீ தெரிஞ்சுக்க போறதில்ல ....

 

அப்படியே தெரிஞ்சுக்கிட்டாலும் அந்த பொண்ணுக்கு உன்னை பிடிக்கப் போறதில்ல  ...

 

சோ இதுல ஏதோ ஒன்னு  தான் நடக்க  போகுதுன்னு  பல்லிக்கு பதிலா பிளே லிஸ்ட்டே  ஆருடம்  சொல்லிடுச்சு  டோய்  ..."

 

என தனக்குள்ளே புலம்பிக்கொண்டு சென்றவனுக்கு தெரியாது சற்றும் எதிர்பார்க்காத ஒரு இடத்தில் அவளை சந்தித்துஅவள் வாய்மொழியாகவே அவளைப் பற்றி  மட்டுமல்ல அவனைப் பற்றியும் அவளிடமிருந்து  தெரிந்து கொள்ளப் போவது.

 

     ----------------------------------------

 

வழக்கறிஞர் தினேஷிடம் பேசிவிட்டு வந்தவளுக்கு அனைத்து வழிகளும் அடைபட்டிருப்பதை எண்ணி, துக்கம் தொண்டையை அடைக்க, கருவிழிகள் கண்ணீரில் மிதந்தது.

 

எப்பாடுபட்டாவது விவாகரத்தை வாங்கி விட வேண்டும் என்று  ஒற்றை மனுஷியாய் போராடியவளுக்கு வழக்கின் தற்போதைய சூழ்நிலை ஏமாற்றத்தை கொடுக்கமேற்கொண்டு யோசிக்க முடியாமல் துவண்டு போனாள் மங்கை .

 

தினேஷ் சொன்னது போல், அவனைத் தொடர்பு கொண்டு நேரடியாக விவாகரத்தை பற்றி பேசினாலென்ன....என்ற நப்பாசை எழுந்த மாத்திரத்தில் , பொங்கிய பாலில் தண்ணீர் தெளித்தது போல் அடங்கிப் போனது.

 

காரணம்  தன் மணாளன் மீதான  கண்மூடித்தனமான   காதல்.

 

நீதிமன்றத்தில் அவனை சந்தித்ததுமே அவளது பாதி ஜீவன் அவனுடனேயே சென்றுவிட்டது .... அவளுள் எஞ்சி இருக்கும் தன்மானமும் வைராக்கியமும் தான் மீதி  ஜீவனை  பற்றி நிறுத்தி போராட வைத்துக்கொண்டிருக்கிறது.

 

 இந்நிலையில் மீண்டும்  அவனை  சந்திக்க நேர்ந்தால்மானங்கெட்ட மனது சொல்லாமல் கொள்ளாமல்  அவனே கதி என்று தஞ்சம் அடைந்துவிடும் என்ற அபாயம் இருந்ததால்  அவனுடனான  சந்திப்பை தவிர்த்தவள்  கணவன் மீதான வகைத்தொகை இல்லா காதலுக்கும்,   கோபம் வராததற்கான காரணத்தையும் வகைப்படுத்தத் தொடங்கினாள். 

 

 

" ச்சே... முந்தைய ஜெனரேஷன் லேடிஸ் மாதிரி மாமியார் நாத்தனார் மேல மட்டும்  கோவம் வருதே ஒழியஅவர் மேல கோவமே வர மாட்டேங்குதே....  அவர் சரியா இருந்திருந்தா நான் இவ்ளோ பிரச்சனையை ஃபேஸ் பண்ண வேண்டிய அவசியமே இருந்திருக்காதே ...இது ஏன் இந்த மனசுக்கு புரியவே மாட்டேங்குது ... "

 

என்றெண்ணி கலங்கியவளுக்கு   கணவனைப் பற்றிய புரிதலே  இல்லை என்பது அப்போது தான் புரிய வர, அவர்களுக்கிடையான  பரஸ்பரத்தை  முதன்முறையாக ஆராய ஆரம்பித்தாள்.

 

அவளுக்கு முதல் குற்றமாக தோன்றியது அவர்களுக்கான நேரத்தை அவன் ஒதுக்கவில்லை என்பது தான். 

 

100% கணவனாக நடந்து கொள்ள முயன்றான்... காதலனாக ....?

