ஸ்ரீ - ராமம் 4

அத்தியாயம்

 

கோயமுத்தூரில் நகர்ப்புறங்களை தாண்டி, மலையடிவாரத்தை ஒட்டி,   மத்திய தர வகுப்பினர் வாழும் மிக எளிமையான  பகுதியில் அமைந்திருந்தது ஸ்ரீ லட்சுமியின் இல்லம்.

 

1000 அடிக்கும் குறைவான நிலப்பரப்பில் மலையடிவாரத்தில் தோட்டத்துடன் வெகு சாதாரணமாக கட்டப்பட்ட தனி வீடு அது. 

 

தியாகராஜன் ருக்மணி தம்பதிகளின்

மூத்த மகள் ஸ்ரீ லக்ஷ்மிஇளைய மகள் ராமலட்சுமி.

 

தியாகராஜன் கூட்டுறவு வங்கியில் குமாஸ்தாவாக பணிபுரிந்து ஓய்வு பெற்றவர்.  ருக்மணி தனியார் பள்ளி ஒன்றில் உயர்நிலை பள்ளி ஆசிரியையாக பணிபுரிந்து வருகிறார்.

 

அவருக்கும் அவரது கணவர் தியாகராஜனுக்கும் கிட்டத்தட்ட பத்து வயது வித்தியாசம்.  தியாகராஜன் தன்னுடைய முப்பத்தைந்தாவது  வயதில் அவரை மணந்து கொண்டதால் பெற்ற பெண்கள் வளர்ந்து அவர்களுக்கு திருமணம் முடிக்கும் முன்பேஅவர் பணி ஓய்வு பெற வேண்டிய நிலை ஏற்பட்டது. 

 

ஸ்ரீ லட்சுமியின் தங்கை ராமலக்ஷ்மி, பொறியியல் முடித்துவிட்டு ஒரு  தனியார் நிறுவனத்தில் கடந்த ஒரு வருடமாக  பணிபுரிந்து வருகிறாள்.

 

தாய் ருக்மணி தான் அந்த வீட்டின் ஆணிவேரே.

 

அவர்கள் வசிக்கும் அந்த இல்லத்தின் பெயர் கூட ருக்மணி இல்லம் தான்.  ருக்மணியின் தாய் தந்தை இறக்கும் தருவாயில் தங்கள் ஒரே மகளுக்கு வீட்டுமனையாக  விட்டுச் சென்ற சொத்து தான் அந்த இல்லம். 

 

பிறகு ருக்மணி தன் சம்பளம் மற்றும் தன் கணவரின் சம்பளத்தில் குருவி சேர்ப்பது போல் சிறுக சிறுக சேர்த்து, அந்த இல்லம் என்னும் கூட்டினை கட்டி முடித்தார்.

 

ருக்மணி வீட்டு பராமரிப்பு, குழந்தைகள் வளர்ப்புஆசிரியர் பணி மற்றும் தையல் கலை நிபுணர் என அனைத்திலும் ஆல்ரவுண்டர் ஆவார்.

 

தியாகராஜனுக்கு தெரிந்ததெல்லாம் வங்கி வங்கி வங்கி தான்.

 

என்னதான் மனிதர் வங்கியில் பணிபுரிந்தாலும் , வங்கியைப் பற்றியே பேசிக் கொண்டிருந்தாலும் 10 ரூபாய் கூட சேர்த்து வைக்கும் திறனற்றவர்.

 

எதிர்காலம் பற்றிய சிந்தனை துளி கூட  இல்லாமல் அந்தந்த பொழுதை தன் மனம் போன போக்கில் கழிப்பதில் வல்லவர்.

 

அதற்காக அவர் மது பிரியர்  ,  ஊதாரி என்றெல்லாம் சொல்லி விட முடியாது.  அடிப்படையில் அவருக்கு பொறுப்பு கிடையாது. அதுதான் அவரிடம் இருக்கும் மிகப்பெரிய  குறைபாடு.

 

வங்கியில் பணிபுரிகின்றோமேதனக்கும் தன் குடும்பத்திற்கும் தேவையான வகையில், ஏதாவது வங்கிக் கடன்களை பெற்று முன்னேறலாம் என்ற எண்ணமெல்லாம் அவரிடம் என்றுமே இருந்ததில்லை.