 

 தன் தடதடக்கும் இதயத்தை  திருமணத்திற்காக தட்டு மாற்றிக் கொள்ளும் போதேஅவனிடம் தந்துவிட்டாள்... ஆனால் இன்று வரை அதற்கு  சரியான  எதிர் வினை அவன்  ஆற்றியதாக நினைவு இல்லை. 

 

அவள் எதிர்பார்த்த நேசவித்துக்களான நெற்றி முத்தம்தோள் அணைப்பு, மடித் தூக்கம் எதுவுமே கிட்டியதில்லை முகம் பார்த்தே பேச நேரமில்லை என்கின்ற நிலையில் பகலவனின் சாரத்தில்  இதையெல்லாம் எதிர்பார்ப்பாக வைத்திருந்தது  அவள் பிழை தானோ..

 

அவனுக்கு அப்படியெல்லாம் எந்த ஒரு  உணர்வும்  இருந்ததில்லை  போலும் ... இருந்திருந்தால்  நடு இரவைத் தவிரமற்ற நேரங்களில் எல்லாம் 'பிக் பாஸ்' வீடு போல் அனைவரது கண்காணிப்பிலும் அவன் தன் வாழ்க்கையை நடத்தி இருக்க மாட்டான் ....

 

அவர்களுக்கான பிரத்தியேக இரவின் தனிமையில்  .... அந்த ஏகாந்தத்தில் மட்டுமே  அவனது ஏகபோக அன்பை  அள்ளி அள்ளி   கொடுத்திருக்கிறான் ...

 

அதற்காக அவன் வெறும்  சதை   தின்னும் காமுகன் அல்ல அவனிடம் காதல் கொட்டி கிடந்தது .... அதனை உணர்த்திய விதமும்   நேரமும் தான் அவளுக்கு உவப்பை தந்ததில்லை. 

 

அவனுக்கு எப்படியோ அவளுக்கு ஒவ்வொரு ஏகாந்த இரவிலும் வெறும் உடல்களின்  இணைவைக்காட்டிலும், ஆக்கையும் ஆன்மாவும் இணைந்ததாகவே உணர்ந்து தான் அவனோடு கலந்தாள்.

 

 உறவிலும் அவள் மனம் அறிந்து, தளிர் உடலுக்கு ஏற்ப தன் வேகத்தை குறைத்து மென்மையாகவே கையாளுவான் ... உறவில்லா நாட்களில் கூடஅவள் கையை பற்றிக் கொண்டோ, அவள் கால்களின் மீது தன் கால்களை போட்டுக் கொண்டோ, நெருங்கி படுத்தபடி தான் உறங்குவான் ...

 

அதே போல் கணவன் மனைவி என்பதைத் தாண்டி குடும்பம் என்று வரும் பொழுது,   அவளது வார்த்தைகளை அலட்சியப்படுத்தினான் என்பதை விடதன் தாய் தங்கை வார்த்தைகளுக்கு முக்கியத்துவம் கொடுத்தான் என்று சொன்னால் சரியாக இருக்கும்.

 

யாதொரு முடிவையும் அவனே  எடுத்துவிட்டு   தெரிவித்தானே ஒழியஒருமுறை கூட அவளது கருத்துக்களை கேட்டதாக நினைவில் இல்லை ...

 

மற்றபடி எந்த சந்தர்ப்பத்திலும் அவளை வார்த்தையால்  அவன் காயப்படுத்தியதே இல்லை.

 

பெரும்பாலான ஆண்களைப் போன்றுஅவனும் தன் மனையாளின் அழகு, திறமையை  வாய் விட்டு புகழ்ந்ததில்லை என்றாலும் , அம்மாதிரியான தருணங்களில்  பார்வையில் ஒரு மென் சிரிப்பையும் புருவ உயர்தலயும் பரிசாகத் தந்து கடந்து விடுவான்

 

காதல் என்ற வார்த்தைக்கு ஒவ்வொருவரும் ஒரு வரையறை வைத்திருப்பர்.  அவனது வரையறை என்ன என்று எவ்வளவு யோசித்தும் அவளுக்கு விளங்கவில்லை.

 

இன்று வரை வாய் விட்டு கேட்டதில்லை என்றாலும், உண்மையிலேயே அவன் தன்னை நேசிக்கின்றானா என  வெகு சில தருணங்களில் அவள் நினைத்ததுண்டு. 