 

இரண்டு பெண் குழந்தைகள்  இருக்கிறதேஅவர்களை நல்ல இடத்தில் மணமுடித்துக் கொடுக்க வேண்டுமே என்ற எண்ணமும் அவரிடம் தென்பட்டதில்லை. 

 

ஆனால் பல பெரும் விஷயங்களைப் பற்றி  பேசி அழகாக முடிவுகளை கூறுவார் .... ஆனால் சிறு விஷயங்களை கண்டு கொள்ள மாட்டார்.

 

இதில் பெரும் விஷயம் என்பது அரசியல் ...  தேசிய கட்சிகள் ஜெயிக்குமா திராவிட கட்சிகள் ஜெயிக்குமா .... எந்த கட்சி எத்தனை சீட்டுகள் வாங்கும் என்று தேர்தலுக்கு முன்பே கணக்கச்சிதமாக கணிப்பதில் வல்லவரானவருக்கு சிறு விஷயங்களான  வீட்டுப் பிரச்சினையைப்  பற்றி  ஒன்றுமே தெரியாது.

 

பெத்த பெண்களுக்கு வயதாகி விட்டது அவர்களுக்கு  திருமணம் முடிக்க வேண்டும்திருமணத்திற்கான செலவுகள், வரன் பார்ப்பது போன்றவை எல்லாம் அவரைப் பொறுத்தமட்டில் ஏதோ கிரேக்க பாரம்பரிய கலாச்சார முறையை பின்பற்றுவது போல் புதுமையாய்  தோன்றும். 

 

ஆனால் அவரிடம்  ஒரு நல்ல குணம் உண்டு.  தன் வங்கி அட்டையை (debit card) எப்பொழுதுமே  தன் மனையாள் ருக்மணியிடம் கொடுத்து விடுவார். 

 

சம்பளத்தில் ஒரு ரூபாய் கூட மனைவிக்கு தெரியாமல்  செலவழிக்க மாட்டார்.   பண தேவை என்றால் மனைவியிடம் கேட்டு வாங்கி கொள்வார். 

 

தன்னை விட தன் மனைவி குடும்ப விஷயத்தில் கட்டுக்கோப்பாக இருப்பதால் தான்மாமனார் கொடுத்து விட்டு சென்ற மனையில்  வீடு கட்டிக் கொண்டு நிம்மதியாக வாழும் நிலை ஏற்பட்டுள்ளது என்பதை உணர்ந்து, மனைவி எடுக்கும் குடும்ப முடிவுகளுக்கு ஆமாம் சாமி போட்டு விடுவார்.

 

ஸ்ரீலட்சுமி பிஎஸ்சி பிஎட் முடித்துவிட்டு, தாய் பணி புரியும் அதே தனியார் பள்ளியில் கணித மற்றும் கணினி ஆசிரியையாக திருமணத்திற்கு முன்பு பணியாற்றி வந்தாள்.

 

தரமான பள்ளி என்பதால், அந்தப் பள்ளியில்  ஆசிரியராக பணியில் அமரதகவல் தொழில்நுட்ப நிறுவனத்தில் ஆட்கள் எடுப்பது போல் மூன்று  வெவ்வேறு சுற்று தேர்வுகள் நடத்தப்பட்டு ஆசிரியர்கள் தேர்வு செய்யப்படுவர்.

 

 ஆசிரியர்களுக்கு வேலை பளு அதிகமாக இருந்தாலும் சம்பளம் ஓரளவிற்கு அரசாங்க ஆசிரியர்களோடு ஒத்திருப்பது தான் அந்தப் பள்ளியின் சிறப்பு. கணவர் ஓய்வு பெற்று விட்டார்.  மூத்த பெண்ணிற்கு திருமண வயதாகி விட்டது.  அவளைக் கரை சேர்த்தால் தான் அடுத்த பெண்ணிற்கு திருமணம் செய்ய முடியும் என்ற எண்ணத்தில் ருக்மணி தன் மூத்த மகள் ஸ்ரீ லட்சுமியின் புகைப்படம் மற்றும் அவளைப் பற்றிய தகவல்களை இணைய திருமண தகவல் மையத்தில் பதிந்து வைத்திருந்தார். 

 

அவர் பதிந்து வைத்ததும் எத்தனையோ வரன்கள் வந்தாலும்  படிப்புவேலை, ஜாதக பொருத்தம் என்று ஏதோ ஒன்று பொருந்தாமலேயே போய்க்கொண்டிருந்தது.

 

கிட்டத்தட்ட மூன்று மாதங்களுக்குப் பிறகுதிடீரென்று ஒரு நாள் ராம்சரணின் ஜாதகம் மற்றும் இதர தகவல்களை ஸ்ரீ லட்சுமியின்  இல்ல முகவரிக்கு அனுப்பி வைத்தார் ராம்சரணின் தந்தை ரங்கசாமி. 

 

ரங்கசாமியின் செல்வ வளம் மற்றும் ராம்சரணின் படிப்பு பதவியை பார்த்து முதலில்  ருக்மணி சற்று தடுமாறியது உண்மைதான். 

 

பிறகு ரங்கசாமி  ஸ்ரீ லட்சுமியின் இல்லத்திற்கே வந்து  நேரடியாக பேசி முடிக்கராம்சரண் ஸ்ரீ லட்சுமி திருமணம் அருமையாக நடந்தேறியது.

 

ராம் சரணுக்கு ஸ்ரீ லட்சுமியை புகைப்படத்தில் பார்த்ததுமே பிடித்து விட்டது.  ஸ்ரீ லக்ஷ்மிக்கும் தான். 

 

ஆனால் ராம்சரணின் நிறம் படிப்பு பணம் அந்தஸ்து ஆகியவை கண்டு ஒருவித தயக்கம் அவளுள் இருக்கவே செய்தது. 

 

திருமணம் முடிந்து ஒரு மாதத்திலேயே கெட்ட பழக்க வழக்கங்கள் ஏதுமில்லாமல் தானுண்டு தன் வேலை உண்டு என அவன் இருக்கும் பாங்குஎந்த விஷயத்திலும்  அதிகம் அலட்டிக் கொள்ளாமல் முடிவெடுக்கும் திறன், கிடைக்கும் கொஞ்ச நேரத்தில் அவளிடம்  காட்டும்  நெருக்கம்   போன்றவற்றால்   வசீகரிக்கப்பட்டதோடு அவன் ஆளுமையிலும் கம்பீரத்திலும் மயங்கி தான் போயிருந்தாள் அந்த மாது.

 

மங்கையின் நிலையே தான் அவளது மன்னவன் நிலையும்.  அவனும் அவளிடம் மயங்கித்தான் இருந்தான். 

 

எல்லாம் சரியாக போய்க் கொண்டிருக்க , தான் அதிர்ஷ்டசாலி என்றவள் எண்ணிக் கொண்டிருக்கும் போது தான் விதி அவள் தலையில் பலமாக  தட்டியது.

 

ரோஜா முட்களோடு தான் வரும் என்றவள் உணரும் போது  மனம் சுணங்கிப் போனாள்.

 

ரோஜாவை ரசிக்கும் போதெல்லாம் முட்கள் முந்திக் கொண்டு வந்து தன் இருப்பைக் காட்டியது.

 

ரசிப்பவளுக்கு மட்டுமே தெரியும் ரோஜா முட்களோடு இருக்கிறதென்று ... தன்னைச் சுற்றிய இலைகளின் இருப்பால் ரோஜாவுக்கு முட்களைப் பற்றி தெரியாமலே  போகரசிக்கவும் முடியாமல் தொட்டுப் பறிக்கவும் முடியாமல் தவித்துப் போனாள்.

 

இப்படியே நடந்த இந்த மூன்று வருட கண்ணாமூச்சி ஆட்டத்தை முடிவுக்கு கொண்டு வரத்தான்  தற்போது நீதிமன்றத்தை நாடி இருந்தாள் அந்த பாவை. 

 

"நல்லா வேலைக்கு போய் சம்பாதிச்சுகிட்டு இருந்த பொண்ணுக்கு , ஏதோ பணக்கார இடம் வந்ததுச்சின்னு அவசர அவசரமா வேலையை விட வச்சு கல்யாணம் கட்டி வச்ச .... பாருஇப்ப எல்லாத்தையும் தொலைச்சிட்டு கையில குழந்தையோட வந்து நிக்கிறா .... மூணு வருஷ சர்வீஸ் போச்சு ... அவசரப்பட்டு கல்யாணம் பண்ணாம இருந்திருந்தா  இந்நேரம் லட்சுமி இன்னும்  சம்பாதிச்சிருப்பா ...." என்ற தியாகராஜனை சுட்டெரிக்கும் பார்வை பார்த்த ருக்மணி 