 

சுருங்கச் சொன்னால்அவள் மட்டும் அவனை எந்த உறவிடத்திலும் விட்டுக் கொடுக்காமல்கடந்த மூன்றாண்டு   கால திருமண பந்தத்தில்  எல்லா வகையிலும் 100% மனைவியாக நடந்து கொண்டிருக்கிறாள்.  ஆனால் அவன் பல சந்தர்ப்பங்களில் தன் வீட்டு மக்களிடம் அவளை   விட்டுக் கொடுத்ததாகத்தான் அவள் நினைவடுக்குகள் சொன்னது .

 

இதற்கெல்லாம் அடிப்படை காரணம் அவளது அழகு, படிப்பு , குடும்பப் பின்னணி எதுவுமே அவனுக்கு  ஈடு இல்லாமல் இருந்தது தான்.

 

அவன்  தந்தையின் வற்புறுத்தலால் தன்னை  மணந்து கொண்டு இயந்திரகதியில்   வாழ்ந்திருக்கிறான் என்ற எண்ணத்தில்  மூழ்கியவள் சுய இரக்கத்தால் மறந்தாளா அல்லது சூழ்நிலையால்  மறந்தாளா என்று தெரியாது ஆனால் சிலவற்றை தன் வசதிக்காக செவ்வனே மறந்து போயிருந்தாள். 

 

உலகிலேயே பெரும் கொடுமை ...

தன்னைப் பிடிக்காத ஒரு நபருடன் வாழும் வாழ்க்கை தான் ... அப்படி ஒரு வாழ்க்கையை தான் வாழ்ந்ததாக எண்ணி கலங்கியவளுக்கு திடீரென்று வேறொரு சிந்தனையும் துளிர்த்தது.  

 

 

அப்படியே கடமைக்கு வாழ்ந்ததாக முடிவு கட்டினாலும்கடல் கடந்து செல்ல வேண்டிய காலம் வரும் போதெல்லாம், அதிகாலைத் துயில் விழித்தெழுபவள் படுக்கையை விட்டு விலகும் முன்பு 

" நோ..லஷ்மி ..." என்றபடி  அவன் இழுத்தணைத்துக் கொண்டு கண்ணயர்ந்து விடும் காட்சியும் கண்முன் பிரத்யேட்சமாகிஅவளை குழப்பஒரு முடிவுக்கு வர முடியாமல் திணறி போனாள்.

 

 அவள் அந்த வீட்டை விட்டு வந்து கிட்டத்தட்ட மூன்று மாதங்கள் ஆகப்போகிறது ... இதுவரை அவன் அவளை எவ்வகையிலும் தொடர்பு கொண்டு என்ன நடந்தது என்ற நடுநிலையான விசாரணையை தொடங்கவே இல்லை.

 

கட்டிய மனைவியை ஒதுக்கினாலும், உள்ளூரிலேயே இருந்து கொண்டு தன் சின்னஞ்சிறு  உதிரத்தை பார்க்காமல் ஒருவனால் கிட்டத்தட்ட மூன்று மாத காலம் இருக்க முடிகிறது என்றால்,  அவன் மனம்  எத்துணை இரும்பாக இருக்க முடியும்.

 

அவன் வீட்டு மனிதர்கள் சொன்னதையே வேதவாக்காக எடுத்துக் கொண்டு அதுவே சரி என்று இருந்ததோடுதான் அனுப்பிய விவாகரத்துக்கும் சம்மதித்தவனுக்கு திடீரென்று நீதிமன்றத்தில் என்னவானது.

 

பொதுவாக விவாகரத்து வழக்குகளில்ஆண் விவாகரத்து கோரினாலோ, அல்லது விவாகரத்துக்கு சம்மதம் தெரிவித்தாலோ ஜீவனாம்சம் வழங்க வேண்டும் என்ற ஒரு விதி உண்டு.

 

ஒருவேளை ஜீவனாம்சத்தை எண்ணி  விவாகரத்து கொடுக்க மறுக்கின்றானா....

 

இல்லையே....

 

 எதுவுமே வேண்டாம் என்று  கூறிவிட்டேனே பின்பு ஏன்  இப்படி ஒரு நாடகம் நடத்துகிறான் ...