 

"காலத்துக்கும் அவ வேலைக்கு போய் சம்பாதிச்சு கொட்டனும் .... வெட்கமே இல்லாம அந்த பணத்தை வாங்கி சாப்பிட்டுக்கிட்டு  நாம நிம்மதியா இருக்கணும்னு சொல்றீங்களே உங்களுக்கெல்லாம் மனசாட்சியே கிடையாதா .... பொண்ணுங்க படிச்சு வேலைக்கு போறது நல்ல விஷயம் தான் ... அதுக்காக அவங்களுக்கு நாம  காலாகாலத்துல செய்ய வேண்டியதை செய்யாம இருக்கலாமா .... அவளுக்கு  நாம ஒன்னும்  நூறு பவுன் நகை போட்டு கட்டி கொடுக்கல .... அவளா வேலைக்கு போய் சம்பாதிச்சு தனக்காக  சேர்த்து  வச்சிருந்த  25 சவரன் நகைய போட்டு,   அவ பேர்லயே பர்சனல் லோன் எடுத்து தான் அவளோட கல்யாணத்தையே நடத்தி வச்சிருக்கோம் .... இதுல உங்களுக்கு என்ன கஷ்டம் ..."  என்ற ருக்மணியின் கேள்வி தியாகராஜனுக்கு கோபத்தை மூட்ட 

  

" இவ அவங்க  வீட்டை விட்டு வந்தவுடனேயே மாப்பிள்ளை இங்க வந்து பேசி சமாதானப்படுத்தி இவளை கூட்டிகிட்டு போயிருந்தார்னா எனக்கு என்ன கஷ்டம் இருக்க போவுது .. இவ இங்க வந்து ரெண்டு மாசத்துக்கு மேல ஆகுது ... அவங்க வீட்ல யாருமே கண்டுக்கலயே மாப்பிள்ளை உட்பட .... உடனே உன் பொண்ணு கொழுப்பு எடுத்து டைவர்ஸ் கேட்டு வக்கீல் நோட்டீஸ் அனுப்பினா ... அதுக்கும் மாப்பிள்ளை கொடுக்கிறேன்னு பதில் நோட்டீஸ் அனுப்பிட்டாரு....

 

 குடும்பம்னா பிரச்சனை இருக்கத்தான் செய்யும் .... 

 கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணிக்கிட்டு போகணும்னு  தெரியாம எல்லாத்தையும் தொலைச்சிட்டு வந்து  நிக்கறா....  எனக்கு என்னமோ இனிமே அவங்க வீட்டு ஆளுங்க சமாதானம் பேச வருவாங்கன்னு  தோணல ... இன்னைக்கு  மாப்பிள்ளை கோர்ட்ல டைவர்ஸ் கொடுத்துடறேன்னு  ஒத்துக்கிட்டு இருப்பாரே .... " என்றவர் ஒரு கணம் மௌனித்துவிட்டு

 

" நல்ல வேளை, உன் பொண்ணு வேணாம்னு விட்டுட்டு போன ஸ்கூல் வேலை மறுபடியும் கிடைச்சிருச்சே..."  என முடித்தார். 

 

"அப்ப இத்தனை நாளா அவ  மாமியார் வீட்ல வாழ்ந்துகிட்டு இருந்தது உங்க கண்ண உறுத்தியிருக்கு .... சம்பாதிச்சு கொடுக்காம கல்யாணம்  பண்ணிக்கிட்டு செட்டில் ஆயிட்டாளேனு வருத்தப்பட்டுக்கிட்டு இருந்திருக்கீங்கன்னு இப்ப இல்ல தெரியுது  .... என் மாப்பிள்ளை ஒன்னும் உங்கள  மாதிரி  பொறுப்ப  தட்டி கழிக்கிற ஆளு இல்ல .... "

 

" அப்ப ஏன்  டைவர்ஸ் வேணும்னு கேட்டு பதில் வக்கீல் நோட்டீஸ் அனுப்பினாரு...."

 

" அவரு கோர்ட்ல மாத்தி பேசிட்டாரு.... ஜட்ஜ் கிட்டயே   டைவர்ஸ் வேண்டாம்னு  சொல்லிட்டாரு..."

 

" ஏன்..... "  என்றார் அதிர்ச்சியும் ஆச்சரியமுமாய் தியாகராஜன்.

 

"என்ன கேள்வி இது ...இந்த வயசுல உங்களாலயே  பொண்டாட்டிய விட்டு இருக்க முடியல ... அவர் மட்டும் ஏன் இருக்கணும் .... அதான் வேண்டாம்னு சொன்னாரு ..." 

 

மனைவியின் சாட்டை அடியில் சப்த நாடியும் அடங்கிப் போனார் தியாகராஜன் .

 

கூடத்தில் தாய் தந்தைக்கு இடையே நடக்கும் வாக்குவாதங்களை கேட்டபடி  தன் அறையில் அழுது கரைந்து கொண்டிருந்தாள் ஸ்ரீ லட்சுமி.

 

கணவனை பிரிந்து கை குழந்தையோடு வரும்  மகளின் எதிர்காலத்தைப் பற்றி கவலைப்படாமல் வெறும் பொருளாதாரத்தை பற்றியே சிந்திப்பவர் தன் தந்தை என்பதை நன்கு அறிந்ததால் தான்  கணவனை பிரிய வேண்டும் என முடிவெடுத்து  தாய் வீட்டிற்கு வந்ததுமேதான் ஏற்கனவே பணிபுரிந்த பள்ளியின் முதல்வரை சென்று சந்தித்தாள் ஸ்ரீலட்சுமி. 

 

லட்சுமியின் திறமையை  நன்கு அறிந்தவர் என்பதால்  அவளை உடனடியாக அவர் பணியில் அமர்த்திக் கொள்ள,

 அன்றே அவரது உதவியை நாடி சொற்ப பணத்தை முன்பணமாக பெற்று  வீட்டு செலவுக்காக  தாயிடம் கொடுத்தாள்.

 பிறகு   தன் சம்பாத்தியத்தில் வாங்கிய தங்கச் சங்கலியை அடகு வைத்து வழக்கறிஞருக்கு கட்டணமாக செலுத்தி விவாகரத்துக்கு விண்ணப்பித்தாள். 

 

தந்தையின் சாயம் மூன்றே  மாதத்தில் வெளுத்து விட்டது.  தாய் மற்றும் தங்கையின் சாயம் என்று வெளக்குமோ .... அதற்கு முன்பே தனக்கும் தன் குழந்தைக்குமான வழியை தேடிக் கொண்டு சென்று விடுவது நல்லது என தனக்குள்ளேயே முடிவு செய்துக்கொண்டாள் அத்துணை  சுலபமாக விதி அவளை விடப் போவதில்லை என அறியாமல். 

 

அவளுக்கு தன் தந்தை மீது கூட வருத்தமில்லை  காரணம்  கீழ் நடுத்தர வர்க்கத்தின் பொருளாதார நிலையை தான் அவர் பொட்டில் அடித்தது போல் மேல் பூச்சு இல்லாமல் கூறுகிறார் .....

குடும்ப உறுப்பினர்களில் ஒருவர் அதிகரித்தால் கூட அந்த மாத பட்ஜெட்டில் துண்டு அல்ல துப்பட்டியே விழுந்துவிடும் நிலையில் தான் கீழ் நடுத்தர வர்க்கத்தின் பொருளாதார நிலை உள்ளது என்பதைப் புரிந்து கொண்டவளுக்கு கடந்த மூன்று ஆண்டு காலமாக வாழ்ந்த வசதியான வாழ்க்கையிலிருந்து இப்படி ஒரு வாழ்க்கைக்கு உடனடியாக மடை மாறுவது சற்று கடினமாக இருந்தாலும்  பெற்றோர்களுக்கோ உடன் பிறந்தவளுக்கோ பாரமாக இல்லாமல்  வாழ மாற்று வழியை கண்டுபிடிக்க வேண்டும் என்பதில் மட்டும் குறியாக இருந்தாள்.

  

சரி கணவனின் மீதாவது கோபமா  என்றால்  அதற்கும் இல்லை என்ற பதிலோடு மட்டும் நில்லாமல்  காதலோ காதல் என்று சிலாகிப்பாள். 

 

இவளுக்கு மட்டும் தான் காதலா ... அவனுக்கும் இவள் மேல் கட்டுக்கடங்காத காதல் உண்டென்பதை வெகு சில அவர்களுக்கான பிரத்தியேக நேரங்களில் செய்கையில் உணர்த்தி இருக்கின்றான் ....