 

அவனுக்கு இருக்கும் அழகு அறிவு பணம் பதவிக்கு சுலபமாக என்னை விவாகரத்து செய்துவிட்டு வேறொரு பெண்ணை மணந்து இரண்டு மூன்று குழந்தைகளை பெற்றுக் கொண்டு நிம்மதியாக காலம் கடத்தலாமே.... 

 

ஏன் இந்த திடீர் தடுமாற்றம் திருப்பமெல்லாம் ....

 

ஒருவேளை வீரண்ணாவின் அறிவுரையாக இருக்குமோ ....

 

இருக்கலாம் .... இல்லையென்றால் தான் என்ற நிலையில் இருந்து இவ்வளவு இறங்கி இருக்க மாட்டானே ....

 

திருமணத்திற்கு அடிப்படையே நம்பிக்கை தானே ...

அந்த நம்பிக்கையை அவன் கொடுத்திருந்தால், பெற்ற தாயிடம் கூட பகிராமல் ஆழ்மனதில் வெந்துக் கொண்டிருக்கும் அந்த விஷயத்தை

அவனிடம் பகிர்ந்திருப்பேனே ....

 

இப்படி அதிரடியாய்  கைக்குழந்தையோடு வீட்டை விட்டு வெளியேறி  சொந்த வீட்டிலேயே  அகதியாய் தங்கிக் கொண்டு  எதிர்காலத்தைப் பற்றிய பயத்தோடு ஓடிக் கொண்டிருக்க வேண்டிய நிலை ஏற்பட்டிருக்காதே .....

 

 என்று அவள் கண்கலங்கி கண்ணீர் வடித்துக் கொண்டிருக்கும் போது, உறங்கிக் கொண்டிருக்கும் குழந்தை லேசாக சிணுங்க, மடியில் தூக்கி வைத்து தட்டிக் கொடுத்துஅதன் உறக்கத்திற்கு உதவியவள்,

 

" உனக்கு எல்லாமுமா நான் இருப்பேன் .... உன் அப்பா கிட்ட இருக்கிற அளவுக்கு பணம் இல்லைன்னாலும்உன்னை நல்லபடியா படிக்க வச்சு கௌரவமா ஆளாக்கத் தேவையான பணத்தை சம்பாதிப்பேன் .... 

 

வாழ்க்கையில நான் எல்லாத்தையும் தோத்துட்டேன்.. எனக்குன்னு இருக்கிறது நீ மட்டும் தான் ... உன்னை நான் தோக்க மாட்டேன் ....  உன் அப்பாவுக்கு என்ன வேணும்னே எனக்கு தெரியல டா ... நீயும் நானும் வேணாம்னு மூணு மாசம் இருந்துட்டு இப்ப திடீர்னு, மனைவியும் குழந்தையும் வேணும்னு சொல்றதுக்கு என்ன காரணமா இருக்கும் ... 

எதுவா இருந்தாலும் நான் உன்னை இழக்க தயாரா இல்லை ..." என்றவள் தன் குழந்தையிடம் மனம் விட்டு பேசிக் கொண்டிருக்கும் அதே வேளையில்,  

தன் whatsapp ப்ரொபைல் பிச்சரில், எப்பொழுதும் இருக்கும் இந்திய தேசிய கொடியை தூக்கி விட்டுதன் மனைவி குழந்தையோடு இருக்கும் படத்தை மாற்றிய ராம்சரண்,

 

" ஏண்டி என்னை விட்டுட்டு போன....நீ இல்லாம என்னால  வாழ முடியாதுன்னு காட்டணும்னு பாக்கறியா .... ஒத்துக்கிறேன் நீ இல்லாம என்னால் வாழ முடியாது தான் ... அதே மாறி  நான் இல்லாம நீ  வாழ முடியாதுன்னு காட்டறேன் பாக்கறியா ....  கூடிய சீக்கிரம் நீ கதறிக்கிட்டு என்கிட்ட வருவ டி... வர வைப்பேன் ..." என்று கண் கலங்கியபடி கமரிய குரலில் சூளுரைத்தவனுக்கு தெரியாதுஅவன் தான் கதறிக்கொண்டு அவளை நோக்கி ஓட போகிறான் என்று. 

 

 

 

ஸ்ரீ- ராமம் வருவார்கள் ....

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 


Comments