 

மற்றபடி பட்டப் பகலில் கட்டியணைத்து கவி பாடவோ, நின்று பேசி நேசம் கொள்ளவோ நேரம் இருந்ததில்லை ... அவனுக்கு அலுவலகப் பணிச்சுமை மிக அதிகம் .. தனக்கென அவன் ஒதுக்கும் சொற்ப நேரங்கள் கூட தாய் தங்கையால் சூறையாடப்படுவதை அவன் உணராமல் போனதுதான் துரதுஷ்டத்தின் உச்சக்கட்டம்.

 

எது எப்படி இருந்தாலும் அவன் மீது அவள் கொண்ட காதல் என்றுமே குறைந்ததில்லை ... குறையப் போவதுமில்லை ... அவன் மீதான 90 சதவீத காதல் இன்னும் அவள் தொண்டை வரை உள்ளது. ...

 

மீதம் இருக்கும்  10 சதவிகிதத்தில் 5% கோபம் 5% வருத்தத்தை பற்றுக் கோளாக பற்றி கொண்டு அவனிடமிருந்து விலகி நிற்க முயற்சித்துக் கொண்டிருக்கிறாள். 

 

அதுவும் மூன்று மாதத்திற்கு பின்பான அவனது தரிசனம்அவளது மூன்று  மாத வைராக்கியத்தை தவிடு பொடியாக்கி இருக்க,அதை   ஏற்றுக்கொள்ள மனமில்லாமல்  இடிந்து போனவளுக்கு அவன் பாதியாக  இளைத்திருந்து, அவள் விழியோடு  விழி தீண்டலில் ஈடுபட்ட அந்தக் கண நேரத்தில்  அவன் கண்கள் வெகு லேசாக பனித்திருந்ததை எல்லாம்   எண்ணிப் பார்த்து உள்ளுக்குள் உருகி கலங்கிப் போனாள்.

 

நகக்கண்ணில்  அழுக்கு  சேர்வதையே நாகரீகம் பார்த்து தவிர்ப்பவன்,   பலர் அறிய  நீதி அரசர் கண்டிக்கும் அளவிற்கு நடந்து கொண்டதை எண்ணி மிகவும் வருந்தினாள்.

 

ராம்சரண்  அப்பழுக்கற்ற  ஆகச் சிறந்த கணவன் ... அதில் சந்தேகமே இல்லை ....  ஆனால்  அவளை  பற்றி  அவன் தாய் மற்றும் தங்கை  என்ன அவதூறு கூறினாலும்  கண்டு கொள்ளாமல் செல்லும் அவன் போக்கு தான்  

மங்கையின் மனதை ரணமாக்கி இருந்தது. 

 

அவன் அவர்களை கண்டிக்க வேண்டும் என்று அவள் எதிர்பார்க்கவில்லை குறைந்தபட்சம்   கண்டனமாவது தெரிவித்திருக்கலாமே  என்ற எதிர்பார்ப்பு பல சந்தர்ப்பங்களில் பொய்த்து  போனதால் கடைசியில் நீதிமன்றத்தை நாடும் நிலைக்கு ஆளாக்கப்பட்டாள். 

 

                     ---------------------------

 

 

" ஐயா யாரு .... பத்து நிமிஷத்துல நீ சொன்ன பொண்ணோட டீடைல்ஸ் எல்லாத்தையும் கலெக்ட் பண்ணிட்டேன் .... பருத்தியே புடவையா காய்ச்சிருச்சின்னு   சொல்லுவாங்க , உன் விஷயத்துல ரேமண்ட் கோட் சூட்டாவே தைச்சு வந்திருச்சு ...."  என்ற ஸ்ரீனிவாசனை

ஆச்சரியமும் சந்தோஷமுமாய் எதிர்கொண்ட வீரா,

 

" என்னடா சொல்ற...  புரியல..." என்றான் லேசாக புன்னகைத்து.

 

ஸ்ரீனிவாசன் அதிவீர ராம பாண்டியனுக்கு  ஒரு படிநிலை  கீழே பணிபுரிபவன்.

 

வேறொரு பெரும் நிறுவனத்தில் இருந்து வந்து அதிவீர ராம பாண்டியன் பணி புரியும் இந்த  நிறுவனத்தில்  சேர்ந்து கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகள் ஆகப் போகிறது.

 

இருவருக்கும் இடையே இயல்பாக ஆரம்பித்த அலுவலக  நட்பு தற்போது குடும்ப விஷயங்களை பகிர்ந்து கொள்ளும் அளவிற்கு விருட்சமாய் வளர்ந்திருந்தது.

 

" நம்ம விச்சு  இருக்கான்  இல்ல.... அவனோட ரிப்போட்டிங் ப்ராஜெக்ட்ல தான் அந்த பொண்ணு சீனியர் அசோசியட் ஆர்கிடெக்ட்டா இருக்கா ..."

 

" எந்த விச்சு டா..."

 

" ம்ச்.... ITL ப்ராஜெக்ட்  டெலிவரி மேனேஜர் விச்சு ...."

 

" ஓ அவனா ..."

 

"இன்னும் ஒன்  அவர்ல அப்ளிகேஷன் ஆர்கிடெக்சர் டிஸ்கஷன் மீட்டிங் இருக்காம்... அந்தப் பொண்ணு தான்  கிளைன்ட்க்கு  எக்ஸ்பிளைன் பண்ண போறாளாம் .... அந்த ப்ராஜெக்டோட மேனேஜர் , டீம் மேனேஜர் எல்லாம்  ஜூம் மீட்டிங்ல அட்டென்ட் பண்ண போறாங்களாம் ....  அந்த லிங்கை எனக்கு ஷேர் பண்றேன்னு சொல்லி இருக்கான்... நீ அதுல அவளை பாக்கலாம் ..."  என்றவன் ஒரு கணம் தாமதித்து,

 

" சொல்றேன்னு தப்பா எடுத்துக்காத AVR... இந்த காலத்துல பொண்ணுங்க எல்லாம் பக்கா ஃபிராடுங்க..... நீ நேர்ல போய் பார்த்து பேசி முடிவு பண்றது தான் சரி .... குழந்தைத்தனமா, வெள்ளந்தியா  இருக்கிற மாதிரி பொண்ணுங்க எல்லாம்  ஒரு சில எழுத்தாளர்களும், சில டைரக்டர்களும் பணம் சம்பாதிக்க உயிரோட வச்சிருக்கிற  கதாபாத்திரங்க... அதுங்க ...

உண்மையில அந்த மாதிரி பொண்ணுங்க எல்லாம் அழிஞ்சு போய் பல வருஷம் ஆகுது ...

 

நீ ஜூம் மீட்டிங்லஅவ ப்ரொபஷனலிசத்தை புரிஞ்சுக்கலாம் ஆனா அவ பர்சனாலிட்டியை புரிஞ்சுக்க முடியாது .... அவ கேரக்டரை அலசி ஆராய்ஞ்சி உன் லைப் ஸ்டைலுக்கு ஒத்துப்போவாளானு நல்லா  தெரிஞ்சிக்கிட்டதுக்கு  அப்புறம் கல்யாணம் பண்ணிக்க....  நான் என் வாழ்க்கையில பண்ணின முட்டாள்தனத்தை நீயும் பண்ணிடாத ... அப்புறம் உன் வாழ்க்கை என் வாழ்க்கை மாதிரி அசிங்கமா ஆயிடும்  Be careful ...Life is not a joke AVR ..." என ஆயாசத்தோடு முடித்தவன்,

 

" லிங்க் வந்ததும் ஷேர் பண்றேன் .." என்று விடை பெற்றான் .

 

வீரா  அடுத்த அரை மணி நேரத்தில் தன் வேலைகளை  கடகடவென முடித்துவிட்டு நண்பன் அனுப்பி இருந்த இணைப்புத் திரியில் இணைந்து கொண்டான்.

 

ஓரிரு கணத்திற்கு பிறகுகுழு பகுத்தாய்வில் ஐந்து  ஆண்கள் ஒரு பெண் சகிதமாக  அரை வட்ட மேஜை மாநாட்டில் அமர்ந்திருக்கும் காட்சி மடிக்கணினியில்  விரிய அந்தப் பெண் தான்அவன் பார்க்க விரும்பும்  ஸ்ரீ பிரியா  என்று புரிந்து கொண்டான்.

 

அதில்  நான்கு ஆஸ்திரேலியா ஆண்களும், ஒரு இந்திய இளைஞனும் தங்களை ஒருவர் பின் ஒருவராக அறிமுகப்படுத்திக் கொள்ள , கடைசியில் நடுநிலையாக அமர்ந்திருந்த அந்தப் பெண் தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டாள்.

 

ஓரிரு கணத்திற்கு பிறகுதிட்ட வரைவு கலந்தாய்வு தொடங்கியது .

 

ஐந்து நிமிட பேச்சுக்குப் பிறகுஅந்தப் பெண் எழுந்து நின்று  Power Point presentationனில்  திட்ட வரைவின் பயன்பாட்டு வடிவமைப்பை பற்றி பக்கம் பக்கமாக நகர்த்தி விலாவாரியாக நுனி நாக்கு ஆங்கிலத்தில் ஆளுமையும் கம்பீரமாய் நேர்கொண்ட பார்வையில் பேசிக்கொண்டே செல்லபார்த்துக் கொண்டிருந்தவனின் மனம் ஐஸ்கட்டியாய் உறைந்து போனது.

 

பார்ப்பதற்கு பேரழகி என்றெல்லாம் சொல்லிவிட  முடியாது ஆனால் அழகி என்னும் வட்டத்திற்குள் வருபவள். 

 

'மேக்கப் மேக்கப்' என்று அலறியவனுக்கு , முகப்பூச்சு ஏதுமில்லாமல் தன் அடர்த்தியான குட்டை தலை முடியில் குதிரைவாலிட்டு சிறிய மெரூன் பொட்டு , வெகு லேசான உதட்டுச் சாயம் காதுகளில் மின்னும் சிறிய வைரத்தோடுகழுத்தில் மெல்லிய தங்கச் சங்கிலி, இடது கையில் வாட்ச்வலது மோதிர விரலில் ஒற்றைக் கல் மோதிரம், கருப்பு ஓவர் கோட் , பேண்ட் சகிதமாக சுறுசுறுப்பும் நட்புமாய்  கன்னம் குழி விழ, சிரித்த முகத்துடன் பேசிக் கொண்டிருந்தவளை பார்த்து மெய் மறந்து போனான்.

 

இவளை விட பேரழகியான பெண்களை எல்லாம் பணி நிமித்தமாக சந்தித்து இருக்கிறான்.  ஆனால் யாரையும் இப்படி அணு அணுவாக ரசித்ததில்லை.

 

தொழில் முறையைத் தாண்டி சம்பந்தப்பட்ட பெண்ணின் உடை அலங்காரம் முக லட்சணம் எல்லாம் அவன் கருத்தில் கொண்டதும் இல்லை.

 

ஆனால் இந்தப் பெண்  தன் இடக்கையை உயர்த்தி லேசாக  தலைக்கோதிய பாங்கு  , சுற்றி அமர்ந்திருந்தவர்களின் கேள்விகளுக்கு கவனத்தோடு பதிலளித்துக் கொண்டே  மெல்லிய புன்னகையோடு தன் உரையினைத் தொடர்ந்த அழகு, கடைசியாக  முடிக்கும் தருவாயில்அங்கிருந்தவர்களில் ஒருவர் ஏதோ குறும்பாக  சொல்ல, அதற்கு உதட்டை சுழித்துதன் இடையில் கை வைத்து லேசாக புன்னகைத்தபடி  அவள்  பதில் சொன்ன விதம்  அவன் மனதை கொத்தாக அள்ள,

 

முதன்முறையாக ஒரு பெண்ணை தொழில் முறை பேச்சுக்களைக் கடந்து, அவளது உடல் மொழி, பேசும் பாங்கு , முக லட்சணங்களை  ஆராயும் தன் மனப்போக்கினை எண்ணி வியந்தவன்,

 

"I will meet you soon ..." என்றான் நிழல் திரையில் படபடத்துக் கொண்டிருப்பவளை பார்த்து. 

 

 

 

 ஸ்ரீ- ராமம் வருவார்கள்..... 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 


Comments

  1. Super mam... niraya veetla intha prachanai thaan... amma soldratha kekaeavanga wife soldratha kaathula kooda vangarathu illa ma...

    ReplyDelete
    Replies
    1. thanks da.... ellar vitlayum entha mathri oru kesavathu irunthey therum da

      Delete
  2. Super mam,,nice story....as usual your style of writing ..but excellent

    ReplyDelete
  3. சிக்கிட்டான் அதிவீர ராம பாண்டியன்

    ReplyDelete

Post a Comment